Neer Parukum Thagangal 14.2

NeerPArukum 1-2fb88d55

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 14.1

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்

இமைகளை மூடியிருந்த லக்ஷ்மி… கண்ணாடிக் கதவைத் தாண்டி இருக்கும் ஷட்டரின் அதிர்வு கேட்டு… கண் திறந்தார். வெளியே என்ன நடக்கிறதென்று உன்னிப்பாய் கேட்கப் பார்த்தார். சரியாக எதுவும் கேட்கவில்லை. ஆனாலும் ஷட்டரை திறக்கிறார்கள் என்று தெரிந்தது.

உடனே தலைகோதுவதை நிறுத்தி, அவள் கன்னத்தில் தட்டி, “மினி எழுந்திரி” என்று சொன்னதும்… சற்று அசைந்து கொடுத்து, “டயர்டா இருக்கு ஆண்ட்டி” என்று லக்ஷ்மி மடியில் நன்றாக முகம் புதைத்துக் கொண்டாள்.

ஒருபக்கம் இந்த நிலை நீடிக்க மனம் வேண்டியது. மறுபக்கம் இனி இப்படி சாத்தியமா? என்று மனம் சங்கடப்பட்டது.

சிலபல நொடிகளுக்குப் பின் எந்த பக்கமும் மனதைச் சாயவிடாமல் நிறுத்தி வைத்து, “மினி, ஷட்டர் ஓபன் பண்றாங்க போல. போதும் எந்திரிச்சி உட்காரு” என அவசரப்படுத்தியதும், தடாலென்று எழுந்து அமர்ந்தாள்.

தூக்க கலக்கத்திலே, “அப்பா வந்திருப்பாங்களா ஆண்ட்டி?” என்று கேட்டதும், ‘அவள் அப்பா சொன்னது போல் எழுந்ததும் தேடுகிறாள்’ என்று நினைத்தவர், “வந்துக்கிட்டு இருக்காங்க. ம்ம்ம், எந்திரி” என கூறிவிட்டு, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தார்.

பேக்-பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டே, “ப்ச், அப்பா ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறாங்க? சீக்கிரம் வரலாம்ல?” என குறைபட்டுக் கொண்டவள், “அப்பா ஃபோன் பண்ணாங்களா? ஏன் என்னை எழுப்பலை ஆண்ட்டி?” என அவரைக் குறை சொல்லியபடி எழுந்தாள்.

“உன்னை எழுப்ப வேண்டாம்னு உன் அப்பாதான் சொன்னாங்க” என லக்ஷ்மி சொல்லும் பொழுதே, ஷட்டர் மேலேற்றப்பட்டு, இரு காவலர்கள் கண்ணாடிக் கதவையும் திறந்ததும்… லக்ஷ்மி, “வா… கீழே போய் வெயிட் பண்ணலாம்” என மினி கைப்பிடித்து வெளியே கிளம்பினார்.

காவலர்கள் அருகே போனதும், “சார் ட்ரையல் ரூம்ல…” என லக்ஷ்மி தொடங்க, “இந்தப் பொண்ணோட அப்பா கால் பண்ணி நடந்ததை சொல்லிட்டாரு மேம். போறப்ப இன்ஸ்பெக்டரை பார்த்திட்டுப் போயிடுங்க” என்று சொல்லிவிட்டு, அவர்கள் ஒத்திகை அறைக்குச் சென்றனர்.

சரியென  தலையசைத்துவிட்டு, “வா” என்று மினி கைப்பிடித்து எஸ்கலேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், “ஆண்ட்டி, இங்கே நடந்ததை அப்பாகிட்ட சொல்லிட்டீங்களா?” என அவர் கூடவே சென்று கொண்டு, அவர் முகம் பார்த்து கேட்க, “ம்ம்” என்று மட்டும் சொன்னார்.

“என்னை சொல்ல வேண்டாம்னு சொன்னீங்க. இப்போ…?” என, ‘நீங்க மட்டும் சொல்லலாமா?’ என்ற தொனியில் கேட்கவும், “நானா எதுவும் சொல்லலை. நீ அழுததை வச்சி உனக்கு என்னமோ, ஏதோ-னு பயந்து கேட்டாங்க. என்னால சொல்லாம இருக்க முடியலை” என்றார் வேக நடையுடன் சென்றபடி!

அவரது நடைக்கு ஈடுகொடுத்து நடந்தபடியே, “அப்பா என்ன சொன்னாங்க? கவலைப்பட்டாங்களா?” என கலக்கமான குரலில் கேட்டதற்கு, “உன் அப்பா வந்ததும் நீயே கேட்டுக்கோ மினி” என்று சொல்லி, அவளையும் அழைத்துக் கொண்டு எஸ்கலேட்டர் வழியே இறங்கினார்.

‘இன்னும் சிறிது நேரத்தில் அப்பாவைப் பார்த்துவிடுவோம்’ என்ற நிம்மதியில் மினியும், ‘இனி எப்போது இவளைப் பார்ப்போம்?’ என்று மனம் அமைதியற்ற நிலையில் லக்ஷ்மியும் அங்கிருந்து கிளம்பினார்கள்.

வெளியே வந்த லக்ஷ்மி, ‘ஆய்வாளர் எங்கே??’ என்று காவலரிடம் கேட்டுவிட்டு, மினியைக் கூட்டிக் கொண்டு பெனசீர் முன்னே வந்து நின்றார். மேலும் அவர் நிகழ்ந்ததைச் சொல்ல, “கார்த்திகேயன்” என்று பெனசீர் அழைக்க, மற்றொரு வேலையில் இருந்தவன் ஓடி வந்து நின்றான்.

“அந்த ஸ்டாக்கர் பையனைப் பார்த்து, ட்ரீட்மென்ட் ஏதும் தேவைனா ஜிஹெச் அனுப்பிட்டு வர்றேன். இவங்ககிட்ட சொல்ல வேண்டியதைச் சொல்லிடுங்க” என்று பெனசீர் போய்விட, இருவரையும் மேசை இருக்கும் இடத்திற்கு கார்த்தி அழைத்துச் சென்றான்.

வழக்கு பற்றிப் பேசுவதற்கு முன்னே, “மேம்… ஃபர்ஸ்ட் எயிட் டிரீட்மென்ட்-க்கு அரேஞ் பண்ணியிருக்காங்க. போய் பார்த்திட்டு வர்றீங்களா?” என்று லக்ஷ்மி நெற்றிக் காயத்தைப் பார்த்துக் கார்த்தி கேட்டதற்கு, “அப்புறமா” என்று அவர் சொல்லவும், அவன் வேலையைக் கவனிக்கலானான்.

மேசை மேல் நிறைய காகிதங்கள் கிடந்தன. தேடி அதில் ஒன்றை எடுத்தவன், “மேம்” என்று கார்த்தி தொடங்கும் பொழுதே, “இப்போ அரெஸ்ட் பண்ணிட்டு, அப்புறமா எம்எல்ஏவோட ரிலேட்டிவ்-ன்னு பெயில்ல விடமாட்டிங்களே?!” என சிறு கடுமையுடன் கேட்டார்.

கண்கள் சுருக்கி, “எம்எல்ஏ ரிலேட்டிவ்?” என்று ஆச்சரியம் காட்டியவன், “எதை வச்சி இப்படிச் சொல்றீங்க? என்ன ரீசன் மேம்?” என பொறுப்பாகக் கேட்கவும், “லாஸ்ட் டைம் இமிடியேட்டா பெயில் கிடைச்சிருக்கே?” என்றார்.

“இமிடியேட்டா பெயில் கிடைச்சிருக்கு. ஐ அக்ரீ மேம்! பட் ரீசன் என்னென்னா, அது அவனோட ஃபர்ஸ்ட் அஃபன்ஸ். ஸோ பெயில் கிடைக்கிறது ஈஸி. அதுவே செகன்ட் ஆர் சப்சீகுவன்ட் அஃபன்ஸ்ல பெயில் கிடைக்கிற வாய்ப்பு ரொம்ப கம்மி ” என்று கார்த்தி வழக்கறிஞராக பேசினான்.

இதற்கிடையே வேறொரு பக்கமாய் கவனத்தை வைத்திருந்த மினி, “இருங்க ஆண்ட்டி… இப்போ வந்திடுறேன்” என்று அவசரமாகப் போகப் போனவளிடம், “இந்த நேரத்தில எங்க போற? இங்க வந்து நில்லு” என லக்ஷ்மி அழைத்தாலும், “ஜஸ்ட் டூ மினிட்ஸ் வந்திடுவேன்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

அவள் போவதைப் பார்த்துக் கொண்டே, “எம்எல்ஏ இன்ப்ளுயன்ஸே இல்லை-னு சொல்றீங்களா?” என கார்த்தியிடம் பேச்சைத் தொடரவும்… சிலநொடிகள் யோசித்தவன், “ஹன்ட்ரட் பெர்ஸன்ட் அப்படிச் சொல்ல முடியாது. பட், இனி அப்படி நடக்காதுனு சொல்ல முடியும்” என்றான் தெளிவாக!

அவன் உறுதியாக சொன்னாலும், திரும்பவும் இந்தப் பையனால் மினிக்குத் தொந்தரவு வருமோ என்றே லக்ஷ்மி யோசித்து நின்றார்.

அவர் முகத்தைப் பார்த்தவன், “மேம்… நான் பேச்சுக்காக சொல்லலை. நடந்த இன்சிடென்ட் ஷாப் கேமரால ரெக்கார்ட ஆகியிருக்கும். ஸ்ட்ராங் எவிடென்ஸ் அது! அதை வச்சிதான் சொல்றேன்” என நம்பிக்கை கொடுக்கப் பார்த்தான்.

சற்று முகம் தெளிந்தவர், “அப்புறம்… இது அவன் மொபைல். இதுலருந்து மினி அப்பாக்கு கால் பண்ணியிருக்கோம். அவன் போட்டோஸ் எடுப்பான்-னு மினி சொன்னா. அதனால இதையும் செக் பண்ணிடுங்க” என்று அந்தப் பையனின் அலைபேசியை எடுத்து நீட்டினார்.

“லாஸ்ட் டைம் ஸ்டேஷன்-லயே செக் பண்ணியிருக்காங்க. அந்தப் பொண்ணு போட்டோஸ் இருந்ததாம். பட் எதுவும் மிஸ்யூஸ் பண்ணலைனு சொன்னாங்க. பரவால்ல கொடுங்க. திரும்பவும் செக் பண்ணிடலாம்” என்று அலைபேசியை கார்த்தி வாங்கியபோது மினி ஓடி வந்து அங்கே நின்றாள்.

“எங்கே போன? நீ இருக்க வேண்டாமா?” என்று லக்ஷ்மி கடிந்து கொள்ள, அதே நேரத்தில் கார்த்தி வழக்கு, புகார் பற்றிப் பேசும் பொழுது அவள் சென்றதால், “விக்டிம் ஸ்ட்ராங்கா இருக்காங்கள?” என்று கேட்டான்.

நீதான் பதில் சொல்ல வேண்டுமென்பது போல் லக்ஷ்மி மினியைப் பார்த்தார்.

ஏன் இந்தக் கேள்வி கேட்கப்பட்டதென்று புரிந்ததால், “ஸ்ட்ராங்தான்! அதான் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் பண்ணேன். அவனை அரெஸ்ட் பண்ணதும், இனி அவனால ப்ராபளம் எதும் வராதுனு நினைச்சேன். ஆனா இன்னைக்…” என்று பேசியவளுக்கு வார்த்தைகள் தடைப்பட, “இதுக்கு மேல என்ன பண்ண-ன்னு தெரியலை” என ஒரு முணுமுணுப்புடன் முடித்துக் கொண்டாள்.

நடந்த சம்பவம் தெரிந்ததால், அவளது மனநிலை புரிந்ததால், “இதுக்கு மேல நீங்க எதுவும் பண்ண வேண்டாம். நாங்க பார்த்துக்கிறோம்” என இலகுவாக பேசிவிட்டு, அடுத்தடுத்து செய்ய வேண்டிய நடைமுறைகளைக் கடகடவென சொல்லி முடித்துச் சென்றான்.

கார்த்தி சென்றதும் வெளிச்சம் இருக்கும் பக்கம் லக்ஷ்மியைக் கைப்பிடித்து அழைத்து வந்த மினி, மெதுவாக அவரது நெற்றிக் காயத்திற்கு ‘பேன்டெய்ட்’ போட்டுவிட்டு, காயத்தைச் சுற்றியுள்ள இடங்களில் இதமாக நீவிவிட்டாள்.

இன்னும் இன்னும் இதயத்தசைகள் இதமாய் உணர, “மினி… இதுக்காகத்தான் அப்போ போயிருந்தியா?” என்று லக்ஷ்மி கேட்டதும், “ம்ம்ம்” என்று வேகமாகத் தலையாட்டினாள்.

மேலும், “நீங்க கிளம்பிடுவீங்களா?” என்று சாலையைப் பார்த்துக் கொண்டே கேட்டதும், “இல்லை மினி. உன் அப்பா, அவங்க வர்ற வரைக்கும் உன்னைத் தனியா விட வேண்டாம்னு சொல்லியிருக்காங்க” என்று சொன்னார்.

“அப்போ அங்க போய் நிக்கலாமா? இங்க வெஹிகிள்ஸ் அலோவ் பண்ணலை போல” என்று மஞ்சள் நிற தடுப்புகள் இருக்கும் பகுதியைக் காட்டி கேட்டதும், “சரி வா” என்று அழைத்துச் சென்றார்.

சில ஊடகத்தினரும், சில பொதுமக்களும் நின்றனர். மஞ்சள் நிற தடுப்புகள் அப்பொழுது போல் ஒழுங்கான வரிசையில் இல்லாமல் கோணல்மாணலாக கிடந்தன. இருவரும் அந்த சாலைக்கு வந்ததும், அங்கே பூட்டியிருந்த கடைப் படிக்கட்டில் லக்ஷ்மி அமர்ந்து கொண்டார்.

படியில் வந்து அமருமாறு ஒருமுறை மினியிடம் சொல்லிப் பார்த்தார். ஆனால் அவள் வரவில்லை. அதன்பின் அவரும் சொல்லவில்லை.

மினியோ… அப்பாவின் வரவை எதிர்பார்த்திருந்தாள். அதனால் அவளால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை. லக்ஷ்மி அருகே வந்து நிற்பாள்! நேரத்தைப் பார்ப்பாள்! சாலையில் இறங்கி அப்பாவைத் தேடுவாள்! ‘இன்னும் ஏன் அப்பா வரலை?!’ என்று புலம்புவாள்!

இதையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தாள்!!

லக்ஷ்மி கன்னத்தில் கை வைத்து அமர்ந்து மினியின் ஒவ்வொரு செயலையும் பார்த்தபடி எதும் பேசாமல் மௌனமாகவே இருந்தார். மேலும் ‘அவள் அப்பா வந்ததும் சென்று விடுவாள்’ என்பதற்காக, தன் மனதினைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

சற்றுநேரம் இப்படியேதான் கடந்தது!

ஏதோ ஒரு நொடியில்… சாம்பல் நிற சிகை, ‘டக்-இன்’ செய்த ஜீன்ஸ்-டீஷர்ட் தோற்றத்தில் அரக்கப்பரக்க ஓடி வந்த மனிதரைப் பார்த்த மினி, “ஆண்ட்டி, அப்பா வந்தாச்சு” என்று ஆனந்தமாக சொல்லி, “ப்பா…” என அடுத்தகணமே அழும் குரலில் அழைத்தபடி லக்ஷ்மியிடமிருந்து சென்றுவிட்டாள்!

*********************************

மனிதநேயம் பேசும் மஹிமா, பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி!

மஹிமா, அல்போன்ஸ், சண்முகம் மற்றும் பைரவியை காவலர்கள் வெளியே கூட்டி வந்திருந்தனர். பைரவி மற்றும் அவளைச் சார்ந்தவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனால் கைது நடவடிக்கையாக அல்போன்ஸும் சண்முகமும் காவலர் ஜீப் ஒன்றில் ஏற்றப்பட்டிருந்தனர். அவர்கள் செல்லும் வரை அவர்களுடன் இருக்க வேண்டும் என்று பைரவியும் மேரியும் அங்கே வந்தனர்.

கூடவே மஹிமாவும் வந்து நின்றாள். அல்போன்ஸ் சண்முகம் இரண்டு பேர் முகமும் சோர்ந்தும் சோகமாகவும் இருந்தது.

அக்கணம் காவலர் ஒருவர் வந்து பைரவியிடம், “பெனசீர் மேடம் கொடுக்கச் சொன்னாங்க” என ஒரு காகிதம் கொடுக்க, ‘என்ன?’ என்று அவள் வாசித்துப் பார்க்கையில், “என்னது?” என்று மேரி கேட்டதும், “ப்ரோடைக்ஷன் மேனேஜர் மேல எப்ஐஆர் போட்ருக்காங்க” என்றாள்.

மேலும் அந்தக் காவலர் ஒரு திசையைக் காட்டிப் பார்க்க சொல்ல, நால்வரும் பார்த்தார்கள். அங்கே ஏஞ்சல், பைரவியைத் தாக்கிய இருவரில் ஒருவன் கைதாகி இங்கே அழைத்து வரப்பட்டிருந்தான்.

மேலும் விலங்கு மாட்டி காவலர் வேனில் அடைக்கப்பட்டிருந்தான். அவனுடன் ப்ரோடைக்ஷன் மேனேஜரும் இருந்தான்.

நியாயம் கேட்டு நடத்திய போராட்டத்தின் வெற்றியைக் கண்டதும் அவர்கள் முகம் நியாயமெனும் நீர் பருகிய தாகமாய் மாறியது!

கூடவே அந்த காவலர், “பெனசீர் மேடம் இதோட விட்ற மாட்டாங்க. நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுப்பாங்க” என்று சொல்லிச் சென்றதும், பைரவி சுற்றிப் பார்த்தாள். சற்றே தூரத்தில் நின்று பெனசீர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘இனி நான் பார்த்துகிறேன்’ என்பது போல் சிறு முறுவல் தந்துவிட்டு, மற்ற வேலைகளைப் பார்க்கச் சென்றார். பைரவி முகத்தில் ஓர் நிம்மதி வந்தது!

அல்போன்ஸ், மேரி இருவர் மனமும் ஒருவித ஆறுதல் அடைந்தது. அது அவர்கள் முகமொழியிலும் தெரிந்தது. அதையும் தாண்டி மகளின் இழப்பை நினைத்து வேதனையில் இருவரும் கலங்கினர்.

இதற்கிடையே பெரியவர் பைரவியைப் பார்த்தார்.

எங்கோ பிறந்திருந்தாலும்… அவர் கைகளில் வளர்ந்த பெண்! அவர் வளர்த்த பெண்! கடைசிவரை துவண்டு போகாமல் போராடி வெற்றி கண்டுவிட்டாள். அதுவரையில் பெரியவருக்குச் சந்தோஷம்தான்!

ஆனால் இதன்பின் அவளது எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்வி வந்து, பெரியவர் மனம் ஒருமாதிரி ஆனது. அது அவர் முகத்திலும் தெரிந்தது.

முதலில் அவர்களது செயலில் உடன்பாடில்லாமல் மஹிமாவிற்கு ஒரு கோபம் இருந்தது. இப்போது அவர்களுக்காக மிகவும் கவலைப்பட்டாள். பெரியவரின் முக மாற்றம் கண்டு, பேத்தி பற்றிய கவலையாக இருக்கும் என்று புரிந்தது.

அதனால், “பைரவி… உன் படிப்பை கன்டினியூ பண்ண என்ன செய்யணுமோ அதைச் செய்றேன். சரியா?” என்றதற்கு பைரவி மெதுவாக தலையசைத்தாள்.

இதனால் பேத்தி எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட பெரியவர் மனம் நிம்மதி அடைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் ஆறுதல் கொண்டது!

அதேசமயம் எக்கச்சக்க பாசம் தாத்தா மீது உண்டென்பதால் ‘இந்த வயதில், இப்படியொரு நிலை’ என்று பெரியவருக்காக பைரவியின் மனம் வருந்தியது. மேரி மனமும் உடல்நிலை சரியில்லாத கணவருக்கான வருத்தம் கொண்டது.

அவர்கள் முகமொழியிலும் அது தெரிந்தது.

அதைக் கண்ட மஹிமா, “அங்கிள், உடம்பு சரியில்லைனா சொல்லுங்க. நான் கேட்டதுக்கு, பார்த்துக்கலாம்னு சொல்லிருக்காங்க. தாத்தா நீங்களும்தான். விசிட்டர்ஸ் டைம் இருக்கும். அப்ப உங்களை வந்து பார்த்துப்பேன்” என்றாள்.

அதில் பைரவிக்கும், மேரிக்கும் ஒரு பெரிய ஆறுதல்!

அவ்வளவுதான் அவர்களுக்கு நேரம் கிடைத்தது. அதற்குள் ‘தள்ளுங்க’ என்று காவலர் இருவர் வந்து ஏறினார்கள். 

அல்போன்ஸும், சண்முகமும்… ஜீப் புறப்படத் தயாரானதும் பைரவி, மஹிமா, மேரியைப் பார்த்து விடைபெறுவது போன்று தலையசைத்தனர். அவர்களிடம் அதுபோல சிறு தலையசைப்பு மட்டும்தான்.

அவ்வளவுதான்!

வணிக வளாகத்தின் முன்பகுதியிலிருந்து ஜீப் கிளம்பியது. இரவு நேர சாலை விளக்கொளியில் ஜீப் கிளைச் சாலையை அடைந்து… மஞ்சள் நிற தடுப்புகள் தாண்டிச் சென்று… ஒரு புள்ளியாக மறையும் வரை மூவருமே ஒரு கணத்த அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே… மேரி, பைரவியைக் கூட்டிச் செல்ல இரு மகளிர் காவலர்கள் வந்திருந்தனர். மேரி எதுவும் பேசாமல் ஜீப்பில் ஏறிக் கொண்டார். அவ்வளவு நேரமும் அழுகையைப் பிடித்து வைத்து அழுத்தமாகவே இருந்தவர், நெற்றிப் பொட்டை அழுத்திப் பிடித்துக் கொண்டு கண்ணீர் சொரிந்தார்.

இப்பொழுது ஜீப்பின் கீழ் மஹிமாவிடம் விடைபெற பைரவி நிற்கின்றாள்!

************************