Neer Parukum Thagangal 15.1 & 15.2

NeerPArukum 1-64dc7cdf

Neer Parukum Thagangal 15.1 & 15.2


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் – 15.1

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

இருவரும் வெளியே வந்ததும், “சேது, இங்க என்னென்னு நான் பார்க்கிறேன். அதுக்குள்ள நீ போய் பார்க்கிங்-லருந்து வண்டியை எடுத்திட்டு வந்திடுறியா?” என்று கண்மணி கேட்டாள்.

“ம்ம்ம்” என்றதும், வண்டி எண் மற்றும் பிற அடையாளங்களைச் சொல்லி அவனிடம் சாவியைத் தந்துவிட்டு ஆணையரை பார்க்கச் சென்றாள்.

ஏற்கனவே போடப்பட்டிருந்த நாற்காலியுடன், கூடுதலாக மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பெனசீர், செந்தில் இருவரது மேலதிகாரி வந்திருந்தார். நடந்த சம்பவத்தைப் பற்றி விளக்கமாக அவருக்கு சொல்லிக் கொண்டிருந்தனர்.

பெனசீர் வருவதற்காக கண்மணி காத்திருந்த பொழுது, “எஸ்க்யூஸ் மீ” என்ற குரல் கேட்டதும், யாரென்று திரும்பிப் பார்க்க, “ஹலோ, நான் கார்த்திகேயன். லாயர்” என்று கார்த்தி தன்னை அறிமுகப்படுத்தினான்.

“ஹலோ” என்று முகமன் செய்து கொண்டு, “நான் கண்மணி. இன்ஸ்பெக்டரை பார்க்கணும்னு கான்ஸ்டபிள் சொன்னாங்க. அதான் வெயிட் பண்றேன்” என சிறு அறிமுகம் தர, “அதைப் பத்திப் பேசத்தான் வந்திருக்கேன்” என்றான்.

‘என்ன பேசணும்?’ என பார்த்தவளிடம் “உங்க கேஸ் பைல் பார்த்தோம். அன்ட் உங்களோட லாயர்கிட்டயும் பேசுனோம். கேஸ் பத்தி… சில விஷயம் சொல்ல வேண்டியதிருக்கு” என்று நேரடியாக விடயத்திற்கு வந்தான்.

“அதான் அக்கியூஸ்டுக்கு பெயில் கிடைச்சிருச்சே. அப்புறம் என்ன பேசணும்?” என்று அலுத்துப் போய் கேட்டதற்கு, “ம்ம், உங்க லாயர் சொன்னாங்க, பெயில் கிடைச்சதும் ரொம்ப கவலைப்பட்டீங்க-ன்னு” என்று கார்த்தி சொல்ல, “அது கவலை இல்லை… கோபம்” என்று திருத்தினாள்.

சில நொடிகள் பேசாமல் நின்ற கார்த்தி, “ஓகே ஃபைன். அக்கியூஸ்டு பெயில் கேன்சலாயிடும். மத்த டீடெயில்ஸ் உங்க லாயர்கிட்ட கேட்டுக்கோங்க. அன்ட் இன்னைக்கு அவங்க அவுட் ஆஃப் டவுன். ஸோ நான் இன்பாஃர்ம் பண்றேன்” என்று தகவல் தெரிவித்தான்.

தெரியப்படுத்த வேறேதும் இல்லாததால் கிளம்பப்போன கார்த்தியிடம், “ஒன் செகன்ட்! பெயில் எப்படி கேன்சல் ஆகும்?” என கண்மணி கேட்க, சற்றுநேரம் யோசித்து நின்ற கார்த்தி, “ரெண்டு பேருமே வேறொரு கிரைம்ல இன்வால்வ் ஆகியிருக்காங்க” என்று பொதுவான விவரம் மட்டும் சொன்னான்.

“தப்பு செஞ்சவனுங்களை வெளிய சுதந்திரமா சுத்தவிட்டு இன்னொரு தப்பு நடக்க காரணமா இருந்திருக்கு இந்த பெயில்! அதுவும் நான்-பெயிலபில் கேஸ்ல!!” என்றாள் ஆதங்கத்துடன்!

அவள் வாதத்தை கார்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது!

இருந்தாலும், “விசாரணை முடிஞ்சி போலீஸ் கஸ்டடிலருந்து அக்யூஸ்டு ரிலீவ் ஆகியிருந்தா, பனிஷ்மென்ட் சிவியரா இருந்தா… இது மட்டுமில்ல, இதுமாதிரி இன்னும் சில பாஸிபிலிட்டிஸ் பார்த்துதான் பெயில் கிரான்ட் பண்றது” என்று அவன் துறைக்காக எதிர்வாதம் செய்தான்.

மேலும் கார்த்தியே, “ஸீ… பெயிலும் ஒரு ரூல்தான். இன்னும் சொல்லப்போனா டிஃபன்டன்டோட உரிமை” என்று வழக்கறிஞராக பேசினான்.

“உரிமையா? இல்லை சலுகையா?” என்றாள் விருட்டென்று கேட்டவள், “என்ன கிரைம்?” என்று கேட்டாள்.

கார்த்தி சொன்னதும், “நீங்க உரிமைன்னு சொல்ற விஷயத்தால ஒரு உயிர் போயிருக்கு” என்றாள்.

இன்னும் வாதம் செய்யலாம். ஆனால் அது வாய்மையாக இருக்காது என்று நினைத்தானோ?! இல்லை இது வாதாடும் இடமல்ல என்று நினைத்தானோ? தெரியவில்லை. அமைதியாக இருந்தான்.

கண்மணிதான், “நடந்த தப்புனால காயம்பட்டவங்களுக்கு இருக்கிற ஒரே ஒரு ஆறுதல் நியாயம் கிடைக்கிறதுதான? அதுவும் இல்லைனா எப்படி இருக்கும்?” என்று ஒருவித ஆற்றாமையுடன் கேட்டாள்.

“கிடைக்கலைன்னு சொல்லாதீங்க. ரெண்டு அக்யூஸ்டுமே பெயில மிஸ்யூஸ் பண்ணியிருக்காங்க. அதுல ஒருத்தன் மிஸ்யூஸ் பண்ணது மட்டும் இல்லாம அப்ஸ்கான்ட் ஆகியிருக்கான். நீங்க எதும் செய்ய வேண்டியதில்லை. ஜட்ஜே பெயில கேன்சல் பண்ணிடுவாரு.

அன்ட் கோர்ட்ல ட்ரையல் வரும். ஏற்கனவே உங்க பக்கமா கேஸ் ஸ்ட்ராங்கா இருந்தது. இன்னுமே ஸ்ட்ராங் ஆகியிருக்கு. தப்பு செஞ்சவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்” என்று உறுதியாய் சொன்னான்.

கூடிய விரைவில் நியாயம் எனும் நீர் பருகப் போகும் தாகமாய் கண்மணி முகம் மாறியது!

“ஓகே தேங்க்ஸ்” என்று போக போனவளிடம், “மறந்திடாம நாளைக்கு உங்க லாயரை போய் பார்த்திடுங்க” என்று கார்த்தி ஞாகபகப்படுத்த, சரியென்று தலையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அதன்பின் சேது வருவதற்காக கண்மணி காத்துக் கொண்டு நின்றாள். ஐந்து வினாடிகளுக்குப் பிறகு அவளது ஆக்டிவாவை எடுத்து வந்தவன்… அவளருகே நிறுத்திவிட்டு, “என்ன விஷயம்? எதுக்காக கூப்பிட்டாங்க?” என்று கேட்டதும், “கேஸ் விஷயமா… போறப்ப டீடெயில்லா சொல்றேனே” என்றாள்.

அவள் முகத்தில் ஒரு நம்பிக்கை தெரிவதைப் பார்த்து, அவனுள் ஓர் நிம்மதி!

“சரி ஏறிக்கோ. ஆனா வழி சொல்லிக்கிட்டே வரணும்” என்றதும், “அதெல்லாம் வேண்டாம். நானே ஓட்டிக்கிறேன்” என்று நின்றாள்.

“ம்ம்ம், சரி” என்று தலைக்கவசத்தைக் கழட்டி அவளிடம் கொடுத்தவன், “ஏன் கண்மணி, உங்க வீட்ல என்ன சொல்லுவாங்க?” என அவர்கள் முடிவு குறித்து, அவள் பெற்றோரின் விருப்பம் என்னவாக இருக்கும் என்று கேட்டான்.

சற்று யோசித்தவள், “முதல உன்னைப் பத்தி சொல்வேன். அப்புறம் என்னோட விருப்பத்தைச் சொல்வேன். அம்மா, அப்பா சந்தோஷப்படுவாங்க” என்றாள்.

சில நொடிகள் பேசாமல் இருந்தவள், “சப்போஸ் யோசிக்கணும்னு சொன்னா, அவங்க சம்மதிக்கிறதுக்காக வெய்ட் பண்ணுவேன்” என்றும் சொன்னாள்.

இரவில் தெரிகின்ற ஒளிகளைப் பார்த்தபடி நின்றவள், “சம்மதிப்பாங்க சேது. அம்மா, அப்பா சந்தோஷப்படுவாங்க” என நம்பிக்கையாக சொன்னவள், “நீ நாளைக்கு அவங்களை வந்து மீட் பண்றியா?” என்று கேட்க, சரியென்றான்.

அதன்பின், “சேது… இப்போ நீ சொல்லு… வீட்ல ஒத்துக்கலை, அப்படி இப்படினு சொல்லிக்கிட்டு வந்து நிக்க மாட்டியே? அப்படி மட்டும்… நீ வந்து நின்ன?” என மிரட்டும் தொனியில் வார்த்தைகளை இழுத்தாள்.

“ஸ்பிரே அடிச்சிடுவ! அதான!?” என்று அவளை வாறியதும், சற்றே முறைத்து நின்றாலும், உடனே ஒரு எதிர்பார்ப்புடன், “ஒழுங்கா சொல்லு! வீட்ல அம்மா என்ன சொல்லுவாங்க?!” என்று கண்கள் சுருக்கிக் கேட்டாள்.

“இந்தப் பைத்தியக்காரனுக்கு இனி பொண்ணு பார்க்க வேண்டாம்னு அம்மா சந்தோஷமா இருப்பாங்க” என்று விளையாட்டாகவே அவனுக்கும் அவனது அன்னைக்குமான புரிதல் பற்றிச் சொன்னான்.

அவன் பதிலை கேட்டதும் அவள் முகத்தில் ஒரு குறுநகை தவழ்ந்திட, “லைஃப் ரொம்பவே இன்டர்ஸ்டிங்கா இருக்கப் போகுது சேது… உன்னால!!” என்றாள் அவர்களுக்கான உலகில் நின்று கொண்டு!

அவன் அகத்தில் ஆயிரமாயிரம் ஆனந்தம் இருந்தாலும், “அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டான்!

“இப்படியா சொல்லுவ சேது?” என்று அவள் கண்டிக்க, “நீ சொன்ன ‘அது சரி-‘க்கு, நான் சொல்றது எவ்ளவோ பெட்டர் கண்மணி” என்றான் கேலியாக!

அவன்பேச்சில் விளைந்த ஒரு மென்னகையுடன் தலைக்கவசத்தை மாட்டிக் கொண்டாள். அவளது மென்னகை அவனையும் தொற்றிக் கொண்டது.

மீண்டும் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்!

அதே மகிழ்ச்சியில் வண்டியில் ஏறி, ஸ்டார்ட் செய்து கிளப்பினாள். ஒரு சிறு பொழுதும் வாய் ஓயாமல் வார்த்தையாடிக் கொண்டு, வஞ்சனை இல்லாமல் வம்பிழுத்துக் கொண்டு… இருவரும் பயணிக்க ஆரம்பித்தனர்!

அவ்வளவுதான்!

இருசக்கர வாகன பயணம் அல்ல அது! இருவரின் வாழ்க்கைக்கான பயணம்! சில ஆர்ப்பாட்டங்கள்… அலங்கார வார்த்தைகள்… சிறுசிறு அலட்டல்களுடன் அன்பு பரிமாறிக் கொள்ளப்பட்டது!!

வேறு என்ன சொல்ல!?                       

******************************

மனிதநேயம் பேசும் மஹிமா, பணம் கண்டு பயங்கொள்ளா பைரவி!

அதுவரை நியாயம் கிடைத்திட வேண்டும் என்பதிலே கவனத்தை வைத்துக் கொண்டு, எந்த உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் இருந்த பைரவிக்கு, இந்த நேரத்தில் ஏஞ்சலின் நினைவுகள் வந்தன.

‘தளர்ந்து கொள்ளட்டுமா?’ என்ற இதயத்தசைகளிடம், ‘ம்’ என பைரவி ஒத்துக் கொண்டாள்! ‘ம், கரைந்து கொள்ளலாமா??’ என்று கேட்ட மனதை, சரியென்று விட்டுவிட்டாள்! ‘சரி, கண்ணீர்?’ என கேட்டு வந்த கண்களை, ‘சிந்திக் கொள்’ என்று அனுமதி தந்தாள்!!

பைரவியின் கீழிமைகளைத் தாண்டி கண்ணீர் துளிகள் கீழிறங்கியன!

அதைக் கண்ட மஹிமா, “என்னாச்சு பைரவி?” என்று கேட்க, ‘ஒன்னுமில்லை’ என வேகமாக தலையசைத்தாள் தவிர, கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

“என்னென்னு சொல்லு பைரவி?” என அழுத்திக் கேட்கவும், “ஏஞ்சல் ஞாபகம்” என்று மட்டும் சொன்னதும், ஆறுதலாக இருக்க மஹிமா அவள் கைபிடித்துக் கொண்டு, கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

ஒருசில வினாடிகள் இப்படியே நகர்ந்தன!

ஏதோ ஒரு நொடியில் பைரவிக்கு ஒரு பயம் வந்தது. ஏற்கனவே அவர்களின் நிலைக்காக கவலைப்பட்டு உதவி செய்திருக்கிறாள். இந்த நிலைக்காகவும் வருத்தப்பட்டு யாரிடமும் உதவி கேட்பாளோ என்பதே அந்தப் பயம்! அதில் அவளுக்குத் துளியும் உடன்பாடில்லை!!

தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதே சரியாக இருக்கும்!

அதனால், “உன்கிட்ட ஒன்னு சொல்லணும். இந்த அரெஸ்ட், கிடைக்கப் போற தண்டனை… இதுக்காக யார்கிட்டயும் எதுவும் கேட்டுக்கிட்டுப் போய் நீ நிக்க கூடாது. சரியா?” என்று ஒரு கோரிக்கை வைத்தாள்.

எதுவும் பேசாமல் மஹிமா நின்றாள்.

“தப்பு செஞ்சா தண்டனைன்னு இருக்கணும். அதான் சொல்றேன் மஹிமா, நீ யார்கிட்டயும் எங்களுக்காக எதும் பேசக்கூடாது. அப்புறம் அந்த ஓனருக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்”

மஹிமா அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

“பாரு… இந்த நாள் இப்படித்தான் முடியணும்னு நினைச்சேன். அது அப்படியே முடிஞ்சிருக்கு. அதுல எனக்கு திருப்திதான்” என்றாள் தெளிவாக.

பைரவியையே பார்த்துக் கொண்டிருந்தாள் மஹிமா.

“இப்படியொரு முடிவால உனக்கென்ன திருப்தினு கேட்டா… இதை நான் எங்க பக்கம் நடந்த ஒரு பெரிய இழப்புக்குக் கிடைச்ச நியாயமா பார்க்கிறதுனால, அப்படித்தான் சொல்ல தோணுது” என நிதானமாக பேசி நிறுத்தினாள்.

நியாயம் வேண்டுமென போராடியவள், ‘தங்களுக்கென ஒரு நியாயம்’ என்ற ஒன்றை வேண்டவில்லை என்று புரிந்ததால், “என்னால புரிஞ்சிக்க முடியுது” என்று பிடித்திருந்த பைரவி கையில் அழுத்தம் கொடுத்தாள்.

சில நொடிகள் மஹிமாவையே பார்த்தவள், “உன்ன ஒரு நல்ல சூழ்நிலையில சந்திச்சிருக்கலாம்னு தோணுது” என்று ஏனோ அந்தக் கணத்தில் அவளுக்கு வந்த ஒரு எண்ணத்தைச் சொன்னாள்.

அவர்களது போராட்டம் நல்ல முடிவை எட்டியிருக்கிறது. கிடைக்க வேண்டிய நியாயம் கிடைத்திருப்பதால் பைரவிக்கு ஒருவித நிம்மதி வந்திருக்கிறது. அதேநேரம் அவளுக்குள் மனக்காயங்களும் இருக்கிறது.

அதனால்தான் அப்படிச் சொல்லியிருந்தாள். அது மஹிமாவிற்குப் புரிந்தது. கஷ்டமாகவும் இருந்தது. ஆனால் கலங்கியோ, கண்ணீர் வடித்தோ மேலும் அவளைக் காயப்படுத்த வேண்டாமென தோன்றியது.

முடிந்தவரை அவள் மனநிலையை எளிதாக்கிட நினைத்தாள்!

அதனால், “நீ ஒன்னு நடக்கணும்னு நினைச்சி… அது நடந்திருக்கு. அப்ப இதை விட வேற நல்ல சூழ்நிலை எதுவா இருக்கும்… சொல்லு?” என்று கேட்டாள்.

அந்த நேரத்துக்குச் சம்பந்தமில்லா மென்னகை ஒன்று பைரவியின் முகத்தில் வந்து போக, “அப்ப சொன்னதுதான்… படிப்பை கண்டினுயூ பண்றது எப்படினு பார்க்கலாம். உங்களை வந்தும் பார்த்துப்பேன்” என்றாள்.

இன்று மட்டுமல்ல என்றைக்கும் உறுதுணையாக இருப்பேன் என்பது போல் மஹிமா சொன்னதும், ‘புரியுது’ என்பது போல் பைரவி கண்மூடித் திறந்தாள்.

“ம்ம்ம், தாத்தா, ஏஞ்சல்… அவங்களை மாதிரிதான் நானும் உனக்கு… சரியா?” என்று பைரவிக்கான அக்கறையுடன் மஹிமா பேசினாள்.

‘சரி’ என்று மெல்ல தலையசைத்த பைரவி, “மேரேஜ்னு சொன்னேல… ஹேப்பி மேரீட் லைஃப்” என்று வாழ்த்தினாள்.

சிறு முறுவலுடன் அதை ஏற்றுக் கொண்ட மஹிமா, “ம், நீ என்ன டிகிரி…” என்று ஆரம்பிக்கவும், “போதும். உன்னையும் கொஞ்சம் கவனி. சீக்கிரம் போய் கால் காயத்துக்கு ட்ரீட்மென்ட் எடு” என அவளுக்கான அக்கறையாக சொன்னாள்.

அப்போது ஒரு பெண் காவலர் வந்து, “ஜீப்ல ஏறும்மா” என்றார் பைரவியிடம்.

அதற்குமேல் அவர்களுக்குப் பேச நேரம் இல்லை.

ஜீப்பில் ஏறி அமர்ந்ததும், ‘விடைபெறுகிறேன்’ என்று சொல்வது போல் பைரவி மெதுவாக தலையசைக்க, ‘ம்ம், சரி’ என்று சொல்கின்றது போல மஹிமாவும் தலையசைத்துக் கொண்டாள்.

ஜீப் கிளம்பியதும் பின்னேயே வந்த மஹிமாவிடம், ‘காயத்திற்கு வைத்தியம் பார்க்க போ’ என பைரவி சைகையில் சொல்ல, ‘பார்க்கிறேன்’ என்று மெல்ல கையுயர்த்தி சைகையாலே சொல்லி, மஹிமா நின்று கொண்டாள்.

அவ்வளவுதான்!

இதை ஒரு பயணத்தின் ஆரம்பம் என சொல்ல முடியாது. அல்போன்ஸ், மேரி சண்முகம், பைரவி, மற்றும் மறைந்த ஏஞ்சல் இவர்களின் போராட்ட பயணம் ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கிறது என்று சொல்லலாம்.

இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த முடிவு நியாயமானது, சரியானது என்று தோன்றலாம். சரியல்ல என்றும் தோன்றலாம்.

ஆனால் இந்த முடிவிற்குப் பின் இவர்களுக்கு ஒரு நல்ல ஆரம்பம் அமைந்திட வாழ்த்துகள்! அப்படியொரு ஆரம்பத்தை அவர்கள் அமைத்துக் கொள்வதற்கு மஹிமா நிச்சயம் துணை நிற்பாள்!!

ஏனெனில் மஹிமா, பைரவி இரண்டு பேருக்கும் சிலமணிநேர பழக்கம்தான், இன்றுதான் பார்த்து பேசியிருக்கிறார்கள் என்றாலும், இருவருக்கும் இடையே ஒரு நட்புணர்வு துளிர்த்திருக்கிறது! அதனால்தான்!

அவர்கள் வாழும் காலம் முழவதும் அது நீண்டிட வாழ்த்துகள்!!

ஜீப் மறையும் வரை நின்று பார்த்த மஹிமா, அதன்பின்னர் முதலுதவி செய்ய வந்திருந்தவர்களிடம் காயத்திற்கு கட்டுப் போட்டுக் கொண்டாள். கார்த்தி எங்கே என்று தேடினாள். கருத்தாக யாரிடமோ பேசிக் கொண்டு நிற்பதைப் பார்த்தாள்.

போய் சென்று பேசவில்லை. மாறாக நேரே வண்டி நிறுத்துமிடம் சென்றவள், ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து கிளம்பிவிட்டாள்!

*********************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!