Neer Parukum Thagangal 14.1
Neer Parukum Thagangal 14.1
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 14.1
வணிக வளாகத்தின் வெளியே – பெனசீர் குழு!
மளமளவென வேலைகள் நடந்திருந்தன!
அந்நகரத்தின் ஆணையரை அழைத்து அனைத்து விவரங்களையும் பெனசீர் அவரிடம் தெரிவித்திருந்தார். லஞ்சம் பெற்றுக் கொண்டு வழக்கினைப் பதிவு செய்யாத காவல்துறையைச் சார்ந்தவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்திருந்தார்.
மேலும் அவர் உத்தரவின் பேரில், அதே காவல் நிலையத்தில் ஏஞ்சல் மரணம் குறித்து இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல் கார்த்தி, இந்த பிரச்சனைக் குறித்து சமூக நலக்குழுவிற்கு பைரவி அனுப்ப நினைத்த மனுவில் கையெழுத்திட்ட இரு பெண்களை வரவழைத்துப் பேசினான். நடந்ததை எடுத்துக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெயரில் பணியிடத் தொந்தரவு வழக்கில் அவர்களது பெயரையும் சேர்த்தான்.
மேலும் ஏஞ்சல் கொலை செய்யப்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் யாரெல்லாம் அந்த இடத்தில் இருந்தார்கள் என்று பைரவியிடம் கேட்டான். அவளும் ஞாபகம் இருந்தவரை ஆட்கள் விவரங்கள் சொன்னாள்.
அதில் மூவரிடம் பேசினான். ஒருவர் மட்டும் ஏஞ்சல், பைரவி தாக்கப்பட்டதை நேரில் பார்த்ததாக சாட்சி சொல்ல வர ஒத்துக் கொண்டார்.
இந்தக் குறுகிய காலநேரத்தில் இவ்வளவுதான் கார்த்தியால் முடிந்தது. சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று விசாரித்தால் மேலும் சில பாதிக்கப்பட்டவர்கள் பேச முன்வருவார்கள். கூடுதலாக சாட்சிகளும் கிடைக்கும் என நம்பினான்.
மேலும் ஒருபக்கம் மஹியின் காயத்தை யோசித்துக் கொண்டே இருந்தவன், முதலுதவிக்கு என்றிருந்த மருத்துவ குழுவிடம் இந்த விடயத்தைச் சொல்லி, பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டான்.
இதற்கிடையே… பைரவி, ஏஞ்சலை தாக்கிய இரண்டு பேரில் ஒருவனைத்தான் தினேஷால் பிடிக்க முடிந்தது. அவனிடம் விசாரித்த விதத்தில் ‘ப்ரோடைக்ஷன் மேனேஜர்’ சொல்லித்தான் இருவரையும் தாக்கியதாக உண்மையை ஒப்புக் கொண்டிருந்தான்.
அதனை ஒரு வாக்குமூலமாக வாங்கிக் கொண்டு, அவன் இங்கே அழைத்து வரப்பட்டிருந்தான். இதில் தொடர்புடைய மற்றொருவன் தப்பித்துவிட்டான். அவனைத் தேடும் பணியில் தினேஷ் குழு ஆட்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.
அந்தப் பகுதி காவலர்கள் உதவியுடன்தான் இதை தினேஷ் செய்திருந்தான்!
ஏஞ்சல் மரணம் கொலையா, தற்செயலானதா என்ற விசாரணைகள் இனி வரும் நாட்களில் நடைபெறும்!
இதேநேரத்தில் பணியிடத்து பாலியல் தொந்தரவு என ‘ஸீரோ எப்ஐஆர்’ பதிவு செய்யப்பட்டது. பைரவி, ஏஞ்சலை தாக்கியவன் கொடுத்த வாக்குமூலத்தைக் கொண்டு ‘ப்ரோடைக்ஷன் மேனேஜர்’ பிடித்து வரப்பட்டிருந்தான்.
கைது நடவடிக்கை, விசாரணைகள் கூடிய விரைவில் நடைபெறும்!
அனைத்துமே சாட்சிகளோடு கூடிய வழக்காகப் பதிவு செய்யப்பட்ட பின்னர், பெனசீர் ஊடகத்தைச் சந்தித்தார். இந்த உணவுத் தொழிற்சாலையில் வேலை செய்யும் பெண்களுக்கு இன்னாரால் இப்படியொரு அவலம் நடக்கிறது என்று விவரமாக சொல்லிமுடித்தார்.
மேலும் தொழிற்சாலையின் முதலாளி அதை மூடி மறைக்கும் முயற்சித்தார் என்பதையும் சொல்லிவிட்டார். அவ்வளவு நேரம் காத்திருந்த ஊடகங்களில் அந்நேரத்து ‘பிரேக்கிங் நியூஸ்’ இதுதான் என்றாயிற்று!
போராடிய முறை தவறே என்றாலும் பைரவி போராட்டம் வெற்றி பெற்றது!
பெனசீர் சொன்னதைக் கேட்டதுமே உள்ளே மாட்டிக் கொண்டவர்களுக்காக காத்திருந்த உறவுகளின் முகங்களில் சோர்வையும் தாண்டி ஒரு நிம்மதியும் சந்தோஷமும் தெரிந்தது. அதில் சரவணன் சித்தப்பா, சித்தியும் உண்டு.
அதன்பின் காவலர்கள் வணிக வளாகத்தின் உள்ளே அனுப்பப்பட்டு பொது மக்களை வெளியே அழைத்து வரும் பணிகள் நடக்க ஆரம்பித்தன!
***************************
சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்!
ஒரு முடிவெடுத்திருந்த செல்விக்கு, முதலிலே இதையெல்லாம் யோசித்துப் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. எனினும் தன் பேச்சிற்குக் காரணம் சொன்னால், சரவணன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது.
என்னதான் ஒரு முடிவில் இருந்தாலும், ‘நாமே இவனிடம் சொல்லிவிடலாமா? அக்காவிடம் முதலில் சொல்லலாமா?’ என்ற தயக்கத்திலே செல்வி இருந்தாள். கூடவே, ‘அவன் எப்படி எடுத்துக் கொள்வானோ?’ என்றொரு தவிப்பும் வந்து ஒட்டிக்கொண்டது!
இது போன்ற ஒரு நிலையில் செல்வி இருந்த பொழுது… திடுமென சரவணன் அந்த அறைக்குள் நுழைந்தான். அவனை எதிர்பார்க்கவில்லை என்பது போல் செல்வி விருட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் முடிவு பற்றி எதுவும் தெரியாது என்பதாலும்… தான் உள்ளே வந்ததற்கு ஏதும் சொல்வாளோ என்று நினைத்ததாலும், “வெளிய ஏதோ சத்தம் கேட்குது. அதான்?” என்று வந்ததற்கு காரணம் சொன்னான்.
அதன்பின்தான் அவளும் காதை கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டாள். வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அடுத்த நொடி மகனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு எழுந்துவிட்டாள்.
உள்ளே வந்தவன் விறுவிறுவென சென்று கதவின் அருகே நின்று, வெளியில் ‘என்ன நடக்கிறது?’ என உன்னிப்பாகக் கேட்டான். ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்கவும், வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கடகடவென்று கதவிற்கு அணைவாக வைத்திருந்த பொருட்களை எடுத்து வைத்தான்.
‘அந்த முகமூடி நபர்களாக இருக்குமோ?’ என்கின்ற பயத்தில் சில நிமிடங்கள் கதவைத் திறக்காமல் நின்றான். பின்னர் மெதுவாக… கொஞ்சமாக… திறந்து பார்த்தான். காவலர் ஒருவர் நிற்பது தெரிந்ததும், கதவை முழுதாகத் திறந்து வெளியே வந்தான். அங்கங்கே காவலர்கள் இருந்தனர்.
அவனைப் பார்த்ததும் காவலர், “மாட்டியிருந்தீங்களா? நீங்க மட்டுமா? வேற யாரும் இருக்காங்களா தம்பி?” என அவன் கழுத்தை விகற்பமாக பார்த்தபடி கேட்க, அவரது பார்வையைப் பொருட்படுத்தாமல், “இருக்காங்க சார்” என்று உள்ளே நின்ற செல்வியைப் பார்த்தான்.
‘இனி தன் முடிவை எப்படிச் சொல்ல?’ என்ற தவிப்பு ஒரு பக்கம்! ‘எப்படியோ தப்பியாயிற்று!’ என்ற நிம்மதி மறுபக்கம்! இப்படி ஒரு நிலையில் அவனைப் பார்த்தபடியே வெளியே வந்த செல்வியிடம், “ஒன்னும் பிரச்சனை இல்லை. கிளம்புங்க” என்று காவலர் சொன்னார்.
கையில் மகனை வைத்துக் கொண்டு, கடையின் முன்பகுதியைத் தாண்டி வருவதற்கு காவலர் கொஞ்சம் உதவி செய்ய செல்வி வெளியே வந்தாள்.
இதே நேரத்தில் உட்புறக் கதவை மூடிவிட்டு, முன்பகுதி அலமாரியில் இருந்த பூட்டை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், “உங்க கடையா தம்பி?” என்று காவலர் கேட்டதற்கு, “ஆமா சார்!” என்று ஷட்டரை இழுத்து மூடி கடைக்குப் பூட்டுப் போட்டான் சரவணன்.
“அடி பட்டிருக்கா?” என இருவருக்கும் பொதுவாகக் காவலர் கேட்க, ‘இல்லை’ என சரவணன் தலையசைத்தான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் பதில் சொல்லாமல் நின்றவளிடம், “உனக்குமா, பையனுக்கு?” என தனியாக கேட்டதும், “இல்லை சார்” என சொல்ல, “கிளம்புங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர் சென்றதுமே சரவணனிடம் பேசவென்று செல்வி நினைக்க… அவனோ கடையின் பூட்டை ஒருமுறை சரி பார்த்துவிட்டு, அதற்குமேல் அங்கே நிற்பது சரியல்ல என்று தோன்றியதால் விருட்டென்று கிளம்பிவிட்டான்.
போகின்றவனையே செல்வி பார்த்து நின்றாள்!
அவன் பெயர் சொல்லி செல்வி அழைத்திருந்தால், சரவணன் நிச்சயம் நின்று என்னவென கேட்டிருப்பான். அவளும் அவள் முடிவைச் சொல்லியிருக்கலாம். ஆனால் இலகுவாக எதையும் ஆரம்பிக்க அவளால் இயலவில்லை!
அவன், ‘ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே?’ என அவளுக்குத் தோன்றவும், சில வினாடிகள் சிலையாய் நின்றாள். அதன்பின் சிதறியிருந்த கண்ணாடிச் சில்லுகள் ஊடே கவனமாக நடந்து, சம்பவம் நடப்பதற்கு முன் அமர்ந்திருந்த மேசையருகே வந்தாள்.
மேசை மீது மகனை உட்கார வைத்துவிட்டு, கீழே கிடந்த சம்படத்தை எடுத்து பைக்குள் வைத்தாள். மேசையிலிருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவளது அக்கா பலமுறை அழைத்திருந்தாள்.
இப்போது ‘அழைக்கவா? வேண்டாமா?’ என யோசிக்கையில், மீண்டும் அவள் அக்காவிடமிருந்து அழைப்பு வந்தது. “ஹலோ அக்கா” என அழைப்பை ஏற்று சொல்லவும்… மறுமுனையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, “ஒன்னுமில்லை-க்கா. அவனுக்கும் ஒன்னுமில்லை” என்று பதில் சொன்னாள்.
அந்தப் பக்கம் அவள் அக்கா ஏதோ சொல்ல, “அதெல்லாம் வேண்டாம்-க்கா” என்று சொல்லிப் பார்த்தாள். அந்த மறுப்பிற்கும் அங்கே ஏதோ சொல்லப்பட, “சரிக்கா. பஸ் ஏறிட்டு ஃபோன் பண்றேன்” என்று சொல்லி அலைபேசியை வைத்துவிட்டாள்.
அக்காவிடம் முடிவைச் சொல்லியிருக்கலாமோ? என்று நினைத்தவள், இந்தச் சூழ்நிலையில் எப்படி? என்பதால் அதை விட்டுவிட்டாள். சற்று நேரம் எதுவுமே நினைக்கப் பிடிக்காமல், செய்ய விருப்பமில்லாமல் மகனைப் பிடித்தபடியே நின்று கொண்டிருந்தாள்.
ஏனோ தொண்டை அடைத்து கண்கள் இரண்டும் கரிப்பது போல் இருந்தது!
அந்த நேரத்தில், ‘கிளம்புங்க… கிளம்புங்க’ என ஒரு காவலர் சத்தம் கேட்டதும், ‘ப்ச், இன்னைக்கு வந்திருக்கவே கூடாது’ என முணுமுணுத்தபடியே, மகனைத் தூக்கி, கைப்பையை எடுத்துக் கொண்டு ஒருவித சங்கடத்துடன் அங்கிருந்து கிளம்பினாள் செல்வி!!
**********************************
கருத்தாய் பேசும் கண்மணி, சேது!
அந்த அறையிலிருந்த கனமான அட்டைப் பெட்டி ஒன்றின் மீது முட்டி போட்டு அமர்ந்து அலைபேசியில் சமிக்கை கிடைக்குமா என்று பார்த்தபடி கண்மணி சேதுவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
‘எவ்வளவு நேரம்தான் உள்ளே இருக்க வேண்டும்?’ என்ற சலிப்பில், வெளியே சென்றுவிட நினைத்திருந்தார்கள். அதற்கான ஒரு முயற்சியாக, சேது கதவை உடைக்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பேச்சை தொடர்ந்த கண்மணி, “சேது எனக்கு ஒரு டவுட்! போலீஸ்க்கு ஹெல்ப் பண்ணலாம்னு உள்ளே இருந்ததா சொன்ன. சப்போஸ் இந்த பில்டிங்ல பாம் வச்சிருந்தா, அது உன்னோட உயிருக்கு ஆபத்துனு யோசிக்கலையா?” என்று யோசித்துக் கேட்டாள்.
“அப்படி பாம் வச்சிருந்தா… யாரையும் தப்பிச்சி ஓட விட்ருக்க மாட்டாங்களே? அன்ட் திங்ஸத்தான் அடிச்சி உடைச்சாங்களே தவிர பப்ளிக் ஒருத்தரையும் அவங்க அட்டாக் பண்ணலை.
ஏன், என்னென்னு தெரியாது. பட் இதை கவனிச்சேன். ஸோ இங்க இருந்தேன்” என்று கதவு கைப்பிடியைப் பிடித்து முன்னும் பின்னும் இழுத்தான்.
“ஓஹ்!” என அவன் சொன்னதை யோசித்தவள், “அப்ப நான் கதவை உடைச்சி வெளிய போறேன்னு சொன்னப்ப ஏன் தடுத்த?” என்று கேட்டதும், திரும்பி அவளைப் பார்த்து நின்றான்.
“நீ அவங்களை ஏதோ கோபப்படுத்திட்டு உள்ளே வந்திருப்ப. அதான் இங்கே வச்சி உன்னை லாக் பண்ணிருப்பாங்க. உடனே வெளிய போயிருந்தா, அந்த கோபத்தைக் காட்டறதுக்கு சான்ஸ் இருக்குதுல?” என காரணம் கூறினான்.
“ஓ!” என்றவள், “இப்ப அவங்க கோபம் குறைஞ்சிருக்கும். அதோட வேற எதும் பெருசா நடக்கல. ஸோ வெளிய போறதுக்கு ட்ரை பண்ற! கரெக்ட்டா சேது?” என்று கேட்டாள்.
கதவு கைப்பிடியை வலுவாக இழுத்தபடி, “அதான் தெரியுதுல?! சிக்னல் செக் பண்றதுக்குப் பதிலா இங்க வந்து ஹெல்ப் பண்ணேன் கண்மணி ” என வெளி உலகிற்குப் போக நினைத்துக் கேட்டான்.
பதில் சொல்லாமல் கண்மணி லேசாக சிரிக்கவும், “ஹே இப்ப ஏன் சிரிக்கிற?” என்று திரும்பி கதவில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்துக் கேட்டான்.
“ஸ்டார்ட்டிங்ல நான் அங்க நின்னு கதவை உடைக்க ட்ரை பண்ணேன். அன்ட் நீ இதுமாதிரி நின்னு சிக்னல் செக் பண்ணிக்கிட்டு இருந்த. இப்ப அப்படியே மாறி இருக்கு!” என்றாள்.
‘அட ஆமாம்’ என்று அவன் அதிசயத்து நின்றான்!!
மெல்ல சிரித்துக் கொண்டே, “அப்போ என்ன சொன்ன சேது? ‘எங்க இப்போ சொல்லு பார்க்கலாம்?’ அப்படித்தான?” என்று அப்போது அவன் சொன்னது போல் பேசிக் காண்பித்தாள்.
அதைக் கேட்டு, ‘பாருடா!’ என்று ஆச்சரியம் கொண்டாலும், “ஹலோ ரொம்ப பேசக்கூடாது” என்று ஆட்சேபித்தான்.
“இப்படிச் சொன்னா நான் பயந்திடுவேனா? இல்ல நான் பயந்திடுவேன்னு, நீ நினைக்கிறியா?” என அப்போது அவன் கேட்டதைப் போலவே கேட்டாள்!
ஒரு புன்சிரிப்புடன், “லைஃப் இன்டர்ஸ்டிங்கா இருக்கப் போகுது கண்மணி… உன்னால!” என்றான் ரசனையுடன்!
அகம் ஆனந்தம் அடைந்தாலும், “அது சரி” என அலுத்துக் கொண்டாள்!
இருவரும் சிரித்துக் கொண்டார்கள்!
அக்கணம் அவர்கள் சிரிப்பைத் தாண்டி வெளியே ஆட்கள் சத்தம் கேட்கவும், “யாரோ வந்திருக்காங்க” என்று, “ஹெல்ப் ஹெல்ப்” என சேது கத்தும் போதே கண்மணியும் இறங்கி வந்து, “ப்ளீஸ் கதவைத் திறங்க” என்று கத்தினாள்.
அந்த நேரத்தில், “யாரும் இருக்கீங்களா?” என்ற குரல் கேட்டதும், “ஆமா சார்” என இருவரும் சேர்ந்து சத்தமாக சொன்னதும், சில நொடிகளில் வெளிப்புற தாழ்ப்பாள் திறக்கப்பட இரண்டு பேரும் வெளியே வந்தனர்.
உடனே கண்மணி, “அம்மாக்கு ஃபோன் பண்ணனும் சேது” என்று வெளிச்சம் குறைந்த குறுகலான இடுக்குப் பாதை வழியே வேகமாக சென்றுவிட்டாள்.
காவலருடன் சேர்ந்து அலைபேசியில் கண்மணி பேசிக் கொண்டிருக்கும் பக்கமாக சேது வந்து நின்றான். அவனிடம் சிலநொடிகள் பேசிவிட்டு காவலர் வேறுபுறம் சென்றுவிட்டார்.
சேது அவளுக்காக காத்திருந்தான்.
அங்கே கண்மணி, “ம்மா, எனக்கு ஒன்னுமில்லை. சரியா… சேஃபா இருக்கேன் சரியாம்மா… பயப்பிடாதீங்க. பயப்படக் கூடாதும்மா” என்று அலைபேசியில் பொறுமையாக பேசிக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடத்திற்குப் பின் வந்தவள், “அது… அப்ப அம்மாகிட்ட ஏழு மணிக்கே வந்திடுவேன்னு சொல்லியிருந்தேன்ல… அதான் லேட்டானதும், ‘என்ன ஏது?’னு தெரியாம அம்மா பயந்திருக்காங்க. அப்புறம் டிவில ‘இங்க இப்படி’னு நியூஸ் பார்த்ததும் இன்னும் பயந்திருக்காங்க.
இங்க வரணும்னு நினைச்சாங்களாம். ஆனா அப்பாவைத் தனியா விட்டு வர முடியாதுல… அதோட என் ஃபோன் வேற ரீச் ஆகலைல… ‘என்ன செய்ய?’ன்னு தெரியாம டென்ஷன் ஆயிட்டாங்களாம்” என்றபோது, சற்று நேரத்திற்கு முன் இருந்த இலகுதன்மை அவளிடம் குறைந்திருந்தது.
அவள் பெற்றோரது பயம்… அவள் இயல்பு மாறியது பற்றிப் புரிந்ததால், சேது அமைதியாக அவளையே பார்த்து நின்றான்.
ஒரு நெடுமூச்சி எடுத்து தன்னை இயல்பாக்கி கொண்டு, “ஆனா அம்மாகிட்ட பொறுமையா பேசி அவங்களோட டென்ஷனை குறைச்சிட்டேன்” என்றவள், “அப்புறம் சேது, போலீஸ் என்னைப் பத்திக் கேட்டதா அம்மா சொன்னாங்க. ஏன்னு தெரியலை…” என்றாள்.
“அப்படியா?” என கண் சுருக்கியவன், “இப்ப போனாரே கான்ஸ்டபிள், அவரும் உன்னை இன்ஸ்பெக்டர் பார்க்கணும்னு சொன்னதா சொன்னாரு” என்றான்.
“எதுக்குன்னு சொன்னாரா?”
“இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்டுக்கோங்கன்னு சொல்லிட்டாரு”
“எதுக்கா இருக்கும்?” என்று யோசித்தவள், “சரி… நீ வீட்டுக்கு கிளம்பு. நான் இதைப் பார்த்துக்கிறேன்” என்றாள்.
“வீட்டுக்கா? நான் ஒர்க் ரீலேட்டடாதான் இந்த ஊருக்கு வந்தேன்” என அவன் வசிப்பிடம் பற்றி, இங்கே தங்கியிருக்கும் இடம் குறித்துச் சொன்னான்.
உடனே, “ஓகே, நான் உன்னை ட்ராப் பண்ணிடறேன்” என்றாள்.
“உனக்கு லேட்டாகும். நீ வீட்டுக்குச் சீக்கிரம் போ கண்மணி. அப்புறம் அம்மா இன்னும் பயப்பட போறாங்க” என்று மறுத்தான்.
“போறவழிதான் சேது. அதான் கேட்டேன். இல்லைனா கேட்ருக்க மாட்டேன்” என்றதும், “அப்போ சரி” என்று சம்மதித்தான்
‘ஏன் போலீஸ் என்னைப் பார்க்க வேண்டும்?’ என மனம் சஞ்சலம் கொண்டது! ஆனாலும்… இந்த நாள் இப்படி முடியுமென நினைத்துப் பார்க்கவில்லை என்ற சிறு சந்தோஷமும் இருந்தது!
இந்த மனநிலையில் சேதுவுடன் அங்கிருந்து கிளம்பினாள் கண்மணி!!