O Crazy Minnal(25)

thumbnail_large-17f939a4

25

ஏற்கனவே  பல குழப்பங்கள் அவளைச் சூழ்ந்திருக்க, கீழே இறங்கலாமா இல்லை வேணாமா? என்ற சிந்தனையில் இருந்தவள் பின் விமலா அழைத்துப் பேசியதும், அதன்பின் கார்த்திகாவின் நட்பூறிய வார்த்தைகளும் திடம் தரப் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தாள்.

 

அதனால்தானோ என்னவோ தன்னை கடந்து சென்ற பெண்மணியைக் கண்டு வாய் நிறையப் புன்னகைத்தாள்.  ஆனால் அந்த பெண்மணியோ ஒன்றும் சொல்லாமல் வெறித்துவிட்டுச் செல்ல 

ஒரு மாதிரி ஆகிவிட்டது அவளுக்கு.

 

இதுவரை அவளை யாரும் புறக்கணித்ததில்லை. அதற்கு அவள் அனுமதித்ததுமில்லை!

அப்படியிருக்கையில்..

‘ஏன் இந்த ஆச்சி நம்மள இப்படி பார்த்துட்டு போறாங்க? அதுவும் மொத தடவ பார்க்கிறவள?’ என்று பல கேள்விகள் உள்ளே அரித்தாலும்,

‘ப்ச் பரவால்ல நம்ம ஃபேமிலி தானே அப்படிதான் இருப்பாங்க, நம்ம ஸ்டைல்ல கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்தா சரியாகிடுவாங்க! ஃப்ரியா வுடு ஃப்ரியா வுடு!’ என்று தனக்குத் தானே சொல்லி கொண்டாள்.

நமக்கு நாமே! பாலிஸியின்படி தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டவள் 

படி ஏற  எத்தனிக்க அவள் செவியில் மோதியது அந்த குரல்.

 

“நீ இங்க இருக்கியா? உன்னதான் தேடிட்டு இருந்தேன்!” என்ற உரிமையான குரலில் உரைந்துவிட்டாள். 

 

யாரிவன்? சத்தியமாக இது நரேந்திரனின் குரல் அல்ல! அவனை தவிர தன்னிடம்  யாரும் இவ்வளவு உரிமையாக, அதுவும் வந்த முதல் நாளே பேசமாட்டார்கள் என்பது நிச்சயம்!

ஆனால் அதையெல்லாம் பொய்யாக்குவதுபோல இருந்தது அவனின் செயல்கள் அனைத்தும்!

 

முதலில் குழப்பமாய் இருந்தாலும் அழகாய் ஒரு புன்னகையை அவனுக்குப் பரிசளித்தவள்,

“ஹாய்! நான் குறிஞ்சி.. குறிஞ்சி யாழ்!” என்றாள்.

 

அதைக் கேட்டவனோ “ நல்லா தெரியுமே! குறிஞ்சி யாழ்.. ஸ்டூடண்ட்.. பெங்களூர்!” 

 “எப்படி?” என்றாள் ஆச்சரியம் மேலிடும் குரலில்.

 

“ரேவதி சொல்லுச்சு! நான்..” என்று ஆரம்பித்தவன் பின் நிறுத்தி

 

“எங்க நீயே கண்டுபிடி பாப்போம்!” என்றான் சவாலாக.

 

ம்ம்ம் என்று இரண்டு கைகளையும் பிணைத்தவள் ஆட்காட்டி விரலைத் தாடையில் வைத்து யோசிப்பதுபோல் பாவனை செய்து பின்

 

“ம்ம்ம்.. ராகவேந்திரன்!” என்றாள் கேள்வியாக பின்னே அந்த ஃபோட்டோவில் பாதி  முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை அதில் இவனும் ஒன்று.

 

அவள் பொத்தாம் பொதுவாகச் சொல்லி வைக்க அவனோ “ஹே! எப்படி? ரேவதி சொல்லுச்சா?” என்று ஆச்சரியமாய் தொடங்கியவன் கேள்வியுடன் முடித்தானென்றால் அவளோ

 

‘ஓ.. அப்போ இஞ்சி பாஸா? தப்பிச்சேண்டா சாமீ!’ என்று ஆசுவாசமாய்,

 

“இல்ல நரேன் சொன்னான்!” என்றுவிட  அவன் முகமோ கறுத்துவிட்டது. பாவம் அவள் அதைக் கவனிக்கத் தவறினாள்! அதைக் கவனிக்கத் தவறியதால்  தான் சந்திக்கப் போகும் இன்னல்களைப் பாவம் அவளறியாள்!

 

“உட்காரலாமே?” என்று அவள் வினவ தன் முகபாவத்தை மாற்றி

கொண்டவனோ 

 

“உட்காரலாமே!” என்று அமர்ந்து கொண்டான் அங்கிருந்த சோஃபா ஒன்றில்.

 படிப்பில் ஆரம்பித்த பேச்சு கொஞ்சக் கொஞ்சமாக ரசனை, விருப்பு வெறுப்பு என்று நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவன் அங்கு வரும்வரை!

 

“ஓய்! நீ இங்கத்தான் இருக்கியா? ரேவதி எழுந்தாச்சா?” என்ற கேள்விகளுடன் நரேந்திரன் அங்கு வரும்வரை.

வெளியே  சென்றிருந்தவன் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தான்.

நேராக அங்குதான் வந்திருந்தான். புதிய இடம், புது மனிதர்கள் வேறு! அவள் எப்படிப் பொருந்திப் போவாளோ? என்ற யோசனையுடனே உள்ளே நுழைந்தவனின் பார்வையில் விழுந்தது அவளது சிரித்த முகம்.

 

‘பரவால்ல சொர்ணாக்கா கேடிதான்! தேறிடும்!’ என்று தோன்ற அங்கு வந்தவனோ அவளுக்கு வலது பக்கத்திலிருந்த இடத்தில் அமர்ந்தவாறு கேள்விகள்  கேட்க அவளும் அவனைக் கண்ட உற்சாகத்தில், “எங்க? அவ இன்னும் கொறட்ட விட்டிங்க்ஸ்! நீ எங்க போன?” என்றவளின் பேச்சு நீண்டு கொண்டே போனது, இடதுபுறம் இருந்தவனோ எழுந்து கொண்டான்.

 

அவன் எழவும் அவனை இவள் கேள்வியாக நோக்க அவனோ “இல்ல கொஞ்சம் வேலை இருக்கு நாம அப்புறமா பேசலாம்..” என்க அவளும் அவனிடம் அன்பாய் சிரித்துவிட்டு நரேந்திரனிடம் தன் விசாரணையைத் தொடங்கினாள்.

 

மற்றவரின் முக மாற்றத்தைக் கவனித்தாலே பல பிரச்சனைகளைத் தவிர்த்துவிடலாம், ஆனால் அந்த நொடியில் அதை அவள் செய்ய தவறினாள்.

 *************************************************************************************

கட்டிலிலிருந்து எழ முடியாதபடி அவள் இவளின் டீஷர்ட்டின் நுணியைப் பிடித்திருக்க வேறு வழியில்லாமல் அப்படியே முழங்கால்களை கட்டிக் கொண்டவள் தலையை அதில் சாய்த்தவாறு   உறங்கச் செல்வதற்கு முன் நடந்தவைகளை நினைக்க நினைக்கக் குழப்பங்கள் கூடிக்கொண்டே போயின!

காலையில் நடந்ததை ரேவதியிடம் அவள் சொல்லிக் கொண்டிருக்கப் படுக்கையைச் சரி செய்தவாறு கேட்டுக் கொண்டிருந்தவள் அவளை கேள்வியாக நோக்கினாள்.

 

“ஏன் ரேவ்ஸ், அவங்கள நான ஃப்ர்ஸ்ட் டைம் பார்க்கறேன்,  சிரிச்சேன் பட் அவங்க எந்தவித ரியாக்ஷனும் குடுக்கல.. என்மேல என்ன கோவம் அவங்களுக்கு?” என்றவளின் கேள்வியில் திடுக்கிட்டவள்.

 

“லூசா நீ? உன்மேல என்ன கோவம்? அவங்க அப்படிதான்!” என்றவளின் முன் இரவு உணவருந்தும் பொழுது அவள் குறிஞ்சியைச் செல்வியிடம் அறிமுகப்படுத்தியதுதான் கண்முன் வந்தது.

 

“ஆச்சி இவ என் ஃப்ரெண்ட்! குறிஞ்சி” என்றாள் அறிமுகமாய்.

ஏற்கனவே  அவரிடம் பல்பு வாங்கியவள்தான், இருந்தும் வாய் நிறையப் புன்னகைத்தவள் இருகரம் கூப்பினாள் மரியாதையாய்.

அதைத் தலையசைத்து ஏற்றவர் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட இரண்டாவது பல்பு! ஆனால்  அதைச் சிரித்துக் கொண்டே கடந்துவிடும் பக்குவம் இப்பொழுது வந்திருந்தது அவளிடம்.

 

இருந்தும், ஏன் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் ரேவதியிடம் கேட்டுவிட்டாள். “அப்படின்னா?” 

 

“ம்ம்ம் அப்படின்னா அப்படித்தான்! அவங்கதான் செல்வியாச்சி!  விஜயேந்திரன் தாத்தா போனதிலிருந்து அவங்க அப்படிதான் இருக்காங்கன்னு அம்மா சொல்லுவாங்க..

 

 இந்த வீட்டுலயே அவங்கதான் செம ஆக்டிவ் ஆ இருந்தாங்களாம்!” என்றவள் பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவாறு 

 

“அவங்க அப்படி பண்ணத தப்பா எடுத்துக்காத..” என்க குறிஞ்சியோ 

“அரே! அவங்க எனக்கும் ஆச்சிங்கறத மறக்க வேண்டாம் யுவர் ஆனர்!” என்றாள்

 

“ரைட்டு விடு!” என்றவள் உறங்கிவிட இவள்தான் உறக்கம் தொலைத்து உட்கார்ந்திருக்கிறாள்.

 

இருள் சூழ்ந்த அறையின் ஓரத்தில் மின்மினியாய் ஒளிர்ந்து கொண்டிருந்த விடிவிளக்கையே பார்த்திருந்தவளின் கவனம் அங்கில்லை.

ஜித்தேந்திரனிற்கு அழைத்து பேசியாயிற்று.  முடிந்த அளவு பொய்யும் புரட்டுமாக!

 

அவரை பொருத்தமட்டில் அவள் சென்னையில் நரேந்திரனின் வீட்டில் பத்திரமாக இருக்கிறாள்.

அவரிடம் பொய்யுரைக்க வேண்டும் என்று எண்ணும்போதே உள்ளுக்குள் சுருக்கென்று குத்தியது, குற்ற உணர்வு!

தன்னை நம்பும் தந்தையிடம் பொய்யுரைக்கும்படி ஆகிவிட்டதே.. என்று குத்தும்போதே இன்னொரு பக்கமோ இல்லை இதெல்லாம் நல்லதுக்காகத்தானே!

அவர் புரிந்து கொள்வார், குடும்பம் சேர்ந்தபிறகு அவரின் முகமும் அன்னையின் முகமும் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றாள் அவள்,

முயற்சி வீண் போகவில்லை, ஆனால் அதே சமயம்  அழகான கனவில் பல குழப்பங்கள் எட்டிப் பார்க்க கலங்கிப்போனாள் சிறியவள்.

 

அவளால் இன்று எல்லோரையும் சந்திக்க இயலவில்லை, ஆனால் சந்தித்தவர்கள் வரை அவள் ஒரு கணக்கு வைத்திருந்தாள்.

 

அதில் ஒன்று தப்புக் கணக்கு என்றால், இன்னொன்று விடையில்லாதது என்பது அவளுக்கு அப்பொழுது புரியாமல் போனதேனோ!

 

அவளது கணிப்புப் படி செல்வியாச்சியின் அமைதிக்குப்பின் வேறேதோ ஒரு காரணம் இருப்பதாகப்பட்டது!

விஜயேந்திரன் தாத்தாவின் மறைவும் ஒரு பெரிய காரணம்தான், ஆனால் அதையும் தாண்டி இன்னும் ஏதோ ஒன்று அவரை அரித்துக் கொண்டிருக்கிறது.

 

அந்த மௌனத்தின் கனத்தை அவளாலே தாங்கமுடியவில்லை. ரேவதி சொல்வதுபோல் பார்த்தால் அந்த குடும்பத்து மேல் அதிகம் பற்றுடையவர் அவர்தான்! எல்லா காரியத்திலும் முதலில் நின்றவரும் அவராகத்தான் இருந்திருக்கிறார்.

 

அதெல்லாம் எப்படி மாறியது? அவரை மாற்றியது எது? 

ம்ம்ம் பார்ப்போம்! பொறுத்திருந்து என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் பின் ‘என்னத்த பாக்கறது? ஏற்கனவே மூணு நாள் போக

போது ஞாபகமிருக்கா?’ என்று அவள் மனம் இடித்துரைக்க 

அடுத்து என்ன என்ற யோசனையில் இறங்கினாள்.

 

 ஏற்கனவே இருவர் அவள் பக்கம்! 

நரேந்திரனும், ரேவதியும், இல்லை மூவர்!

வளர்மதியை எப்படி மறந்தேன்! அவரும் அண்ணனுக்காகக் காத்திருப்பவர்தானே, ரேவதி சொன்னாளே !  

அவளால் இன்று எல்லோரையும் காணமுடியவில்லை! ஆனால் கண்டவரை,

தேவேந்திரன் தாத்தா வசுமதி ஆச்சி, அவர்களது தோற்றமும் கம்பீரமும்

யப்பாஹ்! கொஞ்சம் கடினம்தான் ஆனா செல்வியாச்சியைபோல் நெருங்க முடியாத அளவுக்கு இல்லை! என்றெண்ணியவளுக்கு புரியவில்லை அவரைத்தான் தான் தன்னையறியாமலேயே நெருங்கவிருக்கிறோம் என்று!

 

விமலா சித்தி, நல்லவிதமாகத்தான் பேசுகிறார். தான் யாரென்று தெரிந்தபின்னும் இது நீடிக்குமா? நீடிக்கவேண்டும்! என்று உறுதியாக நினைத்துக் கொண்டவள் தன்னையறியாமலேயே  கண்ணயர்ந்துவிட்டாள்.

 

மூன்றாம் நாள்

கதிரவனின் கனிவான தழுவலில் துயிலெழுந்தாள் ரேவதி.

கண்களைக் கசக்கிக் கொண்டு விழித்தவளின் முன் முழங்கால்களைக் கட்டியபடி உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கியிருந்த குறிஞ்சியே காட்சி தந்து கொண்டிருந்தாள்.

 

எழுந்தமர்ந்தவள் அவளை மென்மையாக அழைத்துப் பார்த்தாள், ம்ஹூம் அம்மையார் அசைவதாக இல்லை!  லேசாக அவளது தோள்களில் தட்டியவள் மீண்டும் யாழி!என்றழைக்க அவளது ஸ்பரிசத்தில் பதறி விழித்தாள்.

 

“ம்ம் ராகவ்.. விமலா சித்தி பையன்..” என்றவள் தூக்கக் கலக்கத்தில் உளறி கொட்ட ரேவதியோ “என்னாச்சு பேபி? ஏன் உட்கார்ந்தே தூங்கற?” என்றாள் குழப்பமாக.

 

அதற்குள் தூக்கம் கலைந்துவிடத்  தெளிந்தவளாக, ”ஈஈஈ” என்றொரு அசட்டுச் சிரிப்பை சிரித்தவள் “அது ஒன்னுமில்ல ரேவ்ஸ்..  நைட் தூக்கம் வரல அதான் உட்கார்ந்திருந்தேன், அப்படியே தூங்கிட்டேன்போல…” என்றாள் சமாளிப்பாக.

 

“சரி.. அதென்ன ராகவ்? விமலா சித்தி?” என்றவளின் கண்களில் ஆராய்ச்சி பார்வை.

 

“அதுவா.. ஏன் ரேவ்ஸ் ராகவேந்திரன் விமலா சித்தி பையன்தானே?” 

 

“ஆமா, அத ஏன் இப்போ கேக்கற?” 

 

“சும்மா கன்ஃபர்மேஷனுக்குத்தான்!” என்றவளின் உள்ளோ ‘அட அப்போ அய்யாதான் நம்ம பாசமலரா? போடு தகிட தகிட!’ என்று மனம் குத்தாட்டம் போட்டது. அவளுக்குத் தெரிந்துவிட்டது, ஆனால் அவள் யாரென்று அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லையே!

 

சுறுசுறுப்பாக கட்டிலிலிருந்து கீழே குதித்தவள் நான் ஃப்ரெஷாகிட்டு வரேன் ரேவ்ஸ்!” என்று  அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு  குளியலறையை நோக்கி ஓடிவிட்டாள். 

“வாலு!” என்று செல்லமாக கடிந்து கொண்டவள் கதவு தட்டும் சத்தம் கேட்க அதைத் திறக்கச் சென்றாள்.

 

கதவைத் திறந்தவளின் முன்பு  மங்களகரமாய் கையில் காஃபி ட்ரேயுடன் நின்று கொண்டிருந்தாள் பேச்சி என்று அவர்களால் அழைக்கப்படும் பேச்சியம்மாள்.

 

“ஏன்கா, நானே கீழ வந்துருப்பேனே!” என்றவாறு அதை அவள் கையிலிருந்து வாங்கினாள் ரேவதி.

 

“அதக்கில்லப்ள பெரியாச்சிதான் கொண்டாது குடுக்க சொன்னாக” என்றவள் “நாம பொறவ பேசலாம், இப்போ எனக்கு வேலை கிடக்கு!” என்றுவிட்டு நிற்க நேரமில்லாதவளைப்போல குடுகுடுவென ஓடிவிட்டாள்.

 

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவள் உள்ளே வரவும் குளியலறையிலிருந்து குறிஞ்சி வெளியே வரவும் சரியாக இருந்தது.

 

“ஐ! கவனிப்பெல்லாம் பலமா இருக்கே!” என்றபடி அவள் அங்கிருந்த டேபிளின்மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

“ம்ம்ம் இருக்கும் இருக்கும்! இரு வந்து வச்சிக்கறேன்!” என்றவள் பாத்ரூமினுள் நுழைந்து கொள்ள

 

‘என்னடா இது! நம்ம அத்த பொண்ணு இப்படி அலுத்துக்கிது!’ என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவள்

 

“அதுசரி அழகா பொறந்தாலே இப்படிதான்” என்று வாய்விட்டே புலம்பியவாறு கதவைத் திறந்து வெளியே வந்து நின்று கீழே வேடிக்கை பார்க்கலானாள்.

 

அவர்களது அறை இருப்பது முதல் தளத்தில். பழமை மாறாமல் நடுவில் முற்றமும், வீட்டு வாசலில் திண்ணையும், ஆங்காங்கே உயர்ந்து நிற்கும் தூண்களும் என்று அந்த வீடே அவளுக்கு அதிசயமாகத் தெரிந்தது.

 

அவர்களின் அறை வாசலில் நின்று பார்த்தால் கீழே வீட்டின் வாயில் திண்ணை வரை தெரியும்.

 

அங்கு நின்று அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவள் தோளில் தட்டிய ரேவதி கையில் காபி தம்ளர் ஒன்றை திணித்துவிட்டு தானும் பருகியபடி கீழே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“செம்ம காஃபி ரேவ்ஸ்!” என்றிவள் சிலாகிக்க அவளோ ஒரு “ம்ம்ம்” உடன் வாசலில் கவனம் ஆனாள்.

 

அவளது கவனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தவள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க திடீரென ரேவதியின் கண்களில் வெளிச்சம் பரவியது.

 

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் குறிஞ்சியின் தாடையைப் பிடித்துத் திருப்பினாள் வாசலின் புறம்

 

‘என்னவாம்?’ என்பதுபோல் பார்த்தவள் ஒரு நொடி ஒன்றும் புரியாமல் போனதென்றால், மறுகணமே கண்கள் பனிக்க ரேவதியை நோக்கி ‘அப்படியா?’ என்பதுபோல் தலையசைத்தாள்.

 

அவளும் கண்களை ஆம் என்பதுபோல் மூடித்திறக்க, அடுத்த நொடியே படிக்கட்டை நோக்கி ஓடியிருந்தாள் குறிஞ்சி.

 

ரேவதியின் ‘பாத்து யாழி!’ என்ற எச்சரிக்கையெல்லாம் அவள் செவிப்பறையைத் தொடக்கூட இல்லை!