Mogavalai – 4

coverpic_mogavalai-136ba5a3

அத்தியாயம் – 4     

சில்லென்ற காற்று ஆர்த்தியைத் தீண்ட வீட்டிற்கு நேரத்தோடுக் கிளம்பினாள் ஆர்த்தி. கவனத்தைச் சாலையில் வைத்துக் கொண்டு, தன் வண்டியைச் செலுத்த முயன்றாள் ஆர்த்தி.

என்றும்  இல்லாத, வெறுமை தோன்றியது போன்ற உணர்வு அவள் மனதில்.

‘ம்…ச்… என்ன வாழ்க்கை இது? நானே எல்லாத்தையும் சுமக்கணுமா?’ என்ற கேள்வி அவள் மனதில் தோன்ற ஆரம்பித்திருந்தது.

ஆரம்பத்தில் விலகி வந்தது சந்தோஷத்தைத் தர, இப்பொழுது சந்தோசம் மறைந்து பொறுப்பு மட்டுமே அவள் முன் நின்றது.

‘மீராவுக்குப் பேச்சு வரலை. அம்மா என்னவோ குழந்தை அப்பா கிட்ட இல்லாததுதான் காரணுமுன்னு சொல்றாங்க. அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்.’ என்ற கேள்வி எழும்ப, தலையை அசைத்துக் கொண்டு வண்டியைத் திருப்பினாள் ஆர்த்தி.

‘சொல்லி அழக் கூட ஆளில்லை. என் மனசை யார் புரிஞ்சுக்கிறா?’ என்ற ஆர்த்தியின் சிந்தனைப் போக்கை எதிரே வந்த வண்டியின் ஹாரன் சத்தம் கலைத்தது.

அப்பொழுது, எதிரே ஒரு ஜோடி வண்டியில் கடக்க, கணவன் ஏதோ பேச, பின்னே அமர்ந்திருக்கும் மனைவி கணவனின் பேச்சை ரசித்துச் சிரிக்க ஆர்த்தியின் கண்கள் அவர்களை ஆசையாகத் தழுவியது.

‘இப்படி நான், சிரிக்கச் சிரிக்கப் பேசுற மாதிரி கணவன் எனக்கு ஏன் அமையவில்லை? சுவாரசியமா பேசக் கூடத் தெரியாது அவனுக்கு. வண்டியில் வைத்து வெளிய கூட்டிட்டுப் போனது கிடையாது. வண்டி ஓட்டத் தெரியாது. எப்பப்பாரு கார்! அதுக்கொரு டிரைவர். ஒரு சுவாரசியம் வேண்டாம் வாழ்க்கையில்?’ என்று ஆர்த்தியின் எண்ணங்கள், செல்வமணியோடு வாழ்ந்த வாழ்க்கையைத் திட்டிக் கொண்டு இருந்தது.

எதிரே பல ஜோடிகள் வண்டியில் செல்ல, ‘நான் ஒன்னும் இல்லாததை ஆசைப்படலியே? அழகு கம்மின்னு கல்யாணத்தன்னைக்கித் தெரிஞ்சாலும் அதை ஏத்துக்கிட்டு வாழணுமுன்னு தானே நினச்சேன்? அம்மா என்னை புரிஞ்சிக்கவே இல்லையே?’ என்ற வருத்தம் தோன்ற, தன் வருத்தத்தை மறைக்க, அவள் வண்டியை வேகமாகச் செலுத்தி அவள் வீட்டின் முன் நிறுத்தினாள்.

வீட்டிற்குள் சென்ற ஆர்த்தி தரையில் சோர்வாகச் சாய்ந்து அமர்ந்தாள்.

ஒரு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தது. ஆர்த்தியின் தாய், பார்வதி காபி கொடுக்க, அதை வாங்கிப் பருகியவள் தன் குழந்தையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.

ஆர்த்தியின் கைகள் குழந்தையை அன்பாக வருடியது. ‘இவ தானே வாழ்க்கைன்னு நினச்சேன். ஏன் இன்னைக்கி என் மனசில் குழப்பம்? என் வாழ்க்கை முற்றுப்புள்ளி வைத்த வாக்கியம். ஆனால், மீரா?  குழந்தை அவனை மாதிரி, கோழையா வந்துட்டா?’ என்ற கேள்வி தோன்ற மீராவை இறுக அணைத்துக் கொண்டாள் ஆர்த்தி.

ஆர்த்தியின் தாய் அவளுக்கு அறிவுரை கூற ஆரம்பிக்க, குழந்தையைத் தூக்கிக் கொண்டுப் படுக்கை அறைக்குள் சென்ற ஆர்த்தி கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

ஆர்த்தியின் முகம் எதையோ பறிகொடுத்ததுப் போல் சோகமாக காட்சி அளிக்க, மீரா தன் தாயின் கன்னத்தில் இதழ் பதித்துச் சிரிக்க, அந்தச் சிரிப்பு ஆர்த்தியையும் தொற்றிக் கொண்டது.

***

அதே நேரம் ராகவ் அவன் வீட்டில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

சிறுவயதிலே, தாய் தந்தையை இழந்த ராகவ் ஆசிரமத்தில் வளர்ந்து, சுய உழைப்பில் முன்னேறியவன். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், குடும்பத்தை விசாரித்து இவனுக்குப் பெண் கொடுக்க மறுத்தவர்கள் ஏராளம்.

திருமணம், என்ற வார்த்தை அவனுக்குச் சலிப்புத் தட்டியது ராகவ் வாழ்வின் நிஜம்.

‘இதுவரை எந்தப் பெண்ணையும் பார்த்து வராத காதல், இவளைப் பார்த்து ஏன் வந்தது?’ என்ற கேள்வி ராகவின் மனதில் எழுந்தது.

‘ஐயோ அவள்.. அவள் திருமணமானவள்.’ என்ற எண்ணம் தோன்ற, அவன் வீட்டிலிருந்த நாற்காலியில் சோர்வாகச் சாய்ந்தான்.

‘சிங்கிள் பேரன்டிங்…’ இந்த வார்த்தை ராகவின் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

‘விவாகரத்து ஆகியிருக்குமோ? என்ன காரணமா இருக்கும்?’ என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது.

‘விவாகரத்து தான்…’ என்று  அரசல்புரசலாக விசாரித்ததில், அவனுக்குக் கிடைத்த செய்தியில் அவன் அனுமானித்தது.

‘அப்படின்னா நான் நினைப்பதில் என்ன தவறு?’ என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான் ராகவ்.

ராகவின் மனம் திக்குத் தெரியாத காட்டில் பயணிப்பதுப் போன்ற உணர்வைக் கொடுத்தது.

‘ஒரு பெக் அடிச்சிட்டு யோசிப்போம்.’ என்ற முடிவோடு, அவன் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை லாவகமாகத் திருப்பி ஒரு மிதியில் கிளப்பி அவர்கள் வீட்டருகே இருக்கும் பாரை நோக்கிச் சென்றான் ராகவ்.

அவன் வண்டியைக் கிளப்பிய விதத்தில், அவனைக் கடந்து சென்ற பெண்கள் அவனறியாமால், அவனைப் பார்த்தனர்.

“ஹண்ட்ஸாம்…” என்று ஒரு கல்லூரி படிக்கும் இளம் பெண் முணுமுணுக்க, “ஆவ்ஸம்…” என்று மற்றொரு பெண் அவளைக் கேலி செய்ய அந்தப் பெண்கள் ராகவைப் பற்றிப் பேசிக்கொண்டு, கலகலவென்று சிரித்தபடி அந்த சாலையைக் கடந்தனர்.

ராகவ் இதைக் கவனிக்கும் மனநிலையில் இல்லை. அவன் எண்ணம், ஆர்த்தியைச் சுற்றி வந்தது.

ராகவ், தனக்குத் தேவையான மதுவை வாங்கிக் கொண்டு மாதுவின் சிந்தனையில் மூழ்கினான்.

ராகவ் மதுவிற்கு அடிமை என்றெல்லாம் சொல்ல முடியாது. அவ்வப்பொழுது, இது போல் குழப்பமான மனநிலையில் மது அருந்துவது உண்டு.

மதுவிற்கு அடிமை ஆகுவது தான் தவறு, அருந்துவது இல்லை என்பது ராகவின் கொள்கை.

போதை ஏற, ஏற ராகவிற்குத் தன் சிந்தனை ஓட்டத்திற்கு நிதானம் வருவது போன்ற எண்ணம் தோன்றியது.

‘திருமணம் ஆகியிருந்தால் என்ன? மறுமணம் அத்தனை குற்றமா? ஆர்த்தி ஒத்துப்பாளா?’ என்ற கேள்வி அவன் மனதில் தோன்ற, ‘என்னை வேண்டாம் என்று ஒருத்தி சொல்லுவாளா?’ கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்த ராகவின் மனதில் ஒரு எள்ளல் கேள்வி தோன்றியது.

ஆர்த்தியின் நினைவுகள் மேலோங்க, ஆர்த்தி அவன் அறையிலிருந்து வெளியே செல்லுகையில் இடுப்போடு அசைந்த அவள் கூந்தலில் அவன் மனம் சிக்கியது.

அவள் அழுத்தமான முகம், எச்சரிக்கை விடுத்த அவள் கண்கள், அவன் சிந்தனை எல்லை மீறாமல், ராகவின் சிந்தனையை அங்கே நிறுத்தியது.

ஆளுமையான குரல், அவள் உச்சரித்த சொற்கள், அவள் கம்பீரம் அவனை ஒரே நாளில் அவள் பக்கம் இழுத்திருந்தது.

ஆனால்?

‘நான் எப்படிக் காதல் சொல்லுவேன்? ரோஜாக்கள் கொடுத்தா?’ என்ற கேள்விகள் அவன் மனதில் தோன்ற, ‘ச்… ச்ச… அந்த வயதை அவள் கடந்துவிட்டாள்.’ என்ற எண்ணத்தோடு மறுப்பாகத் தலை அசைத்தான் ராகவ்.

‘நான் என்ன தப்பா பண்ணுறேன்? லவ்… ஜஸ்ட் லவ்…’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் ராகவ்.

“ஷி இஸ் எ டிவோர்சி… நான் பண்ணப் போறது மறுமணம்.” என்று முணுமுணுத்தான் ராகவ்.

அவன் மூளை வேகவேகமாக சிந்திக்க ஆரம்பித்தது.

‘இதைப் பக்குவமா கையாளனும். சடார்னு காதல், ப்ரோபோசல்ன்னு இறங்குற விடலைப் பையன் விஷயம் இல்லை.’ என்று சிந்திக்க, ‘எப்படி? எப்படி? எப்படி?’ என்ற கேள்வி அவன் முன் பூதாகரமாக நின்றது.

தலை விண்விண்னென்று வலிக்க மீண்டுமொரு கோப்பை மதுவை வாங்கினான் ராகவ்.

அவன் கை தட்டி, அந்தக் கோப்பை சுக்கு நூறாக உடைய, அவன் முன் ஒரு குழந்தை சிரித்துக் கொண்டு கை தட்டி சிரிப்பதுப் போன்ற பிரமை தோன்றியது.

‘குழந்தை… எப்படி மறந்தேன்? சிங்கிள் பேரன்டிங் என்னும் வார்த்தையில், அவள் டிவோர்சி என்று தோன்றிய எனக்கு, குழந்தையின் சிந்தனை ஏன் எழவில்லை?’ என்ற கேள்வியோடு சலிப்பாக உணர்ந்தான் ராகவ்.

அவன் முகத்தில் குழப்பம் நிறைந்த சிந்தனை ரேகைகள்!

குழப்பத்தோடு நித்திரையில் ஆழ்ந்தவன், ஒரு முடிவோடு கண்விழித்தான்.

புது அலுவலகத்தில், ராகவ் மேல் அனைவருக்கும் நன்மதிப்பு உண்டானது.

ஆள் பாதி, ஆடை  பாதி என்று கூறுவது போல், அவன் ஆடைகள் அத்தனை நேர்த்தியாக, ஸ்டைலாக இருந்தது.

ஆள் பாதி, நடவடிக்கை மீதி என்பது அவன் கொள்கை போல! அதையும் செவ்வனே செய்ததால், அந்த அலுவலகத்தில் அவனுக்கென்றுப் பெண் ரசிகைகள் உருவாகியது.

ஆர்த்தி, வெளிப்படையாக யாரிடமும் விமர்சனம் செய்யாவிட்டாலும், அவள் மனம் அவனை ரசிக்க ஆரம்பித்தது.

ராகவ் ஆர்த்தியைத் தொலைவில் நிறுத்தாமலும், அதே நேரத்தில் எல்லை மீறாமலும் கண்ணியமாக நடந்து கொண்டான். ஆர்த்தியின் அறிவும், மனமும் அவனை மெச்சும் அளவுக்கு!

நாட்கள் அதன் போக்கில் நகர, ராகவிற்கு ஆர்த்தியின் மேல் உள்ள மையல் அதிகரித்துக் கொண்டே போனது. ஆர்த்தியின் மனதில் அவனுக்கான மதிப்பீடு உயர்ந்து கொண்டே போனது.

வார இறுதியில் மாலை நேரம், ஆர்த்தி அவர்கள் வீட்டில் மீராவோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.

யாரோ கதவைத் தட்ட, “வாங்க ராகவ்…” என்று ஆர்த்தி அவனை வீட்டிற்கு எதிர்பாராதப் பதட்டத்தோடு வரவேற்றாள்.

‘யார்?’ என்று ஆர்த்தியின் தாய் பார்வதி கண்களால் வினவ, “ஆபீஸ் சீனியர் மேனேஜர்.” என்று தன் தாயின் காதில் கிசுகிசுத்தாள் ஆர்த்தி.

‘இங்க எதுக்கு வந்திருக்காங்க?’ என்று பார்வதி கண்களாலே வினவ, ‘தெரியலை…’ என்று உதட்டைப் பிதுக்கினாள் ஆர்த்தி.

அவர்கள் சம்பாஷணையைப் பார்த்தும் கண்டுகொள்ளாதவன் போல், சாக்லேட், விளையாட்டுப் பொருட்கள் கொடுத்து குழந்தையைக் கவர்ந்திருந்தான் ராகவ்.

இது வரை, ஆண் வாசம் தெரியாமல் வளர்ந்த மீரா, பொம்மைகளோடுத் தன்னை அரவணைத்துக் கொண்ட ராகவிடம் சட்டென்று ஒட்டிக்கொள்ள, ‘இவன் வசியக்காரன்!’ என்று அவனை மெச்சுதலாய் பார்த்தாள் ஆர்த்தி.

ராகவ் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, பார்வதியைப் பார்க்க, அவன் தன்னிடம் பேச விரும்புவதைக் கணித்துக் கொண்டவர், “ஆர்த்தி, சாருக்கு காபி கொடு.” என்று கூறித் தன் மகளைச் சமையல் அறைக்குள் அனுப்பினார்.

சமையலறையில் அடுப்பில் பாலை வைத்தபடி, அவர்கள் பேச்சைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.

“எனக்கு சுத்தி வளைச்சுப் பேசத் தெரியாது. நான் உங்களை மாதிரி குடும்ப வளர்ப்பில் வளர்ந்தவன் இல்லை.” என்று ஆரம்பித்து, தன் வாழ்க்கை முறையைச் சுருக்கமாகக் கூறி முடித்தான் ராகவ்.

ராகவ் கூற வருவதை ஓரளவு கணித்துக் கொண்டாலும், ‘பூனை குட்டி அதுவாக வெளியே வரட்டும்.’ என்ற எண்ணத்தோடு மெளனமாக அமர்ந்திருந்தார் பார்வதி.

பேச்சு வாக்கில், தான் ஆர்த்தியை திருமணம் செய்ய விரும்புவதைப் பளிச்சென்றுக் கூறினான் ராகவ்.

கையிலிருந்த காபி டம்ளர் உருண்டோட, சமையலறையிலிருந்து அவசரமாக ஓடி வந்தாள் ஆர்த்தி.

“குழந்தை என் பொறுப்பு.” என்று ஒற்றை வரியை ஆர்த்தியிடம் கூறிவிட்டு, “உங்கள் சம்மதத்திற்காக காத்திருக்கிறேன்.” என்று கூறிவிட்டு, அவன் வந்த வேலை முடிந்துவிட்டது என்பது போல் அங்கிருந்துக் கிளம்பினான் ராகவ்.

ராகவ் சென்றதை உறுதி செய்துவிட்டு, கதவை அடைத்தார் பார்வதி.

“பார்த்தியா, தனியா இருக்கிற பொண்ணுக்குப் பாதுகாப்பு இருக்கா? இதுக்கு தான் நான் படிச்சுப் படிச்சு சொன்னேன்.” என்று தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு அழுதார் பார்வதி.

தன் மகள் அமைதியாக, யோசனையாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, “நீ ஏண்டி இப்படி அமைதியா இருக்க? இந்த வேலை வேண்டாம் விட்டுறு.” என்று பார்வதி கூற, “அம்மா! இப்ப என்ன நடந்திருச்சுன்னு இப்படி அல்லோலப்படுற?” என்று ஆர்த்தி  நிதானமாகக் கேட்க, அந்தத் தாய் தன் மகளை அதிர்ச்சியாகப் பார்த்தார்.

ஆர்த்தி மேலும் பேசியதைக் கேட்ட பார்வதி, ‘தன் உயிர் இந்த நொடி போய்விடாதா?’ என்ற அதிர்ச்சியோடு தன் மகளைப் பார்த்தார்.