NSK!16

அத்தியாயம் 16

விபு, வசீகரன் சொன்னது போல் அடுத்த நாளே செம்மலபுரம் நோக்கி பயணப்பட்டான்.

இத்தனை வருடங்கள் நங்கை வாழ்ந்த வீட்டை, வசீகரன் நங்கையை தேடி சென்ற பின்பு முதன் வேலையாக நங்கையின் பேரிலே அவ்வீட்டை வாங்கி விட்டார் பாரிவேந்தர்.

செம்மலபுரத்தை அடைந்த விபு, அவ்வூரின் இயற்கை அழகினை கண்டு மெய்மறந்து நின்றான். கடந்த முறை வந்த போது அவனின் கவனம் முழுவதும் பாரியின் மீதும் வசீகரனின் மீதுமே இருந்ததினால் மற்றவை யாவையும் கவனிக்க மறந்திருந்தான்.

அதனாலே ஊருக்குள் அடி வைத்தவன், இயற்கையோடு இயற்கையாய் ஒன்றிட ஆசைக்கொண்டு நடந்து சென்றான்.

ஊருக்குள் நுழைந்ததுமே ஒரு விநாயகர் கோயிலிருக்க, அதனுள் நுழைந்தான்.

அங்கிருந்த விநாயகரை ஆலமரத்தின் அடியில் ஒரு திண்ணை மாதிரி கட்டி அதில் வைத்திருந்தனர். பார்க்கவே அத்தனை அழகினை கொடுத்தது.

சாமி கும்பிட்டு வெளியேவந்தவன் மேலும் நடக்க துவங்கினான்.

கோயிலிற்கு அடுத்து ஆறு தென்பட, அதில் வற்றாத நீர் போல் வேகமாக பாய்ந்து கொண்டிருந்த ஆற்றை பார்க்க பார்க்க அதில் ஒரு குளியல் போட தோன்றியது. மெதுவாக பாலத்திற்கு கீழ் சென்றவன் காலனியை கழட்டி வைத்தவன் மெதுவாக தண்ணீருக்குள் காலை நனைத்தான். அத்தனை புத்துணர்வை கொடுத்தது அவனுக்கு. அதிலிருந்தபடியே விதவிதமான செல்ஃபிகளை எடுத்தான்.

அதன் பின் இறைவன் அளித்த இயற்கை அழகினை ரசித்தபடியே வீடுகள் இருக்கும் தெருவிற்குள் நுழைந்தான்.

அவனுக்கு நங்கை இருந்த வீடு தெரியாததால், யாரிடம் கேட்பது என்று புரியாமல் முழித்தவனின் தலையில் பின்னிருந்து ஏதோ அடித்தது.

“ஆஆ” என அலறியவன் பின்னந்தலையை தேய்த்தவாறே திரும்ப கண்களுக்கு யாரும் புலப்படவில்லை.

“மரம் கூட எதுவும் இல்லையே. எப்படி என் மண்டையில அடிப்பட்டுச்சி” என்றவாறே முன்னே நடந்தான்.

விபுவை பார்த்த அனைவரும் அவனை வேற்றுகிரகவாசி போல் பார்த்து வைக்க, அவனுக்கு அங்கே நடக்க ஒரு கூச்சத்தை உண்டு பண்ணியது.

வசீகரன் இவ்வூருக்கு வந்தபோது, கிராமத்தில் இருப்பவர் எப்படி உடை அணிவாரோ அப்படிதான் அணிந்திருந்தான். அவன் அணிந்திருந்ததோ வெறும் ஃபார்மல்ஸ்தான். ஆனால் விபுவோ சாமல் நிற பென்சில் ஃபிட் பேண்டும் கருப்பு நிற டிசேர்ட் குளிருக்கு இதமாக ஜெர்க் என மாடல் போலவே ஊருக்குள் இவனது வருகை இருந்தது.

தன் வயதொத்த ஒருவன் வருவதை கண்ட விபு, அவனை நிறுத்தி, ”ஏங்க! உங்களுக்கு இங்க நங்கை அம்மாவோட வீடு எங்க இருக்குன்னு தெரியுமா?” என்க. 

“எதுக்கு கேக்குறீங்க?” என்று அவனும் பதிலுக்கு பதிலாக கேள்வி தொடுக்க, 

“அவங்க வீடு எங்க இருக்குன்னு சொல்லுங்களேன்?”

“அதை எதுக்கு உன்கிட்ட நான் சொல்லணும்” என எடக்காக கேட்க,

 “அட! கேள்விக்கு பிறந்த கிறுக்கு பயலே” என்று அவனை திட்டியவன், ”அவங்க வீட்டுக்கு ஒரு வேலையா வந்திருக்கேன். அவங்க வீடு எங்க இருக்குன்னு சொன்னா நல்லா இருக்கும்” என்க, அவன் பார்வையோ வேறெங்கோ இருந்தது.

“எங்க பாக்குறான் இவன்” என்றவாறே திரும்பி பார்க்க அங்கோ யாருமேயில்லை.

“ஏங்க” என்று அவன் தோள் தட்டி திருப்ப,

“சொல்லுங்க ஏதோ கேட்டிங்களே நீங்க‌?” என்று அவன் காதில் விழாதது போல் கேட்டான்.

“நான் நங்கை அம்மா வீடு எங்க இருக்குன்னு கேக்கதான்  கூப்பிட்டேன்” என்றான் பொறுமையாய்.

“பார்க்க திருடன் மாதிரி இருக்க, உனக்கு எதுக்கு அவங்க வீட்டு அட்ரெஸ். இப்போ அந்தம்மா ஊருல இல்ல” என்று முறைத்தவன் எதுவும் பேசாது நகர்ந்து விட்டான்.

“அடேய்! யாருடா இவன்” என்று தலையில் அடித்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் விபுனன்.

மீண்டும் தலையில் ஏதோ அடிப்பட, வேகமாக திரும்பி பார்த்தவனின் கண்களுக்கு எதுவும் தெரியாமல் திரும்பும் போது ஒரு பெண்ணின் கால் தெரிய, அதனை உறுத்து விழித்தவன் நடையைக் கட்டினான்.

அவன் செல்லும் வழியைப் பார்த்து மெய்மறந்து நின்றவள், அவனுக்கு பறக்கும் முத்தத்தை அளித்து, ”வாங்க மை லவ். உங்களுக்காகதான் நான் காத்திட்டு இருந்தேன். இனி நீங்க எங்கேயோ அங்கதான் நானும் இருப்பேன்” என்று வசனம் பேசியவளைப் பின்னிருந்து யாரோ தட்ட விருட்டென்று திரும்பி பார்த்தாள்.

அங்கே ஆதினி இருக்கைகளையும் மார்புக்கு நடுவே கட்டி புருவமுயர்த்தி, ”என்ன” என்பதுபோல் கேட்டாள்.

அவளோ அசடு வழிந்து ஈஈஈ என இளித்து வைத்தாள்.

விபுவை பார்த்த ஆதினி, “அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க” என்ற குரலுக்கு பின்னாடி திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஆதினியுடன் கூடவே ஒருவள் நிற்க, அது ஆதினிதான்  என்று புரிந்த நொடி பெருமூச்சொன்றை வெளியிட்டான்.

“அப்பாடி உன்ன பார்த்தேனே. இந்த ஊருல இருக்கிறவன் எல்லாம் என்னைய ஒரு மாதிரி பார்த்துட்டு போறாங்க” என்று சலித்தவனின் பார்வை ஆதினியின் பக்கத்தில் நின்று தன்னையே பார்ப்பவளின் மீது பதிந்தது.

“என்னாச்சி அண்ணா, எதுக்கு இவ்வளோ சலிச்சுக்கிறீங்க? ஆமா இங்க என்ன வேலையா வந்து இருக்கீங்க? நங்கை அத்தை, மாமா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்றவளின் பேச்சில் வலி நிறைந்திருந்தது. 

அதனை உணர்ந்தவன், “எல்லாரும் நல்லா இருக்காங்கடா தங்கச்சி. அப்புறம் உன்னோட ஆளுதான் உனக்கு துணையா இருந்து சிலதை சொல்லி கொடுக்க சொல்லி அனுப்பி இருக்கான். அப்புறம் நங்கை அம்மா இருந்த வீட்டை விரிவு படுத்தலாம்னு இருக்கான். அதையெல்லாம் பார்க்கதான்  வந்திருக்கேன்” என்று முடித்தான்.

“ஹோ” என்றதோடு முடித்துக் கொண்டாள்.

அதன் பின் மூவருமாய் நங்கை இருந்த வீட்டிற்கு சென்றனர். நங்கையின் வீட்டிற்கு வந்தே கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தாண்டி இருந்தது.

வீட்டிற்கு வரும்போது எல்லாம் அவளை அழகாக வரவேற்கும் நங்கையின் கைவண்ணத்தில் உருவான கோலங்கள்… ஆனால் இன்றோ முன் வாசல் வெறுமையாக இருப்பதைப் பார்க்க பார்க்க ஆதினியின் கண்கள் கரிக்க துவங்கியது.

அவளை ஆறுதலாக கை பற்றிக் கொண்டாள் துணைக்கு வந்தவள். அதன் பின் அவள் அங்கே சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டுக்கு சென்றவளுக்கு அழுகையாக வந்தது.

அறைக்கு வந்தவள் தலையணையை அணைத்து அழுது தீர்த்தாள்.

“உனக்கு ஏன் வசி என்னோட காதல் புரியாமல் போச்சி. நான் உன்ன நிறைய காயபடுத்தி இருக்கேன்தான். அது எதுவுமே நான் வேணும்னு செய்யலையேடா. தப்பு பண்ணா தட்டி கேக்கணும்னுதான் அத்தை சொல்லி கொடுத்தாங்க. ஆனா அது திரும்பி என்னையே வலிக்க வைக்கும்னு சொல்லி கொடுக்கலையேடா. ரொம்ப வலிக்குதுடா இங்க” என்று இதயத்தை தொட்டு காண்பித்தாள்.

***

இங்கே வசீகரன் இத்தனை நாட்கள் விபுவின் பொறுப்பில் இருந்த வேலையை அவன் கையில் எடுத்தவன் அதில் முற்றிலுமாக மூழ்கி போனான்.

கிராமத்திலிருந்து வந்தவனுக்கு, தலைக்கு மேல் வேலை இருந்தது. அதிலும் பண்டிகை வரவிருப்பதினால் அதற்கான பட்டியலை போட துவங்கினான்.

அதுமட்டுமில்லாமல் அன்னைக்காக ஒரு சுயதொழிலை துவங்க நினைத்து அதில் இறங்கினான். இத்தனை ஆண்டுகளாய் தனித்து வாழ்ந்து தன் வேலையை தானே செய்தவருக்கு, இப்போது தன்னிடமோ தந்தையிடமோ கேட்க கடினமாக இருக்கும் என்றுணர்ந்து இதனை செய்ய முடிவெடுத்தான்.

இப்படிபட்ட ஒரு பரிசினை அன்னைக்கு அவர் மறக்க முடியாத ஒரு நாளன்று தரவேண்டும் என்றெண்ணி அதற்கான வேலையையும் ஒருபக்கம் துவங்கினான்.

பாரிவேந்தர் நங்கை மைந்தனாக இருந்தும் கூட தன்னையே நினைத்து மருகுபவளை நினைக்க நேரமின்றி வேலை இருந்ததோ, அல்லது நினைக்க கூடாதென்று இப்படி வேலையை இழுத்துக் கொண்டானோ அது அவனே அறிவான்.

இப்படியே ஒருவாரம் கழிய, அவனுக்கு விளம்பரத்துரையில் அவனெடுத்த விளம்பரம் நன்வரவேற்பை கொடுத்திருக்க, அடுத்தடுத்ததாக விளம்பரங்கள் வரத் துவங்கியது.

அதற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி இருக்க, பேசுவதற்கே தயங்கி கொண்டு இருந்த தந்தைக்கும் அன்னைக்கும் தனிமை கொடுக்க நினைத்தான்.

அன்றிரவே, இரவு சாப்பிடுவதற்கு அமர்ந்திருந்த பாரியை பார்த்து, ”நான் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல பா. ஐம் ரியலி சாரி டேடி” என்று இரு கைகளையும் காதினுள் வைத்து கேட்க,

“தம்பி தப்பு செய்றவன்தான் மனிதன். அதுல இருந்து நாம என்ன கத்துக்கிட்டு மாத்திக்கிறோம்னுதான் இருக்கு மகனே” என்றார்.

“சரிப்பா  நான் கண்டிப்பா என்னோட தவறுகளை மாத்திக்க முயற்சி பண்ணுறேன்” என்றவன், ”ஒரு நிமிஷம் இருங்க பா. உங்க கண்ணு முன்னாடி நான் செஞ்ச தப்பை சரி பண்ணுறேன்” என்றவன் அவனது அறைக்குள் நுழைந்தான்.

வெளியே வந்தவன் ஒரு பெரிய பெட்டியை தூங்கிக் கொண்டு வந்து நின்றான்.

சமையலறையில் சமையல் செய்தபடி இருந்த நங்கை இருவரின் உரையாடலையும் கவனித்தபடி இருந்தார்.

“அம்மா… அம்மா… ஒரு நிமிஷம் இங்க வாங்களேன்” என்றழைக்க, 

“இதோ வரேன் பா” என்று அடுப்பை அணைத்து விட்டு வந்தார்.

‘இப்போ இவன் எதுக்கு அவளை கூப்பிடுறான்னு தெரியலையே’ என்று மனதுக்குள் நினைத்தவர், வெளியே யாருக்கோ என்பது போல் பார்த்திருந்தார்.

“சொல்லு வசி! எதுக்குப்பா என்னைய கூப்பிட்ட?” என்க. 

“ஒரு நிமிஷம்மா. மிஸ்டர் டாடி அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இந்த பொருள் உங்களுக்கானதுதான். உங்ககிட்ட இருந்து வேற வழியில்லாம எடுத்துக்கிட்டது. இப்போ அதை உங்க கையில சேர்க்க வேண்டிய நேரம் வந்திடுச்சி” என்று அவரை அழைத்து பக்கத்தில் நிற்க வைத்தான்.

“அம்மா இது அப்பாவுக்கு சொந்தமானது. இதை நீங்க அவருக்கிட்ட கொடுத்தா நான் சந்தோஷப்படுவேன் மா” 

“சரி பா” என்று அதனை பெற்றுக்கொண்டவர் பாரியை நோக்கி நடையிட்டு, “இந்தாங்க பா,ரி உங்களுக்கான பொருள்” என்று மென்னகையோடு கொடுத்தார். 

அவரும் அதே புன்னகையோடு அதனை வாங்கியவர், “என்னதுடா இது?” என்று கேள்வியாய் பார்க்க, 

“மா உங்க காருகாரர் கிட்ட சொல்லுங்க. இப்படி என்னைய கேக்குறது பிரிச்சு பாக்கலாம்னு” என்று சொல்ல,

“ஏன் நங்கை அதை உன் புள்ள என்கிட்ட நேரா சொல்லமாட்டானோ” என்க.

“மா அவரை திறக்க சொல்லுங்கம்மா, எனக்கு பசிக்குது” என வயிற்றை தேய்த்தான். 

“பசிக்குதுனா சாப்பிட்டு தர வேண்டியது தானே கண்ணம்மா. எதுக்கு இவ்வளோ அவசரமா தரணும் சொல்லு” என இருவரும் மாறி மாறி நங்கையை முன்னிறுத்தி பேச, நங்கைக்குதான்  யார் பக்கம் நிற்பது என்று குழம்பி போனார்.

இருவருமே நங்கை அறியாமல் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்தனர்.

“ஒன்னு இதை திறங்க, இல்லன்னா ரெண்டு பேரும்  சாப்பிடவாவது வாங்க. நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என்று சமைலறைக்குச் செல்ல பார்க்க, 

“மா நீங்க இருங்க, நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்” என்றவன் தந்தையை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றான்.

“சரி வா நங்கை, நாம இதை பிரிக்கலாம்” என்று அவரோடு சோஃபாவில் அமர்ந்தவர் அதனை பிரிக்கத் தொடங்கினார்.

“என்னவா இருக்கும் நங்கை? உனக்கு ஏதாவது கெஸ் இருக்கா சொல்லு?” என்றவாறே பிரித்திட,

“எனக்கு எதுவும் தோனலைங்க?” 

“சரி இரு பிரிச்சே பார்த்திடுவோம்” என்று அதனை முழுமையாக பிரித்தார்.

பிரித்தவரின் விழிகள் இரண்டும் புன்னகைக்க, நங்கையின் விழிகளிலோ நீர் கோர்த்தது.

அவருக்காக வசீகரன் தந்தது இத்தனை வருடங்களாக வீட்டின் முன்னில் மாற்றப்பட்டிருந்த சிறுவயது கால நங்கையின் புகைப்படமே.

வசீகரன் அன்று பாரியின் முன் எரித்தது அந்த போட்டோவின் நகலே ஆகும். அவனுக்குமே தன் தாயின் நிஜமாக நினைத்திருந்த அப்படத்தை எரிக்க பிடிக்கவில்லை. அதனாலே அப்படத்தை நகல் எடுத்தவன் அதனை விரிவு படுத்தி போட்டோவாக மாற்றியவன், அடுத்தநாளே அதனை மாட்டி எரிக்கவும் செய்தான்.

இன்றைய தினமாக அதனை கொடுத்தும் விட்டான் வசீகரன். பாரிக்கு நன்கு தெரியும் வசீகரனால் ஒருபோதும் அவன் தாயின் படத்தை எரிக்க முடியாது என்று.

அதனாலே அவரின் இதழ்களோடு விழிகளும் புன்னகைக்க, இது எதுவும் தெரியாத நங்கையோ பாரியின் காதலிலும் மகனின் அன்பிலும் மெய்சிலிர்த்து போனார்.

நங்கை கலங்குவதைக் கண்ட பாரி, “இந்த போட்டோ ஞாபகம் இருக்கா கண்ணம்மா?” என்று காதலோடு கேட்க, 

“இதை எப்படிங்க மறக்க முடியும். நான் உங்களோட வந்த புதிதுல எடுத்தது. இதை எடுக்கவே மாட்டேன்னு நான் எப்படி எல்லாம் அடம்பிடிச்சேன், அதை நினைச்சா இப்ப சிரிப்பா இருக்குங்க” என்று நங்கை சகஜமாய் பாரியோடு பேசினார்.

“ஆமா நங்கை. அப்போலாம் நீ ஒவ்வொன்னுக்கும் அடம் பிடிப்ப. அதை எல்லாம் நினைச்சா மனசுக்கு ஏனோ அப்படி ஒரு இதத்தை கொடுக்கும் தெரியுமா. இத்தனை வருஷமா என்னை உயிரோட வைச்சதே உன்னோட நினைவுகள்தான் கண்ணம்மா” 

“ஆனா இப்போ நான் உயிர்போட இருக்கேன்னா, அது பாரதியார் சொன்னது போலதான்  நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா” என்றார் கண்களில் காதல் மின்ன.

“இப்படி ஒருத்தரை எனக்கு கொடுக்கதான் நமக்கு இந்த கஷ்டம் போலங்க” என்று அவரை அணைத்து கொண்டார்.

இருவருமே அந்த ஏகாந்த மனநிலையை அப்படியே ரசித்தனர். ஒருவொருவர் அணைப்பிலே நேரத்தைக் கடத்தினர்.

வசீகரன் இருவரையும் புன்னகையோடு பார்த்துவிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.

அடுத்தநாள் காலையில்தான் இருவரிடமும் ஊருக்கு செல்வதைக் கூறினான்.

நங்கைக்கு மகன் ஊருக்கு செல்வது கடினமாக இருந்தாலும், தொழிலை கவனிக்க வேண்டுமல்லவா என்பதால் அவனை புன்னகையோடு அனுப்பி வைத்தனர்.

அடுத்து வந்த நாட்கள் யாவும் நங்கைக்கும் பாரிக்கும் அழகிய காதல் நாட்களாய் கடந்தது. இத்தனை வருடங்களாக ஒருவருக்கொருவர் பொக்கிஷமாய் பாதுகாத்த காதலை இருவருமே பரிமாறிக்கொள்ள துவங்கி இருந்தனர்.

நங்கைக்கு அவர்களது தொழில்களையும் சென்னையில் உள்ள முக்கிய இடங்களை எல்லாம் சுற்றிக்காட்டினார்.

இறுதியாக நங்கையை மெரினா கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் பாரிவேந்தர்.

கடலை பார்த்த நங்கை குமரியாக மாறிவிட, பாரியுடன் சேர்ந்து கடல் அலைகளில் காலை நனைத்து நனைத்து விளையாடினார்.

அதன்பின் மூச்சு வாங்கிட, ஒரு ஓரமாக இருவரும் அமர்ந்தனர்.

“பாரி நான் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் நினைச்சிட்டே இருந்தேன். அதை இப்போ கேக்கலாமா?”  

“உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு கண்ணம்மா. நீ என்ன வேணும்னாலும் கேளு, அதுக்கு நான் பதில் சொல்றேன்” என்றவர் அவரது கையை தன் கையோடு கோர்த்து கொண்டார்.

“அன்னைக்கு நீங்க எப்படி நம்மளோட மேரேஜ் சர்ட்டிபிகேட் அத்தனை பேர் முன்னாடியும் காட்டுனீங்க. நமக்குதான்  கல்யாணமே ஆகலையேங்க” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டார்.

“உனக்கு யாரு சொன்னது நமக்கு கல்யாணம் ஆகலைன்னு. நான் உனக்கு தாலி கட்டாம வேணா இருக்கலாம். ஆனா நீயும் நானும் சட்டப்படி கணவன் மனைவிதான்” என்றார் கையில் அழுத்தத்தை கொடுத்து.

“புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” 

“சரி சொல்றேன். நீயும் நானும் பிரிஞ்சதுக்கு காரணம் உங்க அத்தைதான். அவங்களுக்கு தெரியும் உனக்கு கல்யாணம் ஆகாதது. அது உன் மனசை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு எனக்கும் தெரியும். அப்போ நானும் சின்னவன் தானே எனக்கும் அவ்வளவு பக்குவம் பத்தலை. அப்புறம் குழந்தை பிறக்க நீயும் நானும் பிரிஞ்சிட்டோம். நான் கொஞ்சம் வசதியில வளரவும் முதல்ல நீ எங்க இருக்கிறன்னு கண்டுபிடிச்சேன்.

அப்போதான்  அங்க இருக்கிற எல்லாரும் உன்னைய எப்படி நடத்துறாங்கன்னு புரிஞ்சது. அதுக்கப்புறமும் என்னால அமைதியா இருக்க முடியல. அதான் என்னோட பண பலத்தை வச்சி. உனக்கு தெரியாமலே உன்ன அந்த நோட்ல சைன் பண்ண வச்சேன். அதுக்கப்புறம் நானும் சைன் பண்ணி ரெஜிஸ்டர் பண்ணிட்டேன்” என்றார் தன்னாலான விளக்கத்தை.

“இப்படி ஒரு காதல் கிடைக்க நான் என்ன தவம் செஞ்சேனோ தெரியலைங்க” என்று அவர் நெற்றியில் இதழ் பதித்தார் நங்கை.

***

விபுனனை தன் இடத்தில் முதலில் பார்த்ததும் சதாசிவத்திற்கு கோபமே வந்தது.

ஆனால் அவரை ஆதினி நிறுத்திவிட, அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

வசீகரன் சொன்னது போலவே முதல் வேலையாக அங்கு ஒரு சூப்பர்வைசரை வேலைக்கு நியமித்தான்.

அதன் பின் ஆதினிக்கு சூப்பர்வைசர் மூலம் இதனை எல்லாம் எப்படி ஆப்பரேட் செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி கொடுத்தான்.

ஆதினியுடன் அவளும் வருகை புரிந்து விட, அவளின் காதல் பார்வையும் விபுவை தொடர்ந்தது.

முதலில் சாதாரணமாகவே எடுத்த விபு, அவளின் காதல் பார்வை தன்னையே தொடர்வதை எண்ணி பயந்துதான்  போனான்.

நண்பன் தன்னை நம்பி இங்கே அனுப்பி இருக்க, அதற்கு எந்த பாதகமும் வராமல் பார்க்க வேண்டிய பொறுப்பில் இருந்தான் விபு.

வீட்டிலிருந்த பெரியவர்கள் அனைவரும் அபிநந்தன் பூங்குழலியின் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதற்கான வேலையில் பெரியவர்கள் இறங்கி விட, வேறெதையும் யோசிக்க நேரமில்லாமல் இருந்தது.

நாட்கள் குறைவாகவே இருந்த நிலையில், நல்ல நேரம் பார்த்து கல்யாணத்திற்கு புடவையும் தாலியும் வாங்க சென்றனர்.

வந்த இடத்தில் பூங்குழலி தன்னை நாசுக்காக தவிர்ப்பதை உணர்ந்த அபி, அவளை தனியே அழைத்துச் சென்றான்.

“இப்போ எதுக்கு என்னைய தனியா கூட்டிட்டு வந்தீங்க” என்று காட்டமாகவே கேட்க,

“நீ ஏன் என்னைய ஆவாய்ட் பண்ற சொல்லு? நம்ம காதல் கல்யாணம் வரைக்கும் வந்திருக்கு. ஆனா அதுக்கான சந்தோஷம் உன் முகத்துல இல்லையே அது ஏன்?” என்க. 

“நான் உங்கள காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே. நீங்க லீவுக்காக ஊருக்கு வந்தப்போ என்னைய காதலிச்சீங்க. என்னைய கல்யாணம் பண்ண, என்னோட ஆதினியோட மானத்தை அடகு வச்சிட்டிங்கல்ல” என்று அத்தனை ஆங்காரமாய் முடித்தாள்.

கடைசி வரியை சொன்னதை கேட்ட அபி ஆடிப்போய் விட்டான்.

“நீ என்ன சொல்ற? நான் என்ன பண்ணேன்? இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற” என்று பதறினான்.

“நடிக்காதீங்க அபி. உங்க நடிப்பை யார் வேணாலும் நம்புவாங்க. ஆனா நான் நம்பவே மாட்டேன். ஏன்னா நான் என்னோட ரெண்டு கண்ணால நீங்க அவங்க ரெண்டு பேரும் இருக்கிறது தெரிஞ்சு கதவடைச்சதை பார்த்தேனே” என்று அனல் தெறிக்க சொல்ல,

“உண்மையாவே எனக்கு அங்க வசி ப்ரோ இருக்கிறது தெரியாது குழலி. தெரிஞ்சிருந்தா அப்படி ஒன்ன செஞ்சி இருக்கவே மாட்டேன். ‌அதுவும் இல்லாம எனக்கு வேற வழி தெரியல. உன்ன மட்டுமே மனைவியா நினைச்சு வாழ்ந்த நான் வேறொரு பொண்ணை என் பக்கத்துல நிக்க வைக்க கூட விரும்பல. அதான் அப்படி செய்ய வேண்டியதா போச்சி” என்றான் தலை கவிழ்ந்தவாறே.

“என்ன காரணம் வேணாலும் சொல்லலாம் அபி. ஆனா அவதான்  எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்கிறா. அவ அத்தையும் இல்லாமல் அண்ணாவும் இல்லாம தனியா நிக்கிறா. அந்த நிலைமை அவளுக்கு வந்ததுக்கு காரணமே நான்னு நினைக்கும்போது கவலையா இருக்கு” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

ஆதினியை பார்த்த அபிக்கு கடினமாக போனது.

***

வீட்டிற்கு திரும்பி வந்த வசீகரன், வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டான்.

அன்றைய காலை பொழுதினில் வசி எங்கோ வேகமாக செல்ல, அவனை தடுத்து நிறுத்தியது அன்னையின் குரல்.

“வசி இவ்வளவு சீக்கிரமா எங்கப்பா போற?”

“அம்மா முக்கியமான விஷயமா நான் வெளிய போறேன் மா” என்க.

“அதுக்கு இவ்வளவு சீக்கிரமாவா? மணி எட்டு தான்டா ஆகுது. நீ இன்னும் டீ கூட குடிக்கில. ஒழுங்கா சாப்பிட்டுதான் போற” என்று மிரட்டல் விட்டார்.

“சரி மா. நான் சாப்பிட்டே போறேன்” என்று அமர்ந்து விட்டான்.

மகனோ, காதலனோ இருவரும் நங்கையை சரணாகதி என்று சரணடைந்து விட்டார்கள். இப்போதெல்லாம் நங்கை சொல்லே மந்திரம் போல் ஆனது மைந்தனுக்கும் காதலனுக்கும். 

வசீகரனுக்காக மணக்க மணக்க காபியை போட்டு அவனிடம் கொடுத்தவர், “இதை குடி, நான் சீக்கிரமே உனக்கு பிடிச்ச பொங்கல் செஞ்சி வைக்கிறேன் சாப்பிட்டு போவியாம்” என்க. 

“மா இருங்க. நாம எல்லாம் சேர்ந்து டீ குடிச்சதே இல்லையே. இன்னைக்கு சேர்ந்து குடிக்கலாமா” என்று ஆசையாய் மகன் கேட்க,

அவன் தலையை கோதிவிட்டவர், “சரி குடிக்கலாம். இரு நான் போய் எடுத்திட்டு வரேன்” என்று எழ எத்தனிக்க,

“இருங்கம்மா நான் போய் எடுத்திட்டு வரேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தான்.

அவனையே பார்த்தபடி நின்ற நங்கையை ஆதரவாக அணைத்தார் பாரிவேந்தர்.

அவரின் அணைப்பில் இருந்தவாறே, “நாம பிரிஞ்சி இருந்திருக்க கூடாதோங்க. நிறைய விஷயத்தை நம்ம பையன் இழந்துட்டாங்க” என்று கண்ணீர் விட,

“அழாத கண்ணம்மா…  இப்பவும் அவன் நம்ம பையன்தான் நம்ம மருமக ஆதினி வர வரைக்கும் நாம நம்ம இழந்ததை மீட்டு எடுக்கலாம் விடு” என்று அவர் நெற்றில் இதழ் ஒற்றினார்.

ஆதினி என்ற பெயரை கேட்டதும் ஆதினியின் ஞாபகம் அவரை வதைக்க தொடங்கியது.

“என்னோட அம்மு அங்க நான் இல்லாம எவ்வளோ கஷ்டபடுறாளோங்க. அவளுக்கு நான் போடுற காப்பின்னா ரொம்ப பிடிக்கும்” என்று முடிப்பதற்குள்,

”இவ்வளோ ஃபீல் பண்றவங்க என்னையும் கூட்டிகிட்டு வந்திருக்கணும். இப்படியா பையனோட ஊருக்கு வந்திடுறது” என்று ஆதினி வாசல் முன் நின்று கோபமாக கேட்டாள்.