Neer Parukum Thagangal 9.2

Neer Parukum Thagangal 9.2
நீர் பருகும் தாகங்கள்
அத்தியாயம் 9.2
அப்பாவின் குட்டி இளவரசிகளாகிய – லக்ஷ்மி கேசவன், மினி ஜோசப்!
‘ப்பா… ப்பா’ என கரைந்து கொண்டிருப்பவளின் தோளை, லக்ஷ்மி ஆறுதலாக தட்டிக் கொடுத்தபடியே, “மினி… இப்படி அழுதா எப்படி? பேசு” என்று இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தும், அவள் எழுந்து கொள்ளவில்லை.
சிறிதும் அழுவதை நிறுத்துவது போலும் இல்லை!
அதற்குள் அலைபேசி வழியாக, ‘மினி என்னாச்சு? பேசுமா?’ என ஜோசப்பின் கலங்கிய குரல் பரிதவிப்புடன் பலமுறை கேட்டதால், லக்ஷ்மி அலைபேசியை காதிற்கு கொடுத்து, “ஹலோ சார்” என்றார்.
மகளின் குரல் இல்லை என்றதும் பதற்றம் இன்னும் அதிகரிக்க, “மினி?” என்று கேள்வியாக உச்சரித்துவிட்டு, “ஒன் மினிட், கார் பார்க் பண்ணிக்கிறேன்” என காரை சாலையின் ஓரமாக நிறுத்தியபின், “நீங்க யாரு?” என்று ‘அங்கே என்ன நடக்கிறது?’ என்று புரியாத பயத்துடன் கேட்டார்.
“சார், நான் மிஸ் லக்ஷ்மி. மேனேஜிங் டைரக்டர் ஆஃப் ஸ்பீக்வெல் அகடமி” என அவர் அச்சமடையக் கூடாதென தன்னை அறிமுகம் செய்தவர், “இப்போ மினி என்கூடத்தான் இருக்கா சார்” என்றார்.
அப்போது மகள் சொன்ன ‘லக்ஷ்மி’ என்ற நபர்தானா இவர்? என்ற கேள்வி வர, “ஒருத்தங்க அட்வைஸ் பண்ணதா மினி சொன்னா. நீங்க அவங்களா?” என்று கேட்க, “ம்ம்ம்” என்ற லக்ஷ்மி… மினி குறித்து ‘என்ன கேள்வி கேட்பார், அதற்கு எப்படிப் பதில் சொல்ல?’ என்றே எண்ணிக் கொண்டிருந்தார்.
ஜோசப்பிற்கு… லக்ஷ்மி என்ற நபர் யாரென்றே தெரியாவிடிலும், மினி அவரை அழைக்கும் விதத்தினால், அவர் வகிக்கும் பொறுப்பினால், அக்கல்விக்கூடம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதால் லக்ஷ்மி மீதொரு நம்பிக்கை வந்திருந்தது.
இந்தச் சூழ்நிலையில் இப்படி ஒருவர் அருகில் மகள் இருப்பது, அவருக்கு ஒரு சிறு நிம்மதியைத் தந்தது!
இருந்தாலுமே, “மேம்! நான் மினியோட அப்பா ஜோசப். பிசினஸ்மேன்” என்று கடகடவென தன்னை அறிமுகம் செய்தவர், “மினிக்கு… ஏதும் ஆகலைல? அவ ஃபோன்க்கு கால் பண்ணப்போ, நாட் ரீச்சபிள்னு வருது… அதான் கேட்கிறேன்” என்று பதற்றம்-பரிதவிப்பு நிறைந்த குரலில் கேட்டார்.
ஜோசப் கேட்ட விதத்தில் மினிக்கு நடந்ததைச் சொல்லலாம் என லக்ஷ்மிக்குத் தோன்றியது. பெற்றவரிடம் மறைப்பது சரியல்ல என்று நினைத்தார். ஆனால் தான் சொன்னால் அவர் பதற்றம் அதிகரிக்கும்! பயணத்தில் இருப்பவருக்குப் பதற்றம் வேண்டாமே, இங்கே வந்தபின் சொல்லலாமே!? என்ற யோசனையும் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது.
இதை எல்லாம் எண்ணிப் பார்த்த லக்ஷ்மி கடைசியில், “உங்க பொண்ணோட மொபைல் வொர்க் ஆகலை சார்” என்று மட்டும் சொன்னார்.
தந்தையின் உள்ளுணர்வோ, தாயுமானவர் என்கின்றதாலோ மகள் எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாளோ என ஜோசப்பின் மனம் உழன்றது. சற்று நேரத்திற்கு முன்கூட அழைத்தாளே? அதற்குள் அலைபேசிக்கு என்னாயிற்று? என்ற மனக்குழப்பமும் வந்திருந்தது.
இருந்தும் அலைபேசி வழியே மினியின் அழுகுரல் கேட்டவர், இப்படி வருந்திக் கொண்டும்… குழம்பிக் கொண்டும் நிற்காமல் விரைவாக அங்கு செல்லலாம். அப்பா கூப்பிடும் தொலைவில்தான் இருக்கிறார் என்ற எண்ணம் மகளுக்குத் தைரியம் தந்து பயப்படாமல் இருக்க செய்யுமென நினைத்தார்.
உடனே, “மேம், மினியை அழாம இருக்கச் சொன்னேன். ஆனா அழுதுக்கிட்டே இருக்கா. ரொம்ப பயந்திட்டா போல” என்று மகளுக்காக வருந்தியவர், “மேம் பிசினஸ் விஷயமா வெளியூர் போயிட்டு… ரிட்டன் வந்துக்கிட்டு இருக்கிறேன். முடிஞ்சளவு சீக்கிரம் அங்க வந்திடுவேன்” என தன் நிலை சொன்னார்.
மேலும், “ஆனாலும் எப்போ ரெஸ்க்யூ இருக்கும்னு தெரியலை. இப்போ மினி பக்கத்தில நீங்கதான் இருக்கீங்க. கொஞ்சம் அவளைப் பார்த்துக்க முடியுமா மேம்?” என மகளுக்காக தயங்கித் தயங்கி உதவி கேட்டார்.
லக்ஷ்மிக்கு அவர் நிலைமை புரிந்ததால், “சார், வெளிய வர்ற வரைக்கும் நான் மினியைப் பார்த்துக்கிறேன்” என பொறுப்பாக சொல்லவும், “தேங்க்ஸ் மேம். தேங்க் யூ ஸோ மச்” என்று ஜோசப் நன்றி சொன்னார்.
அந்தநேரம் லக்ஷ்மியிடமிருந்து அலைபேசியை வாங்கிய மினி, “அப்பா நீங்க டென்ஷன் ஆகாம டிரைவ் பண்ணிட்டு வாங்க-பா. நான் இருந்துப்பேன்” என அழுதபடியே சொல்ல… மகளின் குரலைக் கேட்டதும், “சரிம்மா சரி. நீ அழாம இருக்கணும். சரியா மினி?” என்று நடுங்கிய குரலில் சொன்னார்.
“சரிப்பா… நீங்க பார்த்து வாங்க. வச்சிடறேன்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு, அலைபேசியை லக்ஷ்மியிடம் கொடுத்தாள். அதை வாங்கி வைத்துவிட்டு, அவர் மினியையே பார்த்தார்.
மிருதுவாக மினியின் தலைகோதியபடியே, “உன்னோட அப்பா பயப்படாம, அழாம இருக்க சொன்னாங்கள? அதனால இனி அழக்கூடாது?” என்று அவள் கன்னங்களின் கண்ணீர் தடங்களை அவர் துடைத்ததும், சரியென சொல்லி மீண்டும் அவரது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அதன்பின்… மினி அமைதியாக இருந்தாள். அழவுமில்லை. ஆனால் அழுதழுது சோர்ந்திருந்தாள். அவள் மனம் சமன்பட்டபின் அவளாகவே பேசட்டும் என்று லக்ஷ்மியும் எதுவும் கேட்காமல் இருந்து கொண்டார்.
அதன்பின்… அந்த விசாலமான இடம் முழுவதையும் வெறுமையான அமைதி ஒன்று சூழ்ந்து கொண்டது!
வெகுநேரம் கழித்தபின்னர் மினிதான், “ஆண்ட்டி” என மெதுவாக அழைத்து, “உங்ககிட்ட ஒன்னு கேட்கணுமே?!” என மீண்டும் பேச்சை ஆரம்பிக்க, ‘கேளு’ என்று லக்ஷ்மி தலையசைத்தார்.
கூடவே மினி சகஜமாகிறாள் என்பது கஷ்டப்பட்ட அவர் மனதிற்கு ஆறுதலாக இருந்தது!
மிக மிருதுவான குரலில், “உங்களுக்கு… மேரேஜ் ஆகலையோ?” என்று நிரம்ப தயக்கத்துடன் அந்தச் சூழ்நிலைக்குச் சம்பந்தில்லா கேள்வி கேட்டாள்
திடுமென அவள் இப்படிக் கேட்டதில் ஏற்பட்ட அதிர்ச்சியில் லக்ஷ்மி இருக்க, “சொல்லுங்க ஆண்ட்டி” என்று அவரிடமிருந்து விலகிக் கொண்டே… அவரது முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
“அதெல்லாம் ஆயிடுச்சே” என்று சாதாரணமாகச் சொல்ல, “ஆண்ட்டி… பொய் சொல்றீங்க” என்று சட்டென சொன்னதும், ‘எப்படிச் சொல்கிறாய்?’ என அவர் கண்கள் சுருக்கிப் பார்க்கவும், “அப்பாகிட்ட இன்ட்ரோடியூஸ் பண்றப்ப மிஸ் லக்ஷ்மி-னு சொன்னீங்க? இப்போ இப்படிச் சொல்றீங்க?” என்றாள்.
விழி அசையாமல் பார்த்தவரிடம், “இன்னொரு கொஸ்டின் கூட இருக்கு. நான் கிட்ஸ் பாவம்னு சொன்னப்போ உங்க பேஸ் சேஞ் ஆனது. அது ஏன்? அதுக்கும் இதுக்கும்… ம்?” என்று யோசித்தவள், கண்ணுக்குத் தெரியாமல் அவர் வைத்த புள்ளிகளை இணைத்துப் பார்க்க முயற்சித்தாள்.
********************************
வணிக வளாகத்தின் வெளியே
சூழல் இரவாகியிருந்தது. பொது மக்கள் கூட்டம் குறைந்திருந்தது. இருந்த ஒரு சிலரும் அலைபேசியில் அமிழ்ந்திருந்தனர். சிலர் நடந்தபடியே இருந்தனர்.
ஊடகத்தனர் ஏதேதோ பேசி… அந்த இருளையும், கட்டிடத்தையும், மஞ்சள் நிற தடுப்புகளையும் மாறி மாறி நேரலையில் காட்டிக் கொண்டிருந்தனர்.
உள்ளே மாட்டியிருப்பவர்களின் உறவினர்கள் கிடைத்த இடங்களில் அமர்ந்து கொண்டு அமைதியா இருந்தனர். அப்படித்தான் சரவணன் சித்தப்பா, சித்தி மற்றும் செல்வியின் அக்கா மூவரும்கூட இருந்தார்கள்.
********************************
கடமை தவறா காவலர் பெனசீர்!
மினி பற்றிய விவரங்களை தினேஷ் சேகரித்து வந்திருந்தான். மேலும் அதை ஒரு தொகுப்பாக பெனசீரிடம் சமர்ப்பிக்கவும் செய்திருந்தான்.
தகவல்களை பெனசீர் பார்த்துக் கொண்டிருக்க, “மேடம்… கொஞ்ச நாளைக்கு முன்ன ஒரு பையன் ‘லவ் பண்ணு’னு சொல்லி இந்தப் பொண்ணுக்கு நிறைய தொந்தரவு கொடுத்திருக்கான். ஸோ, இந்தப் பொண்ணோட சைடுலருந்து ஸ்டேஷன்ல கம்பளைன்ட் ரெய்ஸ் பண்ணியிருக்காங்க” என்றான்.
“ஓ… ஸ்டாகிங் கேஸ்! மேல விவரம் சொல்லுங்க” என்றார் பெனசீர்.
“மேடம் கம்பளைன்ட் கொடுத்ததுமே அரஸ்ட் நடந்திருக்கு. ஆனா பெயிலும் இமீடியேட்டா கிடைச்சிருக்குது”
“இல்லை… இல்லை… இன்னைக்கு ஸ்டேட்டஸ் என்னென்னு சொல்லுங்க”
“அந்தப் பொண்ணுகிட்ட பேச ட்ரை பண்ணினோம். பட் ஃபோன் ரீச் ஆகலை. அதான் அவங்க அப்பாகிட்ட பேசினோம். அந்தப் பொண்ணுமே உள்ளே ஒரு டிரஸ் ஷாப்ல மாட்டிக்கிட்டு இருக்குதுன்னு சொல்றாரு”
“ஏன் ஃபோன் ரீச் ஆகலை?”
“கேட்டதுக்கு ஒர்க் ஆகலைனு சொன்னாரு”
“அவர் எங்க?”
“பிசினஸ் ட்ரிப் போயிருந்தாராம். இப்போ ரிட்டன் வந்துக்கிட்டு இருக்கிறதா சொன்னாரு”
“சஸ்பெக்ட் பண்ற மாதிரி எதும் இல்லையே?” என பெனசீர் யோசிக்கையில், “எஸ் மேடம்” என்று தினேஷ் சொல்ல, அப்போது பெனசீருக்கு ஓர் அலைபேசி அழைப்பு வந்தது.
அலைபேசி தொடுதிரையைப் பார்த்தபடி பெனசீர், “சரி, நீங்க அடுத்ததைப் பாருங்க” என்று தினேஷிடம் சொன்னதும், “ஓகே மேடம்” என்று சொல்லி, ஒரு தலையசைப்புடன் அவன் விரைவாக அங்கிருந்து சென்றான்.
சில நொடிகள் பொறுத்து அலைபேசி அழைப்பை ஏற்ற பெனசீரிடம், ‘அங்கே தற்போதைய நிலவரம் என்ன? எதுவும் முன்னேற்றம் இருக்கின்றதா?’ இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன! அவரது உயர் அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்திருந்தது! கேள்விகளும் வந்து கொண்டிருந்தன!!
பெனசீருக்குப் புரிந்தது. நேரம் போக போக அலைபேசி அழைப்புகள் கூடும்! அழுத்தமும் அதிகரிக்குமென்று! ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தந்து, இங்கே எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைச் சொன்னதும், ‘சீக்கிரம் ரெஸ்க்கியூ பண்ணப் பாருங்க’ என்ற உத்தரவரோடு அழைப்பு முடிந்தது.
பெனசீர் பேசி முடித்த நேரத்தில், செந்தில் வந்து நின்று, “மேடம், கன் எப்படிக் கிடைச்சிருக்கும்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். உள்ள மாட்டியிருக்கவங்க டீடெயில்ஸ் வந்திடுச்சு. அதை வச்சி அவங்கள்ல யார்கிட்டயாவது பேச ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்புறமா அஸிஸ்டன்ட கமிஷனர் ஸ்பெஷல் யூனிட் தேவைப்படுமானு கேட்கிறாரு” என்றான்.
‘வேண்டும், வேண்டாம்’ என்று சொல்லாமல், “விஷயம் சீரியஸ் ஆனது மாதிரி தெரியலையே. சென்சிட்டிவானதோனு தோணுது!” என்று அவர் அனுபவத்தை வைத்துச் சொன்னவர், “ஏ.சி.கிட்ட நான் பேசிக்கிறேன்” என்றார்.
மேலும், “சிசிடிவி ஃபுட்டேஜ் தேர்ட் பார்ட்டி சர்வர்ல ஸ்டோர் பண்றாங்களானு கேளுங்க. அப்படி இருந்தா, இந்த பர்ட்டிகுலர் டைம் பிரேம் மட்டும் ரெட்ரிவ் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு, பெனசீர் எழுந்து நடக்க ஆரம்பித்தார்.
“ஓகே மேடம்” என்றான் அவருடன் நடந்தபடி.
“அன்டர்கிரௌன்ட் ஃபுல்லா பார்க்கிங்தான?”
“எஸ் மேடம்”
“அப்படி ரிமோட் ஸ்டோரேஜ் பண்ணலைன்னா பார்க்கிங் ஏரியால இருக்கிற கேமரா டேட்டாவை அக்சஸ் பண்ண ட்ரை பண்ணனும். அன்ட் பேஸ்மெண்ட் வழியா ரெஸ்க்யூ டீம் என்டர் பண்றதுக்கும் பார்க்கணும்”
“அந்த ஏரியா அவங்க கன்ட்ரோல்ல இல்லைனு நினைக்கிறேன். ஸோ அது ஈஸிதான மேடம்?”
“சப்போஸ் மானிட்டர் ரூம்லருந்து வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்தாங்கனா? அதுக்குத்தான் சொல்றேன்” என்றதும், ‘சரிதான்’ என தலையசைத்தான்.
“ஏன் த்ரெட்டோ, டிமான்டோ இன்னுமே வரலை? ஏன் நம்மளோட கம்யூனிகேட் பண்ண மாட்டிக்கிறாங்க? இல்லை அவங்க கம்யூனிகேட் பண்ணதை… நம்ம கவனிக்காம மிஸ் பண்றோமோ?” என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்டு, “மேடம்?!” என்று அவன் கேள்வியாக கேட்க, “நீங்க ஃபுட்டேஜ் கிடைக்குமான்னு பாருங்க. இல்லைன்னா பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் அரேஞ்ஜ் பண்ணிடுங்க” என்றதும், “ஓகே மேடம்” என்று செந்தில் சென்றான்.
பெனசீர்… திரும்ப வந்து நாற்காலியில் அமர்ந்தார்! மீண்டும் பெண்கள் தின கொண்டாட்ட காணொளியை ஓடவிட்டார்! அதில்தான் ஏதோ இருக்கின்றது போல் அவருக்குத் தோன்றியது!!
********************************
மனிதநேயம் பேசும் மஹிமா, கார்த்திகேயன்!
ஒருசில நொடிகள் கேக்-ஷாப் முழுவதும் பெரிய அமைதி நிரம்பியிருந்தது!
அதன்பின் சண்முகம்தான், “எடுத்துப் பேசும்மா” என மஹிமாவிடம் சொல்ல, அலைபேசியை ‘ஸ்பீக்கர் மோடில்’ போட்டு அழைப்பை அவள் ஏற்றவுடனே, “மஹி… என்னாச்சு உனக்கு? உள்ளே மாட்டிக்கிட்டியா?” என்ற கார்த்தியின் குரல் பதற்றத்துடன் ஒலித்தது.
அதோடு நிறுத்தாமல், “உனக்கு ஒன்னுமில்லை-ல?” என்று ‘அவளுக்கு ஏதும் ஆகியிருக்குமோ?’ என்ற பயத்தில் கேட்டான். அந்த அமைதியான அறையில் அவன் குரல் எதிரொலித்து கேட்க, மூவருமே மஹிமாவைப் பார்த்தனர்!
அவன் மனம் அவளுக்காக, அவள் நிலையறிய பதறுகிறதென்று புரிந்தாலும், எதிரே இருப்பவர்கள் மனநிலையை ஓரளவிற்கு கணித்தவளின் மனம் இதை ஒருமாதிரிதான் உணர்ந்தது. அதனால், “ம்ம், உள்ளேதான் இருக்கேன்” என்று சொல்லி, “எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்?” என்றாள்!
என்ன கேட்கிறாள் என்பதைக் கவனிக்காமல், “ஏன் வாய்ஸ் இவ்ளோ டயர்டா இருக்கு? நீ சாப்பிட்டியா… இல்லையா? வேற எதும் ப்ராப்ளமா மஹி?” என்று அவளைப் பற்றியே விசாரித்தான்.
“இன்னும் சாப்பிடலை” என்று சொன்னதும், “என்ன சாப்பிடலையா? சாப்பிடச் சொல்லிட்டுத்தான போனேன்!? சும்மா உட்கார்ந்திருந்தியா? அதுக்கு வெளிய வந்திருக்கலாமே மஹி?!” என்று அவளுக்காவே பேசினான்.
அவள் மௌனமாக இருந்ததும், “பயப்படறியோ மஹி? பயப்படாத. சீக்கிரமா வெளிய வந்திடலாம். சரியா?” என்று தேற்றப் பார்க்க, “பயப்படலை. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு சொன்னேன்ல” என கேட்டதையே கேட்டாள்.
பட்டென்று, “என்ன ஹெல்ப் மஹி? அப்போருந்து நீ இதையே சொல்லிக்கிட்டு இருக்க?” என்று சலிப்புடன் கேட்டான். அடுத்த நொடியே, “சரி, உனக்கு என்ன வேணும்?” என சமாதானமாகவும் கேட்டான்.
“எனக்கில்லை. இது வேறவங்களுக்கு” என்றாள் சத்தமே வராத குரலில்!
“வேற யாரு?” என்றான் சந்தேகமாக!
“மூனு பேர் இருங்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் வேணும்”
‘யாரந்த மூன்று பேர்?’ என கார்த்தி கேட்டுக் கொண்டிருக்கவில்லை. மாறாக யோசித்தான். பின், “மாஸ்க் போட்டு வந்தாங்கனு வெளிய சொல்றாங்களே அவங்களா?” என்று பதறாமல் கேட்டான்
“ம்ம்ம்” என்றதும், “யாரவங்க? பேரென்ன? விவரமா சொல்லு. அவங்கதான் ஃபோன் பண்ண சொன்னாங்களா?” என்றான் விசாரணை தொனியில்!
பதில் கூற தோன்றினாலும், பைரவி கேட்டதற்காக, “அது, அவங்களைப் பத்தி சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க” என்றாள் மஹி!
சொல்லியே ஆக வேண்டுமென அவளைக் கட்டாயப்படுத்தாமல், “எதுக்காக இப்படிப் பண்ணனும்?” என்றான் ‘துப்பு கிடைக்குமா?’ என்ற நோக்கத்தில்!
“கோரிக்கை-னு சொன்னாங்க. அது நடக்கணும் போல”
‘கோரிக்கையா? அதை இப்படித்தான் கேட்கணுமா?’ என்று கோபம் எழுந்தது. ஆனால் அதை வெளிப்படுத்தவில்லை. கோபப்பட்டு, அதனால் மஹிமாவிற்கு மட்டுமல்ல உள்ளே இருப்பவர்களுக்கு ஆபத்து வர நேர்ந்தால்?
அது பிழையாகிவிடும்! துப்பாக்கி வேறு அவர்களிடம் இருக்கிறதல்லவா?
ஆதலால் சூழ்நிலையைப் பொறுமையாகக் கையாள நினைத்தான். இவர்கள் யார்? என்ன கோரிக்கை? என்று தெரிந்து, காவல்துறையிடம் கூற வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவர்கள் தன்னிடம் பேசினால், அதை வைத்து ‘ஏதும் அறிய முடியுமா?’ என்று பார்க்க நினைத்தவன், “சரி… என்ன கோரிக்கைனு சொல்லச் சொல்லு. நான் பார்க்கிறேன்” என்று தணிந்து பேசினான்.
‘கார்த்திக்கு கோபம் வரவில்லையா?’ என்ற கேள்வி மஹிமாவிற்கு வந்தாலும், “அவங்ககிட்ட கேட்டுட்டு உங்களுக்குச் சொல்றேன்” என்றாள்
உள்ளே நிலைமை எப்படியோ? அதனால் அவளை வற்புறுத்த வேண்டாமென நினைத்து, “ம்ம்ம் சரி” என்று அந்த விடயத்தை முடித்தவனுக்கு, அழைப்பைத் துண்டிக்க மனம் வரவேயில்லை.
காரணம், அவனைப் பொறுத்தவரை அவர்கள் யாரென்று தெரியாத ஆட்கள்? அவர்கள் செய்த செயல்கள்… கோரிக்கை நிறைவேறாவிட்டால் என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ என்கின்ற பயம்… இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் மஹி மாட்டியிருக்கிறாளே என்ற எண்ணம்தான்!
ஆனால் மஹிமாவிற்கு அந்தப் பயம் இப்போது இல்லை அல்லவா? அதனால், “ஃபோன் வச்சிடவா கார்த்திகேயன்?” என சாதாரணமாகக் கேட்க, “ஏன் மஹி இப்படி யார்கிட்டயோ பேசற மாதிரி பேசிக்கிட்டு இருக்க? ஒழுங்கா பேசேன்” என்றான் சத்தமாக!
ஆனால் அடுத்தகணம், “என்மேல கோபமா? இந்த விஷயமெல்லாம் எனக்கு நீ ஃபோன் பண்றப்ப தெரியாது. சாரி, அதான் அப்படிப் பேசிட்டேன். சாரி மஹி” என்றான் சமாதானமாக!
மேலும், “உனக்கு ஒன்னுமில்லை-ல?! பசியாலதான் வாய்ஸ் இவ்வளவு டல்லா இருக்கா? இல்லை வேற எதுவுமா? இதுக்கு மட்டும் பதில் சொல்லு மஹி” என மீண்டும் மீண்டும் இதே கேள்வியை வெவ்வேறு விதங்களில் கார்த்தி கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்க, அறையிலிருந்த மூவரும் அதைக் கேட்டனர்.
ஒருகட்டத்தில் மஹிமா என்ன நினைத்தாளோ, “கொஞ்ச நேரம் கழிச்சி கால் பண்றேன்” என்று சொல்லி அவன் ஏதும் திரும்ப கேட்க நேரம் கொடுக்காமல் அலைபேசியை வைத்துவிட்டு, “என்ன கோரிக்கைன்னு சொல்றியா?” என்று பைரவியிடம் கேட்டாள்.
சில நொடிகள் பதில் பேசாமல் இருந்த பைரவி, “நீ… இதுக்குமேல இங்கிருக்க வேண்டாம். வெளிய போயிடு” என்றதும், ‘தீடிரென ஏன் இப்படிப் பேசுகிறாள்?’ என்று மற்ற மூவருமே அதிர்ச்சியில் விழிவிரித்திருந்தாள்!