Uyir Vangum Rojave–EPI 26

Uyir Vangum Rojave–EPI 26
அத்தியாயம் 26
பேரேன்ன?
கார்த்திக்
நீ பணக்காரனா? கிளாஸ்ல லாஸ்டா?அடிக்கடி பெயில் ஆவயா?
ஏன்னா பணக்காரப் பசங்க தான் இந்த மாதிரி வேலையவிட்டுட்டு பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க…
(மாதவன் – ஷாலினி – அலைபாயுதே)
முக்கியமான லெக்சர் நடுவில் போன் வைப்ரேட் செய்து அழைத்தது. எம்.எம்(மங்கூஸ் மண்டையன்) காலிங் என காட்டியது அது. காலை கட் செய்து விட்டு மீண்டும் பாடத்தை கூர்ந்து கவனித்தாள். கட் செய்ய கட் செய்ய கால் வந்து கொண்டே இருந்தது. பத்துக்கும் மேலே மிஸ்ட் கால்களைப் பார்த்ததும் என்ன பிரச்சனையோ என கிளாஸ் வெளியே வந்து அவனுக்கு அழைப்பெடுத்தாள்.
“இப்ப தானே காலேஜிக்கு விட்டுட்டுப் போன, அதுக்குள்ள என்ன தலை போகிற காரியம்? எதுக்கு லெக்சர் நடுவுல போன் போட்டு கடுப்பைக் கிளப்புற?” பொரிந்தாள் லட்டு.
“லட்டுமா! “
“என்ன கார்த்திக், ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?”
“உன்னை விட்டுட்டு சைட்டுக்குப் போனெனா, கால்ல பெரிய கல்லு விழுந்துருச்சு. சரியான வலி. நடக்க கூட முடியலை லட்டு”
“ஐய்யோ கார்த்திக்! இப்ப எங்க இருக்க? இரு நான் வரேன்.” பதறினாள் லாவண்யா.
“என் அபார்ட்மெண்டுல தான். தட்டுத் தடுமாறி இங்க வந்துட்டேன். நான் யாருக்கும் சொல்லல. சீக்கிரம் வாடா. வலி உயிர் போகுது” போனை வைத்திருந்தான்.
லெக்சரரிடம் எமெர்ஜென்சி என கூறி, அவளது பேக்கையும் புத்தகங்களையும் அள்ளிக் கொண்டு ஆட்டோ பிடிக்க ஓடினாள் அவள். கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால் கண்டிப்பாக அவன் தில்லாலங்கடியைக் கண்டு பிடித்திருப்பாள். அவனுக்கு வலி என்றதும் இவளுக்கு துடித்துவிட்டதே.
அடித்துப் பிடித்து அவன் வீட்டை அடைந்தாள் அவள். கதவு பூட்டாமலே இருந்தது. அவன் பேரை உரக்க அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். வீடு அமைதியாக இருந்தது. மயங்கிக் கிடக்கிறானோ என பயத்துடன் கதவை அடைத்துவிட்டு திறந்திருந்த பெட்ரூமுக்கு ஓடினாள். அவள் உள்ளே நுழையவும், இரு வலிய கரங்கள் கதவின் பின்னாலிருந்து அவளை அள்ளி கட்டிலில் போடவும் சரியாக இருந்தது. அதிர்ச்சியில் காப்பாத்துங்க என கத்திவிட்டாள் லாவண்யா.
“ஏன்டி, ரேப் பண்ண வந்த மாதிரி கத்துற? நான் உன் புருஷன்டி.”
அவனைப் பார்த்ததும் தான் போன உயிர் திரும்ப வந்தது அவளுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தவள், மேலிருந்து கீழ் வரை அவனை ஆராய்ந்தாள்.
‘நல்லாத்தான் இருக்கான். கால்ல அடின்னு கதை விட்டு நம்மள கதற வச்சிருக்கான், பிராடு. சிரிப்ப பாரு முகரையில, வில்லன் சத்யராஜ் ரேப் சீனுக்கு முன்ன சிரிப்பாரே அந்த மாதிரி இருக்கு. இருடா, உன்னைப் பொழக்கறேன்.’
ரூமை சுற்றி அப்பொழுதுதான் நன்றாக பார்த்தாள் அவள். ரோஜா இதழ்களை கட்டில் முழுக்க தூவி இருந்தான். பக்கத்தில் டேபிள் மேல், ஒரு பிளாஸ்கும் ஒரு தம்ளரும் வீற்றிருந்தது. கருந்திராட்சை, ஸ்ட்ரோபரி, ரஸ்ப்பேரி பழங்கள் அழகாக ஒரு தட்டில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. ஊதுபத்திக்கு பதில் வாசனை மெழுகுவர்த்திகள் கலர் கலராக ரூமை சுற்றி பல இடங்களில் ஏற்றியிருந்தான். அவனும் வேட்டி சட்டையில் இருந்தான்.
‘பயபுள்ள காலையில சுடி போட்டு வந்ததுக்கு, போய் சேலை கட்டிட்டு வான்னு ஒத்தக்காலுல நின்னது இதுக்குத்தானா? பக்காவா பிளான் பண்ணியிருக்கானே இந்த கேடி’ வாயைப் பிளந்தாள் லாவண்யா.
“என்னடா சத்தத்தயே காணோம்? திகைச்சிப் போயிட்டயா? இருக்கும், இருக்கும். உன்னை இறக்கி விட்டுட்டு, இங்க வந்து தீயா வேலை செஞ்சேன்டா என் பட்டுக் குட்டி. ஓடி வந்ததுல களைப்பா தெரியற, இந்தா காப்பி” என பிளாஸ்கில் இருந்ததை ஊற்றி அவளுக்கு கொடுத்தான். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் லட்டு.
“முழுசா குடிச்சுறாதேடி! பாதி எனக்குக் குடு. அது தான் சாங்கியம்” சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு. அடக்கிக் கொண்டாள்.
“எல்லா படத்துலயும் பால் தான வைப்பாங்க. எதுக்கு நீ காப்பி வச்சிருக்க?”
“பால் குடிச்சு நீ சுகமா தூங்கிட்டனா? அதான் தெம்பா இருக்க காப்பி வாங்கி வச்சேன். எப்புடி என் ஐடியா?”
“அட, அட! பிரமாதம். வருங்காலத்துல, இதப் படிச்சு எல்லாரும் இனி காப்பி தான் வைக்கப் போறாங்க. ட்ரெண்ட்செட்டர்டா நீ. புல்லரிக்குது! ஆமா, வாழைப்பழம் எங்க?”
“அது என்ன கருமாந்தரத்துக்கு? அத சாப்டுட்டு பாதி பர்போமண்சுல நீ பாத்ரூமுக்கு ஓடவா? நோ! நோ!”
“யப்பா டேய்! பின்னறடா. நீ எங்கயோ இருக்க வேண்டியவன்டா. தவறி இந்த ஊருல பிறந்துட்ட” சிலாகித்தாள் அவனை. பாதி கப் காப்பியைக் கொடுக்கவும் தவறவில்லை.
“இந்த பர்ஸ்ட் மார்னிங்க்காக, மேனேஜ்மேண்ட் கிளாசுல இருந்த என்னை பொய் சொல்லி, அடிச்சுப் பிடிச்சு வர வச்சிருக்க?”
“என்னம்மா பெரிய மேனேஜ்மெண்ட் கிளாசு? நான் சொல்லி தரேன்டி என் பொண்டாட்டி. மேய்னா அஞ்சு விஷயம் இருக்கு மேனேஜ்மெண்டுல. பிளானிங்—எதையும் பிளான் பண்ணாம செய்யக் கூடாது. பாரு எப்படி உன்னை பிளான் பண்ணி இங்க கொண்டு வந்தேன்.”
பேசியவாறே அவள் அருகில் சென்று பக்கத்தில் அமர்ந்து கொண்டான் அவன்.
“அப்புறம் ஆர்கனைசிங்—எப்படி ஆர்கனைஸ் பண்ணியிருக்கேன் பாத்தியா?” என ரூமை சுற்றி அவன் செய்திருந்த அலங்காரங்களை சுட்டிக் காட்டினான்.
“அப்புறம் ஸ்டாப்பிங்—கரெக்டான ஆளை தேர்ந்தெடுக்கறது. உன்னை எனக்கே எனக்குன்னு அலசி பிடிச்சு தேர்ந்தெடுத்ததுல தெரியலை, ஐயா அந்த விஷயத்துல கில்லின்னு” மயக்கும் புன்னகை ஒன்றை சிந்தினான்.
“அடுத்தது கோர்டினேஷன் – நாம ரெண்டு பேரும் இணைஞ்சு பேசி, புரிஞ்சு அடுத்த லெவலுக்கு நம்ம வாழ்க்கைய இப்ப எடுத்துகிட்டு போகப் போறோம்ல அது தான் இது.”
இன்னும் நெருங்கி அமர்ந்து அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டவன்,
“கடைசியா கண்ட்ரோலிங்—நான் உன்னை கண்ட்ரோல் பண்ண, நீ என்னை கண்ட்ரோல் பண்ண, அதுக்கு பிறகு கண்ட்ரோலே இல்லாம போக போறோம் பாத்தியா அது தான் லாஸ்ட் ஸ்டேஜ். அவ்வளவு தான்டா மேனேஜ்மெண்ட். என்னை மேனேஜ் பண்ணாலே நீ சப்ஜேக்டுல டிஸ்டின்க்சன் எடுத்துறுவ என் ராஜாத்தி” மயக்கும் குரலில் வசியப் படுத்தினான் அவளை.
அவன் மடியில் சுகமாய் சாய்ந்திருந்த வேளையில், தானாக ரூம் லைட் அணைந்தது. இருட்டில் மெழுகுவர்த்தியின் ரொமேண்டிக்கான வெளிச்சமும், வாசமும் லட்டுவை கிறங்கடித்தது. மெல்லிய சத்தத்தில் பாடல் வேறு மிதந்து வந்தது. அவனும் சேர்ந்து பாடியதில் மயங்கிக் கிடந்தாள் அவள்.
“கண்ணே தொட்டுக்கவா கட்டிக்கவா
கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா
தொட்டுக்கிட்டா பத்திக்குமே
பத்திக்கிட்டா பத்தட்டுமே”
மெல்ல மெல்ல அவளை தன் வசம் கொண்டு வந்தான் கார்த்திக். இவள் இடுப்பில் அளைந்து விளையாடிய தன் கையை தீச்சுட்டாற் போல் படீரென விலக்கி எழுந்தான் அவன். விளக்கைப் போட்டவன், அவள் அருகில் வந்து அவள் தடுக்க தடுக்க சேலையை விளக்கி அவள் இடுப்பைப் பார்த்தான். பார்த்தவன் கண்கள் செவ செவ என சிவந்தது.
“என்னாடி இது?”
“ஒன்னும் இல்ல விடு”
“சொல்லுடி! இவ்வளவு பெரிய தீக்காயம் எப்படி வந்தது? சொல்லுடி!” கோபம் கொப்பளித்தது அவன் வார்த்தையில்.
சேலையை சரி செய்தவள் ஒன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“கேக்குறேன்ல, வாயைத் திறந்து பேசுடி. இந்த ஐந்தடி உடம்பு என்னோட சொந்தம் அதுல என்ன டிபேக்ட் இருந்தாலும் எனக்குத் தெரியனும்” கத்தினான்.
அவன் டிபேக்ட் என சொன்னதும் அவள் கன்னங்களில் கரகரவென கண்ணீர் இறங்கியது. முகத்தைப் வேறு புறம் திருப்பிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் அவள்.
பதறி அருகில் வந்தவன், அவள் முகத்தை அவன் வயிற்றில் அணைத்துக் கொண்டான்.
“ஏன்டி, இப்படி தேம்பி தேம்பி அழற? என்ன காயம்னுதானே கேட்டேன். அழாதடா” சமாதானப்படுத்தினான்.
“இல்ல, ஏற்கனவே என் இடுப்ப எரிஞ்சு போன அடுப்புன்னு சொன்ன. தெரியாம சொல்லிட்டன்னு விட்டுட்டேன். இப்ப என் இடுப்ப பார்த்து டிபேக்ட்னு சொல்லுற. நீ இப்படி பேசறத என்னால தாங்கிக்கவே முடியலை கார்த்திக்”
“ஏய் லட்டும்மா! தெரியாம சொல்லிட்டன்டா. உன் கிட்ட இன்னும் எப்படி பேசனும்னு எனக்கு தெரிய மாட்டிக்கிதுடா. உன் கிட்ட நான், நானா இருக்கேன், எந்த வெளிப்பூச்சும் இல்லாம. இனிமே பார்த்துப் பேசறன்டா. நான் மட்டும் இல்ல, முக்கால் வாசி ஆம்பிள்ளைங்க இப்படிதான் பேச தெரியாம பேசி பொண்டாட்டி மனச நோகடிக்கறாங்க. என்ன செய்யறது, உங்கள மயக்கற மாதிரி பேச வரல. வரல என்ன வரல, தெரியலைன்னு வேணா சொல்லலாம். அப்படி ஒரு ஆம்பிளை பேசுனான்னா, ஒன்னு அவன் கடைஞ்செடுத்த பிளேய்பாயா இருப்பான், இல்ல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிகிட்ட பொண்ணா இருக்கும். நிஜம்டா, என்னை நம்பு”
அவன் சொன்ன விதத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவளுக்கு.
“நீயே ஒரு பிளேய்பாய்ன்னு அண்ணா சொன்னாங்க.” கண்ணை துடைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.
“அட நீ வேறம்மா! அப்படின்னு வெளிய சொல்லிக்கிட்டு திரியறேன். அவ்வளவு தான். அவங்க எல்லாம் என் பிரெண்ட்ஸ் தான். அத தாண்டி நானும் போக மாட்டேன், அவங்களையும் வர விடமாட்டேன். நீ மட்டும் தான் என் இதய ராணி. என் உடல், பொருள், ஆவி எல்லாம் உனக்கு மட்டும் தான்”
“இப்பத்தான் ஆம்பிள்ளைங்களுக்கு பேச தெரியாதுன்னு சொன்ன?”
“அது வந்து, ஏதோ ஒரு சமயத்துல ப்ளோல வரும்மா. அத விடு. இந்த கதைக்கு வா. எப்படி இந்த தீக்காயம் வந்தது? “
கதையை சொன்னாள், அமைதியாக கேட்டான். அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை.
“அவங்களால தான் என்னால உன் கிட்ட ஒட்ட முடியலை கார்த்திக். எப்பப்பாரு விரலுக்கேத்த வீக்கம் வேணும்னு சொல்லி சொல்லியே எனக்கு தாழ்வு மனப்பான்மை வர வச்சிட்டாங்க. உனக்கு ஞாபகம் இருக்கா, முன்னேல்லாம் அண்ணன் கிட்ட பேசறதுக்காக உனக்கு போன் செய்வோமே?”
“நல்லா ஞாபகம் இருக்கு லட்டு. நீ பண்ணுறப்பல்லாம், ஏன்மா கொஞ்சம் பேர் அண்ட் லவ்லி வாங்கி பூசிக்கக் கூடாதான்னு உன்னை கிண்டல் பண்ணுவேன். அதெல்லாம் உன்னை பார்க்காத வரைக்கும்.” சிரித்தான் அவன்.
“ஆமா! நான் கூட இவன் என்ன லூசா, இப்படி பேசுறானேன்னு நினைப்பேன். தெரியாம தான் கேக்குறேன், கருப்பு வெள்ளை போட்டோவுல கருப்பா இல்லாம கலராவா இருப்பாங்க, என் வென்ட்ரு”
“மாமன அப்படில்லாம் சொல்லப்படாது தங்கக் குட்டி”
“அப்புறம் உன்னை முதன் முதலா பார்த்தப்பவே உன்னை ஸ்கேன் பண்ணிட்டேன். ரிம்லஸ் கண்ணாடி, நைக்கி சப்பாத்து, அடிடாஸ் பேக், க்ரோகடைல் டீ-சர்ட் இதெல்லாம் உன்னை பசையுள்ள பார்ட்டின்னு அடிச்சு சொல்லுச்சு. உன் கிட்ட தள்ளி நிக்கனும்னு அப்பவே நினைச்சேன். பணக்காரவங்க சகவாசம் வேணான்னு நினைச்சேன். ஆனா உன் பார்வை, என்ன பார்வைடா அது! மனுஷன முழுங்கற மாதிரி.என் மனசு உன் கிட்ட என்னை மீறி சாய ஆரம்பிச்சது. அதனால தான் சண்டை போட்டுக்கிட்டே இருந்தேன். உன்னை மட்டம் தட்டி பேசுனேன், அப்பவாச்சும் நீ விலகிருவன்னு. அப்படி தானே நடந்துச்சு. அண்ணன் கிட்ட உன்னைப் பத்தி சொன்னவுடனே கொஞ்ச நாளுல காணாம போய்ட்டே நீ.”
“நான் பதில் சொல்லுற முன்னுக்கு, என் கேள்விக்கு பதில் சொல்லு. உனக்கு இப்படி நடந்தது உன் நொண்ணனுக்கு தெரியுமா?”
“தெரியாது. நாங்க யாரும் சொல்லல. அவன் என் மேல உள்ள பாசத்துல என்னா வேணுன்னா செய்வான். எங்க அத்தைய ஏதாவது பண்ணிட்டு ஜெயிலுக்கு போய்ட்டானா, நாங்க என்ன செய்றது? அதான் சொல்லல. வீட்டுல டீசண்டா தானே உடுத்துறேன். அதனால அவனுக்கு தெரியாமலே போயிருச்சு”
“ஹ்ம்ம் சரி. நீ சொன்னீயே, உன்னை விட்டுட்டுப் போய்ட்டேன்னு, அப்படி இல்லடா. உங்கிட்ட சொன்ன மாதிரி உன் மேல ஒரு கண்ணு வச்சிக்கிட்டே தான் இருந்தேன். நீங்க வீட்ட விட்டு வெளி வந்தது, வீடு தேடுனது எல்லாம் தெரியும். இவ்வளவு நாள் நீங்க இருந்தது எங்கம்மா எனக்கு எழுதி வச்ச வீடுதான். வேந்தனுக்கும் எனக்கும் பிரண்டா இருந்தவன் கிட்ட தான் பேசி உங்களுக்கு வேற ஆளு வீடு குடுக்கற மாதிரி குடுக்க வச்சேன். நான்னு தெரிஞ்சா உங்கண்ணன் குதிப்பான். அதான் இந்த மறைமுக ஹெல்ப். அதோட உங்கண்ணனுக்கு வேலை கேட்டு உங்க மாமா வந்தப்ப, மேடத்தோட அப்பாக்கிட்ட ரெகெமெண்ட் பண்ணது நான் தான். இதெல்லாம் உனக்காக மட்டும் இல்லடா, உங்கண்ணனனோட நட்புக்காகவும் தான் செஞ்சேன். “
கண் கலங்கி விட்டது லாவண்யாவுக்கு. கட்டிலில் இருந்து எழுந்து அவனை இருக அணைத்து முகம் முழுக்க முத்தமிட்டாள். திக்குமுக்காடிவிட்டான் கார்த்திக்.
“ஏ! விடுடி. மூச்சு முட்டுது.” வாய் மட்டும் தான் பேசியது. கைகள் அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டன. இருவரும் சம்சார கடலில் குதிக்க ரெடியான நேரத்தில் காலிங் பெல் விடாமல் அடித்தது.
“யாருடா லட்டு சாப்பிடறப்ப, தட்டை புடுங்கறது” கடுப்பானான் கார்த்திக்.
“பேச்சப் பாரு. போ, போய் யாருன்னு பாரு” விரட்டி விட்டாள்.
வெளியே போய் கதவை திறந்தான். தேவி நின்றிருந்தாள் அங்கே. அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள், ஒரு முறை முறைத்துவிட்டு உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தாள். கதவை சாற்றிவிட்டு அசடு வழிந்தவாரு அவள் பக்கத்தில் வந்து நின்றான் அவன். யார் வந்திருப்பது என வெளியே வந்து பார்த்த லட்டு, சங்கடமாக நெளிந்தாள்.
அதற்குள் இன்னொரு தடவை பெல் அடித்தது. மீண்டும் போய் திறந்தான் கார்த்திக். அங்கே வேந்தன் நின்றிருந்தான்.
“டேய் மச்சி! என்னடா கால் அடிப்பட்டு ஹேவி பிளட் லோஸ்னு லட்டு சொன்னா. நீ என்னன்னா புது மாப்பிள்ளை மாதிரி நின்னுக்கிட்டு இருக்க?”
உள்ளே வந்தவன் தேவியின் அருகில் அமர்ந்து கொண்டு என்ன நடக்குது என்பது போல தங்கையை ஏறிட்டான்.
அவள் ஒன்றும் இல்லை என தலையை மட்டும் ஆட்டினாள். அவள் ஆட்டிய வேகத்தைப் பார்த்து லேசாக அவனுக்கு விஷயம் விளங்கியது. கார்த்திக்கை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை அவனால். அவனோ சிரிச்சா கொன்றுவேன்டா என்பது போல் முறைத்தான்.
“எனக்குப் பசிக்குது மலர்” ஆரம்பித்தாள் தேவி.
“இருங்க மேடம்” என உள்ளே சென்ற கார்த்திக் பழங்களை எடுத்து வந்து அவளுக்குக் கொடுத்தான். அவள் கொறித்துக் கொண்டிருக்கும் வேலையில், மீண்டும் காலிங் பெல் அடித்தது.
‘இன்னும் யாருடா?’ நொந்தவாறே கதவைத் திறந்தான் அவன். அங்கே நின்றிருந்தார் இந்து, அவருக்குப் பின்னால் வீராவும், அனுவும்.
இவனைப் பார்த்தவுடன்,
“மாப்பிள்ளை,
நலம்தானா நலம்தானா
உடலும் உள்ளமும் நலம்தானா? “என பாடியவறே அவனை ஆராய்ந்தார்.
எல்லோரும் அவனின் சிறிய வீட்டில் இடித்துக் கொண்டு அமர்ந்தனர். வீட்டின் தலைவியாய் லாவண்யா அனைவருக்கும் ஜீஸ் கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள். அதற்குள் கார்த்திக்கின் வண்டவாளங்கள் கடைப்பரப்பப் பட்டு அனைவரும் அவனை வம்பிழுத்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“விடுங்கப்பா. பச்ச புள்ளைய போட்டுக் கலாய்ச்சிகிட்டு. நீ கவலைப் படாத கார்த்திக். உன் மேட்டர சீக்கிரமா கவனிக்கறேன். ஏற்கனவே உன் கிட்ட சொல்லியிருக்கேன், நான் திறந்த மூளைன்னு. இனி என் கிட்ட கேட்காம இப்படி எதுவும் செய்யாத. பாரு எப்படி சொதப்பிருச்சுன்னு. இத தான் எதையும் பிளாம் பண்ணாம செய்யக் கூடாதுன்னு சொல்லுவாங்க”
‘ஐய்யய்யோ! இவங்க எனக்கே மேனேஜ்மேண்ட் கிளாஸ் எடுப்பாங்க போல இருக்கே’
அவன் முகம் போன போக்கைப் பார்த்து லட்டுவுக்கு சிரிப்பு வந்தது. இங்கே வருவதற்கு முன் லட்டு போன் செய்து இந்துவிடம் கார்த்திக்குக்கு விபத்து என சொல்லிவிட்டுத்தான் வந்திருந்தாள். இந்து எல்லோருக்கும் போன் செய்து சொல்லிவிட்டார். அதனால் தான் இந்த கூட்டம். தானா சேர்ந்த கூட்டம். அன்பால் சேர்ந்த கூட்டம்.
“சரி, எல்லாரும் வந்தது தான் வந்தோம், லன்ச்சுக்கு வெளிய போகலாம் வாங்க. கார்த்திக் பல்ப் வாங்குனத கொண்டாடிறலாம்” என அழைத்தான் வேந்தன்.
மீண்டும் ஒரு சிரிப்பலை பரவியது அங்கே.
“போடா! என்னைக் கிண்டல் பண்ணாலும் எல்லாரும் என் மேல உள்ள அக்கறையில தான் வந்துருக்கீங்கன்னு எனக்குத் தெரியுது. நானே இன்னிக்கு உங்களுக்கு எல்லாம் ட்ரீட் பண்ணுறேன். ரொம்ப நாளுக்கு அப்புறம் மனசு நிறைஞ்சு இருக்கு” தொண்டையை செருமினான் அவன்.
“பரவாயில்ல சகல. இந்த தடவ என் ட்ரீட்டு, இப்படி ஒரு அழகான குடும்பத்துல என்னை இணைச்சுகிட்டதுக்கு” உணர்ச்சிவயப்பட்டான் வீரா.
“டேய் மச்சீஸ்! அடங்குங்கடா. உங்க அலப்பறையில கதை முடிஞ்சிருச்சுன்னு நினைச்சுக்கப் போறாங்க. வாய் பேச்சை குறைச்சிட்டு யாராச்சும் சோத்த கண்ணுல காட்டுங்கடா. என் வைப்கும் அவ புள்ளைக்கும் பசிக்குதாம்.”
“வேந்தா! இதுக்கு முன்ன எப்படியோ, இனிமே மரியாதையா மச்சான்னு கூப்பிடு. வாடா, போடாலாம் வேணாம்.”
“அதெல்லாம் வேணா அத்தை. அவன் மரியாதையா கூப்பிட்டா, எனக்கு கொசு கடிக்காமலே டெங்கு காய்ச்சல் வந்துரும்.” வேந்தனை கலாய்த்தான் கார்த்திக்.
பேசி சிரித்தபடியே எல்லோரும் சாப்பிட கிளம்பினர்.
அன்று இரவு இந்து, கார்த்திக்கை லட்டுவின் ரூமுக்கு துரத்திவிட்டார். அவனை அனுப்பிவிட்டு,
“சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா”
என பாடிக் கொண்டே படுக்க சென்றார்.
லட்டுவே அவனை நெருங்கி வந்தும்,
“இப்ப வேணாடா லட்டும்மா. எனக்கு கடமை ஒன்னு பாக்கி இருக்கு. அதை முடிச்சிட்டு தான் உன்னை தொடுவேன்.” அவன் கண்களில் தெரிந்த அனலைப் பார்த்து அவனை இறுக கட்டிக் கொண்டாள் லட்டு. அவள் தூங்கியும் கூட அவளது இடுப்பில் இருந்த சூட்டுக் காயத்தை தடவிக் கொடுத்தவேறே படுத்திருந்தான் அவன்.
அங்கே, தேவி அசந்து தூங்கியதும் அவள் வயிற்றின் அருகே படுத்தவன், கிசுகிசுப்பான குரலில்,
“பாப்பா குட்டி! என்ன செய்றீங்க? தூங்குறீங்களா? உங்கள ஈசியா அப்பா விட்டுக் குடுத்துட்டேன்னு நினைக்கறீங்களா? அப்பா மேல கோபமா? உங்க அம்மா மனசுல என்னவோ இருக்கு. ஆனா அத இன்னும் என் கிட்ட ஷேர் பண்ணற அளவுக்கு அவங்களுக்கு நம்பிக்கை வரல. அம்மா உங்கள ரொம்ப லவ் பண்ணுறாங்க. நீங்க தான் அவங்க மனசு கஸ்டத்தையெல்லாம் போக்கனும். எல்லாம் சரியாகி நாமளும் பாசத்தை ஒருத்தருக்கொருத்தர் பங்கு போட்டு சந்தோசமா இருக்கற நாளும் வரும். அது வரைக்கும் நான் என் அன்பை ரகசியமாகவே வச்சிக்கிறேன். உங்க அம்மா தான் என் உலகம், உயிர் எல்லாமே. என்னை மன்னிச்சிருடா செல்லம். ஐ லவ் யூ டா. “ குரல் கலங்கியது அவனுக்கு. மூன்று மாதத்தை நெருங்கிய கருவிடம் மனம் விட்டுப் பேசினான் வேந்தன்.
கண்களில் கண்ணீர் வழிய அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தேவி.
உயிரை வாங்குவாள்….