Neer Parukum Thagangal 15.2

NeerPArukum 1-35a2a2bf

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் – 15.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்!

அழும் குரலில், ‘ப்பா’ என்று அழைத்துக் கொண்டு ஓடிவந்த மினி… அப்பாவின் கழுத்தோடு கட்டிக் கொண்டு, “ப்பா… அந்தப் பையன்” என நடந்ததை சொல்ல வந்தவள், சொல்ல முடியாமல் ஓவென்று அழுததும், ஜோசப் கண்களிலும் நீர் கோர்க்கப் பார்த்தது.

ஆனால் மகளுக்காக மனிதர் சமாளித்துக் கொண்டார்.

விம்மி விம்மி அழுது கொண்டே, “ப்பா… அந்தப் பையன்… அவன்… நீங்க கிஃப்ட் பண்ண மொபைல்-ல தூக்கிப் போட்டு உடைச்சிட்டான்” என அழுகையினூடே முறையிட்டதும், “அப்பா உனக்கு வேற மொபைல் கிஃப்ட் பண்றேன். சரியா?? இனி அழக்கூடாது” என்று சமாதானம் செய்யப் பார்த்தார்.

அப்பாவிடமிருந்து விலகி நின்று… அவர் முகத்தைப் பார்த்து, “ப்பா… அப்போ ரொம்பவே பயமா இருந்தது. உடனே உங்களைப் பார்க்கணும்னு தோணிச்சி” என்று தேம்பி அழுததும், “இப்போ அப்பா வந்துட்டேன்ல? இனிமே பயப்படக் கூடாது. சரியா?” என்று மகளை நெஞ்சில் சாய்த்துக் கொண்டார்.

அப்பாவின் நெஞ்சில் முகத்தை அழுத்திக் கொண்டு… ஏங்கி ஏங்கி அழுதவள், “ரொம்ப மோசமா பேசினான்-ப்பா… ரொம்ப” என ஏக்கத்தின் ஊடே சொல்லி, “என்னால முடிஞ்சளவு… அவனைத் திட்டினேன்” என்று கோபத்தில் சத்தமாகச் சொன்னதும்… மகள் தலையை தடவிக் கொடுத்துச் சாந்தப்படுத்தினர்.

“திரும்பவும் அவன் பின்னாடியே வந்தா ‘என்ன செய்யலாம்?’ன்னு உங்ககிட்ட கேட்க நினைச்சேன். பட் திரும்ப அவன் வந்தப்ப ஒரு சிஸ்டர் ஹெல்ப் பண்ணாங்க. ஆஃப்டர் பைவ் பாபு அங்கிள்கிட்ட ஃபோன் பண்ணி கூட்டிட்டுப் போக சொல்லலாம், அதுவரைக்கும் இந்த இடத்தில இருக்கிறதுதான் சேஃப்னு நினைச்சேன். ஆனா இப்படி ஆயிடுச்சி-பா” என்று புலம்பினாள்.

மகளை அரவணைத்துக் கொண்ட ஜோசப், “இன்னைக்கு சிச்சுவேஷன் வேற. அதான் இப்படி. அதைப் பத்தியே பேச வேண்டாம்” என மகள் கன்னங்களில் வழியும் கண்ணீரைத் துடைத்து, “அழாத, அழக்கூடாது” என்றார்.

ஆனாலும் மினி கண்ணீர் மல்க நின்றபடியே, “ப்பா… உள்ளே மாட்டினப்போ, உங்களுக்கு கால் பண்ண நினைச்சேன்… பட் என் மொபைல உடைச்சிட்டான். அதுக்… அதுக்கப்புறம்” என்றவளுக்கு, நடந்ததை நினைத்துப் பேச முடியாமல் போய்விட, அப்பாவை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.

மேலும் அப்பாவின் கைகளுக்குள்ளே நின்றபடி, “வீட்லயே இருந்திருக்கணும் இல்லைப்பா? இனிமே நான் தனியா எங்கயும் போகவே மாட்டேன். நீங்கதான் துணைக்கு வரணும்-பா?” என்று பயந்து போய் பேசினாள்.

“மினி தைரியமான பொண்ணுதான? இப்படி யோசிக்கலாமா? ப்ராப்ளம்-க்கு பயந்து, வீட்டுக்குள்ளயே இருக்கிறது சொலுஷன் ஆகுமா? தைரியமா நின்னு பேஸ் பண்ண வேண்டாமா?” என்று நம்பிக்கைத் தர பார்த்தார்.

“இல்லை-ப்பா, எனக்கு பயமா இருக்கு. ப்ளீஸ்-பா என்னை தனியா விடாதீங்க” என அயர்வுடனும் அழுகையுடனும் கெஞ்சியதும், “சரி, சரி. அப்பா உன்கூடவே இருப்பேன்” என்று ஒத்துக் கொண்டார்.

நம்பிக்கை வார்த்தைகளை உள்வாங்கும் மனநிலையில் மகளில்லை என்று புரிந்தது. நடந்த சம்பவத்தினால் ஏற்பட்டிருக்கும் எண்ணக் குலைவிலிருந்து மகளை மீட்டு, முதலில் அவள் பயத்தைப் போக்க வேண்டும். அதன்பின்தான் நம்பிக்கை, தைரியம் கொடுக்க வேண்டுமென நினைத்துக் கொண்டார்.

தாரை தாரையாகக் கண்ணீர் வடிய அப்பா முகத்தைப் பார்த்து, “ப்பா, இதை நினைச்சி நீங்க கஷ்டப்படுறீங்களா?” என கேட்கவும், “இப்படி நீ அழறதுதான் அப்பாக்கு கஷ்டமா இருக்கு. அழுதது போதும்டா” என மீண்டும் கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

அவளும் கண்களின் ஈரத்தைத் துடைத்துக் கொண்டே, “சாரி-ப்பா, இனி நான் அழமாட்டேன்” என்று சகஜமாக நினைத்ததும், “அப்பாகிட்ட ‘சாரி’ கேட்பியா?” என இலகுவகாகக கேட்டு மகள் தோளில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்ததும், அப்பாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

அப்பாவின் அருகாமை, ஆறுதல் காரணமாக ஓரிரு வினாடிகளிலே அவளின் அழுகை மட்டுப்பட்டிருந்தது.

அதனால் அப்பாவிடமிருந்து விலகி நின்று, “ப்பா, ஆண்ட்டிகிட்ட சொல்லிட்டு வீட்டுக்குப் போலாமா?” என்று கண்களைக் கசக்கியபடி சொல்ல, அழுதழுது வீங்கிக் களைத்திருந்த மகள் முகம் பார்த்தவர், “சரி வாம்மா” என்று மகளை அழைத்துக் கொண்டு லக்ஷ்மி நிற்கும் இடத்திற்கு வந்தார்.

‘அப்பா வந்திட்டாங்க’ என்று மினி சொன்னதுமே, படிக்கட்டிலிருந்து லக்ஷ்மி எழுந்துவிட்டார். அவர்கள் பேசுவதற்கு இடையூறாக இருக்க வேண்டாமென்று அங்கேயே நின்று கொண்டார். ஆனாலும் இருவரும் பேசுவது கேட்டது.

அப்பா கைப்பிடித்துக் கொண்டு தளர்ந்த நடையுடன் அவர் நின்ற இடத்திற்கு வந்ததும், “நாங்க கிளம்பறோம் ஆண்ட்டி” என சோர்வினால் வெளியே வராத குரலில் சொன்னாள்.

இதே நேரத்தில் ஜோசப் கையெடுத்துக் கும்பிட்டதும், “என்ன சார்… நீங்க?” என லக்ஷ்மி பதற, “என் பொண்ணுதான் எனக்கு எல்லாம் மேம். நீங்க செஞ்ச இந்த உதவிக்கு இப்படித்தான் நன்றி சொல்லத் தோணுது” என்று  சற்றே உணர்ச்சிவசப்பட்டார்.

அதன்பின் அதைப்பற்றி லக்ஷ்மி எதுவும் பேசவில்லை. வழக்கினைப் பற்றிய விவரங்களை மட்டும் மறக்காமல் சொன்னார்.

கூடிய விரைவில் நியாயம் எனும் நீர் பருகப் போகும் தாகமாய் ஜோசப் முகம் மாறியது!

அந்த நேரத்தில் மினி, “ப்பா… என்னைக் காப்பாத்த போய்தான் ஆண்ட்டிக்கு அடிபட்டுடிச்சி” என லக்ஷ்மி நெற்றியில் போடப்பட்டிருக்கும் ‘பேன்ட்எய்டை’ காட்டி வருத்தமாகச் சொன்னதும், “ஹாஸ்பிட்டல் போகணுமா மேம்?” என்று ஜோசப் கேட்டார்.

அப்பாவை ஒட்டியபடி ஓய்ந்து போய் நிற்கும் மினியைப் பார்த்து, “இது சின்ன காயம். ரெண்டு நாள்லயே சரியாயிடும்” என்று சாதாரணமாக சொல்லிவிட்டு, “மினி ரொம்ப டயர்டா இருக்கிறா. வீட்டுக்கு கூட்டிட்டுப் போங்க சார்” என்று ஜோசப்பை பார்த்துச் சொன்னார்.

மிகவும் தொய்வடைந்த குரலில், “ஆண்ட்டி… நீங்க எப்படிப் போவீங்க?” என்று மினி அவருக்கான அக்கறையுடன் கேட்க, “கார் இருக்கு மினி” என்று மட்டும் சொல்லி, “ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியற மினி. வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு” என அவளுக்கான அக்கறையுடன் சொன்னார்.

அதன்பின்னும், “டிரைவ் பண்ண முடியுமா? நாங்க ட்ராப் பண்ணட்டுமா?” என மினி கேட்க… ஜோசப்பும், “ஆமா மேம்… வாங்க. நாங்க ட்ராப் பண்றோம்” என பதிலுதவி செய்ய ஒரு வாய்ப்பென்று கேட்டதற்கு, “இல்லை சார். வேண்டாம். கேட்டதுக்கு தேங்க்ஸ்” என்று லக்ஷ்மி மறுத்துவிட்டார்.

அவர் மீது உண்டான பற்றினால், “ஆண்ட்டி… ரிலாக்ஸா ஒரு நாள் உங்களை மீட் பண்ணனும். உங்க விசிட்டிங் கார்டு கொடுங்க” என்று மினி கேட்டதும், லக்ஷ்மி தன் கைப்பையிலிருந்த ‘கார்டை’ எடுத்து நீட்டினார்.

அதை வாங்கி கொண்டவள், “ஆண்ட்டி, மொபைல் வாங்கினதும் நம்பர் ஷேர் பண்றேன்” என சாதாரணமாக சொல்லி, “ப்பா… ஆண்ட்டி மொபைலையும் அவன் உடைச்சிட்டான்” என்று மீண்டும் கண்கலங்கினாள்.

இந்தச் சூழலிலே இருந்தால் நடந்ததை நினைத்து மகள் கலங்கிக் கொண்டே இருப்பாள் என்று ஜோசப்பிற்கு தோன்றியது!

அதே நேரத்தில், “சார்… இந்த அட்மாஸ்பியர்ல இருந்தானா, அழுதுகிட்டேதான் இருப்பா. நீங்க கூட்டிட்டுப் போங்க” என்றார் லக்ஷ்மி!

“தேங்க்ஸ் மேம்” என்று ஜோசப் மீண்டுமொருமுறை நன்றி சொன்னதும், “பை ஆண்ட்டி” என்று மினியும் விடைபெற, விட்டுச் செல்லப் போகிறாளென தயார் செய்த மனம் தடுமாறினாலும் லக்ஷ்மி சரியென தலையசைத்தார்.

“கிளம்பறோம் மேம்” என ஜோசப்பும் விடைபெற்றுக் கொண்டார்.  

சோர்விலும் தூக்கத்திலும் பயத்திலும் இருந்தவள் கூட்டிற்குள் பாதுகாப்பாய் இருக்கும் பறவையை போல் அப்பா கைப்பிடித்துக் கொள்ள, அவர் மகளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நடந்தார்.

இன்றைக்கு வேண்டுமானால் மினி பயத்தினில் இருக்கலாம். ஆனால் அப்பா ஜோசப் தரப் போகும் நம்பிக்கை, தைரியத்தினால்… நாளை வரும் நாட்களில் மனதிடத்தோடு சிறகை விரித்துப் பறக்கும் பறவையாக வான்வெளி எங்கும் பறந்து செல்லுவாள்!

‘பசிக்குது-ப்பா’ ‘இதோ சீக்கிரமா வீட்டுக்குப் போயிடலாம்’ ‘ப்பா, கார் எங்கே நிக்குது? இவ்வளவு நடக்க வைக்கிறீங்க?’ ‘உள்ளே வர அலோவ் பண்ணலை. அதான்டா மெயின் ரோட்ல நிறுத்தியிருக்கேன்’ – இப்படிப் பேசிக் கொண்டே இருவரும் சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகும் அங்கேயே நின்ற லக்ஷ்மி, சற்று நேரத்திற்குப் பின்பு வணிகவளாகத்தின் வாகன நிறுத்துமிடம் சென்று காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

சில நொடிகளுக்குப் பின்… வாகனப் போக்குவரத்துக்கு அதிகமில்லா சாலை! விளக்குக் கம்ப ஒளியின் அடியிலிருந்த சிறு பேருந்து நிழற்குடை! அதனருகே நின்ற லக்ஷ்மியின் கார்! இரவானதால் பயணிகள் யாருமில்லாத நிழற்குடை இருக்கையில் தனியாக அமர்ந்திருந்த லக்ஷ்மி!

ஓரிரு கிலோமீட்டர்கள் ஓட்டிய பின்னர் வீட்டிற்குப் போக மனமில்லாததால், ‘அடுத்து என்ன?’ என்று போக முடியாமல் மனம் தடைப்பட்டிருப்பது போல் உணர்ந்ததால் இப்படி வந்து அமர்ந்திருக்கிறார்.

மினியைப் பற்றிய எண்ணமா? அப்பாவைப் பற்றிய ஞாபகமா? பழையதைப் பேசியதின் தாக்கமா? இல்லை… வேறு ஏதேனுமா? சரியாகத் தெரியவில்லை! ஆனால் ஏதோ ஒன்று அவரை உருக்கியது!!

வெகுநேரமாகியும் அடுத்தடுத்து என நாளைய நாட்களை நோக்கிச் செல்லும் எண்ணம் வராமல்… அப்பாவின் அருகாமை வேண்டுமென்ற ஏக்கம் வர, ‘ப்பா ஸ்ட்ரக் ஆகி நிக்கறேன். என்ன-ப்பா செய்ய?’ என்று புலம்பியபடியே பேருந்து நிழற்குடைக் கம்பியில் தலை சாய்த்துக் கொண்டார்!!

சூழ்நிலை மறந்து இருந்தார்! நேரம் போய்க் கொண்டே இருந்தது!

ஏதோ ஒரு நொடியில்… அலைபேசி அழைப்பு வரும் சத்தம் காருக்குள்ளிருந்து கேட்டது. அதில் சிந்தனைக் கலைந்து மெதுவாக எழுந்து சென்று எடுத்துப் பார்த்தார். அவரது கல்வி நிறுவனத்தின் நிர்வாகி என தெரிய, “சொல்லுங்க மூர்த்தி. என்ன இந்த நேரத்தில?” என்றார் அழைப்பை ஏற்று!

“மேம் உங்க பெர்ஷனல் நம்பர்க்கு அப்போ கால் பண்ணிப் பார்த்தேன். லைன் போகலை. அதான் இந்த நம்பர்ல கூப்பிடறேன்”

“அது… அது ஒர்க் ஆகலை மூர்த்தி. அன்டைம்ல கால் பண்ணியிருக்கீங்க. ஏதும் அர்ஜென்ட்டா சொல்லணுமா?”

“அர்ஜென்ட் இல்லை மேம். நாளைக்குக் கூட சொல்லலாம். ஆனா இப்போவே சொல்லத் தோணிச்சி. சாரி மேம். டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?”

“அப்படியெல்லாம் இல்லை மூர்த்தி. சொல்லுங்க”

“மேம்… சாரிட்டி டிரஸ்ட் நேம், சிம்பல் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண சர்ட்டிபிகேட் வந்திருக்கு. ஸோ நெக்ஸ்ட் அகடமிக் இயர்லருந்து ஸ்காலர்ஷிப் ப்ரோக்ராம் ஆரம்பிச்சிடலாம் மேம்”

“கிரேட் நியூஸ் மூர்த்தி! இதைச் சொல்லத்தான் அப்போ கால் பண்ணீங்களா?” என்றார் சந்தோஷமாக!

“எஸ் மேம்! விமன்ஸ் டே-க்கு உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!”

“தேங்க்ஸ் மூர்த்தி! மத்த விஷயம் நாளைக்குப் பேசிக்கலாம்” என்றார் இரவு வெகு நேரமாகிவிட்டதால்!

“ஓகே மேம்” என்று மூர்த்தி விடைபெற்றதும், லக்ஷ்மி அழைப்பைத் துண்டித்து அலைபேசியை காருக்குள் வைத்துவிட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

அறக்கட்டளைக்குப் பதிவுச் சான்றிதழ் கிடைத்தாயிற்று. அடுத்தது கல்லூரி பட்டப் படிப்பிற்காக உதவித்தொகை தேவைப்படும் பள்ளி மாணவர்களை அடையாளம் காண வேண்டும். மேலும் அவர்களுக்கு எவ்வித தடையுமின்றி உதவி கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்க வேண்டும்!

கூடவே 80G, 12A சான்றிதழ் வாங்க வேண்டும். அப்போதுதான் வெளியிலிருந்து பொருளுதவி செய்பவர்களுக்கு வரிச்சலுகை கிடைக்கும்.

இதைப் பற்றி நாளை மூர்த்தியிடம் பேச வேண்டும்!

தன் பொறுப்பு கூடியிருக்கிறது. கூடவே… முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமென்ற கனவிற்கு விதை விதைக்கப்பட்டிருக்கிறது என லக்ஷ்மி முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது!

‘அடுத்து என்ன?’ என்று தெரியாமல் தேங்கியிருந்தவர், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டுமென திட்டமிட ஆரம்பித்தார்!

அக்கணம்… சட்டென்று அவருக்குள் ஒரு கேள்வி எழுந்தது! அது… சற்றுமுன் இருந்த மந்தமான, தேங்கிய மனநிலை எங்கே போனது? என்பதுதான்!

அடுத்த நிமிடமே… அப்பாவிடம் கேட்டுக் கொண்டது ஞாபகத்திற்கு வந்தது! மூர்த்தி பேசிய, ‘சொல்லணும்-னு தோணிச்சி’ என்ற வாக்கியமும் நினைவில் வந்தது!

சட்டென கண்ணோரங்களில் கண்ணீர் துளிர்த்திட… நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் இரவுப் பொழுது வானத்தைப் பார்த்து, “தேங்க்ஸ்-ப்பா” என்று குரல் கரகரக்க சொன்னார்!

‘அப்பாக்கு தேங்க்ஸ் சொல்வியா லக்ஷ்மி? போம்மா, பிள்ளைகளோட படிப்பு விஷயம். உன்னோட பொறுப்பு கூடியிருக்கு. கவனமா இரு! வாழ்த்துகள்-மா’ என்று அறிவுரையும் ஆசியும்… ஆகாயத்திலிருந்து அப்பா வழங்கியது போல் லக்ஷ்மியின் உள்ளுணர்வு உணர்ந்தது.

அந்தக் கண்ணீர் துளியைத் துடைத்துவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்தார்.

வாழ்க்கையைப் பற்றி எவ்வித புகாரில்லாமல், வான்வெளி எங்கும் சிறகை விரித்துப் பறந்து செல்லும் பறவை போல் லக்ஷ்மி கேசவன் கிளம்பினார்.

என்றைக்கோ வாழ்க்கையை நினைத்து வருந்திக் கொண்டு இருந்தவர்தான் லக்ஷ்மி. ஆனால் அன்றைக்கு அவரது அப்பா கேசவன் தந்த நம்பிக்கையும், தைரியமும்தான் இன்று இவர் இப்படி இருப்பதற்கு காரணம்!

அவ்வளவுதான்!!

லக்ஷ்மியும் மினியும்… ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்தித்தார்கள். ஒருவர் மீது மற்றொருவருக்கு அக்கறை, பற்றுணர்வு இருக்கிறது!

காரணங்களும்… பற்றின் அளவுகளும் வேறுவேறாக இருக்கலாம்! இனிவரும் நாட்களில் இருவரும் சந்திக்கலாம்… சந்திக்காமலும் போகலாம்!

ஆனால்… ஒருவரை ஒருவர் மறக்கப் போவதேயில்லை! சந்தித்த தருணத்தின் ஞாபகங்களோடு அவரவர் பாதையில் பயணிக்கப் போகின்றனர்! அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய லக்ஷ்மி கேசவன் மற்றும் மினி ஜோசப் பயணமும் ஒருவகை பயணமே!!

வேறென்ன சொல்ல?!

*********************************