Mogavalai – 1

coverpic_mogavalai-6b228b6c

Mogavalai – 1

மோக வலை

அத்தியாயம் – 1

  “அம்மா…” என்று வலியில் கதறினாள் அவள்.  அவள் தன் கால்களை வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் உதறினாள். வலியில் அவள் துடிக்க, அவள் மேடிட்ட வயிறு மேலும் கீழும் இறங்கியது.

வேதனையில், கதறலில் சிவந்த அவள் தேகம் இன்னும் செம்மையுற்றது. அவள் கண்களில் வலியின் வெளிப்பாடாகக் கண்ணீர்  வழிய, “கொஞ்சம் பொறுத்துக்கோ அம்மா… இன்னும் கொஞ்சம் நேரத்தில், குழந்தை பிறந்திரும்.” என்று பக்கத்திலிருந்த செவிலிப் பெண் கூற, தலை அசைத்துக் கேட்டுக் கொண்டாள்.

வலியைப் பொறுத்துக் கொள்ளத், தன் கைகளை அழுந்த மூடினாள். அந்த வலியிலும் அவள் மனதில் ஓர் சந்தேகம் பிறந்தது.

‘குழந்தை அவனை மாதிரி பிறக்குமோ? ஐயோ அவனை மாதிரி பிறந்துட்டா?’ என்ற எண்ணம் தோன்ற, அந்த எண்ணம் வேதனையைத் தர, அந்த வேதனை பிரசவ வலியை விட அதிகமாகத் தெரிய,  தன்னை மீறி அனைத்தையும் மறந்து தன் கதறலை நிறுத்தினாள் அவள்.

அவள் மௌனிக்க, “வீல்…” என்ற சத்தத்தோடுக் குழந்தை பிறந்தது. துக்கம், வலி நிறைந்த அவள்,  அந்த சத்தத்தைக் கேட்கும் சக்தி இல்லாமல் மயங்கினாள்.

மயங்கிக் கிடக்கும் அவளைப் பார்த்த செவிலி ஒருத்தி, “இந்த பொண்ணு பயங்கர அழகில்லை? பிரசவம்  முடிஞ்சி சோர்வா இருக்கும் போது கூட, எப்படி வரைஞ்ச ஓவியம் மாதிரி இருக்கு பாரேன்?” என்று அவள் ஈன்றேடுத்த  குழந்தையைக் குளிப்பாட்டிய படியே கூறினாள்.

“இந்த குழந்தையை பாரேன். ரோசா பூ மாதிரி. அவங்க அம்மா மாதிரி அழகு.” என்று மற்றொருத்தி கூற, ஆமோதிப்பாகத் தலை அசைத்தனர் அங்கிருந்த செவிலிகள்.

சற்று நேரத்தில், “ஆர்த்தி… மாப்பிள்ளை வீட்டுக்கு நீ சொல்ல வேண்டாமுன்னு சொல்லிட்ட. இருந்தாலும், சொல்லாமல் இருக்கிறது மரியாதை இல்லை இல்லையா? நாங்க சொல்லிட்டோம்.” என்று அவள் தாய்  கூற, ஆர்த்தி எதுவும் பேசவில்லை.

“அம்மா… குழந்தை.” என்று ஆர்த்தி சோர்வாகக் கேட்க, அவள் முன் சிரித்த முகமாகக் குழந்தையை நீட்டினாள் பார்வதி ஆர்த்தியின் தாய்.

‘ஹப்பா… குழந்தை அவனை மாதிரி இல்லை. அவனை மாதிரி வளர்ந்து விடவும் கூடாது.’ என்று ஆர்த்தி சிந்திக்க, அங்கு நுழைந்தான் செல்வமணி.

தன் இரு கைகளை பின்னே கட்டியபடி, குழந்தையைப் பார்த்து ரசித்துச் சிரித்தான்.

சராசரி உயரம். உடற்பயிற்சி செய்த கட்டுக்கோப்பான உடம்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், திடகாத்திரமாக இருந்தான். கொஞ்சம் நிறம் குறைவு.

செல்வமணியைப் பற்றிக் கூற வேண்டும் என்றால், அவன் எந்த கதாநாயகன் போலவும் இல்லை. நாம் சந்திக்கும் சராசரி மனிதனைப் போல் இருந்தான்.

அவன் உடல் அசைவுகள் சற்றுக் கூச்ச சுபாவம் கொண்டவன் என்றும் கூறியது.  அவனைச் சூழ்ந்து பலர் இருப்பதால், தன் மனைவியை நிமிர்ந்துப் பார்ப்பதையும் தவிர்த்தான் செல்வமணி.

“மாப்பிள்ளை! குழந்தை அழகா இருக்கில்ல?” என்று ஆர்த்தியின் தந்தை சுந்தரம் கேட்க, ‘ஆம்…’ என்று வேகமாகத் தலை அசைத்தான் செல்வமணி.

சில நிமிடங்களுக்குப் பின், “அவங்க அம்மா மாதிரி…” என்று தன் மனைவியைப் பெருமையாகப் பார்த்தபடி கூறினான் செல்வமணி. ஆர்த்தி, படக்கென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

‘இதுல பெருமை பட என்ன இருக்கு? ஒன்னு பிள்ளை அம்மா மாதிரி இருக்கும்… இல்லை அப்பனை மாதிரி இருக்கும். ஏதோ பெரிய சாதனை மாதிரி…’ என்று மனதிற்குள் முணுமுணுத்தாள் ஆர்த்தி.

செல்வமணி அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தூக்கப் பயந்து கொண்டு, கைகளைப் பிசைந்தபடி, தலை சாய்த்துப் புன்னகைத்தான்.

குழந்தை அதன் கண்களை மெலிதாகத் திறப்பதும், மூடுவதுமாக இருந்ததுத் தன் தந்தையைப் பார்க்க முயன்று கொண்டு.

“மாப்பிள்ளை.. குழந்தையைத் தூக்குறீங்களா?” என்று சுந்தரம் கேட்க, “இல்லை மாமா… எனக்கு பயம்.. கொஞ்ச நாள் போகட்டும்…” என்று தன் உடலைச் சிலிர்த்துக் கொண்டு குழந்தையைப் பார்த்த சந்தோஷத்தில் ரசனையோடுக் கூறினான் செல்வமணி.

‘ம்… க்கும்… இவனுக்கு எதுக்குத்தான் பயம் இல்லை.’ என்ற எண்ணத்தோடு திரும்பிப் படுத்துக் கொண்டாள் ஆர்த்தி.

“மாப்பிள்ளை… நீங்க பேசிட்டு இருங்க.” என்று குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் பார்வதி.

அந்த சின்ன அறையைப் பார்த்த செல்வமணி, “எதுக்கு இப்படி ஒரு மருத்துவமனைக்கு வரணும். அப்பா சொன்ன மாதிரி, பெரிய மருத்துவமனைக்குப் போயிருக்கலாமில்லை?” என்று செல்வமணி மென்மையாகக் கேட்க, “எங்க கிட்ட அவ்வுளவு காசு கிடையாது.” என்று வெடுக்கென்று கூறினாள் ஆர்த்தி.

“ஏன்! நாங்க செலவழிக்க மாட்டோமா?” என்று அவன் அவள் கோபத்தைச் சிறிதும் பொருட்படுத்தாமல், புன்னகையோடுக் கேட்க, “அவசியமில்லை. எங்களுக்கு யார் பணமும் வேண்டாம். நான் வேலைக்கு போற காசில் என்ன முடியுதோ, அதை வைத்து வாழ்ந்துக்கறோம்.” என்று ஆர்த்தி உறுதியாக கூறினாள்.

“இல்லை.. ஏதாவது ஏடாகூடமாகிருமோன்னு தான்…” என்று செல்வமணி தயக்கமாக இழுத்தான்.

“என்ன  நினைக்கிறீங்கன்னு சொல்லக் கூட பயமா?” என்று காட்டமாகக் கேட்டு, “செத்துருவேன்னு நினைச்சீங்களா? அப்படி நடந்தா நல்லது தானே? என்னால, உங்களுக்குக் கஷ்டம் கிடையாது. உங்களோடு வாழ்ற  கொடுமை எனக்குக் கிடையாது.” என்று சலிப்பாகக் கூறினாள் ஆர்த்தி.

“இந்த நேரத்தில், இப்படிப் பதட்டப்படக் கூடாதுன்னு சொல்லுவாங்க.” என்று கூறிக்கொண்டு அவன் விலக முயல, “நான் நிம்மதியா இருக்கணுமுன்னா, டிவோர்ஸ் குடுத்திருங்க. நான் பதட்டப்படமா நிம்மதியா இருப்பேன்.” என்று படுத்திருந்தாலும், சோர்வு எதுவுமின்றி அழுத்தமாகச் சொன்னாள்  ஆர்த்தி.

‘டிவோர்ஸ்…’  இந்த வார்த்தையில் செல்வமணியின் உடல் நடுங்கியது. திரும்பி வாசலைப் பார்த்து நடக்க ஆரம்பித்தவன், ஆணி அடித்தார் போல் அங்கு நின்றான்.

பதட்டம், அவன் மூளையை செயலிழக்கச் செய்து, அவனை ஸ்தம்பித்து நிற்க செய்தது. தான் நினைப்பதைக் கேட்டுவிட்டு, தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள் ஆர்த்தி.

‘ஆர்த்திக்கு என்னைப் பிடிக்காது. ஆனால், விவாகரத்து கேட்கும் அளவுக்கா? சண்டை போடும் போது, ஏதேதோ சொல்லுவா. ஏதோ கோபத்தில் சொல்றதுன்னு நினைச்சோமே… எல்லாம் வாய் வார்த்தை இல்லையா? மனசில் இருந்து வந்தது தானோ?’ என்ற கேள்வி செல்வமணி மனதில் வர, அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ஆர்த்தி பேசும் பேச்சுக்கள் அவன் காதில் ஒலிக்க, அதைப் புறந்தள்ளிவிட்டு, குழந்தையைப் பற்றி யோசித்தான் செல்வமணி.

‘கல்யாணம், அதோட சம்பிரதாயமுன்னு குழந்தை வந்திருச்சுன்னு சொல்லுவா. திருமணமான முதல் மாதமே, குழந்தை உருவானதால், அதைக் காரணம் காட்டி, அம்மா வீட்டுக்கு அடிக்கடி போயிருவா. குழந்தை பிறந்ததும் எல்லாம் சரியாகிரும்ன்னு நினைச்சோம். ஆனால், ஆர்த்தி தன்னோடு சண்டை போடும் பொழுதெல்லாம் சொல்ற வாரத்தை எல்லாம் உண்மையோ?’ என்ற எண்ணப்போக்கோடு அவன் அவளைப் பரிதாபமாகப் பார்க்க, கண்களைத் திறந்த ஆர்த்தி, அவனைக் கோபமாகப் பார்த்தாள்.

“நீங்க இன்னும் போகலையா?  சும்மா, குழந்தை  அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு, இங்க வராதீங்க.” என்று ஆர்த்தி எகிற, “இல்லை…” என்று அவள் தலை கோத அவன் நெருங்க, சடாரென்று அவன் கைகளைத் தட்டி விட்டாள் ஆர்த்தி.

“சொன்னா புரியாது. நான் தான் எனக்கு உங்களைப்  பிடிக்கலை… பிடிக்கலை… பிடிக்கலைன்னு ஆயிரம் மட்டம் சொல்றேன்ல. உங்க  கிட்ட சொல்ற காரணத்தை ஊரைக் கூட்டி சொல்லணுமா?” என்று கேட்க செல்வமணி அவளைத் திகைத்துப் பார்த்தான்.

பதட்டத்தில் அவனுக்கு என்ன பேசுவதென்றுப் புரியவில்லை.

அவன் சோர்வாக வெளியே நடக்க, “நீங்க எதுவுமே பண்ண வேண்டாம். நான் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்றேன். நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க. ரெண்டு பெரும் சம்மதிச்சிட்டா டிவோர்ஸ் ஈஸி. என்னால உங்க கூட இனி வாழ முடியாது.” என்று ஆர்த்தி கூற, பதில் எதுவும் கூறாமல் அறையை விட்டு வெளியே வந்து குழந்தையை ஆசையாகப் பார்த்துவிட்டு, அவர்கள் வீட்டை நோக்கிச் சென்றான் செல்வமணி.

மாதங்கள் உருண்டோடின.

குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் விவாகரத்துக்காகக் காத்திருந்தனர்.

“மாப்பிள்ளை… இவ தான் காரணத்தைச் சொல்ல மாட்டேங்குறா… நீங்களாவது சொல்லுங்களேன்.” என்று பார்வதி, செல்வமணியிடம் கேட்க, செல்வமணி பதில் எதுவும் பேசவில்லை.

இருவரும் மனமொத்துப் பிரிவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று ஆர்த்தி உறுதியாகக் கூற, தன் மகளின் வாழ்க்கையை எண்ணி பார்வதி, தன் புடவை முந்தானையால் கண்ணீரைத் துடைத்தபடி நின்றார். ஆர்த்தியின் தந்தை சுந்தரம் தளர்ந்து காணப்பட்டார்.

செல்வமணியின் உடல்நிலை சரி இல்லாத தாய் வெளியே வர முடியாத காரணத்தினால் நீதிமன்றத்திற்கு வரவில்லை. தந்தை அவனோடு அமர்ந்திருந்தார்.

அவர்களுக்கு அருகே, குழந்தை ஆர்த்தியின் கைகளில் கொழுமொழுக்கென்று, சிவந்த ரோஜா பூ போல் புது மலராக இருந்தது.

குழந்தையைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆவல், செல்வமணியின் மனதில் தோன்றியது.

அவர்கள் முறை வரும் பொழுது, “குழந்தை…” என்று நீதிபதி கேள்வியாக நிறுத்த, “குழந்தையை அவங்களால வளர்க்க முடியாது. குழந்தை என்கிட்ட தான் இருக்கணும்.” என்று ஆர்த்தி தெளிவாகக் கூற, அதற்கு ஏற்றார் போல் கையெழுத்திட, செல்வமணியின் பக்கம் ஓர் காகிதம் நகர செல்வமணியின் கைகள் நடுங்கியது.

அதே நேரம், அந்தக் குழந்தை பொக்கை வாயைத் திறந்து தன் தந்தையைப் பார்த்து அன்புக் கரம் நீட்டிச் சிரித்தது. தன் தந்தை அவன் பதவியை இழந்து கொண்டிருப்பது தெரியாமல்.

செல்வமணி   குழந்தையை ஆசையாகப் பார்க்க, அந்த தெய்வீக சிரிப்பை இழக்க மனமில்லாமல் அவன் கண்கள் கலங்கியது.

செல்வமணியின் தந்தை ரங்கநாதன், அவனை யோசனையாகப் பார்த்தார்.

ஆர்த்தியின் மனதில் குழப்பம் ஏற்பட்டது. ‘இவன் குழந்தையைப் பார்க்கும் பார்வையே சரி இல்லையே? குழந்தையைக் கேட்டு பிரச்சனை பண்ணுவானோ?’ என்ற எண்ணம் தோன்ற, அவள் தன் குழந்தையை இறுக அணைத்துக் கொண்டாள்.

‘மாப்பிள்ளை குழந்தையைக் கேட்க வேண்டும். குழந்தை தான் இவர்களுக்கு ஒரே பாலம். இந்தக் குழந்தை தான் இவர்களைச் சேர்த்து வைக்கும். இறைவா! மாப்பிள்ளை குழந்தையைக் கேட்க வேண்டும்… கேட்க வேண்டும்… கேட்க வேண்டும்…’ என்று மனதார, தனக்குத் தெரிந்த அனைத்துக் கடவுளையும் வேண்டிக் கொண்டார் பார்வதி.

ஆர்த்தியின் தந்தை சுந்தரம் கண்களிலும், ஒரு மெல்லிய எதிர்பார்ப்பு.

‘குழந்தை இவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கொடுத்து விடாதா?’ என்ற எண்ணம் செல்வமணியின் தந்தை ரங்கநாதனுக்கும் இருந்தது.

‘மத்ததெல்லாம் உளறுவான். இவன் இந்த விவாகரத்து காரணத்தை மட்டுமே சொல்ல மாட்டேங்குறானே! இவன் அம்மாவும் பல விதமா கேட்டுடா…  என்னவா இருக்கும்?’ என்ற கேள்வி  ரங்கநாதன் மனதிலும் எழும்பியது.

“பணக்காரங்க… பண பலம் என்னிடமிருந்துக் குழந்தையைப் பிரிச்சிருமோ? இல்லை குழந்தையைக் காரணம் காட்டி, என்னை அவன் கூட சேர்ந்து வாழ சொல்லுவாங்களோ? நான் இன்னைக்கி குழந்தையைக் கொண்டு வந்திருக்கக் கூடாதோ?” என்று பல கேள்விகள் எழ, ஆர்த்தி செல்வமணியை கடுப்பாகப் பார்த்தாள்.

‘அவனோடு சேர்ந்து வாழ்வது…’ என்ற எண்ணம் அவள் கோபத்தை அதிகரிக்க, ‘சீ… ச்சீ… முடியாது. ஐயோ… நான் பட்ட அவமானம் போதும். என்னால முடியாது. இவன் மறுக்கட்டும். அப்புறம் யோசிப்போம்.’ என்று தன் பற்களை நறநறத்தப்டி தலை குனிந்து தன் கவனத்தைக் குழந்தையிடம் செலுத்தினாள் ஆர்த்தி.

அங்குப் பல எண்ணத்தோடு, குடியிருந்த அமைதி செல்வமணியின் பதிலுக்காகக் காத்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!