Kalangalil aval vasantham 20

அட்மினிஸ்ட்ரேஷன் ப்ளாக் சிசி டிவி ஃபுட்டேஜை தேடிக் கொண்டிருந்தனர் ரவியும் சரண் சிங்கும். உடன் ஆப்பரேட்டரும் சைமனும் மட்டும். மணி ஒன்றை தாண்டி இருந்தது. தீயணைப்பு வீரர்கள் அவர்களது பணியை முடித்து விட்டு கிளம்ப ஆரம்பித்து இருந்தனர்.

எவ்வளவு தேடினாலும் அந்த ப்ளாக்குடைய பதிவு மட்டும் காணாமல் போயிருந்தது.

“சர் ஃபுட்டேஜ் காணோம்…” என்ற ஆப்பரேட்டரின் குரலில் பயம் பதட்டம் என அனைத்தும்.

“வாட்?” அந்த பதட்டம் ரவிக்கும் சரணுக்கும் தொற்றிக் கொண்டது.

“எஸ் சார்”

“அது மட்டும் எப்படி காணாம போகும்?” ரவி கோபமாக கேட்டான்.

“தெரியல சர். எனக்கு எதுவும் தெரியல.” என்றவனின் குரலில் நடுக்கம்.

“நீ என்ன செரச்சுட்டா இருந்த? உன் வேலைய ஒழுங்கா பாக்கறத விட உனக்கு வேறன்ன புடுங்கற வேலை இருக்கு?” ரவி காட்டமாக கேட்க, அந்த மதன் அதிர்ந்து பார்த்தான். கேள்விபட்டிருக்கிறான். கோபம் வந்தால் முதலாளிக்கு வாயில் கண்டபடி வருமென்று. ஆனால் அதை நேரில் சந்தித்தபோது பகீரென்றது.

“மொத்தம் ரெண்டு பேர் சர். நானும் மகேந்திரனும் தான் இருக்கோம். மார்னிங் டியூட்டி அவனுக்கு. நைட் தான் நான் வந்தேன்.” நடுக்கம் குறையவில்லை அவனுக்கு.

“உனக்குத் தெரியாம தான் டெலீட் ஆச்சுன்னு நான் நம்பனுமா?” அடிப்பது போல வந்தவனை சரண் சிங் பிடித்துக் கொண்டார். சைமன் எந்நேரம் வேண்டுமானாலும் கையை நீட்ட தயாராக இருந்தான்.

“சத்தியமா தெரியல சர். என்னை நம்புங்க.” என்றவனுக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது.

“என் கண் முன்னாடி நிக்காத. ஃபுட்டேஜை எப்படி எடுக்கறதுன்னு பாரு.” என்று கடிந்தவன், சரணோடு வெளியே வந்தான்.

தீவிபத்தை திட்டமிட்ட மகேஷ் குழு, தீ வைத்த கையேடு, சிசி டிவியை கண்காணிக்கும் அறையில் ஸ்பை ரெக்கார்டரை மறைவாக வைத்துவிட்டு வந்திருந்தனர். எப்படியும் ஃபுட்டேஜை எடுக்க வருவார்கள் என்பது உறுதி. அப்போது என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க, ஷான் அதை செய்ய சொல்லியிருந்தான்.

ஆனால் அப்போது ஃபுட்டேஜை அழிக்கவில்லை. மதன் லாக்இன் செய்தபோது தான் அந்த சிஸ்டமை ஹேக் செய்தனர் வெர்கீசும் சஞ்சீவும். ஹேக் செய்தவுடன், அந்த வீடியோவை மட்டும் டெலீட் செய்தவர்கள், தாங்கள் வந்த தடயங்களை எல்லாம் அழித்துவிட்டு வந்த தடயமே இல்லாமல் வெளியேறி விட்டனர். இது அனைத்துக்கும் மூளை ஷான்!

ஆனால் இது எதவும் தெரியாமல் மண்டையை பியைத்துக் கொண்டனர், ரவியும் சரணும்.

“கண்டிப்பா இது யாரோ பார்த்த வேலை தான் ரவி.” தீர்மானமாக கூறினார் சரண் சிங்.

“ஆமா. அதெப்படி அந்த ஃபுட்டேஜ் மட்டும் காணாம போகும்?” என்று நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன், “சர்… நம்ம அட்மின் ப்ளாக் முன்னாடி தானே ட்ராஃபிக் சிக்னல் இருக்கு. அங்க கேமரா இருக்குமே…” என்று கூற,

“எஸ்…” என்றவர், உடனே இன்ஸ்பெக்டரை அழைத்து சுற்றிலுமிருந்த கேமராக்களை பார்வையிட கூறினார்.

ஆனால் மகேஷ் உள்ளே வந்தது பின் பக்கத்திலிருந்த ஒரு சிறு வழி மூலம்.

முதலில் லைடார் என்ற வெகு சிறிய லேசர் கேமராவை பறக்கவிட்டு அந்த முழு ஸ்டுடியோவையும் படமெடுத்துக் கொண்டான் ஷான். லைடார் என்பது, லேசர் கற்றைகளை டார்கெட் மேல் செலுத்தி, அந்த இடத்தை முழுவதுமாக அலசும். அதன் பின் அங்கிருக்கும் மறைவான இடங்களை கூட விட்டுவைக்காமல், படம் பிடித்து விடும்.

எந்தெந்த இடங்களை பார்க்க வேண்டுமோ, அந்த இடங்களை மேலிருக்கும் தடைகளை எல்லாம் நீக்கிக் காட்டிக் கொடுக்கும் அதி நவீன லேசர் கேமராவை கொண்டு தான் பல வருடங்களாக கைவிடப்பட்ட பகுதிகளை கண்டுகொண்டவன், அதன் வழியாக மகேஷை அனுப்பி இருந்தான். அனைவரும் வரும் வழியாக உள்ளே நுழைந்தால் எப்படியும் எதாவது பப்ளிக் சிசி டிவியில் மாட்ட நேரும் என்பதை யோசித்துதான் ஷான் இந்த வழியை தேர்ந்தெடுத்தான்.

அவனை பொறுத்தவரை ரவியை குழப்ப வேண்டும். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும்.

“புடிச்சிரலாம் ரவி… டோன்ட் வொர்ரி…” என்று சரண் சிங் கூறினாலும் அவனது முகம் தெளியவில்லை.

“இங்க என்னமோ சரியா இல்ல.” என்று குழப்பமாக கூறியவன், “சரி அதை விடுங்க, ஐபிஎல் டீம் செலெக்ஷனுக்கு ஷானும் வர்றானாம்” என்று முடிக்க, சரண் சிங்கின் முகம் யோசனையாக சுருங்கியது.

“ஐ திங், அவன் எதையோ ஸ்மெல் பண்ணிருக்கான் ரவி…”

“இல்ல சர். அப்படி ஸ்மெல் பண்ணிருந்தா, இந்நேரம் வீடு ரெண்டாகிருக்கும். அவனை பத்தி எனக்கு நல்லா தெரியும். இமோஷனல் இடியட். நின்னு யோசிக்க தெரியாது.”

“ஐ அக்செப்ட். அவன் இமோஷனல் இடியட் தான். ஆனா அவன் கூட இருக்க பொண்ணு ரொம்ப காம் அன்ட் கம்போஸ்ட். அதையும் ஞாபகம் வெச்சுக்க…”

“இருக்கலாம். ஆனா அந்த ப்ரீத்திக்கு திமிர் அதிகம். தான் மட்டும் தான் தூக்கி நிறுத்தற மாதிரி இருப்பா. அவ கிடக்கறா… விடுங்க…” ப்ரீத்தியை பற்றி பேசப் பிடிக்கவில்லை அவனுக்கு. அதிலும் ப்ரீத்தியை பற்றி பேசும் போது சரண் சிங் கண்களில் மின்னும் ஜ்வாலை சொன்னது, அவருக்கு அவள் மேல் கண் விழுந்து விட்டது என! என்ன இருந்தாலும் அதை ரவி விரும்பவில்லை. அதிலும் குடும்பமே, அவளை இன்னொரு குடும்ப உறுப்பினராய் பார்க்கும் போது, அவள் மேல் கை வைப்பதும், குளவிக் கூட்டில் கை வைப்பதும் ஒன்று. அது தெரியாமல் ஜொள்ளு விடும் இந்த ஆளை எல்லாம்… என்று பல்லைக் கடித்துக் கொண்டான்.

“அவளை உனக்கு எவ்வளவு நாளா தெரியும் ரவி?” மீண்டும் அவளைப் பற்றியே அவர் கேட்க, அவனுக்கு இன்னும் எரிச்சலாக இருந்தது.

“சர், ப்ரீத்தி பத்தின பேச்சை விடுங்க…” என்று கடுப்படிக்க,

“சொல்லு ரவி…” விடாமல் கேட்டார்.

“என்ன ஒரு அஞ்சாறு வருஷமா தெரியும்…”

“எப்படி இவ்வளவு நாளா விட்டு வெச்சுருக்க?”

“சர். அவ குடும்ப பொண்ணு. உங்களுக்கு சரியா வர மாட்டா.” பொறுமை கைமீறி விடும் போல இருந்தது.

“குடும்ப பொண்ணுன்னா தொடக் கூடாதுன்னு சத்தியம் பண்ணிருக்கியா?” இந்த கேள்வியை எதிர்பார்க்காதவன், அவரை முறைத்தான்.

“அவளைப் பத்தி இந்த மாதிரி யாராவது பேசுனாங்கன்னு தெரிஞ்சாலே ஷான் வெட்டிருவான் சரண் சர். அவ அவனோட எக்ஸ் ஒன் சைட் லவ்வர். அந்த ப்ரீத்தி லூசு ஒத்துக்கல. ஆனா யாருக்கும் தெரியாது. ஸ்வேதாவ அவனோட எப்படி கோர்த்து விடறதுன்னு பார்த்தப்ப தான் இந்த விஷயம் எனக்கு தெரிய வந்தது. அதுவுமில்லாம என் மாமாவுக்கு அவ இன்னொரு பொண்ணு மாதிரி. கை வெச்சா, நாம செத்தோம்…”

உண்மையை சுருக்கமாக கூறினான் ரவி.

“இப்படி ஒரு பிகர வெச்சுகிட்டு வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருக்க. பார்க்கும் போதே டோபமைனும் எக்ஸ்டசியும் கலந்து கட்டியடிச்சா மாதிரி இருக்கே…” என்று பெருமூச்சு விட்டவர், “எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சா தொட்டு பார்க்காம விட மாட்டேன்…” என்று சூளுரைத்தவரை தலையிலடித்துக் கொள்ளாத குறையாக பார்த்தான் ரவி.

“சர்… பணத்தை விட்டெறிஞ்சா ஆயிரம் பேர் வருவாளுங்க. இவ ஒருத்திக்காக பார்த்துட்டு மொத்த ப்ளானையும் காலி பண்ண போறீங்க…”

“தொடவே முடியாதுங்கறத தொட்டாத்தான் கெத்து ரவி. நீ உன் வேலைய பாரு. நான் என் வேலைய பார்க்கறேன். ஒரு நாளாச்சும் அவள அனுபவிக்காம விட மாட்டேன்.” என்றவரின் குரலில் அத்தனை தீவிரம்.

“கொள்ளிகட்டையாலத்தான் தலைய சொறிவீங்கன்னு அடம் பண்றீங்க சரண் சர். அப்புறம் உங்க இஷ்டம்… இதனால எனக்கு பிரச்சனை வந்துச்சுன்னா உங்களை கழட்டி விடவும் தயங்க மாட்டேன். அதையும் பார்த்துக்கங்க…” சற்று மிரட்டலான தொனியில் கூறியவனை ஆழ்ந்து பார்த்தவர்,

“டென்ஷனாகத ரவி. ப்ரெஷர் வந்துற போகுது…” என்று கோணலாக சிரித்தார். அவரது மூளை ப்ரீத்தியை எப்படி அணுகுவது என்று அசிங்கமாக யோசித்துக் கொண்டிருந்தது.

இருவருமாக சைலேஷை சந்திக்க சென்று கொண்டிருந்தனர்.

***

“என்னை கொண்டு போய் ஹாஸ்டல்ல விடு ஷான்…” நான்காவது முறையாக அவனைக் கேட்டாள் ப்ரீத்தி.

“மணி என்னகுது பாரு… ரெண்டு. இன்னைக்கு இங்க தூங்கினா என்ன? ஒரே ரூம்ல ரெண்டு பேரும் தூங்கினதே இல்லையா?” என்று ஷான் கேட்க,

“வாட்…” என அதிர்ந்தாள்.

“தனி தனியாத்தான்… ஆஃபீஸ்ல…” சிரித்தான்.

“அது அப்ப…”

“சரி…”

“இப்ப முடியாது…”

“ஏன்?” என்று கேட்டவனின் சேட்டை புரிந்தது.

“ஷான் ப்ளீஸ்…” என்று அவள் சிணுங்கும் போதே, செல்பேசியும் சிணுங்கியது!

“இந்த நேரத்துல யார்?” என்று நெற்றியை தேய்த்துவிட்டபடியே எடுக்க, அழைத்தவன் மகேஷ்!

ஷானின் உடல்மொழி தீவிரமானது.

“சொல்லுங்க மகேஷ்…” ஸ்பீக்கரில் தான் பேசினான். ப்ரீத்தியும் நொடியில் தீவிர மனநிலைக்கு மாறியவள், கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.

“சிசிடிவி ஃபுட்டேஜை ஹேக் பண்ணி டெலீட் பண்ணியாச்சு சர். இப்ப தான் வெர்கீசும் சஞ்சீவும் முடிச்சாங்க.”

“குட்… சின்ன ஸ்லைட் கூட விடலல்ல…?”

“இல்ல சர். கம்ப்ளீட்லி ஹார்ட் டெலீட்டட்…”

ஹார்ட் டெலீட் என்பதை தலைகீழாக நின்றாலும் மீட்க முடியாது.

“தட்ஸ் குட்…” என்றவன், “அவங்க கோஆர்டினேட்ஸ்?”

அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை ஷான் கேட்க,

“மூணு பேரோட கோஆர்டினேட்ஸும் இப்ப ஒரே இடத்தை தான் காட்டுது சர்… சோ அவங்க மூணு பேரும் இப்ப ஒண்ணா இருக்காங்க…” என்று மகேஷ் கூறினான்.

“ஓ… எந்த இடம்?”

“ஹோட்டல் பார்க் சர்…”

“ஏ2ல தான் இருக்கணும். ரவி அடிக்கடி போயிருக்கான்…” என்று சிறிய குரலில் பிரீத்தியிடம் கூறியவன், “ஏ2 ல செக் பண்ணுங்க மகேஷ்…” என்றான்.

“ஓகே சர்…”

“தென் அங்க இருந்து யாராவது லைவ் ரிலே பண்ண முடியுமா? வீடியோ ஆர் ஆடியோ…”

“ட்ரை பண்றேன் சர். அப்படி முடியலைன்னா, முழுசா ரெக்கார்ட் பண்ணிடறேன்…” என்று கூற,

“தட்ஸ் ஸ்மார்ட் இன்டீட்…” என்றவன், ப்ரீத்தியை பார்த்து, “ஓகே வா?” என்று கேட்க, அவள் தலையாட்டினாள். ஆனால் அவளது முகம் யோசனையில் இருந்தது. அதை கவனித்தவன், அதை பற்றி அவளிடம் பின்னர் கேட்டுக் கொள்ளலாம் என்று கருதினான்.

“ஓகே சர்…”

“ஸ்பை கேமராவோட யாரையாவது அனுப்பினா லைவ்வா கவர் பண்ணலாம் மகேஷ்…”

“அங்க ஒரு பார் அட்டெண்டர் எனக்கு பழக்கம். இந்த மாதிரி விஷயத்துக்கு யூஸ் பண்ணிக்குவோம். அவர்கிட்ட இந்த வொர்க்க குடுக்கட்டுமா சர்?” என்று மகேஷ் கேட்க,

“உங்களுக்கு நம்பிக்கை இருந்தா குடுங்க மகேஷ். ஆனா இட் ஷுட் பி ஹைலி கான்ஃபிடென்ஷியல்…” என்றும் எச்சரித்தான்.

“கண்டிப்பா சர்…” என்று ஒப்புதல் கூறியவன், இணைப்பை துண்டித்தான்.

நிமிர்ந்து அவளை நேராக பார்த்தான் ஷான்.

“என்ன யோசனை ப்ரீத்?”

“மூணு பேர் – ஐபிஎல் மேட்ச் – டிரஸ்ட் அக்கௌண்ட்ஸ்… இதுதான் சர்கிளா? இல்லன்னா நாம எதையாவது மிஸ் பண்றோமா?” தீவிரமான பாவனையில் அவள் கேட்டாள்.

“பண்ணலாம்… பண்ணாமலும் இருக்கலாம்… ஆனா மூணு பேரும் சேர்ந்து பெரிய அளவுல ரிக்கிங் (இதுல சைலேஷ் எதுக்கு உள்ள வர்றான்?”

“அதை ஸ்வேதா தான் சொல்லணும்…” சாதாரணமாக கூறுவது போல தோன்றினாலும் வார்த்தைகளில் லேசான வெப்பம்.

இப்போதுதான் உரிமையுணர்வு தலைதூக்குகிறது போல என்று நினைத்துக் கொண்டவனுக்கு லேசாக புன்னகை மலர்ந்தது. மனதுக்குள் வைத்துக் கொள்ளாமல் பேசிவிடுவதும் ஒருவகையில் நல்லது. ஆனால் பேசியதை விட்டுவிட வேண்டும். தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் அதை அறுவை சிகிச்சை செய்வது மட்டும் தான் பிரச்சனையை வளர்க்கும்.

மீண்டும் செல்பேசி அழைத்தது.

மகேஷ் தான்!

“சொல்லுங்க மகேஷ்…”

“சர். லைவ் வாய்ஸ் ரெக்கார்டர் அவங்க டேபிளுக்கு கீழ பிக்ஸ் பண்ணியாச்சு. உங்க போனுக்கு லைவ்வா ரிலேவாகற மாதிரி செட் பண்ணிருக்கேன். ரெக்கார்டும் பண்ணிருவேன். அன்ட் ஸ்பை கேமராவோட அவங்களுக்கு பக்கத்துல ஒரு ஆள் போயாச்சு. அதை ரெக்கார்ட் பண்ணி உங்களுக்கு அனுப்பிடறேன்…” என்று கூற, ஷான் பெரிதாக புன்னகைத்தான்.

“குட் மகேஷ்… வெல்டன்…” என்றவன் தொடர்பை துண்டித்தான்.

ப்ரீத்தியை பார்த்து புன்னகைத்தவன், ஸ்பீக்கரை ஆன் செய்தான். மகேஷ் அனுப்பிய லைவ் ரிலேவை கேட்க ஆரம்பித்தான், ப்ரீத்தியோடு!

அவர்களது பேச்சை கேட்டு அதிர்ந்தவன், அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்.

ஐபிஎல் ஏலம் ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருந்தன. அதற்குள் அத்தனையும் முடித்தாக வேண்டுமே! அதற்குள் முடியுமா என்று அவனது மனம் கேள்வி கேட்டது. ஆனால் வேறு வழியில்லை. செய்தேயாக வேண்டும். காரணம், ஐபிஎல் ஏலத்திலிருந்து தான் இவர்கள் மூவரது ஆட்டமும் ஆரம்பமாகும். அந்த நிலையில் இவர்களுக்கு ஆப்படிப்பது ஒன்றே பழி வாங்கும் வழி. அப்போதுதான் பணம் எப்படி வருகிறது, எப்படி போகிறது என்பதை முழுமையாக கண்டுபிடிக்க முடியும்.

எப்பாடு பட்டாவது, இந்த சில நாட்களில் அவர்களை முழுக்க களையெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தது அந்த கணத்தில் தான்.

சதிக்கு பதில் சதிதான்!

வஞ்சத்துக்கு பதில் வஞ்சம் தான்!