Neer Parukum Thagangal 1.2

Neer Parukum Thagangal 1.2
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 1.2
இதற்கிடையே, கீழ்தளத்தில் நடைபெறும் பெண்கள் தின கொண்டாட்டத்தில் அடுத்த விருந்தினரான முன்னாள் ஐ.பி.எஸ் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அக்கணம் பார்வையாளர்களில் இருந்த பெண் ஒருத்தி, உறங்கும் மகன் அசைய ஆரம்பித்ததால் அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தாள்.
அந்தப் பெண்… ஒவ்வொரு கையிலும் மெல்லிய தங்க வளையல் ஒன்று! நீல கல் பதிக்கப்பட்ட மூக்குத்தி! சாம்பல் நிற சுடிதார்! கருப்பு வர்ண துப்பட்டா! பக்கத்தில் ஒரு பெரிய கைப்பை! தோள்களில் புரண்ட கூந்தல்! அதில் சில முடிக்கற்றைகள் பிடிப்பானுக்குள் அடங்கியிருந்தன!
மடியில் உறக்கத்திலிருந்து விழிக்க நினைக்கும் அவளது ஒன்றரை வயது மகன்!
இத்தகைய அடையாளங்களுக்குச் சொந்தக்காரியாக இருந்தாள்… அந்தப் பெண். அவள் பெயர் செல்வி!!
நேரம் பார்த்த செல்வி, இப்பொழுது போனால் சீக்கிரமாக இருக்கும். இன்னும் சற்று நேரம் அமர்ந்திருக்கலாம் என முடிவு செய்து, அலைபேசியை பைக்குள் வைத்துவிட்டு பேச்சைக் கவனித்தாள். ஆனால் அடுத்து ஐந்து நிமிடங்களிலே அவள் மகன் நன்றாக அசைந்து சிணுங்கத் தொடங்கினான்.
கூட்டத்தில் இருப்பவர்களுக்கு இடையூறாக இருக்குமென நினைத்து, மகனை தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு கைப்பையை எடுத்து எழுந்தாள். தான் இங்கே அமரும் பொழுது பேசிய லக்ஷ்மியைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, நான்காவது தளம் நோக்கிச் சென்றாள்.
அங்கே வந்த பின்னர், செல்வியின் மகன் உறக்கத்திலிருந்து விழித்து லேசாக அழத் தொடங்கியிருந்தான். அவள் சந்திக்க வந்தவர்களைப் பார்ப்பதற்கும், அவளது அக்கா வருவதற்கும் இன்னும் நேரமிருப்பதால், மகனுக்குச் சாப்பாடு கொடுத்துவிடலாம் என்று நினைத்தாள்.
மகன் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டே கொஞ்சம் தனியாக இருக்கும் படியான இடத்தை தேடி தளம் முழுவதும் கண்களைச் சுழல விடும் பொழுது, அவள் சந்திக்க வந்திருந்தவர்களில் ஒருவனைப் பார்த்துவிட்டாள்.
செல்வி பார்த்த அதே நொடியில் அவனும் அவளைப் பார்த்துவிட்டு, ‘தன்னைச் சந்திக்க வந்திருப்பவள்’ என்று தெரியுமென்பதால் எவ்வித தயக்கமின்றி சிறு மென்னகையுடன் இருந்தான்.
இதற்குமேல் வேறு இடத்தில் அமர்ந்தால் நன்றாக இருக்குமோ? இருக்காதோ? ஆனால் அக்கா இல்லாமல் தான் மட்டும் எப்படி? என்ற கேள்விகளுடன் அழும் மகனைச் சமாதானப் படுத்தியபடி நடந்தாள்.
கூடவே, ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வேறு மேசை பார்த்துச் சென்றுவிட வேண்டுமென தன்னையும் சமாதானப் படுத்திக் கொண்டாள்!
அந்த ஒருவன் அமர்ந்திருக்கும் மேசை அருகே வந்த பின்னரும் உட்காராமல் அழுகின்ற மகனை நெஞ்சோடு சாய்த்தபடி செல்வி நின்றாள்.
அவன்… செல்வி பார்க்க வந்திருப்பவன்… வெள்ளை வேஷ்டி, சட்டை உடுப்பில் இருக்கின்றவன்… பார்த்ததுமே, ‘கழுத்து, தாடை ஏன் இப்படி?’ என்று யோசிக்க வைக்கும் அடையாளத்திற்குச் சொந்தக்காரன்… அவன் பெயர் சரவணன்!
*******************
இந்த நேரத்தில் பெண்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சி முடிவடைந்திருந்தது.
எல்லாருக்கும் முன்னதாக மினி எழுந்து, ‘அவன் நிற்கிறானா?’ என்று சுற்றிப் பார்த்தாள். குறிப்பாகப் பூங்கொத்து கடையருகே நன்றாகப் பார்த்தாள்.
எங்கும் அவனில்லை என்றதும், “கிளம்பறேன் ஆண்ட்டி” என்று லக்ஷ்மியிடம் விடைபெற்றுக் கொண்டு, கடகடவென முதல் தளத்தை நோக்கிச் சென்றாள். அவள் போவதையே பார்த்தவர், ‘ரியலி க்யூட்!!’ என்று நினைத்தபடி எழுந்து, சிற்றுணவு எடுத்துக் கொள்ள நான்காவது தளத்திற்குச் சென்றார்.
சற்று நேரத்திற்குப் பின்… மற்ற தளங்களிலுள்ள கடைகளைப் பார்த்துவிட்டு, நான்காவது தளத்தை நோக்கி மினி எஸ்கலேட்டரில் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கு நான்கைந்து படிகள் தள்ளி கண்மணி வந்தாள்.
இவர்கள் இருவருக்கும் இடையே… மினியைப் பின்தொடரும் அந்தப் பையன் நின்றான். நான்காவது தளத்தை வந்தடைந்ததும், ‘மினி’ என பெயர் சொல்லி அவன் அழைத்தான். வெடுக்கென திரும்பியவள், “ஏய்! பாலோவ் பண்ணாத-ன்னு சொன்னேன்-ல? புரியாதாடா உனக்கு?” என யாருக்கும் கேட்காதவாறு பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாகக் கேட்டாள்.
அந்தப் பையன் இன்னொரு எட்டு எடுத்து வைத்து மினியின் அருகே போகும் பொழுது… அவர்கள் இருவரின் அருகே வந்த கண்மணி, “என்னம்மா… என்ன பிரச்சனை?” என அக்கறையாகக் கேட்டதும், “அது… அது வந்து சிஸ்டர்” என மினி மென்று முழுங்கினாள்.
அவள் தயக்கத்தைப் பார்த்துவிட்டு, “டிஸ்டர்ப் பண்றானா?” என்று கண்மணி கேட்டதற்கு, ஆமோதிப்பது போல் மினி அமைதியாக நின்றாள். உடனடியாக, “யாருடா நீ? என்ன வேணும் உனக்கு? ஆங்…!? என்னடா வேணும்? போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணவா?” என்று கண்மணி சத்தமாகக் கேட்டாள்.
கண்மணி எழுப்பிய சத்தத்தில்… அங்கிருந்தவர்களில் சிலபேர் இவர்களைத் திரும்பிப் பார்த்தனர். அந்தப் பையனோ கோபமாக மினியைப் பார்த்தான்.
அந்தப் பையனின் பார்வையில் பயந்து போய் நின்ற மினியைப் பார்த்து, “ப்ச் எதுக்குப் பயப்படற? பயப்படாத?” என தேற்றியவள், “டேய்! இந்தப் பொண்ணு இருக்கிற பக்கமே இனி வரக் கூடாது! வந்தா கம்பி என்ன வேண்டியது வரும்! போடா!!” என்று அவனைப் பார்த்து எச்சரித்தாள்.
கண்மணி சொன்ன விதம்… நின்ற தோரணை… வார்த்தைகளுக்குக் கொடுத்த அழுத்தம்… பார்க்கின்ற பார்வையிலே தெரிந்த ஆவேசம்… அந்தப் பையனை அங்கிருந்து நகர்ந்து போகச் செய்தது. ஆனாலும் போகும் பொழுது மினியை ஒருமாதிரி பார்வை பார்த்துவிட்டுச் சென்றான்.
அந்தக் கணத்தில், “மினி! இங்க வா” என்றோர் குரல் கேட்டுத் திரும்பிய மினி, அங்கே லக்ஷ்மியைப் பார்த்ததும்… கண்மணியிடம் நன்றி கூடச் சொல்லாமல், ஓடிவந்து அவர் எதிரே அமர்ந்தாள்.
அவள் அமர்ந்ததும் தன்னிடமிருந்த தண்ணீர் பாட்டிலை தந்து, “குடி” என்றார். “தேங்க்ஸ்” என்று மினி வாங்கியதும், “யார் அந்தப் பையன்?” என்று கேட்டார்.
தண்ணீர் குடித்து முடித்தும், ‘சொல்லவா? வேண்டாமா?’ என்ற தயக்கத்திலே இருந்தவளிடம், “ஏதும் ப்ராபளம் பண்றானா?” என்று கேட்டுப் பார்த்தார்.
பாட்டிலை மூடி மேசையில் வைத்தவளிடம், “இந்தப் பையனாலதான் அப்போ என் பக்கம் வந்து உட்கார்ந்தியா மினி?” என்று கேட்க, அவனைப் பற்றிப் பேச பிடிக்காமல், “ஆண்ட்டி வேற ஏதாவது பேசுங்களேன்” என்று கெஞ்சினாள்.
“சரி… சரி… எதும் சாப்பிடுறியா?” என்று பேச்சை மாற்ற கேட்க, “ம்கூம்” என்று கூச்சத்துடன் தலையாட்டினாள். அதை ரசித்தபடியே, “சும்மா சொல்லு. நான் ஆர்டர் பண்றேன். நீ மனி கொடுத்திடு” என்று யோசனை சொல்லவும்… சற்று யோசித்துவிட்டு, “ம்ம்ம், சீஸ் தோசை வேணும்” என்றாள்.
“வெயிட் பண்ணு. ஆர்டர் பண்ணிட்டு வரேன்” என அவர் சென்றதும், ‘அந்தப் பையன் இருக்கிறானா?’ என்று கண்களைச் சுழல விட்டுத் தேடினாள். அவன் இல்லையென்றதும் சிறு நிம்மதியுடன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.
கூடவே… அப்பா சொன்னது போல் இதுபோன்ற தருணங்களில் தனியாக வீடு செல்லக் கூடாது. அவளது அப்பா ஊரில் இல்லை என்பதால், அவர் நண்பரும் ஆசிரியருமான பாபுவை அழைத்து, தன்னைக் கூட்டிச் செல்லுமாறு சொல்ல வேண்டும். நேரத்தைப் பார்த்துவிட்டு, பள்ளி முடிந்தபின் அழைக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.
சில வினாடிகளிலே, “ம்ம்ம், சாப்பிடு” என்று தோசையை மினி முன் வைத்து, லக்ஷ்மி எதிரே அமர்ந்ததும், “அதுக்குள்ள கொடுத்திட்டாங்க?” என்று கேட்க, “கடைக்காரர் எங்கயோ போறாராம். அதான். நீ சாப்பிடு” என்றதும், சாப்பிட ஆரம்பித்தாள்.
பெரிய துண்டுகளாக எடுத்து, அவள் ருசித்து ருசித்துச் சாப்பிடுவதை ரசித்த லக்ஷ்மி, “உன் ஃபேவரைட்-டா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்றாள். பின், “அப்பா அடிக்கடி செஞ்சி தருவாங்க” என்றாள். அதன்பின், “அப்பா டேஸ்ட்டியா குக் பண்ணுவாங்க” என்று சொல்லி நிறுத்தினாள்.
அவள் கொஞ்சம் இடைவெளி விட்ட நேரத்தில், “ஓ, அப்படியா?” என்று லக்ஷ்மி சொல்லி முடிக்கையில், “ம்! அதுமட்டுமில்ல ஆண்ட்டி, அப்பா அக்கவுன்ட்ஸ் ஈஸியா புரியற மாதிரி சொல்லித் தருவாங்க” என்றாள்.
வார்த்தைக்கு வார்த்தை ‘அப்பா… அப்பா’ என்று அவள் சொல்வதைப் பார்த்து, “மினி… டாடி’ஸ் லிட்டில் பிரின்சஸா?” என ஒரு சிறு கேலியுடன் லக்ஷ்மி கேட்க, பற்களில் மாட்டியிருக்கும் ‘கிளிப்’ தெரியும் வண்ணம் அவள் சிரிக்க மட்டும் செய்ததே, அவர் கேள்விக்கான பதிலைச் சொல்லியது.
“உன் அம்மா?” என்று லக்ஷ்மி மினியின் தாயார் பற்றிக் கேட்டதுமே, வாயருகே கொண்டு போன தோசையை அப்படியே வைத்திருந்தவள் முகத்தில் சிரிப்பு சுத்தமாக மறைந்து போனது!!
*******************
மினிக்காகப் பேசிய கண்மணி, அதன்பின் ஒரு பர்கர் ஆர்டர் செய்துவிட்டு, கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து நின்று கொண்டாள். அங்கே இங்கே என வேடிக்கைப் பார்க்கையில், எதேச்சையாக ஒருவன் அவள் கண்ணில் தென்பட்டான்.
அவன் கண்மணியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்!
‘யாரிவன்?’ என்று யோசிக்கையில், ‘பர்கர் தயார்!!’ என்ற மின்சார அறிவிப்புக் கருவி ஒலி வந்தது. நடந்து போய் அதை எடுத்துக் கொண்டு, உட்காரச் சென்ற போது ஓர விழிகளால் அந்த ஒருவனைப் பார்த்தாள்.
அவன் இன்னுமே அவளைத்தான் பார்த்திருந்தான். திரும்பவும், ‘யார் இவன்?!’ என்ற கேள்வி வந்தாலும், ‘எதுக்கு கண்டவனையும் பார்த்துகிட்டு?’ என அதை அடக்கி வைத்துவிட்டு ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள்.
பர்கரை சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிற்கு அழைத்து, “ம்மா ஏழு மணிக்கு வந்திடுவேன். அப்பாக்கு மெடிசின் வாங்கிட்டேன். வேறெதுவும் வேணுமா?” என கேட்க, அங்கே என்ன பதில் வந்ததோ, “சரிம்மா” என்று அலைபேசியை வைத்துவிட்டாள்.
மீண்டும் பர்க்கரை ஒரு வாய் வைத்துவிட்டு நிமிர்ந்த பொழுதுதான், அந்த ஒருவன் இன்னமும் அவளைப் பார்த்தவாறே நிற்கிறான் என்று தெரிந்தது!
அவன்… அந்த ஒருவன்… கண்மணியைப் பார்த்தபடி நிற்கின்றவன்… ஜீன்ஸ் பேன்ட், ஷர்ட் உடுப்பில் இருக்கின்றவன்… வலப்பக்க முழங்கையில் டாட்டூ போட்டிருப்பவன்… அவன் பெயர் சேது!