Rose – 9

418-6GbN9bL-76c51e38

அத்தியாயம் – 9

எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து யாழினி சிலையாகி நின்றளோ, அது அவளுக்கே தெரியவில்லை. அவளது கைப்பேசி சிணுங்கும் சத்தத்தில் தன்னிலைக்கு மீண்டாள். திரையில் தெரிந்த பெயர் கண்டதும், மற்ற சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது.

அவள் அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க, “இந்தியா போனதும் என்னை சுத்தமாக மறந்துட்டே இல்ல. என்னைப் பார்க்க அமெரிக்கா வர்றேன்னு சொன்னீயே, ஏன் இன்னும் வரல” வழக்கம்போல சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தாள் மிருதுளா.

அப்பாவின் நினைவு நாள் வருகின்ற காரணத்தால், ஒரு வாரமாகவே அவளைத் தனிமை விரட்டிக் கொண்டிருந்தது. தந்தை உயிருடன் இருந்திருந்தால், இன்று தன் வாழ்க்கை இப்படி இருந்திருக்காதே என்ற எண்ணம் தோன்றி அவளின் நிம்மதியைப் பறித்தது.

அவளருகே யாதவ் இருந்தாலும், ஏனோ மனதளவில் விலகி போனான். இங்கே வந்த இத்தனை நாட்களில் அவனிடம் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை. அவனது நாட்கள் இயல்பாகச் செல்ல, தான் மட்டும் அவனை நினைத்து வாழ்கிறோம் என்ற சிந்தனை வாழ்க்கையின் மீது வெறுப்பை வரவழைத்தது.

தாய் மடி தேடியோடும் கன்றுபோல, தன் தனிமையில் துயரிலிருந்து மீளவே இந்த பயணம். சில நேரங்களில் பயணங்கள் தரும் ஆறுதலை வேறு யாரும் தர முடியாது. அந்த பயணம்தான் அமெரிக்காவில் இருந்தவளை, இதோ இங்கே அழைத்து வந்தது. 

தன்னை தாயாகத் தாங்கிய தோழியின் நினைவில் அவள் சிலையாகி நின்றிருக்க, “அடியே லைனில் இருக்கிறீயா?! யாழினி….” அவளின் குரல் சிந்தனையைக் கலைக்க, தன் செல்போனை நகர்த்திவிட்டு காதைக் குடைந்தாள்.

“இப்போ எதுக்கு இப்படி கத்தற… என் காது செவிடாகிடும் போல” சிணுங்கினாள் யாழினி.

“இங்கே பாருங்க மேடம், இந்த பேச்சை மாத்தும் வேலை என்கிட்ட வேண்டாம். நீ என்ன செய்வீயோ தெரியாது, இப்போவே உடனே கிளம்பி அமெரிக்கா வரணும்” அவள்  உத்தரவிட, யாழினி எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தாள். 

ஏற்கனவே மிருதுளாவைப் பார்க்க வேண்டும் என மனம் அலைபாய, அனைத்து ஏற்பாடுகளையும் கட்சிதமாக முடித்திருந்தாள். இன்று இரவு ஃப்ளைட்.

அதை அவளிடம் சொல்லாமல், “சும்மா குதிக்காதே மிரு! எனக்கு இங்கே நிறுவனம் இருக்கு. அங்கிருக்கும் வேலையெல்லாம் முடிச்சிட்டு தான் வர முடியும். உடனே கிளம்பி வர சொன்னால், என்னால் முடியாது மிரு. இங்கே கொஞ்சம் வொர்க் பெண்டிங் இருக்கு” அதட்டல் போட, மறுபக்கம் பலத்த அமைதி நிலவியது.

தன் வருகையை ஆவலோடு எதிர்பார்க்கும் தோழியைக் காயப்படுத்தும் என்பதால், “ப்ளீஸ் மிரு புரிஞ்சிக்கோ! எனக்கும் உன்னை நேரில் பார்க்கனும்னு ரொம்ப ஆசைதான்” மெல்லிய குரலில் சமாதானம் சொல்ல, மறுபக்கம் பலத்த அமைதி நிலவியது.

“ஓ உடனே வர முடியாதா? அப்போ நான் இங்கிருந்து கிளம்பி வரட்டுமா?” மிருதுளா அவளாகக் கேட்க, யாழினிக்கு தூக்கிவாரிப் போட்டது.

‘அவள் மட்டும் இந்தியா வந்து யாதவைப் பார்த்தால், அவ்வளவுதான்!’ மானசீகமாக தலையில் கை வைத்த யாழினி, “இல்ல இன்னும் இரண்டு வாரத்தில் வர முயற்சி பண்றேன் மிரு. நீ இந்தியா வர வேண்டாம், உனக்கு இங்கிருக்கும் கிளைமேட் செட்டாகது!” அவள் வாய்க்கு வந்ததை சொல்லி சமாளிக்க முயன்றாள்.

மறுப்பக்கம் அந்த விஷயத்தைக் கேட்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மிருதுளா, “ஹுரே! சீக்கிரம் வா யாழி. உன்னை நேரில் பார்த்து எவ்வளவு நாள் ஆகிடுச்சு. உன்னிடம் பேச எனக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு…” அவளின் குரலில் உற்சாகம், இவளது மன இறுக்கத்தைக் குறைத்தது.

“சரிடி! முதலில் போனை வை… நான் வேலையை முடிச்சிட்டு உனக்கு போன் பண்றேன்” யாழினி சிரிப்புடன் கூற, தன்னிடம் ஏதோவொரு விஷயத்தை மறைக்கிறாள் என்று உணர்ந்தாள் மிருதுளா. அதை அவளாக சொல்லும் வரை கேட்கக்கூடாது என்ற முடிவில் அழைப்பைத் துண்டித்தாள்.

ஜன்னலின் வழியாக வெளியே எட்டிப் பார்க்க, தூவானம் தூறிக்கொண்டே இருந்தது. மீண்டும் ஒருமுறை அனைத்தையும் சரிபார்த்த யாழினி, தனக்கு தேவையான உடையை எடுத்துகொண்டு பாத்ரூம் உள்ளே சென்று மறைந்தாள்.

அவள் குளித்துவிட்டு தயாராகி கிளம்பும் நேரத்தில், “யாழினி” என்ற அழைப்புடன் வீட்டினுள் நுழைந்தார் சௌந்தர்யா.

“அம்மா வாங்க! உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் காத்துட்டு இருந்தேன்” அவரை வரவேற்று சோபாவில் அமரவைக்க, தன் கையில் இருந்த கோப்புகளை டீபாயில் வைத்தார்.

சமையலறை நோக்கிச் சென்ற யாழினியிடம், “ஏன்மா திடீர்னு போன் செய்து, ஃபைல்ஸை இங்கே கொண்டு வர சொன்னே” சௌந்தர்யா விசாரிக்க, அவருக்கு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.

அவள் திரும்பி வரும்போது கையில் டீயுடன் வந்தவள், “இந்தாங்க எடுத்துகோங்க” என்றவள் கூறவே, சொந்தர்யா மறுபேச்சின்றி தை வாங்கிக்கொள்ள, அவரின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தாள் யாழினி.

“நான் அமெரிக்கா போயிட்டு வருவதற்கு எப்படியும்  ரெண்டு வாரம் ஆகலாம். அதுவரை நீங்க கொஞ்சம் நிறுவனத்தைப் பார்த்துகோங்க அம்மா. இந்த வாரம் மீட்டிங் எல்லாமே கேன்சல் பண்ணிடுங்க” அவள் கூற, சொந்தர்யாவின் பார்வை யாழினி மீது படர்ந்தது.

அவள் சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழி, சௌந்தர்யாவிற்கு தன் தமக்கையை நினைவுபடுத்தியது. இந்நேரம் அவளின் மகளும் வளர்ந்திருப்பாளே என்ற எண்ணம் தோன்ற, “எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா யாழினி” அவளிடம் நேரடியாகக் கேட்டார்.

அவள் கையெழுத்து போடும் கோப்புகளைப் பார்வையிட்ட யாழினி, “என்னிடம் உதவி கேட்க என்ன தயக்கம்? என்ன விஷயம்னு சொல்லுங்கள்! என்னால் முடிந்தால் கட்டாயம் செய்யறேன்” அனைத்தும் சரியாக இருக்கிறது என்ற பிறகே கையெழுத்துப் போட்டாள்.

“என்னோட அக்கா ஒருத்தி அமெரிக்காவில் செட்டிலாகி ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. அங்கே போனபோது, எனக்கு அடிக்கடி போன் பண்ணி பேசுவா. அப்புறம் அப்படியே தொடர்பு விட்டுப்போச்சு!” அவர் சொல்வதைக் குறுக்கிடாமல் அமைதியாக இருந்தாள் யாழினி.

தன் கைவிரல்களை ஆராய்ந்த சொந்தர்யா,“உன்னால் முடிஞ்சால் அவங்க இருவரையும் கண்டுபிடித்து தர முடியுமா?” தயக்கத்துடன் கேட்க, அவரின் கையை ஆறுதலாகப் பற்றினாள்.

“கட்டாயம் செய்யறேன்மா!” அவரின் கையைப் பிடித்து வாக்குக் கொடுக்க, அவரின் உதடுகளில் புன்னகை அரும்பியது. அவர் விடைபெற்று கிளம்பிவிட, காரில் கோவை ஏர்போர்ட் நோக்கி பயணித்தாள்.

ஊட்டியின் ஊசிமுனை வளைவுகளின் வழியாக அவளது கார் சீரான வேகத்தில் பயணிக்க, அங்கிருந்த அமைதியைக் கலைக்க பாடலை ஒலிக்கவிட்டாள்.

“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல…

உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை…

காயம் கண்ட இதயம் ஒரு குழந்தைபோல…

வாயை மூடி அழுமே அதை சொல்ல வார்த்தை இல்லை…” அவனைக் காயப்படுத்திவிட்டு, இவளின் மனம் அவனுக்காகவே வருந்தியது.

அந்த பயணம் முழுவதும் காதல் பாடல்கள் மனதை மயிலிறகால் வருடியது. கோவை ஏர்போர்ட் சென்ற யாழினி அங்கிருந்து சென்னைக்குப் பிளைட் ஏறினாள். கிட்டதட்ட ஒரு மணி நேரத்தில், சென்னை சென்றடைந்தாள்.

அங்கிருந்து அமெரிக்கா செல்லும் ஃப்ளைட் ஏறியவளின் மனமோ, யாதவைத் தேடி ஓடியது. நினைவலைகள் பின்னோக்கிச் செல்ல,  எவ்வளவோ தூரம் கட்டுபடுத்த முயன்றும் முடியாமல் போனது.

***

முன்பக்கம் வழியாக சென்ற யாதவ், காரின் கதவைத் திறந்து பூக்களைக் கையில் எடுத்தான். குளிர் பிரதேசம் என்பதால் ரோஜாக்கள் வாடாமல் புன்னகைத்தன. அதை கையில் எடுத்துகொண்டு மெல்ல தோட்டத்திற்கு சென்றவன், அங்கிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்தான்.

நிலவு இல்லாத வானம் பொட்டு இழந்த காரிகையின் நெற்றிபோல நிர்மலமாகக் காட்சியளித்தது. அங்காங்கே கண்சிமிட்டி சிரிக்கும் நட்சத்திர தாரகைகளைக் காணவில்லை.

கடும் பனிமூட்டம் காரிருள் நடுவே வெள்ளை காற்றாய் மாறி செல்ல, சில்லென்ற குளிர் அவனின் உடலை ஊடுருவிச் சென்றது. நினைவலைகள் அவளைத் தேடியோட, அன்று காலை நடந்த நிகழ்வு மனக்கண்ணில் மறு ஒளிபரப்பானது!

தாய்மீது அவன் வைத்திருந்த கோபத்தை தகர்த்து, நீ செய்தது தவறு என்று உணர்த்தினாள். தன் முகத்திற்கு நேராக வெறுப்பைக் காட்டியவள், தன் கைகளில் தந்த ரோஜாவை வருடினான். அழகிய ரோஜா அவளின் வெறுப்பைப் பறைசாற்றுவதற்கு பதிலாக, அவள் ஆழ்மனதில் புதையுண்ட காதலைக் காட்டிக் கொடுத்தது.

‘தாயன்பு உணரத்தெரியாத தனக்கு, காதலின் மகத்துவம் புரியாமல் போனது வருந்தப்பட வேண்டிய விஷயம் தான்.’இரவின் நிசப்தம் மனதிற்கு இதம் தரவே, அவனின் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. அவள் சிதறவிட்ட ஒவ்வொரு வார்த்தையும், அவனின் காதோரம் ரீங்காரமிட்டது. அவனது காதல் மனமோ,

“நீ சிதறவிட்ட வார்த்தையில்

சில்லுச் சில்லாய் நொறுங்கித்தானே

போயிருக்க வேண்டும்…

சிதைப்பதாய்  எனை செதுக்கி

அதில் எனையே சிறையும்

வைத்தாய் ராட்சசி…

அடியே  என் நெல்லிக்கனி…

கடிக்க கசக்க  எனை

இனிக்க தித்திக்கிறாயே…

காதலைக் காட்டித் தந்து

காயத்தை வருடவும்

வாஞ்சைக் கொண்டாய்…

எந்த யுமானவளே…” அவளின் நினைவில் கவிதை படைக்க, அவளிருக்கும் இதய பக்கத்தை இதமாக வருடினான் யாதவ்.

தன்னுடைய தவறை முகத்திற்கு நேராக சுட்டிக் காட்டிய அவளின் தைரியம் அவனை வெகுவாகக் கவர்ந்திட, “எனை என்ன செய்கிறாய் இனியா… காதல் வராதுன்னு கர்வமாக இருந்தவனின் வாழ்வில் வந்து, என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறாயடி!” மெல்ல இமைமூடி வாய்விட்டுச் சிரித்தான்.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளின் வழியாக யாதவ் அவளை மனதளவில் நெருங்கினான். ஏனோ அவள் தன்னைவிட்டு விலகிச் செல்லும் தருணத்தில், அவளைக் கைவளைக்குள் வைத்துக் கொள்கின்ற ஆவல் எழுந்தது.

தன் நெஞ்சம் முழுவதும் காதல் நிறைந்திருக்க, அவளைவிட்டு விலகி நிற்பது அவனை வதைத்தது. அவளைத் தன்னிடம் கொண்டு வருகின்ற வழிபற்றி சிந்திக்கும்போது, ராம்குமாரின் முகம் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.

உடனே, தன்னுடைய அலைபேசியை எடுத்து ராமிற்கு அழைக்க,  மறுப்பக்கம் ரிங் போய் கட்டானது. மீண்டும் முயற்சிக்க, இம்முறை அழைப்பை எடுத்து, “ஹலோ சொல்லுடா” என்றான் ராம்.

அவனது குரல்கேட்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட யாதவ், “ஏதாவது முக்கியமான வேலையாக இருக்கிறாயா?” என்றான்.

“இல்லடா நான் ரூமில் உட்கார்ந்து சைக்காலஜி புக் படிச்சிட்டு இருக்கேன்” ராம்குமாரின் பார்வை கடிகாரத்தின் மீது படிந்து மீண்டது.

இந்த விஷயத்தை எப்படி தொடங்கலாம் யாதவ் தீவிரமான சிந்தனையில் இருக்க, “என்னடா பேசாமல் அமைதியாக இருக்கிற?” ராமின் குரல்கேட்டு தன்னிலைக்கு மீண்டான்.

இடது கையின் பெருவிரலால் புருவத்திற்கு மேல் வருடிய யாதவ், “உன்னிடம் கொஞ்சம் பேசணும்! கீழே தோட்டத்தில் இருக்கேன் வா” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, ராம்குமார் அறையைவிட்டு வெளியேறினான்.

சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த யாதவ் முகம் பிரகாசமாக இருக்க, அவனின் உதடுகளில் மந்தகாசமானப் புன்னகையைக் கண்டு திகைத்தான் ராம். அவனின் முகத்தில் இருந்த தேஜஸ் அவனை சிந்தனையில் ஆழ்த்திட, “என்னடா விஷயம்” என்ற கேள்வியுடன் நண்பனின் அருகே அமர்ந்தான்.

அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த யாதவ், இந்த விஷயத்தை எங்கிருந்து தொடங்குவது என்ற சிந்தனையில் மெளனமாக இருந்தான்.  ராம்குமாரோ அவனே சொல்லட்டும் என அமைதியாக காத்தான்.

ஒரு முடிவுடன் நிமிர்ந்த யாதவ், “எனக்கு யாழினியை ரொம்ப பிடிச்சிருக்குடா! எனக்கு அவளைக் கல்யாணம் செய்து வைப்பாயா?!” மனதில் தோன்றிய விஷயத்தைப் பட்டென்று கேட்டுவிட, இன்ப அதிர்ச்சியில் சிலையாக உறைந்தான் ராம்குமார்.

லிவ்விங் டூ கேதர் வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட நண்பன் மனம் மாறியதை நினைத்து சந்தோசப்பட்டவன், “நிஜமாவா சொல்ற?” நம்பாமல் கேட்ட ராம்குமார், யாதவ் உதடுகளில் புன்னகை அரும்பியது.

“உண்மைதான்! என்னை நம்புடா… அவ இல்லாத வாழ்க்கையை யோசிக்கக்கூட முடியாது. நீ யாழினியிடம் பேசி சம்மதிக்க வைக்கணும்” யாதவ் முகம் பளிச்சென்று பிரகாசமாக, அதைக் கண்டு ராம் உள்ளம் உவகைக் கொண்டது.

தன் நண்பனை நல்வழிபடுத்த அவன் எடுத்த முயற்சிகள் ஏராளம். ஆனால் இன்று அவனே மனம் மாறி திருமணம் பற்றி பேசும்போது, அவனால் மறுப்பு சொல்ல முடியவில்லை. யாழினிக்கு உறவு என்று சொல்ல யாரும் இல்லாத நிலையில், அவளை நல்லதொரு இடத்தில் கட்டிக்கொடுக்கும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது.

அது யாதவாக இருப்பின் இரட்டிப்பான சந்தோசமே! ஏனெனில் யாழினிக்கு ஏற்ற ஜோடி யாதவ் மட்டுமே என்பது அவனின் நீண்ட நாள் கருத்து.  இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைய வேண்டும் என்பது, அவனது ஆசை என்றுகூட சொல்லலாம்.

திடீரென்று அவனது கொள்கையும் கோட்பாடும் ஞாபகம் வரவே, “நீ யாழினியைக் கல்யாணம் செய்தபிறகு, கொஞ்சநாள் வாழ்ந்துட்டு வேற வாழ்க்கையைத் தேடி போக மாட்டே இல்ல” ராம்குமார் சந்தேகமாகவே கேட்க, யாதவ் மனதளவில் அடிவாங்கினான்.

தன்னுடைய காதல்கூட கேலிபொருளாக பார்க்கப்படும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. அமெரிக்கா கலாச்சாரம் மீதிருந்த ஈடுபாடும், அவன் கடைபிடித்த கோட்பாடும் தவறென்று புரிந்தது.

யாதவ் முகத்தில் வந்து போகும் கலவையான உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த ராம், “டேய் தப்பாக நினைக்காதேடா! உன்னோட இந்த மாற்றம் எனக்கு சந்தோசத்தைக் கொடுக்கிறது. ஆனால் யாழினிக்கு யாருமே இல்ல, நீயும் கைவிட்டால் அவளோட நிலைமை என்னாகுமோ?!” அவனது தவிப்பு நிறைந்த கேள்விகளில் சாட்டையில் அடிவாங்கியதைப்போல உணர்ந்தான்.

‘ராம் சொல்வது சரிதானே… அவளுக்கு யாருமே இல்லையே! அது தெரிந்தும், நான் அவளை தனியாக தவிக்கவிட்டு வந்தது தவறுதானே?!’ யாதவ் மனம் சிந்திக்க, அவனின் தோளில் கைபோட்டான் ராம்குமார்.

அந்த ஸ்பரிசத்தில் நிமிர்ந்த யாதவ், “என்னை நீ நம்பலாம். என்னைக்குமே நான் யாழினியை யாருக்காகவும், எதுக்காகவும் கைவிட மாட்டேன்” அவன் குரலில் உறுதி தெரிய, அதுவொன்றே  ராமிற்கு போதுமானதாக இருந்தது.

“சரி நாளைக்கே அவளிடம் பேசறேன்” என்றவன் எழுந்து செல்ல, யாதவ் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது. அவனது கடந்தகாலம் மனக்கண்ணில் படமாக விரிந்தது!

***