Nee Enaku Uyiramma–EPI 6

189613085_863389437581725_4803627891963141566_n-39bd9dce

அத்தியாயம் 6

ஒருத்தரின் வீட்டுக்குப் போகும் போது நமக்கென சில பல எழுதாத விதிமுறைகள் இருக்கின்றன அல்லவா! அதில் ஒன்றுதான் வெறும் கையோடு செல்லாமல் இருப்பது. வேணியும் சனிக்கிழமை மாலையே நேதனின் வீட்டுக்கு என்ன எடுத்துப் போவது என யோசிக்க ஆரம்பித்து விட்டாள். அவன் சிண்டியனாக இருப்பதால் சீன பலகாரங்கள் கொண்டு செல்லலாமா அல்லது இந்திய இனிப்புகள் செய்யலாமா என சிந்தித்தவள், இரண்டும் வேண்டாம் கேக் செய்து எடுத்துப் போகலாம் என முடிவெடுத்தாள்.

மகனுக்கு இரவு உணவுக் கொடுத்து பொம்மைகள் எடுத்துப் போட்டாள் விளையாட. அவனோ அதையெல்லாம் தொட்டுக் கூட பார்க்காமல், தொலைக்காட்சி ரிமோட் எடுத்து தரையில் தட்டித் தட்டி விளையாட ஆரம்பித்தான். அவன் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே, கேக் செய்யப் பொருட்களை எடுத்து மேசை மேல் வைத்தாள். பட்டர் கேக் செய்யலாமா அல்லது சாக்லேட் கேக் செய்யலாமா என யோசித்தவள்,

“கேஷ் பையா, உனக்கு என்ன கேக் வேணும்? பட்டரா இல்ல சாக்லேட்டா?” என கேட்டாள்.

அவனோ பதில் சொல்லாமல் அவன் உலகத்தில் இருந்தான். மகனை நெருங்கியவள், இரண்டு விரலை அவன் முன்னே நீட்டினாள்.

“இது சாக்லேட், இது பட்டர்! ரெண்டுல ஒன்னு தொடு பார்ப்போம்”

அவனோ அம்மா என்னவோ விளையாடுகிறாள் என இரண்டு விரலையும் பிடித்து தன் வாயில் வைத்தான். இவளுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“ஓஹோ! ரெண்டு ப்ளேவரும் வேணுமா? சரி பட்டர் கேக்ல சாக்லேட் கலந்துடலாம்” என்றவள் தனது வேலையைப் பார்க்கப் போனாள்.

முட்டைப் போட்டு, பட்டர் கலந்து, மாவு போட்டு, எசென்ஸ் ஊற்றி, சாக்லேட் பவுடர் கலந்து கேக் ட்ரேயில் ஊற்றி ஓவனில் டைம் செட் செய்து வைத்தவள், மகனைத் தூக்கி வந்து மேசையில் அமர்த்தினாள். கேக் கலந்த பாத்திரத்தையும், அதன் கரண்டியையும் அவன் அருகே நகர்த்தி வைத்து, லேசாக கலவையை வழித்து அவன் வாயில் வைத்தாள். இனிப்பு சுவை நாக்கில் பட, குட்டிக்கு குஷியாகிப் போனது. அவனே அந்தப் பாத்திரத்தை கை வைத்து வழித்து வாயில் சுவைக்க ஆரம்பித்தான். கையிலும், வாயிலும், கன்னத்திலும் அப்பிக் கொண்டே அவன் பாத்திரத்தை வழிக்க, இவள் அதை அழகாக போட்டோ எடுத்துக் கொண்டாள்.

“சீக்கிரம் வழிச்சுட்டு குடு கேஷ். அம்மா கழுவி வைக்கனும்” என்றவள் மீதி இருந்த மாவு, சீனியை எல்லாம் அதனதன் இடத்தில் வைக்க ஆரம்பித்தாள்.

அதன் பிறகு அவன் கையில் இருந்து பாத்திரத்தை வாங்க முயல, கொடுக்க மாட்டேன் என ஒரே அடம். ஒரு வழியாய் அவனை சமாதானம் செய்து, ஆடைகளைக் களைந்து குளிக்க வைத்தாள் வேணி. அவனுக்கு பவுடர் போட்டு இரவு உடை உடுத்தி நெஞ்சில் லேசாக விக்ஸ் தடவி விட்டு, இடுப்பில் தூக்கிக் கொண்டாள். ஓவனில் கேக் வெந்திருக்க, ஸ்விட்சை நிறுத்தியவள், எப்படி வந்திருக்கிறது என திறந்துப் பார்த்தாள். பொசுபொசுவென பொங்கி வந்திருந்தது கேக். அதை சூடு ஆறட்டும் என அப்படியே ஓவனில் வைத்து மூடி விட்டு, படுக்கை அறைக்கு வந்தாள்.

அதன் பிறகு அம்மாவும் மகனும் கிச்சு கிச்சு மூட்டி விளையாடி, கொஞ்சி, ஆயிரம் முத்தமிட்டு அப்படியே தூங்கிப் போனார்கள்.

நேதனோ சனிக்கிழமை கூட ஆபிசில் அமர்ந்திருந்தான். முக்கியமான இமேயில்களை ரிப்ளை செய்தவன், அடுத்த வாரத்துக்கான ஸ்கேடுல்களை அரேஞ் செய்து தனது கூகள் காலண்டரில் அப்டேட் செய்தான். வயிறு பசிப்பது போல இருக்க, கையைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தான் அவன். மணி எட்டு என காட்டியது அது. வேலை செய்தது போதும் என நினைத்தவன், லேப்டாப்பை ஷட் டவுன் செய்து எழுந்துக் கொண்டான்.

பில்டிங்கை விட்டுக் கீழே வந்தவன், சனிக்கிழமை இரவுகளில் ஜேஜேவென இருக்கும் புக்கிட் பிந்தாங் சாலையில் மெல்ல நடையிட்டான். பார், பப், பிஸ்ட்ரோ என வெளிநாட்டவர்களை கவரும் பல அம்சங்கள் கொண்ட இடம்தான் புக்கிக் பிந்தாங். நேதனுக்குப் பிடித்த பிஸ்ட்ரோ ஒன்று, அவன் ஆபிசில் இருந்து பத்து நிமிட நடைத் தொலைவில் இருந்தது. அங்கு போகும் வழியே ஸ்வீம் அண்ட் சர்ஃப் எனும் கடை இவன் கண்ணில் பட்டது. எப்பொழுதும் அவன் கடந்துப் போகும் கடைதான் அது. அன்று என்னவோ உள்ளே போக தோன்றியது.

அதன் உள்ளே நுழைந்தவனை சீனத்தில் க்ரீட் செய்தாள் விற்பனைப் பெண். இவனும் திருப்பி சீனத்தில் க்ரீட் செய்தவன், குழந்தைகள் அணியும் நீச்சல் உடை கிடைக்குமா என கேட்டான். அழகழகாய் எடுத்துப் போட்டாள் அந்தப் பெண். அதில் நீல வர்ணத்தில் கார்ட்டுன் படம் போட்ட ஸ்வீம்மீங் சூட் ஒன்று இவனுக்கு ரொம்பவே பிடித்தது. பத்து மாத குழந்தையின் சைஸ் என கேட்டு, அதை எடுத்துக் கொண்டான். அதோடு கையில் மாட்டும் ப்ளோட்(மிதவை), இடுப்பை சுற்றிக் கொள்ளும் வாத்து உருவத்து ப்ளோட், பந்து என பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொண்டான். என்னவோ இதெல்லாம் வாங்கும் போது மனது சந்தோஷமாக இருந்தது.

தங்கைப் பிள்ளைகளுக்கு எப்பொழுதும் இது போல எல்லாம் வாங்கிக் கொடுப்பதுதான். எவ்வளவு இவன் பாசத்தைக் காட்டினாலும், அவர்கள் தந்தை வீடு வந்து விட்டால், இவனைக் கண்டுக் கொள்ளாமல் ஓடி விடுவார்கள் இருவரும். அதை பெரிதாக இவன் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், சில சமயம் மனது வலிக்கத்தான் செய்யும், தனக்கே தனக்கென பாசம் காட்ட குட்டிக் குழந்தைகள் இல்லையே என. ஏற்கனவே கேஷவின் மேல் சாப்ட் கார்னர் இருக்க, தந்தைக்காக ஏங்குகிறான் சின்னவன் என வேணியின் வாய் வழி அறிந்த தினத்தில் இருந்து என்னவோ குழந்தையின் மேல் ஆழமான அட்டாச்மேண்ட் வந்திருந்தது இவனுக்கு.     

பணம் செலுத்தி விட்டு கை நிறைய பைகளோடு வெளியேறினான் நேதன். பக்கத்தில் இருந்த பிஸ்ட்ரோவுக்கு நுழைந்தவனை, சிரித்த முகத்துடன் எதிர் கொண்டான் வெய்ட்டர். அடிக்கடி வருவதால், அங்கே நன்கு பரிச்சயமாகி இருந்தான் இவன். நேதன் விரும்பி உட்காரும் கார்னர் சீட் காலியாக இருக்க, அங்கே போய் அமர்ந்தவனுக்கு ஆர்டர் செய்யாமலே ப்ரூ ஆப் தே டே(பீர்) மேசைக்கு வந்தது. புன்னகையுடன் நன்றி சொன்னவன் பர்கர் அண்ட் ப்ரைஸ் ஆர்டர் செய்தான்.

உணவு வரும் வரை பீரை அருந்திக் கொண்டே போனை நோண்ட ஆரம்பித்தான் நேதன். மேசேஜ்களை ரிப்ளை செய்தபடியே வந்தவனுக்கு வேணியின் டீபீ கண்ணில் பட்டது. அதை தொட்டுப் பெரிதாக்கியவனுக்கு முகம் முழுக்க புன்னகையானது. கன்னம், மூக்கு, வாயெல்லாம் கேக் க்ரீம் ஒட்டி இருக்க தனது கீழ் பல்லைக் காட்டியபடி சிரித்துக் கொண்டிருந்தான் கேஷவ்.   

“ஷியாவ் பை பெய் (குட்டி டார்லிங்)” என சின்னவனின் படத்தைப் பார்த்து முணுமுணுத்தான் நேதன்.

மறுநாள் காலை சரியாய் பத்து மணிக்கு, நேதனின் வீட்டின் முன்னே கார் ஹாரன் ஒலித்தது. கதவருகே பொருத்தி இருந்த சீசீடிவி ஸ்க்ரீனில் வேணியின் காரைப் பார்த்தவன், அங்கிருந்த பட்டனைத் தட்டி கேட்டைத் திறந்து விட்டான். வீட்டுக் கதவைத் திறந்து கார் போர்ச்சுக்கு வந்தவன், உள்ளே வந்த காரை சைகை காட்டி, தன் கார் அருகே பார்க் செய்யுமாறு பணித்தான். அவள் பார்க் செய்ததும், கையில் இருந்த ரிமோட் வழி மேய்ன் கேட்டை அடைத்தவன், வேணியின் காரை நெருங்கினான்.

காரிலிருந்து இறங்கிய வேணி, காரை சுட்டிக்காட்டி தூங்குவது போல சைகை செய்தாள். மென் சிரிப்புடன் சின்னவனின் பக்கக் கதவைத் திறந்தவன், சீட் பெல்ட்டை கலட்டி விட்டு மெல்ல அவனைத் தூக்கிக் கொண்டான். காரின் ஏர்கோண்ட் குளிரில் வந்தவனுக்கு, நேதனின் உடற்சூடு பிடித்துப் போக தூக்கத்திலேயே அவன் கழுத்தை இறுக்கிக் கொண்டான் கேஷவ். குட்டிக் கைகளின் அணைப்பில் மெய் சிலிர்த்தது இவனுக்கு. பாதுகாப்பாய் அவனைப் பிடித்துக் கொண்டான் நேதன். காரிலிருந்து கேக் டப்பாவையும், மகனின் பேக்கையும் எடுத்துக் கொண்டு திரும்பியவள் கண்டது, நேதனின் இளகிய புன்னகை பூத்த முகத்தையும், மகனின் இறுகிய அணைப்பையும்தான்.

நெஞ்சம் சுருக்கென வலிக்க, முகம் மாறிப் போனது இவளுக்கு. அவளது முக மாற்றத்தைக் கண்டவன், அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“உள்ள வா வேணி” என அழைத்தான்.

அவனைத் தொடர்ந்து உள்ளே போனவள் வீட்டின் அழகைப் பார்த்து பிரமித்து நின்றாள். அவள் பின்னோடு வந்தவன், பெரிதாய் இருந்த கவுச்சில் கேஷவைப் படுக்க வைத்து அவன் கீழே விழாதவாறு தலையணையை அணைவாய் கொடுத்தான்.

“இங்கெல்லாம் வீடு ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். இப்போ நேருலயே பார்த்துட்டேன். செம்மையா இருக்குடா நேதன்” என்றவள் கண்களை சுற்றிலும் சுழற்றினாள்.

“வா வேணி ப்ரேக்பஸ்ட் சாப்பிடலாம்” என அழைத்தான் இவன்.

“எங்கடா வீட்டுல யாரையும் காணோம்? இன்னும் தூங்கறாங்களா?” என கேட்டப்படியே அவனைப் பின் தொடந்தாள் வேணி.

“வருவாங்க!” என்றவன் நாற்காலியை இழுத்துப் போட்டான் அவள் அமர்வதற்காக.

வெளியே போயிருக்கிறார்கள் போல, வந்து விடுவார்கள் என நினைத்தப்படி நாற்காலியில் அமர்ந்தாள் வேணி.

அழகான வட்ட மார்பிள் டைனிங் மேசை. பார்க்கவே பளபளவென இருந்தது. மேசையின் மேல் தான் செய்து கொண்டு வந்திருந்த கேக்கை வைத்தாள் இவள். டைனிங் ஹால் பக்கத்திலேயே பெரிய கிச்சன். கிரே கலரில் அலுமினிய கிச்சன் காபினேட் எடுப்பாக இருந்தது. மாடர்னான அடுப்பு, புகையை இழுக்கும் ஹூட், காபினட்டோடு பொருத்தப்பட்ட ஓவன் என இருந்த கிச்சனை வாயைப் பிளந்துக் கொண்டு பார்த்தாள் இவள்.

அவள் அருகே டீ ஜக்கை கொண்டு வந்து வைத்த நேதன், அழகான பீங்கான் கப்பையும் அவன் முன்னே வைத்தான்.

“என்ன வேணும் சாப்பிட? இட்லி தோசைலாம் கேட்டுடாதே! அதெல்லாம் அம்மா வீட்டுக்குப் போனா மட்டும்தான் கிடைக்கும். ப்ரோஷன் டிம் சம் (குட்டி குட்டியாய் நிறைய வெரைட்டியில் இருக்கும் ஸ்டீம் செய்யப்பட்ட சீனர்களின் உணவு. ஒவ்வொரு ஐட்டத்துக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும்) இருக்கு! ஸ்டீம் செய்யவா?” என டீயைக் கப்பில் ஊற்றியபடியே கேட்டான் நேதன்.

“ஓகே!”

அவனிடம் தட்டும் கத்தியும் கேட்டு, கொண்டு வந்திருந்த கேக்கை வெட்டி வைத்தாள் இருவருக்கும். இவளிடம் பேசியபடியே உணவைத் தயாரித்து முடித்தவன் அருகே வந்து அமர்ந்தான். அவனது தட்டில் ஒரு துண்டு கேக்கை எடுத்து வைத்தவள்,

“சாப்பிட்டுப் பாரு. நானே செஞ்சேன்” என்றாள்.

“நீ செஞ்சதா? இல்ல சின்ன மனுஷர் செஞ்சதா?” என கேட்டப்படியே வாயில் போட்டு சுவைத்தான் நேதன்.

“வாட்சாப் போட்டோ பாத்தியா? அவர் க்ளீனிங் மட்டும்தான். சோப் போட்டு கழுவ வேண்டிய அவசியம் இல்லாம சுத்தமா வாயாலயே வழிச்சுட்டான்!” என சொல்லி சிரித்தாள் வேணி.

“ஹ்ம்ம், நைஸ்! சோப்டா ரொம்ப நல்லாருக்கு வேணி.” என்றவன் இன்னொரு துண்டை வெட்டி தன் ப்ளேட்டில் வைத்துக் கொண்டான்.

வேணிக்கு இன்னொரு ப்ளேட் வைத்து அதில் சியூ மாய்(கூழாக்கிய கோழி இறைச்சியில் இருந்து செய்யப்படும் டிம் சம்), ஃபிஸ் பால், தவ் சார் பாவ்(ரெட் பீன் பேஸ்ட் மாவின் உள்ளே வைத்து அவிக்கப்படும் உணவு), ஸ்டிக்கி ரைஸ் என எல்லா டிம் சம்மிலும் கொஞ்சம் எடுத்து வைத்தான். தொட்டுக் கொள்ள சில்லி சாஸையும் அவள் அருகே நகர்த்தினான்.

“நீ போர்க்(பன்றி) சாப்பிடுவியான்னு தெரியல! சோ சிக்கன் அண்ட் ஃபிஸ் ஐட்டம்ஸ் மட்டும் ஸ்டீம் பண்ணேன்” என்றான் இவன்.

“விவரம் தெரிஞ்சி சாப்பிடறது இல்லைடா! சின்னப்புள்ளயில அம்மா பன்றி இறைச்சிக் குடுத்துருக்காங்க! கோழி இறைச்சின்னு ஏமாத்திக் குடுக்கவும் சாப்பிட்டுட்டேன்! விஷயம் தெரிஞ்சு ஏன் ஏமாத்துனீங்கன்னு கேட்டதுக்கு, யாராச்சும் நமக்கு செய்வினை வெச்சிருந்தா இந்த இறைச்சி சாப்பிட்டா வெட்டுப்பட்டுரும்னு சொல்லி என் வாய அடைச்சிட்டாங்க! அவங்க இந்த மாதிரி சாமியார பார்க்கறது, சாங்கியம் பார்க்கறது எல்லாத்தையும் ரொம்ப நம்புவாங்கடா!” என்றவளின் குரலில் வெறுப்பு மண்டிக் கிடந்தது.

அவள் குரலின் பேதத்தில் இவன் நிமிர்ந்துப் பார்க்க, முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டாள் இவள்.

அதன் பிறகு பேச்சு பள்ளி வாழ்க்கையைச் சுற்றிப் போனது. பள்ளி நண்பர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இப்படி சரளமாகப் பேசிக் கொண்டார்கள் இருவரும். கபே, மகன், வெளி வேலைகள் என நிற்க நேரமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு நேதனின் நட்பு ஒரு இளைப்பாறலாக இருந்தது. வேலை, வெளிநாட்டுப் பயணம், மீட்டிங், கான்பரண்ஸ் என ஓடிக் கொண்டே இருந்தவனுக்கு வேணியின் நட்பு ரிப்ரேஷிங்காக இருந்தது.

தன் கூடவே அடிப்பொடியாய் இருந்த தோழி ஒருத்தி இப்பொழுது ஆசிரியையாக அதுவும் டிசிப்ளின் டீச்சராக இருப்பதை வேணி சொல்லி சிரிக்க, இவனும் அவளுடன் இணைந்து நகைத்தான். பின் எழுந்துப் போய் சின்னவனைப் பார்த்து வந்தான் நேதன். அவனோ அணைவாய் வைத்திருந்த தலையணை மேல் கால் போட்டுக் கொண்டு சுகமாய் தூங்கிக் கொண்டிருந்தான்.

“செம்ம தூக்கம் அவருக்கு” என்றபடியே மேசை அருகே வந்து நின்றவன், வேணியின் உதட்டின் ஓரம் சாஸ் ஓட்டியிருப்பதை கவனித்தான்.

மேசையில் இருந்த பேப்பர் நாப்கினை எடுத்தவன், நின்ற வாக்கிலேயே வேணி என அழைக்க அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது தாடையைப் பற்றி நேப்கின் கொண்டு வாயைத் துடைத்து விட்டான் நேதன். அவனின் செயலில் அதிர்ந்துப் போய் பார்த்தாள் வேணி. அவள் பார்த்த பார்வையில், தான் தப்பாய் எதுவோ செய்து விட்டோம் என புரிந்தது இவனுக்கு. எந்த வித கல்மிஷமும் இல்லாமல் இவன் செய்ததை சில்மிஷமாய் எடுத்துக் கொண்டாளோ என தவித்துப் போனான் நேதன்.

சட்டென அவள் தாடையில் இருந்து கையை எடுத்துக் கொண்டவன்,

“சாரி, சாரி வேணி! சாஸ் உதட்டுக்கிட்ட!” என தடுமாறினான்.  பல டீல்களை அசால்ட்டாய் ஹேண்டில் செய்து பிஸ்னசை பெருக்கும் தொழிலதிபனுக்கு வார்த்தைகள் திக்கியது.

இவர்கள் நட்பைப் புதுப்பித்து சில பல நாட்களே ஆகியிருந்தன. முன்னால் பள்ளிக் காலத்தில் இருந்தது கூட நட்பு எனும் வட்டத்துக்குள் வராது! இருவருமே பார்க்கும் நேரமெல்லாம் முட்டி மோதி சண்டைப் போட்டுக் கொண்டவர்களாயிற்றே அப்பொழுது! நட்பில் கைப்பிடிப்பது தோளணைப்பது என்பதெல்லாம் சாதாரணமாக இருந்தாலும், இன்னும் அந்த ஸ்டேஜிக்கு கூட இவர்கள் இருவரும் வந்திருக்கவில்லை.

அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவள், அவன் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தாள். அங்கே தப்பு செய்த குற்ற குறுகுறுப்பு இல்லை. தவறு செய்த தவிப்பு மட்டும்தான் நிரவியிருந்தது.

“நான் கேஷவ் இல்லடா, அவனோட அம்மா! அவனுக்கு செய்யற மாதிரி வாயைத் துடைச்சு விடறியே, அவன தூக்கற மாதிரி என்னைத் தூக்கி இடுப்புல வைச்சுக்க முடியுமா? இடுப்பு டேமேஜாகிடும். பீ கேர்பூல்!” என நிலைமையை சகஜமாக்க விளையாட்டாக மிரட்டினாள் வேணி.

அவள் சாதாரணமாகப் பேசவும்தான் இது வரை பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டான் நேதன். அதற்குள் மெல்லிய சிணுங்கலும் அம்மா பால் எனும் குரலும் கேட்க, பட்டென எழுந்துக் கொண்டாள் இவள். கவுச்சில் இருந்து கீழே இறங்க முயன்றுக் கொண்டிருந்தவனைத் தாவிப் பிடித்து அணைத்துக் கொண்டாள் வேணி.

“என் செல்லக்குட்டி தூங்கி எழுந்துட்டாங்களா?” என கேட்டப்படியே அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் இவள்.

தூக்கக் கலக்கத்தில் அந்த புதிய வீட்டை சுற்றி முற்றிப் பார்த்தான் சின்னவன். அவன் பார்வை வட்டத்தில் நேதன் விழ, கையை நீட்டினான் தூக்க சொல்லி. காலையில் காரில் இருந்து தூக்கிய போதே ஒரு மாதிரியாகப் பார்த்தாள் வேணி. அதோடு தரமான சம்பவம் ஒன்று வேறு இப்பொழுதுதான் நடந்து முடிந்திருந்தது. சின்னவனை நெருங்கித் தூக்கவே மிகுந்த தயக்கமாக இருந்தது இவனுக்கு. அவனோ கிட்டே வராமல் நிற்கும் நேதனைப் பார்த்து பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தான். சட்டென தயக்கங்களை எல்லாம் உதறி, சின்னவனை நோக்கி வேகமாய் வந்தான் நேதன்.

வேணியே அவனைத் தூக்கிக் கொடுக்க,

“ஷ்!!! டோண்ட் க்ரை கேஷவ் பேபி” என சொல்லியபடியே வெளியே கார்டனுக்குத் தூக்கிப் போனான் குட்டியை.

அங்கிருந்த ஸ்வீம்மிங் பூலை பார்த்ததும் கண்கள் இரண்டும் பெரிதாய் விரிந்தன இவனுக்கு. அதைப் பார்த்த நேதனுக்கு மெலிதாய் சிரிப்பு வந்தது.

“உங்க அம்மா மாதிரியே கண்ணப் பெரிசா விரிச்சுப் பார்க்கறீங்களே நீங்க!” என மெல்லிய குரலில் கொஞ்சிக் கொண்டான்.

தண்ணீரை சுட்டிக் காட்டி,

“மண்டி(குளிப்பது), மண்டி!” என ஆர்ப்பரித்தான் சின்னவன்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல மண்டி பண்ணலாம் கேஷவ். பால் கேட்டீங்களே! அம்மா கொண்டு வருவாங்க” என இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்தாள் வேணி.

கையில் ஒரு பவுலும் கரண்டியும், வாட்டர் பாட்டிலும் இருந்தது.

“குடு நேதன்! நெஸ்டம்(செரலேக்) ஊட்டலாம்” என்றவள் பொருட்களை அங்கிருந்த மர மேசை மேல் வைத்தாள்.

நேதனிடம் இருந்து வரமாட்டேன் என அடம் பிடித்தான் சின்னவன்.

“கேஷவ்! அம்மா வாங்கன்னு கூப்பிட்டா போகனும்! அதுதான் குட் மேனர்ஸ்” என சின்னவனுக்கு இவன் கிளாஸ் எடுக்க, பத்து மாத குழந்தைக்கு என்ன புரியும்! போக மாட்டேன் என இன்னும் இவன் கழுத்தை இறுக்கினான்.

“கேஷவ்! நீ செய்யறதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு! இனிமே அங்கிள பார்க்க கூட்டிட்டு வரவே மாட்டேன் நான். அதுதான் உனக்கு பனிஷ்மெண்ட்” என மிரட்டினாள் வேணி.

‘இந்த பனிஷ்மேண்ட் பிள்ளைக்கா எனக்கா? இனி மகன உன் கண்ணுலயே காட்ட மாட்டேன்னு இண்டைரக்டா நம்ம கிட்ட சொல்றாளோ’ என எண்ணி அவள் முகத்தைக் கூர்ந்தான் நேதன். அது சாதாரணமாகத்தான் இருந்தது.

அவனையேத் தூக்கி வைத்திருக்க சொல்லி, உணவை ஊட்டி முடித்தாள் வேணி.

‘இவன் பேமிலி கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டா நல்லாருக்கும்! கூட்டமா இருந்துட்டா இப்படி ஆக்வர்டா ஃபீல் ஆகாது! நேதன் குழந்தைங்க என் தம்பி பிள்ளைங்க மாதிரி இருக்கக் கூடாது ஆண்டவா! இங்கயும் உரிமைப் போராட்டம் நடந்தா நான் எப்படி சமாளிக்க!’ எனும் யோசனையுடனே உபயோகித்த பவுலையும் கரண்டியையும் கிச்சனில் கழுவி வைத்தாள்.

“வேணி!” எனும் நேதனின் குரலில் வெளியேப் போனாள் இவள்.

“கேஷவ் ரொம்ப எக்ஸைட் ஆகறாரு தண்ணியப் பார்த்து. அதோட லேசா வெயிலும் வந்துடுச்சி. இப்போ குளிக்க வைச்சா நல்லா இருக்கும்.”

“குளம் ரொம்ப ஆழமா இருக்கற மாதிரி இருக்கே!” என பயந்தாள் வேணி.

“நீ அவர் கூட உள்ள இறங்கிப் பிடிச்சுக்கோ! ப்ளோட்லாம் இருக்கு வேணி, பயமில்ல” என சொன்னான் நேதன்.

நேதனுக்கு தண்ணீரில் சின்னவனுடன் விளையாட ஆசையாகத்தான் இருந்தது. ஆனால் மீண்டும் அம்மா மகனின் நடுவே நுழைய தர்மசங்கடமாக இருந்தது. அதனால் தான் வேணியையே இறங்க சொன்னான்.  

சரியென சொன்னவள் மகனின் உடைகளைக் களைய ஆரம்பித்தாள். அதற்குள் உள்ளே சென்று தான் வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து வந்தான் நேதன்.

“இந்தா வேணி! வாட்டர்ப்ரூப் டையப்பரும் ஸ்வீமிங் சூட்டும் இருக்கு இதுல! அவருக்குப் போட்டு விடு!”

“இதெல்லாம் எதுக்குடா வாங்குன? தேவையில்லாத செலவு! வெறும் ஜட்டிய போட்டுட்டு குளிச்சா ஆகாதா?” என கடிந்துக் கொண்டாள் வேணி.

அதற்கு வெறும் புன்சிரிப்பை மட்டும் கொடுத்தான் இவன். இவள் உடையை அணிவிக்க, அவனோ ப்ளோட்டில் காற்றடித்து பெரிதாக்கினான். கைக்கு மாட்டும் ப்ளோட்டை மாட்டி, இடுப்புக்கும் மாட்டி சின்னவனை இவன் தண்ணீரில் இறக்க, ஏற்கனவே முக்கால் பேண்ட், டீ ஷர்ட் போட்டிருந்த வேணியும் மெல்ல இறங்கினாள்.

தண்ணீரின் சிலுசிலுப்பு எலும்பு வரை ஊடுறுவியது. பற்கள் டைப்படிக்க, கஸ்டப்பட்டு நார்மலாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாள் வேணி. பேஸ்மேண்ட் வீக் என்பதை வெளியே காட்டிக் கொண்டால் அவள் வளர்த்து வைத்திருந்த ரௌடி கெத்து என்னாவது! மகனோ தண்ணீரை கையால் அடித்து விளையாட, தண்ணீரெல்லாம் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது. அதோடு அவளது மூக்குக் கண்ணாடியில் தண்ணீர் வழிய, அதைக் கலட்டி துடைத்துப் போட, மறுபடி தண்ணீர் அடித்து கண்ணாடியை நனைத்தான். சத்தியமாக வேணியால் முடியவில்லை. ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே இப்படி என்றால், இன்னும் அரை மணி நேரத்தில் தன் கதி என்ன என பயந்து வந்தது. எப்பொழுதும் இப்படி தம்பி குடும்பத்துடன் அவுட்டிங் போகும் போது, இவள் மூக்குக் கண்ணாடியோடு போராடுவதை உணர்ந்து தம்பிகளில் ஒருவன் கேஷவைத் தண்ணீரில் வைத்து விளையாட்டுக் காட்டுவான். இவள் ஓரமாக அமர்ந்து காலை மட்டும் தண்ணீரில் விட்டு விளையாடுவாள். (இதே பிரச்சனைத் தான் எனக்கும். நிம்மதியா தண்ணில விளையாட முடியாது. கண்ணாடி நனையறதும், நான் துடைக்கறதும், திரும்ப நனையறதும்!!! என்னை மாதிரி நாலு கண்ணாடி போட்டவங்களுத்தான் இந்தப் பிரச்சனைப் புரியும்.)

அங்கிருந்த மர நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படிப்பது போல சின்னவனின் விளையாட்டையும் வேணி படும் பாட்டையும் பார்க்காததைப் போல பார்த்திருந்தான் நேதன். அவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. முயன்று புத்தகத்தில் கவனத்தை வைத்தான். சின்னவன் விட்டடித்தப் பந்து கண்ணாடியை துடைத்துக் கொண்டிருந்தவளின் மூக்கில் வந்து மோத, அவனோடு இவனும் கலகலவென சிரித்தான். நிமிர்ந்து நேதனை முறைத்தவள், தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வா என சைகை செய்தாள்.

பாட்டிலோடு அவளை நெருங்கினான் இவன். குனிந்து போட்டலை நீட்டியவனை, படக்கென இழுத்துத் தண்ணீரில் தள்ளி விட்டவள்,

“இனி சிரிப்ப நீ?” என முங்கி எழுந்து முழித்தப்படி நின்றிருந்தவனைப் பார்த்துக் கேட்டாள்.

அதிர்ச்சியில் இருந்து வெளியானவன், சட்டென பாக்கேட்டில் கை விட்டு போனை எடுத்து நீச்சல் குளத்தின் வெளியே போட்டான்.

“அச்சச்சோ! சாரிடா சாரி! போன் வீணாப் போச்சா? சாரிடா நேதன்” என பதறியவள் அவனை நெருங்கி நின்று அவன் பின்னால் தரையில் கிடந்த போனை எட்டிப் பார்த்தாள்.

நனைந்த ஓவியமாய், முகத்தில் நீர்த்துளிகள் பூத்திருக்க, முடி நனைந்து முகத்தில் அழகாய் ஒட்டி நிற்க, உதடு நனைந்த ரோஜாவாய் பளபளக்க, மூச்சுக் காற்று இவன் கன்னம் மோத தன்னருகே நின்றிருந்தவளின் நெருக்கம் என்னென்னவோ செய்தது இவனை. அவசரமாய் நகர்ந்துக் கொண்டவன்,

“வாட்டர்ப்ரூப் போன் அது! ஒன்னும் ஆகாது வேணி! டென்ஷன் ஆகாதே!” என்றான்.

“நீ சிரிக்கவும் கோபத்துல பிடிச்சு தள்ளி விட்டுட்டேன்டா. ரொம்ப சாரி! இப்படிலாம் நான் சில்லியா பிஹேவ் பண்ணி பல வருஷமாச்சு! ஏன் சட்டுன்னு இப்படி பண்ணேன்னு எனக்கே தெரியல” என நொந்துக் கொண்டவளை,

“ஹே! விடு வேணி! அதான் ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டேன்ல. நீ நடுங்கறப் பாரு குளிர்ல. மேசை மேல டவல் இருக்கு! துடைச்சிட்டு மேல போர்த்திக்கோ! இவருக்கு நான் விளையாட்டு காட்டறேன்!” என அவளை ஸ்வீம்மிங் ஃபூலில் இருந்து வெளியேற்றினான் நேதன்.

அவன் சொன்னதைப் போல துண்டைப் போர்த்திக் கொண்டவள், மர நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள். அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைக் கையில் எடுத்தவள்,

“தெ சைக்கொலோஜி ஆப் மணி! காசோட சைக்கோலோஜி தெரிய காசு குடுத்து வாங்கி புக்லாம் ஏன் படிக்கற! மணி கம் டுடே கோ டுமோரோ யான்னு வடிவேலு சிம்பிளா ஃப்ரீயாவே சொல்லிக் குடுத்துருக்காரு!” என சொன்னவள் புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்தாள்.

அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது நேதனுக்கு.

வேணி போனை நோண்ட ஆரம்பிக்க நேதன் சின்னவனைப் பிடித்தப்படியே லேசாக நீந்தினான், பந்தை வீச சொல்லிக் கொடுத்தான். ப்ளோட்டில் இருந்து கேஷவை வெளியாக்கி, இவனே இரு கரங்களிலும் சின்னவனை மல்லாக்கப் படுக்க வைத்து கை கால்களை அசைக்கப் பழக்கினான். இருவரின் சிரிப்பு சத்தமும் காதை நிறைக்கத் தன்னையறியாமலே அவர்களைப் பார்த்தப்படி இருந்தாள் இவள். அந்த நேரம்தான் டப் டப்பென இரு உருவங்கள் தண்ணீரில் குதித்தன.

அவள் அதிர்ந்துப் போய் பார்க்க நேதனோ சிரிப்புடன்,

“ஷூஷூ(பன்றி)” என கத்திக் கொண்டே தண்ணீரை அவர்கள் மேல் வாரி அடித்தான்.

அதன் பிறகு அந்த ஸ்வீம்மிங் ஃபூலே ரணகளமானது. சத்தம், கூச்சல், நீர் வாரி அடித்தல் என ஆர்ப்பாட்டமாக விளையாடினாலும் கேஷவைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டான் நேதன்.

“ஹாய்மா!” எனும் குரலில் நிமிர்ந்துப் பார்த்தாள் இவள்.

அங்கே நேதனின் அம்மா நின்றிருந்தார். அவரை நன்றாகத் தெரியும் இவளுக்கு. பள்ளிக்கு நேதனை இறக்கி விட அவன் அப்பா சில சமயம் வரும் போது இவரும் உடன் வருவார். நேதன் இறங்கியதும், இவரும் இறங்கி அவன் கன்னத்தில் முத்தமிடுவார். அவனோ கன்னத்தைத் துடைத்துக் கொண்டு என்னவோ சொல்வான். இவரும் சிரித்தப்படியே பாய் காட்டி சென்றுவிடுவார்.

“ஹலோ ஆண்ட்டி! எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன்மா! இன்னைக்கு ஸ்கூல் மேட்ட வீட்டுக்கு இன்வைட் பண்ணிருக்கேன். நீங்களும் வாங்கன்னு மகளையும் அவ பிள்ளைங்களையும் கூப்டிருந்தான் நாதன். மகளும் மருமகனும் வெளியே போக வேண்டியிருந்ததனால நானே பிள்ளைங்கள அழைச்சிட்டு வந்தேன். அங்கிள் கார் பார்க் பண்ணிட்டு வருவாரு” என சிரித்த முகமாக சொன்னார் ஜானகி.        

அன்றைய பொழுது கேஷவுக்கு சிரிப்பும் கும்மாளமுமாக போனது நேதனின் குடும்பத்துடன்.

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட செல்லம்ஸ் அனைவருக்கும் நன்றி. லவ் யூ ஆல்)