MIRUTHNAIN KAVITHAI IVAL 7

cover page-219e7cf7

மிருதனின் கவிதை இவள் 7

அறைக்குள்  பொருள் உடையும் சத்தம் கேட்டதும் , வாசலில் அக்னியிடம் எப்படி மன்னிப்பை யாசிப்பது என்று தயங்கியபடி  நின்றிருந்த மேகாவுக்கு கை கால்கள் தானாக உதறல் எடுத்தது .

அந்த நபரின் உயிரை காப்பற்ற வேண்டும் , அவ்வளவு தான் . அதை தாண்டி மேகாவுக்கு அக்னியை காயப்படுத்தும் எண்ணம் எல்லாம் இல்லை .ஆனால் அந்த நொடி அவளுக்கு என்ன ஆனது ?ஏன் அவள் அவ்வாறு நடந்து கொண்டாள் ? இவ்வளவு தைரியம் எங்கே இருந்து வந்தது ? என்பது இப்பொழுது வரை அவளுக்கே புரியவில்லை .

இது அனைத்திற்கும் மேலாக அவன் அவளை வழக்கம் போல காயப்படுத்திருந்தால் கூட  அவளுக்கு இவ்வளவு உறுத்துதல் இருந்திருக்காது  ஆனால் அவனது இயல்பை தாண்டிய அமைதி மேகாவை  மிகவும் சங்கட படுத்தியது .

அதனால் எப்படியாவது அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று தயங்கியபடி கதவில் கை வைத்தவளுக்கு , அறைக்குள் இருந்து வந்த சத்தம் தீரன் அதீத கோபத்தில் இருப்பதை  உணரவைக்க  , மேகாவுக்கோ நெஞ்சில் ஈரம் வற்றி போக  , கைகளை பிசைந்து கொண்டு  நின்றிருந்தாள் .

சில மணி நேரம் கழிந்த பிறகு மேகா , தன் பயத்தை புறந்தள்ளிவிட்டு  தயங்கியபடி அறைக்குள் நுழையும் பொழுது,  கண்களை மூடி சுவற்றில் தலை சாய்த்து , கால்களை நீட்டி சரிந்தபடி தரையில் அமர்ந்திருந்தான் அக்னி தீரன் .

” என்ன நாம வந்தது கூட தெரியாம , அசையாம இருக்கான் . மூச்சு விடுற மாதிரியே தெரியல ?” சிறு பயத்துடன் மெதுவாக அவன் அருகில் வந்தவள் அவன் கரம் பற்றி துடிப்பை பார்க்க சங்கடப்பட்டு தன் காதை அவன் மார்பில் படாதவாறு  சரித்தவள்,

” ஊஃப்  துடிக்குது “என நீண்ட பெருமூச்சை வெளியிட்டவள் ,”தூங்கிட்டான் போல “என்றபடி அங்கிருந்து திரும்பவும்  திகைத்தாள் !

வலது கையில் உடைந்த கண்ணாடி  பாகங்கள் குத்தி குருதி வழிந்திருந்தது .

எப்படி நிகழ்ந்திருக்கும் ? என சிந்தித்தவளுக்கு  திடிரென்று  மூளைக்குள் மின்னல்வெட்ட , நிமிர்ந்து கண்ணாடி இருக்கும் திசையை பார்த்தாள் , ஆள் உயர நிலை கண்ணாடி உடைந்திருந்தது .

‘அடித்தே உடைத்திருக்கின்றானா ! ‘ என்று எண்ணியவளுக்கு , தன் சொல்லின் வீரியத்தை அந்த நொடியே  உணர்ந்த மேகாக்கு அவன் நிலையை பார்த்ததும்  நெஞ்சுக்குள்  ஈரம் சுரந்தது .

‘ஏதோ சொல்லிவிட்டேன் அதற்கு இப்படியா ? அடித்து உடைத்து தன்னையே  காயப்படுத்தும் அளவிற்கு அப்படி என்ன ஆத்திரம் ? ‘ என எண்ணியவளுக்கு முகம் கருத்தது.அவனது காயம் கண்டு மனம் அடிவாங்கியது .

அவள் பேசியது தவறு தான் ! அதுவும் ஒருவருடைய இயலாமை மற்றும் இல்லாமையை பற்றி பேசி குத்திக்காட்டுவது மிக பெரிய தவறு தான் ! ஆனால் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியை தூக்குவது மட்டும் சரியா ?அவள் அவ்வாறு பேசிருக்காவிட்டால் ஒரு உயிர் போயிருக்குமே ? அப்படி ஒன்று நடந்திருந்தால் அவனுக்கும் அது பாவம் தானே,  சரி அவனுக்கு  எப்படியோ ஆனால் அவளுக்கு ?வாழ்க்கை முழுவதும் நரகம் தானே !

அதற்காக இப்படி ரத்த காயத்தோடு கிடக்கிறானே .

‘ ச்ச நல்லா வந்து நமக்கென்று சேர்த்திருக்கின்றான் . பாடாய் படுத்துகிறானே பாவி ‘ என நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி முதலுதவி பெட்டியோடு அவன் அருகில் வந்தவளுக்கு அவனை தொட்டு  மருந்திடுவதற்கு  பயம் தான் , எங்கே முழித்துவிட்டால் ,” ஏன் தொட்டாய் ,  உனக்கு வெட்கமா இல்லையா “என்று மீண்டும் வார்த்தையால்  அடித்துவிடுவானோ என்று எண்ணி சில நொடிகள் தயங்கினாள் .

மீண்டும் கரங்களை பார்த்தாள் ஆங்காங்கே கண்ணாடி துண்டுகள் குத்தி இருக்க, ஒரே ரத்த கரை ,கொஞ்சம்  அதிகப்படியான காயம் தான் மருந்திட்டால் தான் நல்லது.

சரி முழித்தால் முழிக்கட்டும் ,  என்ன செய்துவிடுவான் ? கொஞ்சம் அதிகமாவே முறைப்பான் , காட்டுக்கத்து  கத்துவான்,  அதற்கும் மேல் தள்ளிவிடுவான் ‘ராட்சசன் ‘ என எண்ணியவள் , தரையில் அமர்ந்து மெதுவாக அவனுக்கு வலிக்காமல் கண்ணாடி துண்டுகளை அவள் அகற்றுவதற்காக அவன் கரத்தை பிடித்தவள் அடுத்த நொடியே விம்மி வெடித்து கதறினாள் !

அக்னியோ மருந்தின் வீரியத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்க , யாரோ அவனை  தொடவும் சட்டென்று அவன்  புலன்கள் விழித்து கொள்ள , விளைவு அடுத்த நொடியே மேகாவை தரையில் வீழ்த்தி அவளது கழுத்தை தனது வலிய கரம் கொண்டு  அழுத்தி,  அவளது  நெற்றியில் துப்பாக்கியை வைத்திருந்தான் அக்னி தீரன் .

அவ்வளவு தான் அலறியே விட்டாள் ! அவளது கதறலில் ,”ஷிட் “என தன்னை கடிந்து கொண்டவன் , துப்பாக்கியை  தளர்த்திவிட்டு எழுந்து நிற்க ,

அவளோ மருண்ட பார்வை பார்த்தவாறு , அச்சம் கொண்ட விழிகளில் நீர் சுரக்க தரையிலே கிடந்தாள் , அவளது அச்ச பார்வையில் தன் இமைகளை இறுக மூடி திறந்தவன் , அவள் அருகே முட்டி போட்டது தான் தாமதம் , சட்டென்று கீழே படுத்திருந்தவள் தலையை மட்டும் நிமிர்த்தியபடியே  அவனிடம் இருந்து விலகிய படியே  பின்னால் செல்ல , அவனுக்கு தான்  ஒருமாதிரி ஆகி போனது .

அவளது பயத்திற்கான காரணத்தை உணர்ந்தவன் “ஓகே ஓகே ” என தன் கரத்தில் இருந்த துப்பாக்கியை தள்ளி தூக்கி போட , அப்பொழுது தான் அவளுக்கு மூச்சே விட முடிந்தது .

” ஸீ ரிலாக்ஸ் ” அவளது தோளை  தொட போனவன் ஏனோ தன் கரத்தை இழுத்து கொண்டான்  ,

” வர்ஷினி …. ம்ம்ம்… நான் …லீவ் …இட் .. அது ” பேச முடியாமல் தடுமாறியவன் , நீண்ட பெருமூச்சை வெளியிட்டு ,

” நான் எப்பவுமே ஆழ்ந்து தூங்க மாட்டேன்,  தூக்கமும் வராது,  எப்பவுமே அலெர்ட்டா இருப்பேன் , சின்ன சத்தத்துக்கு கூட முழிச்சிருவேன் ” அவள் கேட்காமலே தன்னிலை விளக்கம் கொடுத்தான்,  அவளது பயத்தை போக்கிவிடும் ஆவலில் ! இவ்வளவு பொறுமையாக கூட இவனுக்கு பேச தெரியுமா? என்றிருந்தது  மேகாவுக்கு .

இதுவரை யாருக்கும் தன்னை பற்றி விளக்கம் கூறாதவன் முதல் முறையாக  மேகாவிடம் பகிர்கிறான். அதுவும் மிகவும் இயல்பாக ,தனக்கு கொஞ்சமும்  சம்பந்தமே இல்லாத சாந்தமான குரலில் அவன் பேசுவதை விழி அகல பார்த்தவளுக்கு , அழுகையும் பயமும் வந்த இடம் தெரியாமல் பறந்து போனது .

அவளை பார்த்தபடியே பேசியவன் ,” நீ இப்போ ஓகேவா “என்று கேட்க ,

“ம்ம்ம் ” என தலையசைத்தவள் கீழே இருந்து எழுந்து நின்று அவனையே பார்க்க ,

” என்னாச்சு வர்ஷினி  ஏன் அப்படி பாக்குறீங்க ?” வந்ததில் இருந்து ‘ ஏய் வா போ ‘ என ஒருமையாக விழித்தவன் திடிரென்று அவள் பெயரை சொல்லியது மட்டுமல்லாமல் ‘பாக்குறீங்க ‘ என மரியாதையாக  அழைத்ததும் மேகாவுக்கு இது அக்னி தானா என்ற அதிர்ச்சி தான் அகிகமாக இருந்தது .

அவளது விரிந்திருந்த விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்   ,” என்ன ? ” என்று கேட்டான்  குரலில் கடுமை பேருக்கு வந்து ஒட்டிக்கொண்டது ‘திருடன்’ சுதாரித்துக்கொண்டான் போல !

‘என்ன இவன் மாயாவி போல? நொடி பொழுதில் மாறுகிறான்” என்று எண்ணியவள் ,” கைல அடி பட்ருக்கு சார் ” என்றாள் .

” அதுக்கு? ” தனக்கே உரிய திமிருடன் கேட்டான் . ‘அதானே அவனாவது திருந்துவதாவது இதோ வந்துவிட்டான் காட்டுமிராண்டி ‘என மனதிற்குள் எண்ணியவள் .

” செப்டிக்காகிட போகுது சார் ப்ளீஸ் ” என்றாள்.

“ம்ம் ” என்று அவளை பார்த்தபடியே தலையசைத்தவன் , மெத்தை மீது அமர்ந்துகொள்ள ,அவன் செயலின்  அர்த்தம் புரியால்  அவள் தயங்கியபடி  நிற்க , தன் கண்களாலே மருந்திடுமாறு செய்கை செய்தவன் தன் கால்களை நன்றாக நீட்டி அமர்ந்துகொண்டு மேகாவையே இமைக்காமல் பார்க்க தொடங்கினான் .

அவனது கரத்தை மெதுவாக பிடித்த மேகா,

” கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க ” புல்லெட்டிற்கே  அசராதவன் சிறு கண்ணாடி துண்டிற்காக அஞ்ச போகிறான் அவனை அறியாத பேதை  எதையோ கூறி   கண்ணாடி துண்டுகளை அகற்ற , அவனும் அவள் சொன்னதிக்கேற்ப ,

‘ஸ் ‘ என வேண்டுமென்றே முனங்க உடனே அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,” அச்சோ வலிக்குதா கொஞ்சம் பொறுத்துக்கோங்க ” என முகம் சுருக்கி  பேச,  விழுந்துவிட்டான்  ! அவளது  கொஞ்சும்  குரலிடம்.

அக்னி தீரனின் தீர்க்கமான பார்வை மேகா மீதே மொத்தமாக பதிந்திருந்தது . அவள் அவனுக்கு வலிக்காமல் மருந்திடுவதை கவனித்தான் . உண்மையில் அவள் அவன் கைக்கு மருந்திடவில்லை,   எப்போதோ அடிபட்டு  ரணமாகிருந்த  மனதிற்கு தான் மருந்திட்டாள் ! என்று தான் சொல்ல வேண்டும் .

அந்தளவிற்கு அவளது அன்பும் ஸ்பரிசமும்  , அவன் இதனால் வரை சுமந்திருந்த மனபாரத்தை பாதியாக குறைத்து ஆறுதல் படுத்தியது . பற்றியெரியும் இதயத்தில் அடைமழை பெய்தால் எப்படி இருக்கும் அது போல அவளது மெல்லிய கரத்தின் மென்மையை அவன் மேனி உணர்ந்ததும் , மனம் முழுவதும் குளுமையை உணந்தான் . அவளது ஒரு பார்வையில் தனது வாடிய இதயம் புதிதாய் துளிர்வதை  கண்டு அவனுக்கே  அதிசயமாக இருக்க அவனே அவனுக்கு  புரியாத புதிராய் ஆனான்   .

மேகா  மேல் தன்னை மீறி பொங்கி வரும் உணர்வுக்கு பெயர் தெரியாமல் அவளையே உறுத்து விழித்துக்கொண்டிருந்தவனுக்கு , ஒன்றும் மட்டும் தெளிவாய் புரிந்தது .

அது , அவனுக்கு இவள் வேண்டும்  ,இவள் தான் வேண்டும் , இவளது அன்பு வேண்டும் , இவளது  இந்த பார்வை வேண்டும்  , இவளது கண்ணீர் வேண்டும் , இவளது கோபம் வேண்டும், இவளது அருகாமை வேண்டும் , இவளது ஸ்பரிசம் வேண்டும் ,   இவளது அனைத்தும் வேண்டும் , அதுவும் அவனுக்கே வேண்டும் அவனுக்கு மட்டுமே வேண்டும்  , என்று தீவிரமான முகத்துடன் அவன் அவளை பார்த்து கொண்டிருக்க , அவனை திடிரென்று நிமிர்ந்து  பார்த்த மேகா  அதிர்ச்சியில் தன் கரங்களை எடுத்துக்கொள்ள , அவன் முகம் தான் கூம்பிவிட்டது .

 அக்னியின் அடிபட்ட கரங்களுக்கு மருந்து போட்டு கொண்டிருந்த மேகாவின் மனதிற்குள்   திடிரென்று ஒருவித படபடப்பு , உள்ளுக்குள் ஏதோ ஒரு நெருடல் யாரோ தன்னை கண்காணிப்பது போல உணர்ந்தவள் ,   உடனே நிமிர்ந்தாள் ! அக்னியின் அழுத்தமான பார்வை அவளுக்குள் ஆழமாக பாய்ந்து உயிர்வரை செல்வது போல் தோன்ற உடலில் ஒரு வித நடுக்கம் பரவ , மேகாவின் விழிகள் விரிந்து சுருங்கியது , சரியாத கேசத்தை அடிக்கடி காதோரத்தில் சொருகினாள் ,  குனியவும் முடியாமல்,  நிமிரவும் முடியாமல் மிகவும் தவித்தாள் இல்லை தவிக்க வைத்தான் .

முடிந்தளவு அவன் பார்வையை தவிர்த்தாள், அவளது நடுக்கம் முகத்தில் தெளிவாய் தெரிந்தது ,  புரிந்து கொண்ட தீரன் அவளை மேலும் சீண்டி பார்க்க எண்ணி ,

” என்னாச்சு? ” அவனது கணீர் குரல் கவிழ்ந்திருந்த அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்க வைத்தது ! அவளும் பார்த்தாள் ! அதே பார்வை அவனது பொல்லாத பார்வை அவளை துளைத்துக்கொண்டு ஊடுருவியது .

” மருந்து போட்டாச்சு , நான் போகட்டா ” அவன் சம்மதம் சொல்வதற்குள் எழுந்து கொண்டவள் , மேல்மூச்சு வாங்க டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தாள் .

படபடப்பு மட்டும்   கொஞ்சமும் குறையவில்லை . முகத்தில் அரும்பிய வியர்வையை புறங்கையால் துடைத்தபடி அமர்ந்திருந்தாள் .

” தண்ணி வேணுமா ” தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி  வினவினான் .

“ஹான் ” இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து நின்றவளுக்கு அவனது பார்வையும் அவனது பேச்சும் புதிது .

” தண்ணி குடி யு நீட் இட் ” அருகில் வந்து ஜக்கில் இருந்த தண்ணீரை க்ளாசில் ஊற்றியவன்  அவளது நடுங்கும் கரங்களை பார்த்தபடியே  அவள் முன்பு கிளாஸை நகர்த்தினான் . மிரட்சியுடன் பார்த்தாள் .

” ம்ம் குடி ” அருகில் இருந்த நாற்காலியை அவளுக்கு நேர் எதிரே இழுத்து  போட்டபடி அமர்ந்தவன் ,

“உக்காரு “தன் எதிரே இருந்த நாற்காலியை காட்டி அமர சொன்னான் . இல்லை ஒரு வகையாக கட்டளையிட்டான் , பேந்த பேந்த விழித்தபடி தயக்கத்துடன் அமர்ந்தாள் .

பயத்தில் அவள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும்  தன் விழிகளால் படம் எடுத்தபடி அவளை பார்த்தவன் ,

“யு ஹேட் மீ ரைட் “சட்டென்று கேட்டு விட , மேகாவுக்கு தான் முகமெல்லாம் வெளிறி போக மலங்க மலங்க விழித்தாள் .

” ஐ ஆஸ்க்ட் யு சம்திங் ” என் கேள்விக்கு பதில் எங்கே? என்னும் தோரணையில் அவனது குரல் ஒலித்தது .

” நோ ” அவனது கண்களை பார்த்து கூறினாள் .

” பயப்படுறியா “அவளை உற்று பார்த்தபடி கேட்டான் .

” ஹான்  , நோ  இல்லை  ”  மூச்சு  மேலும்  கீழும்  வாங்கியது  .

” ரியலி ? ”  போலியாக ஆச்சரியப்படுகிறான் முகபாவனையும் நக்கல் குரலும்  சொல்லியது . 

ஆனால்  அதையெல்லாம்  புரிந்துக்கொள்ளும்   நிலையில்  அவள்  தான் இல்லையே .

”  ரியலி  ”  பதற்றத்தில்   அவன்  சொன்னதையே  சொன்னாள்  ,  ” ப்ச்  ஆமா  ”  தவறை  உணர்ந்து  கீழுதட்டை  கடித்தபடி  திருத்தி கொள்ள  , 

” அப்போ ஏன் இந்த பதற்றம் ?” தீரனின் விழிகள் மேகாவின்  நடுங்கும் கரங்களை காட்டி கேட்டது .

” அதெல்லாம் ஒன்னும் இல்லை ” குரல் தழுதழுத்தது  ! அவள்  வீட்டிலே அவளை  யாரோ போல உணர்வைத்தான். 

‘ ஏன் திடிரென்று புதிதாய் நடந்துகொள்கிறான்  ?’  காரணம் தெரியாமல் மனதிற்குள்  தவித்தாள் . ஏனோ  அக்னியின் கோபமான அவதாரத்தை விட இந்த அவதாரம் மேகாவுக்கு ஒருவித நெருடலை கொடுத்தது . எழுந்து போகவும் முடியவில்லை ! முள்ளின் மேல் இருப்பது போல அமர்ந்திருந்தாள் .அப்பொழுது தான் மனம் இன்று நடந்த சம்பவத்தை நினைவு படுத்தியது ,

‘ ஓ நாம் பேசியதற்கு தான் இவ்வாறு நடந்து கொள்கிறானா  ? ஆம் அதுவே  தான்’ என்று எண்ணியவள் , தயக்கத்தை தவிர்த்து அக்னியை பார்த்தாள்! அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாதவன் அங்கிருந்து எழுந்து கொள்ள முயல .

” சாரி சார் ” கண்களில் ஒருவித குற்ற உணர்ச்சியுடன் கூறினாள் .

அவன் அவளை பார்த்தான் ,” வேணும்ன்னு சொல்லலை ஏதோ கோபத்துல  அப்படி பேசிட்டேன் ஐயம் ரியலி சாரி  என்னயிருந்தாலும் நான் அப்படி கோபப்பட்டு பேசியிருக்க கூடாது “கண்கள் மன்னிப்பை யாசித்தது.

சற்று முன்னே சரிந்து கைகளை கோர்த்தபடி அவளையே பார்த்தவன் ,

” தப்பில்லை உனக்கு என்கிட்ட எல்லா ரைட்ஸும்  இருக்கு ” என்று கூறி மேலும்தொடர்ந்து ,” மேகா உன்  அன்பை நீ எல்லார் கிட்டையும் காட்டலாம்  ஆனா உன் கோபத்தை உனக்கு உரிமை உள்ளவங்க கிட்ட மட்டும் தானே காட்ட முடியும் ” என்றவன் சிறு புன்னகையுடன் அவளை கடந்து   செல்ல ,

‘ சிரிக்கிறானா என்ன ?’ ஏதோ எட்டாவது அதிசயத்தை கண்டவாறு அவள் விழிகள் விரிந்து கொண்டது,  மயக்கம் வர வில்லை அவ்வளவு தான் , அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சு காற்றை வேகமாக வெளியிட்டவள்    தன்  எதிரே  இருந்த  தண்ணீர் கிளாஸை   தன்   இருக்கரத்திலும்    ஏந்தி  மட  மடவென்று   வாயில்  சரித்துவிட்டு  மூச்சு வாங்க அமர்ந்திருக்க நொடிகள் கடந்த பிறகே அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி பார்த்தவளுக்கு ,  மீண்டும் மூச்சு முட்டிக்கொண்டு வந்தது . 

“அவன் மேல எனக்கு என்ன உரிமை இருக்கு ? ச்ச இவன் எப்போ போவான்னு இருக்க, இவன் பேச்சே சரியில்லையே ” வெளிப்படையாகவே வருந்தினாள் .

தொடரும்