Nee Enaku Uyiramma–EPI 1

Nee Enaku Uyiramma–EPI 1
அத்தியாயம் 1
கோலாலம்பூர், மலேசியா.
‘ச்சீசியென்! பெந்தான்!’(பைத்தியம்,முட்டாள்)
மனதிற்குள்ளேயே, தன் முன்னால் நின்றிருக்கும் டீம் லீடரை தனது தந்தை மொழியில் வறுத்தெடுத்தவாறே கம்யூட்டரின் கீபோர்ட்டை லொட்டு லொட்டென தட்டிக் கொண்டிருந்தான் நே(நா)தன் லிம் வீ செங். திட்டுக்களும் வசை மொழிகளும் மனதிற்குள் மட்டும் தான்! வெளியில் முகம் நிர்மலமாகவே இருந்தது.
டீம் லீடர் மேகன் கையைப் பிசைந்தப்படி நின்றிருந்தாள். பேசி சமாளிக்கக் கூடிய தவறை அவளும் அவள் குழுவும் செய்திருக்கவில்லையே! அவர்களின் நிறுவனத்துக்கு இழுக்கையும், மிகுந்த பண நஷ்டத்தையும் அல்லவா தந்திருக்கிறார்கள். டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ரிங்காக, கீ போர்டை தட்டுவதை நிறுத்தி விட்டு காலை அட்டேண்ட் செய்தான் நேதன்.
“யெஸ்!”
“பாஸ், ரோடேண்ட் எலெக்ட்ரிகல்ல இருந்து எம்.டியோட செகரட்டரி கூப்பிட்டுருக்காங்க! அவங்க பாஸ் பேசனுமாம்”
“கனேக்ஷன் குடு லீனா!”
“இதோ!” என்ற ரிஷெப்சனிஸ்ட் அழைப்பை இணைத்தாள்.
“ஹலோ” என ஆரம்பித்து பேசிக் கொண்டே இருந்தான் நேதன்.
அவன் முகம் இறுக்கமாக இருந்தாலும் வார்த்தைகள் மட்டும் தேன் தடவியது போல வந்து விழுந்தன. அந்தப் பக்கம் கேட்கப்பட்ட கேள்விகளுக்க சமாதானமாக பதில் அளித்து, நடந்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு இரு பக்கமும் திருப்தியாகும்படி தீர்வைக் கொடுத்து அழகாய் முடித்து வைத்தான் அந்த சம்பாஷனையை.
நேதன் லிம், சிண்டியன் என அழைக்கப்படும் சீன இந்திய கலவையின் வாரிசு. அவனது அப்பா சீனர், அம்மா தமிழச்சி. காதலித்து மணந்துக் கொண்ட அவர்களுக்கு நேதன், நேட்டலி என இரு வாரிகள். அப்பா இவனை நேதன் எனவும் மகளை நேட் எனவும் அழைக்க அவனது அம்மாவோ நாதன் எனவும் மகளை நேத்துக்குட்டி எனவும் அழைத்து தங்கள் பிள்ளைகளுக்கு பாதி தமிழ் ரத்தம் ஓடுகிறது என நிரூபிப்பார்.
படித்து முடித்து அப்பா சேர்த்து வைத்திருக்கும் கணக்கில்லாத பணத்தில் சொந்த நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து, ஆரம்பத்தில் சறுக்கினாலும் இப்பொழுது லாபத்தோடு நடத்தி வருகிறான் நேதன். எஸ்.ஏ.பி டெக்னோலோஜி எனும் அவனின் நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்கு எஸ்.ஏ.பி சிஸ்டத்துக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறது. மெனுபேக்ஷரிங் கம்பேனிகள் பல இந்த சிஸ்டத்தை தான் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அதற்கென ஆட்களை வேலைக்கு வைப்பது பெரிய செலவாய் ஆகிவிடுவதால், இந்த மாதிரி நிறுவனங்களிடம் அவுட்சார்ஸிங் முறையில் டேட்டா கீ இன், சிஸ்டம் அப்கிரேட் போன்ற வேலைகளை ஒப்படைத்து விடுவார்கள். அப்படித்தான் ரோடெண்ட் எலெக்ட்ரிகல் இவர்களின் சேவையைப் பயன்படுத்தி இருந்தார்கள். அவர்கள் நிறுவனத்தின் சிஸ்டத்தை அப்கிரேட் செய்யும் போது சிஸ்டம் கராப்ட் ஆக, ப்ராடக்ஷன் லைன் ஸ்தம்பித்து விட்டது. பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சிஸ்டத்தை அப் செய்து ரன் செய்து விட்டாலும், பொருட்களின் லேட் டெலிவரியால் நட்டம் ஏற்பட்டு விட்டது ரோடெண்டுக்கு. அதைத்தான் அழகாய் பேசி பிரச்சனையை சரி செய்துக் கொண்டிருந்தான் நேதன்.
பேசி முடித்து மேகனைப் பார்த்தவன்,
“அடுத்த டெர்ம் காண்ட்ரேக்ட் ரினியூ செய்ய மாட்டேன்னு சொல்லிட்டாங்க. அவங்க கம்பேனிக்கு பத்து லப்டாப் கிப்டா தரேன்னு சொல்லி, அடுத்த காண்ட்ரேக்டுக்கு நமக்கு வர வேண்டிய லாபத்துல பாதிய விட்டுக் கொடுத்து செட்டில் பண்ணிருக்கேன்! இப்ப சொல்லுங்க மேகன், அந்த நஷ்டத்த நான் எப்படி சரி பண்ண? உங்களோட சம்பளத்துலயும் உங்க டீம் மெம்பர் சம்பளத்துலயும் கை வைக்கவா?” என அழுத்தமான குரலில் ஆங்கிலத்தில் கேட்டான் நேதன்.
“பாஸ், இப்படி நடக்கும்னு..”
ஒற்றைக் கையைத் தூக்கி, நிறுத்து என்பது போல சைகை செய்தவன்,
“நம்ம வேலைல எப்பவும் பிளான் ஏ, பிளான் பீ, பிளான் சீன்னு மூனு ஆப்ஷன் வச்சிக்கனும்னு உங்களுக்கு ட்ரைன் செஞ்சப்பவே நான் சொல்லிக் கொடுத்துருக்கேன். கம்ப்யூட்டர் எப்ப மனுஷன கை விடும்னு யாராலயும் கணிக்க முடியாது மேகன். நீங்க சரியா பிளான் பண்ணாம செஞ்ச இந்த அப்கிரேட்னால எவ்ளோ நஷ்டம்! பண நஷ்டத்த விடுங்க! இந்த ஃபீல்ட்ல பேர் கெட்டுப் போச்சுனா, எப்படி நாம முதலிடத்துல நிக்கறது? காளான் மாதிரி நெறைய ஐ.டி நிறுவனங்கள் முளைக்குது இப்போ. நாம கொஞ்சம் கேர்லெஸா இருந்தா தூக்கி சாப்பிட்டுட்டு போய்கிட்டே இருப்பாங்க மேகன்! இதுவே லாஸ்டா இருக்கனும் இப்படி மிஸ்டேக் வரது! சம்பளத்துல நான் கை வைக்கல! ஆனா இந்த வருஷ போனஸ் உங்களுக்கும் உங்க டீமுக்கும் பெர்பாமென்ஸ் பேசிஸ்ல குறைச்சுத்தான் வரும். நவ் யூ மே கோ” என்றவன் மீண்டும் கணினியின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
சம்பளத்தில் கை வைக்கவில்லை என்பதே நிம்மதியாக இருக்க, குரலை உயர்த்திக் கத்தாமல் அழகாய் தனது கண்டனத்தைப் பதிவு செய்து தவறுக்கு தண்டனையையும் அளித்தவனை மனதிலேயே எப்பொழுதும் போல மெச்சிக் கொண்டாள் மேகன். அடுத்த முறை எந்த வித தவறும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் தீர்மானத்துடன் தனது இடதுக்குப் போனாள் அவள்.
சற்று நேரம் வேலையைப் பார்த்தவனுக்கு காபி குடிக்க வேண்டும் போல இருந்தது. இந்த துறையில் இருப்பவர்களுக்கு காபி தானே மனதையும் உடலையும் சுறுசுறுப்பாய் வைத்திருக்கும் தேவ பானம். அவர்கள் பேண்ட்ரியிலேயே காபி மேக்கர் இருந்தது. அவனது ரிசப்ஷனிஸ்ட் காலையிலேயே அதை ரிலோட் செய்து வைத்திருப்பாள். என்னமோ இன்று வெளியே போய் காபி அருந்த வேண்டும் போல இருக்க, லேப்டாப்பை ஸ்லீப் மோடில் போட்டு விட்டு எழுந்தான் நேதன்.
கைகள் இரண்டையும் மேலே தூக்கி சோம்பல் முறித்தவன், டேபிள் மேல் கிடந்த வாலட்டையும் போனையும் கையில் எடுத்துக் கொண்டான். அவர்கள் நிறுவனம் கோலாலம்பூரின் மிக பரபரப்பான புக்கிட் பிந்தாங் என அழைக்கப்படும் இடத்தில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் இருந்தது. இருபது மாடி கட்டிடத்தில் இவர்கள் பத்தாவது மாடியில் இருந்த மொத்த ப்ளோரையும் எடுத்திருந்தார்கள். சுமார் ஐம்பது பேர் இவன் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். கீழே இறங்கும் முன் அவர்கள் ப்ளோரின் டாய்லட்டுக்கு சென்றான் நேதன். நேச்சர் காலை முடித்து விட்டு சிங்கில் கை கழுவியவன், அதன் முன்னே இருந்த கண்ணாடியில் தனது பிம்பத்தைக் கூர்ந்துப் பார்த்தான்.
மொட்டைத் தலை( முப்பத்தைந்து வயது ஆகும் போதே முன் மண்டையில் சொட்டை விழ ஆரம்பிக்க, அதை மொட்டையாக்கி ஸ்டைலாக காட்டி இருந்தான்), ப்ரவுன் வர்ண மேனி வண்ணம் (அப்பாவின் மஞ்சளும், அம்மாவின் மாநிறமும், அம்மா வழி தாத்தாவின் கருப்பும் கலந்து அவனுக்கு அந்த நிறத்தைக் கொடுத்திருந்தது), அகன்ற நெற்றியும் வயதின் ஏற்றத்தால் அதில் தெரிந்த சில கோடுகளும், அம்மா கொடுத்த கூரான மூக்கும், அப்பா கொடுத்த குட்டி கண்களும், நல்ல வளர்த்தியும், எனக்கு நாற்பதானாலும் எக்சர்சைஸ் செய்பவனடா நான் எனும் உடல் வாகும் என பார்ப்பதற்கு மிக நன்றாகவே இருந்தான் நேதன்.
ஆனாலும் முடி சொட்டை விழுந்து விட்டதில் ரொம்பவே வருத்தம் அவனுக்கு. அவனது அப்பாவையும் அம்மாவையும் பார்க்கப் போகும் போதெல்லாம் அதையே சொல்லி வருத்தப்படுவான். அவனது அப்பாவின் வம்சத்தில் எல்லோருமே சொட்டை என்பதால்,
“ம்மா! ஏன்மா டாடிய போய் லவ் பண்ணீங்க? அவர் குடும்பத்துல என்னென்ன குறை இருக்கு, சொட்டை இருக்கா, ப்ளட் ப்ரஷர் இருக்க, டையபட்டிஸ் இருக்கான்னு இப்படி எல்லாம் ஆராஞ்சி பார்த்துட்டு அப்புறம் கல்யாணம் செஞ்சிருக்கனும். இப்போ பாருங்க உங்க செல்ல மகன் தான் சொட்டையால சஃபர் பண்ணறேன்” என பொருமுவான்.
அவன் அம்மா ஜானகியிடம் தமிழில் தான் பேசுவான். சீனரை மணந்தாலும் தனது பாரம்பரியம், மொழி எதையும் விட்டுக் கொடுக்காமல் வாழும் ஜானகியின் ஸ்ட்ரீக்ட் கட்டளை அது.
“காதல் கண்ணை மறைச்சிடுச்சுடா மவனே! அதோட என் வீட்டுல பேச வந்தப்போ உங்க யேயே(தாத்தா) விக் வச்சிட்டு வந்திருந்தாருடா. கல்யாணம் முடிஞ்சு தான் பார்த்தேன் முன் மண்டையில் முடி இல்லைன்றத! இதையெல்லாம் பக்காவா மறைச்சு சதி செஞ்சிட்டாங்கடா மவனே, சதி செஞ்சிட்டாங்க” என தற்பொழுது பின்னால் மட்டும் கொஞ்சமாய் முடி இருக்கும் தனது கணவரை கண்ணால் வம்பிழுப்பார் ஜானகி.
தனிமையில் இந்த சொட்டைத்தான் உங்களுக்கு அழகு என கொஞ்சும் மனைவியின் குறும்பில் எப்பொழுதும் போல உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொள்வார் லிம். லிம்முக்கு தமிழ் நன்றாகவே புரியும், ஆனால் பேச மாட்டார். அவர் பேசுவது மழலை கொஞ்சுவது போல இருக்க, அதில் கூச்சம் அவருக்கு. தனது பதிலை ஆங்கிலத்திலோ மாண்டேரினிலோத்தான் சொல்வார். ஆனால் ஜானகி மாண்டரினிலும் வெளுத்து வாங்குவார். தன்னைப் பற்றி புகுந்த வீட்டில் யாரும் வம்பு வளர்த்தால், தமக்கு எப்படி புரியும் எனும் ஆதங்கத்திலேயே அந்த மொழியைக் கரைத்துக் குடித்திருந்தார் ஜானகி. காதலைக் கற்றுக் கொடுக்க வரும் கணவரிடம் காதல் மொழியோடு சீன மொழியையும் கற்றுத் தேர்ந்தார் அவர்.
“ஆம்பளைக்கு மண்டைக்கு மேலே உள்ள முடி முக்கியம் இல்ல ப்ரோ! மண்டைக்கு உள்ள இருக்கற மூளைத்தான் முக்கியம்! அது என் டாடிக்கு ரொம்பவே இருக்கு” என சொல்லியபடியே தனது தந்தையைக் கட்டிக் கொள்வாள் நேட்டலி.
“ஏய் நெத்திலி! டாடி மாதிரி சொட்டை விழறது எனக்குத்தான்! உனக்கு அம்மா மாதிரி நெளி நெளியா அடர்த்தியான கூந்தல் இருக்கவும் தான் என் வருத்தம் புரியல!” என அழகுக்கு வைத்திருக்கும் குட்டி தலையணையை அவள் மேல் வீசி அவள் முடியையும் பிடித்து இழுப்பான்.
“மை அம்மாவ அடிக்காதீங்க!” என ஓடி வந்து அவன் மேல் குதித்து சண்டை போடுவார்கள் நேட்டலி பெற்ற ஆண் குட்டி வானரங்கள் இரண்டும்.
அவர்களோடு ஹால் கார்ப்பேட்டிலேயே கட்டிப் புரண்டு சண்டைப் போட்டு விளையாடுவான் இவனும். இவன் வரும் நாட்களில் வீடு அல்லோல கல்லோலப்படும்.
நேட்டலி திருமணம் முடித்தும் தனது பெற்றோர்களுடனே வசிக்கிறாள். லிம்மின் செல்ல மகள் அவள். அவளால் தகப்பனை விட்டு விட்டு இருக்க முடியாது என காதலிக்கும் போதே காதலனிடம் சொல்லி இருந்தாள். திருமணம் முடித்ததும் அவள் கணவன் டேனியலோடு பிறந்த வீட்டிலேயே வாழ்கிறாள். டேனியலோடு மாதத்துக்கு ஒரு முறை வார இறுதியை அவன் பெற்றவர்களின் வீட்டில் கழித்து விட்டு வருவார்கள். இங்கேயும் ஜானகி தமிழ் கலாச்சார முறைப்படி மருமகனை தாங்குவதால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இனிமையாகவே போனது அவர்களின் வாழ்க்கை.
தனது குடும்பத்தைப் பற்றி நினைத்தப்படி சிறு புன்னகையுடன் லிப்டில் ஏறினான் நேதன். கீழ் தளத்துக்கு பட்டனைத் தட்டியவன், லிப்டில் ஒட்டி இருந்த விளம்பரங்களைப் பார்வையிட்டான். அதில் புதிதாக திறக்கப்பட்டிருந்த ஃபூட் ட்ரக் விளம்பரம் ஒன்று கண்ணைக் கவர்வது போல அழகாய் இருந்தது.
“சோல் கஃபே(soul café)! பேர் நல்லா இருக்கே! ட்ரை செய்வோமா?” என முணுமுணுத்தவன்,
“இல்ல வேணா! காபி நல்லா இல்லைனா எனக்கு தலை வலி வந்திடும். ஸ்டார்பக்ஸ்கே போவோம்” என முடிவெடுத்தான்.
கீழ் தளத்துக்கு வந்து அந்த பில்டிங்கை விட்டு வெளியேறி, பக்கத்து பில்டிங்கில் இருந்த மாலுக்குள் நுழைந்தான் நேதன். அங்கே கீழ் தளத்திலேயே ஸ்டார்பக்ஸ் கபே இருக்கும். அன்று பார்த்து அங்கே கியூ நீளமாக இருந்தது.
‘ம்ப்ச்! இந்த கூட்டத்துல வேய்ட் பண்ணி வாங்கறதுக்கு பேசாம அந்த புது கபேக்கே போவோம்’ என நினைத்தவன் அந்த மாலை விட்டு வெளியே வந்தான்.
அவர்கள் பில்டிங்குக்கு எதிரே ஒரு குட்டி கார்டன் ஒன்று இருந்தது. கண்ணை கவரும் பூச்செடிகளும், பசெலென மரங்களும், உட்கார கல் பெஞ்சுகளும் என அழகாக இருக்கும் அந்த கார்டன். வேலை ப்ரேக் டைமில் பலர் அங்கே அமர்ந்து உள்ளத்தையும் உடலையும் புத்துணர்வாக்கிக் கொண்டு போவார்கள்.
அந்த கார்டன் அருகேத்தான் முளைத்திருந்தது புதிய ஃபூட் ட்ரக். சற்று பெரிய காரவேன் போல இருந்த வாகனத்தை கபேவாக மாற்றி இருந்தார்கள். அதன் முன்னே இரண்டு குட்டி மேசைகள் போட்டு, நாற்காலிகளும் போட்டு வைத்திருந்தார்கள். அமர்பவர்களை வெயில் தாக்காமல் இருக்க நிழற்குடைகளும் மேசைக்கு அருகே வைக்கப்பட்டு அழகாய் செட் செய்யப்பட்டிருந்தது அவ்விடம்.
அருகே போகும் போதே காபியின் மணம் மூக்கை சுகமாய் நிரடியது. அந்த காராவேனை நெருங்கியவன், அதன் அருகே வைக்கப்பட்டிருந்த மெனு போர்டை பார்த்தான். அமெரிக்கானோ, மோக்கா, லாட்டே, சாய், க்ரீன் டீ, கமோமைல் டீ என வெளிநாட்டு ஐட்டங்களோடு உள்ளூர் தே தாரேக்கும்(இழுத்து ஆற்றப்படும் தேநீர்) கூட இருந்தது.
கஸ்டமர் யாரும் இல்லாமல் இருக்க, நேராக ஆர்டர் செய்யும் இடத்துக்கு வந்து நிமிர்ந்துப் பார்த்தான் நேதன். அவன் முன்னே சிரித்த முகத்துடன் நின்றிருந்த ஒரு தமிழ் பெண்,
“செல்லத்துக்கு என்ன வேணும்?” என கேட்டாள்.
“என்னது!!!!! செல்லமா?” என அதிர்ந்துப் போனான் நேதன்.
(கதை சின்னதுதான்..எபியும் சின்னதா தான் இருக்கும். அடுத்த வாரத்துல இருந்து செவ்வாய் அண்ட் வெள்ளி வரும் இந்தக் கதை. லவ் யூ ஆல் ஸ்டே சேப்! போட போட படிச்சிடுங்க. கதை முடிஞ்சதும் லிங்க் ரிமூவ் ஆகிடும்)