Neer Parukum Thagangal 12.2

NeerPArukum 1-5c1573b1

Neer Parukum Thagangal 12.2


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 12.2

மனிதநேயம் பேசும் மஹிமா – வழக்கறிஞர் கார்த்திகேயன் – பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி!

மஹிமா சொல்லி முடித்ததும், “மஹி, அவங்ககிட்ட நான் பேசணும். நீ ஃபோன ஸ்பீக்கர்ல போடேன்” என்று கேட்க, “ஃபோன் ஸ்பீக்கர்லதான் இருக்கு” என்று சொல்ல, “சொல்லுங்க, என்ன பேசணும்?” என பைரவி சொன்னபிறகு, கார்த்தி பேச ஆரம்பித்தான்.

“எதுக்காக இங்க வந்து இந்த மாதிரி பண்ணனும்? கம்ப்ளைன்ட் எடுத்துக்காத ஸ்டேஷன் முன்னாடியோ, இல்லை உங்க பேக்டரி முன்னாடியோ போராட்டம் நடத்தியிருக்கலாமே?” என்று முதல் கேள்வியைக் கேட்டான்.

“முதல இதை யோசிக்கலை. ஆனா ஏஞ்சலுக்கு இப்படி ஆனதுக்கப்புறமா ஒரு தடவை ட்ரை பண்ணோம். அப்போ அந்த இன்ஸ்பெக்டர் கேஸ் பைல் பண்ணி அரெஸ்ட் பண்ணிடுவேன்னு மிரட்டினாரு” என்று பதிலளித்தாள்.

“ஸோ அரெஸ்ட்க்கு பயந்து போராட்டத்தைக் கைவிட்ருக்கீங்க?”

“அப்படிக் கிடையவே கிடையாது. எந்த ஒரு தீர்வும் இல்லாம அரெஸ்ட் ஆகி என்ன யூஸ்னு சொல்லுங்க?!”

“மீடியாகிட்ட ஹெல்ப் கேட்டிருக்கலாமே?”

“என்னால முடிஞ்சளவு முயற்சி பண்ணி சில பேர்கிட்ட கேட்டுப் பார்த்தேன். யாரு, என்னென்னு விவரம் சொல்லாம விஷயத்தை மட்டும் போடறோம்னு சொன்னாங்க. வேண்டாம்னு விட்டுட்டேன்”

“கன், கத்தி எப்படி உள்ளே எடுத்திட்டுப் போனீங்க?”

“மேரி ஆண்ட்டி இங்கதான் செக்யூரிட்டியா வேலை பார்க்கிறாங்க. அவங்க ஹெல்ப்லதான் உள்ள வந்தோம்”

“அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“அவங்கதான் ஏஞ்சலோட அம்மா!”

“கன் எப்படி அரேஞ் பண்ணீங்க?”

“கன் டூப்பிளிகேட். மூணே பேர்தான்! கைல கட்டையை மட்டும் வச்சிக்கிட்டு, இத்தனை பேர் இருக்கிற ஒரு இடத்தில இப்படியெல்லாம் பண்ணா, எதிர்த்து தாக்க மாட்டாங்களா? அதுக்காகத்தான் இப்படி ஒரு ஏற்பாடு”

“ஸோ பப்ளிக்க பயமுறுத்தி… பிடிச்சி வச்சி உங்களோட டிமான்ட் சொல்ல பிளான் பண்ணியிருக்கீங்க. சரியா?”

“தப்பிச்சிப் போனவங்களை நாங்க தடுத்து நிறுத்தலையே? அப்புறம் எப்படி பிடிச்சி வச்சிருக்கிறதா சொல்றீங்க?”

“மஹியை வெளிய விடாம வச்சிருக்கீங்க. அதை என்ன சொல்லுவீங்க?”

“மஹிமாவை முதல இங்க பார்த்ததும், வேற யாரும் இருக்காங்களானு செக் பண்ணேன். அவகிட்ட ஃபோன்கூட வாங்கி வச்சிக்கிட்டேன்”

“காரணம்?!”

“எங்களுக்கு நடந்த அநியாயத்தை வெளிய சொல்றதுக்கு முன்னாடி, எங்க அடையாளம் தெரிய வேண்டாம்னு நினைச்சோம்”

“அது புரியுது. காரணம் சொல்லுங்க!”

“பேக்டரி ஓனருக்கு யாரும் சொல்லி, திரும்பவும் அந்த ஆளோட செல்வாக்கை வச்சி எல்லாத்தையும் திசை திருப்பிருவாரோன்னு…” என்று பைரவி முடிக்கும் முன்னே, “ஒரு பயம்னு சொல்லிக்கலாமா?” என்று கார்த்தி கேட்டான்.

“நிச்சயமா சொல்ல முடியாது… சொல்லக் கூடாது! ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு சொல்லுங்க”

அவன் அமைதியாகி இருந்ததும், “நாங்க இங்க யாரையும் கஷ்டப்படுத்தலை. இப்போகூட யாரும் வெளிய போயிருக்கலாம். அதை கண்காணிச்சிக்கிட்டும் இருக்கலை. அப்புறம் மஹிமாவை அப்போவே போக சொன்னேன். அவதான் போகலை. அவ எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிறா. அது ஏன்னு உங்களுக்கே தெரியும்” என்றாள்.

“இப்படியெல்லாம் பேசி செஞ்ச தப்பை நியாயப்படுத்த பார்க்கிறீங்களா?”

“கண்டிப்பா இல்லை” என்றவள், “இப்படியொரு தப்பு நடக்குது! அதனால ஒரு உயிர் போயிருக்குதுன்னு தெரியப்படுத்தி, அதுக்கு ஒரு நியாயம் வேணும்னு பேசிக்கிட்டு இருக்கேன்” என்றாள்.

“ஒரு பயத்தை கிரியேட் பண்ணிட்டு எதையும் கண்டுக்கலை, தடுக்கலைனு சொன்னா எப்படி? உயிர் பயத்தில இருக்கிறவங்க எப்படித் தப்பிச்சிப் போக நினைப்பாங்க?” என்று கார்த்தி கேட்டான்.

எதுவும் சொல்ல முடியாமல் பைரவி அமைதியாக இருந்தாள்!

மேலும் கார்த்தியே, “இப்பகூட ஒரு போலீஸ நம்பிதான், இந்த மாதிரி பண்ணி இருக்கிறீங்க. ஸ்டேஷன்லயும், கோர்ட்டலயும் நியாயமா நடந்துக்கிறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க. இதுமாதிரி செய்றதுக்குப் பதிலா, அவங்ககிட்ட என்ன ப்ராப்ளம்னு சொல்லியிருக்கணும். அதைவிட்டுட்டு இப்படிப் பண்றது உங்களுக்கே தப்பா தெரியலையா?” என்றான் கண்டன குரலில்!

“நியாயம் வேணும்னு போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் போகலாம். ஆனா அங்க போய் யார் நியாயமா நடந்துப்பாங்கனு பார்க்கச் சொல்றது உங்களுக்கே அநியாயமா தெரியலையா?” என்று ஓர் கேள்வி கேட்டாள் பைரவி.

கார்த்தி வழக்கறிஞர்தான்! வாதாடுபவன்தான்! ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இருந்தான்!

சிலநொடிகள் இருபக்கமும் அமைதி நிலவியது!!

அதன்பின் கார்த்தி, “நீங்க என்ன சொன்னாலும் உங்க மேலயும் கேஸ் பைல் பண்ணுவாங்க” என்றவன், “இதெல்லாம் விட்டுடுங்க. ஆக்சுவலா உங்களோட பிளான் என்ன?” என்று கேட்டான்.

“செக்யூரிட்டிய விசாரிக்கிறப்ப, மேரி ஆண்ட்டி பேசறதைச் சரியா கவனிச்சா, போலீஸ் ‘என்ன? ஏது?’-ன்னு ஆண்ட்டிகிட்ட கேட்பாங்க. அப்ப அங்க இருக்கிற பப்ளிக், மீடியா முன்னாடி எங்களுக்கு நடந்ததை அவங்க சொல்லணும். அந்த பேக்டரில வேலை செய்யற பொண்ணுங்களுக்கு நடக்கிற அநியாயம் பத்தி எல்லாருக்கும் தெரிய வரணும். அதுதான் எங்க நோக்கம்” என்றாள்.

“ஓகே எனக்கு சில டீடெயில்ஸ் வேணும். சூப்பர்வைசர், டேரைக்டர் ரெண்டு பேர்ல யாராவது உங்களுக்காகப் பேசுவாங்களா?” என்றான் கடகடவென!

“சூப்பர்வைசர் பேசுவார்னு நினைக்கிறேன். உறுதியா சொல்ல முடியலை” என்றாள் தாமதிக்காமல்!

“பார்த்துக்கலாம்” என்றுவிட்டு, “ஸ்டேஷன்ல ஒரு லேடி கான்ஸ்டபிள் ஹெல்ப் பண்ணதா சொன்னீங்கள?” என கார்த்தி ஆரம்பிக்கவும், “அவங்களைப் பத்தி ரொம்ப தெரியாது” என்று பைரவி குறுக்கிட, “பரவாயில்லை. நீங்க ஸ்டேஷன் டீடெயில்ஸ் மட்டும் சொல்லுங்க. போதும்” என்றதும், அவள் சொன்னாள்.

மேலும், “அவங்க சொன்னாங்கனு ஹயர் ஆபிசரை போய் பார்த்தீங்கள, அது யாரு, என்னென்னு சொல்லுங்க?” என அவன் கேட்டதும், அந்த விவரங்களும் பைரவி சொன்னாள்.

“லாயரோட போய் பார்த்தீங்களா?”

“ரெண்டு லாயர்கிட்ட போய் இதைப் பத்தி சொன்னோம். ஒருத்தர் கேட்ட பீஸ் எங்களால கொடுக்க முடியலை. இன்னொருத்தர் முடியாதுனு சொல்லிட்டாரு. அதான் நாங்களே போனோம்” என்றாள்.

“லாயரோட போயிருந்தா பெட்டரா இருந்திருக்கும். இதுதான் ப்ராப்ளம்-னு கோர்ட்ல பெட்டிஷன் போட்டிருந்தா, எப்ஐஆர் போடணும்னு அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு நோட்டீஸ் கொடுத்திருப்பாங்க” என்றான்.

பைரவி பேசாமல் இருந்ததும், “ஓகே! அது முடிஞ்சிருச்சு. விடுங்க” என்றவன், “கம்ப்ளைன்ட் கொடுக்கிறப்ப ஸ்டேஷன்ல ஏதாவது எவிடென்ஸ் ப்ரொடியூஸ் பண்ணீங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்ம், ஆடியோ எவிடென்ஸ் கொடுத்தேன். இருந்தும் எப்ஐஆர் போடலை”

“அதுக்காக கேட்கலை. அங்க கொடுத்தது மட்டுமா? இல்லை உங்ககிட்டயும் இருக்குதா?”

“என்கிட்டயும் இருக்கு”

“ஓகே! வெல்பேர் கமிட்டிக்கு அனுப்புறதுக்கு ஒரு பெட்டிஷன் ரெடி பண்ணதா சொன்னீங்களா? இன்னும் அதை வச்சிருக்கீங்களா?”

“ம்ம், ஆனா அதுல ரெண்டு பேர்தான் சைன் போட்ருக்காங்க”

“பரவால்ல பார்த்துக்கலாம்” என்றவன், “அன்ட் இந்த மர்டர் கேஸ் ரெஜிஸ்டர் ஆகியிருக்கிறது அதே போலீஸ் ஸ்டேஷனா?” என்று கேட்டான்.

“ஆமா” என்ற போது அவள் பதில் சொல்லும் வேகம் குறைந்து, “ஆனா ஏஞ்சல் கேஸ்ல காம்பென்சேஷன் பத்தி பேசறாங்க” என்றாள்.

“சிவில் கேஸா ரெஜிஸ்டர் ஆகியிருந்தா காம்பென்சேஷன் தர்ற மாதிரிதான் இருக்கும். போஸ்ட்மார்ட்டம் நடந்ததா?”

“ம்ம்”

“ம், அந்த டீடெயில்ஸ் வச்சி இந்த கேஸ் பார்த்துக்கலாம்” என்றவன், “அட்டாக் பண்ணவங்க டீடெயில்ஸ் தெரியுமா?” என்று கேட்கவும், “ஒருத்தனைப் பத்தி எனக்குத் தெரியும். இன்னொருத்தனைப் பத்தி கூட வேலைப் பார்க்கிறவங்க சொன்னாங்க” என்று அந்த விவரங்கள் சொன்னாள்.

“அப்போ ஆளுங்க இருந்தாங்களா?”

“ஈவினிங் ஷிஃப்ட் முடிஞ்ச வர்ற டைம். அடிச்சிட்டு அவனுங்க ஓடிட்டானுங்க. அதுக்கப்புறம் என் ஷிஃப்ட் ஆளுங்கதான் ஹெல்ப் பண்ண வந்தாங்க. ஆனா கோர்ட்டுல சாட்சி சொல்ல வருவாங்களானு தெரியலை” என்றாள் குறைந்து போன குரலில்.

“பேசிக்கலாம்” என்றவன், “பாருங்க… நான் தனியா எதுவும் பண்ண முடியாது. டிபார்ட்மென்ட்லதான் ஹெல்ப் கேட்கணும். ஸோ, நீங்க வெளிய வந்திடுங்க. அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்” என்றான் நம்பிக்கையாக!

“அரெஸ்ட் நடக்கட்டுமே… இல்லைனா இந்தமாதிரி ஒரு தப்பு இந்த பேக்டரில நடக்குதுனாவது தெரியட்டுமே?!” என்றாள் முந்தைய முயற்சிகளின் தோல்வி தந்த நம்பிக்கையின்மையால்!

“புரிஞ்சிக்கோங்க. போலீஸ்கிட்ட பேசறப்போ உங்க சைடுலருந்து யாரவது ஒருத்தர் இருக்கணும். அதுக்காக கேட்கிறேன்”

“அப்போ மேரி ஆண்ட்டி வெளிய இருக்காங்க. அவங்களை வந்து உங்களை பார்க்கச் சொல்லவா?”

“சீக்கிரமா சொல்லுங்க” என அலைபேசியை வைக்கப் போகையில், மஹிக்கு என்னாயிற்று என கார்த்தி கேட்க நினைத்தான். ஆனால் இந்நேரத்தில் எப்படி என்று தயங்கி இருந்தான்

அந்த நேரத்தில், “மஹிமாக்கு கால்ல அடிபட்டிருக்கு. அப்போருந்து அவகிட்ட ‘என்னாச்சு?’னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க. அதான் சொன்னேன்” என பைரவி வேக வேகமாக சொன்னாள்.

எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், “ஃபோன அவகிட்ட கொடுங்க” என்று கார்த்தி சொன்னதும், அலைபேசியை மஹிமாவிடம் கொடுத்துவிட்டு பைரவி எழுந்து சென்றாள்.

மஹிமா ஸ்பீக்கர் மோடிலிருந்து அலைபேசியை மாற்றி, “ஹலோ” என்றதும், பைரவி கூறியதை வைத்து, “ஃபோன் இவ்ளோ நேரம் ஸ்பீக்கர்ல இருந்ததா?” என்று கார்த்தி கேட்க, “ம்ம்ம்” என்றாள் மஹி.

“இப்போ இல்லைல?” என்று கேட்க, “ம்கூம்” என்றாள்.

உடனே காயம்பட்டிருக்கிறாள் என்பதற்கான உணர்வினை வெளிப்படுத்தும் குரலில், “பயப்படற மாதிரி ஒன்னும் இல்லைல மஹி?” என்று கேட்க, “ம்கூம்” என்றாள் அதற்கும்!

அதேநேரம் தன்னிடம் சொல்லவில்லை என்ற கோபத்தை காட்டிடும் குரலில், “அடிபட்டிருக்குனு ஏன் சொல்லல? ப்ச், எத்தனை தடவை கேட்ருப்பேன் மஹி? அப்படியென்ன கோபம்?” என்றும் கேட்டான்.

மஹி அமைதியாக இருந்தாள்!

அவள் காயத்திற்கு உடனே மருந்திட வேண்டுமென்று தோன்ற, “இனி நீ உள்ள இருக்க வேண்டிய அவசியமில்லை. வெளிய வந்திடேன்” என்றதும், “ம்ம்ம், பார்க்கிறேன்” என்றாள்.

என்ன நினைத்தானோ, “சரி வச்சிடறேன். எதும்னா உடனே எனக்கு ஃபோன் பண்ணிடனும்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

எதையோ நினைத்தபடி மஹிமா பைரவியைப் பார்க்க, அதுவரை வெளியில் நடப்பவைகளை உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்திய மேரியை அழைத்து கார்த்தியைச் சந்திக்குமாறு சொன்னாள்.

****************************

வணிக வளாகத்தின் வெளியே

அதே சூழல்தான்! மாலை நேரத்து வெட்பம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. சரவணன் சித்தப்பா, சித்தி உட்பட உள்ளே மாட்டியவர்களின் உறவுகளில் சிலர் சோர்ந்து போயிருந்தார்கள். செல்வி அக்காவோ வீட்டினர் வற்புறுதலைச் சமாளிக்க முடியமால் கிளம்பியிருந்தாள்.

எவ்வளவு நேரமானாலும் செய்தி சேகரிக்க வேண்டி ஊடகத்தினர் அப்படியே நின்று கொண்டிருந்தார்!

******************************

கடமை தவறா காவலர் பெனசீர்

தினேஷும் பெனசீரும் பேசிக் கொண்டிருக்கையில்… செந்தில் வந்து, “மேடம், அந்த செக்யூரிட்டி ஃபோன் கால் டீடெயில்ஸ் பார்த்ததுல, இந்த ஒரு நம்பருக்கு கால் போயிருக்கு. அன்ட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அதே நம்பர்லருந்து கால் வந்திருக்கு” என்றான்.

“செக்யூரிட்டி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணியா?” என்று தினேஷ் கேட்க, “பேரு மேரி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவங்க பொண்ணு ஒரு ஆக்சிடென்ட்ல இறந்திருக்காங்க. அதுல கொஞ்சம் சந்தேகம் இருக்க மாதிரி தெரியுது” என சேகரித்த விவரங்களைச் செந்தில் சொன்னான்.

“யாரோட நம்பருக்கு கால் போயிருக்கு?”

“பைரவி”

“அது யாரு?”

“ஏஞ்சல் கூட வேலை பார்த்த பொண்ணு. ஏஞ்சல் மேரியோட பொண்ணு. இப்போதைக்கு இவ்வளவு டீடெயில்ஸ்தான் கலெக்ட் பண்ண முடிஞ்சது”

அதுவரை அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பெனசீர், “அந்த நம்பர் லொகேஷன் பார்த்தீங்களா?” என்று கேட்டார்.

“எஸ் மேடம். இந்த சரௌண்டிங்லதான் காட்டுது” என்றான் செந்தில்.

பெனசீர், ‘சந்தேகப்பட்டது சரிதானோ?’ என்ற யோசனையில் இருக்க, “மேடம், இவங்களை டவுட் பண்றீங்களா??” என்று தினேஷ் கேட்டதும், “ம்ம்ம்” என்று பெனசீர் சொல்ல, “எப்படி மேடம்?” என்றான் செந்தில்.

“இவங்க மட்டும்தான், ‘படிக்கட்டு வேலை நடக்கிறதால, அது வழியா என்ட்ரி இல்லை’னு சொன்னாங்க. ஸோ ஸ்டெப்ஸ் வழியா அந்த மூனு பேரும் உள்ளே போறதுக்கு இவங்தான் ஹெல்ப் பண்ணியிருக்கணும்.

அன்ட் இன்னைக்கு ஒரு ப்ரோக்ராம் நடந்ததுன்னு சொன்னதும் இவங்கதான்! அதுவும் ஏதோ காரணமாதான் சொல்லிருக்காங்க. அதுலதான் ஏதோ இருக்கு. அவங்களை விசாரிச்சாதான் தெரியும்.

முகமூடி போட்டிருந்ததுல ஒருத்தர் பொண்ணு-னு சொன்னாங்கள, அது இந்த பைரவின்னு நினைக்கிறேன். இதெல்லாம் பார்க்கிறப்போ, அவங்க எதையோ நமக்கு தெரியப்படுத்த வர்ற மாதிரி இருக்கு” என்ற பெனசீர், “அவங்களைக் கூப்பிடுங்க. விசாரிக்கலாம்!” என்றார்.

“ஓகே மேடம்” என்று செந்தில் திரும்புகையில், வணிக வளாகத்தின் வாயில் செக்யூரிட்டி மேரி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

‘இவர் ஏன் வருகிறார்?’ என்ற கேள்வியுடன் மூவரும் இருக்க, அவர்கள் அருகில் வந்திருந்த மேரி, “மேடம், முக்கியமான ஒருத்தரை பார்த்திட்டு வரணும். இங்க பக்கத்திலதான் நிக்கிறாரு. போகலாமா?” என்று அனுமதி கேட்டார்.

“இல்லை உங்ககிட்ட…” என்று தினேஷ் விசாரிப்பது பற்றிச் சொல்ல வரவும், ‘வேண்டாம்’ என்று சைகை செய்த பெனசீர், “ம், போங்க” என்றார்.

மேலும் செந்திலைப் பார்த்து, “பேரிகேட்ல நிக்கிற கான்ஸ்டபிள்கிட்ட ஃபோன் பண்ணி இவங்களை விடச் சொல்லிடுங்க” என்று சொல்ல, சரியென அவனும் தலையாட்டினான்.

“தேங்க்ஸ் மேடம்” என்று சொல்லி மேரி சென்றதும், “ஏன் மேடம் அவங்களை விட்டிங்க?” என்றான் தினேஷ்.

“வெளியேருந்து யார் சப்போர்ட் பண்றாங்கன்னு தெரியனும்ல” என்று எழுந்த பெனசீர், “செந்தில் நீங்க இங்க பார்த்துக்கோங்க. நாங்க அவங்களை பாலோவ் பண்றோம்” என்று உத்தரவிட, “ஓகே மேடம்” என்றான்.

பெனசீரும் தினேஷும் சேர்ந்து மேரியைப் பின்தொடர்ந்தனர்.

மஞ்சள் நிற தடுப்புகளைத் தாண்டி… அங்கே நின்ற சில ஆட்களைக் கடந்து டீ கடை ஒன்று இருந்தது. அங்கே கார்த்தி நின்று கொண்டிருந்தான். காரியமே கண்ணாய் விறுவிறுவென மேரி நடந்து வந்து அவன் முன் நின்றார்!

அவரைப் பின்தொடர்ந்த பெனசீரும், தினேஷும் வந்திருந்தார்கள்!

காவலர் பெனசீர், ‘இன்று இங்கு நடந்த சம்பவத்தில் உன் பங்கு என்ன? இதில் உனக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது?’ என்ற கேள்விகளுடன் வழக்கறிஞர் கார்த்திகேயன் முன்னே சென்று நின்றார்!!

****************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!