MMOIP 2

1650508912096-21f4c394

MMOIP 2

அத்தியாயம் – 2

 

காலை ஏழு மணிக்கு வைத்த அலாரம் அடிக்க, போனை எடுத்து ஆஃப் செய்தவன், உடலை முறுக்கியவாறு சோம்பலாக எழுந்து அமர்ந்தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து சில நாட்களுக்கு முன்புதான் இங்கு வந்துள்ளான். அவன் வந்ததே பலருக்குத் தெரியாது.

அவன் ஒன்றை நினைத்து இங்கு வர, அவன் பார்க்க நினைத்தவளோ இரண்டு நாள் டூர் சென்றுவிட்டாள். அதையும் நேற்று அறிந்துகொண்டு, காலையிலேயே அவனுக்குத் தெரிந்த பையனிடம் (கண்ணனிடம்) சில விஷயங்கள் கேட்டுப்பின் அவனிடம் சில கட்டளைகளை இட்டுவிட்டுத் தான் வந்தான்.

ஒரு பக்கம் அவன் மனம், ‘ஏன் இப்படி வெட்கம் கெட்டு போய் இருக்க?’ என காரித்துப்பியது.

பின்னே… இந்த ஊரை விட்டு வெளியே செல்ல காரணமானவளையே… பார்க்க வந்தால் துப்பதானே செய்யும்.

ஆனால் அதையெல்லாம் பார்த்தாள் காதலிக்க முடியுமா?

அவன் மூளை பல விஷயங்களை யோசித்தது. அதை அசைபோட்டவன் சட்டென தலையயை உதறியவாறு, ‘முதல்ல பொறுமையா இருடா.’ என தனக்குத் தானே கூறிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தான்.

நீண்ட நாள் கழித்து அவனின் ஆஸ்த்தான வேட்டி மற்றும் கருப்பு நிற சட்டையையும் அணிந்து கொண்டான்.

கையில் ஒரு காப்பு. கழுத்தில் ஒரு தங்கச் செயின். முறுக்கிவிடப்பட்ட மீசை. கொஞ்சமாக இருந்த தாடி. அலையலையான கேசம். அவனுடைய கருமை நிறம் அவனை மேலும் வசீகரமாகக் காட்டியது.

மாடிப்படியில் எப்போதும் கண்களில் உள்ள அந்த திமிருடன்… கம்பீரமான நடையில் சட்டையின் கையை மடித்துவிட்டவாறு கீழே வந்தான் கதிர்வேல். நம் கதையின் நாயகன்.

கதிரின் குணம் பற்றி சொல்லவேண்டுமானால், கொஞ்சம் திமிர், நிறைய கோபத்திற்கு சொந்தக்காரன்.

தகராறு என வந்தால் முதலில் கைதான் பேசும். ஆனால் நல்லவன். வெளியே முரடனாகத் தெரிபவனை பற்றி அவனுடன் இருப்பவர்களுக்குப் புரியும்.

அவன் வருவதை கண் கலங்கியவாறு ரசித்த அவன் அன்னை மீனாட்சி அவனுக்கு நெட்டி முறித்து, “ராசா கணக்கா இருக்கையா.” எனவும், ஒரு குட்டி புன்னகையை சிந்தியவன் டைனிங் டேபிளில் சுற்றியிருந்த சாரில் உட்கார்ந்து கொண்டான்.

அவர் சாதத்தோடு ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை, மீன் என வைக்க, அவனும் வஞ்சனையின்றி நன்றாக உண்டான்.

வருடம் கழித்து அன்னை கையில் அசைவ சாப்பாடு. வெளியே வேலை செய்யும் கம்பெனியில் உள்ள கேன்டீனிலும்… சமயம் கடையிலும் சாப்பிட்டு அவனுக்கு நாக்கும் வயிறும் ஒரு வழியாகியிருந்தது.

‘என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாடு வீட்டு சாப்பாடுத்தான்.’ என நினைத்துக் கொண்டான்.

வந்த நாளிலிருந்து அசைவம் வேண்டாம் என்றுவிட்டு இன்று சட்டியில் உள்ளதை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தான்.

நன்றாக சாப்பிட்டதும் அன்னை கொடுத்த துண்டினால் கையை துடைத்தவாறு எழப்போனவனை,

“உட்காருடா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” எனக் கூறியபடி வந்து சேர்ந்தார், அவன் அப்பா மாணிக்கம். கூடவே அவன் அத்தை கனகம். 

“ஏங்க… புள்ள இப்போதான் சாப்பிட்ருக்கான்…” என மீனாட்சி ஆரம்பிக்க,

“ஏய்… அவன் தின்ன தட்ட எடுத்துட்டு மொதல்ல உள்ள போ. எனக்குத் தெரியும் எப்போ பேசணும் என்ன பேசணும்னு.” என அவர் சத்தம் போடவும், மீனாட்சி அமைதியாக தட்டை எடுத்துக் கொண்டு நகர்ந்துவிட்டார்.

அவர் பேச்சில் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான் கதிர். தந்தை பேச்சும் பிடிக்கவில்லை. பேசப்போவது பிடிக்கப் போவதுமில்லையென தெரிந்தது.

அவர் பேசுவார் என இருக்க, எதுவும் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும் அதில் கடுப்பானவன்,

“என்ன பேசணும்?” என அவரை பார்த்துக் கேட்டான்.

“எப்போ கல்யாணம் பண்ண போற?” என்றார் அவனை கூர்மையாக பார்த்தபடி… 

அவனும் ‘நான் உங்களுக்கு சளைத்தவன் இல்லை.’ என்பது போல, “ஏன் கேக்குறீங்க?” என்றான் நிதானமாக.

“இதென்ன கதிரு இப்படி கேக்குற?” என அவன் அத்தை இடைவர,

“நான் என்ன த்தை இப்போ கேட்டேன். ஏன்னு தானே…” 

“கல்யாணத்துக்கு புடி கொடுக்காம இருந்தா பெத்தவங்க கேள்வி கேப்பாங்கதான?” எனவும்,

“ம்ம்… ஆமா… கேப்பாங்கதான்.”

“ம்ம்… உனக்கே புரியுது. பொறவு என்ன… சரி சொல்லுப்பா கல்யாணம் எப்போ ஏற்பாடு பண்ணா உனக்கு தோதா இருக்கும்.” என வினவ,

“இல்லை த்தை. இப்போ பண்ணிக்கிற நெனப்பு இல்ல. நான் என்ன கல்யாணமே பண்ண மாட்டேன்னா சொன்னேன். கொஞ்ச நாள் போகட்டும்னுதான சொன்னேன்.” என்றான்.

“நீ கல்யாணம் பண்றதவிட யாரை கல்யாணம் பண்றங்றதுதான்டா முக்கியம். நீ எதுக்கு கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றேனு எனக்கு தெரியாதுனு நெனச்சியா?” என்ற அவரின் ஆத்திரமான கேள்விக்கு,

“நான் கூட சொல்லணுமேனு நெனச்சேன். உங்களுக்கே தெரிஞ்சா சரி.” என்று அமர்த்தலான குரலில் பதில் வந்தது.

“எப்படி திமிரா பேசுறான் பாரு…” என கத்தியவர்,

“நான் சொல்ற பொண்ண தான்டா நீ காட்டணும். அது கண்டிப்பா நம்ம தேன்மொழியா தான் இருக்கனும்.” என்றார்.

இதே வார்த்தையை கேட்டு தான் ஒரு காலம் பித்து பிடித்தது போல சுற்றியதை மறந்துவிட்டார் போல!

“முடியாது.” 

“என்ன முடியாது?”

“உங்களுக்கு புடிச்ச பொண்ண கட்ட முடியாது. கட்டிக்கிட்டு நான்தான வாழனும். எனக்கு புடிச்சவள தான் கட்டுவேன்.”

“ஏன்யா… என் புள்ளைக்கு என்ன குறைய கண்ட?” என கனகம் கண்ணீர் விட, அவரை சலிப்பாக பார்த்தவன்,

“நான் எப்போ த்தை அப்படி சொன்னேன்? அவளுக்கு வேற நல்லவ… நல்லவர் கிடைப்பாரு.” என கூறியனுக்கு யார் அந்த நல்லவர் என்று நன்கு தெரியும். 

அவன் மனதில் பல விஷயங்கள் இருந்தது. அதையெல்லாம் கூறி இப்போது சண்டையை பெரிதாக்கி வாதாட வேண்டாம்… நேரம் வரும்போது பேசுவோம் என இருந்தான்.

அவன் அன்னையும் கண்ணீருடன் இங்கு நடப்பதை பார்த்தபடிதான் இருந்தார். இப்போதெல்லாம் அவரை எங்கு பேசவிட்டனர்? அவர் எடுத்த ஒரு முடிவை சுட்டியே பல விஷயத்தில் அவர் வாயை அடைத்துவிட்டனர்.

பின், “நீ எப்படி அந்த பிள்ளைய கல்யாணம் பண்றேனு நானும் பாக்கறேன்டா.” என்றார் பெரியவர் சவாலாக.

அதில் சிரித்தவன், ‘ம்ஹூம்…’ என நினைத்து மீசையை நீவியவாறே,

“பாருங்க… பாருங்க எப்படியும் அப்பன்ற முறையில என் கல்யாணத்துக்கு வருவீங்கல, யாரு உங்கள பாக்க வேணாம்னு சொன்னது.” என்றவன்,

“ம்மா… வெளிய போய்ட்டு வரேன்.” என்றுவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.

இரண்டு நாட்களுக்கு முன் இரவுக்குத் தான் வீடு வந்து சேர்ந்தான். அடுத்த நாள் காலையிலேயே எழுந்து காரில் கோவில் சென்றவன்… உடனே திரும்பிவிட, மறுபடி கண்ணனை பார்க்க போனான். அப்போதும் காரில் போய்விட்டு உடனே வந்துவிட்டான். அதன்பின் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தவன் இன்றுதான் கிராமத்தை ஒரு ரவுண்டு அடிக்க வெளியே போகிறான்.

»»»»

ஏற்காட்டில் உள்ள பல அழகிய மற்றும் முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தவாறு இருந்தார்கள் புவனா மற்றும் அவளுடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள்.

ஏற்காட்டின் இருபது கொண்டை ஊசி வளைவில் மலை மீது பயணித்து, பகோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஏற்காடு லேக், கிளியூர் ஃபால்ஸ், சேர்வராயன் மலை, அண்ணா பார்க் என அவர்கள் சுற்றி பார்க்கும் இடங்கள் பட்டியலில் இருந்தது.

அனைத்துக்கும் செல்ல முடியவிட்டாலும், முடிந்தளவு எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தனர்.

வாய்க்கு ருசியாக உண்ணவும் யாரும் மறக்கவில்லை.

குளிருக்கு இதமாக தேனீர், சூடான பஜ்ஜி, உப்பு மற்றும் மிளகாய்த் தூள் தடவிய மாங்காய், பரோட்டா, ரைஸ் என அனைத்தும் அருமையே.

செல்லும் இடங்களிலெல்லாம், ‘போட்டோ எடு… இரு இந்த போஸ்… வேற போஸ்.’ என பவியை பாடாய் படுத்திக் கொண்டிருந்தாள் புவனா.

“ஏண்டி… இப்போ எதுக்கு இவ்ளோ போட்டோ?” என சலிப்பாக கேட்க,

“என்ன பவி இப்படி கேக்குற?நாம போயிட்டு வந்ததுக்கு ஒரு அடையாளம். இதுலாம் அழகான மெமரீஸ்டி. பல வருஷம் கழிச்சு பாத்தா செம்மயா இருக்கும். ஒழுங்கா எடு. நானும் உன்ன எடுக்கறேன்ல.” என்றாள்.

இருவரும் சேர்ந்தும் பல செல்ஃபீயும் எடுத்துக் கொண்டனர்.

அவர்கள் போஸ், எக்ஸ்பிரஸன் என பண்ணுவதைக் கண்டு கேமராதான் பாவம் யாரும் அறியாமல் ரத்தக்கண்ணீர் விட்டது.

அவர்கள் சற்று தள்ளி செல்லும்போதெல்லாம், “புவனா ரொம்ப தூரம் போகாதீங்க.” என கண்ணன் அக்கறையாகக் கூற,

தன் மாமன் பேச்சைக் கேட்டு அவன் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துவது புரிந்து, “சரி கண்ணா.” என்றாள் புன்சிரிப்போடு.

பவிதான் அவனை முறைத்தாள். அவனும் அவள் பார்வையை உணர்ந்தாலும் பார்க்காதவாறு சென்றுவிட்டான்.

அப்படியே அங்கிருக்கும் சில கடைக்கு அருகே வந்தவர்கள் வேண்டிய பொருட்களை வாங்கினர்.

எல்லா மாணவர்களுமே இந்த பயணத்தை நன்றாக என்ஜாய் செய்து கொண்டிருந்தனர்.

புவனாவும் என்ன வாங்கலாம் என அந்த கடையில் தேட, அவள் கண்களில் பட்டது அந்த கீ செயின்.

‘கே’ என்ற எழுத்தில் இதய வடிவில் இருந்ததை எடுத்தவள் அதை மென்மையாக தொட்டுப் பார்த்தாள். சில பல நினைவுகள் வர, கண்கள் லேசாக கலங்கியது.

ஒரு பெருமூச்சோடு அதை வாங்கி பத்திரமாக அவள் பர்ஸில் வைத்துக் கொண்டாள். மேலும் சில பொருட்களும் வாங்கினாள்.

பின் எப்போதும் போல அவள் மாமனிடம் இருந்து போன் வர, நலம் எனக்கூறி அவனிடமும் விசாரித்துவிட்டு… என்ன நடந்தது என சற்று நேரம் கதையளந்தாள்.

“மாமா… இன்னைக்கு நைட் வந்துடுவேன்.” என,

“ம்ம்… சரிடா பத்திரம். நான் கூப்பட முன்னாடியே வரேன். இங்க ஊருக்குள்ள பஸ் வர டைம் சொல்லு.” என அவள் சரி என்றுவிட்டு வைத்துவிட்டாள்.

நினைவு மீண்டும் எங்கோ செல்ல, பவியின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவள், அவர்கள் அடுத்ததாக சுற்றிப் பார்க்கும் இடம் நோக்கிச் சென்றாள்.

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!