வெண்பனி 1

IMG-20220405-WA0023-208e335e

வெண்பனி 1

பனி 1

இயற்கையின் அதிசயங்கள் பல உண்டு இந்த உலகிலே

உன் மழழையின் சிரிப்பின் முன்னாள்

அனைத்தும் தோற்று போகும் அதிசயம் என்னவோ?

காலை முதல் மாலை வரை தன் வெட்ப கதிர்களால் பூமியை சூடாக்கிய, ‌சுட்டெரிக்கும் சூரியன், தனது நீண்ட நெடிய  பயணத்தை முடித்துக்கொண்டு ஓய்விற்கு செல்ல, சூடான பூமியை குளிர்விக்கவென, பனி நிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்த இரவு நேரம்.

புது வருடம் தொடங்கி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்து, அவரவர் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியும் இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. 

அந்த ஊரில் உள்ள சில ஜீவராசிகள், தங்கள் பணியை முடித்துக் கொண்டு துயில் கொண்டிருந்த நேரம். சில ஜீவராசிகள், தங்கள் இரவு நேர பணியை மேற்கொண்டிருந்த நேரம் அது.

மருந்துகளின் நெடி மூக்கை துளைக்க, விறுவிறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது அந்த அரசு சுகாதார மருத்துவமனை. எங்கு திரும்பினாலும் வலியின் அனத்தல்களும், காணும் திசையெங்கும் மரண ஓலங்களும், பார்ப்பவர் மனதை உறைய வைக்கும். 

உலகையே ஒரு ஆட்டு ஆட்டி, பல உயிர்களை பறித்து, அனைவரின் மனங்களை மட்டுமில்லாமல் வாழ்க்கையையும் ஸ்தம்பிக்க வைத்த கொரோனா தொற்றுநோய், நம் தமிழகத்திலும் படு வீரியமாக பரவிக்கொண்டிருந்தது. சிலருக்கு மரணத்தையும், பலருக்கு மரண பயத்தையும் அளித்திருந்தது இந்த நோயின் தாக்கம். 

என்னதான் நோயின் பயம் மனதை ஆக்கிரமித்திருந்தாலும், தங்களை சுற்றி நடக்கும் குற்றங்கள் குறைந்ததா? மக்கள் மனதில் உள்ள வஞ்சங்கள் குறைந்ததா? என்பது இன்னும் கேள்விக்குறியே. அப்படிப்பட்ட வஞ்சத்தில் மாட்டிக்கொண்ட ஒரு உயிரின் பயணம் இது.

அங்கு இருக்கும் சலசலப்பிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல், சற்றுத் தள்ளி இருந்த குழந்தைகள் பகுதி, பெரும் அமைதியை தத்தெடுத்து இருந்தது. அந்த அமைதியை கிழித்துக்கொண்டு, ஒரு இளம் குரல் வீறிட்டு கத்தத் தொடங்கியது. பிறந்து இரண்டு நாட்களே ஆன மழலையின் அழுகை அது.

ஆம்! அந்த குழந்தை பிறந்தது புத்தாண்டு தினத்தன்று.

குழந்தை என்றாலே அழகுதான். அதிலும் தாயின் கொள்ளை அழகை, குத்தகைக்கு எடுத்து இருந்தது இந்த சின்ன சிட்டு. அந்த அழகு மலர் செண்டு, ஒரு மிருதுவான பூந்துவாலையில் சுற்றப்பட்டு இன்குபெட்டரில் அழுது கொண்டிருந்தது. 

ஆம்! அந்தக் குழந்தை இருப்பது இன்குபெட்டரில். விதிவசத்தால் முப்பத்தி மூன்று வாரங்கள் மட்டுமே தன் அன்னையின் கருவறையில், அவளது பாதுகாப்பில் நிம்மதியாக துயில் கொண்டிருந்த அந்த சின்ன சிட்டு, அறுவை சிகிச்சையின் உதவியுடன் குறை பிரசவத்தில் பூமியில் ஜனித்தாள். 

நாற்பது வாரங்கள் கருவில் வளர வேண்டிய குழந்தை, முன்கூட்டியே பிறந்ததால் அதன் முழு வளர்ச்சிக்காக, குழந்தையை இன்குபேட்டரில் வைத்திருந்தார்கள்.

அந்த அழுகை எதற்காக? பசியில் வந்த அழுகையா? தனக்கு உயிர் அளித்த ஜீவனின் பிரிவு கொடுத்த அழுகையா? தன் உறவை இழந்து, இந்த உலகை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்ற கவலையில் வந்த அழுகையா? இனி விதி, தனக்கு என்னென்ன வைத்து காத்திருக்கிறதென்று, எதிர்காலத்தை குறித்த பயத்தில் வந்த அழுகையா?

†††††

அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில், அமர்ந்திருந்த ஒரு ஜீவனின் செவிகளை தீண்டியது, குழந்தையின் அழுகுரல். அந்த அழுகுரலை கேட்க முடியாமல், பரிதவித்துப் போய், குழந்தை இருக்கும் அறையின் வாசலையே பார்த்திருந்தது அந்த ஜீவன். 

குழந்தையின் அழுகை ஏற ஏற இந்த ஜீவனின் நிலையோ பெரும் கவலைக்கிடமானது. தன்னால் ஒன்றும் செய்ய முடியாத இக்கட்டில், தான் மாட்டிக் கொண்டிருப்பதால் தன் மேலயே கோபம் பற்றி எரிந்தது. ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பது மனதின் ரணத்தை குத்தி கிழித்தது.

தன் இயலாமையை நினைத்து தன்மீதே கோபம் எழுந்தது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அனைவரையும் அடித்து நொறுக்கும் வெறி ஏறியது. தான் செய்த தவறின் குறுகுறுப்பு மனதை போட்டு குடைந்தது. 

தன்னையே வெறுத்த அந்த உயிர், தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து, தன் ஆவி அனைத்தும் வற்றி போக சோர்ந்த நடையுடன் சென்றது. அது உடல் சோர்வா? உள்ள சோர்வா?

சற்றுத் தள்ளி இருந்த ஜன்னலின் வழியே தெரிந்தது, வானில் அமைதியாக பவனி வந்த குளிர் நிலவு. அந்த ஜீவனின் கால்கள் தானாக அந்த ஜன்னலை நெருங்கியது. வைத்த கண் வாங்காமல், உள்ளத்தின் வலியோடு அந்த நிலவையே வெறித்திருந்தது அந்த ஜீவன். ‘இனி இப்படி ஒரு அமைதி, மீண்டும் தன் வாழ்வில் தனக்கு கிடைக்குமா?’ என மனம் மருகி கொண்டிருந்தது.

இங்கு ஒரு உயிர் இவ்வாறு உருக, சற்றுத் தள்ளி இருந்த மரத்தின் பின் மறைந்திருந்தது ஒரு உருவம். அது கண்ணீருடன், குழந்தை இருக்கும் அறையின் வாசலிலேயே விழி பதித்திருந்தது. 

‘ஒரே ஒருமுறை குழந்தையை பார்த்து விட மாட்டோமா?’ என்ற ஏக்கம் அதன் சிவந்த கண்களில் தெரிந்தது. தக்க தருணத்திற்காக கொக்கு போல் நீண்ட நேரமாக காத்திருந்தது அந்த உருவம். 

அப்போது தான் அதன் செவியை தீண்டியது குழந்தையின் அழுகை. தன் உயிர் உருக, தன்னை மறந்து, தன் சூழ்நிலையை மறந்து, குழந்தை இருந்த அறையின் வாயிலில் வந்து நின்றது.

சரியாக அந்த நேரம் தான் நாற்காலியில் இருந்த ஜீவன் அங்கிருந்து எழுந்து சென்றது. தன்னை காணாமல் சென்ற அந்த ஜீவனை பார்த்து, மனம் வெதும்பியது அந்த உருவத்திற்கு. பிறகே அதன் மூளை வேலை செய்து, ‘அந்த ஜீவன் மட்டும் தன்னை பார்த்திருந்தால், எவ்வளவு பெரிய விபரீதங்களை சந்திருக்க வேண்டும். அப்படி நிகழாமல் போனது தான் வணங்கிய ஈசனின் கருணையே.’ என நினைத்தது.

சிறிது யோசித்த பின் தன் தலையிலேயே அடித்து கொண்டு, ‘அந்த சிவன் மனம் வைத்திருந்தால், தனக்கு இந்த நிலையே வந்திருக்காது’ என மனம் இடித்துரைத்தது. தன்னை நொந்து கொண்டே, தன் நிலையை மறந்து  ஜன்னலின் அருகில் நின்ற ஜீவனை, தன் சிவத்த விழிகளால் படமெடுத்து கொண்டிருந்தது அந்த உருவம்.

கண்கள் படமெடுக்கும் வேலையை செவ்வனே செய்தாலும், அதன் முழு உணர்வும் குழந்தை இருக்கும் அறையிலேயே இருந்தது.

அப்போது தான் குழந்தையின் அழுகுரல் கேட்டு, ஒரு செவிலியர் அந்த அறையில் வேகமாக நுழைந்தார்.

குழந்தையின் கதறல் அவரின் சுற்றத்தை மறக்கவைத்தது போல, வெளியில் நின்ற உருவத்தை கவனிக்கவில்லையா? அவசரத்தில் கதவடைக்க மறந்து சென்றார்.

‘காத்திருந்த தருணம் தனக்கு கிடைத்துவிட்டது. இதை சரியாக பயன் படுத்த வேண்டும்.’ என முடிவு செய்து, யாரும் தன்னை பார்க்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே, திறந்திருந்த கதவின் வழியே உள்ளே நுழைந்தது. ‘அந்த செவிலியர் தன்னை கண்டு விட கூடாது’ என அங்கிருந்த திரையின் பின்னால் மறைந்து கொண்டது.

அவர் லாக்டோஜன் பவுடரை சூடு தண்ணீரில் கலந்து, அதை ஆறவைத்து அந்த மலர் செண்டின் செப்பு இதழில் சிறிது சிறிதாக வழங்கினார். அவர் விழிகள் வாஞ்சையோடு அந்த மழலையை பார்த்திருந்து. ‘பிறக்கும் போதே இவ்வளவு பெரிய தண்டனையை, ஆண்டவன் உனக்கு குடுத்திருக்கக் கூடாது’ என அந்த குழைந்தைக்காக அவர் மனம் வருத்தம் கொண்டது. அவர் முகத்தில் தான் அத்தனை கனிவு.

அந்த மத்திய வயது செவிலியருக்கு, தன் கையில் இருக்கும் அந்த மலர் செண்டை அவ்வளவு பிடித்தது. ‘ஒரு குழந்தையை சுமக்கும் பாக்கியத்தை இறைவன் தனக்கு வழங்கவில்லை’ என்ற கவலை இருந்தாலும், குழந்தைகள் பிரிவில் பல குழந்தைகைளை பார்த்து கொள்வது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொரு குழந்தையையும், தன் கரங்களில் ஏந்தும் போது தானே பெற்று எடுத்த பரவசம் தோன்றும்.

தன் ஏழ்மைநிலையில், குடும்ப பொறுப்பு அனைத்தையும் முடிக்கும் போது அவரது வயது முப்பதை கடந்திருந்தது. அதன் பிறகு திருமணம் முடித்து இரண்டு வருடம் தன் கணவனுடன் வாழ்ந்தார். ஒரு விபத்தில் கணவனை பறிகொடுத்துவிட்டு தன் வயதான அன்னையுடன் வசிக்கிறார். இடைப்பட்ட காலத்தில் அவருக்கு குழந்தை பாக்கியம் கிட்ட வில்லை.

அவருக்கென ஆண்டவன் வேறு சில கடமைகள் வைத்திருக்கும் போது, அவருக்கு எப்படி ஒரு மழலை செல்வதை வழங்குவார்?

†††††

பாசத்தோடு குழந்தையின் வயிற்றை நிரப்பி, அதன் தொட்டிலில் போட்டு திரும்பினார். அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை, காரணம் அவரது சுண்டு விரல் பிஞ்சுகரத்தின் நடுவே சிக்கிக்கொண்டது. அவரது மனமும் அதனோடு சிக்கிக்கொண்டது.

சிறிது நேரம் கரத்தை விலக்காமல் குழந்தையை ரசித்து கொண்டிருந்தார், ஏனோ தெரியவில்லை அந்த குழந்தையின் மீது அவருக்கு அதிக பாசம் வந்தது. அந்த பாசத்திற்கு, பிறந்த குழந்தையின் இழப்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம். பிறந்த குழந்தையின் இழப்பு அவ்வாறு.

அவருக்கென பல கடமைகள் இருக்கும் போது எவ்வளவு நேரம் நின்று, ஒரு குழந்தையை மட்டுமே ரசிக்க முடியும்? ஒருவாறு தன்னை தேற்றிகொண்டு, ஒரு பெருமூச்சுடன் கரத்தை மென்மையாக விலக்கிக்கொண்டு வெளியே சென்றார். அங்கிருந்த உருவத்தை இப்போதும் அவர் பார்க்கவில்லை.

இதற்காகவே காத்திருந்த உருவம், அவர் வாசலை தாண்டவும் தன் மறைவிடத்தில் இருந்து வெளி பட்டு, குழந்தை படுத்திருந்த தொட்டிலின் அருகே நின்றது. அதன் கண்களில் தான் எவ்வளவு ஆசை? குழந்தையை காண. குழந்தையை கண்ட முகத்தில் தான் எத்தனை பரவசம்? கோடி கதிர்களின் வெளிச்சம் அந்த முகத்தினில்.

குழந்தையின் அன்னையின் மறு பிம்பமாக படுத்திருந்த மழலையை காணக்காண தெவிட்டவில்லை அந்த உருவத்திற்கு. தன் சின்னஞ்சிறு கைகளை ஆட்டி, செப்பு இதழ்களை சப்பிகொண்டு, சிறு கண்களை சிமிட்டி என, அழகின் மொத்த உருவமாக படுத்திருந்த அந்த மலர்ச்செண்டை காண இரு கண்கள் போதாது.

குழந்தையும் அவர் இருப்பதை உணர்ந்தது போல், தன் செப்பிதழ்களை மெல்ல விரித்து புன்னகை செய்தது. அதில் மொத்தமாக வீழ்ந்து போனது அந்த உருவம். தன் ஆசை நிறைவேறிய மகிழ்ச்சி அதன் முகத்தினில் மிளிர்ந்தது.

அந்தக் குழந்தையை கையில் அள்ளி, மார்போடு அணைத்துக்கொள்ள பேராவல் பிறந்தது. ஆனால் அதை நிறைவேற்ற முடியாத, தனது அவல நிலையை நினைத்து வருந்தியது அந்த உருவம்.

இந்த இடத்தில் தன் துரதிர்ஷ்டத்தை எண்ணி கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சிவந்த கண்களில் ஒரு பொட்டு கண்ணீர் வரவில்லை. அந்தக் கண்கள் நீரின்றி வறண்டு போய் விட்டதா? அல்லது அழுது அழுது கண்ணீர் வற்றி விட்டதா?

ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்ற குழந்தையை தொட முயற்சிக்காமல், சிறிது நேரம் இமைக்க மறந்து, எட்ட நின்றே குழந்தையை ரசித்து, அதன் அழகை தன் மனதில் நிரப்பிக்கொண்டு, மனமே இல்லாமல் திரும்பி திரும்பி பார்த்தவாறே அங்கிருந்து விலகி சென்றது. 

வெளியே வந்த அதன் கண்களில், மீண்டும் ஜன்னலின் அருகே நின்ற ஜீவன் பட்டது. ‘நெருங்கி செல்வோமா’ என நினைத்து, ‘அதன் பின் நடக்கும் விபரீதங்களை யோசித்து’ தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டது. 

சரியாக அந்த நேரம், நிலாவையே வெறித்திருந்த அந்த ஜீவனுக்கு என்ன தோன்றியதோ? தன் தலையை உலுக்கிக் கொண்டு இதே திசையில் திரும்பியது. அதன் கண்கள் இந்த உருவத்தை காண்பது போல் இருந்தாலும், அதன் நினைவுகள் இங்கே இல்லை என்பது புரிந்தது.

அந்த உருவம் மிகவும் வருத்தத்துடன், தான் மறைந்திருந்த மரத்தின் பின் சென்று, மீண்டும் மறைந்து கொண்டது.

அந்த இரு உருவத்தின் ஜீவனும், தங்கள் நினைவுகளை மீட்டியது.

அதில் இருப்பது அனைவரும் ரசிக்கும் பூந்தோட்டமா? இல்லை ஆறாத காயங்களின் வடுக்கலா? 

நாமும் ஜீவனின் உருவத்துடன் பயணம் செய்வோம் அடுத்த பதிவில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!