MMOIP 20.1

fwdvaruthapadathavalibarsangamnewdesigns_8-c8d6185f

MMOIP 20.1

அத்தியாயம் – 20.1

 

மிதமான வேகத்துடன் பைக்கை செலுத்தியவாறு சென்ற கதிர்,

“ஏங்க கருப்புசட்டை…” என்ற குரலில் நின்றான்.

ஹெல்மெட்டை கழட்டிவிட்டு யாரென திரும்ப,

‘இவனையா அழைத்தோமென.’ அவளும்…

‘இவ கூப்டா நின்னோமென. ” அவனும்… சலித்துக் கொண்டார்கள்.

முறைப்பு கலந்த பார்வையோடு புவனா அவனிடம் வர, அவனும் கடுப்பாக பார்த்திருந்தான்.

அவள் கல்லூரி இரண்டாம் வருடம் படித்திருந்த சமயம் அது.

குடும்ப விவகாரம் அறிந்தவளுக்கு மாணிக்கம் மீது மதிப்பு என்பது துளியும் இருக்கவில்லை. கதிர் மீனாட்சி பற்றியும் பெரிதாக அபிப்ராயம் இருக்கவில்லை.

பிறந்த முதலே தாய் தந்தை பாசத்தை அனுபவிக்காதவளை, அன்பாக பார்த்துக் கொண்டு, அவளுக்கு அனைத்துமாகிப்போன வெற்றிக்காகவே இந்தக் கோபம்.

வீட்டிற்கு முன் செல்லும்போது பாட்டியிடம் ‘கிழவி’ என பதிலுக்கு பதில் பேசி சண்டை போடுவது, எங்கேயேனும் தகராறு என கேள்விப்பட்டால்… பெரும்பாலும் அவன் பேரும் சேர்த்து கேள்விப்படுவது, ஊருக்குள் வேலையோயில்லாமல் சுற்றுவது என இதுவரை கதிர் பற்றி கேள்விப்பட்ட எதுவும் நல்லதாக இருந்திருக்கவில்லை.

அவனுக்கோ அவளைப் பற்றி எதுவும் தெரியாது. பார்த்தால் இயல்பாக கடந்து செல்லதான் நினைப்பான்.

ஆனால் அவள் பார்வை… அந்த பார்வை அவனுக்குத் துளியும் பிடிக்காது.

பலர் அவன் அன்னையை ஒருபோல பார்ப்பார்கள். அவர்கள் கண்ணை நொண்டினால் என்னவென ஆத்திரமாக நினைப்பான்.

அதேபோல இல்லையென்றாலும் புவனா, மனதில் எதை வைத்து இப்படி முறைக்கிறாளென அவனுக்கு புரியாமலில்லை. 

இந்தமாறி சூழலில் அன்னை மீதும் சேர்த்து கோபம் வரும்.

‘காதல் செய்து விட்டாராம்… வேறு வாழ்க்கை வேண்டாமென முடிவெடுத்து, சூழ்நிலையால் அவரையே மணம் முடித்தாராம்.’

அன்னையின் காதலுக்கு தந்தைக்கு தகுதியே இல்லை. மறந்திருக்கலாம் என்பதே அவன் கருத்து.

சிறுவயதில் அவனும் ‘அப்பா அப்பா’ என சுற்றியுள்ளான்தான். ஆனால் வெற்றி உண்மையில் யார், தாமரை மற்றும் தந்தை வாழ்வு பற்றி அறிந்து கொண்டபோது, அவரின் அந்த பாசத்தை ஏற்க இயலவில்லை. கொஞ்ச கொஞ்சமாக விலகிவிட்டான்.

‘அது என்ன பாசம்… ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் பாசம்.’ இப்படிதான் அவனுக்குத் தோன்றியது.

அதுவும் அன்னையை மனிதர் ஓவராக பேசும்போது, அளவுகடந்த சினம் வரும். பலமுறை அமைதியாக இருப்பான். என்ன இருந்தாலும் பெற்றோர் விஷயத்தில் தலையிடக் கூடாதென. ஆனாலும் எப்போதேனும் பதிலுக்கு சண்டைக்கும் போவான். 

அன்னை சொல்படி என்றுமே வெற்றி அவனுக்கு அண்ணன்தான். நிஜமாகவே கதிருக்கு அவனை நிரம்ப புடிக்கும்.

சிறுவயதில் அவனுடன் விளையாடவெல்லாம் ஆசைக் கொண்டுள்ளான். ஆனால் எதுவுமே நிறைவேறியதில்லை.

அவனுடன் புவனா ஒட்டிக்கொண்டு இருப்பது கண்டு பொறாமை பட்டிருக்கிறான்.

வெற்றிக்கு தன்னைப் பிடிக்காதென தோன்ற விலகியவன், ஏன் பிடிக்காதென புரிய, கோபம் நியாயமென்றுதான் தோன்றியது.

ஆனால் இதுபோல அவன் மீது பாட்டி (வள்ளியம்மை), புவனா செலுத்தும் பார்வை, அவனுக்கு பிடிக்காது. வெற்றி இது போலெல்லாம் பார்க்கமாட்டான். 

அவர்கள் மனம் புரிந்தாலும், ‘நான் என்ன செய்தேன்?என்னை இவர்கள் எதற்கு இப்படி பார்க்க வேண்டும்?இதுவெல்லாம் நடக்க நானா காரணம்? என் மனம் பற்றி அறிவார்களா?’ என்றெல்லாம் நினைத்தே பாட்டியை வம்பாக பேசிவிட்டு செல்வான்.

ஆனால் புவனாவிடம் இதுவரை பேச வாய்ப்பு கிட்டியதில்லை. இன்று கிடைத்ததை விடுவதாகவும் இல்லை!

“உங்க பர்ஸ் விழுந்துடுச்சு.” அவள் கொடுக்க, வாங்கியதும் நகர்ந்தவளை,

“இருமா இரு… உள்ளே காசு இருந்துச்சே. காணாம போயிருந்தா?” என்ற அவன் குரல் நிறுத்தியது.

அதில் நிஜமாக பயங்கரமாக காண்டாகிப் போனாள்.

‘எடுத்து கொடுத்தோம்ல தேவதான். அப்படியே போயிருக்கணும்.’ என உள்ளே அவனை வசைபாடியபடி கடுப்பாக நின்றாள்.

சோதிப்பது போல பாவ்லாதான் செய்தான். அவளை கடுப்பேத்தவே அப்படி சொன்னான்.

பின், “ம்ம்… எல்லாம் சரியா இருக்கு. கிளம்பு காத்து வரட்டும்.” என,

பேருந்து தாமதமாகிவிடுமென்பதால், பார்வையால் அவனை எரித்துவிட்டு சென்றுவிட்டாள்.

இப்போதைய அவள் முறைப்பில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. 

‘ஆழாக்கு சைஸ் இருந்துட்டு மொறைக்கறத பாரு… முட்டைக்கண்ணி.’ என சொல்லிக் கொண்டவன் ஏரிக்கரையோரமிருக்கும் மரத்தடிக்கு பைக்கை விட்டான்.

அரியரை கிளீர் செய்து டிகிரி வாங்கி ஒன்றரை வருடமாகிவிட்டது.

பலரும் படிக்கும் அதே என்ஜினீயரிங்தான் அவனும், பிரபாவும் படித்தனர்.

இப்போதைக்கு தலைவருக்கு வேலைக்கு செல்லும் ஐடியா இல்லை. எனவே ஊர்சுற்றல், சினிமா, நண்பனுடன் வெட்டிப்பேச்சு, பிரீ பையர் என நாட்களை என்ஜாய் செய்து கொண்டிருந்தான்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல,

ஒருநாள் கதிர் பஸ் ஸ்டாப் செல்லும் வழியில் பைக் மக்கார் செய்ததால், அவனுக்குத் தெரிந்த ஒரு மெக்கானிக்கிற்கு அழைத்தவன், அதன் மீதே அமர்ந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்போது புவனா, பவி நடந்து வந்து கொண்டிருந்தனர்.

பவி வேகமாக அவன் அருகிலிருக்கும் கடைக்கு வந்து எதையோ கேட்டு நிற்க, புவனா அவளுக்காக காத்திருந்தாள். தாவணிதான் உடுத்தியிருந்தாள்.

ஏனோ… அன்று கதிரின் கண்களுக்கு முதல்முறை ரொம்பவே அழகாகத் தெரிந்தாள்.

 

தாவணி அணிந்திடும்

பெண்களில் அவள் மட்டும்

தேவதையின் மகள் என்று தெரியும்

உனக்கு எங்கே அதுவும் புரியும்

 

என அந்த கடையிலிருந்து பாட்டு வேறு சூழ்நிலைக்கேற்றார் போல இருந்தது.

அவன் பார்வை அவள் மீதேயிருக்க, கவனித்தவளுக்கு, அது தவறான பார்வையில்லையானாலும் ரசிக்கும் பார்வையென புரிந்தது.

கொஞ்ச நேரம் நெளிந்தவாறு கண்டுக்காமல் நின்றவள், ஒருக்கட்டத்தில் கடுப்பாகிவிட, அவனை நேர்கொண்டு ஒரு பார்வை பார்த்து, என்ன என்பதுபோல ஒற்றைப் புருவத்தை உயர்த்தினாள்.

அவள் செயலில் ஒருநொடி கதிர் அசந்துதான் போனான். அவனின் இதழ்கள் வசீகரமாக புன்னகைத்தது.

உண்மையில் அவன் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த தைரியம் இந்த நொடி அவனை கவரவே செய்தது.

அவளைக் கலவர படுத்ததான் வெளிப்படையாக பார்த்தான். ஆனால் அவளோ பதில் பார்வை பார்க்கிறாள். புருவத்தை உயர்த்தி என்ன என கேட்கிறாள்.

‘தைரியமா இருக்கா.’ உள்ளே பாராட்ட,

‘டேய் அவ உன்ன எப்படி முறைக்குறா? நீ அவளுக்கு புகழுரை வாசிக்கற.’ என்று மனம் வாரினாலும், அவன் கண்டுகொள்ளவில்லை.

அவளுக்கோ கதிரின் விலகாத பார்வை ஒருக்கட்டத்தில் என்னவோ போலிருக்க, பவி வரவும், அவனை அர்ச்சித்தவாறே சாலையைக் கடந்து எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பிற்கு சென்றுவிட்டாள்.

அந்த நிகழ்வுக்கு பின்தான் அவன் மனம், ‘அவள் நமக்கு முறைதான.’ என ஞாபகப்படுத்தி சிலபல உணர்வுகளை தோற்றுவிக்க ஆரம்பித்தது.

வெற்றி வேண்டுமானால் எதற்கு தேவையற்ற பிரச்சனையென ஆரம்பித்தில் விலக நினைத்திருக்கலாம், ஆனால் கதிருக்கு அவர்களை பிடிக்குமே. அவர்களுடன் குடும்பமாக வாழ ஆசை இருந்ததே!

ஆனாலும் இருவரும் எப்போதேனும் பார்த்தால், இப்படிதான் முட்டிக் கொள்வார்கள்.அதுவும் அவளை காண்டாக்குவதில் அவனுக்கு அலாதி பிரியம்.

எதும் அவளை மொக்கை செய்துவிட்டு செல்வதை வழக்கமாக்கி வைத்திருந்தான்.

அவளுக்கோ உள்ளே, ‘இவனை ரொம்ப டெரர்னு நெனச்சோம். ஆனா இப்படி இருக்கான்.’ எனத் தோன்றும்.

ஆனாலும் வாங்கிய மொக்கையில் அவனுக்கு கிடைத்ததென்னவோ திட்டு மட்டுமே.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!