Neer Parukum Thagangal 1.1

NeerPArukum 1-49eb6c11

Neer Parukum Thagangal 1.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் – 1.1

தமிழ்நாட்டின் ஓர் நகரம்!

‘முக்கியத்துவம்’ என்ற அந்தஸ்து கொண்ட நகரம். அந்த நகரத்தின் புறவழிச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையில் அமைந்திருக்கும் ஓர் வணிக வளாகம்! ‘இவ்வளவு பெரியதா?’ என ஆச்சரியப்படவும் முடியாது! ‘இவ்வளவுதானா?’ என்று அலட்சியம் கொள்ளவும் முடியாது!

அப்படிப்பட்ட ஒரு அளவீட்டில் இருந்தது!!

கிளைச் சாலையிலிருந்து உள்நோக்கி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை புல்வெளி பரப்பு அமைக்கப்பட்டிருந்தது. அதில் அழகிற்காக சிறுசிறு செடிவகைகளும், அலங்கார விளக்குகளும் இருந்தன. இதற்கு இடையிடையே, ‘ஸ்டீல் பெஞ்ச்’ வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

புல்வெளி முடியும் இடத்தில் வணிக வளாக கட்டிடம் இருந்தது!

மொத்தமாக நான்கு அடுக்குகள் கொண்டது. மதிய நேரமென்றாலும் மக்கள் கூட்டம் பெரிதாக இருந்தது. முதல் மூன்று தளங்களிலிருந்த தர அடையாளம் பெற்ற/பெறாத ஜவுளிக்கடை, அழுகுசாதனப் பொருட்கள் கடை, காலணிகள் கடை என்று சிலர் சுற்றிக் கொண்டிருந்தனர்.

இன்று, ‘மகளிர் தினம்’ என்பதால் அதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, தரைத்தளத்தில் அது இப்பொழுது நடந்து கொண்டிருந்தது!

தரையிலிருந்து உயர்ந்து நின்ற இரண்டு தூண்களில் கயிறு கட்டி, சின்னதாக இளஞ்சிவப்பு வர்ண சாட்டின் துணி மேல் வெள்ளை நிறத்தில் ‘பெண்கள் தின கொண்டாட்டம்’ என எழுதப்பட்டிருந்த பதாகை தொங்க விடப்பட்டிருந்தது.

அதன்கீழ்… நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்த சிறப்பு விருந்தினர்களுக்காக மூன்று நாற்காலிகள் போடப்பட்டிருந்தன! கூடவே மேசையும்! வந்திருக்கும் பார்வையாளர்களுக்காகவும் இருக்கை வசதி செய்யப்பட்டிருந்தது!

முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தன! அந்த ‘முக்கால்வாசி’ முழுதும் பெண்கள்தான்!!

நிகழ்ச்சி தொடங்கியிருந்தது!

மூன்று சிறப்பு விருந்தினர்களில் ஒருவர், அந்த நகரத்தில் உள்ள ஓர் உணவுத் தொழிற்சாலையின் உரிமையாளர்! அந்த நிறுவனத்தின் பெருமைகளைத் தொகுப்பாளர் விவரித்துக் கூறி, அவரை முதலில் பேச அழைத்தார்!

பெண்கள் வேலைவாய்ப்பு, நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பற்றி அவரது பேச்சு இருந்தது!

அவர் பேசி முடித்ததும் அடுத்த சிறப்பு விருந்தினரான, அந்த நகரத்தில் உள்ள அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசினார். பார்வையாளர்கள் முகத்தில் மென்னகையும், சிந்தனை ரேகையும் ஓடும்படி பேச்சு இருந்தது.

ஆனால் பார்வையாளர்களிலிருந்த ஒரு பெண்… ஒரே ஒரு பெண் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தாள். அவள் மட்டும், ‘எதற்கு இந்த கொண்டாட்டம்?’ என்ற ஓர் கேள்வியுடன் இருப்பது போல் அமர்ந்திருந்தாள்.

அவள்… வலது மணிக்கட்டில் கருப்பு நிற கைக்கடிகாரம்! இலைப்பச்சை நிற ஷிஃபான் புடவை! ‘போட்-நெக்’ பாணியில் சிவப்பு நிற ரவிக்கை! உயர்த்திப் போடப்பட்ட குதிரைவால் சிகையலங்காரம்! இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய பொட்டு! அதே நிறத்தில் மிதமான உதட்டுச் சாயம்!

அந்த ஒரு பெண்… மேலே கூறிய அடையாளங்களுக்குச் சொந்தக்காரியாக இருந்தாள்! அவள் பெயர் கண்மணி!!

இந்த நேரத்தில் வணிக வளாகத்தின் வாயிலில்… பதின்மவயது பெண் ஒருத்தி கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள். அவளது முகம், முற்றிலும் குளிரூட்டப்பட்ட இடத்தின் எதிர்பதமாக கொதித்துக் கொண்டிருந்தது.

அவள் பின்னேயே ஒரு இளைஞன் நுழைந்ததும், சட்டென திரும்பி, “எத்தனை தடவை உனக்குச் சொல்லணும்? புரியாதா? இன்னொரு தடவை இந்த மாதிரி என் முன்னாடி வந்து நிக்காத” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி எச்சரித்து, நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்து நின்றாள்.

ஓரிரு நொடிகள் அப்படியே அசையாமல் நின்றவள், ‘இன்னும் நிற்கிறானா?’ என்பதை அறிய கண்களைச் சுழற்றிப் பார்த்தாள். அங்கிருந்த பூங்கொத்து விற்கும் கடை வாசலில் அவன் நின்று கொண்டிருந்தான்.

‘ஏன் இப்படி?’ என எரிச்சல் வந்தது. வெளியே செல்வதும் சரியாயிராது என்று தோன்றியது! பின்தொடர்ந்து வருவான் அல்லவா? அதனால்!!

‘என்ன செய்ய?’ என்று யோசித்தவள், சற்றுநேரம் இங்கே இருக்கலாம். அதன் பின்னரும் அவன் போகவில்லை என்றால்… அப்பா சொன்னது போல் செய்ய வேண்டுமென முடிவெடுத்து, ‘இடம் இருக்கிறதா?’ என்று பார்த்தாள்.

நாற்காலி காலியாக இருந்தது!

உடனே அங்கே சென்றவள், அந்த நாற்காலிக்கு அருகிருந்த பெண்மணியைப் பார்த்து, “யாரும் இங்க வர்றாங்களா?” என்று கேட்டதற்கு, ‘இல்லை’ என அவர் தலையசைத்ததும் அமர்ந்து கொண்டாள்.

பெண்கள் தின பேச்சு போய்க் கொண்டிருந்தது. ஆனால் அந்த நடுத்தர வயது பெண்மணியின் கவனம், தற்சமயம் அதிலில்லாமல் அவரருகில் வந்தமர்ந்த அந்த இளவயது பெண்ணின் மீதே இருந்தது.

அந்த இளவயது பெண்… நெற்றியை மறைத்திருக்கும் குருமயிர் வரிசைகள்! பிங் வர்ண சட்டமிடப்பட்ட வட்ட வடிவ கண்ணாடி! அந்தக் கண்ணாடிக்குள் ‘அப்படி, இப்படி’ என உருளும் பூனைக்குட்டி கண்கள்!

மஞ்சள் நிறத்திலான ஸ்கேர்ட்! அதில் பெரிய பெரிய புள்ளிகளாய் கருப்பு நிற அச்சுகள்! அதே கருப்பு நிறத்தில் டாப்! கூடவே ஒரு ‘க்யூட்டான பேக்-பேக்’!

இப்படியான வர்ணனை தேவைப்படும் அளவில் இருந்தாள் அப்பெண்!!

அருகிலிருப்பவர் தன்னையே பார்ப்பது போல் உறுத்தியதும், அந்த இளவயது பெண் திரும்பினாள். அந்த நடுத்தர வயது பெண்மணி பார்த்த பார்வையை மாற்றாமல் ஒரு புன்னகையைத் தந்தார்.

மேலும், “யு ஆர் லுக்கிங் ஸோ கியூட்” என மனதிலிருப்பத்தைச் மறைக்காமல் சொன்னவர், “உன் பேரென்ன?” என்றார்.

ஒரு புறமாக தலைசாய்த்து, “தேங்க்ஸ்” என்றவள், “மினி ஜோசப்!” என தந்தை பெயரைச் சேர்த்து சொல்லி, “உங்க பேரு?” என கேட்டு, அவள் புன்னகைக்கும் போதுதான் தெரிந்தது பற்களுக்கு கிளிப் [Metal Braces] போட்டிருப்பது!

அவள் பேசும் விதம், பேசுகையில் தெரியும் மெட்டல் கிளிப்… அதை ரசித்துக் கொண்டே, “லக்ஷ்மி கேசவன்” என்று எப்பொழுதும் போல் தன் பெயருக்குப் பின்னால் அப்பா பெயரைச் சேர்த்துச் சொன்னார்.

அதன்பின் மீண்டும் பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தார். இந்த நிகழ்ச்சிக்காக வந்து உட்காரவில்லை என்பதால் மினி லக்ஷ்மியைக் கவனித்தாள்.

இறுக்கமாகப் போட்டிருந்த கொண்டை! சிறிய நெற்றிப் பொட்டு! குறைவான ஓப்பனையுடன் இருந்த முகம்! மிக மெல்லிய கைக்கடிகாரம்! அரக்கு வர்ண புடவை! அதற்கு ஒத்துப் போகும் வகையில் கருப்பு நிறத்தில் ரவிக்கை!

இப்படிப்பட்ட வர்ணனைகளுக்குச் சொந்தக்காரராக லக்ஷ்மி இருந்தார்!!

அவரைக் கவனித்து முடித்தவள், பொழுதை கடத்தவென்று அங்கிருந்த மற்ற பார்வையாளர்களையும் கவனிக்க ஆரம்பித்தாள்.

இந்நேரத்தில் வணிக வளாகத்தினுள், ‘ப்ச்… லேட்டாயிடுச்சி’ என்று வேகமாக நுழைந்த பெண்ணொருத்தி கடகடவென மேல்தளம் செல்ல நினைக்கையில், அங்கே நின்ற விற்பனையாளர் ஒருவர் அவளை நிறுத்தி, “ஹேப்பி விமன்ஸ் டே மேம்” என்று சொல்லி, ஒரு சிறு நறுமண புட்டியைத் தந்தார்.

அது… அந்தப் பொருளை சந்தைப் படுத்தும் ஒரு வழிமுறை!

வாங்கிப் பார்த்தவள், “சாரி! நான் வீகன் பை சாய்ஸ் [vegan by choice]” என்று சொல்லி அதைத் திருப்பித் தந்ததும், “அப்படின்னா?” என்று கேட்டார்.

“குருயல்ட்டி பிரீ [cruelty free] ப்ராடக்ஸ்தான் யூஸ் பண்ணுவேன். ஒரு உயிரைக் கொன்னு தயாரிக்கிற ப்ராடக்ட்ஸ யூஸ் பண்ண மாட்டேன்” என்று பதில் கூறி, “உங்களுக்கும் ஹேப்பி விமன்ஸ் டே” என மறந்திடாமல் வாழ்த்தும் சொல்லி, அந்தப் பெண் எஸ்கலேட்டரில் ஏறினாள்.

அந்த விற்பனையாளர் அப்படிச் சொல்லிவிட்டுப் போகின்றவளை ஒருமாதிரி வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் பார்வையில் அப்பெண்… பின்னலிடப்பட்ட நீண்ட சடை! அடர் நீல நிற பேன்ட்! எளிமையான ஆரஞ்சு வர்ண டாப்! துணியாலான பெரிய கைப்பை! துளியும் ஒப்பனைகள் இல்லாத முகம்!

இத்தகைய அடையாளங்களுக்குள் அடங்குபவள்தான் அந்த விற்பனையாளர் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்… அவள் பெயர் மஹிமா!!

மஹிமா, பார்த்துக் கொண்டிருந்த விற்பனையாளரின் பார்வை எல்லையைக் கடந்து… அதாவது இரண்டாவது, மூன்றாவது தளத்தைத் தாண்டி நான்காவது தளத்திற்கு வந்து சேர்ந்தாள்.

வட்ட வடிவமாக இருந்தது நான்காவது தளம்!

ஒரு பக்கத்தில் இட்லி-தோசைக் கடை, துரித உணவுக் கடை, கேக், ஐஸ்கிரீம் கடை, சாட் வகைக் கடை, குளிர் மற்றும் சூடான பானங்களுக்கான கடை என வெவ்வேறு வகையான உணவகங்கள் இருந்தன. மதிய உணவு வேளையைத் தாண்டி இருந்தாலும் இங்கே நிறைய ஆட்கள் கூட்டம் இருந்தது.

பெரும்பாலான கடைகளின் அமைப்பு ஒரு சிறிய முன்புற பகுதி, ஓரளவிற்குப் பெரிய பின்புற அறையைக் கொண்டிருந்தன. இந்த இரண்டையும் பிரிக்கும் வண்ணம் ஒற்றைக் கதவு இருந்தது!

இவை தவிர ஒன்றிரண்டு துணிக்கடைகளும் இருந்தன. அந்தத் தளத்தின் ஒரு முனையில் சந்து போன்ற பகுதி சென்றது. அங்கே ஓர் அறை இருந்தது. அது கீழ்தளக் கடை ஒன்றின் சரக்கு கிடங்கு! வேலையாட்கள் போவதும் வருவதுமாக இருந்ததால், அது இப்பொழுது திறந்திருந்தது!

மற்றொரு பக்கம் கண்ணாடித் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து எட்டிப் பார்த்தால் கீழ்தளம் வரை தெரிந்தது. அந்தக் கண்ணாடித் தடுப்புகள் பக்கம் குழந்தைகள் வராமல் கவனிக்க செக்யூரிட்டி பெண்மணி இருந்தார்!

ஒரே சீரான இடைவெளியில் தூண்கள் இருந்தன. அதில் ஆளுயரக் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது! மேலும் ஆங்காங்கே சில அலங்காரப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன!

குறைவான நீள அகலங்கள் கொண்ட தளம். அதன் ஒரு முனையில் லிஃப்ட், மத்தியில் எஸ்கலேட்டர் இருந்தது. மறுமுனையில் படிக்கட்டுகள் இருந்தன. ஆனால் அங்கே, ‘சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. மக்கள் பயன்படுத்த வேண்டாம்’ என்ற பதாகை வைக்கப்பட்டிருந்தது.

இதில் எஸ்கலேட்டரை பயன்படுத்தி நான்காவது தளம் வந்திருந்த மஹிமா, தனக்காகக் காத்திருப்பவனைத் தேடினாள். பார்வைக்குள் காத்திருப்பவன் விழுந்ததும், ‘ஓஹ்! ரொம்ப லேட் பண்ணிட்டேனே!??’ என்று புலம்பியபடியே, அவன் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள்.

அவன் அருகில் சென்றதும், “ஹாய் கார்த்தி! வந்து ரொம்ப நேரம் ஆகுதோ?” என்று முகமனுடன் ஒரு முறுவல் தந்து, அவன் எதிரில் அமர்ந்தாள்.

மஹிமா முகமனுக்கோ, முறுவலுக்கோ எந்த ஒரு எதிர்வினையும் இல்லாமல் சிலை போல் இருக்கின்றவன்… கருப்பு பேன்ட், வெள்ளை முழுக்கை சட்டை உடுப்பில் இருக்கின்றவன்… அவன் பெயர் கார்த்திகேயன்!

****************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!