O Crazy Minnal(19)

OCMRE-78b54119

O Crazy Minnal(19)

19

அந்த வெள்ளை நிற போர்டில் அவன் அந்த குடும்பத்தின் மூன்று தலைமுறையையும் தெளிவாக மைன்ட் மேப் போல் வரைந்திருந்தான். 

ரேவதியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய “இந்திரன்னா இந்திரன்தான்! செம!” என்றவள் எக்கி நின்று அவன் தோளில் கைபோட முயன்றவாறு பாராட்டுதலாகக் கூற 

 

முதலிலேயே குறிஞ்சி ஊருக்குச் செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை அவனைப் பொருத்தமட்டில் அவளது பாதுகாப்பே முதன்மையாகப்பட்டது எவ்வளவு தூரம் ? அதுவும் புது இடம் வேறு! அவள் எப்படிச் சமாளிப்பாள்?  என்று அவன் எண்ணவோட்டம் தாறுமாறாகப் பயணித்துக் கொண்டிருந்தாலும் அப்பொழுது அவர்களிடம் இருக்கும் ஒரே வழி அதுதான் என்பதை உணர்ந்து மனதைத் தேற்றியிருந்தான் தான் ஆனால் ரேவதி குதூகலிக்கவும் அதில் கடுப்பானவன்.

 

“அப்படியே  ஓடிரு! இப்போ என்கிட்ட நீ வலுவா வாங்கப் போற..” என்று காய 

அவள் இருந்த ஆனந்தத்தில் இதெல்லாம் அவளுக்கு ஒன்றுமே இல்லாதது போல  அங்கிருந்த ஒரு முக்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொண்டாள்.

 

அவளையே பின் பற்றியவளாகக் குறிஞ்சியும் ஒரு சேரை இழுத்தவள் அதைத் திருப்பிப் போட்டு இரண்டு கால்களையும் இரு பக்கமும் போட்டுக் கொண்டு அமர்ந்தாள், சுவாரஸ்யமான முகபாவத்துடன்! 

 

அமர்ந்தவள் சும்மாயிராமல் சேரின் மேல் இரு கைகளையும் வைத்துக் கொண்டு வலது கரத்தால் கன்னத்தைத் தாங்கியபடி அமர்ந்து இடது கரத்தால் ‘ஆரம்பி ஆரம்பி’ என்பதுபோல் சைகை செய்ய  

அவளது செயலில் பகிரங்கமாகவே தலையிலடித்துக் கொண்டவன் போர்டின்  மேல் தன் கவனத்தைச் செலுத்தினான்.

 

 எல்லாம் அவன் தொடங்கும் வரைதான் அவன் விவரிக்க தொடங்கிய மறுநிமிடம் அந்த அறையே நிசப்தத்தில் மூழ்கியது போலானது.

 

“நம்ம  குடும்பத்தோட மூத்தவங்க அதாவது  நம்ம பூட்டன்  பூட்டியாச்சில இருந்து ஆரம்பிக்கறேன்” என்றவனைக் கேள்வியாக நோக்கியவள் 

 

“அது என்ன பூட்டன்  பூட்டியாச்சி?” என்க அவனும் 

 

“பூட்டன்  பூட்டியாச்சின்னா நம்ம தாத்தாவோட அப்பா அம்மா, அது ஊருக்கு ஏத்தமாதிரி மாறும் சிலர் கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி சொல்லுவாங்க” என்று விளக்க அவளும் ஒரு “ஓ!” உடன் அமைதியாகிப் போனாள்.

 

“யதீந்திரன்.. பானுமதி

யதீந்திரன் தாத்தாக்கு இப்போ வயசு தொன்னூத்தேழுக்கு மேல ஆகுது, அந்த காலத்துலேயே  தொழில்முறையை மாத்தி நம்ம குடும்ப தொழில அடுத்தகட்டத்துக்கு கொண்டு போனவங்க. சின்ன சின்ன விஷயத்துல இருந்து பெரிய டீல்வர எல்லா பிரச்சனைக்கும் இவங்கட்ட தீர்வு இருக்கும்…

பானுமதி ஆச்சி இப்போ ஆச்சி இல்ல பத்து வருஷத்துக்கு முன்னாடியே நம்மள விட்டுப் போய்ட்டாங்க… கம்பீரமான மனுஷி தாத்தாவோட மாரல் சப்போர்ட் அவங்கதான்” என்றவன் ஒரு நொடி நிறுத்தி அவள் முகத்தைக் கவனித்தவன் பின் தொடர்ந்தான்.

 

“ஆச்சிக்கு  மூணு பசங்க, அதான்  உங்க தாத்தாக்கள்” என்று புன்னகைக்க அவளோ 

 

“எங்க தாத்தாஸா? அப்போ உனக்கு?” என்று கேட்டாள்      

 

“எனக்கும் தாத்தாஸ் தான் ஆனா இதுக்கடுத்து வர ரிலேன்ஷிப்லாம் மாறும் ஏன்னா நான் ரேவதியோட அப்பா சைட் நீ அம்மா சைட் சோ கன்ஃப்யூஸ் ஆகாம இருக்க நான் ஜென்ரலாவே சொல்றேன்” என்றுவிட்டு தொடர்ந்தான்.

 

“தேவேந்திரன் தாத்தா வசுமதி  ஆச்சி, இவங்கதான் பெரிய தாத்தா பெரியாச்சி.

தேவா தாத்தா தான் யதீந்திரன் தாத்தாக்கு வயசானதுக்கப்புறம் தொழில பாத்துக்கிட்டாங்க. இவங்களுக்கு ஓரே பொண்ணு, பேரு சாந்தமதி அவங்க உனக்கு அத்தை முறை வேணும்” என்று குறிஞ்சியைப் பார்த்து உரைத்தவன் தொடர்ந்தான்

 

“சாந்தமதிமா சுந்தரேஸ்வரன்பா இவங்களுக்கு இரண்டு பிள்ளைங்க பெரியவன் சுசீந்திரன்  படிச்சு முடிச்சிட்டு தூத்துக்குடில இருக்க ப்ராஞ்ச பாத்துக்கறான். சின்னவ கௌசல்யா  MCA   ஸ்டூடன்ட் “  என்றவன் ஆழ மூச்சிழுத்து விட்டுக் கொண்டு தொடர்ந்தான்.

 

“அடுத்து மஹேந்திரன் தாத்தா கோமதி ஆச்சி, மஹேந்திரன் தாத்தா அப்போ வெளி மாநிலங்கள்ள  தொடங்கியிருந்த தொழில கவனிச்சிட்டிருந்தாங்களாம். கோமதி ஆச்சி  ரொம்ப அமைதியான குணம்,  குடும்பத்துமேல உயிரையே வச்சிருக்கவங்க கோமதி ஆச்சி. இவங்களுக்கு இரண்டு பிள்ளைங்க.

பெரிய பையன் பேரு..” என்று ஆரம்பித்தவன் ரேவதியைப் பார்த்துவிட்டு குறிஞ்சியின் முகத்திலேயே கவனம் பதித்தவாறு தொடர்ந்தான்

 

“பெரிய பையன் பேரு.. ஜிதேந்திரன்” என்றதும் உள்ளுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு வந்துபோக அதை ஒதுக்கியவளாக முகபாவத்தை மாற்றாமல் அவன் சொல்வதில் கவனம் பதித்தாள் குறிஞ்சி.

 

“இரண்டாவது பொண்ணு, அவங்க பேரு வளர்மதி!” என்ற மறுநொடி ரேவதியை அவள் திரும்பிப் பார்க்க அவளோ கண்களில் குறும்பு மின்ன இவளைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

 

“வளர்மதிமா சந்திரன்பா, அதாவது என் சித்தி சித்தப்பா” சிறு புன்னகையுடன் அடுத்ததிற்குத் தாவிவிட்டான்.

 

“அடுத்தது விஜயேந்திரன் தாத்தா செல்வி  ஆச்சி, விஜயேந்திரன் தாத்தா தேவா தாத்தாக்கு துணையா இருந்து தொழில பாத்துக்கிட்டாங்களாம்,  விஜயன் தாத்தாக்கும் செல்வி ஆச்சிக்கும் பெரிய தாத்தான்னா அவ்வளவு மறியாதை.  

இவங்களுக்கு ஒரே பையன், அவங்க பேரு அமரேந்திரன்.

அமரேந்திரன் விமலா, உனக்கு சித்தி சித்தப்பா. இவங்களுக்கு இரண்டு பிள்ளைங்க மூத்தவன் ராகவேந்திரன், ரேவதி வயசுதான் அவனுக்கும் B.Sc பண்றான். இரண்டாவது கார்த்திகா உன்னவிட சின்னவ ஸ்கூல் படிக்கறா,  லெவந்த் படிக்கறா” என்று ஒரு பெருமூச்சோடு முடிக்க அவளோ

 

“அடேங்கப்பா! ஒரு குடும்பத்துல எத்தனை இந்திரன்? எத்தனை மதி?” என்று வியக்க அவனோ

 

“இந்திரன் நம்ம குடும்ப பேரு யாழி! மதி, அது இரண்டாவது தலைமுறையோடயே நின்னுருச்சு, ஆனா லீலா ஆன்ட்டிக்கும் அதே பேரு ஆச்சர்யம்தான்!” என்று முடித்தவன்  சற்று நிதானித்து பின்

 

“இப்போ சொல்லு, இத்தனை பேர உன்னால சமாளிக்க முடியும்? இதுல என் அம்மா அப்பா வேற..” என்றவன் இழுக்க அவளோ 

 

“அவங்க சென்னைலதானா இருக்காங்க?” என்றாள் கேள்வியாக  

“ஆமா, ஆனா லீவுக்கு அங்கதான் வருவாங்க” என்றவன் அவளைக் கேள்வியாக நோக்க அவளோ ‘நான் எடுத்த முடிவு எடுத்ததுதான்!’ என்றாள் பார்வையாலே.

 

‘என்ன பார்வைடா இது!’ என்றெண்ணியவன் வெளியே “காஃபி கொண்டு வரேன்” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றிருந்தான்.

 

அவ்வளவு நேரம் அமைதி காத்த ரேவதி திடீரென குறிஞ்சியிடம்  “ஏன் யாழி, மாமா கொஞ்சம்கூடவா கண்டுபிடிக்கல?” என்று கேட்க இவளோ,

 

‘எத?’ என்று பார்த்துவைத்தாள்.

 

“இந்திரன?”

“ஓ! அதுவா மிஸ்டர். நரி எங்ககிட்ட சொன்னதே வேற அவர் சென்னைல இருக்கற அப்பா அம்மா பத்தி சொன்னாரே தவிர மத்ததெல்லாம் அப்படியே மறச்சிருக்காரு!”  என்க 

 

“ஏன் அவங்க பிஸ்ன்ஸ பத்தி சொல்லலயா?”

 

“இல்லையே டிபார்ட்மென்டல் ஸ்டோர பத்தி சொன்னானே தவிர இந்த இந்திரன் & கோ பத்தி மூச்சுக்கூட விடல” என்க

 

ட்ரேயில் காஃபி கப்புகளுடன் அங்கு வந்தவன் அவளிடம் “ என் தலைய உருட்டுனதுலாம் போதும், இப்போ என்ன ரீசன் சொல்லிட்டு நீ கிளம்புவ?” என்று அடுத்த குண்டை அமைதியாக தூக்கி வீசினான். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!