Nee Enaku Uyiramma–EPI 8

189613085_863389437581725_4803627891963141566_n-1c8dc2df

அத்தியாயம் 8

‘என்னவாயிற்று இவளுக்கு? ஞாயிறு தானே கடையை அடைப்பாள்! இன்று செவ்வாய்கிழமையாயிற்றே!’ என யோசித்தவன், காரை எடுத்துக் கொண்டு அவள் வீட்டு வளாகத்துக்கே சென்று விட்டான். போன் செய்தால் எடுக்காமல் தவிர்க்க முடியும், வீட்டுக்கே போனால் என்ன செய்வாள் எனும் எண்ணத்தில் தான் அவன் வந்தது.

காரை பார்க் செய்துவிட்டு, லிப்டில் ஏறினான் இவன். அந்தோ பரிதாபம், வேணியின் வீடு பூட்டிக் கிடந்தது. தலையைத் தடவிக் கொண்டே தொங்கிக் கொண்டிருந்த பூட்டை வெறித்தான் நேதன். போனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்ய, அதுவோ ஸ்விட்ச் ஆப்பாகி கிடந்தது. அந்த நேரம் பக்கத்து வீட்டு சீன ஆண்ட்டி வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அவரைப் பார்த்து புன்னகைத்து சீனத்தில் வேணி எங்கே என கேக்கவும், இவன் யார் என விசாரித்தார் அவர். வேணியின் கபேயில் தன் ஆபிஸ் பங்ஷனுக்கு ஆர்டர் கொடுத்திருந்ததாகவும், இப்பொழுது போன் போட்டால் கிடைக்கவில்லை எனவும் நம்பும் மாதிரி புழுகி வைத்தான்.

கேஷவுக்கு உடம்புக்கு முடியவில்லை எனவும், ராத்திரியோடு ராத்திரியாய் ஹாஸ்பிட்டல் கொண்டு போனாள் வேணி என விவரித்தார் அவர். அவனை கவெர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்து இரண்டு நாட்களாகிறது என்றவர், வார்ட் நம்பர் எல்லாம் கொடுத்தார். நேற்றுதான் போய் சின்னவனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார் அவர். வேற்று மதமாய் இருந்தாலும் பக்கத்து வீட்டில் இருப்பதால் அடிக்கடி இருவரும் முடிந்த அளவு உதவிக் கொள்வார்கள் எனவும் சொன்னார் அவர்.

 

கேஷவுக்கு ஹாஸ்பிட்டலில் அட்மிடாகும் அளவுக்கு உடம்பு முடியவில்லை என அறிந்ததும் இவனுக்கு படபடப்பாக இருந்தது. அவனின் சிரித்த முகமும், தன் கழுத்தில் புதைந்துக் கொள்ளும் பாங்கும் நினைவு வர, தொண்டையடைத்தது நேதனுக்கு. அந்த ஆண்ட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு வேகமாய் காருக்கு விரைந்தான்.

‘ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லனும்னு தோணல இவளுக்கு! அது சரி, நாம யார் அவளுக்கு? ப்ரெண்ட்ஷிப்ப கூட கட் பண்ணிட்டாளே! ஆனாலும் குழந்தைக்கு இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்! தனியா நைட்டுல கூட்டிட்டு ஓடிருக்கா! இப்போ கூட தனியா வச்சிக்கிட்டு என்ன செய்யறாளோ’ என அவள் மேல் ஒரு பக்கம் கோபம் இருந்தாலும், ஒரு பக்கம் பரிதாபமும் எழுந்தது.

கோலாலம்பூர் கவர்மேன்ட் ஹாஸ்பிட்டலில் காரை பார்க் செய்தவன், அங்கெல்லாம் வந்துப் பழக்கமில்லாததால் அங்கேயும் இங்கேயும் விசாரித்து குழந்தைகள் வார்ட் பக்கம் வந்து சேர்ந்தான். அவன் வந்த நேரம் விசிட்டிங் ஹவராய் இருந்தது. கார்ட்டிடம் குழந்தைகள் வார்ட் எத்தனையாவது ப்ளோர் என விசாரித்துவிட்டு, கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து லிப்டில் ஏறினான். அதனுள்ளே மூச்சுக் கூட விடமுடியவில்லை அவனுக்கு. தான் இறங்க வேண்டிய ப்ளோர் வந்ததும், முன்னே நின்ர மக்களை இடித்துத் தள்ளிக் கொண்டு வெளியேறினான். பாக்கேட்டில் இருந்த கர்சிப்பை எடுத்து வேர்த்திருந்த மொட்டை மண்டையைத் துடைத்துக் கொண்டவன், அங்கேயும் வார்ட் நம்பர் சொல்லி விசாரித்துக் கொண்டே நடந்தான்.

அந்த இடமே கொச கொசவென கட்டிலால் நிரம்பி வழிந்தது. குழந்தைகளின் கத்தல், அழுகை என சத்தம் காதைப் பிளந்தது. ஒரு வழியாய் கேஷவ் இருந்த கட்டிலை நெருங்கினான் நேதன். இவனைப் பார்த்ததும் ஓடி வந்து இவன் அருகே நின்றுக் கொண்டாள் வேணி. அவள் பதட்டத்தைப் பார்த்து இவன் கரங்கள் தாமாகவே அவள் தோளை வளைத்துக் கொண்டன.

“பயப்படாதே வேணி, நான் இருக்கேன்ல. எதுனாலும் பார்த்துக்கலாம்” என ஆறுதல் சொன்னான்.

இவனைப் பார்த்ததும் கையை நீட்டித் தூக்க சொல்லி செல்லமாய் அழுதான் கேஷவ். கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க, அது அசையாதவாறு மெல்லத் தூக்கிக் கொண்டான் சின்னவனை. எப்பொழுதும் போல நேதனின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான் கேஷவ். அவன் உடம்பு காய்ச்சலில் கொதித்துக் கொண்டிருந்தது. மெல்ல அவன் முதுகை வருடிக் கொடுத்த நேதன், மெல்லிய குரலில் அவனை சமாதானப்படுத்தினான்.

“யாரு இது வேணி?” எனும் ஓர் ஆணின் குரலில் தான் சுற்றுப்புறம் உணர்ந்து கட்டிலின் பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனை பார்த்தான் நேதன்.

அதில் அமர்ந்திருந்தவன் முகத்தில் அவ்வளவு குரோதம். விட்டால் நேதனை அங்கேயே அடித்து ரத்தக்காயம் பார்த்துவிடும் துவேஷம். யோசனையாக அவனையும், தன்னை ஒட்டியப்படி நிற்கும் வேணியையும் பார்த்தான் இவன்.

“நான் வேணியோட நலம் விரும்பி!” எனும் ஒற்றை வார்த்தையில் பேச்சை முடித்துக் கொண்டான் நேதன்.

“நான் உன் கிட்ட கேட்டேன் இவன் யாருன்னு?” என வேணியை முறைத்தான் அவன்.

“என்னோட ப்ரேண்ட்!” என சொன்னவள் நேதனை இன்னும் நெருங்கினாள்.

“ஒட்டி நிக்கற அளவுக்கு ப்ரெண்டோ!” என நக்கலாகக் கேட்டவன் நேதன் முறைத்த முறைப்பில்,

“அப்புறம் வரேன்” என கிளம்பி விட்டான்.

அவன் வெளியானதும், பெரிய மூச்சொன்றை இழுத்து விட்டவள், கட்டிலில் பொத்தென அமர்ந்தாள்.

அப்பொழுதுதான் அவளைக் கூர்ந்துப் பார்த்தான் நேதன். முகம் தூக்கமின்றி வீங்கிப் போய் கிடந்தது. கண்கள் இரண்டும் சிவந்துக் கிடந்தன. போன முறை பார்த்ததுக்கு ஒரு சுற்று இளைத்தது போல இருந்தாள்.

“சாப்டியா நீ?” என கேட்டான் நேதன்.

இல்லையென தலையாட்டினாள் அவள்.

“எத்தனை நாள் சாப்பிடல?”

“தெரியல” என்றவள், மகனின் கட்டிலில் அப்படியே சாய்ந்துக் கொண்டாள். சற்று நேரத்தில் அவளையும் மீறி உறங்கி இருந்தாள் வேணி.

நம்பிக்கையான ஒருத்தன் மகன் அருகே இருக்கிறான் எனும் எண்ணமே வேணியை உறக்கத்தில் தள்ளி இருந்தது.

‘எத்தனை நாள் சாப்பிடாம, தூங்காம இருக்கான்னு தெரியலையே’ என எண்ணியபடி கலைந்த ஓவியமாய் கிடந்தவளின் முடியை காதுக்குப் பின் ஒதுக்கி விட்டான் நேதன். பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்தவன், சின்னவனை நெஞ்சில் போட்டு தட்டிக் கொடுத்தான். சற்று நேரத்தில் அவனும் உறங்கி இருக்க, வேணியின் அருகே அலுங்காமல் குலுங்காமல் படுக்க வைத்தான் நேதன்.

அதன் பிறகே தன் அம்மாவுக்குப் போன் போட்டான்.

“அம்மா கேஷவ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்கா வேணி! அவ இன்னும் சாப்பிடக் கூட இல்லை போல. சாப்பாடும், லேடிஸுக்கு வேற எதாச்சும் தேவைன்னா அதையும் பேக் பண்ணி அப்பாட்ட குடுத்து விடுங்க. ரெண்டு பேரும் தூங்கறாங்க! அப்படியே விட்டுட்டு வெளியே போய் சாப்பாடு வாங்கிட்டு வர முடியாது என்னால!” என சொன்னவன், வார்ட் நம்பரையும் ஹாஸ்பிட்டல் பெயரையும் சொல்லி போனை வைத்தான்.

அந்த நேரத்தில் டூட்டி டாக்டர் விசிட்டிங் வந்தார். அவரிடம் கேஷவுக்கு என்னவாகிற்று என விசாரித்துக் கொண்டவன், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக் கொண்டான்.

அம்மா மகன் இருவரும், அங்கு கேட்ட பலவிதமான சத்தத்தையும் மீறி உறங்கினார்கள். சின்னவனின் ட்ரிப்ஸ் ஊசிக் குத்தி வீங்கிப் போயிருந்த கரத்தை மெல்ல வருடியபடி அவர்கள் அருகிலேயே அமர்ந்திருந்தான் இவன். ஊசியைக் குத்தத் தெரியாமல் குத்தி அவன் கையில் பல இடங்களில் ப்ளூ ப்ளேக்காகி இருந்தது.

‘பணம் இல்லைன்னு கவர்மேண்ட் ஹாஸ்பிட்டல் வரவங்க கிட்டத்தான் இந்த புதுசா படிச்சிட்டு வந்த டாக்டரெல்லாம் ட்ரைனிங் எடுத்துப்பாங்க போல!’ என மனதில் திட்டித் தீர்த்தான் அவர்களை.

ஒரு மணி நேரத்தில் மிஸ்டர் லிம்முடன் ஜானகியும் சேர்ந்து வந்திருந்தார் அந்த மருத்துவமனைக்கு.

“நீங்க ஏம்மா வந்தீங்க இங்க? உங்களுக்குத்தான் சட்டுன்னு எந்த சீக்கும் ஒட்டிக்குமே!” என மெல்லிய குரலில் கடிந்துக் கொண்டான் தன் அம்மாவை.

“இல்லடா! நீங்க ரெண்டு ஆம்பளைங்க என்னன்னு பார்ப்பீங்க! அதான் மனசு கேக்கல, அப்பா கூடவே வந்துட்டேன்” என அவரும் மெல்லியக் குரலில் பேசினார்.

“என்னவாம் பையனுக்கு?” என கேட்டார் மிஸ்டர் லிம்.

“டெங்கி (டெங்குவை டெங்கி என தான் சொல்வார்கள் இங்கே) காய்ச்சலாம்! விட்டு விட்டு காய்ச்சல் இருந்துட்டே இருக்காம்! டிஸ்ச்சார்ஜ் செய்ய சொல்லிக் கேட்டிருக்கேன்! ப்ரைவெட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடலாம்ப்பா. பாவமா அழறாங்க கேஷவ்! என்னால தாங்கிக்க முடியல”

மிஸ்டர் லிம்மும் ஜானகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கவனித்தவன், மெல்லிய குரலில் என்றாலும் உறுதியாக,

“இவங்க ரெண்டு பேர்தான் இனி எனக்கு எல்லாமே” என்றான்.

கடை சாத்தியிருந்ததும், வீடூ பூட்டியிருந்ததும் அவனை ரொம்பவே உலுக்கி இருந்தது. என்ன ஆனது இவர்கள் இருவருக்கும் என தவித்துத்தான் போனான் நேதன். இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி இவர்கள் மேல் அன்பு வந்தது எப்படி என அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஹாஸ்பிட்டலில் இவனைப் பார்த்ததும், இவன்தான் துணை என்பது போல அவள் நெருங்கி நின்றதும், இவனைப் பார்த்ததும் சின்னவன் கையை நீட்டித் தூக்க சொன்னதும் அப்படி ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தது இவனுக்கு. இனிமேல் இவர்கள் தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்பவர்கள் என அப்பொழுதே முடிவெடுத்துவிட்டான். ஆனால் அந்த முடிவுக்கு முதல் எதிர்ப்பு கண்டிப்பாக வேணியிடம் இருந்துதான் வரும் என்பது அவனுக்கு நிச்சமயமாகத் தெரிந்தது.

மகனின் முடிவில் ஜானகியின் முகம் பூவாய் மலர்ந்துப் போக, மிஸ்டர் லிம்மின் முகமோ யோசனையைத் தத்தெடுத்தது.

“பரிதாபத்துல இவங்க ரெண்டு பேரையும் ஏத்துக்கப் போறியா நேதன்?”

“நோ டாடி! எனக்கு ப்ரெண்டா வேணிய ரொம்பப் பிடிச்சது. கேஷவோட அம்மாவாவும் ரொம்ப பிடிச்சது. இப்போ என்னவோ அவள அவளுக்காகவேப் பிடிக்குது” என உணர்ந்து சொன்னான் நேதன்.

“உனக்கு சின்ன வயசு இல்ல! உன் வாழ்க்கைக்கு எது மகிழ்ச்சிக் கொடுக்கும்னு புரிஞ்சிக்கற வயசு. வேணியும் அவ மகனும்தான் அந்த மகிழ்ச்சினா, அவங்கள நானும் அம்மாவும் இரு கை நீட்டி அரவணைச்சிக்குவோம்!” என்றார் மிஸ்டர் லிம்.

ஜானகியும் அவர் கூற்றுக்குத் தலையை ஆட்டினார். இருவரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டான் நேதன்.

“தேங்க்ஸ்மா, தேங்க்ஸ் டாடி”

தூக்கத்தில் மெல்ல புரண்ட வேணி, சடக்கென எழுத்து அமர்ந்தாள்.

“ஐயோ தூங்கிட்டேன்! பையன பார்த்துக்காம தூங்கிட்டேன்” என பேனிக்கானவளின் தோள் தட்டினார் ஜானகி.

“வேணி, நாங்களாம் பக்கத்துல தான் இருக்கோம்! வொரி பண்ணிக்காதே!” என்றார் அவர்.

அப்பொழுதுதான் இவர்களை கவனித்தவள் சட்டென, கலைந்திருந்த முடியை ஒதுக்கி விட்டாள். வேகமாய் கட்டிலில் இருந்து இறங்க முயல பூமியே சுற்றி விட்டது அவளுக்கு. கீழே விழாதவாறு அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் நேதன்.

“பார்த்து வேணி! தூக்கம் பத்தாம மயக்கமா இருக்கு போல. நாற்காலில உட்காரு” என அவளைப் பிடித்து நாற்காலியில் அமர்த்தினான்.

அவன் தொடுகையில் நெளிந்தாள் வேணி. நாற்காலியில் அமர்ந்தவள், தர்மசங்கடமாக மிஸ்டர் லிம்மையும், ஜானகியையும் பார்த்து புன்னகைக்க முயன்றாள்.

“நீ ஒன்னும் சாப்பிடலன்னு சொன்னான் நாதன். சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்! வா சாப்பிடு” என உணவை எடுத்து வைக்க ஆரம்பித்தார் ஜானகி.

சரி என தலையாட்டியவள்,

“முகம் கழுவிட்டு வரேன்” என எழுந்தாள்.

லேசாய் தடுமாற, அவளைப் பிடிக்க வந்தான் நேதன். கை நீட்டி அவனைத் தடுத்தவள்,

“ஐம் ஓகே!” என களைப்பாய் ஒரு புன்னகையைக் கொடுத்தாள்.

ஓய்ந்துப் போய் மெல்ல நடந்தவளை உரிமையாய் உதவ முடியாத வேதனையில் பார்த்துக் கொண்டே நின்றான் நேதன். அந்த நேரம் டிஸ்ச்சார்ஜ் பேப்பருடன் நர்ஸ் வர, அதை தந்தையிடம் கொடுத்து பணத்தை செலுத்தி விட்டு வர சொன்னான் இவன்.

கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் ஆனாலும் அங்கே மினிமம் இவ்வளவு என கட்டணம் வசூலிக்கப்படும். பெரிய சர்ஜரி என்றால், நோயாளியின் செல்வ நிலையைக் கணக்கில் கொண்டு அதற்கேற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படும்.

“ஏன்டா நாதா! ப்ரைவெட் ஹாஸ்பிட்டல் வர ஒத்துக்குவாளா இவ? ஒதுங்கி ஒதுங்கிப் போறாளேடா!”

“டாடி மண்டையைக் கழுவி, நீங்க சொல்றதுக்கு எல்லாம் ஒத்துக்க வைக்கறீங்கல்ல! அதே திறமையை உங்க மருமக கிட்டயும் காட்டுங்க பார்ப்போம்”

மகனை முறைத்தவர்,

“அவர் கிட்ட என் பப்பு வேகும்டா! அந்த அப்பாவி மனுஷனுக்கு அம்புட்டு லவ்வு என் மேல! என் ஆத்துக்காருக்கிட்ட வேலைக்காகற ட்ரிக்லாம் இவகிட்ட வேலைக்காகாது! நீயாச்சு அவளாச்சு, இங்க நான் பார்வையாளர் மட்டும்தான்! பெஸ்ட் அப் லக்டா மவனே!” என கழண்டுக் கொண்டார்.

முகம் கழுவி திரும்பி வந்தவள், கொஞ்சம் தெளிவாக இருந்தாள்.

“நாங்க இங்க இருக்கறது எப்படித் தெரியும்?” என கேட்டாள் நேதனிடம்.

“தெரிஞ்சுக்கிட்டேன்!’ என அவள் சொல்லி இருக்காத கோபத்தில் ஒற்றை வார்த்தை பதிலில் முடித்து விட்டான்.

அவளும் அதற்கு மேல் கேட்கவில்லை.

“நீங்க சாப்டீங்களா ஆண்ட்டி?” என உணவை நீட்டியவரிடம் கேட்டாள் இவள்.

“சாப்டாச்சும்மா!” என புன்னகைத்தார் அவர்.

நேதனைப் பார்த்து அதே கேள்வியைக் கண்ணால் கேட்டாள் வேணி.

“இன்னும் இல்ல! உன்னைத் தேடி அலைஞ்சதுல சாப்பிட டைம் கிடைக்கல” என கோபமாகத்தான் பதிலளித்தான் அவன்.

“இத ஏன்டா முன்னமே சொல்லல! நல்ல வேளை சாப்பாடு கூட எடுத்துட்டு வந்தேன். வா, சாப்பிடு” என மகனுக்கும் போட்டுக் கொடுத்தார் ஜானகி.

அவன் நின்றபடியே சாப்பிட, வேணி அமர்ந்தப்படி சாப்பிட்டாள். ஜானகியோ கேஷவின் அருகில் மெதுவாக அமர்ந்துக் கொண்டார்.

உணவு இன்னும் மீதமிருக்க,

“பக்கத்து பெட்டுல உள்ளவங்களுக்குக் குடுக்கவா ஆண்ட்டி? அவங்கதான் அப்பப்போ ப்ரேட், காபின்னு எனக்கு வாங்கி வந்து குடுப்பாங்க” என்றாள்.

ஜானகி அப்படியே டப்பவேரோடு உணவை எடுத்துக் கொடுக்க, இவள் போய் கொடுத்து விட்டு வந்தாள். ஹாஸ்பிட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போய் கிடந்த அந்த மலாய் பெண்மணியின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.

“சரிம்மா, இங்க நீ கொண்டு வந்த பொருளெல்லாம் எடுத்து வை! கிளம்பலாம்” என ஆரம்பித்து வைத்தார் ஜானகி.

“எங்க ஆண்ட்டி?” என கேட்டாள் இவள்.

அவர் மகனின் முகத்தைப் பார்க்க,

“இங்க டிஸ்ச்சார்ஜ் ஆகிக்கலாம் வேணி! ரெண்டு நாளாகியும் இன்னும் காய்ச்சல் கொதிக்குது இவருக்கு! ப்ரைவெட்ல காட்டிடலாம்” என அவள் முகத்தைப் பார்த்து வற்புறுத்தும் தொனியில் சொன்னான் இவன்.

அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தாள் வேணி. பார்வை அவனிடம் இருந்தாலும் மூளை பலவித கணக்குகளைப் போட்டுப் பார்த்தது. கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து ஒரு முடிவுக்கு வந்தவள்,

“சரி! போகலாம்” என்றாள்.

அப்பொழுதுதான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டான் நேதன்.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரம் கேஷவின் கையில் இருக்கும் ட்ரிப்ஸின் ஊசியைக் கலட்ட வந்தார் நர்ஸ். தூங்கிக் கொண்டிருந்தவன் நர்ஸ் வந்து கை வைத்ததும், ஓங்கிக் கத்த ஆரம்பித்தான்.

“டாக்டர், நர்ஸ் யார் வந்தாலும் இப்படித்தான் அழுகை!” என பொதுவாக சொன்ன வேணி மகனின் அருகே போய் அவனைப் பிடித்துக் கொண்டாள்.

நர்ஸிடம் கையைக் கொடுக்காமல் இங்கேயும் அங்கேயும் அசைக்க, வேணி அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டாள். தன் கோலி குண்டுக் கண்களில் கண்ணீர் வழிய, தேம்பியப்படியே என்னைக் காப்பாற்று என்பது போல நேதனைப் பார்த்தான் சின்னவன். இவனால் சின்னவன் படும் பாட்டைக் கண் கொண்டுப் பார்க்க முடியவில்லை. அவனை நெருங்கி கன்னத்தைத் தடவி, மெல்லிய குரலில் கொஞ்சி கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான். அந்த நர்ஸும் ஊசியை வெளியெ எடுத்து ப்ளாஸ்டர் போட்டு விட்டார். இன்னும் தேம்பிக் கொண்டு இருந்தவனைத் தூக்கிக் கொண்டான் நேதன்.

இவர்கள் மூவரும் ஒரு காரிலும், மிஸ்டர் லிம்மும் ஜானகியும் ஒரு காரிலும் கிளம்பினார்கள்.

“மேய்பேங்க்(மலேசியாவில் இருக்கும் ஒரு பேங்க்) கிட்ட நிறுத்தறியா நேதன். நான் காசு எடுக்கனும்!”

“இல்ல, என் கிட்ட” இருக்கிறது என்ன சொல்லி முடிப்பதற்குள்,

“ப்ளீஸ்” என்றவளின் குரலில் உறுதி இருந்தது.

அவளுடன் ஆர்கியூ செய்யாமல் காரை பேங்க் அருகே டபுள் சிக்னல் போட்டு நிறுத்தினான் இவன்.

இறங்கிப் போய் பணம் எடுத்துக் கொண்டு வந்தாள் வேணி. அதன் பிறகு சின்னவனை பரிசோதித்து, வார்டில் சேர்த்து, மீண்டும் ட்ரிப்ஸுக்கு ஊசி போட்டு, அவன் அழுகையை சமாளித்து என நேரம் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது.

 

(போன எபிக்கு லைக், கமெண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி. வெள்ளிக் கிழமைன்னு சொல்லிட்டு இன்னிக்கே வந்துட்டேன்னு பார்க்கறீங்களா? நெறைய பேர் அடுத்து என்னனு தெரிய ஆவலா இருக்குன்னு கேட்டுக்கிட்டதால இந்த எபி. படிங்க கருத்த சொல்லுங்க டியர்ஸ். லவ் யூ ஆல் )