Nee Enaku Uyiramma–EPI 10

Nee Enaku Uyiramma–EPI 10
அத்தியாயம் 10
வாழ்க்கை எப்பொழுதும் போல சீராக ஓடத் துவங்கியிருந்தது வேணிக்கு. கேஷவ் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்திருந்தான். அவனை பேபி சிட்டரில் விட்டுவிட்டு கபேவுக்கு வர ஆரம்பித்திருந்தாள் இவள். தம்பிகளும் புக்கேட்டில் இருந்து திரும்பி இருந்தார்கள். விஷயம் கேள்விப்பட்டு ஏன் இன்பார்ம் செய்யவில்லை என இவளைத்தான் கடிந்துக் கொண்டார்கள் இருவரும். பெரிய தம்பியின் மனைவி மட்டும் ப்ரைவெட்டில் பார்க்க எங்கிருந்து பணம் வந்தது என ஜாடைமாடையாய் கேட்க, மூலியாய் இருந்த கழுத்தை காட்டினாள் வேணி. அதற்கு மேல் அவள் வாய் கப்பென மூடிக் கொண்டது.
கபேவுக்கு தினமும் வந்தான் நேதன். கேஷவைப் பற்றி விசாரிப்பான், பொதுவாய் பேசுவான். வாய் திறந்து பதிலை சொல்லு என கேட்காவிட்டாலும் அவன் கண்ணில் இவள் சம்மதம் சொல்வாளா எனும் எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அன்று ஹாஸ்பிட்டலில் மணக்க சொல்லி அவன் கேட்க, வாயடைத்து நின்றிருந்தாள் இவள். அதிர்ச்சியில் இருந்து வெளியாகி மறுக்க நினைக்கும் நேரம்,
“பட்டுன்னு நோ சொல்லிடாதே வேணி! மெதுவா யோசிச்சுப் பார்த்துட்டு சொல்லு! ஒன்னும் அவசரமில்ல” என அவளை நிறுத்தியிருந்தான்.
அவன் கண்களில் தெரிந்த வலியைக் கண்டவளுக்கு, வேண்டாமென சட்டென சொல்லவும் முடியவில்லை. தன் ஆண்மைக்கு இழுக்கு வந்ததை தன்னிடம் சொல்ல எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என புரிந்தது அவளுக்கு. பட்டென மறுத்தால் அந்த காரணத்துக்குத்தான் மறுப்பதாக தோன்றிவிடக் கூடும் என நினைத்தவள் அமைதியாக இருந்துக் கொண்டாள்.
மனமும் மூளையும் நேதன் கேட்ட விஷயத்தை அக்கு வேரு ஆணி வேராக அலசி ஆராய்ந்தன. மூளையோ,
‘நல்ல சான்ஸ் வந்திருக்கு, கப்புன்னு புடிச்சு செட்டிலாகிடு! இத்தனை வயசுக்கு மேல நீ மாடு மாதிரி உழைக்க வேணாம்! மகனை முழுக்க முழுக்க கைக்குள்ள வச்சி வளர்க்கலாம்” என வேதமோதியது.
மனமோ,
‘தப்பு வேணி, ரொம்பத் தப்பு! உன் சுய லாபத்துக்காக அவனோட வாழ்க்கையில நுழையறது தப்பு. அவன் பட்ட மனக் கஸ்டத்துக்கு காதலோட இசைஞ்சு வாழற வைப்தான் தேவை. உன்னை மாதிரி குழந்தைன்னு பேக்கேஜோட வரவ தேவையில்ல’ எனும் நிதர்சனத்தை எடுத்து சொன்னது.
அதோடு இவள் தர லோக்கல், அவனோ ரிச்சு பார்ட்டி. பழக்க வழக்கங்களில் ஆரம்பித்து, படிப்பு, பதவிசு, பேசும் வார்த்தைகள் வரை மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருந்தது இருவருக்கும். எதனால் தன்னை மணக்கக் கேட்டான் என இன்னும் கூட புரியவில்லை பெண்ணுக்கு.
தன் எண்ணங்களுக்குள் உழன்றபடியே காபி மிசினை துடைத்துக் கொண்டிருந்தாள் வேணி. ப்ராமில் தூங்கிக் கொண்டிருந்த கேஷவ் சிணுங்க ஆரம்பித்தான். இரண்டு குட்டி ஃபேன் வைத்தும் அவனுக்கு வேர்த்து வழிந்தது. சின்னவனைத் தூக்கி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“பணம் குடுக்க ஒரு நாள் லேட்டானா கூட அந்த பேச்சு பேசறது! ஆனா வேலையை ஒழுங்காப் பார்க்கறது இல்ல! எனக்குன்னு வந்து அமைஞ்சிருக்குப் பாரு” என கேஷவின் பேபிசிட்டரை சன்னமான குரலில் கரித்துக் கொட்டினாள்.
அந்த பேபிசிட்டர் கேஷவோடு சேர்த்து இன்னும் மூன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவரின் வீடும் பக்கத்து அபார்ட்மேண்டில் இருப்பதால், கொண்டு விடவும் கூட்டி வரவும் வசதி எனத்தான் கேஷவை அங்கே விட ஆரம்பித்தாள். மாதம் நான்கு நூறுகளை சுளையாக வாங்கிக் கொள்வார் அவர். ஆனால் அடிக்கடி இப்படி எதாவது சாக்கு சொல்லி, பிள்ளையைப் பார்த்துக் கொள்ளாமல் லீவ் சொல்லி விடுவார். இவளுக்கு தலை வேதனையாய் இருக்கும். கபேவின் சின்ன இடத்தில் துருதுரு பாலகனை எவ்வளவு நேரம் தான் சமாளிக்க முடியும்! வேறு இடத்தில் விடுவது என்றால் விலை அதிகமாகும். இவளால் பட்ஜெட்டை சமாளிக்க முடியாது! அதனாலேயே பல்லைக் கடித்துக் கொண்டு அந்தப் பெண்மணியின் தொல்லையைப் பொறுத்துப் போனாள் வேணி. அவரின் கணவரோ, குழந்தையை அழைக்கப் போகும் போதெல்லாம் கண்ணசைக்காமல் இவள் முன்னழகையும் பின்னழகையும் வெறித்துக் கொண்டிருப்பார். இவளுக்கு மூச்சு முட்டிப் போகும்.
காரவேனில் இருந்து இறங்கியவள், மகனைத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு காற்றாட நடந்தாள்.
“என்னடா ராஜா, புழுக்கமா இருக்கா? இன்னிக்கு அம்மா சீக்கிரம் கடையடைச்சிடறேன்! நாம வீட்டுக்கு ஓடி போய்டலாம்! வாளில நெறைய தண்ணி ரொப்பி குளுகுளுன்னு விளையாடலாம்! இப்போ எஞ்சாமி அழுவாம இருப்பாராம்” என சமாதானப்படுத்தினாள்.
அழுகை குறைந்திருந்தாலும், தேம்பியபடியே இருந்தான் குட்டி. கஸ்டமர் ஒருவர் வர, வேறு வழியில்லாமல் மறுபடியும் காரவேனில் மகனுடன் நுழைந்தாள். ப்ராமில் அவனை அமர்த்தி வைத்து, கஸ்டமர் கேட்டதைக் கலக்கிக் கொடுத்தாள் வேணி. தன்னை இடுப்பில் இருந்து இறக்கி விட்டு விட்டாள் எனும் கோபத்தில், கூச்சலிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தான் சின்னவன்.
“கேஷவ கூட்டிட்டு வந்தியா? ஏன் அழறாங்க?” எனும் குரலில் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள் வேணி.
நேதன் தான் நின்றிருந்தான்.
“பேபி சிட்டருக்கு நெஞ்சு வலிக்குதாம்! இப்படி அடிக்கடி எதாச்சும் வலிக்கும்” என சலிப்பான குரலில் சொன்னாள் இவள்.
“அவர தூக்கிக் குடு வேணி! பாவமா அழறாரு”
உள்ளே இவன் கத்திக் கொண்டிருக்க, வெளியே இன்னும் சில கஸ்டமர் வந்திருக்க, வேறு வழியில்லாமல் கேஷவைத் தூக்கி நேதனிடம் கொடுத்தாள். அவனைப் பார்த்ததும் செல்லமாக தேம்பியவன், அவன் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். நேதனின் முகம் பூவென மலர்ந்துப் போனது.
“ஷியாவ் பை பெய் (குட்டி டார்லிங்)! அழாதீங்க. குட் பாய்தானே நீங்க! டோண்ட் க்ரை பேபி” என முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே பக்கத்தில் இருந்த பார்க்குக்கு அழைத்துப் போனான்.
சுகமாய் தழுவிய தென்றலும், நேதனின் அருகாமையும் சின்னவனின் அழுகையை நிறுத்தியது. மழலையில் கதைப் பேச ஆரம்பித்தவனை வாஞ்சையுடன் பார்த்திருந்தான் நேதன்.
‘என்ன வகை உறவிது? ஏன் பார்த்ததும் இவன் மேல் அன்பு சுரக்கிறது? முதல் நாள் இவன் சிரிப்புடன் கையாட்டியப் போதே, மனதில் இதமாய் உணர்ந்தேனே! ஒவ்வொரு முறையும் இவன் என் கழுத்தில் முகம் புதைக்கும் போது, என்னுள் ஏதோ ஒன்று விழித்துக் கொள்கிறதே! அதுதான் ஆண் என்பவன் உணரும் தாய்மையோ! இவன் வாழ்க்கையில், வளர்ச்சியில் நானும் ஓர் அங்கமாய் இருக்க வேண்டும் என மனம் பேராசைப்படுகிறதே! நடக்குமா? விடுவாளா இவன் அம்மா?’ என மனம் என்னென்னவோ எண்ணித் தவிக்க கரம் மட்டும் அவனை வருடுவதை நிறுத்தவில்லை.
சின்னவன் கொஞ்சம் ஆசுவாசமானதும் மீண்டும் வேணியிடம் தூக்கி சென்றான். அம்மாவைப் பார்த்ததும் போக மாட்டேன் என இவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான் கேஷவ்.
‘ஐயயோ முறைக்கிறாளே! அம்மா கல்யாணத்துக்கு ஓகே சொல்றதுக்குள்ள மகன் டிவோர்ஸ் வாங்கிக் குடுத்துடுவாரு போல!’
“எத்தனை மணிக்கு க்ளொஸ் பண்ணுவ வேணி?”
“இன்னிக்கு அஞ்சுக்குல்லாம் முடிச்சிடலாம்னு நெனைச்சேன்!” என சொல்லிக் கடிகாரத்தைப் பார்த்தாள்.
அதற்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. இந்த மாதிரி இக்கட்டான நிலை வருகையில் சின்னத்தம்பியின் மனைவி கேஷவைப் பார்த்துக் கொள்ள கைக் கொடுப்பாள். இன்று அவளும் ஹாஸ்பிட்டல்லுக்கு மாதாந்திர செக் அப் சென்றிருந்தாள்.
“காலையில இருந்து அந்தக் குட்டி இடத்துல அடைஞ்சிக் கிடக்கறார்ல, அதான் அன்கம்பிர்டபளா ஃபீல் பண்ணாறாரு”
“என் மகனுக்காக என் கிட்டயே சப்போர்ட்டுக்கு வரீயா?” என புன்னகையுடன் கேட்டாள் வேணி.
குழந்தையின் முதுகை வருடிக் கொண்டே, எங்கே வேணி கோபப்பட்டு விடுவாளோ எனும் சின்னப் பதட்டத்துடன் பேசியவனின் உடல் மொழி இவளுக்கு அவ்வளவு பிடித்தது.
“நான் வேணுன்னா என் ஆபிஸ்ல வச்சிருக்கவா இந்த டூ ஹவர்ஸ். அங்க ஏசி இருக்கு. அவர் உட்கார, நகரன்னு இடமும் விசாலமா இருக்கும்!”
“இல்ல நேதன்!”
“ப்ளீஸ் வேணி! நான் பத்திரமாப் பார்த்துப்பேன் இவர!”
நேதனின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த மகனைப் பார்த்தவள், வேறு வழியில்லாமல் சரியென தலையாட்டினாள். அவனது பொருட்கள் அடங்கி இருக்கும் பேக்கை கொண்டு வந்து நேதனின் தோளில் மாட்டி விட்டவள், மகனை நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டாள். நெருங்கிய பாவை மேல் வந்த வியர்வை கலந்த காபி மணம் நேதனை என்னவோ செய்தது. மகனைப் போல தாயும் எப்பொழுது தன் கழுத்தில் முகம் புதைப்பாள் எனும் எண்ணம் முளைக்க, சட்டென அவளிடம் இருந்து தள்ளி நின்றான் இவன்.
“அப்புறம் பார்க்கலாம் வேணி!” என குழந்தையுடன் கிளம்பியவன், மீண்டும் அவள் முன்னே வந்து,
“வேணி, இந்த சட்டர்டே சைனீஸ் நியூ இயர்(சீனப் பெருநாள்)! கண்டிப்பா எங்க வீட்டுக்கு நீ வரனும்” என அழைத்தான்.
“இல்ல நேதன்! அன்னைக்கு கபே ஆப் டே இல்ல” என மறுத்தாள் வேணி.
“கபே அடைச்சதும் டின்னருக்கு வா!”
“இல்ல” என இழுத்தவளை,
“அம்மா வீட்டுலத்தான் கொண்டாட்டம். அவங்கத்தான் உன்னையும் சின்னவரையும் கண்டிப்பா அழைக்க சொன்னாங்க! இந்த அழைப்புக்கும் நான் காத்திருக்கிற உன்னோட சம்மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல வேணி!” என்றவன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.
‘விட மாட்றானே!’ என நொந்தவள், அரை மனதாய் ஒத்துக் கொண்டாள்.
முகம் மலர,
“நானே சட்டர்டே நைட் ஏழுக்கு வந்து பிக்கப் பண்ணிக்கறேன் உன் இடத்துல” என திட்டமிட ஆரம்பித்தான்.
சரியென தலையசைத்து அனுப்பியவள், பெருநாள் குதூகலத்தில் இருந்தவன் மனதை உடைக்க வேண்டாமென முடிவெடுத்தாள். டின்னருக்குப் போய் விட்டு வந்து கட் அண்ட் ரைட்டாக இது சரிப்பட்டு வராது என சொல்லிவிட வேண்டும் என முடிவெடுத்தவுடன்தான் நிம்மதியாக இருந்தது வேணிக்கு.
(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்..லவ் யூ ஆல்)