Mogavalai – 3

coverpic_mogavalai-39aa3683

அத்தியாயம் – 3

நாட்கள் மாதங்களாக… மாதங்கள் வருடங்களாக உருண்டோடியாது. ஆனால், ஆர்த்தியால் சிலப் பேச்சுக்களிலிருந்தும்,  சிலக் கேள்விகளிலிருந்தும் ஓடி ஒளிய முடியவில்லை.

‘பிடிக்கலை விவாகரத்து பண்ணிட்டேன். இதில், நான் ஏன் இவர்களுக்கு அஞ்ச வேண்டும்?’ என்ற வைராக்கியம் மட்டும் ஆர்த்தியின் மனதில் வளர்ந்துத் தெளிவாக நின்றது.

விவாகரத்து முடிந்தாலும், செல்வமணி குழந்தையைப் பார்க்க வரக்கூடும், என்ற நப்பாசை பார்வதி மனதிலிருந்தது.

‘ஊரறிய அரங்கேறிய திருமணத்தை ஒரு காகிதம் முறித்து விட முடியுமா?’ என்ற கேள்வியும் அவர் மனதில்.

குழந்தை அவர்களைச் சேர்க்கும் என்ற நம்பிக்கையோடு,  ‘அப்படி என்ன பிடிக்கலை?’ என்று  தன் மகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார் பார்வதி.

செல்வமணி வரவில்லை. சொற்படி நடந்து  கொண்டான். பார்வதியும் பதில்  கேட்டுக் கிடைக்காமல் சலித்து விட்டார்.

இப்பொழுது எதுவும் கேட்பதில்லை. கேட்டுப் பிரோயஜனம் இல்லை என்று காலப் போக்கில் தெரிந்து கொண்டார்.

‘ஆம்! ஒரு காகிதத்தால் ஒரு பந்தத்தை முடிக்க முடியும்… முறிக்க முடியும்…’ என்று வாழ்ந்தாள் ஆர்த்தி.

ஆர்த்தி  அவள் அழகு அபரீதமானது. அழகு மட்டுமில்லை. அவள் திறமை அதை விட அதிகம்.

‘ஆர்த்தி, பணக்கார வீட்டில் பிறந்திருந்தால் அவளை இதை விட அதிகமாகப் படிக்க வைத்திருக்க முடியும்.’ என்று அவள் பெற்றோர்கள் அவ்வப்பொழுது சொல்வது உண்டு.

‘அப்பா… பணக்காரங்க என்ன பெரிய பணக்காரங்க… நான் இதிலே படிச்சு வேலைக்குப் போவேன். பெரிய பதவிக்குப் போவேன்…’ என்று கூறிய ஆர்த்தி பெற்றோர்களின் கனவு.

அவர்கள் கனவை மெய்ப்பித்துக் கொண்டு தான் இருந்தாள் ஆர்த்தி குடும்ப வாழ்க்கையைத் தவிர!

ஆர்த்தி, தன் படிப்பின் தகுதிக்கு ஏற்ப, அவள் சேர்ந்த வேலையில், அவள் திறமையால் பல படிகள் உயர்ந்திருந்தாள். அந்த நிறுவனத்தின் மேலாளர் பதவியில் அவள் வீற்றிருந்தாள்.

ஆர்த்தி, தன் தாயோடு பழைய வீட்டை மாற்றிக்கொண்டு, வேறொரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் குடிபெயர்ந்தாள்.

அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை, அவர்களுக்கு வசதியாக இருந்தது. அனைவரும், கதவை மூடிக் கொண்டு, அவர்கள் வீட்டோடு இருக்க, ஆர்த்தியின் வாழ்க்கையை அலச, அந்த அவசர உலக வர்க்கத்திற்கு நேரம் இல்லை.

வேலை, தாய், குழந்தை என்று இருந்த ஆர்த்தியின் மேல் மரியாதை மட்டுமே நிரம்பி வழிந்தது.

‘சிங்கிள் பரென்டிங்…’ (single parenting) என்ற பெயருக்குள் அடங்கிய ஆர்த்தியின் வாழ்க்கை தெளிவான நீரோடை போல் சென்றது அவள் தாயின் வருத்தம் மட்டுமே சில தடங்கல்களாக!

அன்று ஆர்த்தி, அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“அம்மா… நேரம் ஆச்சு! நான் கிளம்புறேன்.” என்று கூறிக் கொண்டு அந்தக் கடல் போன்ற  நீல நிற சேலையைச் சரி செய்தபடி குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் ஆர்த்தி.

“ம்… ம்…” என்று ஆர்த்தியின் காலைச் சுற்றியது குழந்தை

“மீரா குட்டிக்கு என்ன வேணும்? பொம்மை வாங்கிட்டு வரவா?” என்று ஆர்த்தி கேட்க, “குழந்தைக்கு பொம்மை எல்லாம் வேணாம். அதுதான் நிறைய இருக்கே. இரண்டு வயசாகுது. இன்னும் கொஞ்சம் கூடப் பேச்சு வரலை. நீ வேலை வேலைன்னு போய்டுற.” என்று பார்வதி குழந்தையைத் தூக்கியபடி தன் மகளிடம் கோபித்துக் கொண்டார்.

“அம்மா… நான் வேலைக்கு போகலைன்னா, நாம எப்படி சாப்பிடுறது?” என்று ஆர்த்தி, தன் அலைபேசியை எடுத்தபடியே கூறினாள்.

“இப்பவும், ஒன்னும் கெட்டுப் போல ஆர்த்தி. மாப்பிள்ளை இன்னும் வேற யாரையும் கல்யாணம் செய்துக்கலை. அப்படின்னா, அவர் உன் நினைப்பாத்தான் இருக்காருன்னு அர்த்தம். நாம, யாரை வைத்தாவது சமரசம் பேசுவோமா?” என்று பார்வதி தன் மகளின் பதில் தெரிந்தும் தன் ஆசையைக் கேள்வியாக்கினார்.

“அம்மா… லூசா அம்மா நீ. நான் இப்ப தான் நிம்மதியா இருக்கேன். என் நிம்மதியைக் கெடுக்குற மாதிரி.”  என்று கூறிக்கொண்டு, தன் தாயின் பக்கம் திரும்பி, “மீராவுக்கு ஸ்கூல் அட்மிஷன் பார்த்திருக்கேன். ஸ்கூலுக்குப் போனா மீராவுக்குப் பேச்சு வந்திரும். தலைக்கும், முழங்காலுக்கும்  முடிச்சு போட வேண்டாம்.” என்று கூறிக்கொண்டு அவசரமாகக் கிளம்பினாள் ஆர்த்தி.

“அம்மா… நான் வர நேரமாகும். எங்க கம்பனிக்கு இன்னைக்கி புது சீனியர் மேனேஜர் வரார்.” என்று கூறிக் கொண்டு தன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சிட்டாகப் பறந்தாள் ஆர்த்தி.

அலுவலகத்தில் ஆர்த்தி அவள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க, “ஆர்த்தி…சீனியர் மேனேஜர் சும்மா பார்க்க சூப்பரா இருக்கார் டீ…” என்று அவள் தோழி காதில் கிசுகிசுக்க, ஆர்த்தி அவளை மேலும் கீழும் பார்த்தாள்.

“நீ ஏன் இப்படி முறைக்கிற? எனக்குத் தோணுச்சு சொன்னேன்.” என்று தோழி கூற, தன் வேலையில் மூழ்கினாள் ஆர்த்தி.

சீனியர் மேனேஜர் அந்த நிறுவனத்தின் முழு பொறுப்பும் அவரிடம் தான் இருக்கும். அதற்கு அடுத்தப் பொறுப்பில் ஆர்த்தி, இருப்பதால் அவளுக்கு அழைப்பு வரும் என்றறிந்து அவன் அழைப்பிற்காகக் காத்திருந்தாள் ஆர்த்தி.

சில மணி நேரங்களில் அழைப்பு வர, ஆர்த்தி நிதானமாக உள்ளே நுழைந்தாள்.

‘சீனியர் மானேஜர்…’ என்று பெயருக்குச் சிறிதும் ஒத்து வராமல் இருந்தது அவன் வயது.

ஆனால், அவன் கம்பீரம், உடை என அனைத்தும் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. அவன் அவளைச் சிறிதும் ஏறெடுத்து பார்க்கவில்லை.

‘உள்ளே வரலாமா?’ என்ற கேள்விக்கு அவன் முன் இருந்த கோப்புகளைப் பார்த்தபடி உள்ளே வருமாறு கை அசைத்தான்.

அவன் அமரும்படி செய்கை காட்ட, அவன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஆர்த்தி.

சீனியர் மேனேஜரின் நடவடிக்கை இப்படி தான் இருக்கும் என்ற கணிப்போடு இருந்த ஆர்த்திக்கு, அவனின் செய்கை வழமை என்பது போல் அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.

கோப்புகளைப் பார்த்துக் கொண்டே, “நான் புதுசு தான். உங்களுக்குத் தான் இங்க இருக்கிற எல்லா விவரமும் தெரியும். புது சீனியர் மேனேஜர் அப்படின்னு நீங்க எதுவும் தயங்க வேண்டாம்…” என்று அலுவலகத்தில் அனைவரிடமும் சகஜ நிலையில் பழகும் நோக்கோடு அவன் கூறிக்கொண்டே அவளை நிமிர்ந்துப் பார்த்தான்.

புது மனிதன் என்ற தயக்கமோ, பயமோ எதுவுமின்றி அவன் முன் கம்பீரமாக அமர்ந்திருந்தாள் ஆர்த்தி.

“ஓகே சார்.” என்று அழுத்தமாகக் கூறிக்கொண்டு, நிறுவனத்தின் நிலவரத்தை அவனுக்கு விளக்கினாள் ஆர்த்தி.

“கால் மீ ராகவ்.” என்று கூற, “ஒகே ராகவ்.” என்று அவன் சொல்லை இயல்பாக எடுத்துக் கொண்டு தான் கூற வேண்டியதைக் கூறிவிட்டு, ‘எதுவும் கேள்விகள் இருக்கிறதா?’ என்ற எண்ணத்தோடு அவனைப் பார்த்தாள் ஆர்த்தி.

‘ஒன்றுமில்லை…’ என்று அவன்  தலை அசைக்க, ராகவின் அறையை விட்டு வெளியேறினாள் ஆர்த்தி.

ஆனால், ராகவ் தன்னிலை மறந்து அமர்ந்திருந்தான்.

‘வாவ்!’ என்ன ஒரு அழகு அவன் கண்கள் சிலிர்த்தது. ‘அழகிருந்தால், அறிவு இருக்காது என்று எந்த மடையன் சொன்னான்?’ என்ற கோபம் அவனுள் கிளம்பியது.

“ப்பா…” என்று அவன் அறையில் அவன் வாய் பிளக்க, ‘என்ன ஒரு ஆளுமை? கம்பீரம்?’ அவன் மெய் சிலிர்த்தான்.

தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டான். ‘நான் அவளுக்கு சரியான ஜோடி தான்.’ என்று அவன் மனம் அசை போட்டது.

முதல் வேலையாக நிறுவனத்தில் ஆர்த்தியின் விவரத்தைக் கிளறினான் ராகவ்.

‘திறமைசாலி… புத்திசாலி… நல்ல பெண்… நட்போடு பழகுவாள்…’ இதை மட்டுமே அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது.

அவள் குடும்பத்தைப் பற்றி, அவனால் எதுவும் யாரிடமும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ‘யாரும் கூற விரும்பவில்லையோ?’ என்ற சந்தேகமும் அவனுள் எழுந்தது.

அலுவலக வேலையில் வராத சந்தேகம் எல்லாம் ராகவிற்கு வந்தது. ஆர்த்தியை மீண்டும் அழைத்தான் ராகவ்.

ஆர்த்தியிடம் கோப்புகளைக் கொடுத்து சில விஷயங்களைக் கேட்டுக்கொண்டு, அவளை ஆராய்ந்தான் ராகவ்.

அத்தனை அலங்காரம் இல்லை. மேல் நெற்றியில் குங்குமம் இல்லை. கழுத்தில் தாலி இல்லை. கால் விரல்களில் மெட்டி இல்லை.

‘இத்தனை அழகான பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்குமா?’ ராகவனின் சிந்தனை கேள்வியாக முடிந்தது.

அவன் அறிவு சிந்திக்க, மனமோ, ‘இருந்திருக்கு… உனக்காக…’ என்று கூற, ராகவின் மனதில் உற்சாகம் பொங்கி வழிந்தது.

ஆர்த்தி அவள் கூற வேண்டியதைக் கூறிவிட்டு, ராகவை பார்க்க அவன் பார்வை அவளுக்குப் பல செய்திகள் கூறியது.

கண்ணியமான பார்வை. ஆனாலும், அதில் தெரியும் அப்பட்டமான அவன் ஆசை. ஒரு நாளில் எல்லாம் காதல் வந்துவிடாது என்பது ஆர்த்தியின் கருத்து.

‘ஒருவேளை, இந்த ஆசை நாளடைவில் காதலாக மாறலாம்.’ என்ற எண்ணம் தோன்றத் திடுக்கிட்டு  அவள் மனதைச் சமன்படுத்தினாள் ஆர்த்தி.

அவளும் இளம் பெண் தானே? அவள் மனதிலும் சின்ன சலனம்.

‘இது போல் அழகான,  திறமையான, கம்பீரமான ஆண்மகன் எனக்கு அமைந்திருந்தால், என் வாழ்வு ஏன் இப்படி ஆகியிருக்கப் போகுது?’ என்ற எண்ணம் தோன்ற, தன் தலையை சிலுப்பிக் கொண்டு, “ஐ அம் எ சிங்கள் பரென்ட். குழந்தையைப் பார்த்துக்கணும். சீக்கிரம் கிளம்பிருவேன்.” என்று அவன் பார்வைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்தோடுக் கூறினாள் ஆர்த்தி.

தேவை வரும் பொழுது, அவள் வாழ்க்கை முறையைப் படாரென்று சொல்லி அவர்களைக் கம்பீரமாகக் கடந்து செல்வது ஆர்த்தியின் பழக்கம்.

‘சிங்கள் பரென்ட்….’ இந்த ஒற்றை சொல்லில்  ராகவ் மொத்த ஆர்வமும் வடிந்து சிலையாக அமர்ந்தான்.