நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 16
சுயமரியாதை பேசும் செல்வி, சரவணன்!
அந்நகரத்தின் பேருந்து நிலையம்…
பெரிய பரப்பளவு! சுற்றிலும் பயணிகள் வசதிக்காக சிறிய, பெரிய கடைகள்! நடுவில் பராமரிப்பு இல்லாத நீளமான நடைமேடை! அதில் ஒழுங்கில்லா வரிசையில் சீமெண்ட் பெஞ்ச் அமைப்புகள்! குறைவான அளவே பயணிகள் நடமாட்டம்! வருவதும் போவதுமாக இருந்த சுற்றியுள்ள சிறு ஊர்களுக்கான நகர மற்றும் தனியார் பேருந்துகள்!
இவையாவும் இரவிற்கே உண்டான வெளிச்ச அமைப்புகளுடன் இருந்தன!!
மகனை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு சின்ன சீமென்ட் பெஞ்சில் செல்வி அமர்ந்திருந்தாள். அப்துல்லாவும், ஃபரிதாவும் அருகில் நின்றனர். சரவணன் சற்றுத் தள்ளி நின்று கொண்டான்.
நிமிர்ந்து ஃபரிதாவைப் பார்த்த செல்வி, “தனியா போய் பழக்கம்தான். இனி நானே போயிடுவேன். நேரமாயிடுச்சி… கிளம்புங்க” என்று வந்ததிலிருந்து சொல்வதையே திரும்பவும் அவர்களிடம் சொல்லிப் பார்த்தாள்.
“பரவாயில்ல செல்வி. பஸ் வரட்டும். உன்னை ஏத்திவிட்டுப் போறோம்” என்று ஃபரிதாவும் அதே பதிலைச் சொல்லிவிட்டு, “உனக்கோ… பையனுக்கோ ஏதும் வேணும்னா சொல்லு” என கேட்டதற்கு, “இல்லை வேண்டாம்” என்று சொல்லி, மீண்டும் குனிந்து கொண்டாள்.
தான் பேசியதை இவர்களிடம் சொல்லி இருப்பானோ? இவர்கள் அக்காவிடம் சொல்லி இருப்பார்களோ? அப்படியென்றால் இதைப் பற்றி இனிமேல் பேசவே முடியாதோ? எதற்கும் சரவணனிடமே பேசிவிடலாமோ? என்றெல்லாம் செல்வி குழம்பிக் கொண்டிருந்தாள்.
இந்தக் குழப்பமெல்லாம் சேர்ந்து, இன்றே அவனிடம் பேச வேண்டுமென ஒரு சிறு தவிப்பைக் கொடுத்தது. பேசி முடிவைச் சொல்லாவிடிலும், அப்பொழுது பேசியதற்காக மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்று தோன்றியது.
அதனால் அவன் நிற்கும் பக்கமாக பார்ப்பதும், பின் குனிந்து கொள்வதுமாக இருந்தவளிடம், “ஏதும் வேணும்னா கேளும்மா” என்று அப்துல்லா கேட்டார்.
‘வேண்டாம்’ என வேகமாக தலையாட்டியவள்… கொஞ்சம் யோசித்து, “தப்பா எடுத்துக்காதீங்க. அது… அது… அது வந்து… ” என தயங்கியவள்… சரவணனைப் பார்த்தவாறே, “அ… அவங்ககிட்ட பேசணும்” என்று சொல்லி முடித்தாள்.
‘இது எதற்காக இருக்கும்?’ என்று அப்துல்லாவும், ஃபரிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆனால் அதை அவளிடம் கேட்காமல், “சரவணா” என ஃபரிதா அழைக்க, அவன் திரும்பினான்.
“இங்க வா சரவணா” என்று அப்துல்லா கூப்பிட்டதுமே, அவன் செல்வியைப் பார்த்தான்! அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்!
இன்னும் வராமல் நிற்பவனிடம், “செல்வி… ஏதோ பேசணுமாம். வா” என்று ஃபரிதா சொன்னதும், அவர்கள் இருக்கும் இடத்தில் வந்து நின்றான்.
மூவரும் அவள், ‘என்ன பேசப் போகிறாள்?’ என்று பார்க்கையில், “அது… அது… அப்போ பேசினோமே” என்று குனிந்தபடியே முணுமுணுத்தாள்.
ஃபரிதாவிற்கு, ‘நாம்’ இருந்தால் சரியாக பேசமாட்டாளென தோன்ற, “ரொம்ப நேரமா நிக்கிறோம். அப்படி உட்கார்ந்திருக்கோம்” என்று சொல்லிவிட்டு, தன் கணவரையும் அழைத்துக் கொண்டு சற்றுத்தள்ளி இருந்த சீமென்ட் பெஞ்சில் சென்று அமர்ந்தார்.
அவர்கள் போனதும் மெதுவாக நிமிர்ந்து சரவணனைப் பார்த்த செல்விக்கு கண் கலங்கியது. அதைக் கண்டதும், “என்னென்னு சொல்லுங்க?” என்று அவள் கலங்குவதற்கான காரணம் புரியாத குரலில் கேட்டான்.
பதில் பேசவில்லை. ஆனால் இன்னும் அதிகமாக அவள் கண்கள் கலங்கின.
அதன்பின் அவன் ஏதும் கேட்கவில்லை. அவள் பேசட்டுமென காத்திருந்தான். ஆனால் அவர்கள் இருவரையும் சுற்றிலும் இருந்த சூழலில் பேச்சு சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன!
ஒருவழியாகத் தன்னைச் சமன்படுத்தியவள், “அப்போ… நான் பேசினதுக்கு மன்னிப்பு கேட்க நினைச்சேன். அதான் கூப்பிட்டேன்” என்றாள்.
வேறு எதிர்பார்த்தானோ என்னவோ அவன் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது!
அதைக் கவனிக்காதவள், “ஏன் நான் அப்படிப் பேசினேனா, சிலர் எதும் உதவி செஞ்சிட்டு இதுமாதிரி கேட்பாங்க. ம்ம் சிலநேரம் அது சரியான எண்ணத்தில இருக்காது. சரியா இருந்தாலும் எனக்குப் பிடிக்காது. இப்படி எதும் பேசி தள்ளி நிறுத்திடுவேன். அதான்… உங்ககிட்டயும்” என்றாள்.
பேசியதற்கு காரணம் சொல்லி முடித்து, அதன்பின் சில நொடிகள் பேசாமல் இருந்துவிட்டு, “ஆனா… உங்ககிட்ட அப்படி நான் பேசியிருக்க வேண்டாம்னு தோணுது. அதான் மன்னிச்சிடுங்க” என்றாள்.
“ம்ம், புரியுதுங்க” என்றவன், “ஆனா இன்னொரு வாழ்க்கை அமைச்சிக்கிறது ஒன்னும் தப்பில்லை” என பொதுவாக சொல்ல, “நானும் தப்புனு சொல்லலை. ஆனா…” என்று பாதியிலே நிறுத்தினாள்.
‘ஆனா என்ன?’ என்று பார்த்துக் கொண்டிருந்தவனிடம், “ஆனா அப்படியொரு வாழ்க்கை வாழ்ந்ததுனால மேரேஜ் அப்படினாலே பயமா இருக்கு! யாரையும் நம்பி வாழ்க்கையைக் கொடுக்க ரொம்ப பயம்…” என்றாள் வருத்தமாக!
இப்படிச் சொல்லிவிட்டு, ‘என்ன சொல்வான்?’ என்று செல்வி அவனையே பார்த்தாள்! பார்த்திருந்தாள்! பார்த்துக் கொண்டே இருந்தாள்!!
சரவணன், ‘என்னை நீ நம்பலாம்… நான் நம்பிக்கையானவன்’ என்ற ஒன்றைச் சொல்லலாமா? என குனிந்தபடி தயங்கினான்! தயங்கியிருந்தான்! தயங்கிக் கொண்டேயிருந்தான்!
பின் ஏதோ ஒரு நொடியில் ‘அவள் எதையோ தன்னிடம் எதிர்பார்க்கிறாளோ?’ என்ற ஒரு கேள்வி வரவும், சட்டென்று நிமிர்ந்து பார்த்த நேரத்தில் செல்வி குனிந்திருந்தாள்!
ஏனோ சரவணன் மனம் மிகவும் சங்கடப்பட்டது!!
பேருந்து நிலையத்திற்கே உரித்தான இரைச்சல்கள், ஹார்ன் ஒலிகள் என்று இருக்க… இருவர் இருக்கும் இடத்தில் ஓர் அமைதி நிலவியது. இருவரிடம் ஓர் அழுத்தமான மௌனம்! அது நீடிக்க வேறு செய்தது!!
அந்த அடர்த்தியான மௌனம் தந்த அழுத்தம் தாங்க முடியாதவள், “‘இப்படி ஒரு முடிவுல இருக்கிறப்ப, எதுக்கு வரணும்?’-னு நீங்க கேட்கலாம். இதுமாதிரி அக்கா சொல்றப்ப, ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்திடுவேன். நிச்சயம் கட்டாயப்படுத்த மாட்டாங்க!
இன்னைக்குத்தான், ‘போய் பேசிப் பார்ப்போம். அதுக்கப்புறம் வேண்டாம்-னு நீ சொன்னா, எதும் பேச மாட்டேன்’னு அழுத்தி சொன்னாங்க. அதனாலதான் வந்தேன்” என்றாள்.
அதன்பின் செல்வி ஏதும் பேசவில்லை. மடியில் இருக்கும் மகன் லேசாக அழ ஆரம்பித்ததால், அவனைத் தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தாள்.
சரவணன்தான், “ஹரி ஏன் அழறான்?” என்று கேட்க, “தூக்கம் வந்திடுச்சு. பால் வாங்கிக் கொடுத்தா, குடிச்சிட்டு தூங்கிடுவான்” என்று சொல்லிவிட்டு, ‘டீ… காஃபி கடை எங்கே?’ என்று பார்த்தபடி எழுந்தாள்.
அதன்பின் இருவரும் பேசவில்லை!
ஆனாலும் சேர்ந்தே பேருந்து நிலையத்திற்குள்ளே இருந்த ஒரு சிறிய காஃபி கடைக்குச் சென்றனர். பால் வாங்கி, சூடாக இருந்ததால் அதை ஆறவைத்து, சிப்பரில் ஊற்றி மகனுக்கு கொடுத்தாள். பாதி குடிக்கும் பொழுதே ஹரிக்கு கண்கள் சொருகி விட்டது.
முழுதாக குடித்து முடித்தபின், மகனைத் தோளில் போட்டு செல்வி முதுகில் தட்டிக் கொடுக்க, சில வினாடிகளில் அவன் உறங்கிவிட்டான்.
அதுவரை எதுவும் பேசாமல்… ஆனால் அவளுக்குச் சிறுசிறு உதவிகள் செய்து கொண்டு இருந்த சரவணன், “தூங்கிட்டானா?” என்று கேட்க, “ம்ம்” என்று அவள் சொல்லவும், “பெஞ்ச்ல போய் உட்காறீங்களா?” என்றதற்கு, “பரவால்ல” என்று அங்கேயே நின்று கொண்டாள்.
சரவணன் வைத்திருந்த முற்றுப்புள்ளியின் ஒருபக்கம் அவளும், மறுபக்கம் அவனுமே முட்டிக்கொண்டு நின்றதால், ‘எப்படிப் பேச?’ என்ற தயக்கத்தில் இருவரும் பேசாமல் இருந்தார்கள்!
ஓர் ஐந்து நிமிடம் கழித்து சரவணன்தான், “கேட்கணும்னு நினைச்சேன். ஏன் லேட்டா வந்தீங்க?” என்றதும், “அப்ப ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தேன்ல? அதைத் திரும்ப எடுக்கிறதைப் பத்தி வக்கீல் பேசினாங்க. கொஞ்சம் அலைய வேண்டியதா இருக்கும்” என்றாள்.
அவள் தந்த புகார் பரிசீலிக்கப்படுகிறது என்ற நிம்மதி சரவணனுக்கு வந்தது!
பின்னர் கொஞ்சம் வெளிச்சம், கொஞ்சம் இருள் என்றிருந்த சூழலில் தெரிந்த செல்வி முகத்தையே பார்த்தவன், “இப்போ… பேசினதெல்லாம்… நீங்க உள்ள இருக்கிறப்பவே பேசணும்னு… நினைச்சீங்களா?” என்று சிறு தயக்கத்துடனே கேட்டு முடித்தான்.
“ம்ம்ம்” என்று முடித்துக் கொண்டாள்!
அடுத்த சிலவினாடிகள், ‘பேச நினைத்தது இது மட்டும்தானா?’ என சரவணன் மனமும், ‘இன்னும் இருக்கே…’ என்று செல்வியின் மனமும் தவித்தன!
அதன்பின் விழி நரம்புகள் சிவக்க அவனைப் பார்த்தவள், “என்மேல கோபமா? ஒரு வார்த்தை சொல்லிக்காமகூட கிளம்பி போயிட்டீங்க?” என்று அப்போது தோன்றியதை இப்போது எப்படியோ கேட்டுவிட்டாள்.
அடித்தநொடியே, “அது அப்படி இல்லைங்க…” என அவன் ஆரம்பித்தது ஏதோ சொல்ல வருகையில்… அவர்கள் நின்ற இடத்திற்கு நகர்ப்புற பேருந்து ஒன்று பிரகாசமான முகப்புவிளக்கு ஒளி, ஹார்ன் ஒலியுடன் வந்தது.
பயந்துவிடக் கூடாதென மகனை அரவணைத்துப் பிடித்தபடியே செல்வியும் அவளைத் தொடர்ந்து சரவணனும்… அங்கிருந்து வேறொரு இடத்திற்கு வந்து நின்று கொண்டனர்!
இடமாற்றத்தால் இருவருக்கும் இடையேயான பேச்சில் சிறிது நேரம் ஒரு சிறு தடை வந்து, தடுமாற்றம் அடைந்து, மீண்டும் தயக்கம் வந்திருந்தது!!
அதன்பின் இப்பொழுது நிற்கின்ற இடத்தில் வெளிச்சம் சரியாக இருந்ததால், அதில் தெரிந்த அவள் முகத்தைப் பார்த்தவன், “ஏன்… ஒருமாதிரி இருக்கீங்க? வந்தப்ப இருந்த மாதிரி இல்லை. என்னாச்சு?” என்று, ‘என்ன நினைக்கிறாள்?’ என்று புரியாமல் பாரமேறிய குரலில் கேட்டான்.
“இன்னைக்கு ஏன் வந்தோம்னு இருக்கு!” என இதழோர சிறு புன்னகையுடன் சொல்லி முடித்துக் கொண்டாள்.
‘தான் பேசியதற்காக இப்படிச் சொல்கிறாளா? இல்லை வேறேதுவுமா?’ என்ற குழப்பத்தை சரவணன் முகம் வெளிப்படுத்தியது! கூடவே ‘இவள், இன்னுமே தெளிவாகப் பேசலாமே!’ என்று அவன் அகம் அல்லல்பட்டது!!
உள்ளே வைத்துப் பேசியதை நினைத்துப் பார்த்தவன், “நான்… ஏதாவது பேசி கஷ்டப்படுத்திட்டேனா?” என வாட்டம் நிறைந்த குரலில் மெதுவாக கேட்கவும், “ச்சே ச்சே அதெல்லாம் இல்லங்க” என்று உடனே சொன்னாள்.
மேலும், “எனக்குத்தான் கஷ்டமா இருக்கு” என்று புன்னகை மறைய, வருத்தம் வழிந்தோடும் குரலில் சொல்லிக் கொண்டாள்.
“அப்படி என்ன கஷ்டம்? என்கிட்ட சொல்ல முடியுமா?” என்று அவள் அகத்தை அறியும் அக்கறையுடனும், கவலையுடனும் கேட்டான்!
“நாங்க வெளிய வர்றப்ப… எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க. எல்லாருக்கும் யாரவது இருந்தாங்க… நாங்கதான் யாரும் இல்லாம… அது கஷ்டமா இருந்தது! இருக்கு…” என ஏனோதானோவென்று தன் ஏக்கத்தைச் சொன்னாள்.
தன் கவலையைப் புறந்தள்ளிவிட்டு, “ஏங்க இப்படி நினைக்கணும்? அவ்வளவு நேரம் உங்க அக்கா இருந்தாங்களே? உங்களுக்காகத்தான் சித்தப்பா, சித்தி கூட இருந்தாங்க. இப்படியெல்லாம் யோசிக்காதீங்க” என அவன் ஆறுதலாக சொல்லுகையிலே, “பஸ் வந்திடுச்சு” என்றாள் ஆறுதல் அடையாமல்!
இவ்வளவு பேசியதற்குப் பதிலாக, ‘நான் இருந்தேனே!?’ என்று சொல்லியிருக்க வேண்டுமோ? இல்லை… சொல்ல வேண்டுமென எதிர்பார்கிறாளோ? என்று சரவணன் அகம் அடித்துக் கொண்டது!
அவளது சிறுமொழியால்… சிறுவிழியசைவால்… அவள் அகத்தை முழுதுமாக அறிய முடியுமா? என்று பார்த்துக் கொண்டிருந்தான்!
அப்பொழுது போல் பிரியத்தை வெளிப்படுத்தவும்… அவன் அகம் அஞ்சியது!!
அவளோ அப்துல்லா, ஃபரிதா அமர்ந்திருக்கும் இடம் சென்று, “கிளம்பறேங்க. ரொம்ப நன்றி” என்றதும், சரியென்று தலையசைத்து இருவருமே எழுந்தனர். ஆனால், ‘இவ்வளவு நேரம் பேசினீங்களே… என்னாச்சு?’ என்ற கவலை இருவர் முகத்திலும் இருந்தது!
பேருந்து வந்து அதற்கு உண்டான இடத்தில் நின்றதும் ஒவ்வொரு பயணியாக இறங்கினர். அனைவரும் இறங்கட்டுமென செல்வி காத்திருந்தாள். சரவணன் அவளருகில்தான் நின்றான்.
செல்வி முடிவு என்னவென்று தெரியுமென்பதால் இனி என்ன செய்ய முடியும்? என அவன் மனமும்… சரவணன் முடிவை முதலில் மறுத்துவிட்டு, தன் முடிவை இப்போது எப்படிச் சொல்ல? என அவள் மனமும்… மருகிக் கொண்டிருந்தன.
அனைவரும் இறங்கி… சில பயணிகள் ஏறியதும், செல்வியும் ஏறி அமர்ந்தாள். பேருந்திற்குள் மட்டுமே வெளிச்சம் இருந்தது! அதைச் சுற்றிலும் இருள்தான்! அவள் இருந்த இருக்கையின் சன்னல் பக்கமாக சரவணன் வந்து நின்றான்!
சற்றுமுன் அவள்மீது ஏற்பட்ட ப்ரியம் சற்றும் குறையாமல் இருந்ததால், “வேற எதுவும் வேணுமாங்க?” என்று அக்கறையாக கேட்டான்.
அவன்மீது வந்த பிடித்தத்தை வெளிப்படுத்த முடியாத தவிப்பில் இருவிழிகள் சிவக்க, “ம்கூம்” என்றாள், பையிலிருந்த முக்காடுடன் கூடிய மென்மையான டவலை எடுத்தபடி!
அவள் கண்களின் சிவப்பை பார்த்ததும் மனம் ஒருமாதிரி பிசைய, “அப்பவே பசிக்குதுன்னு சொன்னீங்கள? ஏதாவது சாப்பிட வாங்கித் தரவா?” என்றான்.
சிவந்திருந்த கண்களில் கண்ணீர் சூழ, “ம்கூம்” என்றாள் மகனுக்கு டவலை போர்த்தி விட்டபடி!
அவள் கண்களில் கண்ணீர் சூழல் அதிகரித்ததைப் பார்த்தவனின் விழியிலும் விழிநீர் லேசாக வந்துவிட, “காஃபி, டீயாவது குடிங்க. ஊரு வரைக்கும் தனியா போகணும்ல?” என்றான்!
முதல் நிமிடம் அவளிடம் ஒரு அமைதி. மறு நிமிடம் அவளிடம் ஒரு யோசனை. மூன்றாவது நிமிடம் விழிநீர் துளிகள் வெளியேற பார்த்த நிலையில், “தனியா போகப் பிடிக்கலைங்க… நீங்களும் எங்ககூட வர முடியுமா?” என ஒருவழியாக உள்ளத்தில் உள்ளதைச் சொன்னாள்.
‘இதை எதிர்பார்க்கலை!!’ என்பது போல் ஒரு நிமிடம் நின்றான். அடுத்தடுத்த நிமிடங்களில் நூறுமைல் தூரம் ஓடி வந்தது போல் அகம் துடித்தபடி இருந்தது. அதே நிலையில் சற்றுநேரம் இருந்தான்.
அவன் வைத்திருந்த முற்றுப்புள்ளி மூன்று புள்ளிகளாக மாறியதில், கண்ணீர் தேங்கியிருந்த கண்கள் இரண்டும் நிம்மதியை வாங்கி வந்திருந்தன. இரவின் இருளில் இருந்த சூழலைப் பார்த்துக் கொண்டு, விரலால் கண்ணோரங்களில் துளிர்த்திருந்த ஈரத்தைத் துடைத்துக் கொண்டான்.
அவன் எதுவும் சொல்லாமல் இருந்ததால், விழிகளின் நீர்ப்படலம் காட்சிகளை மறைக்க, “சரவணன்…?” என தவிப்புடன் அவள் அழைத்திருந்த அடுத்த நொடி, “வர்றேன் செல்வி” என்று அவள் தவிப்பைத் தகற்கும் வார்த்தை சொன்னான்.
விழி ஓரங்களில் கசிந்திருந்த கண்ணீரைத் துப்பட்டா கொண்டு ஒற்றி எடுத்த செல்வி, சன்னல் வழியே வெளியே நின்ற சரவணனைப் பார்த்து சிறு கீற்றாய் புன்னகை புரிய, அவனும் அதே அளவு புன்னகைத்து அவர்களுடன் பயணிக்க பேருந்தில் ஏறினான்.
அவர்கள், ‘என்ன பேசினார்கள்?’ என்று தெரியாது. ஆனால் அந்த காட்சியைக் கண்டதும் ஃபரிதா, அப்துல்லா தம்பதியினர் முகத்தில் ஒரு நிறைவு, மகிழ்ச்சி வந்திருந்தது! அந்த மகிழ்ச்சியை நசியாவிற்கும், செல்வியின் அக்காவிற்கும் கொடுக்க நினைத்து அலைபேசியை எடுத்தனர்!!
அவ்வளவுதான்!
இது ஒரு பேருந்து பயணத்திற்கான ஆரம்பம் அல்ல! மாறாக சரவணன், ஹரி செல்வி… இவர்கள் வாழப் போகும் வாழ்க்கைப் பயணத்திற்கானது! சிறிதளவு ஆர்பாட்டமோ, ஆடம்பர வார்த்தைகளோ இல்லாமல் அன்பு ஒன்று பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கிறது!!
வேறு என்ன சொல்ல?!
****************************
மனிதநேயம் பேசும் மஹிமா, கார்த்திகேயன்!
வணிக வளாகம் இருக்கும் கிளைச்சாலையில் பைக்கை நோக்கி நடந்து வந்த கார்த்தி கண்டது அவன் பைக் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியும், அதன் ‘லெக் ஸ்பேஸில்’ அமர்ந்தபடி இருக்கையில் தலைசாய்த்து கண் மூடியிருந்த மஹிமாவையும்தான்!
இதைக் கண்டதுமே, ‘மஹி… நீ எனக்காக வெயிட் பண்றியா?’ என்ற திகைப்பு வர, ‘என்னிடம் சொல்லாமல் போய்விட்டாளோ’ என்ற கலக்கம் போயிருந்தது. அதுவரை மெதுவாக நடந்தவன், ஓடிவந்து அவள் முன்னே அமர்ந்தான்.
‘கார்த்திதான்’ என்று உணர்ந்து தலை நிமிர்த்து மெதுவாக கண்விழித்தாள்.
சரியாக விழிக்காமல், இன்னமும் மூடித் திறந்து கொண்டிருந்த இமைகளைப் பார்த்தவன், “முதல என்னென்னு தெரியாம ரொம்பவே பயந்திட்டேன்” என்று மனங்கலங்கி பேச்சை ஆரம்பிக்கவும், “நானும்தான்” என்றாள் அசதியுடன்.
பின், அவள் கணுக்கால் காயத்தின் மேல் போடப்பட்டிருந்த கட்டைப் பார்த்து, “ரொம்ப வலிக்குதோ? எதுக்கும் நம்ம ஹாஸ்பிட்டல் போய் பார்த்திடலாமா??” என்றதும், “இல்ல வேண்டாம். பெயின் கில்லர் போட்டதால இப்போ அவ்ளோ வலியில்லை” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“டின்னர்…?” என்று ஆரம்பிக்கும் பொழுதே, “ம், நீ வாங்கிக் கொடுத்திருந்ததை சாப்பிட்டுத்தான் டேப்லெட் போட்டேன்” என்றவள், “நீ சாப்பிட்டியா?” என்று கேட்டாள்.
“டீ குடிச்சேன். போதும்” என்றவன், “ரொம்ப வலிச்சா சொல்லு, ஹாஸ்பிட்டல் போயிடலாம்” என்று சொல்லிவிட்டு, “இங்க ஏன் வந்து இருக்கிற மஹி? நான் அங்க இருந்ததை பார்க்கலையா?” என சிறு மனக்குறையுடன் கேட்டான்.
சோர்வான குரலில், “பார்த்தேன்” என்று அவள் சொன்னதும், “அப்ப என்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கலாமே?! ஏன் சொல்லிக்காம இப்படித் தனியா வந்து உட்கார்ந்திருக்க?” என்றான், ‘இன்னும் கோபமா?’ என்ற குரலில்!
“நான் பார்த்தப்போ, யார்கிட்டயோ நீ பேசிக்கிட்டு இருந்த. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான் இங்க வந்து இருந்தேன். வேலை முடிஞ்சப்புறம் நீ ஃபோன் பண்ணுவன்னு தெரியும். அப்போ சொல்லிக்கலாம்-னு நினைச்சேன். வேற ஒன்னுமில்லை” என்றாள், ‘இப்போது கோபமில்லை’ என்பது போல்!
“ஃபோன்கூட பண்ணேன். நீதான் அட்டன் பண்ணலை?” என்றான்.
அரக்கபறக்க அலைபேசியை எடுத்துப் பார்த்தவள், “கவனிக்கல… ஏதோ ஒரு யோசனையில கவனிக்காம இருந்திருக்கேன். வேணும்லாம் எடுக்காம…” என படபடத்து சொல்லும் பொழுதே, “விடு மஹி. ஏன் இதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற?” என்றான் நிதானமாக.
மஹி பேச்சை நிறுத்திவிட, “இவ்வளவு டயர்டா இருக்கிறப்ப, இப்படித் தனியா வந்து உட்காரலாமா? அதுக்காக கேட்டேன். சரியா?” என்று அமைதியான குரலில் சொன்னதும், “ம்ம்ம், சரி” என்றாள் கரகரப்பான குரலில்.
“சிலருக்கு கேஸ் டீடெயில்ஸ் சொல்ல வேண்டியதா இருந்தது. அதான் நான் வந்து உன்னைப் பார்த்துக்க முடியலை. ஃபர்ஸ்ட் எயிட் டீம்கிட்ட சொல்லி மட்டும் வச்சிருந்தேன்”
காயம்பட்டிருக்கிறாள் என தெரிந்த பின்னரும் அவளைக் கவனிக்க வராமல் இருந்ததற்கான விளக்கம் சொன்னான்!
“சொன்னாங்க” என்றவள், “நானும் ஃபர்ஸ்ட் கோபத்தில அடிபட்டிருக்கிறதை சொல்லலை. அதுக்கப்புறம் அவங்க இருந்த மனநிலையில… நம்ம நமக்காக பேசறது நல்லா இருக்காதுனு தோணிச்சி. அதான் சரியா பேசாம இருந்தேன்” என்றாள் லேசாக கண்கலங்க.
காயம்பட்டிருக்கிறாள் என்று தெரிந்த பின்னர் கார்த்தி கேட்க கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாததற்கு காரணம் சொன்னாள்.
அவள் கண்களைப் பார்த்தே, “நீ இப்படித்தான் யோசிப்பனு தெரியும். அதான் ‘எதும்னா ஃபோன் பண்ணு’னு சொல்லிட்டு… கட் பண்ணிட்டேன்” என்று அவள் இயல்பை புரிந்தவனாய் சொன்னவன், “ஆனா மஹி, நீ இன்னுமே சரியா பேச மாட்டிக்கிற… ஏன்?” என்றான்!
அமைதியாக இருந்தாள்! கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது!
அவர்களுக்காக வருந்துகிறாள் என்று புரிந்ததால், “கஷ்டமாயிருக்கா?” என்று கார்த்தி பரிவுடன் கேட்க, ‘ம் ம்ம்’ என்று தலையசைத்தாள் கண்ணீர்த் துளிகள் கன்னங்களில் வழிய!
ஒன்றும் சொல்லாமல்… ஆறுதலாக அவளை அரவணைத்து கண்ணீரைத் துடைத்துவிட்டான். சிலநொடிகள் இப்படியே நகர்ந்தன.
பின், “வீட்ல சொல்லிட்டியா?” என்று அவன் கேட்க, “அப்பவே வீட்லருந்து கால் வந்தது. உள்ள இருந்ததால எடுக்கல. வெளிய வந்ததும் ஃபோன் பண்ணி நடந்ததைச் சொன்னேன். வந்து கூட்டிட்டுப் போறோம்னு சொன்னாங்க.
வேண்டாம்… நீ கொண்டு வந்து விடுவேன்னு வீட்ல சொல்லிட்டேன். உனக்கு ஓகேவா?” என அவள் கேட்டதும், “இதென்ன கேள்வி மஹி? நம்ம கிளம்பலாம். லேட்டாகுது” என்று எழுந்து கொண்டான்.
பின், “ரெண்டு பேர் வண்டியையும் மால் பார்க்கிங்ல விட்டுடலாம். நாளைக்கு வந்து நான் பார்த்துக்கிறேன்” என்றவன், கைக்கடிகாரம் காட்டும் நேரத்தைப் பார்த்துவிட்டு, “பஸ் வேண்டாம். கார் அரேஞ் பண்ணிப் போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டே, அவள் எழுந்து கொள்ள உதவினான்.
சற்று நேரத்திற்குப் பின்… அதே கிளைச்சாலைதான்! மூடியிருந்த ஒரு கடைப் படிக்கட்டில் இருவரும் அமர்ந்து ‘கார்’ வருவதற்காக காத்திருந்தார்கள்! மஹி கொஞ்சம் இறுக்கமாய் இருந்தாள்! நிறைய சோர்வாய் தெரிந்தாள்!
காயம் ஏற்பட்ட காலை அப்படி இப்படி அசைத்தபடி இருந்தாள். அவளையே கவனித்திருந்த கார்த்தி, “பெயின் ரொம்ப இருக்கா?” என்று கேட்க, “இப்போ பரவால்ல. தாங்கிக்க முடியுது” என்றவளுக்கு இன்றைய தினத்தைப் பற்றி ஞாபகம் வந்ததும் அருகிலிருந்த கைப்பையை எடுத்தாள்.
அவளுக்கு ஏதோ தேவையென நினைத்துவன், “என்ன வேணும் மஹி?” என்று பரிவாக கேட்டதும், ‘ஒரு நிமிஷம்’ என சைகையில் சொன்னவள், பரிசுத்தாள் சுற்றப்பட்ட சிறிய பெட்டியை எடுத்து, “ம்ம், ஹன்ட்ரத் டே கிஃப்ட்… உனக்காக” என்று அவனிடம் நீட்டினாள்.
‘இந்த நேரத்தில் எதற்கு?’ என்று தோன்றினாலும், நடந்த நிகழ்விலிருந்து சற்று வெளியே வந்து பேசுகிறாள் என்பதால், “அப்போ தெரியாத மாதிரி பேசின…? பட், கிஃப்டெல்லாம் வாங்கி வச்சிருக்க” என்று வாங்கிக் கொண்டான்.
“அப்படியில்லையே? கிஃப்ட் கொடுக்க பேக் எடுக்கிறப்போ, ‘பேசற ஆசையே போயிடுச்சி’னு சொல்லிட்ட. சரி, இன்னும் நேரம் இருக்கேன்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள நம்ம… அப்புறம் இதெல்லாம்…” என அயர்ச்சியுடன் பாதிப் பாதியாக சொல்லி நிறுத்தினாள்.
‘கார்’ வருகிறதா என சாலையைப் பார்த்துவிட்டு, “நான்தான் உனக்கு கிஃப்ட் கொடுக்கலை” என்றான் லேசான வருத்தத்துடன்!
அந்த வருத்தம் கண்டு, “அப்படியில்லை! நீ கொடுத்த… நான் வாங்கலை” என அவள் மறுத்ததைச் சொல்லவும், “இல்ல மஹி. நீ வாங்கிக்கிற மாதிரி கிஃப்ட் எனக்கு கொடுக்கத் தெரியலை” என்று மறுப்பிற்கான பொறுப்பை ஏற்றதும், அவள் முகம் ஒருமாதிரி மாற்றம் கொண்டது!
அதைக் கண்டு, “என்னாச்சு மஹி?” என்று கேட்க, “இப்படி ஒரு லைஃப் ஸ்டைல் பாலோவ் பண்ற பொண்ண அன்டர்ஸ்டான்ட் பண்ண கஷ்டமா இருக்கா?”என கேட்டவள் குரலில் சோர்வும் இருந்தது! சற்று சோகமும் தெரிந்தது!
“அப்படி இல்லையே! இதை அன்டர்ஸ்டான்ட் பண்ணிக்க டைம் கேட்கிறேன். அப்பகூட இதையேதான சொன்னேன்” என்றான் இயல்பாக!
“சப்போஸ் அன்டர்ஸ்டான்ட் பண்ண முடியலைனா என்ன பண்ணுவ?” என்று மேற்படியில் இருப்பவனைப் பார்த்துக் கேட்டதற்கு, “ம், முடியலைனா…” என யோசித்தவன், “அடாப்ட் பண்ணிக்கிறேன். ஓகேவா?” என்றான் இலகுவாக!
‘ஓகே இல்லை’ என ஓய்ந்து தலையசைத்தவள், “சொல்லிக் காட்ட மாட்டேன், நீ அன்டர்ஸ்டான்ட் பண்ற வரைக்கும்…” என்று அயர்வுடன் முடித்ததும், “டயர்டா இருக்கிற. போதும் பேசினது” என்றபடி, ‘கார் வர ஏன் இவ்ளோ லேட்டாகுது?’ என்று சாலையைப் பார்த்தான்.
“இன்னைக்கு உன்கூட நிறைய பேசணும்னு நினைச்சேன். அப்போ லேட்டா வந்ததால பேச முடியலை… இப்போ பெயின்… அதோட மனசும் ஒருமாதிரி இருக்கு…” என்றாள் இறுக்கத்துடன்!
தேற்றும் விதமாக அவள் தோளில் மெல்ல தட்டிக் கொடுத்து, “இன்னைக்கே பேசணுமா என்ன? இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? அப்போ நம்ம நிறைய பேசிக்கலாம்” என்றான் இதமாக!
அந்தப் பதிலால் சற்று இறுக்கம் தளர்ந்தவள், “அப்போ மட்டும், ’என்னமோ பண்ணு’னு சொல்லிட்டுப் போன? இப்போ இப்படிப் பேசற??” என்றாள்.
“அது, நீ லேட்டா வந்த கோபம்… நீ ‘போ’ன்னு சொன்ன கோபம். ஸோ அப்படி பேசிட்டேன்! ஃபர்ஸ்ட் ஃபோன்ல பேசறப்பவும் கோபம் இருந்திச்சி” என்றதும், ‘சாரி’ என்று சத்தமில்லாமல் உதடுகளை மட்டும் அசைத்தாள்.
‘சாரியெல்லாம் வேண்டாம் மஹி’ என்பது போல் தலையசைத்தான்.
மேலும், “அப்படிச் சொல்லிட்டுப் எங்க போனேன்? இல்லை… எவ்வளவு தூரம் போக முடிஞ்சது சொல்லு?! திரும்பி உன்னைப் பார்க்க வந்தேன்ல?! இதோ… இப்போ உன் பக்கத்திலதான இருக்கேன்” என்றான் இஷ்டமாக!
அந்தப் பதிலில் இன்னும் இறுக்கம் தளர, “நான் ஏன் லேட்டா வந்தேனா…” என ஆரம்பித்து தாமதத்திற்கு காரணம் சொல்ல சொல்ல, அப்பொழுது, ‘அதான?!’ என்றவன், இக்கணம் அவ்வளவையும் உட்கார்ந்து கேட்டான்.
அவன் கேட்ட விதத்தைக் கண்டு, “இதைத்தான் அப்போ சொல்ல வந்தேன். நீ என்னடானா லேட்டா வர்றன்னு சொல்லி…” என்று அயர்வினால் பாதியோடு நிறுத்தி, “நான்… எப்பவுமா வெயிட் பண்ண வைக்கிறேன்?” என்று கேட்டாள்.
‘இல்லை’ என்று இடம் வலமாக தலையசைத்து, “என்னை வெயிட் பண்ணவும் வைக்கிற. எனக்காக வெயிட் பண்ணவும் செய்ற! கொஞ்ச நேரத்துக்கு முன்ன நீ வெயிட் பண்ணதைச் சொல்றேன்” என்றான்!
“ம்… நீ சொல்றது சரிதான் கார்த்தி” என்று சொன்னதும், “தேங்க்ஸ்” என்றான் மென்சிரிப்புடன்!
“எதுக்கு தேங்க்ஸ்? புரியலை கார்த்தி? நீ சொன்னதை சரின்னு ஒத்துக்கிட்டதுக்கா?” என காரணம் கேட்க, அவனது மென்சிரிப்பு விரிந்து புன்னகையாக மாறியது.
“ப்ச் கார்த்தி! எதுக்கு சிரிக்கிறேன்னு சொல்லு??” என்று கேட்க, “இதுக்குதான்” என்றதும், அவனைப் புரியாமல் பார்த்தாள்.
அவன் புன்னகை இன்னும் சற்று விரிய, “நீ இப்போ, ‘கார்த்தி’ன்னு கூப்பிடறது எவ்ளோ நல்லா இருக்கு மஹி? அப்பவும் கூப்பிட்ட பாரு, ‘கார்த்திகேயன்’னு?! நல்லாயில்லை! கார்த்தி-னுதான் கூப்பிடனும் சரியா?” என்று ஆசையாக ஒரு கோரிக்கையும் வைத்துக் கொண்டான்.
‘ஓ, இதுக்கா?’ என்ற முகமொழியுடன் அவள் இருக்க, “நீ அப்படி கூப்பிட்டதும், ‘என்னடா என் பேர் இவ்ளோ நீளமாவா இருக்கு’னு தோண வச்சிடுச்சி” என்று அவள் மனநிலையை எளிதாக்கிட நினைத்தான்.
ஒருசிறு புன்சிரிப்பு வரும் நிலையில் முகம் இருக்க, “டயர்டா இருக்கு. தூக்கம் வருது…” என அவன் முட்டியில் தலை சாய்த்தவள், இமையை மூடிக் கொண்டு, “கார்த்தி… கிஃப்ட் பார்க்கலையா?” என்று கேட்க, “ம்… பார்க்கிறேன். நீ தூங்கு மஹி. கார் வந்ததும் எழுப்புறேன்” என அவள் தலைகோதினான்.
அதன்பின் அவர்களது மௌனங்கள்தான் வார்தைகளாயின!!
அக்கணத்தில் கிளைச்சாலை… பரபரப்புடன் இவ்வளவு நேரமும் இருந்ததற்கு சாட்சியாய் சாலை ஓரங்களில் எண்ணற்ற ‘பேப்பர் கப்கள்’ கிடந்தன! மேலும் சாலை தற்சமயம் வெறிச்சோடிக் காட்சியளித்தது!
வெளிச்சம் என விளக்குக் கம்பத்தின் ஒளி மட்டுமே! சற்று தூரத்தில் தெரிந்த முக்கியச்சாலை! அங்கு ஓரளவிற்கு வாகனப் போக்குவரத்து இருந்தது! சத்தம் என்றால் அங்கிருந்து வருகின்ற ஒலி மட்டுமே!
இருபக்கம் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தன! அப்படி இருந்த கடை ஒன்றின் மேற்படியில் அமர்ந்திருந்த கார்த்தியின் முட்டி மேல், அடுத்தபடியில் இருந்த மஹி தலைசாய்த்திருந்தாள்!
இருவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ‘கார்’ வருவதற்காக… வரும் தினங்களில் திருமண நாளிற்காக!!
அவ்வளவுதான்!
கரம் கோர்த்துப் நடக்கப் போகின்ற நீண்ட பயணத்தில், சிறு சிறு சண்டைகள் இருந்தாலும், அது புரிந்து வாழப் போகின்ற வாழ்க்கைக்கான அஸ்திவாரமே! ஆனால் ஒன்று நிச்சயம்! இவர்கள் பயணத்தில்… இன்று போல் சண்டைகளும், சமாதானமும், கண்ணீரும் மட்டுமே இருக்கப் போவதில்லை!
காதலும், சந்தோஷமும் நிரம்பி இருக்கும்!!
வேறு என்ன சொல்ல?
ம்ம்ம், ஒன்று வேண்டுமானால் சொல்லலாம்!
என்ன மனம் படைத்தவள் இந்த மஹிமா? இவளைப் போன்று யாராவது இருப்பார்களா என்ற ஒர் கேள்வி வரும்!
இருப்பார்கள்! இருக்கிறார்கள்! நம்மில்கூட இருக்கலாம்!! இதுதான் பதில்!!
அவசரவூர்தியின் சத்தம் கேட்டால் ஒதுங்கி வழிவிடுவது! வயதானவர் நிற்பது கண்டு பேருந்து இருக்கையை விட்டுத் தருவது! எங்கோ ஓர் போர் தேசத்தில் பசித்து அழும் குழந்தை காட்சி கண்டு தொண்டைக் குழியில் உணவு இறங்க மறுப்பது! போர் வீரனின் மரணத்திற்கு கண்ணீர் சிந்துவது!
இதுபோல் இன்னும் பற்பல!!
இந்த உயிர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆனாலும் அவர்களுக்காக உதவிட, துடித்திட, அழுதிட நமக்கு ஒரு அன்பான மனம் இருக்கிறதல்லவா? அப்படிப்பட்ட மணம் படைத்த நம்மில் ஒருத்திதான் இந்த மஹிமா!!
எண்ணங்கள் எல்லாம் எச்சமாகிப் போன பல மனிதர்களுக்கு இடையே… இது போன்று எஞ்சி நிற்கும் மனிதநேயங்கள்… மனித இனத்தின் ஒரே நம்பிக்கை!
கடைசியாக ஒன்று!
மஹிமா வாழ்வியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்… இருந்தும், ‘தனக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் மற்ற உயிருக்கும் வலிக்கும் என்ற மனமிருந்தால் குற்றங்கள் குறையும்’ என்ற அவள் எண்ணம் மறுக்க முடியாத உண்மைகளில் ஒன்று!
மனிதர்கள் மறந்துபோன தன்மைகளில் ஒன்றும் கூட!
செல்வி, கண்மணி, லக்ஷ்மி, மினி, நசியா, பைரவி, ஏஞ்சல்… இவர்கள் போன்று இன்னும் பல பெண்களுக்கு இப்படி நடப்பதற்கு காரணம் என்ன?
தன்னொழுக்கம் பேணாமை, சக உயிரினை மதிக்கத் தெரியாமை, மறுப்பை ஏற்கின்ற மனப்பக்குவம் இல்லாமை… இதெல்லாம்தான் காரணம் என்றாலும், குறைந்தபட்ச மனிதம்கூட இல்லாது போனதும் ஒரு காரணம்தானே?!
அந்த மனிதப்பண்பு மட்டும் இருந்திருந்தால் இதுபோல் தவறுகள் நடந்திருக்க முடியாது! அப்படிப் பார்த்தால் மனித இனம் மனிதநேயம் கொண்டதாக மாற வேண்டிய கட்டாயத்தில், அவசியத்தில் உள்ளன!
இனி மாற்றம் கூட்டமாக வருவதற்கு வாய்ப்பில்லை! ஆகையால் மாற்றத்தின் விதையை நம்மிடமிருந்தே விதைக்க ஆரம்பிப்போம்!
மனிதம் வளர்ப்போம்!!