Nee Enaku Uyiramma–EPI 4

189613085_863389437581725_4803627891963141566_n-0e7e9508

Nee Enaku Uyiramma–EPI 4

அத்தியாயம் 4

அடுத்த செவ்வாய் காலை எப்பொழுதும் போல பிசியாக போய்க் கொண்டிருந்தது வேணிக்கு. காலை காபிக்கும், நாசி லெமாவுக்கும் வரிசைப் பிடித்து நின்றார்கள் ஆபிஸ் செல்பவர்கள். சிரித்த முகமாகவே, வந்தவர்களை கவனித்தாள் இவள். வேலையிடத்தில் இவர்கள் எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கக் கூடுமோ இன்று! நாளை ஆரம்பிக்கும் போது, ஏதோ தன்னாலான புன்னகையையும், ஹேவ் எ குட் டே எனும் உற்சாக வார்த்தையையும் காபியுடன் சேர்த்துக் கொடுத்தாள் பெண்.

அன்று காலையில் தான் தாய்லாந்தில் இருந்து வந்திருந்தான் நேதன். நேராய் வீட்டுக்குப் போய் குளித்து கிளம்பி வேலையிடத்துக்கு வந்திருந்தான். காரை பார்க் செய்தவன், உடனே வேணியைத் தேடி வந்துவிட்டான். சற்று தள்ளி நின்று கூட்டம் குறைவதற்காக காத்திருக்க ஆரம்பித்தான் நேதன். முகம் முழுக்க களைப்புத் தெரிந்தாலும் இன்முகமாய் பம்பரமாய் சுழன்றவளை பார்த்தப்படி நின்றிருந்தான் இவன். எப்பொழுதுமே அவள் ஒரு உற்சாகப் பந்துதான். பள்ளியின் ஓட்டப்பந்தய வீரங்கனையான இவள் கால் என்றுமே நடந்துப் பார்த்ததில்லை நேதன். ஓட்டம், எப்பொழுதுமே ஓட்டம்தான்!

அன்று போனில் தன் கணவனின் இறப்பைப் பற்றி அவள் சொன்ன நிமிடம், இவனுக்கு என்ன பேச என சத்தியமாய் தெரியவில்லை.

“ஐம் சாரி வேணி” என உணர்ந்து சொன்னான் நேதன்.

அந்தப் பக்கம் பெருத்த அமைதி. தப்பான விஷயத்தைக் கிண்டி விட்டோமோ எனும் கவலை வந்துவிட்டது இவனுக்கு. நேரில் இருந்தாலாவது முக பாவத்தை வைத்து என்ன நினைக்கிறாள் என கணித்து அதன்படி எதாவது பேச முடியும். தூரத்தில் இருந்துக் கொண்டு என்ன செய்வது, சொல்வது என தயங்கி அமைதியாய் இருந்தான் இவனும். இரு பக்கமும் மூச்சு விடும் சத்தம் மட்டுமே. அதற்குள் குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டது.

“நேதன், இவன் எழுந்துட்டான். அப்புறம் பேசலாமா?” என அவள் கேட்க இவனும் சரி என்று விட்டான்.

பாய் சொல்லி இருவரும் பேச்சை முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு இவனும் நேரில் பேசிக் கொள்ளலாம் என அழைக்கவில்லை.   

கூட்டம் குறைந்ததும் இவன் போய் வாங்குமிடத்தில் நின்றான். அவனைப் பார்த்ததும் ஒட்ட வைத்த சிரிப்பு இல்லாமல் நிஜமாகவே புன்னகைத்தாள் வேணி.

“என்ன சார், தாய்லாந்து மசாஜ்லாம் எப்படி இருந்தது? மஜாவா இருந்ததா?” என கிண்டலாய் கேட்டாள்.

“அது ஒன்னுத்தான் குறைச்சலா இருக்கு இப்போ! நானே நிக்க நேரம் இல்லாம மீட்டிங், மீட்டிங்னு ஓடிட்டு இருந்தேன்! இதுல மசாஜாம், மஜாவாம்!” என கடுப்பாய் சொன்னான் அவன்.

“விடு, விடு! அடுத்த தடவைப் போறப்போ மசாஜ் பண்ணிக்கலாம். இப்போ கூல் டவுன். சரி சொல்லு என்ன ட்ரிங்க் வேணும்?”

“டீ ஒன்னு! சுகர் இல்லாம!”

“நாசி லெமாக் வேணுமா? ரொம்ப நல்லா இருக்கும்”

“இல்ல வேணா! காலையிலே சோறு சாப்பிட முடியல இப்போலாம். நெஞ்சிலேயே நிக்கிது! ஒரு ஹேம் சாண்ட்விச் குடு வேணி”

“வயசானா இப்படிலாம் பல கஸ்டங்கள் வரத்தான் செய்யும் நேதன் சார்” என அவனை கிண்டலடித்தப்படியே அவன் கேட்டதை தயாரித்துக் கொடுத்தாள் இவள்.

“உனக்கு மட்டும் இளமை திரும்புதாக்கும்! ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான். எங்க ஜீனியர்?” என பணம் செலுத்தி அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டே கேட்டான்.

“அவர பேபி சிட்டர் கிட்ட விட்டுடுவேன்! அவங்களுக்கு எதாவது எமெர்ஜென்சினாதான் நான் கூடவே வச்சிக்கிற மாதிரி ஆகிடும்”

“பையன் பேர் என்ன?”

“அவன் முடி சுருள் சுருளா இருக்கறதால கேசவன்னு வைக்கனும்னு எனக்கு ஆசை! என் தம்பிங்க, அது ஓல்டா இருக்கு, கேஷவ்னு வைக்கலாம்னு சொல்லிட்டானுங்க. நானும் சரி நம்ம கையில தான் கேஷ் இல்ல அவன் பேர்லயாச்சும் இருக்கட்டும்னு அதையே வச்சிட்டேன்” என சொல்லி புன்னகைத்தாள் வேணி.

மெலிதாய் புன்னகைத்தவன்,

“இன்னிக்கு எத்தனை மணிக்கு கபே க்ளோஸ் செய்வ நீ?” என கேட்டான்.

“எப்பவுமே லாஸ்ட் ஆர்டர் ஏழு வரைக்கும்தான்!”

“சரி! ஹ்ம்ம் வந்து வேணி, இன்னிக்கு என் கூட டின்னர் வரியா? ரெண்டு பேரும் பேசி கேட்ச் அப் பண்ணிக்க நெறைய இருக்கே!” என தயக்கத்துடன் தான் கேட்டான் நேதன்.

“முடியாது”

“ஏன், ஏன்? நாம ப்ரேண்ட்தானே? டின்னர் சாப்பிட கூடப் போகக் கூடாதா?” என படபடத்தான் இவன்.

“அதுக்கில்லைடா நேதன். கேஷவ எட்டு மணிக்குள்ள போய் தூக்கிடனும். அவனுக்கு எப்படி டைமிங்லாம் தெரியும்னு தெரியலடா, எட்டுக்கு மேல ஆனா அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சிடுவான்” என தன் நிலையை விளக்கினாள் வேணி.

“ஓ அதுக்குத்தான் தயக்கமா! கேஷவையும் நம்ம கூட டின்னருக்கு கூட்டிட்டுப் போகலாம் வேணி!” என சுலபமாக தீர்வை சொன்னான் நேதன்.

“அப்போ சரி! ப்ரீ சாப்பாடு கிடைச்சா யார் வேணாம்னு சொல்வாங்க!”

“நான் பே பண்ணறேன்னு சொல்லலியே! நீயும் தானே வேலை செய்யற! ரெண்டு பேரும் ஷேர் செஞ்சிக்கலாம் பில்லை”

“டேய் போடா கஞ்ச பிசிநாரி! இதுக்கு நான் என் வீட்டுல போய் ரிலேக்‌ஷா சாப்பிட்டுக்குவேன்” என சிரித்தாள் வேணி.

அவனும் சிரித்தப்படியே பாய் சொல்லி விட்டு அலுவலகத்தை நோக்கிக் கிளம்பினான். நடந்து போகும் நேதனையே இமைக்காமல் பார்த்திருந்தாள் வேணி.

“முன்னல்லாம் என்னை கண்டாலே எரிஞ்சு விழுவான். இப்போ சிரிச்சுப் பேசிட்டுப் போறான்! காலம் தான் எவ்வளவு மாற்றத்தைக் கொடுக்குது நம்ம வாழ்க்கையில” என முணுமுணுத்தவள் அடுத்து வந்த கஸ்டமரை கவனிக்க ஆரம்பித்தாள்.

தாய்லண்டில் கிடைத்த பிஸ்னஸ் டீல் பற்றிய டிஸ்கஷன், எந்த டீம் எதை செய்ய வேண்டும் என முறைப்படுத்துதல், தேவையான பட்ஜெட் என அன்று மூன்று மணி வரைக்கும் வேலை நெட்டி முறித்தது நேதனுக்கு. ஆரம்பக்கட்ட பணிகளை சரிப்பார்த்து ஒதுக்கி டீம் லீடர்களின் பொறுப்பில் விட்டு விட்டால், அதற்கு மேல் மேற்பார்வை மட்டும் இவன் பார்த்தால் போதும்.

 

வேலையை ஓரளவு சீர் படுத்திய பிறகே பசி உணர்வு வந்தது இவனுக்கு. இன்னும் பத்து நிமிடத்தில் காண்பரேன்ஸ் கால் ஒன்று இருப்பதால், தனது ரிஷப்சனிசிடம் லன்ச் வாங்கி வருமாறு உதவி கேட்டான் நேதன். அவள் வாங்கி வந்த உணவை சாப்பிட்டப்படியே போனை எடுத்துப் பார்க்க, வேணியிடம் இருந்து மேசேஜ் வந்திருந்தது.

“எத்தனை மணிக்கு? எந்த இடம்?”

இவனுக்கு மேசேஜ் அனுப்பி வளவளப்பதில் எல்லாம் பொறுமை இல்லை. உடனே கால் செய்தான் அவளுக்கு.

“வேணி, பிசியா?”

“இல்லடா! இப்போ க்ரவுட் குறைவுதான். லஞ்ச் ஹவர் தாண்டிருச்சுல்ல. இன்னும் ஓன் ஹவர்ல பிசியாகிடுவேன்”

“நீ ஷாப் க்ளோஸ் பண்ணதும், நான் பிக்கப் பண்ணிக்கவா உன்னை? அப்புறம் நாம கேஷவ போய் ஏத்திக்கலாம்”

“இல்ல நேதன்! என்னோட காரை பக்கத்துலத்தான் பார்க் செஞ்சிருக்கேன். எந்த ரெஸ்டாராண்ட்னு சொல்லு! நாங்களே வந்திடறோம்”

“டின்னர் முடிய லேட் ஆகலாம்! நைட்ல நீயும் பையனும் தனியா ட்ரைவ் செஞ்சு போறதுல எனக்கு இஸ்டமில்ல வேணி. இட்ஸ் நாட் சேப்! வேணும்னா இப்படி செய்யலாம், நீ பையன பேபிசிட்டர்ல இருந்து ஏத்திட்டு வீட்டுக்குப் போய் கிளம்பி நில்லு! உன் இடத்துல இருந்து நான் பிக்கப் செஞ்சிக்கிறேன் உங்கள. அப்படியே டின்னர் முடிஞ்சதும் ட்ராப் செஞ்சிடுறேன். எனக்கு அட்ரஸ் மேசேஜ் செய் இப்போ! இன்னும் ப்யூ மினிட்ல மீட்டிங் இருக்கு வேணி. சீ யூ லேட்டர்” என போனை வைத்து விட்டான்.

“அடேய்! யெஸ், நோன்னு சொல்ல எனக்கொரு சான்ஸ் குடுடா! படபடன்னு பேசி வைச்சிட்ட!” என முனகியவளுக்கு முகமெல்லாம் புன்னகை.

நேதன் சொன்ன இட்ஸ் நாட் சேப் எனும் வாசகம் அவ்வளவு பிடித்தது வேணிக்கு. சொல்லத் தெரியாத உணர்வொன்று மனதில் எழுந்து சுகமாய் உணர வைத்தது அவளை. இதுவரை இவர்களது பாதுகாப்பை இவள் தான் பார்த்துக் கொண்டாள். தம்பிகள் இருந்தாலும், தன்னால் ஹேண்டில் செய்ய முடியாத எமெர்ஜென்சி என்றால் மட்டுமே அவர்களை நாடுவாள் வேணி.

சரியாய் இரவு எட்டுக்கு நேதனிடம் இருந்து போன் வந்தது இவளுக்கு.

“வேணி, அபார்ட்மேண்ட் கீழ இருக்கேன்! வா”

“என்ன கார்?”

“பீ.எம்.டபில்யூ ப்ளேக் கலர், நம்பர் 111”

“சரி!” என்றவள், மகனைக் கையில் தூக்கிக் கொண்டாள். அவனுக்குத் தேவையான பொருட்களை ஒரு பேக்கில் வைத்து அதை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டாள்.

கீழே இவள் இறங்கி வர, நேதன் தனது கார் ஹேட்லைட்டை அடைத்து திறந்து சிக்னல் காட்டினான். வேணி கார் அருகே நடந்து வர, இவன் கீழே இறங்கி பேக்கை வாங்கிக் கொண்டான்.

“குட் ஈவ்னிங் வேணி, கேஷவ்” என புன்னகைத்தவன், அவளுக்கு கார் முன் கதவைத் திறந்து விட்டான்.

அவள் ஏறி அமர்ந்ததும் கதவை சாற்றி விட்டு, பேக்கை பின் சீட்டில் வைத்தான். அதன் பிறகே காரை கிளப்பினான்.

“எங்க போறோம்?” என கேட்டாள் வேணி.

“சாப்பிட” என சொல்லி புன்னகைத்தான் இவன்.

“கேஷ் ராஜா! அங்கிள் ஜோக் பண்ணிட்டாங்களாம்! எங்க சிரி பார்ப்போம்” என தன்னைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த மகனிடம் பேசினாள் வேணி.

“சிச்சி” என கத்தியவன் பூப்பூ என எச்சிலை ஊதினான்.

அவள் அணிந்திருந்த மஞ்சள் ப்ளவுஸ் ஒரு பக்கமாய் எச்சிலால் ஈரமாக,

“டேய் டீஷூ! டீஷூ குடு ப்ளிஸ்!” என நேதனிடம் கேட்டாள் வேணி.

கியர் அருகே வைத்திருந்த டிஷூ பாக்ஸில் இருந்து உருவிக் கொடுத்தவன்,

“உங்கம்மாட்ட சொல்லி வைங்க கேஷ்! இனிமே என்னை டீஷூன்னு கூப்டாங்கன்னா அடி இடி மாதிரி விழும்னு” என எரிச்சலாக சொன்னான் நேதன்.  

“ஏய், அது என் டயலோக்!”

“ஆமா, ஆமா! அந்த டயலோக்க உனக்கும் உன்னோட பாய் ப்ரேண்டுக்கும் மட்டும் பட்டா போட்டுக் குடுத்துருக்காங்க! அந்த டுரியான்(வெளியே முள் மாதிரி இருக்கும் மலேசியாவின் பழங்களின் ராஜா) மண்டையன் ஸ்கூல் வெளிய என்னை கார்னர் பண்ணத மறக்க முடியுமா? ‘என் வேணிக்கு நீ ரொம்ப டார்ச்சர் குடுக்கறியாம்! என்னடா, அடி இடி மாதிரி வேணுமா’ன்னு கேட்டு முடிக்கறக்குள்ள நான் குடுத்த அறையில ஓடியே போய்ட்டான்!”

“முன்னால் பாய்ப்ரேண்ட்னு சொல்லு! உன் கிட்ட அடி வாங்கிட்டு வந்த அன்னைக்கே அவன் கூட ப்ரேக் ஆப் பண்ணிட்டேன்” என சிரித்தப்படி சொன்னாள் வேணி.

காரை ட்ராபிக் லைட்டில் நிறுத்தியவன், திரும்பி வேணியைப் பார்த்தான். வெளியில் இருந்து வந்த விளக்கு வெளிச்சத்தில் வரைந்து வைத்த ஓவியமாய் தெரிந்தார்கள் அம்மாவும் மகனும். குட்டி அவள் மார்பில் சாய்ந்து மழலையில் என்னன்னவோ மிழற்றியபடி வர, இவள் புன்னகையுடன் அவன் தலை மேல் கன்னத்தை வைத்திருந்தாள். கைகளோ பாதுகாப்பாய் மகனை அணைத்திருந்தது. பள்ளியில் தனக்கு தலைக் குடைச்சல் கொடுத்த வேணியும் இவளும் ஒரே ஆள்தானா எனும் சந்தேகமே வந்தது இவனுக்கு. என்னவோ இந்த காட்சி அழகாய் அவன் மன பீடத்தில் பதிந்துப் போனது.

இவன் இடம் ரிசர்வ் செய்திருந்த ரெஸ்டாரண்டை நெருங்கியதும், காரை நிறுத்தினான் நேதன். அருகே நெருங்கிய வேலட் பார்க்கிங் ஆளிடம், சற்றுப் பொறு என கைக்காட்டியவன் இறங்கி வேணியின் கதவு பக்கம் போனான். அவள் அதற்குள் கதவைத் திறந்திருக்க, குனிந்து கையை நீட்டினான் குழந்தையை வாங்க. அவனும் தாவிக் கொண்டு இவனிடம் வந்தான். வேணியும் இறங்கியவுடன், பின்னால் இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு கார் சாவியை வேலட் பார்க்கிங்குக்கு கொடுத்தான் நேதன்.

“லெட்ஸ் கோ!” என நடந்தவனிடம்,

“கேஷ நான் தூக்கிக்கிறேன்!” என்றாள் இவள்.

“அவர்தான் அழலியே! இருக்கட்டும்”

அது ஒரு வெஸ்டர்ன் ரெஸ்டாரண்ட். வண்ண விளக்குகளால் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது அவ்விடம். உள்ளே நுழையும் போதே கலவையான உணவு வாசனையோடு, மிதமான மியூசிக்கும் ஆளை வரவேற்றது.

நேதன் தாடையைப் பிடித்து, அங்கிருந்த பச்சை வர்ண லைட்டைக் காட்டி அவன் பாஷையில் என்னவோ சொன்னான் கேஷவ். இவளுக்குத்தான் தர்மசங்கடமாகிப் போனது. மகனின் தொடுகைக்கு எப்படி ரியாக்ட் செய்வானோ இவன் என கைகளைப் பிசைந்தாள் வேணி. நேதனோ புன்னகை முகமாக,

“க்ரீன் லைட்” என சின்னவனுக்குக் கற்பித்தான்.

நேதனின் செல்வ நிலை பள்ளிப் படிக்கும் போதே தெரியும் இவளுக்கு. அப்பொழுதே மவுண்ட்டன் பைக் என அழைக்கப்படும் சைக்கிளில் தான் பள்ளிக்கு வருவான். மழை நேரங்களில், அவன் அப்பா பென்ஸ் காரில் பள்ளிக்குக் கொண்டு வந்து விடுவார். மழையில் ஓட்டைக் குடைப் பிடித்துப் பள்ளிக்கு நடந்து வரும் இவள், பொறாமையாக பார்ப்பாள் இதையெல்லாம்.

நேதனை நேரில் பார்த்தது, போனில் பேசியது, டின்னருக்கு வர ஒத்துக் கொண்டது வரை, பழைய பள்ளித் தோழனை அல்லது பழைய பள்ளி எதிரியை என சொல்ல வேண்டுமோ, மீண்டும் சந்தித்த குஷியில் நடந்த நிகழ்வுகளாகும். ஆனால் என்ன கார் என கேட்டதுக்கு அவன் கொடுத்த பதிலில் சற்று நேரம் பேச்சற்று நின்றிருந்தாள் வேணி. மலைக்கும் மடுவுக்கும் இருக்கும் வித்தியாசம் போலத்தான் தனக்கும் நேதனுக்கும் இருக்கும் வித்தியாசம் என நன்றாக புரிந்தது இவளுக்கு. செல்வ நிலையாகட்டும், படிப்பாகட்டும், பழகும் விதமாகட்டும், எதிலுமே இருவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.

அப்படி இருக்க, இனிமேல் ஹாய் பாய் என மட்டும் வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தப் பின் தான் தனது அபார்ட்மேண்டில் இருந்து இறங்கி வந்தாள் வேணி. இன்று மட்டும் டின்னரை முடித்துக் கொண்டு இனிமேல் அவனைப் புன்னகையுடன் கடந்து விடுவதுதான் நல்லது என அவள் உள்மனம் சொன்னது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மேசையை வெய்ட்டர் காட்ட, அங்கே போய் அமர்ந்தார்கள் இருவரும். வேய்ட்டர் பேபி ச்சேர் எடுத்து வந்து வேணியின் அருகில் போட, அதில் கேஷவை அமர்த்தினான் நேதன். குட்டிப்பையன் சில வாரங்களாகத்தான் உட்கார பழகி இருந்தான். இடுப்பு வலிக்குமே என எடுத்து வந்திருந்த குட்டித் தலையணையை பேக்கில் இருந்து எடுத்து அவன் இடுப்புக்கு அணைவாகக் கொடுத்தாள் வேணி.

மெனுவை இவர்களிடம் கொடுத்து விட்டு, கிளாசில் ஆரஞ்சு ஜூசை ஊற்றி வைத்து விட்டுப் போனான் வேய்ட்டர்.

வெளியே வந்திருக்கும் குதூகலத்தில் கையைத் தட்டி தட்டி ஆர்ப்பரித்த சின்னவனை புன்னகையுடன் பார்த்திருந்த வேணி,

“கேஷ்க்கு இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருக்கா?” என அவன் கன்னத்தை வருடியபடி கேட்டாள்.

அவன் பாஷையில் கையை ஆட்டி என்னவோ பதில் சொன்னான் கேஷவ். உதட்டில் மெல்லிய முறுவலுடன் இருவரையும் பார்த்திருந்தான் நேதன்.

“வேணி சாப்பாடு வர லேட்டாகும்! ஆர்டர் செஞ்சிடலாமா முதல்ல” என கேட்டான் இவன்.

சரியென தலையாட்டியவள், மெனுவை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இன்னும் திட உணவாக கேஷவுக்குக் கொடுத்துப் பழக்கி இருக்காததால் அவனுக்கு நசித்த உருளைக்கிழங்கும் மஷ்ரும் சூப்பும் மட்டும் ஆர்டர் செய்தாள். வாயில் நுழையாத பெயரெல்லாம் அங்கே மெனுவாய் உட்கார்ந்திருக்க, தனக்கு நன்கு பரிச்சயமான ஃபிஷ் அண்ட் சிப்ஸை தேர்ந்தெடுத்தாள் வேணி. நேதனும் தனக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்ததும், அவர்களை விட்டு அகன்றான் வேய்ட்டர்.

“ஏன் வேணி, நெறைய வெரைட்டியான பீர்லாம் மெனுல இருக்கே! ஆர்டர் பண்ணிக்கோயேன்!” என குறும்பாய் நகைத்தான் நேதன்.

சட்டென மகன் அருகே நெருங்கி, அவன் காதைப் பொத்தியவள்,

“ஏன்டா ஏன்? ஸ்கூல் டைம்ல, ஒரே ஒரு தடவை எங்கப்பா வாங்கி வச்சிருந்த பீர் கேனை பேக்ல போட்டு எடுத்துட்டு வந்தேன். அதெல்லாம் சும்மா என் கேங்ல உள்ளவங்க கிட்ட சீன் போட மட்டும்தான். அதான் ஸ்போட் செக் வைச்சு என்னைப் பிடிச்சுக் குடுத்திட்டியே பாவி! அன்னைக்கு டிசிப்ளின் வாத்தி என்னை அடி வெளுத்தத தான் ஆனந்தமா ரசிச்சுப் பார்த்தியே நீ! அந்த அடிக்குப் பிறகு பீரென்ன, அதோட ரைமாகுற மோர் கூட எனக்கு அலர்ஜி” என அவனை முறைத்தப்படியே சொன்னாள்.

மகன் நெளியவும், அவன் காதில் இருந்து தன் கையை அகற்றினாள் வேணி. குழந்தையாக இருந்தாலும், தான் செய்த அட்டகாசங்கள் மகன் காதுக்குப் போவது பிடிக்காமல் அவன் காதை பொத்திய செயல் இவனுக்கு சிரிப்பைக் கொடுத்தது.

“உன் வண்டவாளத்த எல்லாம் பையன் கிட்ட இருந்து மறைக்கறியா நீ?”

“எந்த அம்மாவுக்குமே பிள்ளைங்க தங்கள ரோல் மாடலா பார்க்கனும்னு நெஞ்சளவு ஆசை இருக்கும்டா! அறியாத வயசுல தெரியாம நான் செஞ்சதெல்லாம் என் கேஷ்க்கு தெரியறதுல எனக்கு இஸ்டமில்ல. அவனுக்கு அப்பா அம்மா எல்லாம் நாந்தான். சோ இந்த டபுள் ரோலை பெர்பெக்டா செய்ய முடியலைன்னாலும், பெட்டரா செய்யனும்னு ஆசைடா எனக்கு. கண்டிப்பா செய்வேன்”

அவள் குரலில் தெரிந்த உறுதியில் கவரப்பட்டு தன் முன் அமர்ந்திருப்பவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தான் நேதன். குட்டியாய் கருப்பு பொட்டு, கண் ஓரத்திலும் வாய் ஓரத்திலும் உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியும் லேசான சுருக்கங்கள், கருப்பு, பழுப்பு, கொஞ்சமாய் வெள்ளை என கலவையான வர்ணத்தில் தோள் வரை இருந்த தலைமுடி, சிகப்பு வர்ண ப்ரேம் கொண்ட ஸ்பேக்ஸ், உடல் மொழியில் ஒரு வகை முதிர்ச்சி என அமரிக்கையாய் இருந்தாள் இந்த அம்சவேணி.

அவள் கணவனுக்கு என்ன ஆனது, இப்பொழுது யார் இவர்களைப் பார்த்துக் கொள்கிறார்கள், பாதுகாப்பாய் இருக்கிறார்களா என பல கேள்விகள் அவனுள்ளே! ஆனால் கேட்பதற்கு தயக்கமாய் இருந்தது நேதனுக்கு. நண்பனாய் நினைத்து பகிர்ந்துக் கொள்வாளா அல்லது இதையெல்லாம் கேட்க நீ யார் என ஒதுக்கி வைப்பாளா என யோசனையாய் இருந்தது. அவளே அவளைப் பற்றி சொல்லும் வரை பொதுவான விஷயங்களே பேசலாம் என முடிவெடுத்தான் நேதன்.   

“ம்மா, டீடீ” என கேஷவ் கையை ஆட்டிக் கேட்க, பேக்கில் இருந்து அவனது குட்டி டைனசோரை எடுத்துக் கொடுத்தாள் வேணி.

அதை வைத்து அவன் மொழியில் பேசியபடியே விளையாட ஆரம்பித்தான் குட்டி. இவர்கள் இருவரும் பள்ளி நாட்களை அசைப் போட்டனர்.

“நீ யார் கூடவும் டச்ல இல்லையா? அடப்பாவி!” என ஆச்சரியப்பட்டாள் வேணி.

“ஸ்கூல் முடிச்சதும் இங்க ஏ லெவல் முடிச்சுட்டு ஆஸ்திரேலியா போய்ட்டேன் படிக்க! வந்ததும் உடனே பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிட்டேன். ஆரம்பத்துல ரொம்ப ஸ்ட்ரகள் செஞ்சேன் வேணி ஒரு நிலைக்கு வர. எக்ஸ்பீரியன்ஸ் இல்லாம போட்ட பணம்லாம் லாஸ் ஆச்சு. பணம் அள்ளிக் குடுக்க அப்பா இருக்காரு, இவனுக்கு என்ன கஸ்டம்னு ரிலேட்டிவ்ஸ் கண்ட மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க! என் அப்பா ஒரு வார்த்தை கூட ஏன்டா இப்படின்னு கேக்கல. மறுபடியும் பணம் தரேன், எங்க என்ன மிஸ்டேக் விட்டன்னு கவனிச்சு செயல்படுன்னு அலட்டிக்காம சொன்னாரு. என் மேல அவ்வளவு நம்பிக்கை. ராப்பகலா உழைச்சி அவர்ட்ட வாங்கன பணத்தத் திருப்பிக் குடுத்தேன், பிஸ்னசையும் சக்சஸ் பண்ணேன். அந்த டைம்ல ப்ரேண்ட்ஸ், எண்டேர்டேயிண்ட்மேன் எதுவும் இல்ல! பிஸ்னஸ், பணம், என்னை நிரூபிக்கனும் இது மூனு மடும்தான் மைண்ட்ல! இப்போ என்னை நிரூபிச்சிட்டேன். ஆனா திரும்பிப் பார்த்தா, என் குடும்பத்தத் தவிர எனக்குன்னு யாரும் இல்ல பின்னால” என சொல்லி புன்னகைத்தான்.

“ஹ்ம்ம்! பணம் இருந்தாலும் கஸ்டம் இல்லைனாலும் கஸ்டம்தான் போல! சரி சொல்லு, உனக்கு எத்தனைப் பொண்டாட்டி, எத்தனை புள்ளைக்குட்டி?” என கேட்டாள் வேணி.

அவன் பதில் சொல்ல வருவதற்குள், உணவு வந்திருந்தது.

“சூடா சாப்பிட்றலாம் வேணி. இன்னைக்கு வேலை பிசியில கொஞ்சமா தான் சாப்பிட்டேன் லஞ்சுக்கு. செம்மையா பசிக்குது” என்றவன் தனது உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

குழந்தைக்காக ப்ளாஸ்டிக் தட்டு கொடுத்திருந்தார்கள். அதில் தனது தட்டில் இருந்து ப்ரைஸ் எடுத்து வைத்து மகனிடம் கொடுத்தாள். அவன் வாயில் வைத்து அதை அதக்கிக் கொண்டிருக்க, இவள் சாப்பிட்டப்படியே அவனுக்கும் சூப்பை ஊட்டினாள். மேஷ்ட் பொட்டேட்டோ நிறையவே வந்திருக்க, அதில் பாதியை அள்ளி நேதனின் தட்டில் வைக்கப் போனவள், பின் தயங்கி அவன் முகத்தைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் நிமிர்ந்துப் பார்த்தான்.

மெலிதாகப் புன்னகைத்தவன்,

“வை” என்றான்.

“சிலருக்கு இப்படிலாம் சாப்பாடு ஷேர் செஞ்சா பிடிக்காது! அதான் தயக்கம் வந்துடுச்சி”

“நான் அதெல்லாம் ஷேர் பண்ணிப்பேன்! இப்போ கூட உன் மகன் தட்டுல இருந்து ப்ரைஸ் கொஞ்சம் எடுக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்! எடுத்தா சத்தம் போடுவாறா?” என கேட்டப்படியே ஒரு ப்ரைஸை குட்டியின் தட்டில் இருந்து மெல்ல எடுத்தான் நேதன்.   

சின்னவன் உர்ரென முறைக்க,

“ப்ளிஸ்” என பாவமாக கேட்டான் இவன்.

முடியாது என்பது போல தலை அசைத்து,

“நோநோநோ” என சொன்னவன் தன் கையில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினான்.

“ஓ! நாமளே எடுக்கக் கூடாது போல! அவரே குடுப்பாராம்.” என புன்னகையுடன் சொன்ன நேதன், தன் கையில் இருந்த ப்ரைஸை அவனுக்கு ஊட்டி விட்டான்.

பின் இவன் ஆவென காட்ட, குட்டி தன் கையில் இருந்ததை அவன் வாயில் வைத்து விட்டு கைத்தட்டி சிரித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேணிக்கு தொண்டையை அடைத்தது. கேஷவுக்கு எப்பொழுதுமே ஆண்கள் என்றால் ஒரு வித ஈர்ப்பு. அவன் வாழ்க்கையில் ஆண் பிம்பம் என்பது அவனின் மாமாக்கள் இருவர்தானே. இவனைத் தூக்கி வைத்திருந்தால், அவர்களது குழந்தைகள் உரிமைப் போராட்டம் நடத்துவார்கள். பெரிய சண்டையே நடக்கும். அதனாலேயே தம்பிகள் வீட்டுற்குப் போவதையும் குறைத்து விட்டாள் வேணி. சின்னவனோ மார்க்கேட்டில் வேலை செய்யும் பங்களாதேஷ் பையன்களைப் பார்த்துக் கூட கையை நீட்டுவான் தூக்க சொல்லி. சற்று முன் நேதன் காரிலிருந்து தூக்கிய போது கூட அவ்வளவு குஷியாய் போனான் கேஷவ். இவள் எவ்வளவு தான் முயன்றாலும், அப்பா எனும் பிம்பத்தை நிரப்ப முடியாதோ எனும் சந்தேகம் அடி மனதை அரிக்க, நேதனிடம் இருந்து மகனின் கவனத்தை தன்னிடம் திருப்ப முயன்றாள் வேணி.

“கேஷ் குட்டி, அம்மாவுக்கு?” என கேட்க அவளுக்கு ஒன்றை எடுத்து வாயில் வைத்தான் குழந்தை.

அதன் பிறகு நேதன் பேச்சுக் கொடுக்க, திருப்பிப் பேசினாலும் கலகல சுபாவம் மறைந்திருந்தது அவளிடம். திடிரென என்ன ஆயிற்று இவளுக்கு என குழம்பிப் போனான் நேதன்.

“ம்மா பால்” என ஆரம்பித்தான் குட்டி. என்ன சாப்பிட்டாலும் அவனுக்கு கடைசியாக பால் வேண்டும்.

வரும் போதே பால் கலக்கி, தெர்மோஸில் ஊற்றி எடுத்து வந்திருந்தாள் இவள். பேக்கில் இருந்து பால் பாட்டிலை எடுத்தவள், பாலை அதில் ஊற்றினாள்.

அவள் இன்னும் பாதி கூட சாப்பிடாமல் இருக்க,

“நீ சாப்பிடு வேணி! நான் பால் குடுக்கறேன்” என முன் வந்தான் இவன்.

“இல்லை வேணா!” என்றவளின் குரல் தன்னையறியாமல் கோபத்தின் சாயலைப் பூசி இருந்தது.

அவள் தொனியில் குழப்பமாக பார்த்தான் நேதன். அவளைக் கோபப்படுத்தும்படி தான் என்ன செய்தோம் என புரியவில்லை அவனுக்கு.

“வந்து, நானே குடுக்கறதுல தான் எனக்கு திருப்தி. காலையில இருந்து பேபிசிட்டர்ல இருக்கான்ல, நைட் மட்டும் தானே என் கிட்ட இருக்கான். சோ எல்லாமே நானே செய்யறதுல எனக்கு ஒரு சந்தோஷம். ப்ளீஸ், தப்பா எடுத்துக்காதே”

புரிந்தது என்பது போல தலையாட்டியவன், குட்டியைத் தூக்கி அவளிடம் கொடுத்தான். அவன் வேணியின் நெஞ்சில் வாகாய் சாய்ந்துக் கொள்ள, மகனுக்கு பாலைப் புகட்டினாள் அவள். பாலைக் குடித்து முடித்தவன், நேதனை நோக்கிக் கையை நீட்டினான்.

வேணியின் முகத்தைப் பார்த்து,

“இப்பா நான் தூக்கிக்கலாமா? இல்லை அதுக்கும் கோபப்படுவியா?” என கேட்டான் நேதன்.

அவன் அப்படி கேட்டது அவளுக்கு ஒரு மாதிரியாக ஆனது. தங்களை சாப்பிட அழைத்து வந்து, இது வரை நல்லபடியாக நடத்தியவன் மீது தான் கோபம் கொண்டது தப்பு என புரிய, இவளே மகனை அவனிடம் நீட்டினாள்.

பிள்ளையை வாங்கிக் கொண்டவன்,

“நீ சாப்பிடு! நான் அப்படியே வேடிக்கைக் காட்டிட்டு வரேன்” என எழுந்துக் கொண்டான்.

அமைதியாய் உணவை ரசித்து ருசித்து உண்ண ஆரம்பித்தாள் அவள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே ஐஸ்க்ரீம் வைத்த லாவா கேக் வந்தது.

“மேடம்! சார் அவங்களுக்கு வேய்ட் பண்ணாம சாப்பிட சொன்னாரு!”

முகம் தானாய் மலர்ந்துப் போனது அவளுக்கு. வெளியே சின்னவனுடன் சாப்பிட வருவதென்பது எப்பொழுதுமே ஒரு போராட்டம்தான். அவனை கவனிப்பதில், இவளது உணவு ஆறி அவலாகிவிடும். கரண்டியைத் தூக்கிப் போடுவது, தன்ணீரை தட்டி விடுவது என அட்டகாசம் செய்வான். அவசர அவசரமாக தனது உணவை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவாள்.

இன்று மகன் நேதனுடன் இருக்க, ஐஸ்க்ரிம் கேக்கை ஆசையாக வாயில் வைத்து, நாக்கில் அதன் குளுமையை உணர்ந்து, மெல்ல விழுங்கி வைத்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கவும்தான், கேஷவுடன் வந்தான் நேதன்.

“கூலா ஐஸ்க்ரீம் சாப்பிட்டதும், கோபம்லாம் ஓடிப் போயிடுச்சா?” என கேட்டான் நேதன்.

அவனுக்கு சின்னதாய் புன்னகையையே பதிலாய் கொடுத்தாள் இவள்.

“இவருக்கு நைட்ல ஐஸ்கிரிம் கொடுப்பியான்னு தெரியல! அதான் நீ சாப்பிடர வரைக்கும் வெளியவே வச்சிருந்தேன். அங்க ஒரு குட்டி அலங்கார குளம் இருந்தது. அதப் பார்த்ததும் அப்படியே தாவறாரு. தண்ணினா ரொம்பப் புடிக்குமோ?” என கேட்டான் நேதன்.

“ஆமா! பெரிய பக்கேட்ல தண்ணிப் புடிச்சு கொஞ்ச நேரம் விளையாட விடுவேன், தண்ணில இருந்து வெளிய வரவே மாட்டேன்னு அடம் பண்ணுவான்.”

“அப்போ நம்ம வீட்டுக்கு வாங்க ரெண்டு பேரும். அங்க ஸ்வீம்மிங் பூல் இருக்கு. இவருக்கு கண்டிப்பா பிடிக்கும்” என அழைப்பு விடுத்தான் நேதன்.

“இல்ல, அதெல்லாம் வேணா நேதன்” என சட்டென மறுத்தாள் இவள்.

அவள் முகத்தை யோசனையாக ஏறிட்டான் நேதன். வீட்டுக்கு அழைத்து அவள் மேல் பாய்ந்து விடுவேன் என தப்பாக நினைக்கிறாளோ என நெருடலாக இருந்தது அவனுக்கு. அதன் பிறகு அப்படியே அமைதியாகி விட்டான் அவன்.

வேய்ட்டர் பில்லோடு வர, வேணியும் பர்சை வெளியே எடுத்தாள்.

“இப்போ நான் பே பண்ணறேன் வேணி. வேணும்னா இதுக்கு பதிலா தினமும் எனக்கு ஃப்ரீ காபி குடுத்திடு” என சொல்லி தனது கிரேடிட் கார்டை எடுத்துக் கொடுத்தான் நேதன்.

அதன் பிறகு வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள் மூவரும். காரில் அமர்ந்ததும் ஏர்கோண்ட் காற்றுப் பட்டதுமே உறங்கி விட்டான் கேஷவ். அவன் தூக்கம் கலைந்து விடுமென இவர்களும் அமைதியாகவே வந்தார்கள். வீட்டை நெருங்கியதும், காரை பார்க் செய்தான் நேதன். மகனை தூக்கிக் கொண்டே இவள் எழ முற்பட, கார் கதவைத் திறந்து பிள்ளையை வாங்கிக் கொண்டான் இவன். இவளும் இறங்கியதும் பிள்ளைக்காக கை நீட்ட,

“தூங்கறான்ல. நானும் வரேன் மேல வரைக்கும். காரிடோர்ல இருட்டா வேற இருக்கு. தனியா போக வேணாம்” என்றான் நேதன்.

அவனின் டோனில் மறுக்க முடியாமல், பேக்கைத் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தாள் இவள். வீட்டை அடைந்ததும், அவள் கதவைத் திறக்க, ஷூவை கலட்டி விட்டு இவனும் உள்ளே வந்தான்.

“எங்க படுக்க வைக்க?” என அவன் கேட்க, ரூமை காட்டினாள்.

உள்ளே நுழைந்தவன், கட்டிலில் சின்னவனைப் படுக்க வைத்து விட்டு உடனே வெளியே வந்துவிட்டான். அவன் வருகைக்காக ஹாலில் காத்திருந்தாள் வேணி. ஒரு முறை அந்தக் குட்டி வீட்டை சுற்றிப் பார்வையை சுழற்றியவனின் கவனம், சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மாலையிட்ட படத்தின் மேலே பதிந்தது. கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருந்தார் அந்த மனிதர். இவள் கணவரா அல்லது அப்பாவா என ஒரு கணம் குழப்பம் வந்தது இவனுக்கு.

அவனது பார்வையைக் கண்டவள்,

“கேஷவோட அப்பா!” என மெல்லியக் குரலில் சொன்னாள்.

“ஓ!” என மட்டும் பதில் அளித்தவன்,

“கதவ பூட்டிக்க வேணி! நான் கிளம்பறேன்” என சொல்லி வெளியேறிவிட்டான்.

 

(போன எபிக்கு லைக் காமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். லவ் யூ ஆல்)

Leave a Reply

error: Content is protected !!