Mogavalai – 12

coverpic_mogavalai-69a1b9d0

அத்தியாயம் – 12

ராகவ் விடாப்பிடியாகப் போராடி, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான். அவன் மூளை, மனம் அனைத்தும் ஒத்துழைத்தாலும் அவன் உடல் ஒத்துழைக்கவில்லை.

அவனைத் தாற்காலிகமாகப் பணி நீக்கம் செய்தனர்.   யாருக்காகவும், நாட்களும், மாதங்களும் நிற்க வில்லை.

ஆர்த்தியின் வருமானம் இன்றைய காலகட்டத்தில் சொற்ப வருமானமாகத் தெரிந்தது. கடன், கடன் திரும்பிய பக்கமெல்லாம் கடன்.

வீடு இருந்தது. சொகுசு சாமான்கள் இருக்கத்தான் செய்தது. தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டு தான் இருந்தது. ஆனால், அத்தியாவசிய தேவைகள், தன் இல்லாமையைக் காட்டிக் கொண்டு இருந்தது.

பசி அனைவரின் வயிற்றையும் கிள்ளியது.

வீட்டில் இருக்கும் சாமானை வைத்து முடிந்த அளவுக்குச் சமைத்தார் பார்வதி. பார்வதி ஆர்த்தியைச் சமையலறையிலிருந்து பார்க்க, “அம்மா.. ஒரு நாள்… நாளைக்கி சம்பளம் வந்திரும். எல்லாம் வாங்கிட்டு வந்திறேன். கடையில் வாங்கிய காசை திருப்பிக் கொடுக்காமல் கடன் கேட்க முடியாது அம்மா.” என்று ஆர்த்தியின் குரல் தன் தாயிடம் நிலைமையை எடுத்துரைத்தது.

‘பெரியவங்களுக்குப் புரியும். குழந்தைகளுக்கு?’ என்பது போல் இருந்தது அவர் பார்வை.

ஆர்த்தி தன் தலையைக் குனிந்து கொண்டாள். கவரிங் தோடு, மஞ்சள் கயிறு, பொலிவிழந்த முகம்.

‘இன்னும் கொஞ்ச நாளில் எல்லாம் சரி ஆகிரும்.’ ஆர்த்தி தனக்குத் தானே உருபோட்டுக் கொண்டாள்.

குழந்தை ரதி பசியால் கதற ஆரம்பித்தாள்.

‘அடுத்து, எதாவது சாமானை விற்று விடலாமா?’ என்ற யோசனை ஆர்த்திக்குப் பிறந்தது.

‘வீட்டில் இருக்கும் எலக்ட்ரோனிக்ஸ் பொருட்களை யார் வாங்குவார்கள்? அனைத்தும் தண்டச் செலவு.’ என்று தோன்றியது ஆர்த்திக்கு.

“வீட்டில் எதுமே இல்லையா?” ராகவ் தன் குழந்தையின் அழுகுரலில் வேதனையோடுக் கேட்டான்.

“நேத்தோட எல்லாம் காலி. இந்த மாசம் முடியும் வரை வருமுன்னு நினச்சேன். நாளைக்கு சம்பளம் வந்திரும். இன்னைக்கு ஒரு நாள் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்று ரதியை இடுப்பில் சுமந்து கொண்டு, செம்பட்டை பாய்ந்த முடியோடு, கசங்கிய சேலையோடு ஆர்த்தி கூறினாள்.

“ம்… ச்…” என்று சலிப்பாகக் கூறினான் ராகவ்.

‘எல்லாம் என்னால்… பொண்டாட்டி பிள்ளையைக் கூட நல்லா வச்சிக்க முடியாத குடி…’ என்று காலம் தாழ்ந்து அவன் சிந்தனை ஓடியது.

வீட்டை முழுதாக புரட்டினாள் ஆர்த்தி. கொஞ்சம் சில்லறை கிடைக்க, அதை எடுத்துக் கொண்டு சாலை ஓரக் கடைக்கு ஓடினாள் ஆர்த்தி.

ஆர்த்தியை  நன்கு அறிந்த அந்த இட்லிக்காரம்மா, கொஞ்சம் காசு குறைவாக இருந்தாலும் இரண்டு இட்லி கொடுத்தார்.

ஆர்த்தி, இட்லியில் தண்ணீர் சேர்த்து இரு குழந்தைகளுக்கும் கொடுத்தாள்.

மீரா, வயிற்றைப் பிடித்துக் கொண்டு தன் தாயைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“ம்… மா… ம்… மா… ப…சி.. சிக்கி…” என்று தட்டு தடுமாறித் திக்கித் திணறிப் பேசினாள் மீரா.

“மீரா பேசிட்டே டீ… மீரா பேசிட்டே டீ…” என்று ஆர்த்தி மீராவை அணைத்துக் கொண்டாள்.

ஆர்த்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘இத்தனைக் கஷ்டத்திலும், ஒரு நல்ல விஷயம்.’ என்பது போல் ஆர்த்தியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தது.

பார்வதி பல நாட்கள் கழித்துப் புன்னகைத்தார்.

தன் தாய் எதற்காக அழுகிறாள், என்று புரியாமல் தன் தாயைப் பார்த்த மீரா. “ம்… மா… பசிக்கி…” இம்முறை கோர்வையாகக் கூறினாள்.

‘பேசிவிட்டாள் என்று சந்தோஷப்படவா? இல்லை பசி என்று கேட்கும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டேனே?’ என்று ஆர்த்தி கதறி அழுதாள்.

“ம்… மா… பசிக்கி… பசி… பசிக்கி… பசி… பசிக்கி…” என்று மீரா மீண்டும் மீண்டும் கதறி அழுதாள்.

மழலை சொல் கேட்கக் காத்திருந்த ஆர்த்தி, அதைக் கேட்கும் மனதிடம் இல்லாமல் சமையலறைக்குள் நுழைந்து கொண்டு விம்மினாள்.

அழுது கொண்டே மீரா பசியில் தூங்கிவிட்டாள்.  ரதி மீண்டும் பசி எடுக்க, அழுகையைத் தொடங்கினாள்.

ரதியைத் தோளில் தட்டிக்கொண்டே குறுக்கும் நெடுக்கும் மீராவைப் பார்த்தபடி நடந்தாள் ஆர்த்தி.

ரதியின் அழுகையில் ராகவ், “மீரா கிட்ட சொன்னா அவளுக்குப் புரிஞ்சிருக்கும். நீ அந்த இட்லியையும் ரதிக்கு வச்சிருக்கலாம். ரதிக்குப் புரியாதில்லை?” என்று ராகவ் கேள்வியாக நிறுத்தினான்.

ஆர்த்தி பதில் எதுவும் பேசவில்லை.

“மீராவை அவங்க அப்பா கிட்ட விட்டுடு. நம்ம நிலைமையில் நம்மால் ரெண்டு குழந்தைகளைப் பார்க்க முடியாது.” என்று ராகவ் நிதானமாகக் கூறினான்.

இந்தப் பேச்சு இப்பொழுது ஆர்த்தியைப் பாதிக்கவில்லை. ராகவின் பேச்சுக்கள் இப்பொழுது இப்படி தான் இருக்கிறது.  இன்னும் குத்தலாக, ஆர்த்தியைக் காயப்படுத்தும் விதமாக.

‘இது தான் ராகவின் உண்மை குணமா? இல்லை சூழ்நிலை இப்படி ராகவை மாற்றிவிட்டதா?’ என்ற சந்தேகம் ஆர்த்தியின் மனதில் எழத்தான் செய்கிறது.

பதில் தெரியாமல் வாழ்வை நகர்த்த ஆரம்பித்தாள் ஆர்த்தி.

ரதியும் அழுது கொண்டே தூங்கிவிட்டாள். ராகவ் ரதியை வாங்கிக் கொண்டான்.

முதுமையிலும், பசியிலும் பார்வதி கண்ணயர்ந்துவிட்டார்.

மீரா கவனிப்பாரின்றி சோர்வாக படுத்துக்  கிடந்தாள். 

மீராவைப் பார்த்த அந்த நொடி,   ‘இந்தக் குழந்தை எத்தனை செல்வம் நிறைந்த வீட்டில் வளர வேண்டியவள்?’ என்ற கேள்வி  ஆர்த்தியின் மனதில் மின்னலாய் எழ ஆர்த்தி திடுக்கிட்டு அமர்ந்தாள்.

‘ஆனால்… ஆனால்… இதில் என்ன தப்பு?’ என்று அவள் அறிவு அவளிடமே வாதிட்டது.

ஆர்த்தியின் சிந்தனையை அவள் வயிற்றில் எழுந்த சுருக் என்ற வலி கலைத்தது.

‘பசி… பசி…’ என்று ஆர்த்தியின் வயிறு ஓலமிட்டது. ஒரு சொம்பு தண்ணீர் குடித்தாள் ஆர்த்தி. கலங்கலான தண்ணீர் தான், ஆனால் அமிர்தமாக அவள் தொண்டையில் இறங்கியது.

சில நிமிடங்களுக்குப் பின் மீண்டும் பசி சுருக்கென்று ஆர்த்தியின் வயிற்றைக் கிள்ளியது.

‘நாளை பணம் வந்துவிடும். சாமான் வாங்கிவிடலாம்.’ என்று ஆர்த்தி தனக்குத் தானே அறிவுறுத்த, அவள் மூளை அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.

பசி ஆர்த்தியை ஆட்டிப் படைத்தது.

பசி ஆர்த்தியின் முன் பல கேள்விகளை முன் வைத்தது.

பசி!

‘பசி தேவையா? ‘

‘ஆம்! அதுவே மனிதனின் உந்து சக்தி. பசி இல்லையேல் மனிதனின் ஓட்டம் நின்றுவிடும்.’ ஆர்த்தியின் மனம் பசியின் மயக்கத்திலும் ஓலமிட்டது.

பசி, ஆர்த்தியிடம் அதன் தன்மையை விளக்கியது.

‘அழகு, காதல், காமம், பணம், அதிகாரம், வெற்றி, புகழ்… இது போல் சிலவற்றில் ஆசைப்பட்டு, அந்த ஆசை மோகமாக மாறி, அந்த மோகம் போதையாக மாறி, மனிதர்களுள் தீராப்பசியாக  உருவெடுத்ததுப் பசி அல்ல. அது நான் இல்லை.’ என்று பசி வலியுறுத்த, ஆர்த்தி தன் வாழ்க்கையை அலசினாள்.

‘என் ஆசையும், கனவும் தீராப்பசியா?’ என்று கேள்வி ஆர்த்தியின் மனதில் எழுந்தது.

‘நான் மோக வலையில் வீழ்ந்து,  தீராப்பசியின் பின் ஓடி, என் மகளைப் பசிக்கு இரையாக்கிவிட்டேனா?’ என்ற குழப்பத்தோடு ஆர்த்தி பசியின் மயக்கத்தில் உறங்கிவிட்டாள்.

மறுநாள் சம்பளம் வந்துவிட்டது.

அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவிட்டனர். ராகவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாள். பார்வதி, சற்று சோர்வாகக் காட்சி அளிக்க, “அம்மா.. குழந்தைகளை நான் கூட்டிகிட்டுப் போறேன். நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க.” என்று ஆர்த்தி கூற, பார்வதி தன் மகளை யோசனையாகப் பார்த்தார்.

“மீரா நடந்திருவா. ரதியை நான் தூக்கிப்பேன். அவங்க தான் இப்ப கொஞ்சம் தனியா நடக்கிறாங்களே. நான் சமாளிச்சிப்பேன்.” என்று ஆர்த்தி கூற, “உன் புருஷன்…” என்று பார்வதி இழுத்தார்.

“அவங்க ஏதாவது திட்டிகிட்டே, குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க. அவங்க குணமே அப்படி ஆகிருச்சு.” என்று சலிப்பாகக் கூறிக்கொண்டுக் கிளம்பினாள் ஆர்த்தி.

அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றுப் பரிசோதனையை முடித்தனர்.

மருத்துவர் கூறியதை அசைபோட்டபடி, ரயிலுக்காக காத்திருந்தனர். ஆட்டோவில் செல்ல ஏது பணம்?

‘ராகவால் பழையபடி வேகமாக கம்பீரமாக நடக்க முடியாது. ஆனால், சுயமாக நடக்க முடியும். சில நேரங்களில் உதவி தேவைப்படலாம். ஆனால், ராகவ் சமாளித்துக் கொள்வார். பைக் ஓட்ட முடியாது.’ என்று மருத்துவர் கூறியது நினைவு வர, ஆர்த்தியின் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

‘இது தான் வாழ்க்கை போல?’ என்று அவள் எண்ணிக்கொண்டிருக்க, “என்ன இப்படி உட்கார்ந்திருக்க? ட்ரெயின் வந்திருச்சு.” என்று ராகவ் சிடுசிடுக்க, குழந்தைகளைப் பிடித்துக் கொண்டு, ரயிலை நோக்கி ஓடினாள் ஆர்த்தி.

ரயில் ஏற, ராகவ் தடுமாற அவனை ஒரு கை தூக்கிவிட்டது. அதே கைகள் ஆர்த்தி குழந்தைகளை ஏற்றவும் உதவியது.

அது செல்வமணியின் கைகள் தான்.

செல்வமணி அமர்ந்திருந்த அதே இருக்கையின் எதிர் பக்கம் அமர்ந்தான் ராகவ்.

ஆர்த்தி அங்கே அமரத்  தடுமாற, “என்ன பிள்ளையை வச்சிட்டு நிக்குற? உட்கார்.” என்று எரிந்து விழுந்தான் ராகவ்.

“சார்..தேங்க்ஸ்.” என்று ராகவ் செல்வமணியிடம் கூற, ஆர்த்தி கூனிக் குறுகிவிட்டாள்.

“வீட்ல தான் நீ உன் இஷ்டப்படி நடந்துக்குற. வெளில கூட ஒரு தேங்க்ஸ் சொல்லக் கூடாதா?” ராகவின் இயலாமை ரயில் நிலையத்தில் அனைவர் முன்னிலும் அதிகாரமாகத் தூள் பறந்தது.

ராகவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு,  “தேங்க்ஸ்…” என்று செல்வமணியைப் பார்த்தபடிக் கூறினாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் கண்கள் அவனை அளவிட்டது.

‘கட்டுக்கோப்பான உடல் இல்லை. ஆனால், திடகாத்திரமான உடல் தான். ஸ்டைல்… கம்பீரம் இல்லை. ஆனால் மனிதம் இருக்கத்தானே செய்கிறது.

அழகில்லை. ஆனால், எதற்கு அழகு?’ என்ற கேள்வி அவள் மனதில் தோன்றியது.

தன்னை பார்த்தாள் ஆர்த்தி.

கசங்கிய சேலை. மஞ்சள் கயிறு. வேலை செய்து சோர்ந்து போன உடல்.

வருமுன் கண்ணாடியில் பார்த்த அவள் முகம் ஆர்த்திக்கு நினைவு வந்தது.

‘அழுகையிலும், சோர்விலும் கருவளையங்கள் நிறைந்த கண்கள். வறுமையும், போராட்டத்தின் அடையாளங்கள் மட்டுமே மிச்சம்.’ என்ற எண்ணம் தோன்ற, ராகவைப்  பார்த்தாள் ஆர்த்தி.

திருமணத்தன்று இருந்த கோலத்திற்கு நேர்மாறாக இருந்தான்.

‘நிலையில்லா விஷயங்களுக்காகவா நான் இவரைக் காயப்படுத்தினேன்?’ என்று செல்வமணியைப் பார்த்தாள் ஆர்த்தி.

செல்வமணியிடம் எந்தச் சலனமும் இல்லை. மூன்றாம் நபருக்கு உதவுவது போல், உதவி விட்டு ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால், அவன் கண்கள் மட்டும் அவ்வப்பொழுது மீராவை ஆசையாகத் தழுவியது.

அவர்கள் இடம் வர, செல்வமணி இறங்கினான்.

ராகவும் இறங்கினான். ஆர்த்தி இரண்டு குழந்தைகளைப் பிடித்தபடி இறங்க, அவள் தடுமாறினாள்.

“ரதி பாத்திரம்…” என்று ராகவ் பதற, ஆர்த்திக்கு சுருக்கென்று தைத்தது. அந்த வலியோடு  வழக்கமாக ராகவ் கூறும் வார்த்தைகளும் ஏனோ இன்று ஆர்த்தியின் காதில் எதிரொலித்தது. ‘மீராவை அவங்க அப்பா கிட்ட விட்டரு.’

செல்வமணி வேறுபக்கம் நடந்து சென்றான். ஆர்த்தியின் கண்கள் செல்வமணியைத் தொடர்ந்தது. ராகவை அமர்த்திவிட்டு, அவன் கைகளில் ரதியைக் கொடுத்துவிட்டு  மீராவைத் தூக்கிக் கொண்டு செல்வமணி பின் ஓடினாள் ஆர்த்தி.

ஏதோ உறுத்த செல்வமணி நின்று திரும்பிப் பார்த்தான்.

அவன் முன்னே மூச்சு வாங்கியபடி நின்றாள் ஆர்த்தி.

மீராவை, செல்வமணி பக்கத்தில் நிறுத்தினாள். மீராவின் முன் யாசகம் கேட்பது போல் மண்டியிட்டு அமர்ந்தாள் ஆர்த்தி.

யாரிடம் கேட்கும் யாசகம் என்று ஆர்த்திக்கும் தெரியவில்லை.

“மீரா… நீ நல்லா இருக்கணும். இவங்க தான் உன் அப்பா. நீ இவங்கக் கூடத்தான் இருக்கணும்.” என்று ஆர்த்தி கூற, செல்வமணியின் கண்களில் அத்தனை மலர்ச்சி.

“ம்… மா….” என்று மீரா விசும்ப, மறுப்பாகத் தலை அசைத்து, “ப்… பா…” என்று சொல்லிக் கொடுத்தாள் ஆர்த்தி.

“ரதி மாதிரி உனக்கு அப்பா வேணுமில்லை. அதுக்குதான்.” என்று ஆர்த்தி கூற, மீரா புரிந்தும் புரியாமலும் தலை அசைத்தாள்.

செல்வமணி மீராவின் பிஞ்சு விரல்களை அன்பாக ஆதரவாகப்  பற்றிக் கொண்டான்.

அந்தத் தொடுதலில், இருந்த ஏதோவொன்றில் மீரா அவனிடம் ஒட்டிக் கொண்டாள்.

மேலே என்ன பேச என்று ஆர்த்திக்குத் தெரியவில்லை.

அவன் அதே செல்வமணி தான். தடுமாற்றத்தில் இருந்தான். என்ன பேசுவதென்று அவனுக்கும் தெரியவில்லை.

ஆர்த்தி திரும்பி நடக்க, “நீங்க எப்ப வேணாலும் குழந்தையைப் பார்க்க வரலாம்.” கூறலாமா, வேண்டாமா என்று பலத்த ஆலோசனைக்குப் பின் கூறிவிட்டான் செல்வமணி.

‘ஆண்மை, அழகிலோ கம்பீரத்திலோ இல்லை. பெண்மையை மதிப்பதில் அல்லவா உள்ளது!’ என்று காலம் தாழ்ந்து ஆர்த்தியின் அறிவுக்கு உரைத்தது.

ஆர்த்தி எதுவும் பேசவில்லை. மீராவை மீண்டும் ஒருமுறைப் பார்த்துவிட்டு விறுவிறுவென்று ராகவை நோக்கி ஓடினாள்.

செல்வமணி மீராவைத் தூக்கித் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

‘தாய் செய்த தவறென்ன, தான்  செய்த தவறென்ன?’ என்று எதுவும் புரியாமல், மீரா கண்ணீரோடு அந்தப் புது பாதுகாப்பு வளையத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ள முயற்சித்தாள்.

மீராவின் வேதனைக்குச் சிறிதும் சளைத்ததில்லை ஆர்த்தியின் வேதனை.

ஆர்த்தி ராகவை நோக்கி ஓடினாலும், ஒரு காலத்தில் செல்வமணியைப் பார்த்து அவள் பேசிய பேச்சுக்கள் அவள் காதில் இப்பொழுது பேசியது போல் விழுந்தன.

‘பேரை பாரு பேரு… செல்வமணி. நீயெல்லாம் ஒரு ஆள். உன் மூஞ்சியைக் கண்ணாடியில் பார்த்திருக்கியா? உனக்கெல்லாம் அழகுப் பொண்டாட்டி கேட்குதா?’ என்று ஆர்த்தியின் பேச்சு அவள் காதிலே கேட்க…

“போதும்.. போதும்…” என்று தனக்குத் தானே உருப்போட்டுக் கொண்டாள் ஆர்த்தி.

ஆனால், நினைவுகள் அலை மோதியது.

‘ஸ்டைலா நடக்கத் தெரியாது. தொடர்ந்து கம்பீரமா பேசத் தெரியாது. நாலு பேர் கிட்ட பழகத் தெரியாது. கார் இல்லை ஒரு பைக் கூட ஓட்டத் தெரியாது. நீயெல்லாம் ஆம்பிளையா? என் வயித்தில் பிள்ளையைக் கொடுத்துட்டா, நீ ஆம்பிளையா?’ அன்று பேசியது ஆர்த்திக்கு இன்று அவள் பேசியது போல் ஒலிக்க, ஆர்த்தி தன் தவறை உணர்த்து ரணமாய் துடித்தாள்.

ஆனால் பயன்?

‘அன்று செல்வமணியும் இப்படித் தான் அழுதிருப்பானோ? இப்படித் தான் துடித்திருப்பானோ? அந்தப் பாவம் தான் என்னைத் துரத்துதோ?’ என்றக் கேள்வியோடு ராகவை நெருங்கினாள்.

“எங்க போய் தொலைஞ்ச? மீரா எங்க?” என்று ராகவ் பதட்டமாகக் கேட்க, “நன்றியை செயலில் காட்டிட்டேன்.” என்று கூறிக்கொண்டு ரதியைத் தூக்கியபடி வீட்டை நோக்கி அமைதியாக நடந்தாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் இந்த முடிவில் பார்வதி திடுக்கிட்டுப் போனார்.  மீரா இல்லாமல் வீடு வெறிச்சோடி இருப்பது போல் அனைவருக்கும் தோன்றியது.

பார்வதி எதுவும் பேசாவிட்டாலும், மௌனமாகக் கண்ணீர் வடித்தார்.

‘ஆர்த்தியை அழகு என்று தலையில் தூக்கி வைத்து, எதை முக்கியம் என்று சொல்லிக் கொடுக்காமல் வளர்த்தது என் குற்றமா? நான் கண்டித்து வளர்ந்திருக்க வேண்டுமோ? சின்ன விஷயத்திற்கு எதற்கு விவாகரத்து என்று அன்றே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டுமோ?’ என்று பதில் இல்லா கேள்விகளோடு கண்ணீர் வடித்தார் பார்வதி.

‘நான் மீராவை சொன்னேன் தான். ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையோ?’ என்று ராகவின் மனம் குற்ற உணர்ச்சியில் தடுமாறியது.

‘இரண்டாம் கல்யாணம், வளர்ப்புத் தந்தை எல்லாம் எளிதாகச் சொல்லி விடலாம். ஆனால் நடைமுறை?’ என்ற கேள்வி ராகவைப்  பார்த்து எள்ளலாகச் சிரித்தது.

‘அழகான மனைவி, என்ற மோக வலையில் சிக்கிக் கொண்டு பலரின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டேனோ? மீரா தாய் இல்லாமல் வளர்வதற்கு நான் தான் காரணமோ?’ என்ற குற்றவுணர்ச்சி அவனை அரிக்க ஆரம்பித்தது.

ராகவ் அவன் நினைத்தாலும், வெளிவர முடியாத குற்ற உணர்ச்சி வலையில் சிக்கிக் கொண்டான்.

ஆர்த்தி யாரிடமும் பேசவில்லை.

மௌனமாகத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘தன் காதலன் எப்படி இருக்க வேண்டும், தன் வருங்கால கணவன் எப்படி இருக்க வேண்டும்?’  என்று பெண்கள் கனவோடுப் பேசிக்கொண்டிருந்த லைவ் ஷோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“கணவன் கதாநாயகன் போல் இருக்க வேண்டும். காதலன் ரோஜா பூக்கள் கொடுக்க வேண்டும். கணவனோடு பைக்கில் ஊர் சுற்ற வேண்டும். காதலன் பாட வேண்டும். கணவன் தன்னைப் பற்றிக் கவிதை சொல்ல வேண்டும். வேண்டும்… வேண்டும்… வேண்டும்…” என்று அந்த இளம் பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

“வேண்டும்…. வேண்டும்… வேண்டும்…” கதறினாள் ஆர்த்தி.

“எனக்கு மட்டுமா வேணும்? எல்லா பொண்ணுங்களும் தானே ஆசைப்படுறாங்க?” என்று தன் அருகே இருத்த ரிமோட்டை தொலைக்காட்சி மேல் விட்டெறிந்தபடி ஆக்ரோஷமாகக் கேட்டாள் ஆர்த்தி.

“ஐயோ போதும்… போதும்… போதும்…” என்று காதுகளை மூடிக் கொண்டுக் கத்தினாள் ஆர்த்தி.

“நான் என்ன தப்பா கேட்டுட்டேன்? எல்லாரும் ஊர் உலகத்தில் கேட்கிறது தானே?” என்று அலறினாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் நினைவலைகள் அவள் முதல் திருமணத்தைச் சுற்றி வந்தது.

“ஜோடியா பைக்ல போகணுமுன்னு நினச்சா தப்பா? மாப்பிள்ளை ஹீரோ மாதிரி இருக்கணும்னு நினைக்கிறது தப்பா?” என்று கேட்டுக்கொண்டே மடார் மடாரென்று தலையில் அடித்துக்கொண்டாள் ஆர்த்தி.

“சராசரியை விட செல்வமணி கம்மி… கம்மி தான்.” ஆங்காரமாக ஒலித்தது ஆர்த்தியின் குரல்.

“அவனை அப்படி வளர்த்தது அவங்க அம்மா தப்பு தானே?” என்று ஆர்த்தி விம்மினாள்.

“இல்லை… இல்லை அவங்க தப்பில்லை. அப்படி மாப்பிள்ளை பார்த்தது உங்க தப்பு அம்மா… அப்பா தப்பு.” என்று பார்வதியைக் கைக் காட்டிக் குற்றம் சாட்டினாள் ஆர்த்தி.

பார்வதி தன் மகளைக் குழப்பத்தோடு பார்த்தார்.

“சரி… நான் விவாகரத்து பண்ணினது தப்பு தான். அதுக்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?”

“விவாகரத்து பண்ணும் பொழுதே என்னைக் கண்டிச்சிருக்கலாமே? நிதர்சனத்தை உணர்த்தி இருக்கலாமே?” என்று தன் தாயின் மடியில் படுத்து, ஆர்த்தி கதறினாள்.

“என் மகள் மீரா. அவளுக்காக அவளுக்காகன்னு யோசிச்சு யோசிச்சு… அவளை செல்வமணிகிட்டயே கொடுத்துட்டேன்.” என்று வயிற்றில் அடித்துக் கொண்டு ஓலமிட்டாள் ஆர்த்தி.

“என் மக என்கிட்டே இல்லை… என் மகள் என் கிட்ட இல்லை…” என்று ஆர்த்தி ராகவின் முன் மண்டியிட்டுத் தன் வெறும் கைகளை ஆட்டியபடி அழுதாள்.

அங்கு மயான அமைதி நிலவியது.

“ஆர்த்தி… தப்பு தான்… எல்லாம் என் தப்புத் தான்… மீராவைக் கூட்டிட்டு வந்திருவோம்.” ராகவ் பதறினான்.

“ம்… இல்லை… யார் தப்புமில்லை.” என்று எழுந்து நின்று உறுதியாகக் கூறினாள் ஆர்த்தி.

“எல்லாம் என் தப்புத் தான். எல்லாம் என் தப்புத் தான்.” என்று ஆர்த்தி பேச, அவள் முந்தானை விலகியது.

அந்த விலகலைப் புரியாமல் அவள் மேலும் மேலும் பேச, பார்வதியின் உள்ளம் பதறியது.

“ஆர்த்தி… ஆர்த்தி…” என்று அவர் அழைக்க, ஆர்த்தியின் செவிகளில் அது விழவில்லை.

“செல்வமணி சரி தான். அவன் சராசரி மனிதன். அவன் அவனாகத்தான் இருந்தான்… இருக்கான்… இருப்பான்…” என்று ஆர்த்தி அவள் போக்கில்  பிதற்ற, “ஆர்த்தி…” என்று ராகவ் பதறினான்.

“ராகவும் சரி தான். அவன்… அவன் மனைவி ஆர்த்தி. அவன் குழந்தை ரதி. அவன் ஏன் மீராவைப் பார்க்கணும்? நியாயம் தானே?” என்று ஆர்த்தி புருவம் உயர்த்தி ராகவிடம் நியாயம் கேட்க, ராகவ் அமைதி காத்தான்.

“சரி தானே?” என்று ஆர்த்தி மீண்டும் அதிகாரமாகக்  கேட்க, “சரி தான்…” என்று ராகவ் பரிதாபமாகத் தலை அசைத்தான்.

“தப்பு யாரு? ஆர்த்தி… ஆர்த்தி தான் தப்பு.” என்று கூறிக் கொண்டு சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

“ஆர்த்தி இப்ப அழகா இருக்காளா? எல்லாம் போச்சு. சீக்கிரம் அழியக் கூடிய அழகை நம்பி… இந்த அழகு தான் முக்கியமுன்னு மோக வலையில் விழுந்தது ஆர்த்தி.” என்று பெருமூச்சு விட்டாள் ஆர்த்தி.

“ராகவ் சொன்னா ஆர்த்திக்கு எங்க போச்சு புத்தி? ராகவ், அழகா இருக்கான். பைக் ஓட்டுறான்னு, அவன் மேல் மோக வலையில் விழுந்தது ஆர்த்தி தானே?” என்று சுயநினைவை இழந்துத் தன்னைப் பற்றியே யாரோ போல் பேச ஆரம்பித்தாள் ஆர்த்தி

“ஆர்த்தி மோக வலையில் சிக்கிக் கொண்டாள்… அவளால் மீளவே முடியாது. வாழ்க்கை போச்சு. குழந்தை போச்சு. எல்லாம் போச்சு.” என்று ஆர்த்தி பரிதாபமாகக் கூற ராகவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“மீரா… மீரா… மீரா…” என்று பதட்டமாக வீடு முழுக்கத் தேடினாள் ஆர்த்தி.

“மீரா இல்லை. மீரா இங்க இல்லை. மீரா எனக்கு இல்லை.” என்று நெஞ்சிலும், தலையிலும் மடார் மடாரென்று அடித்துக் கொண்டாள்.

தலை குலைந்து, ஆடை குலைந்து அகோரமாகக் காட்சி அளித்தாள் ஆர்த்தி. தன் மகளின்  நிலையைக் காண முடியாமல் பார்வதி கண்களை மூடிக் கொண்டார்.

‘பல நிழல்களைத் திரைப்படத்தில் பார்த்து, பல நிழல்களைக் கதைகளில் படித்து மோக வலையில் சிக்கிக் கொண்டு என் நிஜ வாழ்வைத் தொலைத்து விட்டேனா?’ என்று தன்னை தானே காயப்படுத்திக் கொண்டிருந்த ஆர்த்தி கேள்வியோடு நினைவிழந்து  சரிந்தாள்.

“ஆர்த்தி… ஆர்த்தி… ஆர்த்தி….” என்று எந்தக் குரலும், அவளுக்கு நினைவலைகளைக் கொடுக்கவில்லை.

“யார் செய்த குற்றமோ?”, மோக வலையில் சிக்கிக் கொண்டதால், அவள் அழகும், அறிவும், நற்குணங்களும் ஆராதிக்கப்படவில்லை.

ஆர்த்தியின் நினைவலைகள் திரும்புமா? ஆர்த்தி மீண்டு வருவாளா?

அன்பான வாசகர்களே! 

இதுவே என் பதில்.

நிச்சயம் வருவாள். அவள் நினைவுகளும் திரும்பும்.

ஆனால், அது நம் கையில் தான் இருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணும் வாழ்வில் கற்பனை கதாபாத்திரங்களைப் போற்றாமல், வாழ்வின் நிஜ கதாநாயகர்களைப் போற்றும் பொழுது ஆர்த்தியின் நினைவுகள் திரும்பும். அவள் வாழ்க்கை ஓர் பெண்ணுக்குப் பாடமாக அமைந்து விட்டது என்ற ஆனந்தத்தில்!

கணவனுக்குள் அவள் வடித்தக் கற்பனையைத் தேடாமல், அவன் இயல்பை ஏற்றுக்கொண்டு மனைவி வெற்றி பெறும் பொழுது ஆர்த்தியின் நினைவுகள் திரும்பும். அவள் வாழ்க்கை ஓர் மனைவிக்குப்  பாடமாக அமைந்து விட்டது என்ற நிம்மதியில்!

தன் பிள்ளைகளை மோக வலையில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வது எப்படி என்று பெற்றோர் கற்பிக்கும் பொழுது ஆர்த்தியின் நினைவுகள் திரும்பும். அடுத்த தலைமுறையினர் வீழாமல் வாழ்வார்கள் என்று!

 

வாசகர்களே! 

இப்பொழுது கேள்வியை உங்கள் பக்கம் திருப்புகிறேன்.

ஆர்த்தி எழுவாளா? சிந்தியுங்கள்…

உங்கள் பதிலையும், விமர்சனத்தையும் எதிர்பார்த்து நான்.

இப்படிக்கு,

அகிலா கண்ணன்.