Nizhal – 1

rain-wallpaper-scenary-be409d0c

அத்தியாயம் – 1

விண்ணோடு வெள்ளிரத மேகங்கள் ஊர்வலம் போல, வெண்ணிலவு தன் பணியினை முடித்து ஓய்வெடுக்க செல்கிறது. தன்னவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த தாமரையின் இதழ்களை தென்றல் முத்தமிட்டு திறக்கின்றது.

தென்றலுக்கு மலரோடு காதலென்றால், மலருக்கோ பகலவன் மீது காதல்.  இந்த அழகிய காதலை கண்டு வானம் பொன்னிறமாய் சிவக்க, கிழக்கே உதிக்கிறான் தாமரையின் காதலனான கதிரவன். அந்த விடியற்காலை பொழுதில் காலிமுகத்திடல் கடற்கரை மணலில் கால் புதைந்திட நடந்தாள் ஆர்கலி.

எத்தனை வருடங்களாய் அவள் ஆசைபட்ட விடயம் இன்று கண்முன்னே நடக்கிறது. அதன் ஒவ்வொரு நிகழ்வினையும் நெஞ்சமெனும் பெட்டகத்தில் மறக்காமல் சேகரித்தவளின் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“அக்காவின் உள்ளத்தின் மகிழ்ச்சியினை அவளின்ட முகம் வடிவாய் பிரதிபலிக்கிறது. அந்த கேமராவை கொடுங்கள் அப்பா. நான் அவளை ஒரு புகைப்படம் எடுக்கிறன்” மிதிலன் தந்தையிடம் கேட்க, தன்னுடைய கேமராவை எடுத்து மகனின் கையில் கொடுத்தார்.

அவன் அதை வாங்கிக்கொண்டு தமக்கையை புகைப்படம் எடுக்க சென்றுவிட, தன் மனைவியின் தோளில் கைபோட்டு மகளின் மீது பார்வையைப் படரவிட்டார்.

கணவனின் பார்வை சென்ற திக்கை கவனித்த மனோகரி, “நம்ம இப்ப இருக்கிற நிலையில கடன் வாங்கிப் பிள்ளைகளை இங்கன அழச்சிட்டு வரோணுமா?” என்றாள் மனோகரி.

அங்கே தமக்கையை விதவிதமாய் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும் மகனையும், அவன் சொல்லும்படி செய்யும் மகளையும் பார்த்த பிரபாகரன், “நம்மட்ட பணம், வசதி இல்லாமல் இருக்கலாம், ஆனால் சந்தோசம் மிகுதியாய் இருக்கிறது. நம்மட பிள்ளைகளுக்கு அளவுகடந்த பாசத்தைக் காட்டிட நீயும், தேவையானவற்றை வாங்கித்தர நானும் இருக்கோமே! நம்ம பிள்ளைகள் எண்டும் சந்தோசமாக இருக்கோணும் எண்டு ஆசைப்படுறன்” என்றார். 

இதோ இந்த அன்புதான் மனோகரியை அவரின் வசமாய் ஈர்த்தது. தன்னுடைய கஷ்டங்களை பெரிதாய் நினைக்காமல், மற்றவர்களுக்கு தேவையானதை செய்து தரும் அந்த நெஞ்சத்தைக் காதலித்தாள். வீட்டினரை எதிர்த்து காதல் திருமணம் செய்து, அதற்கு சாட்சியாய் இரண்டு பிள்ளைகளும் பெற்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை கணவனின் அன்பினில் மாற்றம் இல்லை. இப்படி கடந்தகால நினைவில் மூழ்கியிருந்த மனோகரியை ஈர்த்தது பிரபாகரனின் குரல்.

“வவுனியாவில் இருந்து இவ்வளவு தூரம் வர ஒரே காரணம் எண்ட மகளின் சந்தோசம். அவ எப்பவும் பூவைப்போல சிரித்துக்கொண்டே இருக்கோணும். அது மட்டும்தான் என்ற ஆசையும் பிராத்தனையும்!” என்று கூறிய கணவனை காதலோடு  நோக்கினார்.

தன்னவளின் விழிகளோடு தன் பார்வையினைக் கலந்து, “இண்டைக்கு புதுசாய் பார்க்கின்ற மாதிரி பார்க்கிறீர்” என்று கண்சிமிட்டளோடு மனையாளை வம்பிற்கு இழுத்தார்.

“உங்கட இன்னும் இளந்தாரி என்ற நெனப்பு. பிள்ளைகள் ரெண்டும் தோளுக்குமேல வளர்ந்தபின்னும், காதல் பார்வை பார்த்துட்டு இருக்கிறீர்” என்று தோளில் மீதிருந்த கணவனின் கையைத் தட்டிவிட்டு முகம் சிவக்க திரும்பிக் கொண்டார்.

மனையாளின் கடைக்கண் பார்வை ஆயிரம் கதை சொல்ல, “நீர் மட்டும் புதுப்பெண் போல முகம் சிவக்கலாமோ?” என்ற கணவனின் சீண்டலில் சட்டென்று எழுந்து நடக்க, தன்னவளின் வெக்கம் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

“நீர் மட்டும் தனியாய் உட்கார்ந்து என்ன செய்ய போகிறீர். வாங்க கொஞ்சம் காலார நடந்துட்டு வரலாம்” என்று மனோகரி அழைக்க, மறுப்பு சொல்லாமல் எழுந்து சென்றார்.

அந்த ரம்மியமான காலைப்பொழுதை மனதினுள் ரசித்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்தான். சற்று தள்ளி நின்றிருந்த அந்த இளம்பெண்ணின் மீது பார்வை படிந்தது.

பாலில் சந்தானம் குலைத்த நிறம், ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம் என்று விழியால் கணக்கிட்டான். நேராக வகிடெடுத்து பின்னபட்ட கூந்தல் இடையைத் தழுவிக் கொண்டிருந்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் பாவாடை மற்றும் வெள்ளை நிற தாவணி அணிந்து எழில் ஓவியம்போல இருந்தாள்.

அழகான வில்போன்ற புருவம், ஒளிசிந்தும் மீன்விழிகள், கூர்மையான நாசி, சிவந்த இதழ்கள் ஆறடிக்கும் சற்றே குறைவான உயரத்தில் தேவதைவிட அழகாய் மிளிர்ந்தாள். புகைப்படம் எடுப்பது அவளின் தம்பி என்பதை பார்த்தும் புரிந்து கொண்டான்.

அவன் ஒவ்வொரு முறை சொல்லும்போது அதன்படி நிற்கும் அந்த பெண்ணின் விழிகள் ஆயிரம் அபிநயம் பிடிக்க, ஏனோ அந்த விழிகளுக்கு தன் மனதைப் பரிசாக கொடுத்தான். அவன் கையில் இருந்த டைரியினை கையில் எடுத்து எழுதினான்.

“அழகிய காலை நேரம்…

ஆர்பரிக்கும் கடலோரம்…

விழிகளில் அபிநயம் பிடித்து..

என் மனதினைக் களவாடிச்

செல்லும் பெண்ணே!

உன் நினைவில் நான்

வானிலவு போல தேய்ந்திட..

என்னை வளர்பிறையாய்

மாற்றிட விரைந்து வாராயோ

என்னுயிர் சகியே!” தன் உள்ளத்தின் காதலை கவிதையை வடித்துவிட, சில்லென்று வீசிய  காற்றில் காகிதம் பறந்துவிட, அவன் படபடப்புடன் அந்த பேப்பரைப் பிடிக்க எழுந்து சென்றான். 

காலையில் வெள்ளைநிற அனார்கலி சுடிதாரில் நீலநிற கற்கள் பதிக்கப்பட்டு தேவதை போல நின்ற தன்னவளை விட்டு அவன் பார்வை அசைய மறுத்தது. குறுக்கு நேர் எடுத்து இரண்டு புறமும் முடியெடுத்து பின்னி, மீதம் இருக்கின்ற கூந்தலை விரியவிட்டு நின்றிருந்தாள்.

நெற்றியில் ஒரு போட்டு அலங்கரிக்க, அழகிய விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. காற்றில் பறந்து வந்த காகிதம் அவளின் கைக்கு கிடைக்க, “என்னது!” என்றபடி அதை வாசித்தவளின் பார்வை தன்னவன் மீது படிந்தது.

சிவந்த இதழ்களில் புன்னகை அரும்ப தன்னை யாரோ பார்ப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தாள். அவள் சட்டென்று திரும்பியதில் உண்டான தடுமாற்றத்தை தன்னுள் மறைத்துக்கொண்டு அவளருகே நோக்கி சென்றான். 

“கவிதை வடிவாய் எழுதிறியேள் மச்சான். இது என்னைப் பார்த்து எழுதினீரா?” என்று அவள் விழிகளில் ஆர்வத்தைத் தேக்கி கேட்க, அவனோ சொல்ல மாட்டேன் என்பது போல மறுப்பாக தலையசைத்தான்.

“இவ்வளவு வடிவான வரிகளை நான் சொந்தம் கொண்டாட முடியாமல் செய்தவள் ஆரு (யாரு) எண்டு சொல்லுங்கோவன்! இல்ல நீர் கவிதை எழுதும் விடயத்தை மாமாவிடம் போட்டுக் கொடுப்பன்” என்று அவள் கண்களில் கனலைத் தேக்கி மிரட்டிட, அவன் அந்த பெண்ணை நோக்கி கைநீட்டினான்.

அந்த திசையை நோக்கி தன் பார்வையைச் செலுத்தியவள், “மச்சான் உங்கட டெஸ்ட் இவ்வளவு மட்டமாக இருக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கல்லே! என்னுடன் கம்பேர் செய்யும்போது அவளின்ட அழகு கொஞ்சம் கொறவுதான்” என்று சொல்லி அவன் எழுதிய கவிதையைப் பேப்பரை கசக்கி அந்த பெண்ணின் மீது விட்டெறிந்தாள்.

“ஏய் என்ன காரியம் பண்றே! அந்த கவிதையை அவள் வாசித்தால் நான் தொலைஞ்சேன்” என்று அவன் தலையில் கைவைக்க, அவனின் தோளில் இடது கையை வைத்து சாய்ந்து நின்றாள்.

அது சரியாக ஆர்கலி மீது விழ, “அக்கா என்னது?” என்று தம்பி கேட்க, சட்டென்று குனிந்து அந்த காகிதத்தை கையில் எடுத்து வாசித்தவளின் வதனம் கோபத்தில் சிவந்தது.

அவள் வெடுக்கென்று திரும்பிப் பார்க்க, “என்ர மச்சான் தான். உங்களப் பாத்து காதல் கவிதை எழுதி இருக்கார். அது எனக்கு சொந்தம் இல்லையெண்டு தான் உங்கடமேல வீசினன். பாவம் சின்னப்பையன் தெரியாமல் செஞ்சிட்டன் மன்னிச்சிடுங்கோ” என்று அவனுக்கும் சேர்த்து பேசிவிட்டு, அவள் ஓட்டம் எடுத்தாள்.

ஆறடிக்கும் குறைவில்லாமல் வளர்ந்திருந்த அவன் விழிகளில் மின்னல் சட்டென்று தோன்றி மறைய, “நான் வேணும் எண்டு எழுதேல்ல. அது என்ர காதலிக்காக எழுதினது! அதை அவளிட்ட நேராய் சொல்ல கொஞ்சம் தயக்கம். அதுதான் உங்களைக் கைகாட்டி பொய் சொல்லிட்டன் சாரிங்க!” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அவளின் பின்னோடு சென்றான்.

அவன் பேச்சில் இருந்தே அவன் சொன்னது பொய் என்று உணர்ந்தாள் பெண்ணவள். பதினாறு வயதில் நெஞ்சினில் எழும் இனம்புரியாத உணர்வுகளால்  தாக்கப்பட்ட பாவையவள் சிலைபோல சமைந்து நின்றிருக்க, “அப்பா இங்க பாருங்கோ! உங்கட மகளுக்கு ஒரு அண்ணா காதல் கவிதை எழுதி இருக்கிறர்” அவளின் கையில் இருந்த பேப்பரை வாங்கிக் கொண்டு ஓட்டமெடுத்தான்.

மிதிலனின் குரலில் தன்னிலைக்கு மீண்டவள், “ஏய் அப்பாவிடம் காட்டிவிடாதே! அவர் ஏதோ விளையாட்டுக்கு செய்திருக்கலாம் இல்லே. அதை பெரிசு பண்ணாமல் அப்படியே விடு” என்று சொன்ன தமக்கையை விநோதமாக பார்த்தான் தம்பி.

அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அவள் இப்படி இருந்ததில்லை. ஆனால் காதல் வந்தால் நெஞ்சில் கள்ளமும் வந்திவிடும் என்று அவனிடம் எப்படி சொல்லி புரிய வைப்பாள். அவள் வாய் திறந்து சொல்லாத விஷயத்தை சிறுவன் புரிந்து கொண்டான் போலும்!

“இந்தாங்கோ அக்கா. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியம் எண்டு எனக்கு தெரியல்லே. அந்த அண்ணா சொன்னதை கவனிச்சீங்கதானே?! அவங்கட மனதில் அந்த அக்காதான் இருக்கிறள், அவியலும் அதத்தான் சொல்லிட்டு போறர். அதனால் நீ தேவையில்லாமல் மனதில் ஆசையை வளத்துட்டு அவஸ்தைப்படதேயாள் சொல்லிட்டன்” நொடியில் பெரியவனாய் மாறி அவன் கண்டிக்க, அவளும் அதை ஏற்றுக் கொண்டாள்.

ஆர்கலியைவிட கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் சிறியவன் மிதிலன். ஆனால் தமக்கையின்  ஒவ்வொரு அசைவிற்கும் அவனிடம் தனி புத்தகமே இருக்கும். அவளின் சிறு மாற்றத்தைக் கூட கணப்பொழுதில் கண்டு கொள்வான். சில நேரங்களில்  தந்தையாகவும், பல நேரங்களில் ஆசானாகவும் இருந்து அவளை வழிநடத்துவான்.

அவள் பதில் சொல்லாமல் நின்றிருக்க, “என்னக்கா” என்று பாசத்துடன் கேட்க, “இதோ இப்போதே அவனை மறந்துட்டன் போதுமா! நம்ம இங்கன இருக்கும் வரை அவரைப் பாக்க வாய்ப்பு கிடைக்கும். அப்புறம் வவுனியா போனபிறகு அந்தாளே நேரில் வந்தாலும் எனக்கு அடையாளம் தெரியாதேல்ல” என்று சொல்ல தம்பியின் உதடுகளில் மென்னகை அரும்பியது.

“நீர் இவ்வளவு நல்லவள் எண்டு தெரியாமல் போயிருச்சே!” என்றவன் அவளை கிண்டலடித்து சிரிக்க, “உன்னை” என்று சொல்லி தம்பியை அடிக்க துரத்தினாள்.

இருவரும் ஒருவரையொருவர் துரத்திக்கொண்டு வருவதைக் கவனித்த மனோகரி, “உங்கன்ட பிள்ளைகளுக்கு ஏதோ கைகலப்பு எண்டு நினைக்கிறன். ரெண்டு பெரும் ஓடிவரும் வேகத்தைப் பாருங்கோ” என்று கணவனிடம் கூறினார்.

அதற்குள் ஆர்கலியும், மிதிலனும் பக்கத்தில் வந்துவிட, “காலிமுகத்திடல் கடற்கரைக்கு போகோணும் அப்பா எண்டு அடம் பிடித்தாய். இப்ப உன்னை கூட்டிட்டு வந்துட்டன். இப்ப சந்தோசம்தானே?” என்று அவர் புன்னகையுடன் கேட்டார்.

அவள் ஒப்புதலாய் தலையசைக்க, “அப்பா அக்காவிற்கு கொழும்பில் இருக்கும் பல்கலைக் கழகத்தில் professional floral design course படிக்க ஆசை! அதையும் நிறைவேற்றி வைங்கோவன்” என்றான் குறும்புடன்.

“அதுக்கென்ன படிக்க வைக்கிறன். என்ர மொள், மோனின் சந்தோசம் தான் என்ட சந்தோசமும்” என்றார் புன்னகையுடன்.

“உங்களுக்கு எப்பவும் பிள்ளைகளின் புராணம் தான். ஆமா உங்கட மகளுக்கு ஒரு மாப்பிள்ளை பாக்கோணும் எண்டால் ஆரு(யார்) மாதிரி இருக்கோணும் எண்டு சொல்லுங்கோ பாப்பம்” என்று மனையாள் கேட்க, அந்த கடற்கரைக்கு வந்திருந்த இளந்தாரி பையன்கள் மீது கவனத்தை பதித்தார்.

அதில் ஒருவன் கடலைப் புகைப்படம் எடுப்பதைக் கண்டு, “அதோ அங்கன இளஞ்சிவப்பு சர்ட், ஜீன்ஸ் அணிந்து ஒருவன் நிக்கிறன் அல்லோ. அவனைப்போல ஒரு பையனைக் கண்டுபிடித்து என்ற மகளுக்கு மணமுடிப்பன்” என்று சொல்ல, மற்ற மூவரின் பார்வையும் அந்த நபரின் மீது படிந்தது.

தந்தை சொன்ன ஆள் சற்றுமுன் தமக்கைக்கு கவிதை எழுதியவன் என்பதை மனதில் குறித்துக் கொண்டான் மிதிலன், “அப்பா உங்கட ரசனையே தனிதான்” என்று சொல்ல, அதைக்கேட்ட ஆர்கலியின் இதயத்தில் சாரலடித்தது.

அதே நேரத்தில் அவனின் அருகே நின்றிருந்த பெண்ணின் மீது பார்வையைப் பதித்தவள், ‘அவனது விருப்பம் அவளாக இருந்தால் நான் விலகிப் போகோணும். அதுக்கு இப்பவே என் நெஞ்சில் இருக்கும் காதலை மறப்பது நல்லது’ என்று நினைத்து, முடிந்தவரை அவன் நினைவுகளை அங்கேயே மறந்துவிட நினைத்தாள்.

முதல் காதல் கானல் நீராகிடும் என்று நினைத்தும் அவள் விழிகள் லேசாக கலங்கும் போதே, “வாங்க வெளிக்கிடலாம்” என்று பிள்ளைகளையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

கடற்கரைக்கு பக்கத்தில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று காலை உணவை முடித்துக்கொண்டு தங்களின் கார் பயணத்தை மேற்கொண்டனர்.

அவர்கள் கிளம்பிய கொஞ்சநேரத்தில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரைப் பார்த்த மிதிலன், “அப்பா எனக்கு ஐஸ்கிரீம்வாங்கி தாங்கோ” என்று கேட்க, டிரைவரை கரை ஓரமாக நிறுத்த சொன்னார்.

ஆர்கலியும், மிதிலனும் இறங்கி கடைக்குச் செல்ல, “சார் ஒரு தம் அடித்துவிட்டு வருகிறன்” என்று சொல்லி டிரைவரும் இறங்கிச் சென்றார். தங்களின் பிள்ளைகளை பார்வை வட்டத்திற்குள் வைத்தபடியே, “மிதிலன் இப்பவே பெரிய பையன் மாதிரி நடந்துக்கறன். நாளை நம்ம இல்லாத காலத்திலும் அவன் ஆர்கலியை நல்லா பாத்துக்கொள்வன் எண்டு எனக்கு இப்ப நம்பிக்கை வந்திடுச்சு” என்றார் மனோகரி.

அவர் சொன்னதுபோலவே, “உண்மைதான்” என்றார். அந்த வழியாய் வந்த ஒரு லாரியின் பிரேக் ஒயர் கட்டானதால் வேகமாய் வந்து காரின் பின்பக்கம் மோதியது. அந்த சத்தம்கேட்டு டிரைவரும், பொது மக்களும் ஓடி வந்தனர்.

எல்லோரும் ஓடுவதைக் கண்டு, “ஏன் இவியல் இப்படி ஓடுறாங்க” என்ற கேள்வியுடன் அக்காவும், தம்பியும் ஐஸ்கிரீமுடன் வெளியே வந்தனர். தாயும், தந்தையும் அமர்ந்திருந்த கார் பட்டென்று வெடித்திட, அதை கண்ணால் பார்த்தனர்.

சற்றுமுன் வரை பிள்ளைகளை மையமாக வைத்து கனவுகண்ட அந்த இரு உயிர்களும் உடலைவிட்டு பிரிந்து செல்ல, கண்முன்னே பெற்றவர்களை இழந்த அதிர்ச்சியில் இருவரும் அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தனர்.