நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…25

பொள்ளாச்சியின் போக்குவரத்து குறைந்த சாலையில் ஆதித்யன் காரினை செலுத்திக் கொண்டிருந்தான். அவன் அருகில் அமைதியாக கண்மூடி பயணத்தில் லயித்திருந்தாள் தேஜஸ்வினி.

வாகனத்தில் ஏறி முழுதாய் முப்பது நிமிடங்கள் கரைந்திருந்தது. முதல் பத்து நிமிடம் வேடிக்கை பார்த்தவள், ராஜாஸ் மெலோடியை பாடவிட்டு, ரசிப்பில் கண்களை மூடிக் கொண்டாள்.

மாமானார் வீட்டிற்கு வந்திருந்தவனுடன் மதிய உணவு முடித்து விட்ட பிறகு ஏனோதானோவென்று சுரத்தின்றி இருந்தவள் திடுதிடுப்பென,

“வெளியே போவோமா அத்தான்?” ஆதியிடம் கேட்க,

“இப்பவா… டிராவல் வேண்டாமே தேஜு!” அவளின் நிலைகருதியே மறுக்க,

“ம்ப்ச்… ஹாண்டில் வித் கேர் மீ அத்தான்… போலாம் ப்ளீஸ்!” மென்மையாகக் கூறி வீம்பாக நின்றவளை, ஆதியால் மறுக்க முடியவில்லை.

தனது மெர்சிடீஸ் பென்ஸ்-ஐ அலுங்காமல் குலுங்காமல் கையாண்டு மனைவியை நகர்வலம் அழைத்து வந்திருந்தான்.

அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் சந்தேகங்கள் மனதிற்குள் முட்டிக்கொண்டு நின்றாலும், எதையும் இப்போது கேட்டு அவளை சங்கடப்படுத்தும் எண்ணத்தில் இவன் இல்லை.

‘தானாக வெளியில் வரும்போது தெரியட்டும். எப்படியிருந்தாலும் எனது உயர்வும் தாழ்வும், இன்பமும் துன்பமும் இவளோடு தான்!’ என்ற தெளிவில் சலனமற்ற மனதுடன் மனைவியுடனான அந்தப் பொழுதை அவனும் ரசிக்கத் தொடங்கினான்.

“உள்ளே போலாம் வா!” என அவளை எழுப்பி விட்டவன், உயர்தர ரெஸ்டாரண்ட் முன் வண்டியை நிறுத்தி இருந்தான்.

“ஜூஸ் ஆர் கூல்டிரிங்ஸ்?” கேட்டபடி ஃபாமிலி ரூமின் தனி கேபினில் அவளுடன் சென்று அமர,

“ஐஸ்க்ரீம்.” இவள் முற்றிலும் வேறாக கூற, அலுத்துக் கொண்டான்.

“ம்ப்ச்… இந்த வெயிலுக்கு வேணாம் டா!” தன் வழக்கமான கண்டிப்பை கையில் எடுக்க, முகம் சிறுத்துப் போனாள் தேஜு.

“உங்ககிட்ட இதுதான் எப்பவும் எனக்கு பிடிக்கிறதில்ல!” மனைவியும் அலுத்துக்கொள்ள,

“வேறேல்லாமே பிடிக்குதா?” ரசனையுடன் கேட்ட ஆதியின் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி உற்சாகம் ஊற்றெடுத்தது.

சமீப நாட்களாக தன்னை தூர நிறுத்தியே பார்க்கும் மனைவி, இன்று தானாக வந்து சமாதானமாகப் பேசியதில் முழுதாய் தன்னை ஆட்டிப்படைத்த இறுக்கத்தில் இருந்து மீண்டிருந்தான் ஆதி.

மனம் நிறைந்த நல்லாள்… இனிமை நிறைந்த இல்லறம் என்பதும் இதுதானோ! அனுபவித்து தெரிந்து கொண்டால் மட்டுமே புரியும்!

அங்கே வந்து நின்ற பணியாளிடம், “டூ பொமிகிரானேட் ஐஸ்கிரீம். ஹாஃபன் ஹவர் கழிச்சு கொண்டு வாங்க!” ஆர்டர் கொடுத்து விட்டு மனைவியின் புறம் திரும்பினான்.

“பதில் சொல்லல நீ?” விட்ட பேச்சை தொடர,

“ம்ம்… பிடிக்காமயா என் கோபத்தை குப்பையில போட்டுட்டு உங்க கூட தொத்திட்டு வந்திருக்கேன்!” பழிப்பு காட்டியே நொடித்துப் பேசிட, அந்த பாவனையில் வீழ்ந்தே போனான் கணவன்.

“ஏய் என்ன பேச்சு இது? நமக்கு இடையில எதையும் கொண்டு வராதே தேஜுமா… நமக்கு எனிமியே அதுதான்!”

“ஹஹா… ஃஹப்கோர்ஸ் ஆதிமா… உங்ககிட்ட மட்டும் என் ரோசமெல்லாம் செத்துப் போகுது!” தோள்களை குலுக்கிக் கொண்டு இலகுவாய் தன் நிலையை உடைத்துக் கூற, ஆனந்தமாய் அதிர்ந்தான் ஆதி.

“ஹேய்… ரொம்ப எக்சைட் ஆகி உளறிக் கொட்டுறடா நீ!”

“இதெல்லாம் உங்களுக்கு தெரியாது. என் நிலமையில இருந்து பாருங்க, அப்போ புரியும்!” என்றவளின் குரல் இப்போது ஆழ்ந்து ஒலித்தது.

“ஏன்டா… என்ன ஆச்சு? என்னை ரொம்ப மிஸ் பண்றியா!” கேட்டவன் அவளை, தன் தோளில் சாய்த்துக் கொள்ள, வாகாய் கணவனின் மார்பில் ஒட்டிக் கொண்டாள் தேஜு.

“நான்… நம்மள மிஸ் பண்றேன் அத்தான்! நாம இப்படி பேசி நாளா, மாசமா… கணக்கில்லாம போயிட்டு இருக்கு!”

“பிரச்சனைகள் அப்படிடா… உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?”

“கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி டல்லா நான் ஃபீல் பண்ணினதே இல்லை. நீங்க, என்னை எல்லாத்துக்குமா சேர்த்து தாங்கிக்கவும், இப்ப நான் ரொம்ப பலவீனமாயிட்டேன்!” முகம் சுருக்கி சோகப்பாட்டு பாடியவள் அவனின் தழும்புக் கன்னத்தை தடவிக் கொடுக்க, அந்த கைக்குள் இதழை ஒற்றி எடுத்தான் ஆதி.

“ரொம்ப குழப்பத்துல இருக்கியாடி செல்லம்?”

“மே பீ… எங்க வீட்டுல எல்லாரையும் நான்தான் கேர் எடுத்து பார்த்துப்பேன்! அப்படிப்பட்ட என்னையே நீங்க ஒவ்வொரு நிமிசமும் தாங்கிட்டு நிக்கும்போது அதை ஒரு கட்டத்துல ரசிக்க ஆரம்பிச்சு, இப்ப அது இல்லாம போகவும் நான் ரொம்ப ஏங்கிப் போறேன் அத்தான்!” சுணங்கியவளின் இறங்கிய குரல் ஆதியை அசைத்துப் பார்த்தது.

சிறிது நாட்களே என்றாலும் தனது நிழலில் இவள் சுகப்பட்டிருக்கிறாள் என்பதை அவளின் வாய்மொழியாக கேட்கும்போது முழுமையான ஆண்மகனாய் கணவனாக கர்வம் கொண்டான் ஆதி.

“இப்ப மட்டுமில்ல, எப்பவும் அதே கேரிங் இருக்கும்டி செல்லம்… நீ இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை.” கணவன் சமாதானமாக கூறியதை ஏற்றுக் கொண்டாலும் அவளின் மனமோ எதையோ ஒன்றை தேடித் தவித்தது.

“ஒன்னு பண்ணுவோமா த்தான்… நாம அகெய்ன் ஹனிமூன் போவோமா?” இவள் கிசுகிசுப்பாக குழைந்து கேட்டதில், உள்ளுக்குள் துள்ளிக் குதித்தான் ஆதி.

“நீ தாங்கமாட்டடி தங்கமே!” இவன் சீண்டலில் இறங்க

“அய்ய… ஆசையைப் பாரு! நான் ஒன்னும் அதுக்கு கூப்பிடல… நம்ம வீட்டுல எனக்கு ஹிட்லரா இருக்கீங்க… எங்க வீட்டுல மாமனார் வீடுன்னு கௌரவம் பார்த்து என்கிட்ட அளவோட நிக்குறீங்க! எனக்கு இந்த கறார் வேஷம் போடுற ஆதி பிடிக்கல… எப்பவும் என்னை மட்டுமே தாங்கிட்டு என்னையே சுத்தி வர்ற என் அத்தான் வேணும். அதுக்குதான் கூப்பிடுறேன்!”

“சுருக்கமா உனக்கு கூஜா தூக்க கூப்பிடுறன்னு சொல்லு!” எனக்கூறி மனம் விட்டு சிரித்தான் ஆதி.

“பொண்டாட்டிக்கு தானே… தூக்கலாம் தப்பில்ல… இப்ப நான் வரலையா?”

“திடீர்னு இந்த ஞானோதயம் எப்படி வந்தது உனக்கு?”

“எப்படின்னு சொல்ல? உங்க பக்கத்துல இப்படி நெருக்கமா இருந்தா என் அழுத்தமெல்லாம் காணாமப் போகுது. ரொம்ப ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்றேன். அது நாம தனியா இருக்கும்போது தானே கிடைக்குது!” உண்மையை சொல்லவும் மொத்தமாய் உருகிப் போனான்.

புதிய உறவின் தேடலும் கர்ப்பகால ஹார்மோன் மாற்றங்களும் பெண்ணை முற்றிலும் இளக வைத்திருக்க, மனைவியின் நிலையை நன்றாகவே புரிந்து கொண்டான் ஆதி.

ஆனால் இப்போது தொழில், குடும்பம் உள்ள நிலையில் இவளை மட்டுமே தனியே அழைத்துப் போக முடியாதே என்ற இயலாமையில் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து, அணைப்பை சற்றே இறுக்கினான்.

இப்போதெல்லாம் இரண்டு மாத வயிற்றுப் பிள்ளைக்கும் பார்த்தல்லவா ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டி இருக்கிறது. இது எந்த மாதியான அவஸ்தை என ஆதியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“என் மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னை இப்படியே என் நெஞ்சுல தாங்கிக்க எனக்கு ஆசைடி! வார்த்தையில என் அன்பை அளந்து காமிக்க விரும்பல… உனக்குள்ள இருக்கிற அதே அழுத்தம் எனக்கும் உள்ளுக்குள்ள இருக்கு.

வீட்டுக்கு வந்துருடா… கண்ணுல வச்சு தாங்கிக்கறேன் செல்லம்!” வாஞ்சையுடன் கனிவாக கூறவும் வெடுக்கென்று அவனை விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள் தேஜு.

“அங்கே எனக்கு வில்லனே நீங்கதான்… எந்நேரமும் பூச்சாண்டி மாதிரியே பீஹேவ் பண்ணி எனக்கு பயம் காட்டிட்டு இருப்பீங்க!” குறை சொல்லியவளின் பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

“அவ்வளவு கெடுபிடியா பண்றேன்?”

“இல்லன்னு சொன்னா வாய் வெந்து போகும் அத்தான்… நிக்கிறதுக்கும் உங்க பெர்மிஷன் கேக்க வேண்டியிருக்கு. அங்கே எனக்கு மூச்சு முட்டிப் போகுது!”

“எல்லாம் பேபிக்காக தானே தேஜுமா… குழந்தை பிறக்கும்போது ப்ராபளம்ஸ் எல்லாம் ஓரளவு செட்டில் ஆகிடும். அப்போ நீ ஆசைபடுற மாதிரி கூட்டிட்டு போறேன்!” அனுசரணையாக கூற,

அதே குரலில் இவளும், “அதுவரைக்கும் நான் அப்பா வீட்டுல இருக்கேன்!” எனக் கூறி முகத்தை திருப்பிக் கொள்ள இவனுக்குள் கோபம் முகிழ்த்தது.

அதை அடக்கி கொண்டவனாய், “என்னால சுத்தமா முடியாதுடி… இப்பவே சமாளிக்க முடியாமதான் இன்னைக்கு உன்னைத் தேடி வந்திருக்கேன்!”

“அப்போ இப்படியே தினமும் வந்தும் போயிட்டும் இருங்க… இல்லன்னா நீங்களும் என்கூடவே செட்டில் ஆகிடுங்க!” அசராமல் பிடிவாதம் பிடித்தாள்.

“இப்பதானே உருகி குழைஞ்சு ஆசையா பேசின…. அதுக்குள்ள மலையேறிட்டியா! உனக்கு உங்க வீட்டு அட்மாஸ்பியர் தான் வேணும்னா உங்க வீட்டு ஓடாத ஏசி-யையும் வெளுத்து போன ஸ்க்ரீன் கிளாத்தையும் நம்ம ஃப்ளோருக்கே எடுத்துட்டு வந்து சிஃப்ட் பண்ணிடுறேன், வந்துடு செல்லம்!” கெஞ்சலில் இறங்கியவனைப் பார்க்கவும் அவளுக்கு பாவமே என்றிருந்தது.

“நான் பாக்கிறதெல்லாம் மனு-க்காக மட்டுமே அத்தான்… அவங்க தனியா நின்னு முட்டிட்டு நிக்கிற நேரத்துல என்னால அங்கே, நம்ம வீட்டுல சகஜமா இருக்க முடியல. நான் அப்பேற்பட்ட சுயநலவாதி இல்ல… இப்ப உங்ககூட வந்ததும் என்னக்குள்ள இருக்கிற தாங்க முடியாத அழுத்தத்தை குறைச்சுக்க தான். வேறெந்த முடிவுலயும் இல்ல!”

“இது மட்டும் உன் சுயநலம் இல்லையா?”

“நிச்சயமா இல்ல… இது நம்ம பேபிக்காக! என்னால யாரையும் எங்கேயும் எப்பவும் விட்டுக் கொடுக்க முடியாது புரிஞ்சுக்கோங்க… உங்க தம்பிக்கு புரிய வைங்க! அவர் ஒரு நல்ல முடிவுக்கு வராம, என்னால உங்ககூட சகஜமா வாழ முடியாது.” தீர்மானமான குரலில் தீர்க்கமாக பேசி முடிக்க, இவர்களுக்கான ஐஸ்கிரீமும் வந்து சேர்ந்தது.

“அத்தான்… நான் நெட்ல சர்ச் பண்ணேன். உங்க முகத் தழும்புக்கு ரெண்டு சிட்டிங் பிளாஸ்டிக் சர்ஜரில சரி பண்ணலாம்னு பார்த்தேன். லேசர் டிரீட்மெண்ட்தான்… சோ, ரொம்ப கஷ்டம் இருக்காது. டிரை பண்ணுவோமா? டாக்டர்கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கவா?” ஆர்வத்துடன் கேட்க, சட்டென்று சோர்ந்து போனான் ஆதி.

“இதைச் சொல்லி என்னை சரிகட்டத்தான் இத்தனை மந்திரம் போட்டியா?” குற்றமாக அவளைப் பார்க்க, மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் தேஜு.

“உங்களை எல்லாம் திருத்தவே முடியாது. தெரிஞ்சுமே, சொல்யூஷன் தேடிப் பிடிச்சு சொல்றேன் பாருங்க… என்னைச் சொல்லணும்.” கோபமாக முணுமுணுக்க,

“எதுவா இருந்தாலும் சத்தமா சொல்லுடி!”

“சொன்னா மட்டும் கேட்டுடப் போறீங்களா? இப்ப இருக்கிற அட்வான்ஸ் ட்ரீட்மெண்ட்ல எல்லாமே பாசிபிளிடீஸ் அத்தான். கொஞ்சம் யோசிங்க… எந்த நேரமும் நீங்க முக்காடு போட்டுட்டு சுத்துறது நல்லாவா இருக்கு!” தனமையாக எடுத்துக் கூற, அதைக் குறை சொல்வதாகவே எடுத்துக் கொண்டான் ஆதி.

“உனக்கு பிடிக்கலைன்னு நேரடியா சொல்லிட்டு போ… நமக்கு பிள்ளையே பொறக்கப் போகுது. இன்னமும் இதை குறையாத்தான் நீ பார்ப்பியா?” சடுதியில் அந்நியனாக மாறி கடுகடுக்கத் தொடங்கினான்.

இவனது அவசரமான தறிகெட்ட பேச்சில் வெகுண்டவளும் மனதில் எதையும் அடக்கிக் கொள்ளாமல் வெளியில் கொட்ட ஆரம்பித்தாள்.

“எம் புருஷன் நாலுபேர் பாக்கற மாதிரி அழகா இருக்கணும்னு நான் ஆசைப்படுறது தப்பா? சரியான தீர்வு இருக்குன்னு சொன்னாலும் என்னன்னு வெவரம் கூட கேட்காம என்னை தப்பா சொல்லுவீங்களா?” படபடக்க, நிலைமை முற்றிலும் தலைகீழானது.

தானாகவே சீரடைந்த இருவருக்குமான மனக்கசப்புகளை மீண்டும் குத்திக் குதறாத குறையாக தர்க்கம் செய்தே, இருவருக்குமான இடைவெளியை இன்னுமே அதிகமாக்கிக் கொண்டனர்.

‘யோசிக்கலாம் அல்லது சிறிது நாட்களுக்கு பிறகு முயன்று பார்க்கலாம்.’ என்று சொல்லி இருவருமே பேச்சை முடித்திருக்கலாம்.

ஆனால் இருவருக்குள்ளும் இல்லாத நிதானம், இவர்களின் விரிசலை முன்னைவிட அதிகமாய் பிளவுபடுத்தி நிறுத்தியது.

மாறாத கோபத்துடன், “என்ன சொல்யூசன் இருந்தாலும் என் தம்பிக்கு கால் சரியாகாம, நான் என்னை சரிபடுத்திக்க மாட்டேன். வீணா என்னை டார்சர் பண்ணி உன்னையும் கஷ்டபடுத்திக்காதே… கிளம்பு நீ!” இழுத்து வராத குறையாக வீட்டிற்கு அழைத்து வந்தான்..

வரும் வழியெல்லாம் ஒரு பேச்சு இல்லை. தேஜுவின் முகமெங்கும் அத்தனை கடினம் கொண்டிருந்தது. அவளது நிலை தாளமுடியாமல் இவன்தான் சமாதானமாக இறங்கி வந்தான்.

“என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு தேஜூமா! உன்னைப் போலதான் நானும் என் தம்பிக்காக பாக்கறேன்! நான் என்னை மட்டும் சரி பண்ணிட்டு வாழ நினைக்கல…” மெதுவாகக் கூற, கோபமாக வெறித்தாள்.

“இவ்வளவு பாக்கறவர் அவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு, நீங்க கல்யாணம் பண்ணியிருக்கலாம் அத்தான். உங்க ஆசையை அடக்கி வைக்க உங்களுக்கு உரிமையிருக்கு… ஆனா என் ஆசைக்கு அணைகட்ட உங்களுக்கு உரிமையில்லை.

உங்க தம்பி மனு கூட வாழாம இருந்து பழி வாங்குறாரு… நீங்க என்கூட வாழ்ந்து பழி வாங்குறீங்க! இந்த அவதிக்கு தான் உங்க சாவகாசமே வேணாம்னு ஒதுங்கி நிக்க நினைக்கிறோம். கருமம் பிடிச்ச என் மனசுதான் என் பேச்சைக் கேட்டுத் தொலைய மாட்டேங்குது!” படபடவென பொரிந்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் தேஜஸ்வினி.

ஆதித்யனின் மனமெங்கும் இயலாமையின் ஓலம் ஒலித்தது. ‘குடும்பம் மற்றும் தொழில் பிரச்சனைகளின் மையப்புள்ளியாய் ஆனந்தன்… அவனுக்கு, அவனது வாழ்வின் முக்கியத்தை உணர வைத்தால் மட்டுமே தனது வாழ்க்கையும் தெளிந்த நீரோடையாகச் செல்லும்.

இல்லையென்றால் அங்குமிங்கும் தாவி குதிக்கும் குரங்காட்டத்தைப் போல கேலிக் கூத்தாகிப் போய்விடும். இதையெல்லாம் அவன் அறிய வேண்டுமே! எடுத்துச் சொன்னால் கேட்பவன் இல்லையே! பின் எப்படி அவனுக்கு புரிய வைக்க?’ தனக்குள் பெரிதாய் கலக்கம் கொண்டான்.

தம்பியின் மேல்… மனைவியின் மேல் கண்மண் தெரியாத கோபம் வந்தது அவனுக்கு. அப்படி கோபப்பட்டும் என்ன பலன்? தான் மட்டுமே சுவற்றில் முட்டிக்கொண்டு வலியை அனுபவிக்க வேண்டுமென்ற விரக்தியும் வெறுமையும் தாக்க கோபத்துடன் மனைவியை வீட்டில் இறக்கி விட்டு தனது மாளிகைக்கு சென்று விட்டான் ஆதி.

அங்கே சென்று ஆனந்தனை பார்த்துப் பேசலாம் என்றால் அவன் அங்கே இல்லை. வீட்டில் கேட்டதற்கு இரண்டு நாட்களாக அவன் வீட்டிற்கே வரவில்லை என்று அருணாச்சலத்திடம் இருந்து பதில் வந்தது.

“எங்கே போறான், என்ன பண்றான்னு ஒரு தகவலும் சொல்ல மாட்டான். நாங்க கேள்வி கேட்டா மட்டும் கோபத்துல கத்தி தொலைவான்!” கடுகடுத்து விட்டு தனதறைக்கு சென்று விட்டான்.

மறுநாள் காலையில் வளைந்த இடது பின்னங்காலில் தசைப் பிடிப்புடன் வந்து சேர்ந்தான் ஆனந்தன். இது அவனுக்கு அடிக்கடி நிகழும் நிகழ்வு. ஓயாத வேலை, அலைச்சல், களைப்பு ஏற்பட்டால், இவனது பலமிழந்த காலில் சற்று அசௌகரியம் ஏற்பட்டு தசைபிடித்து வலி கண்டுவிடும்.

ஆயுர்வேத முறையில் மசாஜ், ஒத்தடம் கொடுத்து மூன்று நாட்கள் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டால் சகஜ நிலைக்கு திரும்பி விடுவான். இப்பொழுதும் பிசியோதெரஃபிஸ்ட் வந்து சிகிச்சைகளை முடித்து விட்டு சென்றிருக்க, அசதியாகப் படுத்திருந்தான்.

முகத்தில் வலியின் வேதனையும் களைப்பும் அப்பட்டமாய் தெரிந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஆதியும் பெரிதும் கவலையுற்றான். அவனிடத்தில் இருந்த கோபமெல்லாம் மாயமாகி மறைந்து போயிருந்தது.

“இவ்வளவுக்கு கஷ்டப்படுத்திக்காதேன்னு உனக்கு எத்தனை தடவதான் சொல்றது? என்கிட்ட சொல்லியிருந்தா நான் செஞ்சிருக்க மாட்டேனா!” ஆதங்கத்துடன் ஆதி கேட்க, முகம் சுருக்கினான் ஆனந்தன்.

“செஞ்சு கிழிச்ச நீ… உன் வேலைய நீ முடிக்கிறதுகுள்ள பல நினைப்புல நீயே அல்லாடிப் போற… இதுல அதிகப்படியாக என் வேலையை இழுத்துப் போட்டு பண்ணிட்டாலும்…” என நக்கலடிக்க, சற்றும் பிடித்திமின்றி எழுந்து கொண்டான் ஆதி.

“வாயை மூடுடா அறிவுகெட்டவனே!” எனக் கத்தியபடி எழுந்து செல்லும் நேரத்தில் மனஷ்வினியின் அலைபேசி அழைப்பு ஆதிக்கு வர,

“சொல்லு மனு!” என அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான்.

“அவருக்கு அடிபட்டிருக்கா மாமா?” எடுத்த எடுப்பிலேயே மனு, ஆனந்தனை பற்றி விசாரிக்க, தம்பியின் முகம் பார்த்து லவுட் ஸ்ப்பீக்கரில் போட்டு கேட்கச் செய்தான் ஆதி.

“எப்பவும் போல தசைபிடிப்புதான் மனு… சரியாகிடும். உனக்கு யார் சொன்னா?”

“மார்னிங் தாத்தா சொன்னார் மாமா… அப்பா, என்னை நேருல போயி விசாரிக்க சொன்னாரு. நான்தான்…” அவள் இழுக்க,

“புரியுது மனு… அவன்கூட பேசு! லவுட் ஸ்பீக்கர்ல தான் போட்டு இருக்கேன்!” ஆதி கூறவும், ஆனந்தன் மறுக்க,

அவளும், “ஐயோ, வேணாம் மாமா!” அலறினாள்.

“ரெண்டு பேரும் ஏன் இப்படி?” பொதுவாக கூறிய ஆதி,

“இப்படியே இன்னும் எத்தனை நாள் மனு?” ஆயாசத்துடன் கேட்டான் ஆதி.

“தெரியல மாமா!” என்றவள்,

“மாமா… அவரோட இந்த ப்ராபளத்துக்கு ஒரு சொல்யூசன் சொல்லத்தான் கால் பண்ணேன்… எடுத்துச் சொல்றீங்களா?” தயங்கியே கேட்டாள்.

“சொல்லும்மா…. நல்லதுன்னா இவன் கழுத்துக்கு கத்தி வச்சாவது சரி பண்ணிடுறேன்!”

“கே வயர் பிக்சேஷன்-னு ஒரு சர்ஜரி மாமா… எலும்பை நேரா நிமித்தி வச்சு கம்பி கட்டி விடுவாங்க. நாம நிமிர்ந்து நடக்கிறதுக்கு எடுக்கற நாள் பொறுத்து அந்த கம்பியை ரிமூவ் பண்ணிடுவாங்க. அப்படி பண்ணிட்டா அடிக்கடி இந்த ப்ராப்ளம் வராது. ஒரு வருஷம் கொஞ்சம் வலியை பொறுத்துகிட்டா அப்புறம் ஃலைப் லாங் ஸ்டிக் இல்லாம நடக்கலாம்.” உறுதியான நம்பிக்கையுடன் கூறி முடித்தாள் மனஷ்வினி.

அவள் கூறியதை கேட்டவன், தம்பி என்ன நினைக்கிறான் என அவன் புறம் பார்க்க, அவனோ முகத்தில் அத்தனை கடுப்புகளை சுமந்து கொண்டிருந்தான். உணர்வுகளற்ற பாவனையில் அலட்சியமாக, மனைவிக்கு கேட்கும்படியாகவே அண்ணனிடம் பேச ஆரம்பித்தான்.

“இந்த வேண்டாத அக்கறை எல்லாம் இவளுக்கு எதுக்கு? ஒருவேள என் புருஷன் ஒரு நொண்டின்னு சொல்ல இவளுக்கு அவமானமா இருக்கா? இல்ல… அப்படி நினைச்சு பாக்கவே இவளுக்கு கசந்து போகுதாமா? இப்ப படிக்கிற இவளுக்கு தெரியுற இந்த விசயம் ஏழு வருசத்துக்கு முன்னாடியே எனக்கும் தெரியும்.” வார்த்தைகளில் அனலை தெளிக்க விட்டுக் கொண்டிருக்க, கேட்ட இருவரின் மனமும் அத்தனை ரணமாய் வலி கொண்டது.

அடுத்த வார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டாள் மனஷ்வினி. ஏற்கனவே அவனது நினைவில் கொதித்து கிடக்கும் மனது, இன்னுமே உஷ்ணமேறிப் போக, முற்றும் முழுதாய் கணவனை வெறுத்து விட்டாள்.

அதிலும் மனைவியாக, தன்னை இவன் இந்தளவிற்கு கீழிறக்கி பேசியிருக்க வேண்டாமென்று இவளின் மனம் அரற்றி வைக்க, ‘இவனது பேச்சு இப்படிதானே… இதை தவிர வேறெதையும் எதிர்பார்த்து ஏமாந்து போகாதே!’ என்று தன்னைதானே சமாதானமும் செய்து கொண்டாள் மனஷ்வினி.

ஆனந்தனின் திராவகப் வீ(பே)ச்சினை கேட்டதும் அடங்காத ஆத்திரம் கொண்டான் ஆதி.

“அறிவுகெட்டவனே! எதுல வீம்பு பிடிச்சு நிக்கிறதுன்னு ஒரு அளவு இல்லையா? நான் கேட்டப்ப எல்லாம் சொல்யூஷன் இல்லன்னு சாதிச்சிட்டு இப்ப இருக்குன்னு சொல்லி அவளை குத்திக் கிழிக்கிற!

வழி இருக்குன்னா காலை சரி பண்ணியிருக்க வேண்டியது தானேடா… எதுக்கு தேவையில்லாம வலியும் வேதனையும் அனுபவிச்சுட்டு இருக்க?”

“என் ஊனத்தை சரி பண்ணிட்டு… எல்லார் மாதிரி சராசரி வாழ்க்கையை வாழச் சொல்றியா? நான் அனுபவிச்ச வலியை துரோகத்தை எல்லாம் மறக்கச் சொல்றியா? நெவர் ஆதி… யார் என்ன சொல்லி சரிகட்ட நினைச்சாலும் நான் அசைஞ்சு குடுக்க மாட்டேன்!” குரோதம் கொப்பளித்துக் கூற மிரண்டு போனான் ஆதி.

“இத்தனை வன்மத்தை வளர்த்துக்காதே ஆனந்த்… கடவுள் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வச்சுருப்பாருடா! இதனால உன் வாழ்க்கைதான் வீணாப் போகுது. உன்னோட சுபாவத்தை தயவுசெஞ்சு மாத்திக்கோ!

மனு கேள்விகுறியா நிக்கிறா… அவளால தேஜுவும்… இப்படி உன்னை மையமா வச்சே நாலுபேர் நாலு திசையில நிக்கிறோம். புரிஞ்சுக்கோடா!” பெரியவனாக பொறுப்பாக எடுத்துக் கூற, அத்தனை சீக்கிரத்தில் கேட்டு விடுவேனா என்ற அலட்டலில் பதில் கூறாமல் கண்களை மூடிக் கொண்டான் ஆனந்தன்.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!