Mogavalai – 9

coverpic_mogavalai-76be5415

அத்தியாயம் – 9

பார்வதி அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

‘குழந்தையை வச்சிப் பிரச்சனை வருமோ? நாம வேணா, மீராவைத் தனியா கூட்டிட்டுப் போய்ட்டா என்ன?’ என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது.

‘மீரா இப்படி ஏக்கத்தோடு வளர்றதை விட, பாட்டி கிட்டச் சொகுசா வளரட்டுமே? கண்ணிலேயே படலைன்னா இந்த ஏக்கமே வராதே!’ என்ற சிந்தனை ஓட, பார்வதி தயங்கியபடியே பேச்சை ஆரம்பித்தார்.

“ஆர்த்தி! நான் மீராவை கூட்டிகிட்டு தனியா போகலாமுன்னு பாக்குறேன்.” என்று பார்வதி கூற, ராகவ் தன் கவனத்தைக் குழந்தையிடமிருந்து, ஆர்த்தியிடம் திருப்பினான்.

ஆர்த்தி தன் தாயைப் பதட்டமாகப் பார்க்க, ஆர்த்திக்கு இந்த விஷயம் தெரியாது என்று கணித்துக் கொண்டான் ராகவ்.

“அம்மா… எதுக்கு?” என்று ஆர்த்தி கேட்க, “மீரா என் கிட்ட வளர்ந்தா நல்லாயிருக்கும்முன்னு நான் நினைக்குறேன். இங்க பக்கத்திலேயே ஒரு வீட்டைப் பாருங்க. ஆபிஸ் போகும் பொழுது ரதியையும் விட்டுப் போங்க. நான் ரெண்டு பேரையும் பார்க்குறேன்.” என்று பார்வதி கூற, அங்கு மௌனம் நிலவியது.

அந்த மௌனத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, “நானும் எத்தனை நாள் தான் மக வீட்டோடு இருக்கிறது? முதலில் கல்யாணமான புதுசு. அப்புறம் நீ உண்டாயிட்ட…” என்று ஆர்த்தியைப் பார்த்தபடி தன் பேச்சை முடித்தார் பார்வதி.

“அத்தை சுத்தி வளைச்சுப் பேசாதீங்க. எனக்கு சுத்தி வளைச்சுப் பேசுறதுப் பிடிக்காதுன்னு உங்களுக்குத் தெரியும். மீராவுக்கு இந்த வீட்டில் என்ன பிரச்சனை?” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தான் ராகவ்.

ராகவ் நேரடியாகக் கேட்டதும், பார்வதியும் மேலும் மழுப்ப விரும்பவில்லை.

“நான் ஏற்கனவே தனியா இருக்கேன்னு தான் சொன்னேன். இப்ப மீராவுக்காகத் தான் தனியா இருக்கேன்னு சொல்றேன்.” என்று பார்வதியும் நேரடியாகக் கூறினார்.

“என்ன பிரச்சனைன்னு நான் கேட்டேன்?” என்று ராகவ் பிடிவாதகமாக நிற்க, “நீங்க மீராவை நல்லா பார்த்துக்குறீங்க. அவ மேல பாசமா தான் இருக்கீங்க. உங்க நிலைமையில் நான் இருந்தா கூட இந்த அளவுக்கு நடத்திருப்பேனான்னு தெரியலை. ஆனால், மீரா மேல இந்தப் பாசம் இப்படியே  நீடிக்கணுமுன்னு நான் நினைக்கிறேன். எந்தப் பிரச்சனையும் வந்திரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று பார்வதி பட்டும் படாமலும் பேசி முடித்தார்.

“ஆர்த்தி… உங்க வீட்டில யாரும் நேரடியாகப் பேச மாட்டிங்களா? இப்படித்தான் சுத்தி வளைச்சுப் பேசுவீங்களா?” என்று ராகவ் எகிறினான்.

“மீராவுக்கு என்ன குறை? அவளுக்குத் தேவையானது எல்லாம் கிடைக்கத்தானே செய்யுது? அப்பான்னு நான். நல்ல ஸ்கூல். விளையாட்டு சாமான். போதாததுக்கு ரெகுலர் செக்- அப். என்ன பிரச்சனைன்னு கேட்குறேன்?” என்று எழுந்து நின்று கத்த ஆரம்பித்தான் ராகவ்.

பார்வதி, ஆர்த்தி இருவரும் மௌனிக்க, “உங்க அம்மாவை விடு. நீ சொல்லு மீரா நல்லா தானே இருக்கா?” என்று ராகவ் ஆர்த்தியிடம் கேட்டான்.

ஆர்த்தி பதில் பேசவில்லை. “அப்ப… உன் மனசிலும் குறை இருக்கு?” என்று ராகவ் கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

ராகவ் ஏற்படுத்திய சத்தத்தில், மீரா மிரண்டு தன் பாட்டியிடம் ஒட்டிக்கொண்டாள்.

ராகவின் கோபத்தைத் தாண்டியும், ‘மீரா ஏன் என்னை வந்து கட்டிக்கொள்ளவில்லை? பயத்தில் பாட்டி கிட்ட தானே போறா? முன்னாடி என் கிட்ட வருவாளே?’ என்ற கேள்வி ஆர்த்தியின் மனதில் எழுந்தது.

ராகவ் மேலும் மேலும் இவர்களைத் திட்ட, குழந்தை ரதி அதன் பங்கிற்குச் சத்தம் செய்ய, ஆர்த்தி மீராவின் எண்ணத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரதியை நோக்கி ஓடினாள்.

மீரா பாட்டியிடம் ஒட்டிக் கொண்டாலும், தன் தாயை இப்பொழுது ஏக்கமாகப் பார்த்து உதட்டைப் பிதுக்கினாள்.

ராகவின் கேள்விக்குப் பதில் கொடுக்க அங்கு யாருமில்லை. பார்வதி மீராவைச் சமாதானம் செய்வதில் மும்முரமாக, ஆர்த்தி ரதியோடு மூழ்கிவிட்டாள்.

கோபம், வெறுப்பு, சலிப்பு என அனைத்தும் மேலோங்க, ராகவ் தன் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினான்.

‘இந்த பைக்ல வரும் பொழுது, ஆர்த்தி அப்படி எல்லாம் நான் ஒட்டுறதை பாராட்டுவா? இப்ப பேசினாலே அவ வாயில் மீரா தான் வருது. மீரா… மீரா… மீரா… ச்ச…’ என்று சலிப்பாக உணர்ந்தான் ராகவ்.

“மீரா ஏக்கமா இருக்கா… மீரா பேச மாட்டேங்குறா… மீராவையும் கொஞ்சுங்க… ஐயோ இதைத் தவிர எதாவது பேசுறாளா? ஒன்னும் கிடையாது.” என்று முணுமுணுத்தபடி வண்டியை சடாரென்றுத் திருப்பினான் ராகவ்.

ராகவின் பைக் ஒரு ஆட்டோவை உரசிக் கொண்டு நிற்க, “சாவுகிராக்கி… வேற வண்டி கிடைக்கலை.” என்று ஆட்டோக்காரர் ராகவைத் திட்ட, ராகவ் வண்டியை விட்டு இறங்கி ஆட்டோக்காரனிடம் சண்டைக்குச் சென்றான்.

“யாரைப்பார்த்து என்ன சொல்ற?” என்று ராகவ் குரலை உயர்த்த, ஆட்டோகார்கள் ஒன்று சேர அங்குச் சண்டை வலுத்தது.

வீட்டில் காட்ட முடியாத கோபத்தை ராகவ் இங்கு காட்ட, ராகவும் மேலும் மேலும் எகிறினான். சாலையில் கூட்டம் கூட, ராகவ் பொறுமையைக் கடைப்பிடிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டான்.

ராகவ் இறங்கி, சண்டையை விடுத்து அந்தக் கோபத்தை பைக்கில் காட்டிக் கொண்டு மது அருந்தும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

கோப்பை கோப்பையாக மது ராகவுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது.

‘ராகவ்… திஸ் இஸ் யுவர் லிமிட்…’ என்று அவன் அறிவு எச்சரிக்கை செய்ய ஆரம்பித்தது. மனமோ கோபத்தில் அதி வேகமாகத் துடித்தது.

அவன் கோபம் மட்டுப்படவில்லை. ‘நோ… நோ… நோ… நோ…’ என்று ராகவின் அறிவு கத்தினாலும், “ஒன் மோர் பெக்.” என்று ராகவின் உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தது.

ராகவ் அவன் அளவைத் தாண்டிக் குடித்துக் கொண்டே இருந்தான்.

அதே நேரம் வீட்டில், ‘ஐயோ… நான் பேசி இருக்கக் கூடாதோ?’ என்று பார்வதியின் உள்ளம் தவித்தது.

ஆர்த்தி ரதியை மடியில் வைத்துக் கொண்டு, விட்டத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஆர்த்தி! நான் இன்னைக்கிப் பேசி இருக்கக் கூடாதோ?” என்று பார்வதி பரிதாபமாகக் கேட்டார்.

“இல்லைம்மா… பேசினது சரி தான். ரதி மேல பாசம் இருக்கலாம். அதுக்காக அந்தப் பாசம் மீராவைக் காயப்படுத்தக் கூடாதில்லை?” என்று ஆர்த்தி தன் தாயிடம் நியாயம் கேட்டாள்.

“மீராவை வைத்து உங்களுக்குள்ள சண்டை வந்திருமோன்னு பயந்தேன். இப்ப நான் பேசின பேச்சை வைத்து சண்டை வருமோ?” என்று கவலையோடுக் கேட்டார் பார்வதி.

“அம்மா! ரொம்ப கவலை படாதீங்க. பார்த்துக்கலாம்.” என்று ஆர்த்தி கூற, தளர்ந்த நடையோடு அவர்கள் அறைக்குச் சென்ற பார்வதி மீண்டும் திரும்பி வந்து, “உன் புருஷன் குடிப்பாரோ?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டார்.

ஆர்த்தி தன் தாயை அதிர்ச்சியோடுப் பார்க்க, “சில விஷயங்களை மூடி மறைக்க முடியாது ஆர்த்தி.” என்று கூறிவிட்டு அவர்கள் அறைக்குள் சென்றுவிட்டார் பார்வதி.

‘இன்னைக்கும் குடிச்சிட்டு வருவாங்களோ? அம்மாவுக்கு வேற விஷயம் தெரிஞ்சிருக்கு. கோபமா வேற போயிருக்காங்க.’ என்று வரிசையாகக் கேள்விகள் ஆர்த்திக்கு எழ, அவள் மனதில் அச்சம் பிறந்தது.

அவள் கேள்விகளுக்குப் பதிலளிப்பது போல், ராகவ் தள்ளாடியபடியே வந்தான்.

“ஆர்த்தி… ஆத்தி… ஆத்தி…” என்று வாசலில் நின்றபடியே கத்தினான். அவன் வாய் குழறியது.

ராகவின் குரலைக் கேட்டதும், அவன் குடித்திருக்கிறான் என்று அனுமானித்துக் கொண்ட பார்வதி, குழந்தை ரதியையும்  தன் அறைக்குள் படுக்க வைத்தார்.

சட்டை பட்டன் கழன்று, தலை முடி குலைந்து, அவன் கம்பீரம் தொலைந்து சாட்ஷாத் ஒரு மொடா குடிகாரனைப் போல் காட்சி அளித்தான் ராகவ்.

பார்வதி எதுவும் பேசவில்லை. தன் மகளை மேலும் கீழும் பார்த்தார்.

‘நீ அமைத்துக் கொண்ட வாழ்க்கை.’ என்று குற்றச்சாட்டு தன் தாயில் கண்களிலிருந்ததோ என்ற பரிதவிப்பு ஆர்த்தியின் கண்களிலிருந்தது.

அவர் அறைக்குள் சென்றுக் கதவை மூடிக் கொண்டார்.

“ஏன் இப்படி வாசலில் நின்னு கத்துறீங்க?” என்று கேட்டுக்கொண்டே ராகவை உள்ளே அழைத்து வந்து கதவைச் சாத்தினாள் ஆர்த்தி.

“ஓ! உள்ளே வந்து கத்தணுமா?” அர்த்தமில்லாமல் வெளி வந்தது அவன் பேச்சு.

தன் தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது ஆர்த்திக்கு.

“ஏன் இவ்வளவு குடிக்கறீங்க?” என்று ஆர்த்தி அவனை அவர்கள் அறைக்குள் அழைத்துச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கேட்க, “ஓ… அதையும் நீ தான் சொல்லுவியோ?” என்று குதர்க்கமாகக் கேட்டான் ராகவ்.

ராகவ் அப்படியே கட்டிலில் சரிய, அவனை யோசனையாகப் பார்த்தாள் ஆர்த்தி.

அங்கு மயான அமைதி நிலவியது.

திடீரென்று, எழுந்து அமர்ந்த ராகவ், “நான் மீராவை நல்லா பார்த்துக்கலை?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டான்.

“இப்ப உங்க அம்மாவும், மீராவும் தனியா போனா ஊர் உலகம் என்ன சொல்லும்? நம்ம ஆபிசில் என்ன சொல்லுவாங்க?” என்று ஆக்ரோஷம் குறைந்து யோசனையாகப் பதட்டமாகக் கேட்டான் ராகவ்.

“அவனுக்குன்னு குழந்தை வந்தவுடன், மூத்த தாரத்துப் பிள்ளையை வெளிய அனுப்பிட்டான்னு சொல்ல மாட்டாங்க?” என்று கோபத்தோடுக் கேட்க, ஆர்த்தி எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தாள்.

“சொல்லு… சொல்லு… பதில் சொல்லு டீ.” என்று ஆர்த்தியைச் சுவரோடு சாய்த்து அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்துக் கேட்டான் ராகவ்.

அவனிடமிருந்து விடுபடப் போராட ஆரம்பித்தாள் ஆர்த்தி. ‘கத்த வேண்டும்…’ என்று அவள் அறிவு கூற, ‘அம்மாவுக்குத் தெரிந்தால்….’ என்ற எண்ணமும் சேர்ந்தே எழ, ஆர்த்தி மௌனமாக நின்றாள்.

“உங்க அம்மா, மீரா இங்க தான் இருக்கணும்.” ராகவின் குரல் உச்சஸ்தாயில் ஒலித்தது.

அவன் ஆர்த்தியை மெல்ல மெல்ல நெருங்க, ஆர்த்தியின் கண்களில் பயம் தெரிய, தன் கோபத்தை விடுத்து, “நான் மீராவை நல்லா தானே பாத்துக்குறேன்?” என்று பரிதாபமாகக் கேட்டான் ராகவ்.

‘கவலை நமக்கு மட்டுமில்லை. ராகவுக்கும் அழுத்தம் தானோ?’ என்று ஆர்த்தி சிந்திக்க ஆரம்பித்தாள்.

வயது தந்த பக்குவத்தில், செல்வமணியின் பக்கத்தைச் சிந்திக்காத ஆர்த்தி இந்த முறை ராகவின் பக்கத்தையும் சிந்திக்க ஆரம்பித்தாள்.

ஆனால், அவள் சிந்தனையைத் தடுப்பது போல், “ஊவா…. ஊவா…” அறை முழுதும் வாந்தி எடுத்து வைத்தான் ராகவ்.

ஆர்த்தி அவனையும் சுத்தம் செய்து அறையும் சுத்தம் செய்து குறுக்கு நொடியச் சோர்வாக நின்றாள். மிகவும் அருவருப்பாக உணர்ந்தாள் ஆர்த்தி. அவளுக்கும் பிரட்டிக் கொண்டு வந்தது.

ராகவ் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். ராகவின் அழகு, கம்பீரம், அவன் கெட்டிக்காரத்தனம் என அனைத்தும் உறங்கி விட்டது போன்ற எண்ணம் ஆர்த்திக்குத் தோன்றியது.

மனதின் சோர்வையும், தன் உடலில் சோர்வையும் போக்க குளியலறைக்குள் நுழைந்தாள் ஆர்த்தி.

குளியலறயில் ஆர்த்தியின் அழகை ஆராதிக்க, ராகவால் அமைத்துக் கொடுக்கப்பட்ட ஆளுயரக் கண்ணாடி அவளைப் பார்த்துச் சிரிப்பது போன்ற பிரமை தோன்ற அந்த கண்ணாடியைக் கூர்ந்து பார்த்தாள் ஆர்த்தி.

 சிக்கென்ற அவள் உடல் இப்பொழுதில்லை.  இரண்டு குழந்தைகளை ஈன்றெடுத்த தடங்களை அவள் உடல் சுமந்து கொண்டு நின்றது.

‘தாய்மையின் பொலிவு மகிழ்ச்சி இருந்திருந்தால் வந்திருக்கலாமோ? என்னவோ?’ என்ற யோசனை ஓடியது ஆர்த்திக்கு!

தன் முகத்தைக் கூர்ந்துப் பார்த்தாள். நிறம் சற்றுக் குறைந்திருந்தது. கவலையின் வெளிப்பாடாக அவள் கண்களைச் சுற்றிப் புதிதாகத் தோன்றிய  கருவளையங்கள், மையிட்ட அவள் விழிகளின் காந்தத்தைக் குறைந்திருந்தது.

‘நான் எதை நோக்கி ஓடினேன்?’ என்ற கேள்வியை  ஆர்த்தி சிந்திக்காவிட்டாலும், குழப்பங்கள் நிறைந்த வாழ்க்கை அவள் முன் இத்தகையக் கேள்வியை வைத்தது.