Neer Parukum Thagangal 5.1

NeerPArukum 1-fa6dbe10

நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 5.1

சுயமரியாதை பேசும் செல்வி – சரவணன்   

வெளியே ஆட்கள் அரவம் ஏதுமில்லையென்பதாலும், உள்ளேயும் கிரைன்டர் ஓடவில்லை என்பதாலும் மிகச் சிறிய சத்தமும் பெரிதாக கேட்கும்படி அந்த அறையில் ஓர் நிசப்தம் இருந்தது. அந்த நிசப்தத்தினோடு சேர்ந்து, சோர்ந்து போயிருந்த செல்வி மகனின் மெல்லிய அழுகைச் சத்தம் கேட்டது.

“அழாதடா” என்று மகனைச் சமாதனப்படுத்தியபடி தன்னைப் பார்ப்பவளை சரவணன் நிமிர்ந்து பார்த்தான். அவள் முகம் கலங்கிப் போயிருந்தது. இங்கே மாட்டிக் கொண்டதை நினைத்து இப்படி இருக்கிறாளோ? என்ற கேள்வியுடன் அவள் முன் வந்து நின்றான்.

“என்னாலதான் இப்படியா?” என்று கேட்டவளிடம், “அப்படியெல்லாம் இல்லை” என சமாதானமாக அவன் சொன்னதும், “நீங்க… சொல்றப்போ கேட்டிருக்கணும்” என்று செல்வி வருத்தப்பட, “அதை விடுங்க. பையன் அழறான். என்னென்னு பாருங்க?” என்றான் சரவணன்.

“நிறைய சத்தம் கேட்டதுல பயந்திருப்பான். அதோட வெளிய வச்சி சரியா சாப்பிடலை. பசிக்க வேற செய்யும். ஆனா பேக் வெளியில இருக்குது” என்று, ‘எப்படி மகன் பசியாற்ற?’ என தெரியாத குரலில் பேசினாள்.

“இங்கயும் சாப்பாடு இருக்குமே? எடுத்துக் கொடுங்க” என்று உடனே அவன் தீர்வு சொன்னாலும், செல்வி தயங்கிதான் நின்றாள்.

அதைப் பார்த்தவன், “ஏங்க, சித்தப்பா கடைதான். வாங்க” என்று இலகுவாகச் சொல்லிக் கொண்டே சமையல் மேடை அருகில் சென்றான்.

அவனிடம் ஏதும் சொல்லாமல், “அழாத. அழக் கூடாது. இதோ இப்போ… இப்ப அம்மா சாப்பாடு கொடுக்கிறேன்” என மகனிடம் கனிவாகப் பேசியபடியே செல்வியும் சமையல் மேடை அருகில் சென்றாள்.

இட்லி-தோசை மாவு இருந்தது. பெரிய சில்வர் ஹாட்-பாக்ஸ், சாம்பார்-சட்னி வாளிகள் இருந்தன. இட்லி இருந்தால் எளிதாக இருக்குமென்று நினைத்தவள், ஹாட்-பாக்ஸில் ‘என்ன இருக்கும்?’ என பார்க்க அதைத் திறக்க முயன்றாள்.

பசிக்காக அழத் தொடங்கிய மகனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, அந்த பெரிய ஹாட்-பாக்ஸை ஒரு கையால் மட்டும் திறக்க முடியவில்லை. நழுவிக் கொண்டே போனது.

அவள் முயற்சிகளைப் பார்த்த சரவணன், “தள்ளுங்க. நான் திறந்து தர்றேன்” என்று உதவியாக சொன்னதும், செல்வி விலகி நிற்க, ஹாட்-பாக்ஸை பட்டென திறந்து, ஒரே ஒரு இட்லி மட்டும் தட்டில் எடுத்து வைத்துவிட்டு, “இது போதுமா?” என்று கேட்டான்.

“ம்” என்று மட்டும் செல்வி சொல்லவும், சரவணன் பாக்ஸை மூடினான்.

அங்கே இருந்த சாம்பாரை கொஞ்சமாக ஊற்றப் போனவனிடம், “சாம்பாரா? காரம் கொடுத்துப் பழக்கலை” என அவள் மறுக்க, ‘என்ன வேணும்?’ என்பது போன்று அவன் பார்த்ததும், “வெண்ணித் தண்ணி” என்று சொன்னவளிடம் தட்டைக் கொடுத்துவிட்டு, ஒரு டம்பளரில் வெண்ணீர் எடுத்து தந்தான்.

அவ்வளவுதான்!

அதற்குமேல் சரவணன் பேசிக் கொண்டு இருக்கவில்லை. அந்த அறைக்கு அடுத்து காய்கறிகள் போட்டு வைத்திருக்கும் சந்தில் சென்று நின்று கொண்டான்.

அவன் போனதும் இட்லி மேல் சிறிதளவு வெண்ணீர் ஊற்றி, நன்றாக மசித்து மகனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட ஆரம்பித்தாள்.

நான்கைந்து வாய் வாங்கியதுமே ஹரி அழுவதை நிறுத்திவிட்டான். அவன் கண்களின் கண்ணீரை உள்ளங்கையால் துடைத்துவிட்டாள். பசி குறையக் குறைய மழலை மொழியில் ஏதோ பேசிக் கொண்டே ‘ஆ’ வாங்கினான்.

செல்வியும் மகனுக்கு இணையாகப் பேசியபடியே மேலும் ஒரு ஐந்தாறு வாய் ஊட்டிவிட்டாள். முக்கால் இட்லி காலியானது. அதற்குமேல் வாங்க மாட்டேன் என மகன் மறுத்ததும், கை கழுவிவிட்டு, அவன் முகத்தை துடைத்து தண்ணீர் தந்தாள்.

ஹரி நன்றாக பசியாறியதுமே… விளையாட வேண்டுமென நினைத்து அம்மா கைகளிலிருந்து இறங்க முயற்சித்தான். ‘நிறைய பாத்திரங்கள் இருக்கிறதே?! இந்த இடத்தில் எப்படி?’ என நினைத்தவள் தன் கைகளில் வைத்தே மகனுக்கு விளையாட்டுக் காட்டினாள்.

இப்படி விளையாட்டிலே சற்றுநேரம் கழிந்தது. அதன்பின் மகனைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே நடந்தாள். அளவில் சிறிய இடமென்பதால் முன்னே இரண்டு எட்டுகள்… பின் திரும்பி மூன்றே எட்டுகள். இவ்வளவுதான் அவளால் நடக்க முடிந்தது.

அழுததாலோ? பசியாறியதாலோ? சில வினாடிகளிலே ஹரி தூங்கிவிட்டான். மகன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்லும்வரை நடந்து கொண்டே இருந்தவள், அதன்பின் நடப்பதை நிறுத்திவிட்டுத் தரையில் அமர்ந்தாள். ஏதுவாக சுவரில் சாய்ந்து, மடியில் மகனைப் படுக்க வைத்து, அங்கிருந்த நாளிதழ் கொண்டு விசிறிவிட ஆரம்பித்தாள்.

இப்படியே வெகுநேரம் கழிந்தது!

அவ்வளவு நேரமுமும் செல்வி முட்டியை மடித்தே அமர்ந்திருந்ததால் கால்கள் பிடிப்பது போல் இருந்தது. அதனால் மகனை மெதுவாக தூக்கி, கால்களுக்கு அசைவு கொடுத்து, கால் விரல்களை நீட்டி பிடிப்பைச் சரிசெய்ய பார்த்தாள்.

அதுவரை இந்தப் பக்கம் திரும்பிப் பாராமல் நின்ற சரவணன், அக்கணத்தில் பார்க்க நேர்ந்ததும்… அவள் செயல்களைக் கண்டு, “கால் வலிக்குதுனா, நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கவா?” என்று உதவியாகக் கேட்டதும், “பரவால்ல” என்று மறுத்துவிட்டாள்.

அவன் அங்கே நின்றவாறே, “இன்னும் எவ்ளோ நேரம் இருக்கணுமோ, அதான் கேட்டேன்” என்று காரணம் சொன்னதும், “முழிச்சிடுவாங்க. பாதி தூக்கத்தில முழிச்சா அழுவான். அதான் வேண்டாம்” என அவளும் காரணம் கூறினாள்.

அதன்பின் அங்கே பேரமைதி நிலவியது!

ஹரி பற்றிய பேச்சுகள்… மாட்டிக் கொண்டதைப் பற்றிய பேச்சுகள்… இல்லை என்றதும், இதைத் தவிர தாங்கள் பேச என்ன இருக்கிறது என்பது போல பேசி முடிவெடுக்க வந்தவர்கள் இருந்தனர்!

****************************

கருத்தாய் பேசும் கண்மணி, சேது!

‘வீட்டில் தேடுவார்களே?!?’ என்று புலம்பியபடி அமர்ந்திருந்த கண்மணி, சற்று நேரத்தில் புலம்புவதை நிறுத்தி, ‘சமிக்கை இருக்கிறதா’ என பார்க்க மீண்டும் அலைபேசியை எடுத்தாள்.

இல்லையென்றதும், ‘ச்சே! சிக்னல் கூட இல்லையா? இருந்தாலாவது ஃபோன் பண்ணி அம்மாகிட்ட சொல்லலாம்’ என்று மனதிற்குள் கவலைப்பட்டாள்.

அவ்வளவு நேரமும் அவளது செய்கைகளையே பார்த்திருந்தவன், அதன்பின் பரப்பி கிடந்த அட்டைப் பெட்டிகளில் ஓரிரு பெட்டிகளை ஒதுக்கிவிட்டு, தன் அலைபேசியை சாளரம் பக்கமாக வைத்துப் பார்த்தான்.

அப்போதும் சமிக்கை கிடைக்கவில்லை!

உடனே பின்னால் திரும்பி, “உன்னோட மொபைல்ல சிக்னல் இருக்கா?” என்று மீண்டும் கேட்டதும், “இப்பதான சொன்னேன்?? சிக்னல் இல்லைன்னு. சும்மா பேசணும்-னு நினைச்சி கேட்டதையே கேட்காத!” என எரிந்து விழுந்தாள்.

“ச்சே” என்று கோபத்தில் ஒரு பெட்டியை உதைத்தவன், வேறு வழியில்லாமல் மற்றொரு பெட்டியின் மீது முட்டியை வைத்து… எக்கி நின்று சாளரம் வழியே கீழே ‘என்ன நடக்கிறது?’ என்று பார்த்தான். பெரிதாக ஏதும் தெரியவில்லை.

ஆனால் காவலர் வாகனம் ஒன்று மட்டும் தெரிந்தது!

அதற்குமேல் அந்த நிலையிலே நிற்க முடியாமல், முட்டியை இறக்கி நேராக நின்றான். சற்று நேரம், ‘இப்ப என்ன செய்ய?’ என யோசித்தபடி இருந்தவன், கால் வலிப்பது போல் இருக்க, பெட்டிகள் கிடக்கும் இடத்திலிருந்து தள்ளி வந்து அமர்ந்து கொண்டான்.

நேரத்தைக் கடத்துவதற்காக அலைபேசியை நோண்ட ஆரம்பித்தான்.

அவன் ‘என்னென்ன செய்கிறான்’ என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்த கண்மணிக்கு, ஒன்றரை அடி இடைவெளியில் வந்து அவன் உட்கார்ந்ததுமே என்னமோ ஒருமாதிரி ஆயிற்று!

பெட்டிகள் கிடக்கின்ற இடத்திலே நிற்பான் என்று நினைத்தவளுக்கு, அவன் அமர்ந்ததும், ‘ஏன்? எதற்காக?’ என்ற கேள்வி வந்தது!

கூடவே, வெளியே இருந்த போது அவனது பார்வை… உள்ளே வந்ததும் அவன் சிரித்த விதம்… ‘நல்லா மாட்டியாச்சு’ என அவன் சொன்னது… இப்படி எல்லாம் சேர்ந்து, ‘இங்கே இருப்பது ஆபத்தோ?’ என்று பயப்படச் செய்தது.

உடனே எழுந்து தாழ்பாளைத் திறந்தவள், ‘கதவை உடைத்தாவது வெளியே போக வேண்டும்’ என்ற முடிவில், முழு பலத்துடன் கதவை முன்னும் பின்னும் வேகவேகமாக இழுத்தாள்.

அவள் செயல்களைக் கண்டு எழுந்தவன், “ஏய், என்ன பண்ற?” என்று கேட்டது மட்டுமில்லாமல், அவளைத் தடுத்து நிறுத்தவும் முயற்சித்தான்.

‘தப்பிக்க விடாமல் தடுக்கிறானோ?’ என்ற எண்ணம் வர, அவன் கைகளைத் விருட்டென தட்டிவிட்டவள், உடனே தன் கைப்பையைத் திறந்து, அதிலிருந்த பெப்பர் ஸ்பிரே பாட்டிலை எடுத்து, அவன் முகத்தில் அடித்தாள்.

இப்படிச் செய்வாளென நினைத்திறாதவன், “ஏய்! ஏன் இப்படிப் பண்ண?” என கோபத்தில் கத்திவிட்டு, முகம் காந்துவதை பொறுக்க முடியாமல் துடித்தான்!

கண்களைத் திறக்க முடியவில்லை! கண்கள் சிவந்து போய் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது! இடையிடையே தும்மல் வேறு!!

முகத்தை ஷர்ட்டில் துடைத்துப் பார்த்தான். காந்துவது அதிகமாவது போன்று இருந்ததால், அதை விட்டுவிட்டு சற்று நேரம் அமைதியாக நின்றான். ஓரளவிற்கு எரிவது குறைந்ததும், திரும்பவும் கதவை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தவளின் கைப்பையைப் பிடுங்கினான்.

அந்த நேரத்தில் அதை எதிர்பாராதவள், “மரியாதையா பேக்-க கொடு” என்று சத்தம் போட்டாள். அவள் சொல்வதைப் பொருட்படுத்தாமல், அதில் ‘தண்ணீர் பாட்டில் இருக்கிறதா?’ என்று தேடினான். இருந்தது. அதை எடுத்துக் கொண்டு, கைப்பையை அவளிடமே தூக்கிப் போட்டான்.

பெட்டிகள் கிடக்கும் பக்கம் சென்று, தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிக் கொண்டே இருந்தான். மூன்று நான்கு முறை கழுவிய பின்னர் எரிச்சல் சற்று குறைந்து, சேதுவிற்கு கண்களைத் திறக்க முடிந்தது.

அவ்வளவுதான்!

அடுத்த நொடியே கண்மணியைக் கோபத்துடன் ஏறிட்டான் சேது!!

********************************