MK!28

MK!28

மோகனங்கள் பேசுதடி!

மோகனம் 28

காலை விடிந்ததில் இருந்தே அருவி கலையிழந்த முகத்துடனே காணப்பட, மனைவியை கவனித்த விஷ்வாவிற்கு அவளின் இந்த செயல்பாட்டுக்கான காரணம் புரியவில்லை. இதைப்பற்றி கேட்டபோதும் மழுப்பலான பதிலை சொல்லி நகர்ந்துவிட்டாள்.

விஷ்வாவிற்கு மனம் ஏனோ உறுத்தியது. அதிலும் இந்த நேத்ரா வேறு எப்போதும் அருவியுடனே சுற்றிக்கொண்டிருக்கிறாள். அவள் ஏதாவது பேசி மனைவியை காயப்படுத்திருப்பாளோ,இல்லை தனது செயல் ஏதும் அவளை நோகடித்திருக்குமா? என பலவாறாக சிந்திக்கலானான்.

அருவி காரணத்தை சொல்லாமல் அவளுக்குள்ளே வைத்து உள்ளுக்குள் புலுங்குவதை பார்க்க பார்க்க விஷ்வாவால் சகித்து கொள்ள முடியவில்லை.

இருப்பினும் அமைதியாக தான் இருந்தான். அவளை வற்புறுத்த அவன் விரும்பவில்லை.

சமையலறையில்  வேலை பார்த்துக் கொண்டிருந்த அருவியிடம் வந்த நேத்ரா,” எனக்கு ஒரு க்ரீன் டீ கிடைக்குமா?” என்க,

“ஒரு நிமிஷம் அவங்களுக்கு இந்த டீயை கொடுத்திட்டு வந்து போட்டு தரேன் ” என்றவாறே பக்கத்தில் இருந்த கப்பில் டீயை ஊற்றியவளிடம் ,

“அவங்கன்னா அது அங்கிளா ஹனி ?” வினவ,

“இல்லை. என் புருஷன்” பெருமை பொங்க சொல்வதை அந்த பக்கமாக வந்த விஷ்வா கேட்டு, மனைவியை அள்ளி முத்தாட ஆசைக்கொண்டு அவள் பக்கம் வந்தவன் தோளில் கைப்போட்டு,” எங்க ஜோடி பொருத்தம் எப்படி இருக்கு நேத்ரா?” வேண்டுமென கேட்க,

பல்லை கடித்தவள்,” நல்லா இருக்கு “என்று இடத்தை காலி செய்தாள்.

“என்ன பண்றீங்க விஷ்வா” நெளிந்தவாறே அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

விஷ்வாவோ அவளை தன்புறம் திரும்பி நிறுத்தியவன், அவள் நெற்றியோடு நெற்றி முட்டி மென்மையாக அணைத்து தட்டிக் கொடுத்தான்.

அந்த ஒற்றை அணைப்பே அவளுக்கு அத்தனை ஆறுதலை தந்திருந்தது.

சிறிது நேரம் அப்படியே இருந்தனர். பின் அவளை விட்டு விலகியவன்,” உன் புருஷன் நான் உனக்காக இருக்கேன். எதையும் போட்டு யோசிச்சு உன்னைய கஷ்டப்படுத்திக்காத டா ” சொல்லி அவள் நுதலில் இதழொற்றியவன் டீயை வாங்கிச் சென்றான்.

அவர்களை தூரத்திலிருந்து நோட்டம் விட்ட நேத்ராவிற்கு இவர்களின் நெருக்கம் எரிச்சலூட்டியது.

இருப்பினும், நக்கலான சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு விடியலை நோக்கி காத்திருந்தாள்.

இரவே அருவியின் வீட்டிலிருந்து அனைவரும் இங்கே வந்துவிட, இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டு, சிறிது நேரம் சிரித்து பேசி மகிழ்ந்தனர். அவர்களுடன் ஒருவளாய் நேத்ரா அமர்ந்தாலும் எதுவும் பேசாமல் அருவியுடனே இருந்தாள்.

ஏனோ அகல்விழிக்கு நேத்ராவை பிடிக்கவில்லை. அவளின் பார்வை விஷ்வாவை வட்டமடிப்பதை உணர்ந்த விழி, இதை பற்றி மாமாவிடம் பேசவேண்டும் என எண்ணினாள்.

திடிரென நேத்ராவிற்கு ஃபோன் வரவும் அவள் எழுந்து செல்ல, அவள் பின்னாடியே செல்ல பார்த்த விழியை தடுத்து நிறுத்தினான் அருண்.

“என்ன பண்ற நீ? நான் அப்போ இருந்து பாக்குறேன் அந்த பொண்ணையே  பார்த்திட்டு இருக்க?” தான் பக்கத்தில் இருந்தும் தன்னை கவனிக்காத கோபம் வெளிப்பட,

“நான் உங்களை பார்த்தா நீங்க கேக்கலாம்.நான் தான் உங்களை பார்க்கலையே, அப்புறம் எதுக்கு கேக்குறீங்க?” வெட்டிவிட்டு பேசியவள் உதட்டை சுளித்து நகர்ந்துவிட்டாள்.

“கொழுப்பை பாரேன் ” போகும் அவளை பார்த்து புலம்ப தான் முடிந்தது.

திரும்பி பார்த்த அகல்விழி முகம் சுருக்கி நாக்கை துருத்தி காண்பித்து ஓடிவிட்டாள்.

ஒருபக்கம் கோபம் வந்தாலும் மற்றொரு பக்கம் சிரிப்பாக வந்தது.

“சரி எல்லாரும் போய் தூங்குங்க. நாளைக்கு சீக்கிரமே எந்திரிக்கனும் பாருங்க “என்கவும், அனைவரும் கலைந்து சென்றனர்.

அருவி விஷ்வாவிற்கு பால் எடுத்து வந்தவள், அதனை அவனிடம் கொடுக்க,

பால் க்ளாஸை வாங்கி டேபிளில் வைத்தவன் அருவியை தன் பக்கத்தில் அமர வைத்தான்.

“நீ எதையோ நினைச்சு பயப்படறன்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா கவலைப்படாத எதுவா இருந்தாலும் நாம சேர்ந்தே பார்த்துக்கலாம்” என்க

அவனின ஒருபக்க தோளில் சாய்ந்த அருவி, தன்னை புரிந்து கொள்கிற கணவன் கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டாள்.

பாத்ரூம் சென்று வந்த பூவினி, அன்னை தந்தையின் தோளில் சாய்ந்திருப்பதை கண்டு” நானு” என்றாள் சிணுங்களுடன்.

“நீங்க இல்லாமலா ஜூனியர். வாங்க…வாங்க” இருவரையும் இரு தோள்களில் தாங்கியவனின் இதழ்கள் மோகனமாய் புன்னகைத்தன.

இவர்களுக்காக தான் நான். இவர்கள் இல்லையெனில் இந்த வாழ்க்கையே இல்லை. இந்த இருவர் தான் என் உலகத்தை அழகாக்க வந்தவர்கள். இவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என நினைத்தான்.

மென்மையாய் இருவரின் நுதலிலும் முத்தமிட்டவன் மெல்ல கண்ணயர்ந்தான்.

காலை பொழுது யாரையும் காத்திருக்க வைக்காமல் அழகாய் உதித்தது.

விஷேச வீட்டிற்கு விருந்தாளிகள் எல்லாம் வரத்தொடங்கினர். நிறைய நபர்களை அழைக்கவில்லை என்றாலும் குடும்பத்தில் முக்கியமான நபர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் மஞ்சுளா.

திருமண புடவையை தான் தன்னால் வாங்கி தர இயலவில்லை என இந்த விசேஷத்திற்காவது வாங்கி தர வேண்டுமென எண்ணி, சிறுமுகையில் பட்டு நெய்யும் இடத்தில் சொல்லி புடவையை வாங்கினான்.

அதை அருவியிடம் சர்ப்ரைஸாக கொடுக்க, பார்த்த பெண்ணிற்கு ஆச்சரியம் கலந்த வியப்பாக இருந்தது.

ஆசையாக வாங்கிக்கொண்டவள் அதனையே கட்டிக்கொண்டாள்.

அடர் பச்சை நிறத்தில், தங்க நிற கரை வைத்து பெரிய பார்டறாக தந்திருக்க, அந்த புடவை அவளின் உடலில் பாந்தமாய் பொருந்தி அவளின் அழகை மேலும் அழகாய் பறைச்சாற்றி பொற்குவியலாய் அவன் கண்களுக்கு தென்பட்டாள் அவனின் ஆருயிர் மனைவி.

“உன்னைய கண்டிப்பா கீழே அனுப்பியே ஆகணுமா டி” என மெதுவாய் அவளிடம் நெருங்க,

“அடி விழும் ப்ராசாத்…தள்ளி போங்க” சிணுங்களுடன் கூறினாள்.

“இந்த பொண்ணுங்களே இப்படி தான். எங்களை காய விடுவதே பொழப்பா வச்சியிருக்கீங்க” என சலிப்பது போல் சொன்னாலும் கண்களில் மனைவியை நிறைத்தான்.

கீழே நேரமாவதை உணர்ந்து மஞ்சுளா விழியிடம் இருவரையும் அழைத்து வர சொல்லியிருக்க, இங்கே வந்து பார்த்தால் இருவரும் அவர்கள் உலகில் சஞ்சரிக்கவும் கதவை வேகமாய் தட்டினாள்.

“ரொமேன்ஸ் பண்றதா இருந்தா கதவை சாத்திட்டு பண்ணலாமே. எங்களை மாதிரி சின்ன குழந்தைங்க இருக்கிற வீட்ல இப்படியா பண்றது” நக்கலாக விழி குரல் கொடுக்கவும் இருவரும் விலகி நின்றனர்.

“உள்ள வா டி…” அருவி அழைக்க,

“நான் உள்ளயெல்லாம் வரலப்பா. நீங்க கீழ வாங்க. அத்தை உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றவள் வந்த காரியம் முடிந்தது போல் நகர்ந்து விட்டாள்.

பின்னர், இருவரும் ஜோடியாய் கீழே வர, வந்தவர்களின் பார்வைகள் முழுதும் இருவர் மேல் தான்.

இவர்கள் வரவும் சில கிசுகிசு பேச்சுக்கள் எழ தான் செய்தது. இருப்பினும் பெரிதாய் அவர்கள் கண்டுக் கொள்ளவில்லல.

இப்போதெல்லாம் அருணின் முக்கிய வேலையே அகல்விழி தன்னை பார்க்கிறாளா என்பதை காண்பது தான்.

இப்படியே அவனுள் அவள் அழகாய் புகுந்து விட, அதை இன்னும் உணரவில்லை என்றாலும் அவன் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காதது ஒரு வித கோபத்தை உண்டு பண்ணியது.

இனிமேலும் மனதில் வைத்து எதையும் குழப்பிக் கொள்ள கூடாது என்று அவளிடம் பேச நினைத்து அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தான்.

நல்ல நேரம் ஆரம்பிக்கவும் இருவரையும் மனையில் அமர்த்தினர்.

இருவரையும் கண்ட நேத்ராவிற்கு எரிச்சலாய் இருக்க, நேரத்தையும் மொபைலையும் பார்த்த மையமாகவே இருந்தாள். ஏதோ ஒருவித படபடப்பு அவளுள்.

எல்லா நிகழ்வு சரியாக நடக்க, மஞ்சள் கயிற்றை பெரியவர்கள் கழட்ட தங்கத்திலான பொன் தாலியை அணிவித்தான் விஷ்வா.

பக்கவாட்டில் அவனை கண்ட அருவியின் முகம் வெட்கத்தில் பூத்தது.

அவளின் கன்னத்தை பற்றி நெற்றியில் முத்தமிட்டவன் காதலோடு பார்த்தான்.

அதில் அகல்விழி ‘ஹோ’என சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து, அவ்விடத்தை கலகலப்பாக்கினாள்.

நேரம் பார்த்து காத்திருந்தவன் , அகல்விழியை இழுத்து கொண்டு வீட்டிலிருந்த பூங்காவிற்கு சென்றான்.

“என்ன செய்றீங்க அருண்? அங்க எல்லாரும் இருக்கிறப்போ இப்போ என்னை எதுக்கு இங்க இழுத்துட்டு வந்தீங்க?” சற்று கோபத்துடன் கேட்க,

“நானும் பார்த்திட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு காதலை சொல்லிட்டு அமைதியா இருந்தா என்ன அர்த்தம். என்ன என்கிட்டயே உன் விளையாட்டை காட்டுறீயா?” அவனும் ஒருவித கடுப்புடனே தான் கேட்டான்.

“வேற என்ன செய்ய சொல்றீங்க?”

“எனக்கு சந்தேகமா இருக்கு. நீ உண்மையா தான் காதலை சொன்னியான்னு”

“என்னை பார்த்தா உங்களுக்கு விளையாடுற மாதிரியா தெரியுது. நான் உங்களோட நிலையை யோசிச்சு தான் கொஞ்சம் ஒதுங்கி இருந்தேன். நான் காதலை சொல்லிட்டேன்கிற காரணத்துக்காக நீங்க உடனே ஒத்துக்கனும்னு இல்லையே. உங்களுக்கான அவகாசத்தை தரணும்னு நினைச்சு தான் விலகியிருக்கேன்” என்றாள்.

அவள் இதனை சொல்லவும் ஆசுவாசமூச்சை வெளியிட்டான்.

“நான் அப்போ சொன்னது தான் இப்பவும் சொல்றேன்.நான் நல்லா யோசிச்சு தான் உங்ககிட்ட காதலை சொன்னேன்.அதிலயிருந்து பின் வாங்க போறதுமில்லை. உங்களோட தான் என் நொடி வரைக்கும் இருப்பேன் “என்றவள் நகர்ந்து விட்டாள்.

அருண் விழியை அழைத்து சென்ற சிலமணி துளிகளிலே விஷ்வாவிற்கு பள்ளியிலிருந்து இன்ஸ்பெக்ஷன் வந்திருப்பதாக அழைப்பு வந்திருக்க, அவசரமாய் அருவியிடமும் அன்னையிடமும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

சரியாக அவன் கார் வெளியே சென்ற நேரம் விக்ராந்த் ஜின்சியின் கார் உள்ளே வந்தது.

இருவரும் இறங்கி வாசல் வரை வந்தவர்களை மஞ்சுளா பார்த்துவிட,

அவர்களிடம் வந்த மஞ்சுளா,” யார் நீங்க?” என்றார்.

“நாங்க அருவியை பார்க்க வந்தோம் “சொல்ல,

“உள்ள வாங்க ” என்று அழைத்து வந்தார்.

இவர்கள் வருவதை பார்த்த அருவி திடுக்கிட்டு நின்றாள்.

‘இவங்க எதுக்கு இங்க வந்திருக்காங்க? ஏதும் பிரச்சனை பண்ண வந்திருக்காங்களோ’ சிந்தனைகள் எங்கெங்கோ சிதற, அம்முவை இறுக பிடித்து கொண்டாள்.

“அருவி உன்னை பார்க்க தான் வந்திருக்காங்க” என்கவுமே அவள் மனம் பதற்றம் கொண்டது.

சந்திராவும் இவர்களை பார்த்துவிட, கோபமானார்.

“ஹாய் ஹனி! எப்படி இருக்க?” என இனிக்க பேசிய ஜின்சியை பார்த்து வெடவெடத்து போய் நின்றாள்.

அருவி ஏதும் பேசாது மௌனமாக நிற்க, மீண்டுமொரு கிசுகிசுப்பு துவங்கியது.

“பாரு நாங்க யாருன்னு தெரிஞ்சிக்க இங்க உள்ள எல்லாருக்கும் எத்தனை ஆர்வம்னு? நீயே நாங்க யாருன்னு சொல்றீயா இல்லை, நாங்களே எங்களை அறிமுகப்படுத்திக்கட்டுமா”  நக்கலான குரலில் சொன்னவள், அவளின் அமைதியை கண்டு ஜின்சியே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் ஜின்சி இவளோட காலேஜ் ஃப்ரெண்ட் ‌‌.அப்புறம் இவரு விக்ராந்த் என்னோட ஃபியான்ஸி தேனருவியோட எக்ஸ் ஹஸ்பண்ட் ” என்று புன்னகைத்தாள்.

மஞ்சுளாவிற்கும் கங்காதரனிற்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. மருமகளின் நிலையென்னவோ என பயந்து அவர் பக்கத்தில் தூணாக துணையாக  நின்று கொண்டார்.

மஞ்சுளா தான்,” இப்போ இங்க எதுக்கு வந்துருக்கீங்க?” என்றார் வேண்டா வெறுப்புடன்.

“கல்யாண பத்திரிக்கையை கொடுத்திட்டு, அதோட இந்த பத்திரத்தில் ஒரு சைன் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்” என்றான் விக்ராந்த்.

‘என்ன சைன்? எதுக்கான சைன்? இன்னும் இவனோட இவ பேசிட்டு தான் இருக்கால?’ என பல கிசுகிசுப்புகள் ஆரம்பித்தவுடனே, அனைவரையும் வெளியேற்றிவிட்டார் கங்காதரன்.

குடும்பத்தினர் மட்டுமே இருக்க, அருவிக்கு துணையாக இப்போதும் அவரே பேசினார்.

“என்ன ப்பா உங்க ரெண்டு பேருக்கும் தான் விவாகரத்து ஆகிடுச்சில , அப்புறம் என்ன சைன் வேண்டி இருக்கு?” மஞ்சுளா சந்தேகத்துடன் கேட்டார்.

“அது எங்க அம்மா எனக்கு பிறக்கப்போற வாரிசுக்கு பின் தான் எனக்கு சொத்து வர மாதிரி எழுதி இருந்ததா, எங்க லாயர் சொன்னாரு. இப்போ உயிலை படிச்ச பிறகு தான் தெரியுது, அந்த சொத்து என் மனைவியான அருவி பேர்லையும், என் மகளான பூவினி பேர்லையும் எழுதி வச்சிட்டு போயிருக்காங்க” என்றான் அந்த பத்திரத்தை மனனம் செய்தது போல்.

இதனை கேட்டு விரக்தியாய் புன்னைகைத்தாள் அருவி.

“இவ இப்போ என்னோட மனைவியும் கிடையாது. அப்புறம் இவளோட பொண்ணு எனக்கு பிறந்தவளே இல்லைன்ற பட்சத்தில் என்னோட சொத்தை எப்படி இவங்க உரிமை கொண்டாடலாம். அதான் சொத்து உரிமையை மாத்துறதுக்கான பத்திரத்தை எடுத்து வந்திருக்கேன் ” என ஒரு பெரிய குண்டை சாதாரணமாய் இறக்கினான்.

இதை கேட்ட அருவி அதிர்ச்சியில் நிலைக்குலைந்து போனாள் என்றால் அவளின் குடும்பம் சிலையாகி போனது.

அருவியை கண்டிருந்த ஜின்சி விக்ராந்தின் கை பிடித்து செருக்குடன் நின்றாள்.

“இல்ல… இல்ல… நீங்க பொய் சொல்றீங்க, இதை நான் நம்ப மாட்டேன்”  என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

“இதுல நான் எதுக்கு பொய் சொல்ல போறேன். நீயே இதை பார்த்து தெரிஞ்சிக்கோ ” என டிஎன்ஏ ரிப்போர்ட்டை காண்பித்தான்.

வேகமாய் அதை வாங்கி படித்தவள், அங்கேயே நிதர்சனத்தை தாங்க முடியாது சரிய, மஞ்சுளாவும் சந்திராவும் அவளை தாங்கினர்.

சந்திரா தான்,” என் பொண்ணு உங்களுக்கு அப்படி என்னத்தை பண்ணிட்டான்னு , அவளை இந்த பாடு படுத்துறீங்க” கண்ணீரோடே அவன் சட்டையை பிடித்து ஆக்ரோஷமாய் கேட்க,

விக்ராந்த் அவரின் விலக்கிட பார்க்க, முடியாத பட்சத்தில் அதனை ஜின்சி செய்தாள்.

“எத்தனை தைரியம் இருந்தா விக்ராந்த் சட்டையை பிடிப்பீங்க? உங்க பொண்ணை ஒழுங்கா வளர்க்க துப்பில்லை, இதுல எங்களை கேக்க வந்துட்டீங்க” என சீற,

“இல்ல…‌இல்ல இது உண்மையில்ல, அம்மு… அம்மு…” என தேம்பி தேம்பி அழுக,

இதுதான் சரியான நேரம் என நினைத்து நேத்ரா உள்ளே புகுந்தாள்.

“அன்னைக்கு மஞ்சு ஆண்டி கூட அங்கிள் கிட்ட சொன்னாங்க, அம்மு பார்க்க அருண் சாரை சின்ன வயசுல பார்க்கிற மாதிரி இருக்குன்னு ” என நேரம் பார்த்து அடித்தாள்.

“ஏன் மா நீ வேற வெந்த புண்ணுல வேல பார்க்கிற. அமைதியா இரு மா” என கங்காதரன் கடிய,

“இல்ல அங்கிள் , பெரியவங்க சொல்லி கேள்வி பட்டிருக்கேன் .குழந்தைங்க ஒன்னு அம்மா மாதிரியோ அப்பா மாதிரியோ இருக்கும்னு. அதான் சொன்னேன்”

“நீ வாயை மூடிட்டு இரு மா” என்றதும், மூக்கறுப்பட்டு நின்றாள் நேத்ரா.

“அவங்க சொல்றதும் கூட உண்மையா இருக்கலாமே. ஏன்னா நாங்க குழந்தையை ஐவீஃப் மூலமா தான் பெற்றோம். அப்படி இருக்கும்போது வாய்ப்புகள் அதிகம் இருக்கு. அந்த நேரம் அருண் கூட அங்க ட்ரீட்மெண்ட்க்கு வந்திருந்தாங்க” பாம்பில்லாமலே விஷத்தை அருவி மீது கக்கினான்.

குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு உண்மைகளும் உடைபெற துவங்கின.

கேட்டிருந்த அனைவருக்கும் அதிர்வு!

இன்னும் என்னென்ன கேட்க நேருமோ என்ற பயம்!

“என்ன என்னென்னவோ சொல்லிட்டு இருக்கீங்க? அருண் எதுக்கு அங்க ட்ரீட்மெண்ட்க்கு போக போறான்” மஞ்சுளா சற்று தன்னை தேற்றி கேட்க,

“நாங்க எதுக்கு பொய் சொல்ல போறோம். நாங்க ரெண்டு பேரும் ஒரே டைம்ல ட்ரீட்மெண்ட்க்கு வந்தோம். வேணும்னா உங்க மருமகள் கிட்டயே கேளுங்க”

உடனே சந்திரா மகளை பிடித்து,” அவங்க சொல்றது உண்மையா தேனு? நீ குழந்தையை அந்த பையன் சொல்ற மாதிரி தான் பெத்துக்கிட்டியா?” கேள்விகள் அடுக்க அடுக்க உள்ளுக்குள் நொறுங்கி கொண்டே இருந்தாள் அருவி.

அவள் மனம் எப்போதும் போல் கணவனையே தேட, விஷ்வா இல்லாமல் போகவும் அவன் பெயரை நாமம் போல் நொடிக்கொரு முறை சொல்லி கொண்டிருந்தாள்.

“சொல்லு டி. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? அப்போ அவங்க சொல்றது எல்லாம் உண்மையா? அப்போ நம்ம அம்மு…” அடுத்து சொல்ல முடியாமல் வாய் மூடி அழத்துவங்கினார்.

இந்த இடைவெளியில் பூவினி விஷ்வாவிற்கு அழைத்தாள்.

அவன் அங்கே எடுத்ததும், ” அப்பா…” என்று அழுக,

“என்னாச்சி டா? அம்மா ஏதும் திட்டினாளா, இல்லை அடிச்சாளா?” என சாதாரணமாய் கேட்டான்.

ஏனென்றால் இது எப்போதும் நடக்கும் ஒன்று தான். அருவி ஏதும் குழந்தையை திட்டினாள் என்றால் உடனே பூவினி அழுதப்படியே தந்தைக்கு அழைத்து சொல்லி விடுவாள். பின், விஷ்வா தான் மகளை சமாதானம் செய்து வைப்பான்.

அப்படி ஏதோ ஒன்றாக இருக்குமென்று எண்ணி கேட்க, குழந்தையோ” அப்பா! மம்மி அழதாங்க. டாடி ஒரு ஆண்டி மம்மியை திடுதாங்க. பாட்டி மம்மியை திட்டிட்டு இதுக்காங்க” என அவளுக்கு புரிந்த வகையில் சொல்ல, இங்கே இவனுக்கு ஒன்னும் புரியவில்லை. ஆனா அங்கு நிலைமை ஏதோ சரியில்லையென புரிய மகளிடம் வரனென்று சொல்லி வைத்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

வீடே களேபரத்தில் இருக்க, அப்போது தான் உள்ளே வந்தனர் அருணும் அகல்விழியும்.

“என்னாச்சி, சொந்தக்காரங்க எல்லாம் எங்க?” என அருண் கேட்கும்போதே அகல்விழி ஒவ்வொருவராய் பார்க்க, ஒருவர் முகத்திலும் பொழிவு என்பது சுத்தமாக இல்லை.

அதிலும் இறுதியாக அவள் பார்த்த முகங்கள்,அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.

“உங்களை யாரு இங்க உள்ளவிட்டது. வெளிய போங்க ” சீற்றத்துடன் சொல்ல, அதை கண்டுக் கொள்ளாது ஜின்சி பேசினாள்.

“இதோ உங்க மூத்த மகன் வந்தாச்சு. அவர் கிட்டயே கேளுங்க, ஐவிஃப் ட்ரீட்மெண்ட் போனாரா இல்லையான்னு?”

அனைவரும் அருணை பார்க்க, அவன் திகைத்து போனான்.

“அருண் இந்த பொண்ணு என்னென்னமோ சொல்றா டா, நீங்க அப்படி ஏதும் போகலை தானே” என ஒருவித பதற்றத்துடன் கேட்க, அமைதியாய் தலை கவிழ்ந்தான்.

“வாயை திறந்து சொல்லேன் டா ” என மகனை போட்டு உலுக்கினார் மஞ்சுளா.

“போனோம் மா…” என்றான்.

“அப்போ… அப்போ… அம்மு உன்னோட குழந்தையா டா?” மனதே இல்லாமல் தான் இதனை கேட்டார்.

“இல்லை அம்மு என் குழந்தை. என்னோட இரத்தம் அவ…” என்று அங்கே அதிரடியாக உள்ளே வந்தான் விஷ்வப்ராசாத். அவனுடன் ஜீவாவும். கூடவே இருவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!