O Crazy Minnal(26)

thumbnail_large-36c3f5ed

26

ரேவதி காட்டிய திசையில் தன் பார்வையை பதித்தவளுக்கோ சற்று நேரம் ஒன்றும் புரிபடாமல் போக பின் உற்று கவனிக்கலானாள்.

 

ரேவதி காட்டியது  வாசல் திண்ணையில் இருந்து கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருந்த பெரியவர்களை.

 

 எங்கோ வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வருகிறார்கள் போலும், என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்கப் பட்டென அது அறுபட்டது அவர்கள் நெருங்கவும்.

அவர்களது உருவம், முக அமைப்பு..  

 

வருவது யாரென்று புரிந்துவிடக் கண்கள் பனிக்க ரேவதியைப் பார்த்தவள்,’அவர்கள்தானா?’ என்பதுபோல் தலையசைக்க அவளும் ‘ஆம்’ என்பதாகக் கண்களை மூடித் திறந்தாள்.

 

மறுபடியும் பார்வையை அங்கு திருப்பியவளின் புருவங்கள் லேசாகச் சுருங்கின.

அடுத்த கணமே அவள் படிக்கட்டை நோக்கி ஓடியிருந்தாள்.

 

“ஓய்! எங்க போற?” என்றவளின் கேள்வியை கவனியாது.

படிக்கட்டுகளில் வேகவேகமாக, அதுவும் இரண்டு இரண்டு படிகளாக அவள்

குதித்திறங்க எங்கு இவள் கீழே விழுந்து விடுவாளோ என்ற அச்சத்தில் 

 

“பார்த்து யாழி! மெதுவா!” என்ற ரேவதியின்  எச்சரிக்கையெல்லாம்  அவள் காதுகளுக்கு எட்டவேயில்லை.

 

இறங்கியவள் சற்று ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டு மிகச் சாதாரணமான பாவனையில் அவர்களிடம்  வந்தாள்.

 

‘இது உலகமகா நடிப்புடா சாமீ!’ என்றெண்ணிய ரேவதி  பொறுமையாக படியிறங்கினாள்.

 

வாசல்வரை வந்துவிட்ட குறிஞ்சிக்கோ சிறு தயக்கம், ’எப்படி ஆரம்பிப்பது?’ என்று. ஆனால் அவளது தயக்கத்தை போக்குவதுபோல மஹேந்திரனின் முகத்தில் சிரிப்பொன்று மலர அதைக் கண்டவளோ  ‘அட இது போதுமே!’ என்று முன்னேறினாள்.

 

மேலே நின்று பார்த்து கொண்டிருந்தவள் அவர் அந்த பையைத் தூக்கத் தடுமாறுவதை கண்டுதான் கீழே ஓடிவந்தாள்.

 

படிகளில் ஓடியவளின் மனதிலோ ‘இந்த மருதண்ணே எங்க போனாங்க? நமக்கெல்லாம் லக்கேஜ் தூக்க ஹெல்ப் பண்ணாங்க, இந்த வயசானவங்களுக்கு..’ என்று அவள் எண்ணம் ஓட அவள் கால்கள் படியில் ஓடின.

 

திண்ணையில் பையை வைத்தவர் பின் அதை தூக்குவதற்கு முயல வேகமாக அவரிடம் வந்தவள் அவருக்கு முன் அதைத் தூக்கியிருந்தாள்.

 

தூக்கியவளுக்கோ மனம் கலங்கிவிட்டது ஒரு நொடி,’ச்சே எவ்ளோ வெய்ட்! எப்படி தூக்குனாங்களோ’ என்று தோன்றிவிட அவரை ஏறிட்டால் மஹேந்திரனோ அவளையே கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தார், அவருக்கு பின்னால் கோமதியும்.

 

‘அச்சோ அவசரபட்டியே இஞ்சி!’ என்று கடிந்து கொண்டவள்

 

“ஹாய்  தாத்தா! ஹாய் ஆச்சி! நான் குறிஞ்சி.. குறிஞ்சி யாழ்! ரேவதியோட ஃப்ரெண்ட்” என்றாள் அறிமுகமாய்.

“வீட்டுல எல்லாரும் சௌக்கியமா மா?” என்றது மஹேந்திரன் கண்களை எட்டாத சிரிப்புடன்.

 

“எல்லாரும் சௌக்கியம் தாத்தா!”

 

“நாங்க..” என்றவர் தொடங்கும் முன்பே “இருங்க இருங்க நானே சொல்றேன்!”என்றவள்

 

“மஹேந்திரன் தாத்தா, கோமதி ஆச்சி!” என்றுவிட்டு “எப்படி கரெக்ட்டா தாத்தா?” என்றாள் சிறுபிள்ளையாக.

 

அவளது சிறுபிள்ளைத்தனத்தைக் கண்டவரோ இதழ்கள் வளைய “சரியா சொல்லிட்டியே!” என்றவர் பையைத் தூக்கிக் கொள்ள முயல அதை தடுப்பதுபோல்,

 

“இருங்க இத நான் கொண்டு வரேன்!” என்றாள்  ஒரு பையைத் தூக்கியவாறு.

 

“பரவால்லம்மா! நானே தூக்கிக்கறேன் இங்கனதானே!” என்று அவர் மறுக்க முயல அவளோ 

 

“இந்த வெய்ட்ட தூக்கிட்டு நான் ஓட முடியும்னு நினைக்கறீங்க?” என்று தீவிரமான முகபாவத்துடன் கேட்டாள்.

 

“நான் எப்போமா அப்படிலாம் சொன்னேன்?”

 

“அப்போ நான்தான் தூக்குவேன்!” என்றாள்  தீர்மானமாக.

 

அவர் புன்னகையுடன் சரி என்பதுபோல தலையசைக்க அடுத்து அவள் வந்து நின்றது அவ்வளவு நேரமும் அமைதியாக நின்ற கோமதியிடம்தான்.

 

“ஆச்சி அத குடுங்க!” என்று அவள் அவர் கையில் இருக்கும் பையைக் காட்டி கேட்க 

 

“ஏற்கனவே அந்த பைய தூக்கிட்டிருக்க, இதுவும் சேர்ந்தா கனமாயிருக்கும்!” என்று அவ்வளவு நேரம் மௌனமாய் நின்றவர் வாய்  திறந்தார்.

 

“ஏன் ஆச்சி உங்களுக்கு இன்னொரு பேத்தி இருந்தா.. அவட்ட குடுக்க மாட்டீங்களா?” என்றவள் தலை சாய்த்துக் கேட்க அவள் எதிர்ப் பார்த்ததுபோலயே அவளது சொற்கள் குறி தவறாமல் இலக்கில் இறங்கின.

 

அவளது ‘இன்னொரு பேத்தியில்’ பட்டென்று நிமிர்ந்தவர் மஹேந்திரனை பார்க்க அவரும் அப்பொழுது  இவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

இவள் சாதாரணமாக உங்கள் பேத்தியாக இருந்தாள்.. என்பதுபோல் கேட்டிருந்தால் கோமதிக்கு ஒரு பாதிப்பும் இருந்திருக்காது.

 

ஆனால் அவள் அதைவிட்டு விட்டு இன்னொரு பேத்தி என்றுவிட அவர் மனமோ கல்லெறிந்த குட்டையாய்.

 

தன்னிடம் தலைசாய்த்துக் கேட்கும் சிறியவளைப் பார்த்தவர் சிநேகமாய் புன்னகைத்து  அவளிடம்  அந்த பையையும் கொடுத்துவிட்டார்.

 

“ம்ம்ம் குட் தாத்தா! குட் ஆச்சி!” என்று குறும்பாய் மொழிந்தவள் தன்னிருகைகளிலும் இரண்டு பைகளைத் தூக்கியவாறு நடந்தாள்.

அந்த பைகளின் கனம் புடைத்து நின்ற அவளது கை எலும்பிகளிலேயே தெரிந்தது.

 

அதைக் கவனித்ததுபோல் “ரொம்ப கனம்மா நான் கொஞ்சம் கொண்டாறேனே!” என்றார் மஹேந்திரன்.

 

“என்ன தாத்தா, உருவத்த வச்சு எடபோட்டீங்களா? இதெல்லாம் எனக்கு ஒன்னுமேயில்ல!” என்று வெளியே கெத்தாக காட்டிக் கொண்டாலும் உள்ளே எப்படியாவது தூக்கிறனும் இஞ்சி! என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“பாரு எலும்பெல்லாம் எப்படி துறுத்திக்கிட்டு நிக்குதுனு!”  

 

“என் அப்பூ சொல்லுவாங்க, ஒருத்தங்க உருவத்த வச்சு எடபோடக்கூடாதுனு! எங்க வைக்கனும்னு மட்டும் சொல்லுவீங்களாம் நான் வைப்பேனாம்!” என்றவளின் குரலில் ஏனோ சிறுபிள்ளைகளிடம் பேசும் மென்மை பரவியிருந்தது.

 

“நீ எதுக்கு இதெல்லாம் செய்யனும்?” என்றது கோமதியின் குரல் .

 

“ நம்மள சுத்தி இருக்கவங்கள நாமதான் பாத்துக்கனும்னு..” என்று அவள் முடிப்பதற்குள்

 

“அப்பா சொன்னாங்களா?” என்று முடித்தார் மஹேந்திரன்.

 

கண்கள் மின்ன அவரை பார்த்தவள் “ப்ச் ப்ச்” என்ற சப்தத்துடன் இல்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு “அம்மா சொன்னாங்க!” என்றாள்.

 

“அதுசரி வேறென்னலாம் சொன்னாங்க?” என்று வினவிய கோமதியின் குரலில் அவளிடம் பேசும் ஆர்வம் குடிகொண்டிருக்க அதைக் கவனித்த மஹேந்திரனுக்கோ உள்ளுக்குள் ஆனந்த பேரலை.

 

கோமதி, அமைதியான சுபாவம் கொண்ட எளிமையான பெண்மணி. ஆனால் மகன் சென்றதிலிருந்து அவரது  மௌம் ஒதுக்கமாக மாறியிருந்தது.

 

எதையோ பறிகொடுத்தவரைப் போல எந்நேரமும் எதையாவது சிந்தித்துக் கொண்டும், தனக்கிருக்கும் வேலைகளை மட்டும் கவனித்து கொண்டும் இருப்பவர். மனதால் சிரித்தே பல வருடங்கள் ஓடியிருந்தன.

எப்படி முடியும்? ஆசையாசையாக வளர்த்த மகன்! அவனது விருப்பம் என்று முதல் முறையாக ஒன்றைக் கேட்டும் அதை அவனுக்குக் கொடுக்க முடியாத நிலையில் அல்லவா அவர் நின்றார் அன்று!

 

குடும்பத்தையும் எதிர்க்க முடியாமல், மகனையும் தடுக்க முடியாமல்.

அன்று ஜிதேந்திரன் லீலாமதியின் கையை பிடித்துக் கொண்டு வெளியே சென்றபொழுது அவர் உள்ளம் கதறியதை யாரறிவர்!

 

மனைவி புதியவளிடம் பேசுவதில் ஆர்வம் காட்டுவதைக் கண்டு கொண்டவருக்கு உள்ளுக்குள் குறிஞ்சிக்குப் பாராட்டு விழாவே நடத்தினார்.  

கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்த கோமதி இன்று தானாக முன்வந்து பேசுகிறார் என்றால்! அதற்குக் காரணமானவளுக்குப் பாராட்டுவிழா மனதுக்குள் அவசியம்தானே? 

 

ரேவதியிடம் பேசுவார்தான், ஆனால் அவள் வேறு இவள் வேறல்லவா? என்று அவர் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கப் பூஜை அறை வந்துவிட வாசலில் பைகளை வைத்தவள் கோமதியைப் பார்த்து.

 

“வயசானவங்க கூட செலவழிக்கற ஒவ்வொரு நிமிஷமும் பொக்கிஷம் மாதிரின்னும், ஆச்சி தாத்தாகூட வாழ்ற வாழ்க்கை வரம்னும் சொல்லிருக்காங்க” என்று சாதாரணமாய் ஆரம்பித்தவளின் குரல் கடைசி வரிகளில் இறங்கிவிட்டது. 

 

அவர் கேள்வியாக அவளை நோக்க அப்பொழுது படிக்கட்டின் பக்கம் சென்று கொண்டிருந்த செல்வி இவள் கண்களில் பட ஸ்விட்ச் போட்டாற்போல் முகத்தைப் பிரகாசமாக மாற்றியவள் உற்சாகமான குரலில்,

 

“இன்னொன்னும் சொன்னாங்களே! “ என்றாள் வேண்டுமென்றே சற்று குரலை உசத்தி. அவருக்கு கேட்க வேண்டுமே!

 

அவள் முயற்சி வீண் போகவில்லை, ஒருநொடி இவளைத் திரும்பிப் பார்த்தவர் கண்டும் காணாததுபோல் படியேற இவள் படு உற்சாகமாய் தொடர்ந்தாள்.

 

“அஞ்சு வயசுக்கு கீழ இருக்கவங்க மட்டுமில்ல அம்பது வயசுக்கு மேல இருக்கவங்களும் குழந்தைதான், அதனால அவங்க நம்மள ஹர்ட் பண்ணாகூட பெருசா எடுத்துக்க கூடாதுன்னு!” என்றவளின் குரல் காதில் விழுந்தாலும் அது கேட்காததுபோலயே சென்றுவிட்டார் செல்வி. அவர் கோமதி ஆச்சியையும் தன்னையும் வெறித்து விட்டுச் சென்றது அவளுக்குத் தெரியாமலில்லை.

 

“உன் அப்பாம்மா பேரென்ன?” என்ற கோமதியின் குரலில் பட்டெனக் கவனத்தை அவர் புறம் திருப்பினாள் குறிஞ்சி.

 

அவ்வளவு நேரமும் பாதி படியிலேயே நின்று கொண்டு இவர்கள் உரையாடுவதைக் கவனித்துக் கொண்டிருந்த ரேவதியோ இந்த கேள்வியை இவரிடம் இருந்து எதிர் பார்த்திருக்கவில்லை என்பது அவள் மீதி படிகளில் உருளாத குறையாக ஓடி வந்ததே சொல்லியது.

 

“மதி.. அப்பா பேரு மதி அம்மா பேரு இந்திரா!” என்றாள் புன்னகை முகமாய்.

லீலாமதியின் கடைசிப் பெயரை ஜிதேந்திரனிற்கும், ஜிதேந்திரனின் கடைசியை லீலாமதிக்குமாக  அவள் மாற்றி உரைக்க, மூச்சிரைக்க அங்கு வந்து நின்றாள் ரேவதி.

 

எப்போ வந்தீங்க, என்பதுபோன்ற நல விசாரிப்புகளுக்குப் பிறகு 

 

“ஆச்சி இவ என் ஃப்ரெண்ட்…” என்றிவள் தொடங்க குறிஞ்சியோ “அதெல்லாம் நாங்க இன்ட்ரோ ஆகி, ஃப்ரெண்ட்ஸாவும் ஆகியாச்சு, இல்லையா  கோம்ஸ்?” என்றாள் கோமதியைப் பார்த்து.

 

“என்னது கோம்ஸ் ஆ?” 

 

“ஆமா கோம்ஸ்தான், ஏன் ஆச்சி நான் உங்கள அப்படி கூப்பிடக்கூடாதா?” என்று உரிமையாக கேட்பவளிடம் என்னவென்று சொல்வார்.

 

“நீ கூப்பிடுத்தா உனக்கில்லாததா!” என்ற மஹேந்திரனின் குரலில் மற்ற இருவரும்  அவரை ஆச்சரியமாகப் பார்க்கக் குறிஞ்சியோ  

 

“பாத்தியா? மேலிடத்திலேயே பெர்மிஷன் வாங்கிட்டோம்ல!” என்றாள் இல்லாத காலரை தூக்கிவிட்டபடி.

 

அவள் பாவனையில் சிரிப்பு வர “ நீ போய் கிளம்பு மொதல்ல இந்திரன் வெளியே கூப்ட்டு போறானாம்!” என்க இவளோ 

 

“பாருங்க கோம்ஸ் நம்மள பிரிக்க பாக்கறா! இருங்க நான் கிளம்பிட்டு வரேன் நாம பேசுவோம்..” என்று ஓடிவிட்டாள் பெரியவர்களின் இதழ்களில் புன்னகை பூவை நட்டு.

“ஓய்! சரியா சாப்பிடக்கூட விடல, எங்க கூட்டுபோற நீ?” என்றபடி அவன் பிடித்திருந்த தன் கையை உறுவ முயன்றாள்.

 

பின்னே, நம்ம ஊர் சமையலே சமையல்தான்பா! என்று சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தவளைச் சீக்கிரம் சீக்கிரம் என்று படாதபாடு படுத்தி,

 

அவளோ ‘போங்கடா நீங்களும்…’ என்று ஒரு கட்டத்தில் கடுப்பாகி எழுந்துவிட்டாள். அவள் கையை கழுவிய மறுகணம் அவள் கையை பற்றியவன் தான், இங்குவரை அவள் கைபிடித்தவாறு அழைத்து வர அவளோ

 

“எங்க போறோம்னாவது சொல்லேன்! வீட்டுக்குள்ளேயே கைட் மாதிரி சுத்தி காமிச்சுக்கிட்டு!” என்றாள் பொறுமையிழந்தவளாக.

அவர்கள் இருந்தது கீழ்த் தளத்தின் மூலையிலிருந்த ஒரு அறையின் வாசலில்.

“ஷ்ஷ்ஷ்!” என்று இவளைப் பார்த்து வாய்மீது விரலை வைத்து அமைதி என்பதுபோல் செய்தவன்  அறையின் கதவை லேசாகத் திறந்து பார்த்தான்.

 

“ப்ச் இதுக்கத்தான் சீக்கிரம் சீக்கிரம்னு சொன்னேன், இப்போ பாரு தூங்கிட்டாங்க!” என்று அவன் சலித்துக் கொள்ள 

 

‘யார்ர்ரா அது?’ என்பதுபோல் உள்ளே எட்டிப் பார்த்தவளின் பார்வையில் பட்டதெல்லாம் வயோதிகத்தின் தாக்கத்தால் தோல் சுருங்கி, மெலிந்து மெத்தையின்மேல் இன்னொரு போர்வையாய் கிடந்த தொண்ணூறு வயது முதியவரைத்தான்.

 

அதிர்ச்சியில் அவள் வாயடைத்துப்போய் நிற்க “யதீந்திரன் தாத்தா!” என்றான் நரேன்.

 

“நேத்து பேசிட்டிருக்கும்போது உன்ன பத்தி சொன்னேன்..” என்றவன் அவளது ஆராய்ச்சி  பார்வையில் “ஃப்ரெண்ட்னுதான், பாக்கனும்னு சொன்னாங்க அதான் அவங்க தூங்கறதுக்குள்ள வரலாம்னு.. ப்ச்” 

 

“எப்போ எழுந்திரிப்பாங்க?” என்று தன் பார்வையை அகற்றாது கட்டிலையே பார்த்தபடி கேட்டவளிடம் 

 

“சாயங்காலம் வருவோம்.. சரி நீ இப்போ போய் கிளம்பு!” என்றான்.

 

“எங்க?”

 

“கிளம்பேன். ரேவதிக்கிட்டயும் சொல்லிட்டேன் அவ ரெடியா இருப்பா, சும்மா வெளில போய்ட்டு வரலாம்” என்றவன்

 

“நான் வாசல்ல இருக்கேன் சீக்கிரம் வாங்க!” என்று சென்றுவிட்டான்.

 

அந்த அறையை ஒருமுறை திரும்பி பார்த்தவள் படியேறினாள்.

“யாழி! சீக்கிரம்! அப்புறம் அவன் கத்துவான்” என்று ரேவதி கத்திக் கொண்டிருந்தாள்.

 

அவளை  பார்த்தவளோ  ‘அவன் சாப்பிட விடமாட்டான், இவ கிளம்ப விடமாட்டா, நல்ல பண்றீங்கடா டேய்!  குட் ப்ரதர்! குட் சிஸ்டர்!’ என்று மனதுக்குள் தாளித்துக் கொண்டிருக்க 

 

“அக்கா!” என்று அழைத்துக் கொண்டே அங்கு வந்து சேர்ந்தாள் கார்த்திகா.

 

“ரெடியா?” என்று அவளிடம் வினவிய ரேவதி குறிஞ்சியின் புறம் திரும்ப இவளோ 

 

“எல்லாம் கிளம்பியாச்சு கிளம்பியாச்சு! நடங்க” என்ற பாவனையில் குர்தாவின் கைகளை மடக்கி விட்டவாறு வந்தாள்.

 

இவர்கள் மூவரும் கீழே இறங்கிவர ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதம்மா!’ என்று சோக கீதம் வாசித்து கொண்டிருந்தவன் 

குறிஞ்சியும் கார்த்திகாவும் சிரித்து பேசியபடி வருவதைக் கண்டு அவளிடம் வந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

 

“அதென்ன நீ! எல்லார்கிட்டயும்  சிரிச்சு சிரிச்சு பேசற, என்கிட்ட மட்டும் சொர்ணாக்காவாகிடற?” என்று கேட்க அவளோ  “எல்லாம் மூஞ்சி பாஸ் மூஞ்சி…” என்று அவள் கேலியாய் கூற

 

“என்னது!” என்றவன் அவள் தலையிலேயே ஒரு கொட்டு வைத்தான்.

 

“ஸ்ஸ்ஸ்” என்று தலையை தேய்த்து கொண்டவள்

 

“ஓய்! என்ன? கொட்டி கொட்டி என்ன குள்ளமாக்க பாக்கறீயா?” என்றாள் கோபாவேசமாய்.

“ம்ம்ம் ஆமா அம்மணி இப்போ ஆறடி இருக்காங்கள்ல அதான்.. பொறாமை!” என்றான் கிண்டலாய்.

 

‘நரிப்பயலே!’ என்று பல்லை கடித்தவளோ சற்று தொலைவில் நின்று பேசிக்கொண்டிருந்த ரேவதியையும் கார்த்திகாவையும் பார்த்துவிட்டு

 

“ரேவ்ஸ்! இந்த நரேன் சொல்றத கேட்டீயா? நாமெல்லாம் குள்ள கத்திரிக்காயாம்!” என்க இங்கு இவனோ  

 

‘அடிப்பாவீ! அவகிட்டபோய் மாட்டிவிட்டீயே!’ என்று பாவமாய் விழிக்க அவளோ 

 

“நீ பனைமரத்துல பாதி வளர்ந்துட்டு என்ன சொல்றீயா?” என்று நாக்கை துருத்தியவள்  அவன் கையில் கிள்ளிவிட்டு  கார்த்திகாவிடம் சென்றுவிட்டாள்.

 

இவர்களது இந்த விளையாட்டை இரு விழிகள் குரோதத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.

 

அங்கு அவன் ரேவதியிடம் வாங்குவதை இங்கிருந்து பார்த்துச் சிரித்தபடி இருந்தவள் திடீரென சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கார்த்திகாவிடம் 

 

“ஓய் கார்ஸ்! ராகவ் எங்க?” என்று வினவினாள்.

 

“அவன் மேல இருக்கான்க்கா, வரலையாம்” என்றவளின் முகத்தில் வருத்தம்.

 

“ஏனாம்? வா நாம போய் கூப்பிடுவோம்!” என்று அவள் கார்த்திகா மறுக்க மறுக்கக் கூட்டிச் சென்றாள்.

 

“நரேன் டூ மினிட்ஸ்!” என்றவள் இளையவளையும் அழைத்துக் கொண்டு ராகவின் அறைக்கு நடந்தாள்.

அறையின் கதவில் இரு விரல்களைக் கொண்டு லேசாகத் தட்டியவள் பின் உள்ளே நுழைந்தாள். இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தவன் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு கையிலிருந்த ஃபோனுக்குள் தன் தலையை புதைத்து கொண்டான்.

அதைக் கண்டு கொள்ளாதவள்போல அவனிடம் வந்தவள்

 

“நீ வரலையா? தோப்புக்கு” என்றிவள் கேட்கத் தலையைக் கூட நிமிர்த்தாமல்

 

“இல்ல வரல!” என்றிருந்தான் அவன்.

 

“இந்த ஒரு தடவை தானே! ஜாலியா இருக்கும், வாயேன்!” என்றவளின் குரலில் ஆர்வம்.

 

“இஷ்டமில்ல!”

 

“இதுக்கடுத்து நான் எப்போ வருவேன்னு தெரியாது, இந்த டைம் வரலாம்ல.. நான் நீ…கார்ஸ்..ரேவ்ஸ்…நரேன் எல்லாரும்..” என்று அவள் ஏதோ சொல்ல வர அதற்குள்,

 

“அதான் நான் வரலன்னு சொல்லிட்டேன்ல! ஒரு வாட்டி சொன்னா புரியாதா?”  என்று கண்களில் அனல் பறக்கக் கத்தியவனின் குரலில் ஒருநொடி அதிர்ச்சியில்  அசைவற்று நின்றுவிட்டாள்.