Mogavalai – 2

coverpic_mogavalai-910f55d5

Mogavalai – 2

அத்தியாயம் – 2

 

செல்வமணி முடிவு எடுக்கத் தடுமாறியது என்னவோ சில நிமிடங்கள் தான். ‘குழந்தையைத் தான் எந்த நிமிடத்திலும் உரிமை கொண்டாட மாட்டேன்.’ என்று கை எழுத்திட்டுவிட்டு வேகமாக வெளியேறினான் செல்வமணி.

குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று அவன் மனதில் எழுந்த ஆவலை அடக்கிக் கொண்டான்.

செல்வமணி வீட்டிற்குள் செல்ல, “ஏன்டா செல்வமணி…  உன் பொண்டாட்டி உன்னை விட்டுவிட்டுப் போனதெல்லாம் சரிதான். நீ இப்படி இருந்தா, உன் கூட அவ எப்படி இருப்பா?” என்று படுக்கையிலிருந்த  தாயார் அவனைப் பார்த்துக் கேட்டார்.

உண்மையில் செல்வமணிக்குப் புரியவில்லை. ‘தான் நன்றாகத் தானே இருக்கிறோம். இரண்டு கைகள், கால்கள், நல்ல பார்வை. காது நன்றாகக் கேட்கிறது. வாய் பேச முடிகிறது. சினிமா நடிகர்கள் போல் இல்லை என்றாலும், அத்தனை மோசமாக இல்லை.’ என்ற எண்ணத்தோடு அருகே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை சரி செய்து கொண்டான் செல்வமணி.

தன் சரி பார்த்தலுக்குப் பின், ‘எப்படி இருந்தா?’ என்ற கேள்வியோடு செல்வமணி தன் அன்னையை  நோக்கித் திரும்பினான்.

“என்ன டா பாக்குற?” என்ற மல்லிகாவின் சத்தமான கேள்விக்கு, செல்வமணி தன் தாயை அமைதியாகப் பார்த்தான்.

செல்வமணி மௌனமாக இருக்க,  “படுக்கையில் இருந்தாலும், இவ வாய் மட்டும் என்ன கேள்வி கேட்குதுன்னு பாக்கறியா?” என்று கேட்டு முடிந்தும் முடியாமலும் சற்று தளர்ந்த நடையோடு அவன் அருகே வந்தார் மல்லிகா.

தன் தாயை, மெத்தையில் அமர வைத்து அவர் அருகே அமர்ந்தான் செல்வமணி.

“ஏன்டா! அவ உன்னை வேண்டாமுன்னு சொன்னா சொல்லிட்டுப் போறா… குழந்தையை ஏன்டா விட்டுக்கொடுத்த?” என்று கண்களைச் சுருக்கி, ரகசியம் போல் கடுகடுத்தார் மல்லிகா.

செல்வமணி எதுவும் பேசவில்லை.

“குழந்தையைப் பத்தி ஆசை ஆசையா ஆயிரம் பேசுனியே டா?” என்று மல்லிகா கோபித்துக்கொள்ள, ‘குழந்தை மேல மட்டுமா என் பாசம்? அவ மேலயும் தான். அவ இல்லைனா, குழந்தை வந்திருக்குமா?’ வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் அழுதான் செல்வமணி.

“என்ன டா மங்குனி பையன் மாதிரி உட்காந்திருக்க?” என்று செல்வமணியின் தந்தை ரங்கநாதன் அவர் பங்கிற்குக் கோபித்துக் கொண்டார்.

‘மங்குனி பையன்…’ இந்த வார்த்தை செல்வமணியை உலுக்கியது.

‘ஆர்த்தியும் இதை தானே சொல்லுவா? மங்குனி… மண்ணாந்தை… மக்குப் பையன்… இப்படி எல்லாம் தானே சொல்லுவா? நான் அப்படி என்ன விதத்தில் குறைஞ்சு போய்ட்டேன்?’ என்று கேள்வியோடு அவன் அறை நோக்கி நகர்ந்தான் செல்வமணி.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டுப் போ. ஏன் குழந்தையை, அவ கிட்ட கொடுத்த? குழந்தையைக் கொடுத்த நீ வேண்டாம்? குழந்தை மட்டும் அவளுக்கு வேணுமா?” என்று விடாப்பிடியாக நின்றார் மல்லிகா.

“எனக்கும், அப்பாவுக்கும் அந்தக் குழந்தையை வளர்க்கத் தெரியுமா? இல்லை, உன் உடல் இருக்கிற நிலைமைக்கு உன்னால் குழந்தையை வளர்க்க முடியுமா?” என்று செல்வமணி உணர்ச்சிப் பெருக்கோடுப் பேசினான்.

“ம்…. இது ஒரு விஷயமா? வேலைக்காரியைப் போட்டு வளர்த்துப்போம்.” என்று மல்லிகா பிடிவாதமாக நிற்க, “அம்மா… கிட்ட இருந்து பிள்ளையைப் பிரிச்ச பாவம் எனக்கு வேணாம். ஏற்கனவே, என்ன பாவம் பண்ணனோ, எல்லாரும் மங்குனி, மண்ணாந்தைன்னு சொல்ற அளவுக்கு இருக்கேன்.” என்று கூறிக் கொண்டு, அத்தோடுப் பேச்சு முடிந்தது என்பது போல் அவன் அறைக்குள் சென்று விட்டான் செல்வமணி.

செல்வமணியின் பேச்சுக்குப் பதில் பேச முடியாமல் அவன் பெற்றோர் மௌனமாக இருந்தனர்.

‘இவன் நல்ல மனசுக்கு, ஏன் ஒரு நல்ல வாழ்க்கை அமையலை?’ என்ற கேள்வி செல்வமணி பெற்றோர் மனதில் எழுந்தாலும், அந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல், ‘இது தான் நல்லதுக்கே காலம் இல்லை என்பது போல?’ என்று எண்ணிக் கொண்டு அவரவர் சிந்தனையில் மூழ்கினர்.

அதே நேரம், ஆர்த்தியும் அவள் பெற்றோரும் அவர்கள் வீடிருக்கும் தெருவுக்குள் நுழைந்தனர்.

சிறிய தெருவாக இருந்தது. இரண்டு பைக் செல்ல முடியும். ஒரு பெரிய ஷேர் ஆட்டோ உள்ளே செல்ல முடியுமா என்றால் அது ஓர் கேள்விக்குறி தான்.

ஆர்த்தியின் விவாகரத்து செய்தி அந்த தெருவெங்கும் பரவிவிட்டது, என்பது அவர்கள் பார்த்தப் பார்வையில் தெரிந்தது.

பார்வைகள் பலவிதம்… பேச்சுக்கள் பலவிதம்… என அந்த தெருவில் குடியிருக்கும் மக்கள் நிரூபித்துக் கொண்டிருந்தனர்.

“பொண்ணை வளக்குற விதமா வளர்க்கணும். அழாக இருக்கா… படிச்சிருக்கான்னு செல்லம் கொடுத்தா இப்படி தான் கட்டின மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லத் தோணும்.” என்று அங்கு வாசலில் அமர்ந்திருந்த பாட்டி, கழுத்தை நொடித்தார்.

இவர்கள்  வீட்டிற்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு அமர்ந்தாலும், ஊர் பேச்சு இவர்கள் காதில் விழத்தான் செய்தது.

“கிழவி, நீ சும்மா இரு… மாப்பிள்ளைக்கு என்ன குறையோ?” என்று நடுத்தர வயது பெண்மணி பேச, பார்வதி தன் காதுகளை மூடிக் கொண்டாள்.

“இதெல்லாம் நடக்கும்… ஊர் வாய்க்கு அவல் ஆகுவோம்முன்னு, இதைத்தான் சொன்னேன்.” என்று அவர் கண்ணீர் வடிக்க, ஆர்த்தி சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

“அப்படி என்னடி பெரிய குறை இருக்கப் போவுது? நாமதான் மாப்பிள்ளையைப் பாத்திருக்கோமே… கை கால் எல்லாம் திடகாத்திரமாகத்தான் இருக்கு. அவர் பிசினெஸ் பாக்குறார். நான் கூட பணக்கார இடமா இருக்கே, வேற குறை இருக்குமோன்னு நினச்சேன். ஆர்த்திக்கும் குழந்தை பிறந்திருச்சு. வேற என்ன குறை இருக்கப் போவுது?” என்று மேடை ரகசியம் போல் கிசுகிசுத்தாள் நடுத்தர வயதுப் பெண்மணி.

“விவகாரத்தை இவ கேட்டாளா? மாப்பிள்ளை கேட்டாரா?” என்று அடுத்த சந்தேகம் தெருவில் எழ, ஆர்த்தியின் தந்தை சுந்தரம் அந்த மூன்று தட்டு சிறிய வீட்டில் ஓரமாக இருந்த துண்டை எடுத்துக் கொண்டு அங்கிருந்த பாயை விரித்துத் துண்டை அவர் மேல் போட்டுக் கொண்டு படுத்தார்.

அந்த அறையில் வெளிச்சம் சற்றுக் குறைவாக இருந்தது. அந்த இருள், ‘ஆர்த்தி வாழ்க்கையைப் போலவோ?’ என்ற கேள்வியை சுந்தரத்தின் மனதில் எழுப்பியது.

அவர் கண்களை மூடிக்கொண்டார். அவரால், கண்களை மட்டும் மூடிக் கொள்ளத்தான் முடிந்தது. காதுகளை அல்ல.

தெருவில் பேச்சு நீண்டு கொண்டே போனது. “மாப்பிள்ளை கொடுமை படுத்திருப்பாரோ? ஆனால், அவரை பார்த்தால் அப்படித் தெரியலியே? மாமியார் கொடுமையோ? அது எங்கு இல்லை? அதுக்காக விவகாரத்தோ? இல்லை வரதட்சணை வேண்டாமுன்னு சொல்லிட்டு இப்ப கேட்கறாங்களோ? இவங்களால முடியலையோ?” என்று ஆர்த்திக்கு சாதமாக கேள்விகள் ஒரு பக்கம் எழ, “பொண்ணு இவ விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.” என்ற தீர்மானத்தைத் தொடர்ந்து அந்த தெருவின் பேச்சு ஆர்த்திக்கு எதிராக முடிந்தது.

அவர்கள் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டே படுத்திருந்த சுந்தரத்தின் சிந்தனையும் அதை ஒட்டியே ஓடியது.

‘இவர்கள் சொல்வது போல் எந்தப் பிரச்சனையும் இல்லையே… ஆர்த்தி கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாமோ?’ என்ற கேள்வி மனதில் எழ, அவர் நெஞ்சின் ஓரத்தில் சுருக்கென்று தைத்தது.

‘ஐயோ… ஆர்த்தி வாழ்க்கை. கையில் குழந்தை. அதுவும் பெண் குழந்தை…’ என்ற சுந்தரம் வலியைப் பொருட்படுத்தாமல், மேலும் சிந்தித்தார்.

மீண்டும் சுருக்கென்று வலி, ‘இந்த நேரத்தில் வாய்வுப் பிடி வேறயா?’ என்று நெஞ்சை நீவிக் கொண்டார் சுந்தரம்.

ஆர்த்தி, யார் பேச்சையும் கேட்க விருப்பமில்லாமல், சுவர் அருகே படுத்துக் கொண்டாள். குழந்தை அவள் அருகே உறங்கிக் கொண்டிருந்தது.

பார்வதி கண்ணீரைத் துடைத்தபடி, வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு, எல்லாரும் இப்படி இருக்காங்க?’ என்ற எண்ணம் தோன்ற, ஆர்த்தி, “ம்..ச்..” என்று தன் சலிப்பை வெளிக்காட்டினாள்.

பக்கத்தில் இருக்கும் அறையில், ‘எங்கே தப்பு நடந்திருக்கும்?’ என்ற கேள்வி சுந்தரத்தின் மனதில் எழ, மகளின் நிலை, அவள் எதிர்காலம் என்ற பல கவலைகள் மனதில் தோன்ற, அவர் நெஞ்சில் மீண்டும் சுருக்கென்று வந்த வலியே கடைசி வலியாக அமைந்தது.

அவர் சடலத்தை முன் வைத்து, ஆர்த்தியின் வாழ்க்கை பற்றிய பேச்சே அரங்கேறிக் கொண்டிருந்தது.

செல்வமணி வீட்டில் சொல்ல வேண்டுமா? வேண்டாமா? என்ற பலத்த ஆலோசனைக்குப் பின்,  சொல்ல வேண்டாம் என்றே முடிவானது.

அனைத்து சம்பிரதாயங்களும், அதன் போக்கில் அரங்கேறிக் கொண்டிருந்தன. நேரம் யாருக்காகவும் காத்திருக்காது என்பதை உறுதி செய்வது போல்  நகர்ந்து கொண்டே இருந்தது.

ஆர்த்தியின் தாய் பார்வதி, சோகமே உருவாக அமர்ந்திருந்தார். மகள் மேல் கோபம் தான். வருத்தம் தான். ஆனால், மகளைச் சொல்லி என்னவாகப் போகுது, என்ற எண்ணம் அவர் மனதில்.

இது தான் விதி என்றால் என்ன செய்வது? யாரால் மாற்ற முடியும் என்ற கேள்விகளோடு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் பார்வதி.

அனைவரின் பேச்சும், ஆர்த்தியை ரணமாக்கிக் கொண்டிருந்தது.

விவகாரத்தினால் ஏற்பட்ட குழப்பம் தீரும் முன், தந்தையின் இழப்பு அவளை வெகுவாகப் பாதித்தது.

அந்த சோகம் ஒருபுறம் என்றால், இவளே தந்தையைக் கொலை செய்தது போல் பேசும் சுற்றமும், உறவினர்களும் ஒருபுறம் ஆர்த்தியைக் கொல்லாமல் கொன்று கொண்டிருந்தனர்.

சடங்குகள் முடிந்து உறவினர்கள் கிளம்பி விட, பார்வதி மனமொடிந்து நலிந்து ஒரு மூலையில் ஒடுங்கி விட்டார். குழந்தை நடு வீட்டில், விளையாடிக் கொண்டிருந்தது.

ஆர்த்தி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விட்டாள். தாய்க்கும், மகளுக்கும் இடையிலான பேச்சுக்கள் குறைந்து விட்டது. ‘எங்கு மகளை ஏதாவது சொல்லி விடுவோமோ?’ என்ற தயக்கத்தில் தன் பேச்சைக் குறைத்துக் கொண்டார்.

ஆர்த்தியும், தாயை தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

ஆனால், ஆர்த்திக்கு அனைவரும் தன்னைக் குற்றவாளியாகப் பார்ப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘ ஏதோ ஒரு நொடி பார்க்கும் வாய்ப்பு மட்டுமே கிடைச்சுது. மொபைல் நம்பர் கேட்டோம். அதையும் யாரும் வாங்கித் தரவில்லை. நான் பேசியிருந்தால், அவனை இனம் கண்டு கொண்டிருப்பேன். இந்தத் திருமணம் நடந்திருக்காது. இத்தனைக் குழப்பம் ஏற்பட்டிருக்காது. நானும் என் தந்தையை இழந்திருக்க மாட்டேன்.’ என்ற யோசனை ஓட, “உப்…” என்ற பெருமூச்சை வெளியிட்டாள் ஆர்த்தி.

‘எனக்கு என்று எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாதா? நான் என்ன ஜடமா? என் எதிர்பார்ப்புகளுக்கு மாப்பிள்ளை ஒத்துவரவில்லை என்றால், நான் அவனைத் தூக்கி எரியக் கூடாதா? இவர்கள் கட்டி வைத்த பாவத்திற்கு நான் இந்த வாழ்வு முழுக்க தண்டனை அனுபவிக்க வேண்டுமா?’ போன்ற அடுக்கடுக்கான  கேள்விகள் ஆர்த்தியின் மனதில் விஸ்வரூபமாக எழுந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!