NSK 19 2

NSK 19 2

திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மண்டபத்திற்கு வந்து விட, இந்திரா ஒரு நிகழ்வுக்கும் பின் தங்கி நிற்க, நங்கைதான்  அவரோடு சேர்ந்து முன்னில் இருந்து எல்லா நிகழ்வையும் செய்தார்.

அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில் இந்திராவிற்கு கண்கள் எல்லாம் ஆனந்தத்தில் கலங்கியது.

தன் மகளுக்கு எப்படி ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்ய போகிறோம் என்று கவலையில் இருந்த அன்னைக்கு, சதாசிவம் ஐயாவின் குடும்பத்தில் தன் பெண் வாழப்போகிறாள் என்று அவள் வாழ்வை பற்றிய கவலையை விடுத்தார் இந்திரா.

சாதாரண விடயம் அல்ல கணவன் இல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்வை கரைசேர்ப்பது என்பது.

இந்திராவை புரிந்து கொண்ட நங்கையும் சீதாலட்சுமியும் அவருடனே இருந்து அனைத்தையும் செய்தார்கள்.

பரணியின் குடும்பத்தினர் அன்று சென்றதை ஒட்டி இன்று வரை அவர்களிடம் பேச முயற்சிக்கவில்லை. அதுவும் பரணியின் குடும்பம் நங்கையின் குடும்பத்தோடு இணைந்ததில் அவர்கள் முற்றிலுமாக அனைவரையும் தவிர்த்தனர்.

ஆனால் வீட்டினுள்ளே இருந்து நரகத்தை அனுபவித்தார் ராஜவேல். தன் பெண்ணை கூட பார்க்க விடாமல் அவரை அறையினுளே அடைத்து வைத்திருந்தார் நாச்சியார்.

“ஏன்ம்மா இப்படி அண்ணாவ அடச்சி வச்சிருக்கீங்க?” என கிருஷ்ணவேணி கேட்க,

“ஹான் அதுவா… இப்போதான் உன் அண்ணனுக்கு பெத்த பாசம் துடிக்குது டி. அவ நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போனவளை இவன் சேர்த்துக்கணும்னு  நினைச்சா விடுவேனா அதான் அடச்சிட்டேன். சீக்கிரமா ரெடி ஆகு அந்த கல்யாணத்துக்கு போயிட்டு வந்திடலாம்” என்க.

கிருஷ்ணவேணிக்கே இந்த பேச்சு அத்தனை பிடித்தமாக இருந்திடவில்லை. ‘தன்னைப்போல தானே அண்ணனும் இத்தனை ஆண்டுகளாக மகளை பிரிந்து வாழ்ந்திருக்கிறார். தனக்காவது பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைத்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அண்ணனுக்கு அது கூட இல்லையே. நங்கை வீட்டை விட்டு சென்றதில் இருந்தே அண்ணன் மனசளவில் உடைந்து விட்டாரே. அவருக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சிறை வாழ்க்கை அமைய வேண்டும்’ என சிந்தித்தவரால் அன்னையை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.

மூவருமாக யாரோ போல் திருமணத்திற்கு வந்தனர். நங்கையின் பார்வை அவர்களோடு தந்தையை தேடுவதிலே இருக்க, அவர்களோ நங்கையை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.

நங்கையோ தன் வருத்தத்தை மறைத்து கல்யாண வேலையில் சந்தோஷமாக ஈடுபட்டார்.

அபியோ மணமேடையில் பூங்குழலிக்காக தவிப்போடு காத்திருக்க, அவனை மேலும் தவிக்க விட விரும்பாமல் கூரை புடவையில் ஆதினி மிளனிக்கு இடையில் வருகை தந்தாள் பூங்குழலி.

அதன்பின் இருவரும் சில சம்பிரதாயங்கள் செய்ய, ஐயர் அபியிடம் மாங்கல்யத்தை கொடுத்து, “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்க, அனைவரது ஆசிர்வாதத்தோடும் அபி பூங்குழலியின் கழுத்தில் திருமாங்கல்யத்தைக் கட்டி தன்னவளாக்கினான்.

அதன் பின் அனைத்து விதமான சடங்குகளும் முடிந்து பெண்ணையும் மாப்பிள்ளையும் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

நாச்சியார் மட்டும் போகும் போது, “என்ன இந்த தரித்திரத்துக்கு கல்யாணம் செய்ய போறீங்களாமே… ஒழுக்கமானவளுக்கு இதெல்லாம் பண்ணலாம் இவளுக்கு எதுக்கு இதெல்லாம்‌” என்று முகம் சுளித்து சொல்ல நங்கையின் முகம் கூம்பிவிட்டது. பாரிக்கு கோபம் தலைக்கேற, அவரை கை பிடித்து பேசவிடாமல் தடுத்திருந்தார் நங்கை.

“யார நீங்க தரித்திரம்னு சொல்லறீங்களோ… அவங்க எங்க வீட்டு மகாலட்சுமி. அவங்களை பத்தி பேச உங்களுக்கு உரிமை இல்லை… எந்த பெண்ணை வேணாம்னு சொன்னீங்களோ, அவங்க ரொம்ப சந்தோஷமா வாழுவாங்க. அவங்களுக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்ய நானும் அப்பாவும் இருக்கோம். பேசுறதுக்கு முன்னாடி பலமுறை யோசிச்சு பேசுங்க, இல்லன்னா அதுக்கப்புறம் வரதுக்கு நான் பொறுப்பில்ல” என்ற வசீகரனின் பேச்சில் அத்தனை அமைதி இருந்தது. ஆனால் அதற்கு மாறாக அவனின் முகத்தில் அத்தனை இறுக்கம்.

“நாளைக்கு எங்க அம்மாக்கும் அப்பாக்கும் கல்யாணம்… கண்டிப்பா வந்திடுங்க பாட்டி மா” என்றவன் ஆதினியை அழைத்து அவர்களுக்கு ஒரு பத்திரிகையை எடுத்து வர சொல்லி கொடுத்தான்.

அதனை வாங்கி தூக்கி எறிந்த நாச்சியார் கிளம்பிச் சென்றார். கிருஷ்ணவேணி போகும்போது பரணியையும் நங்கையையும் அழுந்த பார்வை பார்த்து விட்டு சென்றார்.

அவரது பார்வையில் ஏதோ தவிப்பு இருப்பது போல் உணர்ந்த பரணி, அன்னையிடம் பேசவேண்டும் என முடிவு செய்தான்.

சடங்குகள் யாவும் முடிந்துவிட, அடுத்த நாள் திருமணம் இருக்க வேண்டி பெண்ணையும் மாப்பிள்ளையும் பிரித்து வைக்க முடிவு செய்ய, நங்கை அதனை முற்றிலும் மறுத்து இருவருக்கான சாந்தி முகூர்த்த வேலையை தொடங்கினார்.

“எங்கோ மச்சம் இருக்கு ப்ரோ உங்களுக்கு அதான் ஃப்ர்ஸ்ட் நைட் நிப்பாட்ட பேசியும் நடக்க போகுது” என வசீகரன் கிண்டல் செய்ய,

“ஆமா மச்சான்…” என்று விபுனனும் சேர்ந்து அவனை கிண்டலடிக்க, ஆண்மகன் முகம் வெட்கத்தில் செம்மையுற்றது.

பெண்கள் மூவரும் பூங்குழலியை ரெடி செய்து அபியின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

நாணத்தோடு உள்ளே வந்தளை அலேக்காக தூக்கி மஞ்சத்தில் விட்டவன், அவளுக்கு அவன் கையால் செய்த கேசரியை எடுத்து ஊட்டிவிட்டான்.

“எனக்கு இது ரொம்ப பிடிக்கும் நந்து” என ஆசையாய் அடுத்தடுத்த வாயையும் வாங்கி உண்டாள்.

“உனக்கு பிடிக்கும்னு தெரிஞ்சுதான் யாருக்கும் தெரியாம இதை செஞ்சதே… டேஸ்ட் எப்படி இருக்கு ஓகேவா?”

“நீங்க சாப்பிட்டு பாக்கலையா? அதுக்குள்ள தீந்து போச்சே” எனச் சாப்பிட்ட படியே சொல்ல,

“இதோ அதை சாப்பிடதான்  போறேன்” என எதிர்பாராத விதமாக அவளது இதழை தன் வசபடுத்தினான் அபிநந்தன்.

முதலில் அதிர்ந்த குழலி அதன்பின் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, அவள் வாயிலிருந்த கேசரியை சாப்பிட்டு பார்த்து, ”செம்ம டேஸ்ட்” என்றவாறே அழகிய சங்கமத்தை இதழ் வழியாக துவங்கினான் அபி.

இருவரின் தேடலும் ஊடலுடன் சேர்ந்து கூடலாக மாறி அங்கே புதிய அத்தியாயத்தை படைக்க, வெட்கம் கொண்ட மதியோ அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.

அடுத்த நாள் காலை அழகாகவும் அருமையாகவும் புலர்ந்தது.

நங்கை மற்றும் பாரியின் திருமணம் அதிகாலை நேரத்தில் வைத்திருந்ததால் அனைவரும் வேகமாக எழுந்து கிளம்பினர்.

ஆதினியும் வசியும் அங்கிருந்தவர்களை ஒரு வழி செய்து கொண்டு இருந்தனர்.

நங்கையை அழகு படுத்துகிறேன் என்ற பேரில் அவரை போட்டு படுத்தி எடுத்தாள் ஆதினி. அவளுடன் மிளனியும் சேர்ந்து கொண்டாள்.

இங்கே வசீகரனும் விபுனனும் பாரியை ஒதுக்கிவிட்டு இருவரும் கிளம்புகிறேன் என்ற பேர்வழியில் ஒரு வழிசெய்தனர்.

“இங்க இப்போ யாருக்கு கல்யாணம் உங்களுக்கா எனக்கா?” எனப் பாரி கோபமாக கேட்க,

“தெரிஞ்சுக்கிட்டே இந்த கேள்வி எதுக்கு டாடி… நீங்க மேக்கப் போட்டு என்ன செய்ய போறீங்க சொல்லுங்க… நாங்க மேக்கப் போட்டா கூட எங்களை நாலு பொண்ணுங்க சைட் அடிக்கும்” என வசீகரன் சட்டை கையை மடித்தவாறே சொன்னான்.

“ஹோ! வெறும் நாலு பொண்ணுங்க சைட் அடிச்சா போதுமா தம்பி” என சிரிப்பை அடக்கியவாறே கேட்க,

“அது எப்படி போதும், ஒரு பேச்சுக்குதான்  நாலு சொன்னது. இல்லையா மச்சான்” என விபு கேட்க,

“ஆமாம்டா மச்சான்… இப்போ ஒரு ஹெவி காம்பெட்டிஷன் போகுதே, அப்புறம் என்ன நமக்கு ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டியதுதான் “ என வசீகரன் உள்ளாசமாக சொன்னான்.

“ஹோ உங்களுக்கு ஜாலி கேக்குதா ஜாலி” எனக் குரல் வெளியிலிருந்து வரவும் இருவரும் திடுக்கிட்டு திரும்ப, அங்கே கோபத்தின் உச்சத்தில் ஆதினியும் மிளனியும் நின்றிருந்தனர். அவர்களையொட்டி பாரி சிரிப்போடு நின்றிருந்தார்.

வசீகரன் தன் தந்தையை முறைக்க, “எப்படி என்னோட ஐடியா… நான்தான்  ரெண்டு பேரையும் வரவச்சேன்” எனச் சொல்லி காலரை தூக்கி விட்டார்.

“சகிக்கல்ல ப்பா” என்றவன் முக பாவனையைக் குழந்தை போல் வைத்து, “ஆது குட்டி! இங்க எப்போ வந்தீங்க நீங்க?” என அவளை தாடையை பிடிக்க,

அதனை தட்டி விட்டவள், “யாருக்கு கல்யாணம்னு கேக்கும்போதே நாங்க வந்துட்டோம்” என முறைத்தாள்.

“உங்க ரெண்டு பேருக்கும் நாலு பொண்ணுங்க தேவையா இருக்கோ சைட் அடிக்க… அதை ரெடி பண்ணிட்டா போச்சி” என மிளனி கை கட்டி சொல்ல,

“ஐயோ பேபிம்மா, எனக்கு நீ ஒன்னே போதும்டா. எனக்கு எதுக்கு மத்த மூனு பேரு… நான் கேட்டது என்னோட மச்சான் வசீகாகதான்  பேபி” என்க.

“அடப்பாவி” என்பது போல் பார்த்தான் வசீகரன்.

“என்ன மிஸ்டர் விருமாண்டி கொழுப்பு அதிகமாகிடுச்சி போல. இனி ஆது குட்டி, செல்லம் கிண்ணம்னு என்கிட்ட வந்த அப்புறம் நீ செத்த… வா மிளா நாம போகலாம்” என்க.

“இது உங்களுக்கும் சேர்த்துதான்” என எச்சரித்து விட்டு ஆதினியுடன் சென்றாள் மிளனி.

“என் வாழ்க்கையில இப்போதான் ஒரு பொண்ணு வந்துச்சி அதையும் கெடுத்துட்டியேடா பாவி‌” என விபு புலம்ப,

“ஆமா நான்லாம் ரொம்ப வருஷமா காதலிக்கிறேன் பாரு… போடா டேய் எல்லாம் இவரால வந்தது. ஆமா எதுக்காக இவங்க ரெண்டு பேரையும் வர சொன்னீங்க” என மூக்கு விடைக்க வசி கேட்க,

“எல்லாம் ஒரு எண்டர்டெயின்மெண்ட்தான் மை பாய்” என அவன் கன்னம் தட்டி கிளம்ப தயாரானார் பாரி.

பின்பு இருவரையும் மணமேடைக்கு அழைத்து செல்ல, இருவரும் சேர்ந்து ஐயர் கூறுவதை கூற, சௌந்தர்யாவிடம் மாங்கல்யத்தைக் கொடுத்து ஆதிர்வாதம் வாங்கி வர சொல்ல, அதனை வாங்கிய ஆதினி எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்தாள்.

பின் ஐயர் தாலியை எடுத்து கொடுத்து, “கெட்டி மேளம்… கெட்டி மேளம்” என்க, சந்தோஷத்தோடும் பூரிப்போடும் பாரிவேந்தர் நங்கையின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டி தன்னில் பாதியாக்கினார். நங்கை கண்கள் பளபளக்க அதனை ஏற்றுக் கொண்டார்.

அதன்பின் அவர்கள் இருவரையும் கோயிலுக்குச் சென்று வர சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் வராததுமாக, ஒரு கவரை இருவர் முன்பும் நீட்டினான் வசீகரன்.

“என்னடா இது?” எனப் பாரி கேட்க,

“பிரிச்சு பாருங்க உங்களுக்கே தெரியும்” என்க, இருவரும் அதனை பிரித்து விழி விரித்தனர்.

“என்ன தம்பி இது… எங்களுக்கு ஹனிமூன் டிக்கெட்ஸ் எல்லாம். நாங்க என்ன சின்ன பசங்களா சொல்லு ஹனிமூன் போக. இதை அபிக்கும் பூங்குழலிக்கும் கொடு பா” என நங்கை சொல்ல,

“எங்ககிட்ட ஆல்ரெடி டிக்கெட்ஸ் இருக்கே சித்தி… இது உங்களுக்கானது நீங்கதான் போகணும்” என அபி வற்புறுத்தினான்.

“நாங்க எப்படி?” எனக் கேள்வியாய் இருவரும் நோக்க,

“இப்படிதான் போகணும்” என்று அவர்களுக்கான பையை எடுத்து வந்தாள் ஆதினி.

“இனி எதுவும் பேசக்கூடாது. ரெண்டு பேரும் சீக்கிரமா கிளம்பி வாங்க கார் வந்திடும்” என அவசரபடுத்தினாள்.

பல தயக்கத்திற்கு பிறகு பாரியும் நங்கையும் கிளம்பி வர, அவர்களுக்கான வண்டியும் வந்தது.

“டாடி ஹனிமூன்ன நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க” என வசீ கூறி இருவரையும் அனுப்பி வைத்தான். அவர்களுக்கு பின்னே அபி பூங்குழலியையும் அனுப்பி வைத்தது மொத்த குடும்பமும்.

அடுத்த வந்த இரண்டு நாளிலே வசீகரனும் விபுனனும் சென்னை சென்று விட, வசீக்கு துணையாக சௌந்தர்யா சென்றார்.

ஒருவாரம் கழித்து தன்னவளுடன் ஊருக்கு திரும்பினார் பாரிவேந்தர்.

வீட்டிற்கு வரும்வழியில் இருவரும் காதலுடன் பேசியபடியே காரில் பயணம் செய்ய, எதிர்பாராத விதமாக ஒரு லாரி தன் கட்டுப்பாட்டை தாண்டி வந்து பாரியின் காரை மோதியது.

உயிருக்கு போராடிய நிலையில் இருவரும் சாலையின் ஓரத்தில் விழுந்தனர்.

error: Content is protected !!