O Crazy Minnal(21)

FB_IMG_1575986954514-7f42b412

21

கருமேகங்களுக்கிடையே கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள் நிலவுப் பெண்.

நிசப்தமான இரவு வேளையில் அமைதியை குலைக்கும் வண்ணம் சீறிக் கொண்டிருந்தது அந்த ஸ்லீப்பர் பஸ்.

என்னதான் தன் வேகத்தைச் சாலையில் காட்டிக் கொண்டிருந்தாலும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளுக்கு எந்தவித அசௌகரியத்தையும் கொடுக்காத வண்ணம் சீராகச் சென்று கொண்டிருந்தது அந்த பேருந்து.

 

ஸ்லீப்பர்  பஸ் என்பதால் வலது பக்கமிருந்த இரண்டு இருக்கைகளையும் ரேவதியும் குறிஞ்சியும் எடுத்துக் கொள்ள இடதுபுறம் கீழிருக்கையில் நரேந்திரன்.

அவர்களிருவரும் உறங்கிவிட்டனர் போலும், நரேந்திரனக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

எப்படிப் பிடிக்கும்?

பனி சிந்தும் இரவும், அவனுக்கு பிடித்த இளையராஜாவும்.. தனிமையும்..

அது வரமல்லவா?

அதுமட்டுமா? அவன் யாழியும்தான்!

இன்னும் இன்னும் அவனை வியக்க வைத்து கொண்டே இருக்கிறாள்! 

அவளை எண்ணுகையில் தாமாக ஒரு புன்னகை வந்து அவன் இதழில் தூளிகட்ட மனமோ  அவளையே ‘சொர்ணாக்கா!’ என்று சீண்டியது.

எப்படியோ அதையும் இதையும் சொல்லி சம்மதம் வாங்கிவிட்டாளே? சரியான ஆள்தான்! என்று தோன்றினாலும் இன்னொரு மனமோ ஆனாலும் அவள் அதற்காக பொய்யுரைக்கவில்லையே என்று இடித்துரைத்தது.

 

ஆம்! அவள் பொய் சொல்லவில்லைதான், ஆனால் அதே சமயம் உண்மையையும் சொல்லவில்லை!

 

அன்று காலையிலேயே நரேந்திரனுடன் வாக்குவாதம் ஆகிவிட அவனோ ‘அப்புறம் உன்னிஷ்டம்!’ என்று சென்றுவிட்டான்.

பின்னே அவள் சொல்லப்போவதாகக் கூறிய காரணம் அப்படி!

அவ்வளவு நேரமாக எப்படி எப்படியெல்லாமோ யோசித்தவர்களுக்குக் கடைசியில் சுவரில் முட்டிக் கொண்ட நிலைதான்.

 

எதை எடுத்தாலும் அதில் ஒரு ஓட்டை! கடைசியில் வெறுத்தவனாக அவனே “பேசாம உண்மையவே சொல்லிட்டு போயிரலாம் போல” என்று புலம்ப அவ்வளவு நேரம் தன் சிந்தனையில் சிக்கிக் கொண்டிருந்தவளோ திடீரென 

 

“வ்ஹாஹ்!” என்று கத்திவிட இவனோ  “நீ ஏன் இப்போ வாந்தி எடுக்கற?” என்று கடுப்பாக மொழிந்தான். 

மற்ற நாட்களில் என்ன செய்திருப்பாளோ? ஆனால் இன்று அவள் அதைக் கவனிக்கக் கூடவில்லை என்பது அவளது அடுத்த வாக்கியத்தில் அவனுக்கு வெட்ட வெளிச்சமாயிற்று!

 

“செம்ம்ம்மம! ஐடியா நரி! “ என்றவள் எழுந்து கொள்ள அவனுக்கோ ‘இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இஞ்சி இனிக்குது(பாராட்டுது)’ என்ற குழப்பத்துடனேயே அவளிடம் கேட்டான்.

 

“அப்படி என்ன சொன்னேன்?”

 

“அதான் நரி, உண்மைய சொல்றது! அதுதான் இருக்கதுலேயே பெஸ்ட்டூ!” என்க அவனோ ‘லூசாப்பா நீ?’ என்று பார்த்து வைத்தான்.

“லூசா யாழி நீ?” என்றவன் சற்று அதட்ட அவளோ 

 

“இதுதான் கரெக்ட்! நான் முழு உண்மையும் சொல்லல, முழு பொய்யும் சொல்லல்ல, எது தேவையோ அத சொல்லிக்கறேன்!” என்க அவனோ அவளை நம்பாமல் பார்த்தான். 

 

“இது சரிவராது” என்று அவனும் 

 

“இதுதான் சரி” என்று அவளும் வாக்கு வாதத்தில் இறங்கக் கடைசியில் “என் அப்பூவ பத்தி எனக்கு தெரியும்!” என்றவளின் அழுத்தமான குரலில் அவன்தான் விட்டுக் கொடுக்கும்படி ஆயிற்று.

 

‘என்னவோ பண்ணு’ என்று அவன் கிளம்பிவிட அவளோ ஜிதேந்திரனின் வருகைக்காக  காத்திருந்தாள்.  

என்றும் போல் அன்றும் உற்சாகமாக வீடு வந்த ஜித்தேந்திரனுக்கு அதைவிட உற்சாகமாகவும் கண்களில் ஆர்வமும் எதிர்பார்ப்பும் மின்ன அவரை வரவேற்ற மகளைக் கண்டு ஆச்சரியம்! பின்னே அவளெல்லாம் ‘ஏக் மார் தோ துக்கடா’ ரகம் அதான்பா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு!

 

எப்படிப்பட்ட விஷயமென்றாலும் சரி, பட்டென்று கேட்டுவிடுவாள் இந்த தயங்கித் தயங்கி தரையைப் பார்ப்பதெல்லாம் அவள் வரலாற்றிலேயே கிடையாது!

அப்படிப்பட்டவள் கண்களில் ஆர்வத்தையும் அமைதியையும் காணவும் அவருக்கே ஆச்சரியம்! மற்றவர்களிடமே இப்படி என்றால், அவரிடம் சொல்லவா வேண்டும்?

அவர்களிருவரும் சேர்ந்து விவாதிக்காத விஷயமே கிடையாது. புவன்கூட சில சமயங்களில் கேட்பதுண்டு ‘அப்பாக்கிட்ட போய் எப்படி இதெல்லாம் டிஸ்கஸ் பண்ணுவ?’ என்று ஆனால் இவளுக்கோ 

 

‘அப்பாக்கிட்ட பண்ணாம வேற யார்கிட்ட பண்ண?’ என்றுவிடுவாள். அவளுக்கு எல்லோரிடமும் நெருக்கம் இருந்தது எல்லா உறவுகளையும் அழகாகக் கையாண்டாள். 

தகப்பனைப் பார்த்து வளர்ந்தவள் அல்லவா? அவரைப் போலவே இவளும் கிடைத்த உறவுகளனைத்தையுமே போற்றி பாதுகாத்தாள். இனியும் காப்பாள்!

ஓடி வந்து கதவைத் திறந்த மகளின் தலையை செல்லமாகக் கலைத்தவர் ஒரு அழகான சிரிப்புடன் அவர் அறைக்குச் சென்றார்.

உள்ளே நுழைந்தவரிடம் இருந்து பையனயை வாங்கிக் கொண்டவள் அதை அறையில் வைத்து விட்டு அவர் வரவிற்காகக் காத்திருந்தாள்.

 

வழமைபோல கை கால் கழுவி முகம் துடைத்து உடை மாற்றியவர் குளியலறையிலிருந்து வெளியே வர அங்கிருந்த குறிஞ்சியைக் கண்டு அவர் ஒன்றும் ஆச்சரியமெல்லாம் அடையவில்லை.

அவருக்குத் தெரியும் அவள் வருவாள் என்று!

உள்ளே நுழையும் பொழுதே கண்டு கொண்டாரே! 

பொறுமையாக வந்து அவளருகில் அமர்ந்தவர் மென்மையான குரலில் வினவினார்.

 

“யாழிமாக்கு என்ன சொல்லனும்?” என்ற மறுநொடி கண்களில் மின்னல் வெட்ட அவரை நிமிர்ந்து பார்த்தவள் அவரிடம் 

 

“செம! எப்படி கண்டுபுடிச்ச?” என்று துள்ள அவரோ 

 

“ம்ம்ம் அதான் மூஞ்சிலேயே எழுதி ஒட்டிருக்கே” என்றார் கேலியாக பின் டக்கென சீரியஸ் மோடிற்கு மாறியவர் அவளிடம்

 

“சொல்லு கண்ணா என்ன சொல்லனும்?” என்று கேட்டார்.

 

“சொல்ல வேணாம்.. கேட்கனும்” என்று அவள் புதிராய் பேச அவரோ

 

“சரி கேளுடா!” என்றார் ஆனால் அவள் கேட்டப்பின்? 

“அப்பூ! நான் இந்த லீவுக்கு நரிக்கூட அவன் வீட்டுக்கு போய்ட்டு வரவா?” என்க தகப்பனாரின் முகத்தினிலோ குழப்பத்தின் சாயல்! அதைக் கண்டு கொண்டவளாக அவளே தொடர்ந்தாள்

 

“அப்பூ ரேவ்ஸ் சொல்லிருக்கேன்ல நரேனோட கஸின் ஊர்ல இருந்து வந்துருக்கான்னு, அவங்களும் வராங்க..” என்க மகள் சொல்ல வருவது புரிபட அவரோ 

 

“அட அதுக்கில்லடா.. நரேன் நல்ல பையன்தான் அதுக்காக யோசிக்கல…” என்றவர் சற்று இறங்கிய குரலில் பேச அவளுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

பின்னே அவளுக்குத் தெரியாத அவள் அப்பூவை பற்றி அவர் என்று ஆண் பெண் என்று பிரித்துப் பேசியிருக்கிறார், என்றுத் தன் மேலே கொஞ்சம் கோபம் வந்தது அவளுக்கு 

 

“இல்லப்பூ உன்ன போய் அப்படி சொல்வேனா? நான் ஜஸ்ட் சொல்றேன்” என்றவள் அவர் இன்னும் தெளியாததைக் கண்டு

 

“ப்ளீஸ் அப்பூ! பத்தே  நாள்தான், இங்க இருக்கற சென்னை, நீ என்ன கோவாக்குலாம் தனியா அனுப்பின..” என்க அவரும் அதையேதான் நினைத்துக் கொண்டிருந்தார் இன்று நேற்றல்ல பி.யூ.சிலேயே  தனியாக நண்பர்களுடன் கோவா சென்று வந்தவள்தான். 

 

ஆனால் அதுவும் காலேஜிலிருந்து கூட்டிச் சென்றார்கள்தான் இருந்தும் தனியாகச் சமாளித்தவள்தானே, பின் ஏன் இப்பொழுது யோசிக்கிறோம்? என்று தோன்ற அதற்கு விடையாய் அவளே எதிரில்!

 

கொஞ்ச நாளாகவே அவள் எதையோ மனதிற்குள் போட்டு உலப்பிக் கொள்கிறாளோ? என்று அவருக்கு சந்தேகம், அவள் சிரிப்பிற்குப் பின் சிணுங்குவதை அவர் அறியாமல் இல்லை!

 

எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்பவள், இதையும் பகிர்வாள் என்ற நம்பிக்கையுடன்தான் அவர் அமைதி காத்தார்.

ஆனால் திடீரென மகள் வெளியூர் பயணம் என்று அனுமதி கேட்கவும் அவர் அதை எதிர் பார்த்திருக்கவில்லை, இப்பொழுது மகள் மேல் முழு நம்பிக்கை உள்ளது, அவள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று.

அதிகம் இதுவரை அவரிடம் அவள் எதுவும் கேட்டதில்லை இன்று ஆசையாய் வந்து தன் முகம் பார்த்து நிற்கிறாள்.

 

அவருக்கு நரேந்திரன் மீது நம்பிக்கை இருந்தது அதனால்தான் அவனை தன் குடும்பத்தில் ஒருத்தனாய்  நடத்தினார். அதைவிட அவருக்கு அவரது யாழியின் மேல் டன் கணக்கில் நம்பிக்கை உள்ளது எந்தவிதமான சூழ்நிலையையும் சமாளித்துவிடுவாள் என்று.

 

இருந்தும் ஏனோ மகளது இத்தனை நாள் வாட்டமும், இன்றைய ஆர்வமும் அவரை ஆட்டி படைக்கக் கடைசியில் வென்றது என்னவோ பாசம்தான்!

அவரது யாழியவள்! அவள் கேட்டு இல்லை என்றுவிடுவாரா? அவளும் வேண்டாத ஒன்றைத்தான் கேட்டு விடுவாளா? என்று தோன்றிவிட சில விடயங்களை தெளிவுபடுத்திக் கொண்டவர் சம்மதித்து விட்டார்.

 

முழுக்க முழுக்க அவளின் விருப்பத்திற்காக. மகளின் மனதில் கிடந்து உருத்தும் விஷயம் இந்த பயணத்திலாவது கரைந்துவிடாதா என்று. 

தன் சம்மதத்தை உரைத்தவர் அவரே சென்று லீலாவிடமும் பேச முதலில் யோசித்தவரை பின் ஜிதேந்திரனே பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

 

அஷ்மிதாவின் Company Secretaryship கோச்சிங் அவளுக்கு வசதியாக போயிற்று! மூடியிருந்த கண்ணாடி யன்னலில் தலை சாய்த்து பாட்டுக் கேட்டு கொண்டிருந்தவளின் ஃபோனில் சார்ஜ் இறங்கிவிட ‘ட்டிங் ட்டிங்’ என்ற சத்தமே அதை நினைவூட்டியது.

 

பையிலிருந்து பவர் பேங்க்கை எடுத்தவள் ஃபோனுக்கு போட்டுவிட்டு பக்கத்திலிருந்த ரேவதியைப் பார்க்க அவளோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

திரையை விலக்கியவள் நரேந்திரனின் இருக்கையைப் பார்க்க அவனோ திரையை ஒருபக்கமாக இழுத்துவிட்டு விட்டு காதில் இயர் ஃபோன்ஸையும் மாட்டிக் கொண்டு யன்னல் ஓரத்தில் தஞ்சமடைந்திருந்தான்.

‘இவன் இன்னும் தூங்கலையா?’ என்று பூனை பாதம் வைப்பதுபோல் மெல்ல மெல்ல நகர்ந்தவள் ரேவதியின் தூக்கம் கெடாத வண்ணம் இவனிடம் வந்திருந்தாள்.

 

“நீ இன்னும் தூங்கலையா?” என்ற குரலில் திடுக்கிட்டவன் திருப்பிப் பார்க்க முழுக்கைச் சட்டையை இன்னும் கீழே இழுத்துவிட்டவாறு நின்று கொண்டிருந்தாள் குறிஞ்சி.

 

 “ம்ஹூம்! ட்ராவல் அப்போ தூங்கமாட்டேன், ஆமா உனக்கு தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.

 

அவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தவள் அவனது கேள்வியில் அந்த சீட்டில் அவனுக்கு எதிரே சம்மணமிட்டு அமர்ந்தவாறு இரு கைகளையும் பரபரவென தேய்த்தவள்

 

“இல்ல.. ஐம் எக்ஸைட்டட்!” என்றாள் கண்களில் பூ பூக்க

புன்னகையுடன் தலையாட்டியவன் “ரேவதி?” என்றிழுக்க அவளோ

 

“அதெல்லாம் மேடம் அப்போவே கொறட்டைய போட்டாச்சு!” என்றாள்

பின்னே அவன் பஸ்ஸில் டிக்கெட் பதிவு செய்துவிடலாம் என்ற போது அதை ஒரே மூச்சாக மறுத்தவளாயிற்றே!

 

“இப்ப சொன்னாக்கூட செல்வமண்ணா காரெடுத்து வந்துருவாங்க, எதுக்கு பஸ்? நம்ம காரே இருக்கும் போது!” என்றவள் நிற்க 

 

“நியாயப்படி உங்களலாம் லோட் வேன்லதான் ஏத்தனும்!” என்று கடுப்படித்தான்.

 

குறிஞ்சியோ இதில் எதிலும் தலையிடவில்லை அவளோ ‘நமக்கு ஊருக்கு போனா போதும்!’ என்ற மனோபாவத்தில் இருந்தாள். 

என்னதான் ஜிதேந்திரன் அவனை நம்பி அவர் மகளை அவன் பொறுப்பில் அனுப்பி வைத்தாலும், காரில் பயணிப்பதைவிட பஸ்ஸில் தான் அவருக்குச் சற்று நிம்மதி தரும் என்று நம்பினான். அதேபோல் அவரும் புன்னகை முகமாகவே வழியனுப்பி வைத்தார். 

 

ம்ம்ம் என்ற பெருமூச்சுடன் எதிரில் இருந்தவளைப் பார்த்தால்..