Neer Parukum Thagangal 12.1

NeerPArukum 1-c12ab36b

Neer Parukum Thagangal 12.1


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 12.1

சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்

அனுமதி கேட்டு வெகுநேரமாகியும் எதுவுமே பேசாமல் செல்வி அமைதியாக இருந்தாள். அதையே, ‘பேசலாம்’ என்கிறாள் என்று எடுத்துக் கொண்டு, சரவணன் பேச ஆரம்பித்தான்.

ஓர் ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டவன், “என்ன சொன்னீங்க? நேரடியா கேட்க பயந்துக்கிட்டா?? அது அப்படியில்லை! எந்தவொரு வார்த்தையும் உங்களைக் காயப்படுத்திட கூடாதுனு, நான் யோசிச்சி செஞ்ச விஷயம். அவ்வளவுதாங்க” என்றான் எளிதாக!

பேசுவதைக் கவனிக்கிறாளா? இல்லையா? என்று கேள்வி கேட்கும்படி, மகன் விளையாடுவதையே பார்த்திருந்தாள் செல்வி!

அவனோ, “அடுத்து என்ன சொன்னீங்க? ம், ‘வாழ்க்கை கொடுக்கிறது!’ ஏங்க இப்படிச் சொல்றீங்க?! சம்பாதிக்கிறீங்க! அதை இன்னுமே பெருசா பண்ண நினைக்கிறீங்க. இப்படிச் சொந்தக்கால்ல நிக்கிற ஒரு பொண்ணுக்கு நான் என்ன புதுசா வாழ்க்கை கொடுக்கிறது?” என்றான் எதிர்வாதமாக!

அதைக் கேட்டதுமே சட்டென ஏதோ பேச வார்த்தைகள் வாய்வரை வந்தாலும், பார்வையைக்கூட திருப்பாமல் செல்வி அழுத்தமாக இருந்தாள்!

அடுத்து, “ஒரு பேச்சுக்காக சொல்றேன்! தப்பா எடுத்துக்காதீங்க. ஒருவேளை என்னைக் கல்யாணம் பண்ண நீங்க சம்மதிச்சா… அது என் நிலைமையைப் பார்த்து” என அவன் கழுத்தைக் காட்டி, “எனக்கு வாழ்க்கை கொடுக்கிறதுனு அர்த்தமா?” என்றான் எதிர்கேள்வியாக!

அந்தக் கேள்வியில் விருட்டென அவனைப் பார்த்திருந்த செல்வி, ‘ச்சே, ச்சே! ஏன் இப்படியெல்லாம்?’ என்பது போல் முகத்தைச் சுழித்தாள்!

அதைக் கண்டவன், “கோபம் வருதா? வரும்! ஏன்னா… நீங்க சொன்னதைக் கேட்டு எனக்கும் இப்படித்தான் இருந்தது” என்றான் எதிர்நியாயமாக!

அதன்பின் ஓர் அமைதி நிலவியது!

அதற்குப்பிறகு சரவணனே, “அப்புறம் எதுக்கு, ‘இந்த மாதிரி பொண்ணு!’-னு சொன்னீங்க? எங்க வீட்ல யாருக்கும் இப்படித் தோணலையே. உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” என்றான் எக்கச்சக்க ஆதங்கத்துடன்!

கருவிழிகள் அசையாமல் அவனையே செல்வி பார்த்திருந்தாள்!

அவனோ, “காஃபி, ஃபேன்…” என இழுத்தவன், “நானும் எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சிருக்கேன். ஆனா இப்படி யாருமே சொன்னதில்லை!” என்றான் எரிச்சலாக! ‘இவ்வளவுதான் உன் இயல்பா?’ என்று கேட்பது போல்!!

‘இதுவல்ல என் இயல்பு?!’ என்று சொல்வது போல் லேசாக தலையசைத்தாள். ஆனால் செல்வி வாய்திறந்து பேசவில்லை!

ஒருமுறை கண்மூடித் திறந்தவன், “நீங்க… தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க. உங்க இடத்தில யார் இருந்தாலும் இதே உதவியை பண்ணியிருப்பேன்” என்றான், ‘இதுதான் என் இயல்பு’ என்று எடுத்துச் சொல்வது போல்!

அதற்கு அடுத்த நொடியிலே, “உங்க நேர்மறை எண்ணம், சில விஷயங்களை அணுகின விதம் பிடிச்சிருந்தது! அதாங்க அப்படிக் கேட்டேன். கொஞ்சம் கூட அனுதாபப்பட்டுக் கிடையாது. அதுக்கு அவசியமும் இல்லை” என்றான், அவள் உயர்ந்த குணங்களை எடுத்துக்காட்டி!

மறுநொடியில், “நான் கேட்டதுக்கான அர்த்தம் அது இல்லை. ரெண்டு பேரும் சேர்ந்து பயணிக்கலாமான்னு கேட்டேன். அவ்வளவுதாங்க” என்றான் ஓர் சிறு ஏக்கத்துடன்!

அதைத் தொடர்ந்து, “வேண்டாம்னு சின்னதா நீங்க தலையசைச்சிருந்தா கூட புரிஞ்சிருப்பேன். அதுக்குப் போய் இவ்ளோ ஏன் பேசணும்னு தெரியலைங்க” என்று எழுந்துவிட்டான்!

நிமிர்ந்து பார்த்தவளிடம், “எது எப்படியோ? ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். இப்படியொரு சூழ்நிலைல கேட்டது தப்பாயிருக்கலாம். அதனால என்னைய மன்னிச்சிடுங்க” என்றான் ஏதோ எதிர்பார்த்து ஏமாந்துபோன குரலில்!

மன்னிப்பு கேட்பான் என்று எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை என்பது போல் செல்வி இருந்தாள்! மன்னிப்பு கேட்டவனோ சற்று எட்டி நின்று கொள்ளலாம் என காய்கறிகள் போட்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்!

போகிற போக்கில், “எல்லாம் என் தப்புங்க! நீங்க சொன்னதுமே இங்க வந்து உட்கார்ந்தேன் பாருங்க… அதைச் சொல்றேன்” என்று, அவளது பேச்சினால் எழுந்த கோபத்தை எக்கச்சக்க பொறுமையுடன் வெளிப்படுத்தினான்.

அங்கே போய் நின்றும், “இப்போகூட என்ன ஆனாலும் பரவால்லைனு வெளிய போயிருப்பேன். ஆனா எனக்கு எதுவும்னா வருத்தப்பட ஒரு குடும்பம் இருக்கு. அதான் இங்கயே நிக்கிறேன்!

ஆனா இனிமே டீசென்ட்டா நடந்துப்பேங்க” என்று ஏதோ ஓர் வருத்தத்துடன் சொல்லிவிட்டு, செல்வியுடனான தனது பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டான் சரவணன்!

**************************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

சேது, அப்படி அர்த்தமாக பேசி முடித்ததைக் கேட்ட கண்மணி அமைதியாக இருந்தாள். அர்த்தம் புரிபடாமல் இல்லை! புரிந்ததை புத்திக்குள் புகுத்திப் பார்த்துக் கொண்டிருந்ததால்!!

ஆனால் அவனோ அவளுக்குப் புரியவில்லை என்று நினைத்து, “கண்மணி, என்ன எந்த அர்த்தத்தில சொன்னேனா, உன்மேல பாசம் காட்றதுக்கு நான் பயப்படலை. பயப்படவும் மாட்டேன்!” என்று விளக்கமும் தந்தான்.

ஒருமுறை ஆழமாக அவனைப் பார்த்துவிட்டு, ‘முதலில் சொன்னதே புரிந்ததுவிட்டது’ என்பது போல் முறுவல் செய்தாள்.

“இல்லை பேசாமலே இருந்தியா அதான் புரியலைனு…” என்று இழுத்தவனிடம், “நான் யோசிக்கணும் சேது. கொஞ்ச நேரம் பேசாம இருக்க முடியுமா?” என்று கேட்க, “கஷ்டம்தான். ஆனா…” என்றவன், ‘ஓகே’ என்பது போல் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.

“எதைக் கஷ்டம்னு சொல்ற நீ?” என்று அவள் விளையாட்டாய் கேட்டதும், “நீ எதை வேணாலும் எடுத்துக்கோ” என்று சொல்லி எழுந்தான்.

மீண்டும் அட்டைப் பெட்டியின் மேல் சாய்ந்து கொண்டு, அலைபேசி சமிக்கை கிடைக்குமா என்று பார்த்தான். அப்படியே அடிக்கொருமுறை ‘இவள் என்ன செய்கிறாள்?’ என்று கண்மணியையும் பார்த்துக் கொண்டான்.

பெருவிரல் நகத்தைக் கடித்தபடி… இந்தச் சிறிது நேரத்தில் அவன் பேசியதை, நடந்து கொண்ட விதத்தை யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மேலும் மேலும் அதையே யோசித்தாள்!

அந்த ‘அடிக்கொருமுறையாக’ திரும்பிப் பார்த்தவன், “நகம் கடிக்கிறது நல்ல பழக்கம் இல்லை” என்று அவளுக்கு அறிவுரை சொல்லவும், “பேசாம இருன்னு சொன்னப்புறமும் பேசறது… என்ன பழக்கம் சேது?” என்று கேட்டாலும், நகம் கடிப்பதை நிறுத்திவிட்டாள்.

அவள் சொன்னதை நினைத்துச் சிரித்தவன், “இப்ப தெரியுதா, நான் எதைக் கஷ்டம்னு சொன்னேன்-னு??” என்று வேடிக்கையாய் கேட்டதும், அவளுமே சிரித்துக் கொண்டாள்.

ஆனால் அதன்பின் அவள் யோசிக்கட்டும் என்று அவன் எதுவும் பேசவில்லை.

வெகுநேரம் தீவிரமாக யோசித்த பின் தொண்டையைச் செருமிக் கொண்டு, “சேது” என அழைத்ததும், “யோசிச்சாச்சா?” என்று கேட்டப்படி வந்து அமர்ந்தான்.

கண்மணி எழுந்து கொண்டாள்!

“என்னாச்சு கண்மணி?” என்று கேட்டு நிமிர்ந்து பார்த்தவனிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா சேது?” என அவள் வினவியதும், அவளுக்கு உதவி செய்யவே மாட்டியிருப்பது போல், “என்னென்னு மட்டும் சொல்லு!” என்று சொல்லி, அவனும் எழுந்தான்.

நெற்றியில் வைத்திருந்த பெரிய பொட்டை ஒரு முறை அழுத்திய கண்மணி, “சேது! இந்த கதவை உடைக்கிறீயா? நான் வெளிய போகணும். இதுக்கப்புறம் உள்ளே இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றாள் அனர்த்தமாக!

********************************

அப்பாவின் குட்டி இளவரசியாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்

சில வினாடிகளுக்குப் பின்… யோசித்துக் கொண்டிருந்த மினி எழுந்து சென்று லக்ஷ்மியுடன் சேர்ந்து நடந்தாள். விதவிதமான வடிவங்களில், வித்தியாசமான வர்ணங்களில் இருந்த ஆடைகளைப் பார்த்தபடி… கடையின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு சிலபலமுறை நடந்தார்கள்.

வெகுநேரமாக எதுவுமே பேசாமல் நடந்து வந்தவள், சட்டென்று நின்று… அவர் முகத்தைப் பார்த்து, “யாருமே இல்லாம, நீங்க தனியா இருக்கிறது ஒருமாதிரி கஷ்டமா இருக்கு” என்று அவருக்கான கவலையை வெளிப்படுத்தினாள்.

அப்போதிருந்து அவள் பேசும் விதத்தினால், ‘தனக்காக கவலைப்படுகிறாள்’ என்று அவரால் புரிய முடிந்திருந்தது. ஆயினும் அதனை வெளிப்படுத்துவாள் என அவர் எதிர்பார்க்கவில்லை. அதனால் இமைக்க மறந்து நின்றார்.

ஆனால் அது ஒருசில நொடிகளே! அதன்பின் தனக்காவே என்றாலும், அவள் கவலைப்படுவது அவருக்கு அறவே பிடிக்கவில்லை!!

எனவே “நாலு வருஷமா இப்படித்தான் லைஃப் இருக்குது மினி. இது எனக்குப் பழகிடுச்சி” என்று இலகுவாகப் பேசி அவளைத் தேற்றும் விதமாகச் சொல்ல,

“ஈஸியா சொல்றீங்க?! ‘தனியா எப்படி?’-ன்னு இவ்வளவு நேரமா யோசிச்சிப் பார்த்தேன். கஷ்டம் இல்லையா?” என அதே புள்ளியில் நின்று கேட்டாள்.

கூடவே, “ஆண்ட்டி, தனியா இருக்கோமேன்னு வொரி பண்ணாதீங்க. டைம் கிடைக்கிறப்போ உங்களை வந்து பார்க்கிறேன்” என அவருக்கான ஒரு சிறு அக்கறையைக் காட்டியதும், பெரிதாக ஏதும் எதிர்வினை செய்யாமல், கீற்று போன்ற மென்னகையுடன் சரியென தலையசைத்தவர்

அதன்பின்னர் இருவரிடமுமே ஓர் மௌனம்! இருவருமே பேசிய விடயங்களை அசைபோட்டுக் கொண்டிருந்தனர்!!

மினிக்கு… அவர் எளிதாக கையாள நினைக்கும் தனிமையை, ‘கடுமை’ என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாதெனவும், இது போன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டுமென்றும் ஓர் எண்ணம் வந்தது! உண்மையில் அந்த எண்ணத்தை அவர் பதில் தந்திருந்தது!!

இதே நேரத்தில் லக்ஷ்மி… தனக்காக அவள் காட்டிய அக்கறையை நினைத்துக் கொண்டிருந்தார்! சிறு அக்கறைதான்! இருந்தாலும் அதுவே அவர் மனதிற்குப் பெரும் ஆறுதலைத் தந்தது!!

இருவரின் மௌன நொடிகள் கழிந்தபின், “மினி… நீ, ஏன் எனக்காக இவ்வளவு யோசிக்கிற?” என்று தெரிந்து கொள்ளலாமென லக்ஷ்மி கேட்டார்.

“ஏன்னா நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணதால, உங்களைப் பத்தி தெரிஞ்சதால, உங்க மேல சின்னதா அட்டாச்மென்ட் வந்திருக்கு” என்று அவர்மீதான பற்றை சிறிதும் மிகைப்படுத்தாமல் வெகு இயல்பாக மினி வெளிப்படுத்தினாள்.

அவளைப் பார்த்ததுமே தனக்கு உண்டான ஒருவித பற்றுணர்வு, இப்பொழுது அவளுக்குத் தன்மீது வந்திருக்கிறது! அதுவும் சின்னதாக, தன்னைப் பற்றித் தெரிந்ததினால் மட்டுமே! எனினும் இதயம் இதமாக உணர்ந்தது!!

ஆனால் மினியோ, அவர் செய்த உதவி பற்றிப் பேசியதால் நடந்த நிகழ்வுகள் ஞாபகத்தில் வர, மனஅமைதி குலைவது போல் உணர்ந்தாள். அதேநிலையில், “என்னை மாதிரியே உங்களுக்கு ஏதும் தோணிச்சா? அதனாலதான் என்னை இவ்வளவு கேர் பண்றீங்களா ஆண்ட்டி?” என்று கேட்டாள்.

அவள் கண்ணீர் கண்டு வருந்தியது, காயத்தை துடைத்ததில் ஏக்கம் போனது, அக்கறையால் ஆறுதலடைந்தது, பற்றுணர்வால் இருதயம் இதமாக இருந்தது, அவளுடன் பேசப் பிடித்திருந்தது… என்று அவர் உணர்ந்ததைச் சொல்வதற்கு வார்த்தைகள் முட்டிமோதி வந்தன.

ஆனால் அதைச் சொன்னால்… தனக்காக இன்னும் கவலைப்படுவாளோ? அது அவளது வழமையான வாழ்வைப் பாதிக்குமோ? என்ற கேள்விகள் லக்ஷ்மிக்கு வந்திருந்தன.

கூடவே, கவலைப்படுவாளென்று ‘என்ன நிச்சயம்?’ என்ற வினாவும் இருந்தது. அதற்கு, ‘என்றோ நடந்ததை நினைத்து இன்று வருந்தினாளே? தன் தனிமை குறித்துக் கஷ்டப்படுகிறாளே?’ என்பதே விடையாக வந்தது.

அப்போது போல் சொன்ன பிறகு, ‘ஏன் சொன்னோம்?’ என கலங்குவதை விட, இதையெல்லாம் சொல்லாமல் இருப்பதே அவளுக்கு நல்லதென நினைத்தார்! அதேசமயம் எதுவுமே தோன்றவில்லை என்று சொன்னால், அது அவளுக்குச் சிறு ஏமாற்றமாக கூட இருந்துவிடலாம்!!

எனவே, “பார்த்ததும் சிலர்மேல அட்டாச்மென்ட் இருக்கற பீல் வருமில்லையா? அதுமாதிரிதான் மினி, உன்னைப் பார்த்ததுமே தோணிச்சி” என அவருக்குள் ஆரம்பத்தில் உண்டான உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தினார்.

“ஓ!” என ஓர் ஆச்சரியத்தோடு சொன்னவள், “அதனாலத்தான்… நான் அப்படிப் பேசிட்டு வந்தாலும் இங்கருந்து என்னைக் கூட்டிட்டுப் போறதுக்காக வெய்ட் பண்ணியிருக்கீங்க. கரெக்டா ஆண்ட்டி?” என்று அவள் கேட்கவும், லக்ஷ்மியும் ‘சரிதான்’ என்பது போல் புன்னகை செய்து கொண்டார்.

மினியால் புன்னகை புரிய இயலவில்லை. ‘இங்கிருந்து கூட்டிச் செல்ல…’ என்ற பேச்சினால் மீண்டும் நடந்தது ஞாபகத்தில் வரவும், அவளது மனம் முற்றிலும் அமைதியற்று போனது. ஆறுதலுக்காக மனம் அப்பாவைத் தேடியது. எதுவுமே பேசாமல் மீண்டும் நடக்கத் தொடங்கினாள்.

மினியுடன் நடந்து கொண்டே, “நீ… எந்த காலேஜ்?” என்று லக்ஷ்மி கேட்க, பதில் சொன்னாள். அவளுடன் பேசுவது பிடிக்குமென்பதால், அதன் பின்னரும் அவர் கேள்வி கேட்க… அவளும் பதிலளித்தாள். ஆனால் அவளது குரலில் ஓர் அயர்வு, அசமந்த தன்மை, அலைப்புறல் இருந்தது.

உடனே கவனிக்காவிடிலும்… சற்று நேரத்தில் அவள் மாறுபாட்டைக் கவனித்த லக்ஷ்மி, ‘நடந்ததை யோசிக்கிறாளோ?’ என அனுமானிக்கையிலே, “ஆண்ட்டி, எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கணும்? ஒருமாதிரி இருக்கு. எப்போ வெளிய போவோம்?” என்று கலங்கிய குரலில், அவர் நினைத்ததை உறுதி செய்யும்படி கேள்வி கேட்டாள்.

‘தந்தையைத் தேடுகிறாளோ?’ என்று லக்ஷ்மி மனம் பதறுகையில், “ஆண்ட்டி அப்பாக்கு கால் பண்ணலாமா? பட் அழுகையா வருமே! நான் அழுதா அப்பா டென்ஷன் ஆயிடுவாங்களே?” என்றவள், ‘என்ன செய்ய?’ என்று தெரியாமல் முடியைப் பிய்த்தெடுப்பது போல் பிடித்துக் கொண்டாள்.

சட்டென, “ப்ச், ஏன் மினி இப்படி?” என அவள் கையை எடுத்துவிட்டார்.

இங்கிருக்கும் வரை, பேச்சை எப்படி மாற்றினாலும் நடந்ததையே நினைத்து உழலுவாள். என்ன ஆறுதல் சொன்னாலும், அவளது அப்பா சொன்னால்தான் அவள் மனம் தேறும் என்ற உண்மை புரிந்தது!

அவளுடன் பேசிக் கொண்டிருப்பது மனதிற்குப் பிடித்திருந்தாலும், விரைவில் வெளியே சென்றால் நல்லதென்றே அவருக்குத் தோன்றியது!!

லேசாக கண் கலங்கியவள், “டயர்டா இருக்கு. பசிக்க வேற செய்யுது. நடந்தது போதும். உட்காரலாமா?” என சோர்வுடன் கேட்டாள்.

போராட்டம், கோபம், பயம், அழுகை, அப்பாவைத் தேடும் மனம், தனக்கான கவலை… என ஓய்ந்து, வாடிப் போயிருந்தவளைப் பார்த்தவர், சரியென்றதும் இருவரும் ஏற்கனவே இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தனர்.

அமர்ந்ததும்… தன் கைப்பையிலிருந்த ‘டின் பாக்ஸை’ எடுத்து, “நட்ஸ் இருக்கு. சாப்பிடு” என்று லக்ஷ்மி தந்ததும், “வேண்டாமே?!” என அவள் மறுக்க, ஒன்றை எடுத்து அவள் வாயில் கொடுத்தவர், “கடகடன்னு சாப்பிட்டு முடி” என்று சற்று அதட்டலாகச் சொல்லிவிட்டு, தண்ணீர் எடுத்து வர சென்றார்.

ஒவ்வொன்றாக பாதாம் கொட்டைகளைச் சாப்பிட்டு முடித்த மினி… லக்ஷ்மி கொண்டு வந்த தண்ணீரைக் குடித்ததும், “ரொம்ப டயர்டா இருக்கு ஆண்ட்டி. ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு” என்றாள் அப்படியொரு அயர்வுடன்!

அவ்வாறு சொன்ன சிலநொடிகளிலே களைப்பு அதிகமாகி… லக்ஷ்மி மடியில் தலைவைக்க வந்தவள், “உங்களுக்கு ஓகேவா ஆண்ட்டி?” என அனுமதி கேட்க, ‘தலை சாய்த்துக் கொள்’ என்று முகமொழியால் சொல்லி, அவள் வசதிக்காக கால்களை நீட்டிக் கொண்டார்.

வாகாக தலை வைத்துப் படுத்துக் கொண்டவள், “நீங்க தூங்கிட மாட்டிங்கள ஆண்ட்டி?” என ஒத்திகை அறையைப் பார்த்துக் கேட்க, “பயப்படாத! அப்பவே சொன்னேன்ல, அவனை நல்லா கட்டிபோட்டுருக்கேன்னு. நான் தூங்கலாம் மாட்டேன். நீ ரெஸ்ட் எடு” என்றார் கரிசனமாக!

“சீக்கிரமா அப்பாவைப் பார்க்கணும்” என்று புலம்பியவள், “ஆண்ட்டி… உங்க அகடமி பத்தி சொல்லுங்களேன்” என கேட்க, “என்ன சொல்லணும்?” என அவர் பதிலுக்கு கேட்க, “ஜெனரலா சொல்லுங்க” என்றாள்.

“ஜென்ரலா-வா?” என யோசித்தவர், “செவன் இயர்ஸ்-க்கு முன்னாடி ஸ்டார்ட் பண்ணேன். பிரெஞ்ச், ஜெர்மன் சொல்லித் தர்றோம். ஸ்டார்ட் பண்ணப்போ எலிமென்டரி லெவல்தான் இருந்தது. இப்போ அட்வான்ஸ் லெவல் வரைக்கும் இருக்குது. அன்ட் ஓரல் லாங்குவேஜ் கோர்ஸூம் உண்டு” என்றார்.

பெரும் சோர்வுடன், “காலேஜ் போறப்ப… உங்க அகடமி ஆட்வெடைஸ்மென்ட் ஹோடிங்ஸ்-லாம் பார்த்திருக்கேன்” என அவள் சொல்லும் பொழுது பேச்சை நிறுத்தியவர், மீண்டும் பேசப் பேச, ‘ம்’ கொட்டிக் கேட்டுக் கொண்டே இருந்து அப்படியே உறங்கிவிட்டாள்.

அயர்ந்து மினி உறங்கியதும், லக்ஷ்மி பேசுவதை நிறுத்தினார். மேலும் அவள் முன்நெற்றி முடிகளை வருடிவிட்டுக் கொண்டே, தன் இமைகள் இரண்டையும் மெல்ல மூடிக் கொண்டார்!

தொங்கவிடப்பட்டிருந்த வண்ண வண்ண ஆடைகள்! ஆங்காங்கே அலங்கார பொம்மைகள்! அறை உட்கூரையின் வட்டவடிவ மஞ்சள் நிற விளக்கிலிருந்து வந்த ஒளி! பளபளக்கும் தரை! லக்ஷ்மி மடியில் தலை சாய்த்திருந்த மினி!

ஓர் அழகான காட்சியாக… பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய ஞாபகமாக… லக்ஷ்மிக்குத் தோன்றியது!!

******************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!