Niral mozhi 2


சில வருடங்களுக்கு முன்…

 

டெல்லி… இந்தியாவின் தலைநகரம்!!

 

குளிர் காலம் அது! கடுங் குளிர்!!

 

பழைய டெல்லி!

 

பனி விழும் காலை வேளை! 

 

சட்டா சௌக்(chandini chowk) பகுதி!

 

இதன் கிழக்கு எல்லையில், சிவப்பு கற்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கோட்டை… வண்ணமயமான மாளிகை… செங்கோட்டை உள்ளது!!

 

கம்பீரமாக, 2.4 கி.மீ நீளமான செங்கோட்டை முடியும் இடத்தில் இருக்கும் பகுதி அது!

 

இது சட்டா சௌக்-ன் சந்தைப் பகுதி! 

 

குறுகலான சாலைகள். சிறு சிறு கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள். 

 

ஆனால், குளிர்காலம் என்பதால் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்தக் காலங்களில் கடைகள் திறப்பதற்கு நேரமாகும். 

 

சாலையின் ஓரங்களில் இருந்த நடைபாதையில்… சிலர் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். சிலர், அன்றைய தினசரிகளைப் பிரித்து வைத்துக் கட்டிக் கொண்டிருந்தனர்.

 

அந்தச் சாலைக்கு இணையாக இன்னும் இரண்டு மூன்று சாலைகள். அதற்கு அடுத்துக் குடியிருப்புப் பகுதி ஆரம்பிக்கின்றது.

 

இது சட்டா சௌக்-ன் குடியிருப்பு பகுதி! 

 

நெருக்கடியான தெருக்கள். தெருக்களின் ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள். மூன்றடுக்கு நான்கடுக்கு கொண்ட வீடுகள். 

 

அதில் மிகச் சிறிய ஒரு வீடு!! 

 

இரண்டாவது தளத்தில் இருந்தது அந்த வீடு! வீட்டின் பால்கனியில் துணிகள் காயப் போடப்பட்டிருந்தன.

 

பால்கனியை ஒட்டி இருந்தது, அந்தச் சிறிய அறை! அதற்கேற்றாற் போல் சின்ன மேசை! அதில் ஒரு கணினி. 

 

மேலும் சில கணினிச் சாதனங்கள்!

மதர் போர்டு… ஹார்டு டிஸ்க்… பென் டிரைவ்கள்… இப்படி!! 

 

மற்றும் நான்கைந்து எண்ணிக்கையில் ‘நிரல் மொழி’ என்று பெயரிடப்பட்ட மாதாந்திரப் பத்திரிகை வேறு இருந்தது. 

 

கண்கள் அசையாமல் கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான், அவன்!

 

யாரிவன்??

 

இவனைப் பற்றிய கோப்பினைத் தரவிறக்கம் செய்தால், கோப்பின் விவரங்கள் இப்படித்தான் இருக்கும்.

 

நிகில்!

 

கணினி மொழிகளிலே காலத்தைக் கழிப்பவன். 

 

உயரம் 6’3+

 

‘சிக்ஸ் பேக்’ தேகத்தை கருப்பு நிற ‘காட்டன் ஷேர்ட்’ இறுகப் பற்றியிருந்தது. நீளமான கால்களை, அடர் நீல நிற ஜீன்ஸ் கவ்வியிருந்தது. 

 

கழுத்தில் ஒரு மெல்லிய தங்கச் சங்கலி!

 

செய்யும் செயல்களில் பொறுமை இருக்கும். ஆனால், பார்க்கும் பார்வையில் பொறுமை இருக்குமா?

 

இருக்கும்! அவன் கண்களில் ஒருவித பொறுமைதன்மை தெரியும்!

 

அவ்வளவுதான்!

 

கோப்பின் கடைசிப் பக்கம் வரைப் போகவேண்டும் என்றால், கடவுச்சொல் தேவைப்படும் போல!

 

சன்னல் வழியே வந்த பனிக் காற்று, உடலை வாட்டியது.

 

ஏதாவது சூடாக குடிக்க வேண்டும் என நினைத்தான்.

 

அந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு, ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

 

சட்டென, கணினியின் திரையை ‘மினிமைஸ்’ செய்து வைத்தான்.

 

“என்னடா பண்ற? கொஞ்ச நேரம் வெளியே வந்து பேசிக்கிட்டு இருக்கலாம்-ல?” என்று கேட்டுக் கொண்டே வந்து, அவன் கைகளில் காஃபி கோப்பையைத் திணித்தாள். 

 

ஆஷா, நிகிலின் மூத்த அண்ணி! இந்தச் சிறு கூட்டின் முதல் மருமகள். 

 

பிரெஞ்ச மொழியில் டிப்ளமோ படித்துவிட்டு, ஒரு தனியார் பள்ளியில் பிரெஞ்ச் மொழி ஆசிரியராக வேலை செய்கிறாள். 

 

காஃபி குடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “கேட்டேன்ல நிகில்” என்றாள்.

 

“வெளியே வந்தா, அம்மா மேரேஜ் பத்திப் பேசுவாங்க. அதான் வரலை”

 

“அத்தை சொல்ற பொண்ணுக்கு என்னடா குறைச்சல்? உன்னை மாதிரியே டிப்ளமோ படிச்சிருக்கு. வேலைக்குப் போகுது. மேரேஜ்-க்கு அப்புறமும் வேலை பார்க்க ரெடியா இருக்கு! ஒத்துக்கோ-டா” என்றாள் கெஞ்சாத குறையாக! 

 

மெல்ல சிரித்தபடியே காஃபியைக் குடித்தான். 

 

“எதுக்கு சிரிக்கிற? சந்தோஷம் சம்மதம்-னு… நீ மேரேஜ்-க்கு ஓகே சொல்லிட்ட-ன்னு உங்க அம்மாகிட்ட சொல்லவா?” 

 

சட்டென்று கோப்பையை வைத்து விட்டு, “அய்யோ அண்ணி. எனக்கு அந்தப் பொண்ணு பிடிக்கலை. ப்ளீஸ் அம்மாகிட்ட நீங்களே சொல்லிடுங்க” என்று சொல்லும் போதே, 

 

“நிகில் சாப்பிட வா” என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு  பெண் வந்து நின்றாள்.

 

மீரா… இவள் நிகிலின் சின்ன அண்ணி. யோகா பயிற்சிக்கான டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு, ஒரு உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருக்கிறாள். 

 

இவர்கள் இருவரின் கணவன்மார்களும் இயந்திரவியலில் டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு… துபாயில் வேலை செய்து வருகிறார்கள்.

 

“மீரா, நீயாவது சொல்லேன்” – ஆஷா. 

 

“என்ன சொல்லணும்-க்கா?” – மீரா.

 

“அத்தைப் பார்த்த பொண்ணு நல்லாத்தான இருக்கு. ஏன் வேண்டாம்னு சொல்றான்னு கேளு?” – பெரிய அண்ணி ஆஷா!

 

“ஏன்டா வேண்டாம்னு சொல்ற?” – மீரா. 

 

“பிடிக்கலை அண்ணி. அவ்வளவுதான்”

 

“அத்தை காரணம் கேட்பாங்க நிகில்” – மீரா. 

 

“எப்போவும் போல நீங்களே ஏதாவது காரணம் சொல்லி… வேண்டாம்னு சொல்லிடுங்க”

 

“மத்த வரனுக்கெல்லாம் வேண்டாம்னு சொல்லக் காரணம் இருந்தது! ஆனா இந்த வரன்… அப்படியில்லை-டா. நல்ல பொண்ணு, டிப்ளமோ படிச்சிட்டு, நிறைய கோர்ஸ் பண்ணியிருக்கு…” – ஆஷா. 

 

அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னடா யோசிக்கிற??” – ஆஷா. 

 

“எங்க அம்மாகிட்ட போய், ‘அந்தப் பொண்ணு, எங்க ரெண்டு பேரையும் விட நிறைய படிச்சிருக்கு… அதனால வேண்டாம்னு சொல்லுங்க’ ” 

 

“கொழுப்பு-டா உனக்கு… ” என்று அவன் தலையில் கொட்டினாள், ஆஷா. 

 

“அண்ணி ப்ளீஸ்! நிஜமா பிடிக்கலை. ஏதாவது சொல்லிச் சமாளிங்க” என்று கெஞ்சினான். 

 

அக்கணம், “மீரா… ஆஷா… வேலைக்குப் போக வேண்டாமா? சாப்பிட வாங்க” என்று நிகிலின் தாயார் அழைத்தார். 

 

“ஆங்! வர்றோம் அத்தை” என்று இரு பெண்களும் குரல் கொடுத்தனர். 

 

“நீயும் சாப்பிட வாடா” என்று ஆஷா சொல்லும் போதே… 

 

“மீரா, கிளம்பலையா? உனக்கு லேட்டாகுது” என்று நிகிலின் அம்மா மீண்டும் கத்தினார். 

 

“வர்றேன் அத்தை” என்று சொல்லிக் கொண்டே, மீரா அறையை விட்டு ஓடிச் சென்றாள். 

 

“நிகில், நீயும் வந்து சாப்பிடு” என்று ஆஷா அவனை அழைக்கும் போது, நிகிலின் கைப்பேசி ஒலித்தது.

 

யாரென்று பார்த்தான். கைப்பேசியின் திரையில், ‘ஷில்பா’ என்று வந்தது.

 

“அண்ணி, நீங்க போங்க. ஷில்பா ஃபோன் பண்றா. நான் பேசிட்டு வர்றேன்”

 

“அவ ஏன்டா வரலை?”

 

“ஒரு ப்ராஜெக்ட்-ல கமிட் ஆகியிருக்கா”

 

“சரி பேசிட்டு, சீக்கிரம் சாப்பிட வா” என்று சொல்லி, ஆஷா சென்றுவிட்டாள்.

 

கைப்பேசியின் அழைப்பை ஏற்றான்.

 

ஷில்பா! நிகிலின் தோழி! 

 

தயாரிப்பு மேலாளர்(product manager) வேலையில் இருக்கிறாள். 

 

பொறியியல் மற்றும் நிர்வாகம் சம்மந்தப்பட்ட படிப்பு படித்திருக்கிறாள்.  

 

உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமில்லாத பெண்.

 

சிறு வயதிலிருந்தே ஆசிரமத்தில் வளர்ந்தவள். 

 

தொண்டு நிறுவனங்களின் உதவி… கல்வி உதவித் தொகை… இவைகள் மூலமாகத் தன் கல்விக் கனவை நிறைவேற்றிக் கொண்டாள். 

 

அன்பு, பாசம்… என்பவைகள் மீது பற்றில்லாமல் இருந்த பெண். 

 

எல்லாம் நிகிலைச் சந்திக்கும் வரை!

 

பொறியியல் இறுதி ஆண்டில்… ஷில்பா படிக்கும் கல்லூரிக்கு,  புதிய கணினித் தொழில்நுட்பம் குறித்துப் பேச வந்திருந்தான். 

 

அந்த நாளில்தான், இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆயினர். 

 

அதன்பின், இருவருக்கும் இடையே நிறைய சந்திப்புகள். 

 

நண்பர்கள் ஆனார்கள்! 

 

நிறைய அன்பு காட்டினான். அறிவுரை வழங்கினான். கருத்துக்கள் பரிமாறிக் கொண்டான். 

 

நல்ல நண்பர்கள் ஆனார்கள்!! 

 

நிறைய பேசினார்கள். 

 

ஆத்மார்த்த நண்பர்கள் ஆனார்கள்!!! 

 

மெல்ல மெல்ல… நிகில், தன் குடும்பத்தை ஷில்பாவிற்கு அறிமுகப்படுத்தினான். 

 

ஷில்பா முதலில் தயங்கினாள். புதிதாய் உறவுகளை ஏற்பதில் சின்ன தடுமாற்றம் வந்தது. 

 

கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி… நாளடைவில் நிகிலின் குடும்பத்தில் ஒரு நபராகவே மாறிவிட்டாள். 

 

நிகிலின் தாயாரின் மேல் ஷில்பாவிற்குப் பாசம் அதிகம். 

 

முதலிலெல்லாம்… நிகில் டெல்லி வரும்போது மட்டும், அவனுடன் சேர்ந்து வருவாள். 

 

நாட்கள் செல்லச் செல்ல, அவளுக்குத் தோன்றிய பொழுது… தனியாகவே கிளம்பி வந்துவிடுவாள். 

 

அவளுக்கு, இது தாய்வீடு போல ஆகிப்போயிற்று! 

 

சுருக்கமாக…

ஷில்பா நிகிலின் உயிர்த் தோழி!

நிகில் ஷில்பாவின் உயிர்த் தோழன்!!

 

அழைப்பை ஏற்றுக் கொண்ட நொடியிலிருந்து… 

 

“சொல்லு” என்றான்.

 

“நிகில், டூ த்ரீ டேய்ஸ்க்கு அப்புறமா… வைஸ் ப்ரெசிடென்ட் முன்னாடி, இந்த ப்ராஜெக்ட் பத்தி ஒரு பிரசன்டேஷன் இருக்கு” என்றாள் எடுத்தவுடன். 

 

“அதுக்கென்ன?”

 

“டீம் செலச்ஷன்.. பட்ஜெட்.. எல்லாம் சொல்லணும்”

 

“நீ எல்லாத்துக்கும் பிலான்ட்-தான ஷில்பா? அப்புறமென்ன??”

 

“யெஸ்! பட், கவர்ன்மெண்ட் டென்டர் கிடைக்கிறது ஒன்னும் அவ்வளவு ஈசியில்லை-ல”

 

“ம்ம்ம், தெரியும்”

 

“ரன்னிங் அவர்ஸ்… ரிலையபலிட்டி… எல்லாம் கரெக்டா இருக்கு”

 

“அப்புறம் என்ன?”

 

“அதோட சேர்த்து… எனக்கு கொஞ்சம் நெர்வெஸூம் இருக்கு” என்று தன் பதட்டத்தைச் சொல்லி… பின், “இந்த டென்டர் கிடைக்கணும் நிகில்” என்று தன் ஆசையைச் சொன்னாள். 

 

“ம்ம்ம் புரியுது” 

 

“நீ ஏன் இப்போ லீவ் போட்டு அங்கே போன? இங்கே இருந்திருக்கலாமே?” என்று உரிமையாகக் கேட்டாள். 

 

“ஒர்க் டென்ஷன் ஷில்பா. ஸோ, இது ரிலாக்சேஷன் டைம்”

 

கைப்பேசி வழியே, ஷில்பாவின் சிரிக்கும் குரல் கேட்டது. 

 

“ஏன் சிரிக்கிற?” என்று கேட்டான். 

 

“நீ என்ன வேலை பார்க்கிற? வீக்லீ ஒன்ஸ் ஒரு பேஜ்-க்கு ஏதோ எழுதிற! அதுல என்ன உனக்கு ஒர்க் டென்ஷன்”

 

“ஓ” என்று அவனும் சிரித்தான். 

 

“அம்மாகிட்ட பேசறீயா?”

 

“அவங்ககிட்ட பேசிட்டுதான், உனக்கு கால் பண்ணேன்” 

 

“சாப்பிடப் போறேன். அப்புறமா பேசறேனே ஷில்பா” என்றான். 

 

“ம்ம்ம் சரி” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

 

******

 

ஷில்பாவுடன் பேசிவிட்டு நிகில் வெளியே வந்தான். 

 

அவனது அம்மாவும், இரண்டு அண்ணிகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

 

அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான். தட்டில் சப்பாத்தியை எடுத்து வைத்தான். 

 

“ஆஷா… இந்தக் குருமாவை, அவன்கிட்ட கொடு” என்று ஒரு பாத்திரத்தை ஆஷாவின் புறம் தள்ளினார் பாமினி. 

 

பாமினி… நிகிலின் தாயார். இவர் ஆபிஸ் அட்மினிஸ்ட்ரேஷன் டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு, கிளர்க் வேலை செய்து வருகிறார். 

 

பத்து வருடத்திற்கு முன், கணவருக்கு டெல்லியில் வேலை கிடைத்தால்… 

தமிழ்நாட்டிலிருந்து இங்கே வந்தார். 

 

கணவரின் மறைவிற்குப் பிறகு, தன்னால் முடிந்த அளவு வீட்டின் பொறுப்பை பார்த்துக் கொண்டார். 

 

மூன்று பையன்களையும் டிப்ளமோ படிக்க வைத்தார். அப்போது அவர் இருந்த பொருளாதாரச் சூழ்நிலையில், அதுவே அதிகம்தான்!

 

இரண்டு மகன்களுக்கும் வேலை பார்க்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார். 

 

இப்போது நிகிலுக்கும்… டிப்ளமோ படித்து வேலைக்குச் செல்லும் பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். 

 

இன்னொன்று…

 

நிகிலின் அம்மாவிற்கு, ஷில்பாவை அத்தனை பிடிக்கும்!! 

 

‘என் பொண்ணு’ என்றே தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம்… அண்டை வீட்டாரிடம்… சொல்லுவார். 

 

காரணம்? 

 

தனித்து வளர்ந்தவள். கிடைத்த உதவிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நன்றாகப் படித்தவள். 

 

முயற்சி செய்து, வேலையில் இந்த இடத்திற்கு முன்னேறி இருப்பவள். 

 

நல்ல பக்குவம் நிறைந்த பெண். 

 

இப்படி நிரம்ப! 

 

அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம், அவருக்குப் பிரம்பிப்பாக இருக்கும்.

 

நிகில் சாப்பிட ஆரம்பித்த நொடியிலிருந்து…

 

“நிகில்… வேற வேலைக்குப் போற ஐடியா இருக்கா-டா?” என்று பாமினி ஆரம்பித்தார். 

 

“இல்லையே-மா! ஏன் கேட்கிறீங்க?” என்றான் சாப்பிட்டுக் கொண்டே… 

 

“அண்ணன் சொன்னான். டிப்ளமோ முடிச்சி… நிறைய படிச்சிருக்கியே… வேற நல்ல வேலை பார்க்கலாம்-ல?” 

 

இது நிகிலின் அண்ணன்களின் ஆசை மட்டுமல்ல! அவனைச் சுற்றி இருக்கும் அனைவரின் ஆசையும் கூட!!

 

டிப்ளமோ படித்த பின், தன் சொந்த முயற்சியில் நிகில் நிறைய படித்தான். 

 

இருந்தும்… படித்த படிப்பிற்கான வேலையைப் பார்க்காமல், ஏன் இப்படி இருக்கிறான்? என்று கூட இருப்பவர்களின் ஆதங்கம். 

 

அமைதியாக இருப்பவனைப் பார்த்து, “நிகில்…” என்று பாமினி அழைத்தார். 

 

“இருக்கட்டும்மா. எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு” என்றான். 

 

“இல்லை நிகில்… ” என்று பாமினி ஆரம்பிக்கையில்… 

 

“அத்தை, போதும்! பேசாம சாப்பிடுங்க” என்று சொல்லி, ஆஷா 

அவரை நிறுத்தினாள். 

 

“இல்லை ஆஷா…”

 

“சொல்றேன்-ல! பேசாம சாப்பிடுங்க” என்று அதட்டினாள். 

 

“என்ன அண்ணி, எங்க அம்மாவை இப்படி மிரட்டிரீங்க??” என்று நிகில் இடையே வந்தான். 

 

“ஏன் ஆஷா? அவன் சொல்றது உண்மையா?” என்று வேறு பாமினி கேட்டார். 

 

“ஐயோ அத்தை, அவன் டாப்பிக்க சேஞ்ச் பண்றான். நீங்க வேற!?” என்று ஆஷா அலுத்துக் கொண்டாள். 

 

மேலும், “உனக்குப் போய் சப்போர்ட் பண்ணேன் பாரு” என்று நிகிலை ஒரு பார்வை பார்த்தாள். 

 

இரண்டு நிமிடங்களில்… 

 

பாமினியும் மீராவும் சாப்பிட்டு முடித்திருந்தனர். 

 

“அத்தை… மீரா… உங்க ரெண்டு பேருக்கும் லேட்டா-யிருச்சி. நீங்க கிளம்புங்க” என்று ஆஷா சொன்னாள். 

 

“இதெல்லாம்… ” என்று மேசையின் மீதிருந்த சமையல் பாத்திரங்களைப் பார்த்து  மீரா கேட்கையில்… 

 

“பரவால்ல. நான் எடுத்து வச்சிறேன்” என்று ஆஷா சொன்னாள். 

 

மேலும் இரண்டு நிமிடங்களில்… 

 

‘பை நிகில்’ என்று சொல்லி, பாமினியும் மீராவும் கிளம்பினார்.

 

இருவரும் சென்றதும்…

 

ஆஷாவும் நிகிலும் சாப்பிட்டு முடித்தனர். 

 

“அண்ணி… நான் வெளியே போறேன்… உங்களை ட்ராப் பண்ணிடவா?”

 

“இதெல்லாம் எடுத்து வைக்கணும்… அப்புறம்தான் ரெடியாக முடியும். லேட்டாகும்-டா. நீ கிளம்பு”

 

“நான் எடுத்து வைக்கிறேன். நீங்க ரெடியாகிட்டு வாங்க. நானே டிராப் பண்றேன்” என்று நிகில் சொன்னதும்… 

 

‘சரியென்று’ சொல்லி, ஆஷா தயாராகச் சென்றாள். 

 

சற்று நேரத்துக்குப் பின், இருவரும் பைக்கில் கிளம்பினார்கள். 

 

****

ஆஷா வேலை பார்க்கும் பள்ளியில் வந்து இறக்கி விட்டதும், 

 

“ஓகே, பை அண்ணி” என்று பைக்கைத் திருப்பத் தயாரானான். 

 

“ஒரு நிமிஷம் நில்லு-டா”

 

“என்ன அண்ணி?” 

 

“அத்தை, வேற வரன் பார்க்கலாம்னு சொன்னாங்க”

 

“பாருங்க அண்ணி! அதுக்கென்ன?”

 

“எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு சொல்லு, அதுக்கேத்த மாதிரி பார்க்கிறோம்” 

 

“ஆறு மாசமா பொண்ணு பார்க்கிறீங்க! இன்னைக்கு வந்து இப்படி ஒரு கொஸ்டின் கேட்கிறீங்க?”

 

“நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி படிப்பு படிச்ச அழகான பொண்ணா பார்த்தா… மத்த ரெண்டு பசங்க மாதிரி, நம்ம பேச்சைக் கேட்டுக் கல்யாணம் பண்ணுவான்னு… அத்தை நினைச்சிருப்பாங்க” என்று நக்கலாகச் சொன்னாள். 

 

“வாவ்! அழகான பொண்ணு-ன்னு… உங்களுக்கு நீங்களே ஒரு சர்டிபிகேட் கொடுத்துக்கிட்டீங்க”

 

“அப்படியே அம்மா பேச்சுக் கேட்காத பையன்னு உனக்கு ஒரு சர்டிபிகேட் இருக்கு… அதையும் பாரு”

 

கைத்தட்டிப் புன்னகை செய்தான். 

 

“போதும் நிகில்! சீரியஸா கேட்கிறேன். பொண்ணு எந்த மாதிரி இருக்கணும்-னு சொல்லு-டா” 

 

“சரி… கேட்டுக்கோங்க!” என்று நிகில் சொன்னதும், ஆஷா கவனிக்க ஆரம்பித்தாள். 

 

“கொஞ்சம் இம்மெச்சூர்… கொஞ்சம் இன்னோஷன்ஸ்… கொஞ்சம் இன்ட்ரெஸ்டிங்… கொஞ்சம் இரிடேட்டிங்… இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கணும்”

 

எதுவும் சொல்லாமல், ஆஷா பள்ளிக்குள் செல்லத் திரும்பினாள். 

 

“அண்ணி! ஏன், எதுவும் சொல்லாம போறீங்க?” என்று கேட்டு நின்றான். 

 

திரும்பியவள், தன் பையிலிருந்து ஆங்கில அகராதியை எடுத்து, அவனிடம் நீட்டினாள். 

 

“என்ன அண்ணி?”

 

“இதெல்லாம் சேர்ந்து டிக்ஷனரி-லதான் இருக்கும்” என்று பைக்கின் மேல் வைத்தாள். 

 

“அண்ணி!” 

 

“உன் பாஷையில சொல்லணும்-னா இம்பாஸீபிள். புரியுதா??” என்றாள்

 

அகராதியை எடுத்து ஆஷாவிடம் கொடுத்து, சிரித்துக் கொண்டான். 

 

வாங்கிக் கொண்டாள். 

 

“அண்ணி, நாளைக்கு லீவ் போடுங்க. வெளியே போகலாம்” என்று சொல்லிவிட்டு, பைக்கைத் திருப்பினான்.

 

“நிகில்… மார்க்கெட் கூட்டிட்டு போகக் கூடாது. ஏதாவது பெரிய கடைக்கு கூட்டிட்டுப் போகணும்” என்று சொல்லிக் கொண்டே, பள்ளிக்குள் செல்ல ஆரம்பித்தாள். 

 

“சரி சரி” என்று சொன்னவன், பைக்கில் பறந்துவிட்டான். 

 

*****

 

அதேநாளில்… 

 

பைக்கில் அங்கே இங்கே என சுற்றிவிட்டு… பதினோரு மணி அளவில், ஒரு கடைத் தெருவிற்குள் நுழைந்தான். 

 

சூரியன் வந்ததால், பனி மறைந்திருந்தது. ஆனால், இன்னும் குளிர் இருந்தது. 

 

நிறைய பேர் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்தே வலம் வந்தனர்.

 

அத்தெருக்களில் கசகசவென மக்கள் நடமாட்டம் இருந்தது. 

 

மோட்டார் ரிக்ஷாக்கள், ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சில கார்கள்… இவையனைத்தும், அந்த நெருக்கடியான தெருவினில் ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. 

 

அத்தெரு முழுவதும் சாட் கடைகளால் நிரம்பியிருந்தன. 

 

வீசும் குளிர் காற்றில் கூட, சாட் மசாலாக்கள் மனமே இருந்தது. 

 

வறுத்த உருளையில் சாட் மசாலா தூள் சேர்த்த ‘ஆலு சாட்’ வாசனை! 

 

சிறு சிறு தக்காளி துண்டுகளின் மேல் போடப்பட்ட நைலான் சேவ் வாசனையுடன் ‘பேல் பூரி’! 

 

தயிரும், கரம் மசாலாவும் சேர்ந்த வாசனையுடன் ‘தஹி பூரி’! 

 

பட்டாணி மசாலாக்கள் அடைத்து வைக்கப்பட்ட சமோசா வாசனை! 

 

வெண்ணை வழியும் பன்-களும், எலுமிச்சை சாறு பிழிந்த பாஜீகளின் வாசனையில் ‘பாவ் பாஜி’! 

 

சேவ் பூரி, கச்சோரி, வடா பாவ்… இன்னபிற… இன்னபிற… என்று பட்டியல் நீண்டு செல்லும்! 

 

பசியில் இல்லாதவர்களையும் சாப்பிட அழைக்கும் வாசனை அது! 

 

அதனால்தான் என்னவோ, நிகில் பைக்கை நிறுத்திவிட்டு… அங்கே இருந்த கடைகளில், அமர்ந்து சாப்பிடும் வசதி கொண்ட ஒரு கடையினுள் நுழைந்தான். 

 

ஒரு பேல் பூரி ஆர்டர் கொடுத்துவிட்டு, அன்றைய செய்திகளைப் பார்க்க கைப்பேசியை எடுத்தான்.

 

மற்ற செய்திகளைப் பார்த்துவிட்டு, தொழிற்சாலை சம்பந்தப்பட்ட செய்திகள் பிரிவிற்கு வந்தான். 

 

அதில் அன்று… 

 

மும்பையில் குறிப்பிட்ட சில இடங்களில் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டது… 

என்று ஆரம்பிக்கும் போதே… 

 

அவன் அருகில் ஒரு பெண் வந்து நின்றாள்.

 

‘யாரிவள்?’ என்ற ரீதியில் நிகில் நிமிர்ந்து பார்த்தான்.

 

அந்தப் பெண், “ஹாய்” என்றாள்.

 

கொஞ்சம் எரிச்சலடைந்தான். இருந்தாலும் யாரென்றே தெரியாது என்பதால் மீண்டும் செய்தியை வாசிக்கச் சென்றான். 

 

“அட! உன்கிட்டத்தான்-ப்பா சொன்னேன்” என்று சொல்லி, அவன் முன்னே இருந்த இருக்கையில் அந்தப் பெண் அமர்ந்தாள்.

 

இப்போது, ‘யார் நீ?’ என்பது போல் முகத்தில் எரிச்சலைக் காட்டினான். 

 

முக்கிய செய்தியை வாசிக்கையில் இடையூறு செய்வது போல் தோன்றியது, அவளின் வரவு! 

 

ஆனால் அப்பெண்ணோ, “நான்தான் மிலா” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, பேச ஆரம்பித்தாள். 

 

இங்கே… 

நிகிலின் எதிர்பார்ப்பின்… கொஞ்சம் ‘இரிடேட்டிங்’ தன்னை ‘✔️’ செய்து கொண்டது.