Mogavalai – 11

Mogavalai – 11
அத்தியாயம் – 11
ஆர்த்தியின் மனசாட்சி அவளை இடித்துரைக்க, அவள் கைகள் நடுங்கியது. ஆர்த்தி சற்று விலகி நின்று, சுய அலசலில் இருந்தாள்.
‘நான் பெரிய தப்பு பண்ணியிருகேனோ?’ ஆர்த்தியின் மனமும் அறிவும் ஒன்று போல் அவளுள் முதல் முறையாகக் காலம் தாழ்ந்து குற்ற உணர்ச்சியைக் கிளப்பியது.
“என்ன சந்தோஷமா இருக்கும் பொழுது இனிச்சுது. இப்ப வலிக்குதா?” என்று வலியிலும், ஆர்த்தியின் ஒதுக்கத்திலும் வெறுப்பாகக் கேட்டான் ராகவ்.
ராகவின் கேள்வியில் ஆர்த்தி, அவனை யோசனையாகப் பார்த்தாள்.
அந்தக் கேள்வி ஆர்த்தியைக் கொல்லாமல் கொன்றது. ‘சந்தோஷமா இருக்கும் பொழுதுன்னு ராகவ் எதை சொல்லுறாங்க?’ அவள் மனம் முரண்டியது.
‘அது தான் வாழ்க்கையா? மனமும், அன்பும் இல்லையா?’ என்று அவள் மனம் சுயபச்சாதாபத்தில் இறங்க, ‘ஏன் நீ அழகு, கம்பீரமுன்னு எதை நினைத்தாய்? நீ வாழ்வில் எதை முக்கியமுன்னு நினைத்தாய்? மனதையா?’ ஆர்த்தியின் அறிவு அவளைப் பார்த்து ஏளனமாகக் கேட்டது.
‘இந்த கேள்வி என்னை வாழ்க்கை முழுக்கத் தொடரப் போகிறது.’ என்ற எண்ணம் தோன்ற, திக்பிரமைப் பிடித்தது போல் நின்றாள் ஆர்த்தி.
“கேட்டா பதில் கூட சொல்ல முடியாதா? இவனால் என்ன செய்ய முடியுமுன்னு நினைப்பா?” என்று ராகவின் குரல் கோபமாக ஒலித்தது.
“ஏதோ யோசனை?” என்று ஆர்த்தி தன் பணிகளைத் தொடர, தன் அருகே இருந்த முக்காலியைப் படாரென்றுத் தள்ளி விட்டான் ராகவ்.
ராகவின் இயலாமை கோபமாக வெளிப்பட ஆரம்பித்தது.
“என்ன யோசனை?” என்று ராகவ் காட்டமாகக் கேட்க, “நாம அடுத்த செக்கப் எப்ப போகணும்? அது தான் யோசிச்சிகிட்டு இருந்தேன்.” என்று ஆர்த்தி ராகவை சமாதானம் செய்யும் விதமாகக் கூற, ராகவின் கோபம் மட்டுப்பட்டது.
“அடுத்த வாரமுன்னு சொன்னாங்க.” என்று ராகவ் அமைதியான குரலில் கூறினான்.
“கைச் செலவுக்குப் பணம் இருக்கா?” என்று ராகவ் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்தாள் ஆர்த்தி.
“இது வரைக்கும் நம்ம கிட்ட இருக்கிற மொத்த பணமும் காலி. தாலியை தவிர, மத்ததெல்லாம் இப்ப அடமானம் வைக்க போறேன்.” என்று ஆர்த்தி கூற, “நம்ம கம்பெனியில் லோன் கேட்கலாமா?” என்று ராகவ் ஆலோசனை கூறினான்.
“கேட்டு வாங்கிட்டேன்… அதுவும் செலவாகிருச்சு.” என்று ஆர்த்தி ஒற்றை வரியில் பதில் கூற, “ஓ…” என்று ராகவின் குரல் ஏமாற்றமாக ஒலித்தது.
“கவலைப்படாதீங்க… அடுத்த மாசம் சம்பளம் வந்திரும்.” என்று ஆர்த்தி ஆறுதல் கூற, “என் லீவு இந்நேரம் காலியாகி இருக்குமில்லை? என் சம்பளம் வராது தானே?” என்று ராகவ் தன் சந்தேகத்தைத் தெளிவு படுத்த, ‘ஆம்..’ என்பது போல் ஆர்த்தி மௌனமாகத் தலை அசைத்தாள்.
ஆர்த்தியின் சம்பளத்தில், குடும்பம் ஓட ஆரம்பித்தது. வீட்டின் வாடகை, மின்சார செலவு இது போல் பல செலவுகள் தவிர்க்க முடியாததாகிப் போனது.
பார்வதியும், ஆர்த்தியும் சிக்கனத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சிக்கனத்தின் வெளிப்பாடாக, மீராவின் செக் அப் நின்று போனது. ரதியின் விளையாட்டு சாமான்களின் வரவு நின்று போனது.
ராகவாலும் வெளியே செல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் நண்பர்கள் வந்து பேசி விட்டுச் சென்றனர். கொஞ்சம் நாட்கள் பண உதவியும் செய்தனர். அவர்களால் மட்டும் எத்தனை நாட்கள் பண உதவி செய்ய முடியும்?
வீட்டிற்கு வந்து பேசிவிட்டுச் சென்றனர். ராகவும் சற்று ஆறுதலாக உணர்ந்தான்.
அவர்களை வரவேற்க, என்று ஆர்த்தியின் பணம் கரைந்தது. முன்பு போல் இருந்தால், ‘இதெல்லாம் ஒரு செலவா?’ என்று தான் தோன்றி இருக்கும்.
ஆனால் தற்போதைய நிலையில், ஆர்த்தி தடுமாறினாள்.
‘ராகவின் வீட்டிற்கு வருவது இடைஞ்சல்.’ என்று உணர்ந்து கொண்டு அவர்களும் ஒதுங்கிக் கொண்டனர்.
வாழ்க்கை நரகமாகி போனது இருவருக்கும்.
ராகவைத் தனிமைக் கொன்றது.
ஆர்த்தி வேலைக்குச் செல்வதும், வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்வதும், ராகவுக்கு உதவுவதும் என அயர்ந்து போனாள்.
முதலிலிருந்த பொறுமை, சகிப்புத் தன்மை எல்லாம் ஆர்த்திக்கும் குறைய ஆரம்பித்திருந்தது.
குறைவு அதன் இருப்பை அனைத்து இடத்திலும் கோரமாகக் காட்ட ஆரம்பித்தது.
ராகவின் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அவன் நல்ல குணங்களை, அவன் இயலாமை, வலி, சோர்வு குறைத்துக் கொண்டிருந்தது.
ராகவின் எரிச்சல், கோபம் என அனைத்தும் ஆர்த்தியிடம் வெடித்துக் கொண்டிருந்தது.
‘நான் எவ்வுளவு கஷ்டப்படுறேன்? வேலைக்குப் போயிட்டு வந்து, இவங்களையும் பார்த்து… இது ஏன் ராகவுக்கு புரிய மாட்டேங்குது?’ என்ற எண்ணம் தோன்ற ராகவின் மேல் கொண்ட அபிமானமும், நன்மதிப்பும் ஆர்த்தியின் மனதில் குறைய ஆரம்பித்தது.
பணத் தட்டுப்பாடு சமையல் அறைக்குள்ளும் நுழைய, சமையல் அறையின் இருப்பு குறைய ஆரம்பித்தது.
அது சமையலின் ருசியைக் குறைக்க, “வீட்டில இருக்கிறவனுக்கு இது போதுமுன்னு நினைச்சிட்டியா?” என்று ராகவ் தட்டைத் தூக்கி எறிந்தான்.
அறை முழுக்க, உணவு சிதறிக் கிடக்க, ‘எனக்கு இருக்கிற வேலையில் இது வேறயா?’ என்று ஆர்த்தியின் கோபம் உச்சத்தைத் தொட்டது.
“இப்ப இருக்கிற காசில், இதைத் தான் பண்ண முடியும்.” என்று ஆர்த்தி பொறுமையைக் கை விட்டுக் கோபமாகக் கூறினாள்.
“என்ன வேலைக்குப் போய், சம்பாதிச்சு, நீ மட்டும் தான் குடும்பத்தைக் காப்பாத்தறேன்னு திமிரா?” என்று ராகவ் இடக்காக பேச, ‘உடம்பு சரியில்லைன்னு நான் பொறுமையா போனா, இவங்க அராஜகம் அதிகமாகுது.’ என்று ஆர்த்தியின் சிந்தனை ஓட ஆரம்பித்தது.
‘இதுக்கு இன்னைக்கு முடிவு கட்டணும்.’ என்ற எண்ணத்தோடு ஆர்த்தி பேச ஆரம்பித்தாள்.
“நான் வேலைக்குப் போகணும். உங்களைப் பார்க்கணும். குழந்தைகளைப் பார்க்கணும். சம்பளம் மொத்தமும், உங்க மருத்துவச் செலவுக்கே சரியா போயிருது. குடும்பத்தில் அவ்வளவு கஷ்டம். நீங்க கூட இதைப் புரிஞ்சுக்கலைன்னா என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் ஆர்த்தி.
ராகவின் விரக்தி, அவன் உடல் நிலை அவன் மூளையை முழுதாக மழுங்கச் செய்திருந்து.
“ஏய்! எனக்குப் பாடம் எடுக்குறியா? வேலைக்குப் போற திமிர் தானே இவ்வளவும் பேசுது. நீ வேலைக்குப் போக வேண்டாம். இந்த ஒத்தக் கையை வைத்து நான் போறேன் வேலைக்கு.” என்று வீம்பாகக் கூறினான் ராகவ்.
“ஆர்த்தி… இனி நீ வேலைக்குப் போக வேண்டாம்.” என்று ராகவின் அதிகாரம் தூள் பறந்தது.
இவர்கள் சத்தம் அறையை விட்டு வெளியே கேட்க, இரு குழந்தைகளும் பார்வதியிடம் ஒட்டிக் கொண்டது.
ராகவின் முட்டாள்தனமான பேச்சில், ஆர்த்தி தன் மொத்த பொறுமையையும் இழந்திருந்தாள்.
“நான் வேலைக்குப் போகலைன்னா, நாம தெருத்தெருவா பிச்சை தான் எடுக்கணும். ஏற்கனவே வீடு கடனில் தான் ஓடுது.” என்று ஆர்த்தி வீட்டின் நிலைமையைப் பிட்டு பிட்டு வைத்தாள்.
இவர்கள் சண்டை அதிகமாக, மீரா தட்டுத் தடுமாறி பயத்தில், “ம்… மா… ம்… மா….” என்று கதற ஆரம்பித்தாள்.
மீராவின் அழுகை ராகவிற்கு அவனைக் குற்றம் சாட்டுவதுப் போல் இருக்க, ராகவின் கோபம் மீராவின் பக்கம் திரும்பியது.
“எதுக்குப் பிச்சை எடுக்கணும்? இந்த மகாராணி ஸ்கூலை மாத்தி, சாதரண ஸ்கூல்ல போட்டா பாதி செலவு குறையும்.” என்று ராகவ் கடுப்பாகக் கூற, “ரதியையும் இப்படி தான் சொல்லுவீங்களா?” என்று ஆர்த்தி எதிர்க் கேள்வி கேட்டாள்.
ஆர்த்தியின் கேள்வி ராகவை சீண்ட, “ரதியை ஏன் சொல்லணும்?” என்று அவனும் காட்டமாகக் கேட்டான்.
பார்வதி அறையின் வெளியே மன சோர்வோடு அமர்ந்திருந்தார். ‘எதோ பெரிய பிரச்சனை வந்துவிடுமோ?’ என்று அவர் நெஞ்சம் வேகமாக துடித்தது.
ஆர்த்தி அவனைக் கூர்மையாகப் பார்க்க, “அவ அப்பனுக்கு இல்லாத அக்கறை உனக்கு மட்டும் எதுக்கு? அது தான் இத்தனை வருஷம் பார்த்துட்டல்ல? மீராவை அவ அப்பன் கிட்ட விட்டுறு.” தயவு தாட்சணை இல்லாமல் ராகவின் வார்த்தைகள் வெளிவர ஆர்த்தி துடிதுடித்துப் போனாள்.
பார்வதி காதில் இந்த வார்த்தைகள் விழத் துடிதுடித்துப் போனார். மீராவை இறுக அணைத்துக் கொள்ள, அவர் சிந்தனை எங்கெங்கோ ஓடியது.
‘எனக்கு மட்டும் மரணமே வராதா? மரணமும் ஒரு வரம் தான் போல? இதை எல்லாம் பார்க்க கூடாதுன்னு தான் ஆர்த்தி அப்பா போய் சேர்ந்துட்டாங்க. நான் இன்னும் எதை எல்லாம் பார்க்க போறனோ? எதை எல்லாம் கேட்க போறனோ?’ என்று பார்வதி ஊமையாக அழுதார்.
“குடிச்சிட்டுக் கீழ விழுந்தவங்களைப் பார்க்குறேன்ல? இதுவும் பேசுவீங்க இன்னமும் பேசுவீங்க.” என்று கடுகடுத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள் ஆர்த்தி.
ஆர்த்தி சுக்கு நூறாக உடைந்து போனாள். மேலும் ராகவிடம் எதுவும் பேசாமல், சுவரில் சாய்ந்து அழுதாள் ஆர்த்தி.
ஆர்த்தி, அப்படி எளிதாக அழக்கூடியவள் இல்லை. ஆனால், இப்பொழுதெல்லாம் அழுவது மட்டும் துயரத்தின் வடிகால் என்பது போல் அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்து கொண்டே இருந்தது.
ஆனால், அழுவதற்கு ஏது நேரம் என்பது போல் மீரா அவள் அருகே சென்று அமர்ந்தாள். மீராவுக்குத் தேவையானதை ஆர்த்தி கவனிக்க, குழந்தை ரதி அழுது தாயின் கவனத்தை அதன் பக்கம் திருப்பியது,
ஆர்த்தி தன் கவலைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு குழந்தைகளுக்குப் பின் ஓட ஆரம்பித்தாள்.
குழந்தைகளைப் பார்த்துவிட்டு ஆர்த்தி உண்பதற்காக அமர, ராகவ் தானாகவே ஏதோ செய்ய முயற்சித்து இடறி விழ, “ஆர்த்தி…” என அலறினான்.
உண்ணாமல், அவன் அழைப்புக்கு ஓடினாள் ஆர்த்தி. அவனுக்கு உதவி விட்டு ஆர்த்தி மீண்டும் சாப்பிட அமர, “மீரா மட்டும் இருந்தா. தனியா பார்க்க கஷ்டமுன்னு கல்யாணம் பண்ண. பாரத்தை சுமக்க தோள் கிடைக்குமுன்னு நீ நினைச்ச. ஆனால், பாரம் அதிகமாத்தான் ஆகியிருக்கு. ஒரு பாரத்தைச் சுமந்த நீ, இப்ப மூணு பாரத்தை சுமக்குற…” என்று வேதனையோடு கண்ணீர் மல்கக் கூறினார் பார்வதி.
ஆர்த்தி தன் தாயைப் பரிதாபமாகப் பார்க்க, “இன்னும் நிறைய சொல்லுவேன் ஆர்த்தி. ஆனால், நீ கஷ்டப்படுவ ஆர்த்தி. இப்பவும் உன்னை காயப்படுத்தணுமுன்னு சொல்லை. நானும் என் மனவேதனையை யார் கிட்ட தான் கொட்டுவேன்?” என்று கேள்வியாகத் தன் மகளிடம் தன் மன வேதனையை ஆதங்கத்தை வெளியிட்டார் பார்வதி.
“உன் அழகு, அறிவு, திறமை இதெல்லாம் பார்த்து நீ எங்கேயோ, எப்படி எல்லாமோ வாழ்வேன்னு நினச்சேன். ஆனால்…” என்று தன் முந்தானையை வாயில் பொத்திக்கொண்டு கண்ணீர் உகுத்தார் பார்வதி.
“நான் உன்னை சரியா வளர்கலை ஆர்த்தி. சரியா வளர்க்கலை. எது முக்கியமுன்னு சரியா சொல்லி வளர்க்கலை.” என்று புலம்பிக்கொண்டே பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றார் பார்வதி.
தளர்ந்த நடையோடு சென்ற தாயை யோசனையாகப் பார்த்தாள் ஆர்த்தி.
மீரா ஆர்த்தியின் மடியில் வந்து அமர, ‘அவங்க அப்பா கிட்ட கொண்டு போய் விட்டுரு.’ ராகவ் சொன்ன வார்த்தை மீண்டும் ஆர்த்தியின் காதில் ஒலித்தது.
‘என்ன வார்த்தை சொல்லிவிட்டான் ராகவ்? இதுக்கா என் வாழ்வில் இத்தனைப் போராட்டம்?’ என்ற எண்ணம் தோன்ற, ஆர்த்தியின் மூளை வேகமாகச் சிந்தித்தது.
‘இப்பவே இப்படிச் சொல்றவங்க, மீராவை நல்லா பார்த்துப்பாங்களா?’ என்ற சந்தேகம் ஆர்த்தியின் மனதில் எழுந்தது.
‘நான் ராகவை திருமணம் செய்து கொண்டது தவறா?’ என்ற சந்தேகம் ஆர்த்திக்குத் தோன்ற, அவளிடம் தவழ்ந்து வந்த குழந்தை ரதி ஆர்த்தியின் சிந்தனையைத் தவிடு பொடியாக்கினாள்.
ரதியை அணைத்துக் கொண்டு, ‘அப்படி எல்லாம் இல்லை.’ என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் ஆர்த்தி.
‘எதோ கெட்ட நேரம். உடம்பு சரி இல்லை. ராகவ் இப்படி நடந்துக்கிறாங்க. எல்லாம் சரியாகிரும்.’ என்று ஆர்த்தியின் மனம் அவளைச் சமாதானம் செய்தாலும், ஆர்த்தியின் அறிவு பல கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.