Mk 14

Mk 14
மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அத்தியாயம் 14
அந்த அதிகாலை பொழுது ரம்யமாக அமைந்து விட , இயற்கையான காற்றை சுவாசிக்கும் போதே ஒரு இனம்புரியாத உணர்வு .
காலை சீக்கிரமாக எழுந்த வெற்றி எப்போதும் போல் , தந்தை வளர்க்கும் சேவலை சீண்டி விட்டே ஜாகிங்கிற்கு சென்றான்.
இருபக்கமும் இயற்கை சூழ்ந்த வயல் வேலிகளுக்கு நடுவில் அமைத்திருந்த பாதையில் , மெதுவான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.
இங்கே பெரிதாக நண்பர் பட்டாளங்கள் ஏதும் அவனுக்கு இல்லை.
எல்லாரிடமும் பேசுவான், பழகுவான் , நன்றாக பழகுபவர்களுக்கு இனிமையானவன் கூட. கேட்பவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்ய கூடியவன் தான். ஆனால் அனைவரையும் ஒரு எல்லைக்குள்ளே நிறுத்தி விடுவான். அவனுக்கு நெருங்கியவர்கள் என்று சொன்னால் அது பலராமனும் கௌதமும் தான்.
இருவருமே சுயநலமில்லாத அன்பை அவனுக்கு காட்டியவர்கள். மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு நோக்கத்துடனே அவனுடைய நட்பை அனுகியவர்கள்.
ஜாகிங் முடித்து வீட்டிற்கு வந்தவனுக்கு , நிம்மதியாக உறங்கி கொண்டிருந்த இனியாவை கண்டதும் , அவளை சீண்ட தோன்றியது வெற்றிக்கு.
‘ என்ன செய்யலாம்?’ என்று யோசித்த வெற்றியின் மூளையில் தௌசண்ட் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
” உன்னோட மார்னிங் இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் தான் போ” என லேசாக அவள் மூக்கை ஆட்டிவிட்டு சென்றான்.
அவளோ தூசி ஏதோ பட்டுவிட்டது போல் உறக்கத்தில் அதனை துடைத்து கொண்டு உறக்கத்தை மேலும் தொடர்ந்தாள்.
ட்ரெசிங் டேபிள் அருகில் வந்தவன் , அவள் உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸை எடுத்து , அதிலிருந்த ஐகோனிக்கை எடுத்தவன் சிரிப்போடு அவளை நோக்கி நடந்தான்.
“உன்னைய நான் அழகா மாத்துறேன் . அப்புறம் பாரு எல்லாரும் உன்னை தான் பார்ப்பாங்க. நீ ரொம்ப லக்கி கேர்ள்” என்றவன் அவள் முகத்தில் மையை கொண்டு கோலம் போட துவங்கினான்.
முதலில் அவளுக்கு பெரிய மீசையொன்றை வரைந்தவன் , அதை வலைத்து வேற பார்க்க முயன்றான்.
பின் , வரிக்குதிரை போல் முகத்தில் வரி போட்டு விட்டான். இன்னும் சில பல தீட்டலை தீட்டிய பின்பே அவளை விட்டான்.
எடுத்த இடத்திலே மையை வைத்தவன் , திரும்பி மனைவியை பார்க்க சிரிப்பாய் வந்தது அவனுக்கு. அத்தனையும் அடக்கி கொண்டு கோபமாக அவளை எழுப்ப முயன்றான்.
” ஏய் ! எந்திரி . இவ்வளவு நேரமா தூங்குவ” என சிடு சிடுக்க
” தடியன் சார்! ” என்று அவனது கைகளை தனக்குள் பொதிந்து கொண்டு சிறு பிள்ளை போல் உறங்க முயன்றாள்.
“இவளை…” என குரலில் கடுமையை வைத்து சொன்னாலும் முகத்தில் ஒரு புன்சிரிப்பு தோன்றியது.
” இனியா எந்திரி..” கடுமையான குரலில் அழைத்தான் வெற்றிமாறன்.
உறங்கியவளின் மூளைக்குள் இவனின் சத்தம் கேட்கவே கண்ணை மெதுவாக திறந்து அவனை ஏறிட்டாள்.
அந்த நொடி அவனும் அவளை பார்க்க , இருவரின் பார்வைகளும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து கொண்டன.
விழிகளின் சங்கமத்தில் அவர் அவருக்கான கேள்வியை தொடுத்திருக்க , இருவருமே அதை உள்வாங்கி கொள்ள முயன்ற போது , அவ்வீட்டின் சேவல் கூவி இவர்களை சுயத்திற்கு அழைத்து வந்தது.
முதலில் சுதாரித்து கொண்டது என்னவோ இனியா தான். பின், தன் பார்வையை மாற்றி கொண்டாள்.
” தடியன் சார் ! எதுக்கு என்னை இப்போ இவ்வளவு சீக்கிரமா எழுப்பி விட்டீங்க ?”
” எது இது சீக்கிரமா.?”
” அப்புறம் இல்லையா பின்ன.? இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா தூங்குறேன் அது பிடிக்கல்லையா உங்களுக்கு.?” இடுப்பில் கை வைத்து கொண்டு கேட்டாள் பெண்.
” இப்போ மணி எத்தனை தெரியுமா.? ஒன்பதாக போகுது. ஆனா நீ இன்னும் தூங்கிட்டு இருக்க ” என்றவன் ,” அது என்ன இப்போ தான் நிம்மதியா தூங்குற மாதிரி சொல்ற.? இவ்வளோ நாள் மேடம் என்ன கொட்ட கொட்ட முழிச்சிட்டா இருந்தீங்க? “
” அப்புறம் இல்லையா பின்ன. அது உங்களை… ” என எதையோ சொல்ல வந்தவள் நாக்கை கடித்து மண்டையில் கொட்டி கொண்டாள்.
” என்ன எதையோ சொல்ல வந்துட்டு சொல்லாம நிறுத்துற.?” என புரியாமல் கேட்க
” அது… அது.. ஹான் எனக்கு நேரமாச்சி தடியன் சார். நான் போய் ஃப்ரெஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லி சிட்டாக பறந்து விட்டாள்.
குளியலறைக்குள் வந்த பின்பு தான் இனியாவிற்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.
” நல்ல வேலை தப்பிச்சேன். இல்லைன்னா நானே எல்லாத்தையும் உளறி கொட்டிருப்பேன்” என்றவள் தனக்கு தானே தலையில் அடித்து கொண்டாள்.
அப்போது தான் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தவள் , பயந்தே போனாள்.
” ம்மா..” என பயத்தில் கத்தியே விட்டாள்.
“வெற்றி…” என பல்லை நறுநறுவென கடித்தவள் அவனை எதுவும் செய்ய முடியாத நிலையில் சுவற்றில் ஓங்கி குத்தினாள்.
பின் குளித்து முடித்து அடர் பச்சை வண்ண நிறத்திலான சேரியை கட்டியவள் , அத்தையை காண கீழே வந்தாள்.
” வா அம்மு ! வந்து சாப்பிடு மணியை பாரு ஒன்பதை கடந்துடுச்சி . வயசு புள்ள சீக்கிரமா சாப்பிடனுமா இல்லையா .வா வா வந்து உக்காரு ” என பாசத்துடன் அழைத்த அத்தையை பார்த்து கண் கலங்கினாள் இனியா.
ஒரு நொடி தான் பின் யாரும் பார்க்காத முன்பு கலங்கிய விழிகளை துடைத்து கொண்டாள்.
டிவி பார்த்து கொண்டிருந்தாலும் , இவர்களின் பேச்சினை கேட்டு கொண்டு தான் இருந்தான் வெற்றி. அதில் இனியாவின் கலங்கிய கண்களை கண்டு கொண்டான்.
‘ இவ ஒரு புரியாத புதிராகவே இருக்கா.? இது ஒரு சாதாரண விஷயம் இதுக்கு போய் கண் கலங்கிக் கிட்டு இருக்கா.? ‘ என தனக்குள் யோசித்து கொண்டிருந்தான் வெற்றிமாறன்.
” என்ன அம்மு அப்படியே நின்னுட்டு இருக்க ” என அவளின் கைப்பிடித்து அமர வைத்து ஊட்டி விடவும் செய்தார் விஜயசாந்தி.
இப்போது கலங்கிய விழிகளில் இருந்து கண்ணீர் தானாக வெளிவந்தது.
அதை பார்த்த விஜயா பதறி போய் ,” என்னடா அம்மு காரமா இருக்கா என்ன?”
” இல்லை அத்தை ” என தலையசைத்தாள்.
” அப்புறம் என்னாச்சி டா? நான் சமைச்ச சாப்பாடு பிடிக்கல்லையா என்ன?”
” அதெல்லாம் இல்லை அத்தை. இப்படி யாரும் எனக்கு ஊட்டி விட்டதே கிடையாது. இது தான் எனக்கு முதல் முறை இப்படி சாப்பிடுறது . அதான் லைட்டா கண்ணு கலங்கிடுச்சி.”என கண்ணீரை துடைத்தாள்.
” அதான் இந்த அத்தை கிட்ட வந்தாச்சில , இனி நீ அழவே கூடாது ” என அவரும் கண்ணை துடைத்து விட்டார்.
” சரி அத்தை. இனி அழல , இப்போ ஊட்டுங்க பசிக்குது ” வயிற்றை காட்டி இனியா சொல்ல
ஆசையாய் அவளுக்கு ஊட்டிவிட்டார் விஜயசாந்தி.
வயகாட்டிற்கு சென்று ஒரு பார்வை பார்த்து விட்டு வந்த பரமசிவம் சாப்பிட அமர்ந்தார்.
அவளின் கண்ணீர் அவனை ஏதோ செய்ய , அதுமட்டும் இல்லாமல் அவளுக்கான அவனின் சோதனையை இன்றைய பொழுதிலிருந்தே ஆரம்பிக்க நினைத்தான்.
இனியாவை நோக்கி திரும்பியவன் ” இனியா ” என்றழைத்தான்.
அவனை திரும்பி பார்த்து முறைத்தவள் ,” என்னங்க.?” பவ்யமாக கேட்டாள் பெண்.
” சாப்பிட்டு கிளம்பி வா . நாம ரெண்டு பேரும் வெளிய போயிட்டு வரலாம்” என்றவன் அவள் முகத்தை தான் கூர்ந்து கவனித்தான்.
இனியாவோ இவனின் கூற்றில் திகைத்து தான் போனாள். அதை அப்படியே அவள் முகம் பிரதிபலித்தது.
அவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் , இவனுடன் சென்றால் பலி வாங்குகிறேன் என்று ஏதாவது பண்ணி விடுவானோ என பயந்து போனாள் பெண்ணவள்.
‘ இவளோட ரியாக்ஷனே சரியில்லையே. நாம நினைச்சது தான் சரியோ. இந்த பலா கொட்டை பேச்சை கேட்டு புத்தி கெட்டு போய் நடக்கிறோமோ ‘ என்றெல்லாம் தனக்குள் பேசிக்கொண்டிருந்தான்.
“என்ன பேச்சையே காணோம் “அதட்டலாகவே அவன் குரல் வந்தது .
“ஹான் , வரேன் !வரேன் ! சாப்பிட்டு உடனே கிளம்புறேன்” தட்டு தடுமாறி சொன்னவள் அத்தை ஊட்டும் உணவை வாங்கி கொண்டாள் .
“ம்ம்ம் ” மீண்டும் டிவியில் கவனத்தை வைத்தான் .
பரமசிவம் தான் இவனின் செயலில் குழம்பி போய் நின்றார்.
‘இவன் அவளோ நல்லவன் கிடையாதே . திடீருன்னு நல்லவன் மாதிரி பிஹவ் பண்றான் .’மகனை குறித்து யோசனையில் இருந்தார் அவர் .
“ஏங்க ! இன்னொரு பூரி வைக்கட்டுமாங்க .வெறும் தட்டை வச்சிட்டு உட்காந்து இருக்கீங்க பாருங்க “
“இல்ல போதும் விஜி ” என்றவர் மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டே சென்றார் .
பின் , இனியா கிளம்பி கீழே வெற்றியை நோக்கி வந்தாள் .
“போலாமா ?” வெற்றி .
“ம்ம்ம் ” தலையை கவிழ்ந்து கொண்டாள் பெண் .
“போலாமா ?” மீண்டும் சொன்னவன் போலாமா என்பதில் சிறு அழுத்தம் கொடுத்திருந்தான் .
‘இப்போ தான ம்ம் சொன்னோம் . காது ஏதும் கேக்க மாட்டேன்கிதோ ‘ சிந்தித்தவள் நிம்ர்ந்து கணவனை நோக்கினாள் .
“போலாம்ங்க ” இனியா மெலிதான குரலில் சொல்ல
“இத முன்னாடியே சொல்றதுக்கு என்ன ? வா போகலாம் ” கார் சாவியை எடுத்துக்கொண்டு முன்னே சென்றான் .
இனியா தலையில் அடித்துக்கொண்டவள் , அவன் பின்னே சென்றாள் .
இருவருமாக காரில் பயணம் செய்தபடியாக வெற்றியே முதலில் பேச்சு கொடுத்தான் .
“எங்க போலாம்னு சொல்லு ?”வெற்றி கேட்கவே அவனை வினோதமாக பார்த்தாள் .
“கேள்வி கேட்டா பதில் சொல்லமுடியாதா உன்னால ?” கோபமாய் வெற்றி கேட்டவே அவளும் பதில் கேள்வி கேட்டாள் .
“எங்க போறோம்ன்னு கூட தெரியாம எதுக்கு என்னை கூப்பிட்டீங்க தடியன் சார்ர்ர்?”திரும்பி அவள் கேள்வி கேட்க அவளை பார்த்து முறைத்து வைத்தான் .
“கேள்வி கேட்டா பதில் மட்டும் தான் சொல்லனும் .திரும்ப எதிர் கேள்வி கேட்க கூடாது புரியுதா “வெற்றி காட்டமாவாகவே சொன்னான் .
“புரியுது சார் ” என்றவள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள் .
“சரி , எங்க போலாம் ?”
“நான் எந்த இடம் சொன்னாலும் கூட்டிட்டு போவீங்களா தடியன் சார் ?” சிறு சந்தோஷத்துடனே கேட்டாள் .
“ம்ம் . சொல்லு “
“என்னை உச்சிப்பிள்ளையார் கோவில் , கல்லணை ,முக்கொம்பு , ஐயப்பன் கோவில் , ஸ்ரீ ரங்கம் கோவில் ,விண்டோ ஷாப்பிங் …”என அடுக்கி கொண்டே போனாள் இனியா .
வெற்றி தான் இவள் பதிலில் மலைத்து போய் அவளை பார்த்தான் .
” இவ்வளோ இடத்துக்கும் கூட்டிட்டு போவீங்க தானே?” ஆசையாய் அவனை எதிர்நோக்கி கேட்டாள்.
” ஒரே நாளில் எல்லாம் இத்தனை இடத்துக்கும் கூட்டிட்டு போக முடியாது. இன்னைக்கு முதல் முறை நாம வெளிய போறதுனால திருவானைக்காவல் கோவிலுக்கு போயிட்டு அப்படியே கல்லணை போலாம் சரியா . மத்ததெல்லாத்துக்கும் வேற ஒரு நாள் கூட்டிட்டு போறேன்” என்க
ஒரு நொடியேனும் வெற்றியை காதலாய் நோக்கினாள் பெண். அவன் பார்க்கும் முன்பே சுதாரித்தும் கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து முதலில் திருவானைக்காவல் கோவிலுக்கு சென்றனர்.
இதனை திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் என்றெல்லாம் அழைக்கப்படுக்கிறது.
சோழர் காலத்தில் ஐந்து பிரகாரங்களைக் கொண்டு கட்டப்பட்டது.
சிவனையும் பெருமானையும் வணங்கி விட்டு வெளியே வர , அங்கே பிரசாதம் தருவதை கண்டு இனியாவின் கண்கள் இரண்டும் பிரகாசமானது.
அதனை கண்ட வெற்றி தலையில் அடித்து கொண்டான்.
” சரியான சாப்பாட்டு இராமாயி ! இங்கேயே இரு நான் போய் வாங்கிட்டு வரேன்” வெற்றி பிரசாதம் கொடுக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
சுட சுட பொங்கலையும் புளிசாதத்தையும் கொண்டு வந்து அவள் முன் நீட்டினான்.
” தேங்க் யூ சோ மச் தடியன் சார்” என்றவள் அந்த பொங்கலை வாசம் பிடிக்க ஆரம்பித்தாள்.
“ப்பா! வாசனையே அள்ளுது தடியன் சார் ” முதல் வாயை எடுத்து ஊதியவாறே ரசித்து ருசித்து சாப்பிட்டாள்.
” உங்களுக்கு வேணாமா சார்.?”
” வேணாம். நீயே சாப்பிடு” சிரித்த முகமாக சொன்னான்.
” ஓகே ” பொங்கலையும் புளியோதரையும் சாப்பிட்ட பின்பே வெற்றியை நிமிர்ந்து பார்த்தாள்.
” செம்ம டேஸ்ட் தடியன் சார்”
” சரி வா போகலாம்..” என அடுத்து கல்லணை நோக்கி சென்றனர்.
கரிகால சோழனால் 1 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான் இந்த கல்லணை . தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் இதுவே பழமையான அணையாகும்.
டேம் சென்று பார்த்தவர்கள் , பக்கத்தில் வாய்க்கால் போல் ஓடியதில் கால்லை நனைத்தவாறே இருந்தாள் இனியா.
” உங்களுக்கு தெரியுமா தடியன் சார் , நான் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வந்ததே இல்லை.” அவனுடன் பேசியவாறே தண்ணீரில் விளையாண்டாள்.
” உங்க அப்பா அம்மா கூட வந்ததே இல்லையா.?”
” இல்லையே. என்னை என் அம்மா வெளியே அனுப்பமாட்டாங்க . இப்போ தான் ஒரு மூணு வருஷமா வெளி ஊருல வேலை பார்க்குறேன். அதுக்கு பேர்மிஷன் கூட மணி அத்தான் தான் வாங்கி கொடுத்தாங்க .” அதனை சந்தோஷமாகவே சொன்னாள்.
” என்ன ஃபோட்டோ எடுக்குறீங்களா ? ” இனியா வெற்றியிடம் கேட்க
” சரி கொடு ” மொபைலை வாங்கி ஃபோட்டோ எடுத்து கொடுத்தான்.
பின் , அணையின் ஓரத்திற்கு சென்று அங்கு இருவரும் கால்லை நனைத்து விளையாடினர்.
விளையாடி கொண்டிருக்கும்போதே இனியாவிற்கு பசி வந்துவிட்டது.
“பசிக்குது தடியன் சார்..” பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல
” உனக்கு பசிக்காம இருந்தா தான் அதிசியம். வா போலாம் ” இனியாவை ஒரு மீன் வறுவல் கடைக்கு அழைத்துச் சென்றான்.
” எனக்கு சங்கரா மீன் வாங்கி தாங்க “
” சரி வாங்கிக்கோ “
பின் மீனை சாப்பிட்டு விட்டு அங்கே சில நேரம் சுற்றி திரிந்து இரவு போல் வீடு வந்து சேர்ந்தனர்.
நாளை இரவு ஊருக்கு கிளம்ப வேண்டி இருப்பதால் , அதற்கான துணிமணிகளை எல்லாம் பேக் செய்து பெட்டியில் வைத்தனர்.
அடுத்தநாள் காலையிலே மொத்த குடும்பமும் வெற்றியின் வீட்டில் ஆஜராகிவிட்டனர் அவர்களை வழியனுப்புவதற்காக.
முதல் சோதனையில் இனியா , அவளுக்கு தெரியாமலே வென்றிருக்க , அடுத்தடுத்த சோதனைகளில் இனியா வெற்றி பெற்று வெற்றியை தக்க வைத்து கொள்வாளா ?