அத்தியாயம் – 11
பாட்டியின் உடல்நிலை புவனாவை ஒரு பக்கம் வருத்த, கதிர் கண்டுகொள்ளாதது மறுபுறம் வருத்த என ஏற்கனவே இருந்த மனநிலையில் இன்னும் சோகம் சேர்ந்து கொண்டது.
இதில் அவளை கடுப்பேத்தவெனவே அக்காட்சி கண்ணில் பட்டதோ?
அதுவரை ப்ரூஸ் பேனராக இருந்தவள், ஆக்ரோஷமான ஹல்க் ஆகிப் போனாள். என்ன சுற்றியிருக்கும் எந்த பொருளையும் தூக்கிப் போட்டு நொறுக்கவில்லை அவ்வளவே.
அவள் கொலைவெறியாக எங்கோ பார்ப்பதை உணர்ந்த பவி, அவள் பார்க்கும் திசையை நோக்க, கதிர் பைக்கில் ஒரு பெண்ணோடு வந்து கொண்டிருந்தான்.
நகரத்திலேயே அதிகம் இருந்ததன் பொருட்டு, புதிதாக வந்திருக்கும் கிராமம், சுற்றியும் இருக்கும் பசுமை, பறவைகளின் ஒலி என இயற்கையை ரசித்துக் கொண்டே வந்த காவ்யா,
கொஞ்சம் தூரத்திற்கு முன்பே சாலையோரம் நின்றிருந்த இரு பெண்களையும் கவனித்து, அதில் ஒருவள் புவனா என கண்டு கொண்டாள்.
உடனே, “உங்க வருங்காலம் நிக்குறாங்க பாருங்க கதிர்.” எனக் கூற,
ஹெல்மெட் போட்டிருப்பதால் சரியாக கேட்காமல் அவன் சற்று அவள் பக்கம் இடைவெளிவிட்டு, “புரில என்ன சொன்னீங்க?” எனக் கேட்க, அவள் மீண்டும் கூறவும் சுற்றி பார்த்தான்.
‘வீட்டில் காவ்யா பத்தி என்ன சொல்லலாம்? தேவையில்லாமல் எதும் பேச்சு வருமோ?’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டு வந்தவன் உண்மையில் அவளை முதலில் கவனிக்கவில்லை.
இப்போதுதான் பார்த்தான். திரும்பி காவ்யாவிடம் ஒரு புன்னகையை சிந்திவிட்டு, பின் அவனவளை பார்க்காமல் பார்த்துக் கொண்டு, அதே சமயம் கவனமாக பைக்கை செலுத்தினான்.
ஆனால் இங்கு நின்று கொண்டு அவர்களின் பேச்சுக்கள் எதும் கேட்காமல் பார்வையால் நடப்பதைக் கண்டவளுக்கு, இன்னும் டென்ஷன் ஏறியதுதான் மிச்சம்.
பின்னே… அவள் கண்டது அந்தப் பெண் ஏதோ சொல்ல அவன் சிரிப்பதைத் தானே!
‘ஓஹோ… கதை அப்படி போகுதா? இதுக்குத்தான் என்ன கண்டுக்கலையா? பாத்துக்கறேன்.’ என்றெல்லாம் தப்பு தப்பாக புரிந்து கொண்டவளுக்கு, புசுபுசுவென கோபம் வர அனைத்தையும் மறந்து அவர்களைத் தீயாக முறைத்து வைத்தாள்.
அவள் ஆழ்மனதுக்குத் தெரியும், அவன் அவளைத் தவிர யாரையும் பார்க்க மாட்டானென. ஆனால் பொறாமையென வந்தால் அனைத்தும் மறந்து போகிறது.
புவனாவைக் கண்டதுமே பைக்கை மெதுவாக செலுத்தியவன், அவளின் முறைப்பை கவனித்துவிட்டான்.
‘எதுக்கு இப்போ முறைக்குறா?’ என அவர்களைத் தாண்டி சென்ற பின்னும் அதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
எதேச்சையாக சைடு மிரரில் காவ்யாவை பார்க்க, அப்போதுதான் புரிந்தது.
‘ஓஹ்… இதுக்குத்தான் சந்திரமுகி மாறி மொறச்சு பாத்தாளா?’ என சிரித்துக் கொண்டான்.
அந்த பொறாமை… அவனுக்கு ஐஸ் குளியல் போட்டது போல ஜில்லென்ற உணர்வு கொடுத்தது
சீட்டியடித்தவாறே வீடு சென்று எப்போதும் போல பேசும்படி பேசி அவன் அப்பா எதுவும் சொல்ல இயலாது வாயை அடைத்தவன், விருந்தினருக்கு என இருக்கும் அறையில் அவளை பாதுகாப்பாக தங்க வைத்துவிட்டு, அன்னையிடம் அறிமுகப்படுத்திவிட்டு பார்த்துக் கொள்ள சொல்லிய பின்னே நிம்மதியானான்.
அவன் அப்பாவிற்கு என்னதான் கதிர் வெளியே சென்றதும், அவரின் பேச்சுக்கு மறுப்பு கூறுவது பிடிக்காவிட்டாலும், தன் போல் இல்லாமல், வெளியே ஒரு நல்ல வேலையில் இருந்தான் என பெருமையாகதான் நினைத்தார். எனவே எதுவும் பெரிதாக கூறவில்லை.
உண்மையில் அவன் வேறொரு பெண்ணைக் காதலித்தாலும் கூட அவருக்கு அது அத்தனை பிரச்சனையாக இருக்காது.
ஆனால் புவனா… அவள் முகத்தில் காணப்படும் ஒருவரின் சாயலே இந்தக் காதலை மறுக்க அவருக்கு போதுமானதாக இருந்தது.
மகன் விருப்பம் இல்லாமல் திருமணத்தை முடிக்க அவருக்கும் ஆசையில்லைதான்.
சுந்தரம் மீது இருக்கும் பயம் ஒரு காரணம் என்றால், ‘அவர்களோடு மீண்டும் உறவா?’ என்ற வீம்பு மறுபுறம்.
தான் வாழ்வில் ஒரு காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டோம் அதற்கு எல்லாம் அவர்கள்தானே காரணம் என நினைத்தவர், அவரால் மற்றவரும் கஷ்ட்டப்பட்டனர் என மறந்து போனார்.
மற்றவர்கள் செய்த தப்பை பெரிதாக என்னும் அவருக்குத், தான் எத்தனை தப்புகளை செய்தோம்… மற்றும் செய்து கொண்டிருக்கிறோம் என புரியவில்லையா? இல்லை புரிந்தும் வேண்டுமென இப்படி நடக்கிறாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.
தொடரும்…