மோகனங்கள் பேசுதடி!16

eiL5KAD79398-8d9a92ea

மோகனங்கள் பேசுதடி!16

மோகனம் 16

வீட்டிற்கு வந்ததும் யாரையும் பார்க்காது அருவி அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள்.

அவளால் இங்கிருக்கவோ, யாரையும் பார்க்கவோ மனமே இல்லை.

முகம் பாறையாய் இறுகி போயிருந்தது. வெளியே மட்டுமே அத்தனை இறுக்கம், உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தாள்.

தன்னை பலவீனமாய் அவள் வெளிக்காட்ட விரும்பவில்லை.

அறைக்குள் நுழைந்ததுமே, அருவி இத்தனை நேரம் அவளுக்கு அவளே போட்டு வைத்திருந்த திரை விலகிட, மௌனமாய் சத்தமின்றி கண்ணீர் சிந்தினாள்.

‘என்ன என்ன பேச்சை எல்லாம் பேசிவிட்டார்கள்? நான் ஒன்றும் அந்த மாதிரியான பெண் இல்லையே’ தரையில் மண்டியிட்டு அழுதாள்.

அவளால் அழுக மட்டுமே முடிந்தது‌. அவர்களை எதிர்த்து பேசும் தெம்பு கூட இல்லாதவள், கண்ணீரை மட்டும் வெளியிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் வேகமாக அறைக்கு சென்ற மனைவியை விசித்திரமாக தோன்ற, அம்முவை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு வேகமாக படியேறினான்.

அறைக்கதவை திறந்து உள்ளே வந்தவனுக்கு மனைவியின் நிலை கண்டு துடித்துவிட்டான்.

வேகமாய் அவள் பக்கத்தில் வந்தவன்”அருவி…” என அவள் கையை பிடிக்க, அவனின் கரத்தை தட்டிவிட்டவள் தேம்பி தேம்பி அழுதாள்.

“அருவி மா… என்னாச்சி டா?” கேட்டு அவளை அணைத்து கொள்ள,அவனை தள்ளிவிட முயற்சித்தாள்.

“என்னை விடு…என்னை விடு”அருவி அவள் நிலையிலே இல்லை. தன்னிலை இழந்திருந்தாள்.

“பச், என்னாச்சின்னு சொல்லு டி? காலையில இருந்தே உன் முகம் சரியில்ல.. இப்போ நீ இப்படி அழுகிற” காதல் கணவனின் மனம் மனைவிக்காக துடியாய் துடித்தது.

“அங்க…அங்க…அவங்க…” என சொல்ல முடியாமல் திக்கி திணறியவளை, இறுக அணைத்து ஆசுவாசப் படுத்த முயன்றான்.

அவளோ அவனின் அணைப்பில் மேலும் மேலும் அழுதாள்.

“ஷ்ஷூ…ஒன்னுமில்ல டி. அழுகாத” முதுகை நீவி விட, அருவியோ அவன் நெஞ்சில் சாய்ந்தே தன் பாரத்தை இறக்கி வைத்தாள்.

“விஷ்வா! அவங்க என்னைய ரொம்ப தப்பா பேசுறாங்க. நான்… நான்… அப்படி பட்ட பொண்ணு இல்ல” கூறி கூறி அழுகும் மனைவியை பார்த்து நெஞ்சம் அடைத்தது கணவனுக்கு.

“அண்ணன் கூட பழகிட்டு எப்படி தான் அவனோட தம்பியை கல்யாண பண்ணிக்க முடிஞ்சதோன்னு பேசுறாங்க விஷ்வா. ஆளு பெரிய கைகாரியா இருப்பா போல. அண்ணனையும் தம்பியையும் ஒரே நேரத்துல கவுத்துருக்கா பாரு. அப்பாவியா இருந்துட்டு என்ன வேலை பார்த்துருக்கா. இன்னும் கூட பேசினாங்க. என்னால இங்க…இந்த ரூம்ல உன்கூட இருக்கவே மூச்சு முட்டுது பா. என்னை விட்டுடேன். நானும் அம்முவும் எங்கேயாவது போய் வாழ்ந்துக்குறோம். இந்த மாதிரி பேச்சு எல்லாம் எனக்கு பழகி போனது தான். ஆனா அம்முக்கு இப்டி ஏதும் நடந்திட கூடாது. நடக்கவும் விடமாட்டேன். டிவோர்ஸ் கொடுத்திடேன்” அழுகையில் ஆரம்பித்தவள் கடைசியில் கெஞ்சலில் முடித்திருந்தாள்.

விஷ்வாவின் இதயம் எரிமலையாய் வெடிக்க தயார் நிலையில் இருந்தது. ஆனால் வெளியில் மனைவிக்காக சாதாரணமாய் அவனை காட்டிக்கொண்டான்.

“ஷு, யாரோ ஏதோ பேசுறாங்கன்றதுக்காக எல்லாம் நீ கவலை பட தேவை இல்லை. உன்ன விரும்புறவங்க இங்க நிறைய பேரு இருக்கோம். யாரோ ஏதோ சொல்லிட்டாங்கனு ஓடி ஒளிஞ்சிப்பியா அருவி. இதை தான் நீ நம்ம பொண்ணுக்கு காத்துக்கொடுக்க போறியா?” எப்படி பேசினால் அவளை சரி பண்ணலாம் என்று யோசித்து அம்முவை இதில் கொண்டு வந்தான்.

“இல்ல… அந்த விக்ராந்த் கூட அப்டி தான்” சொல்லியவள்” ப்ளீஸ் எங்களை விட்டுடு. நிம்மதியா இல்லனாலும், ஏதோ வாழ்ந்துக்குறோம்” கிட்ட தட்ட அவனிடம் மன்றாடினாள்.

விக்ராந்த் என்ற பெயரை கேட்டவனுக்கு உடல் விறைத்தது.

“காம் டௌன் அருவி… எதை பத்தியும் யோசிக்காத மா. எல்லாமே ஒரு நாள் மாறும் டா. என் காதல் நம்ம வாழ்க்கையை மாத்தும்” சொன்னது தான் தாமதம் அவனை ஆக்ரோஷமாய் விஷ்வாவை தள்ளிவிட்டவள் வீறுக்கொண்டு எழுந்தாள்.

“உன் காதல் தான் என்னைய இந்த நிலைக்கு ஆக்கிருக்கு. இது பத்தாதா உனக்கு. இன்னும் நீ சொல்ற காதல் என்னை கஷ்டப்படுத்த மட்டும் தான் செய்யும்” ஆவேசத்துடன் கத்தினாள்.

இவர்களின் சத்தம் வெளியே உள்ளவர்களுக்கும் கேட்க, அவர்களுக்காய் வருந்த மட்டுமே செய்ய முடிந்தது.

அருனிற்கு தான்,’ டீச்சரம்மா இவ்வளவு பேசுவாங்களா’ என்றிருந்தது. ‘எப்படியோ அடிச்சுகிட்டு சேர்ந்தா சரிதான்’ என்று புன்னகையோடு கடந்து விட்டான்.

“ஆரு மா…” அவளை நெருங்க பார்க்க,

“அப்படி கூப்பிடாத… ஆருவை நீ கொல பண்ணி சரியா அஞ்சு வருஷம் ஆகப்போகுது” ஒரு ஆவேசத்தில் அவனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து,”அன்னைக்கு உண்மையாவே என்ன தான் நடந்தது? என்னை என்ன செய்ய நினைத்திருந்த விஷ்வா? காதல்னு சொல்ற, ஆனா நீ ஒருநாளும் அதை என்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணது கிடையாதே, ஏன்? சொல்லு எனக்கு எல்லாமே தெரிஞ்சாகணும். அந்த நாள் மட்டும் என் வாழ்க்கையில வராம இருந்திருந்தா அந்த சாடிஸ்ட் விக்ராந்த் கிட்ட மாட்டி இருக்க மாட்டேன். இந்த மாதிரியான ஏச்சு, பேச்சு எல்லாம் வாங்கியிருக்க மாட்டேனே” அவளின் ஒவ்வொரு கேள்விகளும் அவனை சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

அருவியை அப்படியே தன்னோடு இறுக அணைத்தவன், ஆசுவாசப் படுத்த துவங்கினான்.

“காம் டௌன் அருவி… என்னால எதையும் சொல்ல முடியாது டா. நீ என் மேல அளவுக்கதிகமான பாசத்தையும் நேசத்தையும் அப்போ வச்சிருந்த , நான் காதலை சொன்னா விருப்பமில்லை என்றாலும் ஏத்துக்க தான் பார்ப்ப. அது தான் காரணம் நான் காதலை சொல்லாததுக்கு” அவனின் நிலையை விளக்க, அவன் கூறுவதை ஒருபுறம் ஒப்புக்கொண்டாலும் மனம் வீம்பு பிடித்தது.

அவனின் பிடியிலிருந்து விலக பார்த்த அருவியை எழும்புகள் நொருங்கும் அளவிற்கு இறுக்கினான்.

திமிறி திமிறி பார்த்தவள், அவன் விடமாட்டான் என்று உணர்ந்தவளாய், சில நொடிகள் எதிர்க்காமல் அமைதியாய் அவனின் அணைப்பில் அடங்கிப்போனாள்.

“நம்ம வாழ்க்கையில என்ன வேணா நடந்திருக்கலாம் அருவி. அதை மாத்த முடியாது. ஆனா வருங்காலத்தை மாத்தலாமே. என் காதல் உன் கசப்பை மறக்கடிக்கும் என்னை நம்பு” விஷ்வா கூறவும் அவளுள் கசந்த முறுவல்.

நிமிர்ந்து அவனின் முகத்தை ஏறிட்டு பார்த்தவள்,” நீ புரிஞ்சிக்காம பேசுற விஷ்வா. என் வாழ்க்கை தான் எப்படி எப்படியோ போய்டுச்சு. நீயேன் அதை தலையில தூக்கி சுமக்கனும். உன் கூட இருக்கிற வரை நீ தந்த வலி என்னை விடாது. அந்த வலி உன்னையும் சும்மா விடாது விஷ்வா. உன்னோட இந்த சோ கால்ட் காதல் இரண்டு பேருக்கும் வலியை மட்டும் தான் தரும். இப்படி வலியோடு வாழுறதுக்கு நீ எனக்கு டிவோர்ஸ் கொடுத்திடலாம்” நிதானமாக சொல்லி அவனின் பிடியில் பெண்ணவள் நெளிய,

“முடியாது… என் கிட்ட இருந்து உன்னை துள்ளி கூட நகர விடமாட்டேன்.நீ என் உயிர் ஆரு மா . யூ ஆர் மைன். உன்னை காத்திருந்து கைப்பிடிச்சிருக்கேன். அதை உயிருள்ளவரை விடமாட்டேன்” அழுத்தக்குரலில் கூறி அவளின் பிறைநெற்றியில் வன்மையாக முத்தமிட்டான்.

அவளின் விழிகள் தானாக மூடிக்கொள்ள, அவளுக்கான மோகனப் புன்னகையை வீசியவன்  சிறிது நேரம் அணைப்பிலேயே மனைவியை வைத்திருந்தான்.

பின், அருவியை கைத்தாங்களாய் அழைத்து வந்து படுக்கையில் கிடத்தியவன், தன் நெஞ்சத்தை அவளுக்கு மஞ்சமாக்கினான்.

“டிவோர்ஸ் கொடுத்திடேன்…”  வழுவிழந்த குரலில் கெஞ்சலாய் கேட்டாள்.

“அதை அப்புறம் பார்ப்போம். இப்போ நீ தூங்கு. அழுது அழுது கண்ணெல்லாம் எப்படி வீங்கியிருக்கு” சொன்னவன் அதற்கு மருந்தாய் கண்கள் இரண்டிலும் மருத்துவ முத்தமிட்டான்.

சில நொடியிலே அருவி உறக்கிற்கு சென்றுவிட, போர்வையை போர்த்தி விட்டு சத்தமில்லாமல் வெளிவந்தான்.

வெளி வந்த அடுத்த நொடியே அவன் முகம் ரௌத்திரத்திற்கு உருமாறியது.

அறைக்குள் இருந்தவரை இருந்த சாந்தம் இப்போது முற்றிலுமாக துளைந்திருந்தது.

மொபைலை எடுத்தவன் ஜீவாவிற்கு அழைத்தான்.

எதிர்முனையில் அழைப்பை எடுத்ததும்,” ஜீவா உடனே மாடிக்கு வா” கர்ஜனையாக கூறி வைக்க, தன் காட்டை காக்கும் சிங்கமாய் மாறி மாடியேறினான்.

குடும்பம் முன்பு பூனை குட்டியாய் பெற்றோர் சொல்லை கேட்டு வாழ்பவன், அதே குடும்பத்தை யாரேனும் காயப்படுத்த நினைத்தால் பத்து தலை ராவணனாய் மாறி அழித்திடுவான்.

ரட்சகனும் அவனே! ராவணனும் அவனே!

மாடியில் கொந்தளித்து போன மனதுடன் அங்கும் இங்கும் நடையோ நடை நடந்து கொண்டு தன் கோபத்தை அடக்க வழி தேடி கொண்டிருந்தான்.

அதற்குள் ஜீவா வந்துவிட,” அண்ணா, வர சொல்லியிருந்தீங்க” சொல்லவும், திரும்பி ஜீவாவை பார்த்தான்.

விஷ்வாவின் கண்கள் இரத்தமென சிவந்திருக்க, சற்றே பயந்து போனான் ஜீவா.

“அண்ணா…”

“ஜீவா! என் அருவியை வார்த்தையால காயப்படுத்தினவங்களுக்கு ஒரு பாடத்தை கத்து கொடுத்தே ஆகணும் டா. இனி அவங்க யாரையும் காயப்படுத்த கூட நினைக்க கூடாது” அழுத்தமான குரிலில் வேதனையுடன் கூறினான்.

அவனின் வேதனையை புரிந்தவன்,” சொல்லுங்க அண்ணா இப்போ நான் என்ன பண்ணணும்?”எள்ளு என்றால் எண்ணையாய் இருந்தான்.

புன்னகை சிந்திய விஷ்வா,” வீட்டம்மா என்ன தப்பு செஞ்சாங்கன்னு அவங்களோட உத்தம புருஷனுக்கு தெரிஞ்சாகணும். என்ன ஏதுன்னு விசாரிச்சு வேலையை விட்டு தூக்கிடு.அப்புறம்…” என இன்னும் சில பல திட்டங்களை கூறி வெற்றி சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“சரிண்ணா வேலையை முடிச்சிடுறேன் “சொல்லி கிளம்பிவிட்டான். அவனுக்கும் அண்ணியை பேசியவர்களை கொல்ல வேண்டும் என்பதுபோல் ஆத்திரம் வந்தது.

அடுத்தநாள் எப்போதும் போல் விடிய, அருவி அமைதியாய் விஷ்வாவிடம் மட்டும் போர் தொடுத்தாள்.

சிரிப்பாய் வந்தது காதல் கணவனுக்கு. ஆனாலும் அடக்கிக்கொண்டான்.

பள்ளியில் ஆண்டு தேர்வுகள் நடைப்பெறுவதால், இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

போகும் தாய் தந்தையை காட்டி குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் எதுவும் பண்ணாது புன்னகையோடு வழியனுப்பி வைத்தாள்.

பள்ளி வரும்வரை விஷ்வாவை முறைத்தப்படியே வந்தவள், பள்ளிக்குள் கார் வந்ததும் முகம் புன்னகைக்கு மாறியது.

‘என்னம்மா நடிக்கிறா ப்பா… ஆஸ்காரே கொடுத்திடலாம் போலையே’ மனதினுள் நினைத்து “ஹேவ்வ நைஸ் டே மிஸஸ்.அருவி விஷ்வப்ரசாத்…”கைப்பற்றி சொல்லவும், முறைத்தவளின் அழகிய வதனத்தை கையில் ஏந்தியவன், எதிர்பாரா விதமாய் அவளின் பிறை நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு விலகினான்.

அவனின் செயலில் திகைத்தவள், காரிலிருந்து இறங்கினாள்.

“பேசினா நல்லவன் மாதிரி பேச வேண்டியது.பண்றது எல்லாம் பொறுக்கித் தனம்”முணங்கியப்படி தன் பையை எடுத்து நடக்க துவங்கினாள்.

அவளின் இடத்திற்கு வந்ததுமே, அவளின் மொபைல் சிணுங்கியது.

என்னவென்று எடுத்து பார்த்தவளுக்கு கடுப்பாய் இருந்தாலும் இதழோரத்தில் அவளறியாமல் புன்னகை.

அதில் இருந்தது இது தான்.

‘எல்லாருக்கும் நான் நல்லவன் தான் டி பொண்டாட்டி. ஆனா உனக்கு நான் எப்போதும் பொறுக்கி தான்’ கூடவே சில பல கிஸ் அண்ட் ஹக் ஸ்மைலிகள்.

“தொல்லை தாங்க மாட்டேங்கிது” தலையில் அடித்து விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

மாலை ஐந்து மணி வரை வேலை நீடித்து விட, அத்தனையும் செய்து முடித்து வெளி வரவும் புன்னகை முகமாக அவளை எதிர் கொண்டான் விஷ்வப்ரசாத்.

“இங்க என்ன வேலை உனக்கு…?” அவனின் வருகையில் சிடுசிடுத்தாள்.

“என் பொண்டாட்டியை கூப்பிட வந்தேன் ” மோகன புன்னகையை வீச,” முதல்ல இப்படி சிரிக்கிறதை நிறுத்து விஷ்வா கடுப்பாகுது” சொல்லவுமே புன்னகை விரிந்தது.

“வாங்க பொண்டாட்டி வீட்டுக்கு போகலாம்” மனைவியை உரிமையுடன் அழைக்க, சாதாரணமாக இருந்த முகம் இருண்டது.

மனைவியின் மனநிலையை புரிந்தவனுக்கு மனம் கஷ்டமாகிப்போனது.

“சரி வா போகலாம்” என்று மனைவியை அழைத்து வீட்டிற்கு சென்றான்.

பள்ளியில் இருக்கும்வரை இருக்கின்ற மகிழ்ச்சி, வீட்டிற்கு சென்ற பின் வடிந்துவிடும்.

மனைவியின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தவன் ஒரு முடிவினை எடுத்திருந்தான்.

பள்ளியில் தேர்வுகள் அனைத்தும் முடிந்து விடுமுறை விட, அடுத்தநாள் காலையிலே முதன் வேலையாக அன்னை முன்பு நின்றிருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!