MIRUTHNAIN KAVITHAI IVAL 5

cover page-724e31c2

மிருதனின் கவிதை இவள் 5

அந்நேரம் அவர்கள் இருக்கும் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அஷோக்கை பார்த்து ,

” டேய் சொல்லிகிட்டே இருக்கேன் உன் இஷ்டத்துக்கு உள்ள வர , வெளிய போடா ” என  திட்டியபடி அவன் பின்னாலே அறைக்குள் நுழைந்த இஷித்தா ,” டேய்  வளர்ந்து கெட்டவனே சொல்லிகிட்டே இருக்கேன் ” என அஷோக்கின் ஜெர்கினை  பின்புறமாக  பிடித்து இழுத்தாள் .

அவ்வளவு தான் அதீத கோபத்தில் திரும்பிய அஷோக் எதுவும் செய்யவும் இல்லை,  பேசவும் இல்லை ஆனால் ஒரே ஒரு  பார்வை தான் பார்த்தான்  அதற்கே இஷித்தாவின் கரங்கள்   தானாக  அவன் சட்டையில் இருந்து விலகிக்கொள்ள  .

அவள் பிடித்த இடத்தை தூசு தட்டியவன் மீண்டும் அவளை ஒரு பார்வை பார்க்க ,

” என்ன பார்வை ஹான் ?” பயத்தை மறைத்தபடி எகிறியவளின் கரங்களை பற்றிக்கொண்ட மேகா ,” இஷ்டத்துக்கு வாரான் , ம்ம் முறைச்சா ? எனக்கு ஒன்னும் பயம் இல்லை ” என கத்தியபடி திமிரிய இஷித்தாவை  அறையில் இருந்து ஹாலுக்கு அழைத்து  வந்தாள் .

” ஏய் விடு டி யாரடி இவன்? ” என்ற இஷித்தாவின் இதழை தன் கரம் கொண்டு மூடி அமைதியாக இருக்கும் படி செய்கை செய்த மேகா ,

” இவனை நேற்று அவன் கூட பார்த்தேன் அவ்வளவு தான் தெரியும் , வேற எதுவும் தெரியாது , அழைச்சிட்டு போக வந்திருப்பான்னு  நினைக்கிறன் “என்றாள் .

” ம்ம் திங்க தெரியுமா ? நீயெல்லாம் டாக்டர்ன்னு வெளிய சொல்லாத , கொஞ்சம் கூட சுதாரிப்பு இல்லை, சரியான பயந்தாங் கோழி , நீ அவனுக்கு ஆயா வேலை பார்க்க தான் சரி , ஏய் ஒழுங்கா அந்த வளர்ந்து கெட்டவனை அவனை கூட்டிட்டு போக சொல்லு இல்லை , நானே போலீஸ் கிட்ட போய்டுவேன் ஆமா ” என்று தாறுமாறாய் மேகாவிடம் கத்திவிட்டு  குளியலறைக்குள் புகுந்து கொண்டு கதவுக்கு தாளிட்டபடி கண்மூடி கதவின் மேல் சாய்ந்த இஷித்தாவுக்கு படபடப்பு மட்டும் குறையாமல் இருக்க, 

” உதவி தானே செஞ்சேன் அதுக்கு ஏன் எல்லாரும் திட்றாங்க ?ஒருத்தன் கெட்டவனாவே இருந்தாலும் உயிருக்கு போராடிட்டு இருக்கும் பொழுது எப்படி அவனை தனியா விட்டுட்டு வர முடியும் ? உதவி பண்றது தானே என் தொழில் அதை தானே நான் செஞ்சேன் “என வாய்விட்டே சொன்ன மேகாவுக்கோ அக்னியை தொடங்கி தன் தோழி வரை அனைவரும் தன்னை திட்டுவதை எண்ணி அழுகையாக வந்தது.

அறையில் ,

” அக்னி நீ நல்லா இருக்கல்ல  ”  என தன் கண்கள் கலங்க அஷோக் தீரனை கட்டி அணைத்துக்கொள்ள ,தீரனும் சிறு தலையசைப்புடன்  அவனை அணைத்து விடுவித்தவன் ,

” நீ எப்படி இருக்க? ” என முகத்தில் சிறிதும் இறுக்கம் குறையாமல் கேட்டான் .

” என்னை விடு அக்னி ஐயம் ஓகே  ” என்றவன் ,” அடிபட்டதும் மயங்கிட்டேன் , அப்புறம் எழுந்து பார்க்கும் பொழுது உன்னை காணும் ,கனகராஜ்  தான் நீ இங்க இருக்கன்னு சொன்னாரு , ரிஷிக்கு ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு , அவனுக்கு தான் அடி கொஞ்சம் ஜாஸ்தி ,  அந்த பாஸ்கரை இவ்வளவு நாள் விட்டுவச்சதே தப்பு அக்னி ஏதாவது செஞ்சே ஆகணும் ,ஆனா நீ தான் கேட்கவே மாட்டிக்கிற ” என்ற அஷோக் படுக்கையில் தோய்ந்து அமர , அக்னிக்கு பாஸ்கரின் பெயரை கேட்டதும் முகம் சிவந்து உடல் இறுகியது.

” பாஸ்கர் நீ உன் ஆட்டத்தை  காட்டிட்ட , இனி  என் ஆட்டத்தை பார்ப்ப ” எனச் சீறியவன் அஷோக்கின் தோள் மீது கைவைத்து ” பொறுமையா இரு அஷோக்
சீக்கிரமாவே  நம்ம ஸ்டையில்ல அவன் ஆட்டத்தை அடக்கலாம் ” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன் .

அப்பொழுது கதவு தட்டும் சத்தம் கேட்கவும் அக்னியின் கண்ணசைவில் அஷோக் கதவை திறக்க வாசலில் தயங்கியபடி நின்றிருந்த மேகாவை யோசனையுடன் பார்த்தவன் ,

” என்னாச்சு மேகா ?” என மென் புன்னகையுடன்  வினவினான்   .

”  ட்ரெஸிங் பண்ணனும் ” என மேகாவும் சிறு புன்னகையோடு கூற ,   சிறு தலை அசைபோடு  அவள்  உள்ளே செல்ல வழிவிட்டவன் எட்டி அக்னியை பார்த்து கண்ணசைத்துவிட்டு  வெளியேறினான் .

அஷோக் சென்றதும் மேகாவை ஒரு அழுத்தமான பார்வை பார்த்தபடி கட்டிலில் அமர்ந்துகொண்டு அலைபேசியை ஆராய்ந்துகொண்டிருந்த  அக்னியின் அருகே சிறு பயத்துடன்  நெருங்கி வந்த மேகா . வழக்கம் போல தன் வேலைகளைச்  செய்ய ஆயத்தமானாள் .

###############################################

அங்கே இஷித்தாவோ அப்பொழுதான்  தான் குளித்துவிட்டு  மார்பில் டவலை கட்டியபடி வெளியே வந்தவள், சோஃபாவில்  கால் மேல் கால் போட்டு அலைபேசியில் மூழ்கிருந்த அஷோக்கை பார்த்து அதிர்ந்தவள் சட்டென்று மீண்டும் குளியல் அறைக்குள் நுழைந்து தலையை மட்டும் வெளியே நீட்டி ,

” மித்ரன் இங்க என்ன பண்றீங்க ?முதல்ல வெளிய போங்க ” என்றாள் காட்டமாக ,

அவனோ அலைபேசியில் மும்முரமாய் வேலை பார்த்து கொண்டே ,” ம்ம் முடியாது டி ” என்றான் உறுதியாக .

” மித்ரன் என் கோபத்தை கிளப்பாம முதல்ல வெளிய போங்க ” என்றாள் இஷித்தா .

நிமிர்ந்து அவளது முகத்தை பார்த்தவன் ,” முடியாது டி “என மீண்டும் அலைபேசியில் மூழ்கி விட ,தன் மூச்சை இழுத்து வெளியிட்டவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு ,” நான் டிரஸ் சேஞ் பண்ணனும்  மித்ரன் “என்றாள்.

“ம்ம் மாத்து ” என்றான் மென்னகையுடன் ,

” ப்ளீஸ் வெளிய போங்க மித்ரன் ” என பற்களை கடித்தபடி  அடக்கப்பட்ட  கோபத்துடன்  கூறிய இஷித்தாவை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ந்தவன்  ,

” இது ஒன்னும் நமக்கு புதுசில்லையே ” என்று சொல்ல ,

” ச்ச என்ன பேசிட்டு இருக்கீங்க ?முதல்ல கிளம்புங்க மித்ரன் , உங்களை நான் ஜென்டில்மென்னு  நினைச்சேன் பொறுக்கி மாதிரி பேசுறீங்க ” என்ற இஷித்தாவை பார்த்து கொண்டே தன் அலைபேசியை பண்ட் பாக்கெட்டிற்குள்  நுழைத்தபடி  அவளை நெருங்கியவன் ,

” பொறுக்கி தான்,  உன்கிட்ட மட்டும் ” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்  .

” இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட வச்சிக்காதீங்க மித்ரன் வெளிய கிளம்புங்க ” என்றவள் மீது அழுத்தமான பார்வை வீசியவன் அவள் எதிர்பார்க்காமல் அவள் முகத்தை தாங்கி தன் இதழ்களை அவள் இதழ்களில் ஆழமாக புதைக்க அவளோ எதிர் பார்க்காத திடீர்  இதழ் அணைப்பில் முதலில் திணறியவள் பின்பு தன் முழு பலம் கொண்டு அவனை பின்னால் தள்ள முயற்சிக்க , அவளது நீண்ட நேர போராட்டத்தை கண்டு  தானே விலகியவன் ,

” இப்போ விடுறேன் ஆனா அவ்வளவு சீக்கிரம் நீ என்னை விட்டு விலக முடியாது ” என்றான் .

” என்னை அவ்வளவு தப்பா பேசிட்டு , இப்போ என்கிட்ட இப்படி நடக்க உங்களுக்கு வெட்கமா இல்லை “

”  நீயும் ஒன்னும் கொஞ்சமா எனக்கு பண்ணலையே ” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் ,

” வார்த்தையால என்னை சாகடிசீங்க ,  விஷால்  சாவுக்கு உடந்தையா இருந்திருக்கீங்க  இதெல்லாத்தையும் மறந்துட்டு உங்க கூட வருவேன்னு கனவுளையும் கற்பனை பண்ணாதீங்க  மிஸ்டர் அஷோக் மித்ரன் ” என்றவளை கோபமாக பார்த்தவன் ,

” இஷித்தா , விஷாலை  அக்னி கொலை பண்ணல இதை எத்தனை தடவை உன்கிட்டையும் நேத்ரா கிட்டையும்  நான் சொல்றது ” என  இஷித்தாவிடம் சீற , அக்னி இருக்கும் அறையில் பொருட்கள் உடையும் சத்தமும் அக்னி கர்ஜிக்கும் சத்தமும் கேட்க ,

” நான் பார்த்துகிறேன் இஷித்தா ” என்றவன் வேகமாக அக்னி இருக்கும்   அறைக்குள் நுழைந்தான் .

அறையினுள் மேகா அக்னியின் காயங்களை  ஆராய்ந்தவள் முதலில் தோள்பட்டையில் உள்ள காயத்தை சுத்தம் செய்து மருந்துவைக்க  ஆரம்பிக்க அப்பொழுதே அக்னி தன் உடல் இறுக அமர்ந்திருந்தவன் மேகாவின் மென் கரங்கள் அவனது வேற்று மார்பில் பட்ட மறுகணமே  தன் பலத்தை ஒன்று திரட்டி அவளைத்  தள்ளி விட்டவன் ,

” உன் இஷ்டத்துக்கு  மேல கை வைக்கிற என்ன பொண்ணு நீ ?” என கேட்க்க ,  அவமானத்தில் துடித்தவள் , அவனது கேள்வியில் புதைந்திருந்த  அர்த்தம் புரிந்து அழ தொடங்கினாள் .  தரையில் விழுந்தபடி தேம்பி தேம்பி அழுபவளை பெருமூச்சுடன்  அனல் தெறிக்க பார்த்த தீரன் ,

” ச்ச் வாய மூடு “என கர்ஜித்தான் , உடனே கப்பென்று தன் வாயை இருக்கரங்களால் மூடியவள் பயத்துடன் அவனை பார்க்க ,

” என்ன பொண்ணு நீ ? கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம தொடுற ” என மீண்டும்  வாயில் வந்ததை பேசியவன் வார்த்தையால் அவள் நெஞ்சில் கத்தியை இறக்கினான்  ,

“அக்னி என்ன பண்ணிட்டு இருக்க ? ” என்று உள்ளே நுழைந்த அஷோக்கை பார்த்து கடுமையாக முறைத்தவன் ,

” டேய் முதல்ல இவளை  போக சொல்லுடா , அழுது அழுது ஸீன் கிரியேட் பண்ணிட்டு இருக்கா ” என்று கத்தியவன் அருகில் இருந்த மருந்து ட்ரேவை தூக்கி எறிய அந்த சத்தத்தில் திடுக்கிட்டவள் அவன் கொடுத்த வலியை விழுங்கிக்கொண்டே தட்டு தடுமாறி எழுந்தவள் கீழே விழுந்ததில்  கால் பிசங்கியிருக்க மெதுவாக தன் கால்கள் பின்ன அறையை விட்டு வெளியேற  ,

அவள் முதுகை வெறித்து பார்த்த தீரன் அவள் ஒருமுறை தன்னை திரும்பி பார்ப்பாளா என ஆர்வத்துடன் பார்க்க அது நடக்காது போகவும்  ,” ஏய் டோரை சாத்திட்டு போ ” என அவன் அதட்ட ,அதிர்ச்சியுடன்  அவனை பார்த்தவள் அவனது இறுகிய முகத்தை கண்டு மேலும் பயந்தவள் கதைவை  சாற்றி விட்டு சென்றுவிட   ,அவள் சென்ற பிறகு அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்ட தீரன்  தன் முகத்தை அழுந்த துடைத்து தலையை கோதி தன்னை சமநிலை படுத்தினான் .

தீரனின் விசித்திரமான நடவடிக்கையை கவனித்த படி அவனை நெருங்கிய  அஷோக் ,

” அந்த பொண்ணை ஏன் டா இவ்வளவு படுத்துற ?” என கேட்டான் .

” அப்படி தான் பண்ணுவேன்,  அவ மேல ரொம்ப அக்கறை இருந்தா அவளை   என்னை விட்டு தள்ளியே இருக்க சொல்லு ” என கண்டிப்புடன் கூறியவன் ,”விட்டா குளிப்பாட்டியே விட்ருவா போல , வேற எந்த டாக்டரும்  கிடைக்கலையா அந்த கனகராஜ்க்கு ??,இவ தான் கிடைச்சாளா  ஒரு ஜென் டாக்டர் கூடவா இல்லை  ” என்று எரிச்சல் பட ,

“ம்ம் ரெண்டு நாளா சார் எந்திரிக்கவே இல்லை அப்போ இவ தான் உன்னை பார்த்துக்கிட்டா ” என்ற அஷோக்கை  பயங்கரமாய் முறைக்க ,

” அக்னி அவ ரொம்ப நல்ல பொண்ணுடா “

” அதுக்கு? ” எரிச்சலுடன் கேட்டான் .

” அவ கொஞ்சம் மென்மையான பொண்ணு சோ கொஞ்சம் அவ கிட்ட தன்மையா பேசு “

” பழக்கம் இல்லை,  நான் இப்படி தான் “கடுப்பை கிளப்பினான் 

“அவ தான் உன் உயிரை காப்பாத்தி இருக்கா டா  “

” ஏது அவளா? சும்மா அடிச்சி விடாத டா ரத்தத்தை பார்த்து எத்தனை தடவ மயங்கி விழுந்தாளோ ” என இகழ்ச்சியாக புன்னகைக்க ,

” அக்னி ” என அஷோக் சிறு கோபத்துடன் அழைக்க ,

” இப்போ என்ன பண்ணனும்?  பணம் ஏதாவது குடுத்து செட்டில் பண்ணு ” என்றவன் ,

அன்று இரவு  அரை மயக்கத்தில் அவள் அணைப்பில் கிடந்ததையும் , அப்பொழுது மேகாவுக்கும் டிரைவருக்கும் இடையே நடந்த  பேசிச்சு வார்த்தைகளையும்  , தனியாக தன்னை மிகவும் சிரமப்பட்டு காரில் படுக்க வைத்து ‘எப்படியும் பிழைச்சிருவீங்க  சார் கண்ணை மட்டும் மூடாதீங்க ‘என தனக்கு நம்பிக்கை ஊட்டியபடி வேகமாக காரை ஓட்டிச்சென்றதையும் , எப்பொழுதும் அவள் பார்வையில் தெரியும் பயத்தை தாண்டி அன்று அந்த நிமிடம் தனக்கு அடிபட்டதும் அவள் பார்வையில் தெரிந்த தவிப்பையும் கண்மூடி எண்ணிப்பார்த்தவனின் இதயம் வேகமாக துடிக்க தன் கரம் வைத்து தன் நெஞ்சை அழுத்தி பிடித்தவனுக்கு , அவனால் விளங்கிக்கொள்ள முடியாத  பல வித உணர்வுகள் வந்து அவனுக்குள் முட்டி மோத . ‘ ஏன்  இப்படி ? என்ன செய்ய ?’ என வாழ்க்கையில் முதல் முறையாக தவித்தான்,  அனைவரையும் பார்த்தே ,அச்சம் கொள்ள வைக்கும்  தொழில் உலகத்தினரால் அசுரன் என அழைக்கப்படும் ,அக்னி தீரன்.

” அக்னி “

“ம்ம் “

“அக்னி எவ்வளவு நேரமா கூப்பிடுறேன் அப்படி என்ன யோசனை ?”

“ஹாங் “என அஷோக்கின் அழைப்பில் உயிர் பெற்ற அந்த இரும்பு சிலை,

“என்ன ?” என்று கேட்க ,

” அந்த பொண்ணுகிட்ட ரொம்ப ரூடா நடந்துக்காத , சின்ன பொண்ணு டா  ம்ம் ” என்க , அவனை மேல் இருந்து கீழ் பார்த்து கேலியாக சிரித்தவன்,

” எத சின்ன பொண்ணா ? அந்த முட்ட கண்ணை உருட்டி உருட்டியே என்னை கொலை பண்ண பாக்குறா ,  அவ சின்ன பொண்ணா ?” என  அஷோக்கிடம் இருந்து பெற்று கொண்ட சிகரெட்டை வாயில் வைத்தபடி கேட்டான் .

அஷோக்கோ புரியாமல் பார்க்க ,” டேய் அஷோக் அவளை பார்த்தாலே உள்ளுக்குள்ள ஏதோ பண்ணுது,  ஒன்னும் ஓட மாட்டிக்குது,  ஜஸ்ட் அப்படியே ப்ளாங்  ஆகிடுறேன் , ஸீ  அவளை என்னை விட்டு தள்ளியே வை அதான் எனக்கு நல்லது ” என்றவனை பார்த்து புன்னகைத்த அஷோக்கிற்கு அக்னியின் உணர்வுகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது .

” சரி இன்னைக்கு நைட் மட்டும் தான்  , அதுக்கப்புறம் நாம நம்ம வழிய பார்த்துட்டு போயிட்டே இருக்க போறோம், சோ ரிலாக்ஸ் அக்னி  ” என்றவனுக்கு அக்னி சலிப்பாக தலையசைக்க ,

” நைட் நீ கிளம்ப எல்லா ஏற்பாடும் நான் பண்ணிருவேன் , அதுவரைக்கும்  நீ வெளிய எங்கையும் போகாத , அப்புறம் பாஸ்கர் இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சு , இப்போ பங்காக்ல தான் இருக்கான் ” என்ற அஷோக்கிடம் ,

” உடனே பங்காக் போக எல்லா ஏற்படும் பண்ணு , அவன் நமக்கு ஏற்படுத்தின சேதாரத்துக்கு பதில் சொல்லியே ஆகணும் , நான் கொடுக்க போற அடில இனிமே அவன் நம்ம லைன்கே வர கூடாது ” என அழுத்தமாக கூறிய அக்னி தீரனை பார்த்து மகிழ்ச்சியோடு தலையசைத்தான்  அஷோக் மித்ரன் .

ஹாலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த மேகாவின் அருகே வந்த அஷோக் ,” ஹாய் ” என்று புன்னகைக்க , சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவள் தன் விழிகளை துடைத்தபடி  பதிலுக்கு ” ஹாய் ” என்று புன்னகைத்தாள் ஆனால் குரல் நலிந்து ஒலித்தது .

அவளது பயத்தை புரிந்து கொண்ட அஷோக்கிற்கு அவளிடம் பேச தயக்கமாக தான் இருந்தது , அவளோ அவனிடம் மருந்து ட்ரேயை கொடுத்தவள் ,

” நீங்களே அவருக்கு ட்ரெஸ்ஸிங் பண்ணி விட்ருங்களே ” என்று விட்டு ,” இப்போ மருந்து போடுற டைம் அதையும் நீங்களே பண்ணிருங்க சார் ” என்று கூற , அக்னி திட்டியும்  தன் கடமையில் சரியாக செயல்படும் மேகாவை  பார்த்து அஷோக்கிற்கு  மிகவும் வியப்பாக இருந்தது .

” மேகா ட்ரெஸ்ஸிங் நான் ஆல்ரெடி பண்ணிட்டேன் மெடிசின் மட்டும் நீங்களே போடுங்களேன் ” என்றவனை மிரண்டு போய் பார்க்க அவளது பயத்தை புரிந்து கொண்டவன் ,

” ரிலாக்ஸ் அவன் ஒன்னும் சொல்ல மாட்டான் நீங்க போங்க ” என்று கூற ,

” அவர் தப்பா பேசுறார் சார் எனக்கு அப்படியெல்லாம் பேசுனா புடிக்காது ”  என்றவளது சிறு கோபம் சற்று ரசிக்கும் படியாக இருக்க , மெலிதாய் புன்னகைத்தவன் ,

” சரி என் கூட வாங்க” என்று கூறி ,  தானே வந்து அறைக்கதவை திறந்து அவளுடன் உள்ளே நுழைந்து அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருக்க,   அக்னியின் பார்வையை தவிர்த்தபடி உள்ளே நுழைந்தவள் தன் கை கால் நடுக்கத்தை கட்டுப்படுத்த கடும்பாடு பட்டுப்போனாள்  .

ஆனாலும் உள்ளே நுழையும் முன்பே அவனை மட்டும் பார்க்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தவள்  ,அவன் முகத்தை  பார்க்காது மருந்துகள் அடங்கிய ட்ரேவுடன் அவன் அருகில் வந்து நிற்க,  அவனோ ஒரு இடத்தில் நிற்காமல் அலைபேசியில் யாரிடமோ வேறு மொழியில் பேசியபடி இல்லை இல்லை கத்தியபடி குறுக்கும் நெடுக்கும் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தான் .

அவளோ அவனை அழைக்க பயந்து போய் அவன் வரும் வரை காத்து நிற்க அவனோ ,

” டேய் நீ பத்து கொலை பண்ணிட்டு ஐயா காப்பாத்துங்கன்னு  எங்கிட்ட வந்தப்போ , நான் தான் உதவி செஞ்சேன் சோ என்ன பண்ணனும்ன்னு எனக்கு நீ சொல்லாத புரியுதா நான் சொன்னதை மட்டும் செய்,  நாளைக்கு நான் சொன்ன நேரத்துக்கு எல்லாம் ரெடியா இருக்கனும் , நான்  உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன் என்னை பழைய அக்னியா மாத்திராதீங்க என்கிட்டையும்  துப்பாக்கி இருக்க அதுவும் வெடிக்கும் ” என்றவன் ஆக்ரோஷமாக சீறவும் மேகாவின் கையில் இருந்த இரும்பு மருந்து ட்ரே அவளது கரங்கள் ஆடிய நாட்டியதால்  சத்தம் எழுப்ப  அவள் பக்கம் திரும்பியவன்  ,சலிப்பாக அவளை  பார்த்தபடி ,

” என்ன நரம்பு தளர்ச்சியா  ?”என்றான் தன் பின்னங்கழுத்தை தேய்த்த படி ,

” ம்ஹூம் ” மறுப்பாக தலையை அசைத்தாள் .

” எதுக்கு வந்த ?” முடிந்தளவு அவளிடம் பொறுமையாக கேட்டான் , ஆனால் அதற்கே அவளுக்கு பயத்தில் நா குழறியது .

“ருந்து.. ம ” வார்த்தை தாளம் தப்பி வந்தது ,

“ஹான் ” கேட்காதது போல நெருங்கி வந்து தன் காதை அவளது இதழ் அருகே கொண்டு வந்து  கத்தினான் .

” இன்ஜெக்ஷ்ன் போட வந்தேன்  ” அவன் நெருங்கவும் பதறியவள் , மூச்சு முட்ட சொல்லி முடித்தாள் .

” ம்ம்ம் ஒன்னும் வேண்டாம் கிளம்பு ” பொறுமையை இழுத்து பிடித்துவைத்தபடி  கூறினான் .

” அப்போ இதெல்லாம் என்ன பண்ண ?” என கேட்டவளை சலிப்பாக பார்த்தவன் ,

” யோசிக்காத அப்படியே குடிச்சிரு ” எங்க மந்திரத்திற்கு   கட்டுப்பட்டவள் போல அவள் தலை அசைக்கவும் அன்று இரவு அவள் ஊசியை தனக்கே குத்திக்கொண்டதை  எண்ணிய அக்னி  , உடனே அவள் கையில் இருந்த மருந்து ட்ரேவை பரித்து ,

” இப்போ இதெல்லாம் நான் போட்டுக்கணும் அவ்வளவு தான “

“….. ” தலையை மட்டும் ஆட்டினாள் .

” போடாம இங்க இருந்து போக மாட்ட “

“…. “தலை மட்டும் ஆடியது ,

“ம்ம்ம் நீ அப்பாவி ?ம்ம்ம் பூனை கண்ணை உருட்டி உருட்டியே நீ நினைச்சதை சாதிச்சிட்டு இருக்க , இருக்க டி உனக்கு “என்றவன் ,

” வா மருந்தை எடுத்து கொடு ” என்றான் கட்டளையாக .

அவளும் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளையாக   ஊசியை அவனுக்கு செலுத்துவதற்காக அவனை நெருங்க  , தன் கரம் உயர்த்தி அவளை தடுத்தவன் ,”கையில் கொடு நானே போட்டுக்குறேன் ” என்றவன்  சிரமப்பட்டு தனக்கு தானே மருந்தை செலுத்தினான்  .

” வேற இருக்கா ?” அக்னி விழிகள் அஞ்சன விழிகளை முற்றுகை இட்டது  ,

” மாத்திரை மட்டும் இருக்கு “

“எடு “

“ம்ம்ம் “

“வேகமா எடு “

“ம்ம்ம் “

“ஏய் மொத்தமா எடு டி ” காட்டுக்கத்து கத்தினான் .

அவள் கொடுத்த மாத்திரைகளை மொத்தமாக தன் வாயில் அடைந்தவன்  ,’ முடிஞ்சிதா’ என செய்கையில் காட்ட , அவளும் ‘ம்ம் ‘ என்று தலை அசைக்க ,

அவன் ‘ போ மா ‘ என வாசலை காட்ட, விட்டால் போதுமென்று அவள் ஓடியே விட்டாள்.

அவள் சென்றதும் அஷோக் அக்னியிடம் ,

” இன்னுமே சாஃப்டா  நடந்திருக்கலாம் ரொம்ப நல்ல பொண்ணு டா , எல்லாத்துக்கும் மேல அவ ஒரு டாக்டர் அவ பார்க்கிற வேலைக்காவது மரியாதை குடு அக்னி ” என்று மேகாவுக்காக பரிந்து பேச  பதிலுக்கு  அக்னியிடம் இருந்து சில பல மங்கள வார்த்தைகளை பரிசாக பெற்றது தான் மிச்சம்  . 

தீரனிடம் வாங்கிக்கட்டியபடி வெளியே வந்த அஷோக்  முன்பு தன் கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டியபடி முகத்தில் கோபம் கொப்பளிக்க  அவனை பார்த்து கொண்டிருந்தாள் அவனவள் இஷித்தா. மேகாவோ அவளது அருகில் நின்று கொண்டு பொறுமையாக இருக்கும்படி செய்கை செய்து கொண்டிருந்தாள் .

அப்பொழுது மேகாவை பார்த்து சினேகமாக சிரித்தபடி வந்த அஷோக் ,

” மேகா நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப தேங்க்ஸ் ” என்று கூறினான் ,

அதற்கு மேகா பதில் கூறும் முன்பே ,” அதெல்லாம் அவனையே வச்சுக்க சொல்லு எப்போ கிளம்புவாங்கன்னு கேளு ” என்றாள் இஷித்தா .

” மேகா இன்னைக்கு நைட் வரைக்கு அக்னி இங்கையே இருக்கட்டும் ,  மிட்நைட் நானே வந்து அவனை அழைச்சிட்டு போறேன் “

மேகா சரி என்பதாய்  தலையசைக்கவும் ,” முடியாது இப்பவே கிளம்ப சொல்லு ” என்றாள் இஷித்தா முறைத்தபடி .

உடனே அஷோக் மேகா பக்கம் திரும்பி ,

” மேகா கொஞ்சம் தண்ணி தாகமா இருக்கு , கொஞ்சம் தண்ணி கிடைக்குமா “என்று சிறு இருமலுடன் கேட்க , சரி என்பதாய் மேகா தண்ணி எடுக்க சமையல் அறைக்குள் நுழைந்த மறு நொடி அஷோக் இஷித்தாவிடம் ,

” ஏய் வாயை மூடிட்டு இரு இல்லை உன் ஃப்ரண்ட் இருக்கான்னு கூட பார்க்காம   அவ முன்னாடியே லிப்லாக் பண்ணிடுவேன் ” என நூதன முறையில் மிரட்ட , அவளோ அவனை அதிர்ச்சியுடன் பார்க்க , அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்தவன்,

 ” கண்டிப்பா பண்ணுவேன் டி ” என்று சொல்லி அவளது கன்னம் தட்டிவிட்டு செல்ல , அவளோ அவனை தீ பார்வை பார்த்தாள்.

அவன் சென்றதும் கையில் தண்ணீர் கிளாஸ்சுடன் வந்த மேகாவை  தாளிச்சு எடுத்த இஷித்தா,” ஹாஸ்பிடல் கிளம்புறியா நான் உன்னை ட்ராப் பண்ணிறேன் ” என்று கேட்க ,

” இல்லை மச்சி இன்னைக்கு லீவ் சொல்லிருக்கேன் ” என்ற மேகாவை கண்கள் இடுங்க பார்த்தவள் ,

” அவன் பச்சை குழந்தை பார்த்தியா இடுப்புல வச்சி சோறு ஊட்டு இடியட் ” என்றவள் ,” நைட் ஆபிஸ் பார்ட்டி இருக்கு அண்ணன் உன்னை பார்க்கணும்ன்னு சொன்னான், அதுக்கும்  ஏதாவது காரணம் சொல்லாத , நேரத்துக்கு வந்து சேர் ” என தன் அலுவலக ஐடி கார்டை கழுத்தை மாட்டியபடி கூறினாள் இஷித்தா.

“ரித்துராஜ் ஏன் என்னை பார்க்கணும் “என மேகா யோசனையாக கேட்க 

“ம்ம் என்னை கேட்டா , எனக்கு என்ன தெரியும் ?வா அவனே சொல்லுவான் ” என அடக்கப்பட்ட புன்னகையுடன் கூறியவள் ,மேலும் தொடர்ந்து ,” ஏய் நீ வீட்ல தானே இருப்ப கேஸ் கார அண்ணாக்கு சொல்றேன் காலி சிலிண்டர் ஸ்டோர் ரூம்ல வச்சேன் அவரையே எடுக்க சொல்லு ” என்றவள் மேகாவை பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு தான் வேலை பார்க்கும் தன் பத்திரிகை ஆபிசுக்கு சென்றாள்.

தொடரும்