Neer Parukum Thagangal 5.2

NeerPArukum 1-d4e530ca

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 5.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன் & மினி ஜோசப்!

மினி… தன் ஒட்டுமொத்த சக்தியையும் திரட்டி இரண்டு கைகளாலும் கதவை மூடுவதற்குப் போராட, அவன் ஒரே ஒரு கையால் கதவைப் பிடித்து, அதனை முறியடித்துக் கொண்டு, மற்றொரு கையால் அவளை வெளியே இழுக்கவும் முயற்சி செய்தான்.

ஒரு நொடி, “உனக்கு அறிவேயில்லையாடா?” என்று கோபப்பட்டாள். அடுத்த நொடி, “என் அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சது… நீ அவ்வளவுதான்டா” என்று மிரட்டினாள். ஆனாலும் அதற்கடுத்த நொடியே, “என்னை விட்டுறேன்… ப்ளீஸ்” என்று கெஞ்சினாள்.

அவன்… அவள் கோபத்தைக் கண்டுகொள்ளவில்லை! அவள் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை! அவள் கெஞ்சுவதை உதாசீனப்படுத்தினான்!!

இப்படியே ஒரு ஐந்து நிமிடம் தொடர்கையில்… திடீரென்று அந்தப் பையனின் பின்னந்தலையில் ஒரு அடி பலமாக வந்து விழுந்தது. அடுத்த கணமே கதவை விட்டுவிட்டு இரு கைகளால் பின்னந்தலையைப் பிடித்தபடி திரும்பினான்.

கொஞ்சம் மூச்சு வாங்க, அவன் மூச்சை எடுக்கும் கோபத்துடன் துணிக்கடை பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டு லக்ஷ்மி நின்றார்.

அவனை அடிக்க ஏதாவது கிடைக்குமா என பார்த்தவருக்கு கண்ணில் பட்டது இதுதான். பெரிய வலியைத் தந்து, அவனை வீழ்த்துமா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை வைத்து ஓங்கி அடித்திருந்தார்.

ஏதோ திட்டிக் கொண்டு வந்தவனை… மீண்டுமொருமுறை அடித்தார். அதில் தடுமாறியவன் மேல் பக்கத்தில் இருந்த மோடாவைத் தூக்கி எறிந்தார். பின் துணிகள் மாட்டியிருக்கும் கொக்கியை எடுத்து ஓங்கி ஓங்கி அடித்தார்.

அவரின் ஆவேசத்தைக் கண்டு பயந்து போய், “ஐயோ ஆண்ட்டி” என அலறிய மினியிடம், “நீ, அந்தப் பக்கமா போய் நில்லு” என்று சத்தமிட்டதும், பயத்தில் அவர் சொல்வதைக் கேட்டு சென்றுவிட்டாள்.

மூச்சிரைத்த நிலையில்… வலியால் கீழே சுருண்டு விழுந்தவனை… இன்னமும் அடிக்க வேண்டி இருக்குமா? என்று பார்த்தார். அதற்கு அவசியமில்லை என்று தெரிந்ததும், அவனை இழுத்து ஒத்திகை அறையில் போட்டார்.

இரண்டு துப்பட்டா எடுத்து வந்து, அவன் கை மற்றும் கால்களை இறுக்கமாக கட்டிவிட்டு, “ஷட்டர் திறக்கிற வரைக்கும் இப்படித்தான் இருக்கணும். இல்லை நடக்கிறதே வேற!?” என்று மிரட்டிவிட்டு, மினி இருக்குமிடம் வந்தார்.

நடந்த போராட்டத்தை நினைத்து அதிர்ச்சியுடன் நின்றவள்… லக்ஷ்மி வரவும், “ஆண்ட்டி” என்று தேம்பி அழைத்து… ஆறுதல் தேடி… அவரிடம் அடைக்கலம் அடைந்து… ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுகையை எதிர்பார்த்திருந்தார்! ஆனால் இவ்வளவு அழுவாளென்று எதிர்பார்க்கவேயில்லை! அவருக்கு மனம் கஷ்டமாகிப் போனது!

அதனால் அவள் கண்ணீரை மட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகளைக் கூற இயலவில்லை. இருந்தும் மார் சாய்ந்து கரைகின்றவளைத் தேற்றும் விதமாக, அவளை ஆதரவாக அரவணைத்து அன்பாக தலைகோதினார்!!

*************************************

வணிக வளாகத்தின் வெளியே

அதே அந்தி வெயில் நேரம்! அதே மக்கள் கூட்டம்! என்னவொன்று இப்போது தகவலறிந்து காவல் நிலையத்திலிருந்து காவலர்கள் வந்திருந்தார்கள்.

வந்தவர்களில் இரு காவலர்கள் வணிக வளாகத்தினைச் சுற்றிலும் சோதனை செய்தனர். ‘ஏதாவது துப்பு கிடைக்குமா? அருகிலிருக்கும் குடியிருப்புப் பகுதி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு போகச் சொல்ல வேண்டிய அளவிற்கு ஆபத்திருக்கிறதா? என்று பார்க்கவே இச்சோதனை!

இன்னும் இரண்டு பேர் கூடியிருந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதில், வணிக வளாகத்தினுள்ளே ஆட்கள் யாரும் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் வருவதற்கு முன்பே அடிப்படைத் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்பதால், வெளியே வந்தவர்கள் சிலரிடம் நடந்ததைப் பற்றி ஒரு காவலர் கேட்டறிந்து கொண்டிருந்தார்.  

இவை அனைத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக துணை ஆய்வாளர் செந்தில் உத்தரவின் பேரில் நடந்து கொண்டிருந்தது!

ஒருபுறம் இது நடந்தது என்றால், இன்னொரு புறம் விடயம் கேள்விப்பட்டதால் உள்ளே மாட்டிக் கொண்டவர்களின் உறவுகள் பதற்றத்துடன் வந்த வண்ணம் இருந்தனர்.

அதில் சரவணன் சித்தப்பாவும் ஒருவர். ஆட்டோ ஒன்று பிடித்து மனைவியை அனுப்பிவிட்டு வரும் முன்னே இவ்வளவும் நடந்திருந்தது. வந்ததும், ‘தப்பித்து வந்திருப்பானா?’ என்று கூட்டத்தில் நுழைந்து தேடினார்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது!

உடனே உள்ளே போக நினைத்தால், காவலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. ‘அவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ?’ என்ற பயத்தினால் ஒரு ஓரமாக நின்று கண்கள் கலங்கிக் கொண்டிருந்தார்.

இன்னொரு பக்கம் கேமரா, மைக் எடுத்துக் கொண்டு ஊடகத் துறையினரும் ஓடோடி வந்திருந்தனர். அங்கங்கே நின்று கொண்டு, ‘என்ன நடந்தது?’ என்று வருவோர் போவோரிடம் கேள்வி கேட்பதை நேரலையாக ஒளிபரப்பவும் செய்ய ஆரம்பித்திருந்தனர்.

சில வினாடிகளுக்குப் பின், காவலர் வாகனம் ஒன்று வந்து நின்றது. உடனே கூட்டத்தில், ‘இன்ஸ்பெக்டர் வந்தாச்சு’ என்ற சலசலப்பு கேட்டது. ஆய்வாளர் வாகனத்திலிருந்து இறங்கியதுமே ஊடக நபர்கள் அவரிடம் கேள்வி கேட்க நினைத்தனர்.

ஆனால், ‘அப்புறம்’ என்பது போல் சைகை செய்துவிட்டு, வந்திருந்த துணை ஆய்வாளர் செந்திலுடன் பேசியபடியே வணிக வளாகத்தின் முன்பக்கத்தை நோக்கிச் சென்றார்.

ஆய்வாளர்!

கடமை தவறிடா காவலர்! காக்கி நிற காவலர் உடுப்பு! நடுத்தர வயதுக்காரர் என்பதைப் பறைசாற்றும் விதமாக ஆங்காங்கே நரைத்திருந்த தலைமுடிகள்! உடற்பயிற்சி செய்து உறுதியேற்றப்பட்ட தேகம்! கூடவே அதற்கேற்ற உயரம்! கம்பீரமான உடல்மொழி! விவேகம் நிறைந்த விழிமொழி!

இப்படிப்பட்ட அடையாளங்களுக்குச் சொந்தக்காரர்தான்… விறுவிறுவென்று நடந்து செல்லுகின்ற காவல் ஆய்வாளர் பெனசீர் ரஃபிக்!!

************************************

மனிதம் பேசும் மஹிமா – ???

காயத்தின் வலியால் உடல் சோர்வால் அலைபேசியைக் கையில் வைத்தபடி கண் மூடிய மஹிமா, அமைதியாக இருந்த இடத்தில் எப்போது பேச்சு சத்தம் கேட்டதோ அப்போதே சூழலை உணர்ந்து கண் திறந்தாள். குடித்த தண்ணீர் ஓரளவிற்கு அவள் சோர்வைப் போக்கியிருந்தது.

அதனாலதான் கண்விழிக்க முடிந்தது!

‘யாரிவர்கள்? எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள்? இவ்வளவு கோபம் எதற்கு?’ என்ற கேள்விகள் ஒரு பக்கம் இருக்க, இப்போது, ‘நான் என்ன செய்ய வேண்டும்?’ என்ற பதற்றத்துடன் அவள் யோசித்த நேரம்தான் அந்த முகமூடி உருவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவள் முன்னே வந்து நின்றன.

இதோ… இப்போதும் நிற்கின்றன!

சற்றுமுன் பேசிய குரல்களுக்குச் சொந்தமான… கூடவே அந்த முகமூடிக்குப் பின்னிருந்த முன்பின் பார்த்தறிந்திடா மூன்று முகங்களையும் பார்த்தாள்!

அதில் ஒரு முகம் வயதான பெரியவருடையது! ஆவேசமாக கண்ணாடிகளை உடைத்திருந்தால் இவர் களைப்பாக தெரிந்தார்!!

மற்றொரு முகம் இளம் பெண் உடையது! இவளது தலையைச் சுற்றிப் பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது! அடங்காத கோபம் ஒன்று இவள் உடல்மொழியில் இழையோடித் தெரிந்தது! ஆனால் அதைத்தவிர வேறெந்த உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் நின்று கொண்டிருந்தாள்!!

மூன்றாவதாக நாற்பத்தைந்து வயதைக் கடந்த மனிதருடைய முகம்! எதிலும் பற்றே இல்லாமல், வெறுமையாக, ஓய்ந்து போய் இவர் தெரிந்தார்! மேலும் பெரியவரை விடவும் சோர்வாக இருந்தார்!!

அந்த முகங்களைப் பார்த்ததுமே மஹிமாவிற்குத் தோன்றியது, ‘இந்தப் பெரியவரா, இந்த மனிதரா, இந்தப் பெண்ணா… வெளியே அப்படி நடந்து கொண்டது?’ என்பதுதான்!

‘எதற்காக இவர்களுக்கு இவ்வளவு கோபம்? ஏனிந்த வெறுமை? இந்தப் பெண் நெற்றிக்காயம் எதனால்? இவ்வளவு பெரியவர், அனுபவம் உள்ளவர்… இந்தச் செயலைச் செய்யலாமா?’ என்ற வினாக்கள் மஹிமாவிற்குள் எழுந்தன.

மேலும், தன்னைப் பார்த்ததுமே கோபப்படுவார்களோ என்று பயந்திருந்தாள். ஆனால் மூவரும் அமைதியாக, இறுக்கமாக நின்றார்கள். ‘ஏன் இப்படி?’ என்று புரியவில்லை! அவர்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று தெரியவில்லை!

ஆனால் அவர்களது அமைதிகூட ஒரு பயத்தை மஹிமாவிற்குள் உண்டானது!

மஹிமா முகச் சோர்வை கண்ட அப்பெண், அவளை முழுவதும் ஆராய்ந்தாள்.  அவளது கணுக்கால் காயத்தைப் பார்த்தாள். உடனே, ‘வேறு யாரும் வெளியே இருக்கிறார்களா?’ என்று பார்க்க சென்றாள். அருகேயிருந்த கடைகள் மற்றும் நடைக்கூடத்தில் சோதனை செய்துவிட்டு உள்ளே வந்தாள்.

‘ஒருவரும் இல்லை’ என்பதால், இது இவள் கணுக்கால் காயத்தின் ரத்தம்தான். இதனால்தான் இவள் தப்பிக்க இயலவில்லை என்கின்ற முடிவிற்கு வந்தவள், மற்ற இருவருக்கும் அதைச் சொல்லவும், கையிலிருந்த கட்டையை அவர்கள் ஓரிடத்தில் வைத்துவிட்டார்கள்.

மேலும் மஹிமா கையிலிருந்த அலைபேசியை கண்ட அப்பெண், சற்றுநேரம் எதையோ யோசித்து நின்றாள். பின் என்ன நினைத்தாளோ மஹிமா முன்னே சென்று நின்று, ‘ஃபோன் கொடு’ என்பது போல் கைநீட்டினாள்.

‘கொடுக்கணுமா?’ என ஒருகணம் மஹிமா தயங்கினாள். ஆனால் அப்பெண் கைநீட்டிக் கொண்டே இருக்கவும், அப்பொழுதே கார்த்தி-க்கு அழைத்திருக்க வேண்டும் என்று நொந்து கொண்டு அலைபேசியைக் கொடுத்துவிட்டாள்.

அதை வாங்கிக் கொண்டவள், ஓய்ந்த தோற்றத்துடன் நின்ற அந்த மனிதரை ஆதரவாக கைபிடித்துக் கூட்டிச் சென்றாள். அந்தப் பெரியவர் அவர்களுடன் செல்லாமல், மஹிமாவின் காயத்தைப் பாவமாக பார்த்தபடி நின்றார்.

பெரியவர் நிற்பதைப் பார்த்த அந்தப் பெண், அவர் பார்வை நிலைத்திருக்கும் பக்கம் பார்த்தாள். ஒரு நிமிடம் அந்தப் பெண்ணின் பார்வையும் மஹிமாவின் காயத்தின் மேல் நிலைத்திருந்தது.

ஆனால் அடுத்த நிமிடமே… யாருக்காகவும் எதற்காகவும் இளகாமல் இருந்திட வேண்டுமென இதயத் தசைகளை இறுக்கிக் கொண்டாள்! நினைத்தது நடந்து முடியும் வரை ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூடாது என மனதைக் கல்லாக்கி கொண்டாள்!

அந்தப் பெண் பெரியவரை ஏதும் சொல்லாமல்… பார்வையைத் திருப்பி, அந்த மனிதரை அழைத்துச் சென்றாள். இருவரும் மஹிமாவிடமிருந்து சற்று தள்ளி நின்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

அலைபேசியும் போய்விட்டது. யாரிடமும் உதவிகூட கேட்க முடியாது. என்ன செய்வதென்றே தெரியாமல் மஹிமா தவித்தாள். களைப்பு வேறு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகியது.

இருந்தும் அதை ஒதுக்கிவிட்டு இரத்தம் உறைந்திருந்த காயத்திற்குக் கட்டுப் போட பையிலிருந்த ‘ஸ்டோல்’-ஐ எடுத்ததும், அவள் காயத்தையே பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் மெல்ல வந்து அவளருகே அமர்ந்தார். ‘ஸ்டோல்’-ஐ  அவளிடமிருந்து வாங்கி, அதிலிருந்து ஒரு பகுதியைக் கிழித்து… தண்ணீரில் நனைத்து… அவள் கணுக்கால் காயத்தைச் சுத்தம் செய்தார்.

கண்கள் மூடி மஹிமா வலியைப் பொறுத்துக் கொண்டிருந்தாள்!

பெரியவரோ, ஸ்டோலிலிருந்து இரண்டு துண்டுத் துணிகள் கிழித்து, நன்றாக காயத்தைத் துடைத்துக் கட்டுப் போட்டுவிட்டார். அதுவரைக்கும் மஹிமாவும் அவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. அதன்பின் மற்ற இருவரும் நிற்கும் இடத்தில் சென்று நின்று கொண்டார்.

சற்றுநேரம் காயத்தை தடவியபடியே இருந்த மஹிமா, அதன்பின்பு நிமிர்ந்து மூன்று பேரையும் பார்த்ததும், ‘இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா? என்ற கேள்வி ஒன்று உதித்தது!

கூடவே வெளியே அவர்கள் செய்த செயல்கள் கண்முன் வந்தன. மூச்சிரைக்க வந்த முதியவர்கள் முகம்… சிலர் உயிருக்குப் பயந்து ஓடியது… என்று எல்லாம் நினைவில் வர, சக உயிர்களை எப்படித் துன்புறுத்த முடிகிறது என்ற கோபம் மஹிமா மனதிற்குள் வந்திருந்தது!

இதனுடன், அப்பொழுது அவர்கள் நடந்து கொண்டதிற்கும், இப்போது நடந்து கொள்வதற்கும் இருக்கின்ற முரண்பாட்டைக் கண்டவளுக்கு ஒரு குழப்பமும் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது!

வெளியே அவர்கள் ஆவேசத்துடன் செய்த செயல்களைப் பார்த்திருந்தாலும், தன் கோபத்தை, குழப்பத்தை வெளிப்படுத்த நினைத்தாள். மற்ற இருவரைக் காட்டிலும் கோபத்துடன் இருக்கின்ற அந்தப் பெண், ‘என்ன செய்வாளோ?’ என்ற பயம் மஹிமாவிற்கு இருந்தது.

இருந்தும், “எல்லாத்தையுமே அ… அடிச்சி உடைச்சி டேமேஜ் பண்ணிருக்கீங்க. யா… யாருக்கும் ஏதாவது ஆயிருந்தா என்ன பதில் சொல்வீங்க? இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? எதுக்காக இப்படிப் பண்ணீங்க?” என்று களைப்பான குரலில் கேட்டாள்.

பெரியவர், மனிதர் இருவருமே எவ்வித எதிர்வினையும் புரியாமல் நின்றனர். ஆனால் அந்தப் பெண் மஹிமாவைப் பார்த்து, “என்ன… ஏது-ன்னு தெரியாம பேசக் கூடாது” என்று கோபமாகக் எச்சரித்தும், ‘நீ எதுவும் பேசாதே’ என்பது போல் பெரியவர் அவளை வேறு பக்கம் திருப்பினார்.

அதன்பின் அங்கே ஓர் அமைதி நிலவியது!

அந்த ‘என்ன… ஏது’ என்னவாக இருக்குமென்று மஹிமா யோசித்தாள்.

துப்பாக்கி வைத்திருந்தார்களே? அப்படியென்றால் இவர்களது அடுத்தடுத்த செயல்பாடுகள் எப்படி இருக்குமோ? தன்னைப் போல் எத்தனை பேர் உள்ளே மாட்டி இருக்கிறார்களோ? இவர்களால் அந்த உயிர்களுக்கு எதுவும் ஆபத்து வருமோ? என்றெல்லாம் யோசித்தவள் மனம் பதைபதைத்தது!

அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாதென மஹிமா மனம் வேண்டியது!!

எனவே அரைகுறையாக அவர்கள் பேச்சைக் கேட்டதை வைத்து, “உங்களுக்கு என்ன பிராப்ளம்-னு சொல்… சொல்லுங்க. நா… நான் ஹெல்ப் பண்றேன்” என அச்சத்தோடு கேட்டதும், மூவரும் ஒருமுறை அவளைத் திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் அவர்களுக்குள்ளே பேசினர்.

தனியாக பேசுவது போல் உணர்வைத் தந்தாலும், மஹிமா அதைப் பெரிதாக எடுக்கவில்லை. இங்கிருக்கும் எந்த உயிருக்கும் ஏதும் ஆகிவிடக் கூடாதென்ற எண்ணம் மேலோங்கிட, “கேட்கிறேன்ல… சொல்லுங்க” என்று கெஞ்சினாலும், அவள்புறம் பார்வையைக் கூடத் திருப்பாமல் மூவரும் இருந்தனர்.

ஆனால் மஹிமா திரும்பத் திரும்ப பேசியதால், ஓய்ந்திருந்த அந்த மனிதரின் முகத்தில்கூட எரிச்சலும், கோபமும் வந்திருந்தது. அதைப் பார்த்த பெரியவர், ‘இந்தப் பொண்ணு கொஞ்சம் பேசாம இருக்கக் கூடாதா?’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டார்.

கூடவே, ‘எதையும் கண்டுக்காதே’ என்பது போல அந்த மனிதர் கைப்பிடித்து, பெரியவர் அவர் கோபத்தைச் சமன்படுத்தினார்.

சோர்ந்திருந்த மனிதர் முகத்தில் திடீரென தெரிந்த கோபத்தைப் பார்த்ததும், ‘எப்போது என்ன செய்வார்களோ?’ என்ற பயம் மஹிமாவிற்குள் வந்திருந்தது. எனினும் இதை அப்படியே விட மனமில்லை.

ஆகவே, “இங்க இருந்துக்கிட்டு எப்படி ஹெல்ப் பண்ண முடியும்-னு நினைக்க வேண்டாம். ம், கார்த்தி. முழுப்பேர் கார்த்திகேயன்! லாயர்! அவனை எனக்குத் தெரியும். உங்களுக்கு நிச்சயம் ஹெல்ப் பண்ணுவான். உங்களோட ப்ராப்ளம் என்னென்னு மட்டும் சொல்லுங்க?” என்று அவர்களுக்கு நம்பிக்கைத் தருவது போல் கடகடவென சொல்லி முடித்தாள்.

அதுவரைக்கும் அவள் பேசுவதைக் கண்டும் காணாதது போல் இருந்தார்கள். ஆனால் அப்பொழுது பேசிய பேச்சைக் கேட்டதும்… அதிலிருந்த ஏதோ ஒன்று அவர்களைத் தொந்தரவு செய்ய, மூவரும் ஒரு சேர அவளைப் பார்த்தனர்.

என்ன பொருள் கொண்டது அவர்களது பார்வை?

***********************************