Neer Parukum Thagangal 8.2

NeerPArukum 1-d1a3a575

Neer Parukum Thagangal 8.2


நீர் பருகும் தாகங்கள்


அத்தியாயம் 8.2

அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்!

‘என்ன செய்ய?’ என்று யோசித்த லக்ஷ்மி, தன் மற்றொரு அலைபேசி பையில் இருக்கிறதா என்று தேடினார். அலைபேசி பைக்குள் இல்லை! ‘ப்ச்… கார்லயே விட்டுட்டு வந்திட்டேன் போல’ என நொந்து கொண்டார்!!

அடுத்ததாக இருவரின் அலைபேசியும் எங்கே விழுந்து கிடக்கிறதென சுற்றும் முற்றும் அவர் திரும்பிப் பார்க்கையில், ஒன்று கண்ணாடிக் கதவின் ஓரத்தில், மற்றொன்று சற்றுத் தள்ளி தரையில் உடைந்து கிடப்பது தெரிந்தது.

உடைந்திருந்தாலும் பொருத்திப் பார்க்கலாம் என தோன்றி, அதை எடுத்துவர அவர் எழப் போனதுமே, “எங்க போறீங்க ஆண்ட்டி? எனக்குத் தனியா இருக்க ஒருமாதிரி இருக்கு” என்று மினி அழுதுவிட, “அழாத. மொபைல் எடுக்கத்தான் போறேன். உன் அப்பாக்கு ஃபோன் பண்ண முடியுதானு பார்க்கலாம்” என்று சொல்லி, எழுந்து சென்று அலைபேசி பாகங்களை எடுத்து வந்தார்.

அவளருகில் அமர்ந்த லக்ஷ்மி, “இனி அழக்கூடாது. சரியா?” என சொல்லியபடி அலைபேசிகளைப் பொருத்துவதற்கு முயற்சித்தார். அவரது அலைபேசியைச் சரியாகப் பொருத்த முடியாமல் பயனற்று போனது! மினியின் கைபேசியை ஒன்று சேர்க்க முடிந்தது. ஆனால் தொடுதிரை வேலை செய்யவில்லை!!

‘இப்போ என்ன செய்ய?’ என்று மீண்டும் அவர் யோசிக்கையில், “அப்பாகிட்ட பேச முடியாதா?” என்று அவரது தோளோடு தலை சாய்த்து ஏங்கிக் கொண்டு மினி கேட்க, “இரு… வர்றேன்” என்று அவளை விலக்கிவிட்டு, மீண்டும் எழுந்து ஒத்திகை அறைக்குச் சென்றார்.

அவரைக் கண்டதும் கடுங்கோபத்தில் அந்தப் பையன் ஏதேதோ கத்தினதைக் கண்டுகொள்ளாமல்… அவனிடம் ’அலைபேசி இருக்கிறதா?’ என்று தேடினார்.

இருந்தது! அதை எடுத்து வந்து அமர்ந்தவர், “உன் அப்பா நம்பர் தெரியும்-ல?” என்று மினியிடம் கேட்டார்.

முகத்தில் கலக்கத்துடன், “தெரியும் ஆண்ட்டி” என்று சொன்னாலும், “பட் இது அவனோட மொபைல். எனக்கு வேண்டவே வேண்டாம்” என்று அருவருப்புடன் மறுக்க, “உன் அப்பாகிட்ட பேசணுமா? வேண்டாமா?” என்று கேட்டார்.

“பேசணும் ஆண்ட்டி! பட்…” என இழுக்கவும், “அப்ப யோசிக்காத. நம்பர் டைப் பண்ணு” என அலைபேசியை நீட்ட, தயக்கத்துடன் அதை வாங்கி ஒவ்வொரு எண்ணாக அவள் அழுத்தும் போது, “மினி, இங்க நடந்ததை உன் அப்பாகிட்ட இப்பவே சொல்லாத” என அவள் கைப்பிடித்துச் சொன்னார்.

“அப்பா டிரைவ் பண்ணிட்டு வர்றதால அவங்களுக்கு டென்ஷன் வேண்டாம், வீட்டுக்கு வந்தப்புறம் சொல்லலாம்னு அப்போ நானும் நினைச்சேன். ஆனா இப்போ முடியாதே ஆண்ட்டி?” என சூழ்நிலை நிலவரத்தால் அவள் மனமும் மாறிப் போயிருப்பதை இப்படிச் சொன்னாள்.

“இப்போ சொன்னா… உனக்கு என்னாச்சோ-ன்னு பயப்படுவாங்கள? சொல்ல வேண்டாம்னு சொல்லலை. நேர்ல பார்க்கிறப்ப சொல்லலாமே?” என்று கேட்டு நிறுத்தி, “அப்புறம் உன் இஷ்டம்” என, தன் எல்லை உணர்ந்து பேசினார்.

அவர் கூறுவது சரியென தோன்றினாலும்… அப்பாவிடம் இதைச் சொல்லாமல் எப்படி இருந்திட முடியும்? என்ற மனநிலையில் அழைத்தாள்.

மறுமுனையில் ஜோசப்! தொடுதிரையில் புதிய எண் வரவும் பதற்றத்துடன், “யாரு?” என்றார் கார் வேகத்தைக் குறைத்தபடியே அழைப்பை ஏற்று!

“அப்பா” என்று மினி அழுது கொண்டே ஆரம்பித்ததும், “மினி, நீ எங்க இருக்க? வெளிய வந்திட்டியா??” என்று பரிதவிப்புடன் ஜோசப் கேட்க, “அப்பா… உள்ளே மாட்டிக்கிட்டேன்” என்று சொல்லி ஓவென்று அழுதாள்.

வணிக வளாகத்தில் நடந்த அசாதாரண நிகழ்வுகள் நண்பர் ஒருவர் மூலமாக ஜோசப்பிற்குத் தெரிய வந்திருந்தது. அடுத்த நொடியே மகள் நிலைமையறிய அவள் அலைபேசிக்கு அழைக்க… அழைப்பு ஏற்கப்படாமல் போக… அவரைப் பதற்றம் சூழ்ந்து கொண்டது

திரும்பத் திரும்ப அழைத்தவருக்கு அறிவுப்புச் செய்திகள் மட்டுமே பதிலாக வரவும் பதற்றம் அதிகரிக்கத்துக் கொண்டே போனது. இதோ… இந்த நிமிடம் வரை அவருக்குப் பதற்றம்! பதற்றம்! பதற்றம் மட்டுமே!!

இக்கணம் மகள் குரலைக் கேட்டதுமே பதற்றம் குறைந்திருந்தாலும், அவளது அழுகுரல் அவரைப் பரிதவிக்கச் செய்தது!!

உடனே மகளைப் பார்க்க துடித்த மனதை அமைதிப்படுத்தி, “அழக்கூடாதுடா. விஷயம் தெரிஞ்சி அப்பா ஃபாஸ்ட்-டா வந்துக்கிட்டு இருக்கேன். போலீஸ்கூட அங்க வந்தாச்சாம். கொஞ்ச நேரத்தில வெளிய வந்திடலாம். சரியா? அழாத மினி, அழக்கூடாது” என்று ஆறுதலாகப் பேசினார்.

சற்றே கண்ணீரைக் கட்டுப்படுத்தி, “சரி-ப்பா. ஆனா இங்க…” என நடந்ததைச் சொல்ல நினைத்துத் தொடங்கியவளுக்கு லக்ஷ்மி பேசினது ஞாபகத்தில் வர, “ப்பா எனக்கு உங்களை உடனே பார்க்கணும்” என வார்த்தைகளை மாற்றிப் பேசிவிட்டு அழுதாள்.

‘என்னாகுமோ?’ என்ற பயம் ஜோசப்பிற்கு இருந்தாலும், “பயப்படாத. கொஞ்ச நேரத்தில அப்பா வந்திடுவேன்டா. அதுவரைக்கும் மினி பயப்படாம, அழாம இருக்கணும். சரியா?” என மகளுக்குத் தைரியம் தர நினைத்துப் பேசினார்.

அவளுக்கோ… அப்பாவிடம் நடந்ததைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை! அதேசமயம் அவர் பயணத்தில் இருப்பதால் சொல்வதற்கும் பயம்! இதனுடன் உடனே அப்பாவைப் பார்த்தாக வேண்டுமென்ற மனநிலையும் சேர்ந்ததால், மினிக்கு கண்ணீர் வந்து கொண்டே இருந்தது!

‘அழாம பேசு’ என லக்ஷ்மி சைகை செய்தாலும் அழுது கொண்டே இருந்தாள்!!

இதற்கிடையே மகள் பேச்சும், குரலும், அழுகையும் ‘ஏதோ சரியில்லை’ என்ற உணர்வைத் தந்ததால், “மினி… இது யாரு நம்பர்மா? உன் ஃபோன் ஏன் ரீச்சாக மாட்டிக்குது? உனக்கு ஒன்னுமில்லையே? இவ்ளோ ஏன் அழற?” என்று ஜோசப் சந்தேகத்துடன் கேள்விகளை அடுக்கினார்.

‘இதற்கு என்ன பதில் சொல்ல?’ என்று தெரியாமல்… கண்ணாடி ஊடே வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்து, ‘யாரு ஃபோன்-னு கேட்கிறாங்க?’ என்று லக்ஷ்மியிடம் சைகையில் சொன்னதும், ‘தன்னோடேதென்று சொல்லலாமா?’ என அவர் யோசிக்க ஆரம்பித்தார்.

அதற்குள் ஜோசப், “மினி… அப்பா கேட்கிறேன்ல? சொல்லு… என்னாச்சு மினி?” என பதறிக் கொண்டு கேட்டதும், அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்தவோ, நடந்ததைச் சொல்லாமல் இருக்கவோ துளியும் முடியவில்லை.

லக்ஷ்மி, ‘ஏதாவது பேசு’ என்பது போல் அவள் கைப்பிடித்து அழுத்த, “நீங்களே பேசுங்க ஆண்ட்டி, ப்ளீஸ்” என்று அலைபேசியை அவரிடம் கொடுத்தவளுக்கு அப்பாவின் தோள் சாய்ந்தால் பாதுகாப்பாய் இருக்குமென தோன்றியது.

சரிதானே!?! தரணியிலே தந்தையின் தோள் தருகின்ற பாதுகாப்பு உணர்வை வேறேது தந்துவிட முடியும்? ஆனால் அது இப்பொழுது சாத்தியமில்லை என்று புரிந்ததால், லக்ஷ்மியின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

*******************************

வணிக வளாகத்தின் வெளியே

நன்கு இருட்டியிருந்தது. கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்ததால் முக்கிய சாலை வழியே போன சைக்கிளில் தேனீர் விற்கும் இரண்டு மூன்று பேர்கள் உட்சாலையில் வந்து நின்று, தேனீர் விற்றுக் கொண்டிருந்தனர்.

உறவினர்களும் சரி… பொதுமக்களும் சரி, கிடைத்த இடங்களில் அமர்ந்தனர். அதில் சரவணன் சித்தப்பா, சித்தி, செல்வியின் அக்காவும் உண்டு! இவர்கள் இங்கே வந்து சற்று நேரம்தான் ஆகுகிறது. நடந்தது தெரிந்ததுமே இருவரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

ஆனால் பெரியளவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்று காவலர்கள் பேசியதாக சரவணன் சித்தப்பா சொன்னதால், சமாதானம் ஆனார்கள்.

ஊடங்கங்கள் ஒருபக்கம் அதன் பணியைச் செய்து கொண்டிருந்தன.

****************************

கடமை தவறா காவலர் பெனசீர்!

யார், ஏன், எதற்காக இப்படிச் செய்திருக்கிறார்கள் என கணிக்க முடியாமல், ‘எங்கிருந்து ஆரம்பிக்க?’ என்ற கேள்வியுடன் மேசைக்கு குறுக்கே நெடுக்கே பெனசீர் நடந்து கொண்டிருந்தார்!

இடையிடையே கட்டிடத்தைப் பார்ப்பதும், சற்று தள்ளி அமர்ந்திருந்த வணிக வளாக செக்யூரிட்டி ஆட்களைக் கவனிப்பதுமாக இருந்தார். மேலும் அவர்கள் கூறிய பதில்களை மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஓட்டிப் பார்த்தார்.

அக்கணத்தில்… அவர் கேட்டபடி மகளிர் தின கொண்டாட்ட காணொளி, அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து வாங்கி வரப்பட்டது.  உடனே, “இதைப் பார்க்கிறதுக்கு அரேஞ் பண்ணுங்க” என காவலர் ஒருவரிடம் சொல்லிவிட்டு, அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

அவர் சொன்ன உத்தரவின் பேரில் மடிக்கணினி ஒன்றை மேசையில் வைத்து, வாங்கி வந்த விரலி நினைவகத்தை [pen drive] அதனுடன் இணைத்து, காவலர் காணொளியை ஓடவிட்டார்!

போதிய ஒளியில்லா இடத்தில் கணினி திரையின் ஒளி பெருவெளிச்சமாகத் தெரிந்தது. பெனசீர் அமர்ந்திருக்க, செந்திலும் ஓரிரு காவலர்களும் நின்ற நிலையிலே காணொளியைப் பார்க்க ஆரம்பித்தனர்.

அனைவரின் பார்வையும், ‘சந்தேகப்படுபடி எதுவும் நடந்திருக்குமா?’ என்று மிக கூர்மையாக இருந்தது. காணொளி முழுவதுமே ஓடி முடிந்தும், அப்படி ஏதும் இல்லை என்றதால், ‘அடுத்து என்ன செய்ய?’ என யோசித்தனர்.

மற்ற காவலர்கள்தான் இப்படி!

ஆனால் பெனசீர், “ஃபோர்த் ஃப்ளோர் செக்யூரிட்டியை வரச் சொல்லுங்க” என ஒரு காவலரிடம் கூற, உடனே அவர் விரைவாகச் சென்று அப்பெண்மணியை அழைத்து வந்திருந்தார்.

‘ஏன்? எதற்கு?’ என்ற ஒரு சிறு பயத்துடன் வந்து நின்றவரிடம், “இதுல… நீங்க சொன்ன பொண்ணு இருக்குதான்னு பார்த்துச் சொல்லணும்” என்ற பெனசீர், காணொளியை மீண்டும் ஓடவிட்டார்.

“சரி மேடம்” என தலையாட்டி, அந்தப் பெண்மணி காணொளியைப் பார்க்க ஆரம்பித்தார். காணொளியில் ஒரு இடம் வந்ததும், “மேடம்… மேடம்… இந்தப் பொண்ணு! இதே பொண்ணுதான்” என கணினித் திரையில் கண்மணியைச் சுட்டிக் காட்டினார்.

ஒருமுறை திரையை நோக்கிய பெனசீர், “நல்லா தெரியுமா?” என்று அழுத்திக் கேட்டதற்கு, “ம்ம்ம் தெரியும் மேடம்! அது மட்டுமில்ல, அந்தப் பொண்ணு இந்த சின்ன பொண்ணுக்காகத்தான் சண்டை போட்டது” என லக்ஷ்மி அருகிலிருந்த மினியைக் கைகாட்டினார்.

யோசித்தபடி இருந்த பெனசீர், “நீங்க போய் உட்காருங்க” என்று செக்யூரிட்டி பெண்மணியிடம் சொல்லிவிட்டு, மீண்டும் காணொளியைப் பார்த்தார்.

போக சொன்ன பிறகுமே போகாமல் நின்ற அப்பெண்மணி, “மேடம்… நாங்க வீட்டுக்குப் போலாமா?” என தயக்கத்துடன் கேட்க, ஓரிரு நொடிகள் பெனசீர் அமைதியாக இருந்துவிட்டு… பின், “எப்போ போகலாம்னு நானே சொல்றேன். இப்போ போய் உட்காருங்க” என்று மறுத்துவிட்டார்.

அதற்குமேல் கேட்க பயந்து கொண்டு, அந்தப் பெண்மணி சென்றதும், ஓடிக் கொண்டிருந்த காணொளியை பெனசீர் பார்த்தார்.

அதில் மினி வருவதற்கு முன்பே ஒரு இடத்தில் லக்ஷ்மியும், செல்வியும் பேசிக் கொண்டிருப்பது, மினி வந்து லக்ஷ்மியின் அருகினில் அமர்ந்திருப்பது, அதே கூட்டத்தில் மினிக்காக குரல் உயர்த்திய கண்மணி இருப்பது… இது எல்லாம் பெனசீரின் கண்களில் விழுந்தன.

‘இவர்களுக்குள் சம்பந்தம் இருக்குமா? இவர்களுக்கும் இந்தச் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்குமா?’ என்று பெனசீர் யோசிக்கையில், “மேடம்… இவங்கதான் இதைப் பண்ணியிருப்பாங்களா?” என்று செந்தில் கேட்டான்.

“உறுதியா சொல்ல முடியாது. அதுக்காக அப்படியே விடவும் கூடாது. இவங்க நாலு பேரு!! முகமூடி போட்டு வந்தது மூனு பேருன்னு எல்லாரும் சொல்றாங்க. அது ஆணா பொண்ணா-னும் தெரியாது. அதான் யோசிக்கிறேன்” என்று கூறி முடிக்கையில், மூன்றாவது தள செக்யூரிட்டி பெண் வந்து நின்றாள்.

உடனே செந்தில், “அதான் வீட்டுக்கெலாம் போ முடியாதுனு சொல்லியாச்சில. அப்புறம் என்ன?” என சத்தமிட, “அதுக்காக இல்ல சார். இது வேற. மேடம்கிட்ட ஒன்னு சொல்லணும்” என பெனசீரைப் பார்த்தாள்.

“என்ன சொல்லணுமோ சொல்லுங்க” என்றார் பெனசீர் பொறுமையாக!

“மேடம், சத்தம் கேட்டதுமே ஃபோர்த் ப்ளோர பார்த்தேன். அங்கே மூணு பேரு! ஒரே மாதிரி டிரஸ்ல இருந்தாங்க… உருட்டுக் கட்டையால கண்ணாடி, சேரை உடைச்சிக்கிட்டு இருந்தாங்க… அது…” என்று பேசி முடிக்கும் முன்னே, “இதை எல்லாரும் சொல்லியாச்சு” என்று செந்தில் குறுக்கிட்டான்.

உடனே பெனசீர், “இருங்க செந்தில். அவங்க சொல்லட்டும்” என்றவர், எழுந்து நின்று கொண்டு, “நீ சொல்லும்மா” என்றார் செக்யூரிட்டி பெண்ணிடம்!

“மேடம், அதுல ஒருத்தர் பொண்ணு… பொண்ணு மாதிரி தெரிஞ்சது… இல்லை பொண்ணுதான் மேடம்” என தட்டுத் தடுமாறிச் சொன்னதும், சில கேள்விகள் பெனசீருக்குள் எழ, “சரி மத்தவங்க?” என்று கேட்டார்.

“தெரியலையே மேடம். பார்த்ததைச் சொல்லத்தான் வந்தேன்” என்றதும், “சரி, வேற எதும் ஞாபகம் வந்தாலும், உடனே வந்து சொல்லணும். இப்ப போ” என்று அவளை அனுப்பிட, “மேடம், இந்தப் பொண்ணு சொல்றதை வச்சிப் பார்த்தா” என்று செந்தில் கேள்வியோடு யோசித்தான்.

“ம் பார்க்கலாம்” என்ற பெனசீர், “ஸ்டான்ட்-பை ஆம்புலன்ஸ் அன்ட் பயர் ட்ரக் இருக்கிற மாதிரி பார்த்துக்கோங்க. சிசிடிவி ஃபுட்டேஜ் வேற வழியில அக்சஸ் பண்ண ட்ரை பண்ணுங்க” என அடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்து அமர்ந்து கொள்ள, சரியென்று செந்தில் சென்று விட்டான்.

அமர்ந்தவர் யோசிக்க ஆரம்பித்தார்!!

கண்மணி-மினி பற்றி நான்காவது தள செக்யூரிட்டி பெண் கூறியது! லக்ஷ்மி, செல்வி மற்றும் மினியிடம் பேசியிருப்பது! மகளிர் தின கொண்டாட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டது!

இப்படி எதேச்சையாக நடந்தவற்றை, செக்யூரிட்டி பெண்கள் சொன்னதுடன் பெனசீர் சம்பந்தப்படுத்திப் பார்த்தார்!

‘எங்கிருந்து தொடங்க?’ என்ற கேள்வியுடன் நின்றவருக்கு ஒரு ஆரம்பப்புள்ளி கிடைத்தது போல் தோன்ற… சிறப்பு காவலர் ஒருவரான தினேஷை அழைத்து, “இந்த நாலு பேரை பத்தின டீடெயில்ஸ் இம்மீடியட்டா வேணும் தினேஷ்” என உத்தரவிட்டார்.

இதன் மூலம் நடந்த நிகழ்விற்குச் சம்பந்தமே இல்லாதவர்களை பெனசீர் தன் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்தார்!!

******************************

மனிதநேயம் பேசும் மஹிமா – ??? – கார்த்திகேயன்

கார்த்திகேயன் பேசியதைக் கேட்டதும் சமாதானம் அடைந்திருந்த மஹிமா மனம் சஞ்சலப்பட்டது. கூடவே, ‘உனக்கு இன்னும் கோபம் இருக்கா கார்த்தி?! அப்போ எனக்கும் அப்படித்தான். இனி ஃபோன் பண்ண மாட்டேன். நீ ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்’ என்று சண்டைக்கும் நின்றது.

உள்ளுக்குள் இதெல்லாம் ஓடிபடியே நிமிர்ந்து பார்த்தாள். பார்த்த நொடியே அதிர்ச்சியானாள்! மூவரின் கண்களுமே கலங்கியிருந்தது!

‘என்னாயிற்று இவர்களுக்கு? உதவி கிடைக்கப் போவதில்லை என்பதால்தான் இப்படியா?’ என்ற கேள்வி வந்தது. அவர்கள் செய்த செயல்களில் இப்போதுமே அவளுக்கு உடன்பாடில்லை! ஒத்துக் கொள்ள முடியாது!

அது எத்தனை பேரை பாதித்திருக்குமோ என்பதால்!!

ஆனால் இக்கணம் அந்த மூவரின் கண்களில் தெரிந்த வலி மஹிமா மனதை என்னவோ பண்ணியது! அவள் குணத்திற்கு அவர்கள் கண்களில் தேங்கி இருந்த கண்ணீரைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அவ்வளவு சுலபமல்ல!

கூடவே அவளிடம் அவர்கள் நடந்து கொள்ளும் விதம், கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக உள்ளே இருப்பவர்களைத் துன்புறுத்தாத குணம் என யோசித்தவளுக்கு, இவர்களது வலியைப் போக்கிடவும் ஏதாவது செய்யலாமே என்று தோன்றியது!

அவர்களுக்கு, ‘என்ன வலி… என்ன பிரச்சனை?’ என்று தெரியாவிடிலும், அந்த மூவருக்காக ‘என்ன செய்ய?’ என்று யோசித்தாள்!!

பின்னர் பெரியவரைப் பார்த்து, “எனக்கும் கார்த்திக்கும் ஒரு சின்ன சண்டை. அதான் இப்படிக் கோபமா பேசறான். நான் வேணா… திரும்ப கால் பண்ணிப் பார்க்கட்டுமா?” என கேட்டதற்கு, ‘இவள் என்ன சொல்லப் போகிறாள்?’ என்று அவர் பைரவியைப் பார்த்தார்.

சூழ்நிலையில் கவனமில்லாமல் இருந்ததால் அவள் எதுவும் பேசாமல் இருக்க, பெரியவர் அவளது தோளில் தட்டி, “திரும்ப கால் பண்ணட்டுமா-னு கேட்கிறா. என்ன செய்ய?” என்றதும், “ஒரு நிமிஷம்” என எழுந்து சென்றவள், யாருக்கோ அழைத்து வெளியே இருக்கும் நிலவரம் குறித்து அறிந்தாள்.

அறிந்ததும், ‘ப்ச், ஏன் இப்படி?’ என்று கண்ணீர் துளிர்க்கப் பார்த்தது. உடனே, ‘காரியம் முடியும்வரை கலங்காதே’ என மனதைக் கல்லாக்கி கொண்டாள்!

மீண்டும் மஹிமா முன் வந்தமர்ந்ததும், “என்னாச்சு பைரவி?” என பெரியவர் கேட்க, “வேற மாதிரி போகுது தாத்தா” என்று அவள் வருத்தமாக சொன்னதும், அல்போன்ஸ் முகத்தில் அப்படியொரு வேதனை வெளிப்பட, “பார்த்துக்கலாம் அங்கிள். நீங்க இப்படி இருக்காதீங்க” என்று ஆறுதல் சொன்னாள்.

‘வெளியே யாரிடம் பேசுகிறாள்? இவர் வேதனையின் காரணம் என்ன?’ என்று புரியாமல் இருந்த மஹிமாவிடம், “நீ ஃபோன் பண்ணி பாரு” என்றாள் பைரவி எப்படியாவது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற வேகத்தில்!

மஹிமா தாமதிக்காமல் கார்த்திக்கு அழைத்தாள்!

இந்த முறை உடனே அழைப்பை ஏற்ற கார்த்தி, “உனக்கு ஒரு தடவை… ” என்று ஆரம்பிக்கும் பொழுதே, “கார்த்திகேயன்… நான் லாயர் கார்த்திகேயன்-கிட்ட பேசறேன். நான் சொல்றதைக் கொஞ்சம் கவனமா கேட்க முடியுமா?” என்று மஹிமா பேசியதும் மறுமுனையில் இருந்தவன் அமைதியானான்.

மஹிமாவே தொடர்ந்து, “எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். ஸோ… நீங்க திருப்பி மாலுக்கு வாங்க. வந்தப்புறம் இங்க இருக்கிற சிச்சுவேஷன் பார்த்து, எனக்கு கால் பண்ண தோணிச்சி-னா… கால் பண்ணுங்க. என்ன ஹெல்ப் வேணும்னு சொல்றேன். இல்லை, உனக்காக ஹெல்ப் பண்ண முடியாது-னா… அதையும் சொல்லிடுங்க. நான் வேற யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டுக்கிறேன்.

அன்ட் இன்னொன்னு! இப்ப நான் கால் கட் பண்ணதும், திரும்ப கால் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நோ யூஸ்! இதுக்கப்புறம்… உங்க இஷ்டம்!!” என அவன் பேசவே இடம் கொடுக்காமல் அழுத்தமாக பேசிவிட்டு, அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

அவள் இப்படிப் பேசுவாளென பைரவியும் பெரியவரும் எதிர்பார்க்கவில்லை போல! ஆச்சரியமாகப் பார்த்திருந்தனர்!!

பேசிமுடித்து அலைபேசியை பைரவியிடம் நீட்டிட, அவள் அதை வாங்காமல் எதுவும் பேசாமல் எழுந்து, சண்முகத்திற்கு ஆறுதலாக அவர் அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.

தன்னருகில் அலைபேசியை வைத்துக் கொண்ட மஹிமாவிற்கு காயத்தின் வலியும், பசியும் கூடிக் கொண்டே போனதில் ஆயாசமாக வர, பின்னிருந்த தடுப்பில் சாய்ந்து பெரியவரைப் பார்த்தாள்.

மெதுவாக, “அந்தப் பையன்… திரும்ப ஃபோன் பண்ணுவானா?” என்று அவர் கேட்டதற்கு, “நீங்க வேணா பாருங்க, கார்த்தி கண்டிப்பா கால் பண்ணுவான்” என்றாள் அவ்வளவு நம்பிக்கையுடன்!

ஆம்! கார்த்தி நிச்சயம் அழைத்துவிடுவான்! அதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் அவளுக்கு இருந்த சந்தேகம் இவர்கள் செய்த செயல்கள் தெரிந்தால் உதவி செய்வானா என்பதுதான்!

சந்தேகத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு, “அவங்க ரெண்டு பேர் பேரும் தெரியும். உங்க பேர்?” என்று பெரியவரிடம் கேட்கவும், “சண்முகம்” என்றவர், “உன் பேரென்ன?” என்று கேட்க, “மஹிமா” என்றாள் களைப்பாக.

“சோர்வா தெரியற. இதைச் சாப்பிடுறியா?” என ‘கேக்கை’ காட்டி கேட்டதற்கு, “வேண்டாம். முட்டை, வெண்ணை இருக்கும்” என சொல்ல, “சைவமா நீ?” என அவர் கேட்க, “இல்ல வீகன்” என்று அவள் சொல்ல, “அப்படினா??” என்று அவர் திரும்ப கேட்க… இப்படியே அவர்கள் பேச்சு தொடர்ந்தது.

இதே நேரத்தில்… தன் கட்சிக்காரரை பார்க்க சென்று கொண்டிருந்த கார்த்தி, மீண்டும் மஹிமாவின் அலைபேசி அழைப்பு வந்ததும், ஒருவித எரிச்சல் வர பைக்கை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு பேச ஆரம்பித்திருந்தான்.

ஆனால் மஹிமா அப்படிப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தும், ‘இவளுக்கு என்னாயிற்று? கோபத்தினால் இப்படிப் பேசுகிறாளா? குரலில் ஏன் இவ்வளவு சோர்வு?’ என்ற கேள்விகளுடனே பைக் மேல் அமர்ந்திருந்தான்.

மீண்டும் அழைக்கலாம் என நினைத்தவனுக்கு, ‘அழைக்காதே!’ என்று அவள் சொன்னது ஞாபகம் வந்தது. ‘அப்படி என்ன விடயம்?’ என யோசித்தவன்… தன் கட்சிக்காரரை அழைத்து, ‘நாளை பார்க்கலாம்’ என்று தகவல் சொல்லிவிட்டு, திரும்ப வணிக வளாகத்தை நோக்கி விரைந்தான்.

மிகக் குறைந்த நேரத்தில் அங்கே வந்தவன், பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினான். சாலை விளக்கொளியில் மஞ்சள் நிற தடுப்புகள், கூடியிருந்த மக்கள் கூட்டம், அதனருகே காவலர்கள், ஊடகத்தினர், ஊடக வெளிச்சங்கள் என அவன் கண்ட காட்சிகள் யாவும் பதட்டத்தைக் கொண்டு வந்தன.  

அங்கு நின்ற பொதுமக்கள், ஊடகத்தினரிடம், ‘என்ன நடந்தது?’ என கேட்டுக் கொண்டான். பின் காவல்துறையில் தனக்குப் பழக்கமானவர்களிடமும் சில விடயங்களைக் கேட்டறிந்தான்.

கார்த்தியின் பதற்றம் மொத்தமும் மனைவியாக வரப்போகிறவளுக்கு ‘என்ன பிரச்சனையோ?’ என்ற பரிதவிப்பாக மாறியது! அவள் மீதிருந்த கோபம்கூட இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது!

‘மஹி, உள்ளே மாட்டிகிட்டியா? அதான் கால் பண்ணியா? ப்ச்! இது தெரியாம நான் என்னென்னமோ பேசி!’ என்கின்ற புலம்பல்களுடன், அலைபேசி எடுத்து அவளுக்கு அழைத்தான்!

சண்முகம், மஹிமா பேசிக் கொண்டிருக்கையில் கார்த்தியின் அழைப்பு வர, ‘நான் சொன்னேன்-ல’ என்பது போல் அவரைப் பார்த்தாள். ‘ம்ம்’ என்று சின்ன தலையசைப்பு செய்துவிட்டு பெரியவர் அல்போன்ஸைப் பார்க்கவும், அவரும் சண்முகத்தைப் பார்த்தார்.

‘இவனாவது உதவுவானா?’ என்ற அர்த்தத்தில் அவர்கள் பார்வை இருந்தது!

இருவரும் சேர்ந்து பைரவியைப் பார்க்க… தான்தான் உதவி கேட்டிருந்தாலும் இன்னும், ‘இவர்களை நம்பலாமா?’ என்ற சந்தேகத்தில் அவள் இருந்தாள்!

அலைபேசியைக் கையில் வைத்திருந்த மஹிமா, ‘இவர்கள் மூவரும் செய்தது தெரிந்தால்… கார்த்தி எப்படி எதிர்வினை புரிவானோ?’ என்ற தயக்கத்திலே அழைப்பினை ஏற்காமல் இருந்தாள்!

உள்ளே இப்படியென்றால்… வெளியே, ‘ப்ளீஸ் ஃபோன் அட்டன் பண்ணு மஹி. உன்கிட்ட பேசியே ஆகணும்’ என்று தவித்திருந்தான் கார்த்திகேயன்!!

******************************

Leave a Reply

error: Content is protected !!