Pallavankavithai-06

PKpic-773d2b93

பல்லவன் கவிதை 06

அடிகளாரிற்கு அன்று காலையிலேயே மாளிகையிலிருந்து அழைப்பு வந்திருந்தது. மன்னரின் விஷேட காவலாளி மன்னர் அடிகளாரைக் காண விரும்புவதாக தகவல் சொன்னதிலிருந்து மனிதர் பரபரப்பாகவே இருந்தார்.

நாதக்கூடத்தை மற்றைய உபாத்தியாயர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவசர அவசரமாக மன்னரைக் காண வந்திருந்தார் அடிகளார்.
“வாரும் அடிகளாரே!” தனது அந்தரங்க அறையின் பஞ்சணையில் சாய்ந்து அமர்ந்திருந்தார் சிம்ம விஷ்ணு மகாராஜா.

“பல்லவேந்திரா என்னைப் பார்க்க விரும்புவதாக காவலாளி தகவல் சொன்னான்.” பணிவாக வந்தது அடிகளின் குரல்.

“ஆமாம் அடிகளே, அமரும்.” அங்கிருந்த இன்னொரு மஞ்சத்தைக் காட்டினார் மன்னர் பெருமான். மன்னரின் முகத்திலிருந்த சிந்தனை அடிகளாரிற்கு லேசான குழப்பத்தை அளிக்க அவர் காட்டிய மஞ்சத்தில் அமர்ந்து கொண்டார்.

“பல்லவேந்திரா! மனதில் என்ன குழப்பம்?”

“எதிர்பாராத குழப்பங்கள் சில நடந்துவிட்டன அடிகளே.”

“தங்களால் சீர்படுத்த முடியாத குழப்பம் என்றும் ஒன்று உண்டா மன்னா?” இதை அடிகளார் சொன்ன போது மகாராஜா அடிகளின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். ஆனால் அடிகளாரின் முகத்தில் எந்த சலனமும் இருக்கவில்லை. மன்னரை நிஜமாகவே புகழ்ந்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தார் மனிதர்.

“உமது நாதக்கூடம் இப்போது எப்படி இருக்கிறது அடிகளே?” இந்த ஒற்றைக் கேள்வியில் அடிகளாரிற்குத் தூக்கிவாரிப்போட்டது. குழப்பங்களுக்கு ஒட்டு மொத்த காரணமும் நீதான் என்று மன்னர் சொல்லாமல் சொல்வது போல உணர்ந்தார் அடிகளார்.

“பல்லவேந்திரா!”

“குழப்பத்தின் ஆரம்பம் எங்கிருந்து வந்தது என்று இப்போது உமக்குப் புரிகிறதா அடிகளாரே!” இதைச் சொன்ன போது மன்னரின் குரலில் லேசான கண்டிப்பு இருந்தது. இப்போது அடிகளுக்கு லேசான நடுக்கம் பிறந்தது.

“மன்னவா! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும், வீணையை மட்டுமே அறிந்த எனக்கு வீரனின் மனதை அறிந்து கொள்ளும் திறமை இல்லாமல் போய்விட்டது.”

“அதனால் உருவாகியிருக்கும் சங்கடத்தை இப்போதாவது நீர் அறிந்து கொண்டீரா?”

“பல்லவேந்திரா! என் கண்களுக்கு இன்னும் மகேந்திரன் சிறு பிள்ளைதான், அவனும் வாலிப வயதை எட்டிவிட்டான் என்பதை நான் கவனிக்க தவறிவிட்டேன்.”

“ம்… பாதகமில்லை.” மன்னவனின் நாசியிலிருந்து இப்போது ஒரு பெருமூச்சு வந்தது.

“பல்லவேந்திரா! முளையிலேயே எல்லாவற்றையும் கிள்ளிவிட்டால் ஒரு சிக்கலும் வராது.” தான் உருவாக்கிய சிக்கலுக்கு ஏதோ தீர்வு கண்டுபிடித்துவிட்டது போல பரபரத்தார் அடிகள்.

“நீர் சொல்வது போல நடந்தால் நானும் சந்தோஷப்படுவேன்.”

“நிச்சயம் நடக்கும் மன்னா!”

“அடிகளாரே! இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு நான் ஒரு முடிவிற்கு வந்திருக்கிறேன்.”

“அப்படியா?”

“ஆமாம், அதை உம்மிடமும் சொல்லத்தான் உம்மை இங்குத் தருவித்தேன்.”

“தங்கள் சித்தம் என்ன மன்னவா?”

“அடிகளாரே! பரிவாதனிக்கும் பதினெட்டு பிராயங்கள் கடந்துவிட்டன, அந்த குழந்தைக்கும் காலாகாலத்தில் ஒரு கல்யாணத்தைப் பண்ண வேண்டுமல்லவா?”

“ஆமாம் மன்னவா.” சொன்ன அடிகளாரின் கண்கள் கலங்கி போனது. ஏதேதோ பழைய காட்சிகள் அவர் மனத்திரையில் ஓடியது.

“அடிகளாரே! உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளும்.”

“முடியவில்லையே மன்னவா… என்னால் முடியவில்லையே!” நாத்தழுதழுக்க தன் கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் அடிகளார்.

“வாழ்க்கை எல்லோரிற்கும் வசந்தத்தை அள்ளி வழங்கி விடுவதில்லை அடிகளாரே!”

“உண்மைதான்… நான் மறுக்கவில்லை, ஆனால் இப்படி அநியாயமும் பண்ணி இருக்க வேண்டாம் மன்னவா!”

“போனது போகட்டும், சாம்ராஜ்ஜியங்களின் நன்மைக்காக மக்களின் சுபீட்சமான வாழ்க்கைக்காக தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்த பல வீரர்களின் சரித்திரங்களை நாம் கேட்டதில்லையா அடிகளாரே!”

“உண்மைதான் பல்லவேந்திரா… தாங்கள் இப்போது எடுத்திருக்கும் முடிவு என்னவென்று நான் தெரிந்துகொள்ளலாமா?”

“பரிவாதனிக்காக ஒரு மணாளனை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் அடிகளே.”

“அப்படியா? அந்த பாக்கியசாலி யார் மன்னா?”

“நம் உப சேனாதிபதி.” சொன்ன மன்னர் முகத்தில் சந்துஷ்டி இருக்க அடிகளாரின் முகத்தில் ஒளி பிறந்தது.

“யார்? நம் முதலமைச்சர் மகனா?!”

“ஆமாம்.”

“நல்லது நல்லது… இணை வெகு பொருத்தமாக இருக்கும்.”

“ஆமாம், முதலமைச்சரிடமும் பேசிவிட்டேன்.”

“அவருக்குச் சம்மதம்தானே?”

“பூரண சம்மதம்.”

“உப சேனாதிபதிக்கு?”

“நேற்றிரவு விருந்திற்கு அழைத்து விபரம் சொல்லி இருக்கிறேன், பெண்ணைப் பார்த்துவிட்டு நிதானமாகவே பதில் சொல்லட்டும்.”

“பரிவாதனியை வேண்டாம் என்று சொல்ல யாருக்கு மனது வரும்!”

“உண்மைதான்.” சற்று நேரம் மௌனமாக இருந்த பல்லவ மகாராஜா,
“அடிகளாரே!” என்றார் ஏதோ சிந்தனை வயப்பட்டதைப் போல.

“ஏன் மகாராஜா?”

“துர்வீதனன் மகளுக்கும் விஷ்ணுவர்த்தனனுக்கும் விவாக ஒப்பந்தங்கள் நிகழ்கின்றனவாம்.”

“என்ன?! துர்வீதனனுக்கு புத்தி பிசகிவிட்டதா? போயும் போயும் புலிகேசியின் தம்பிதானா அவனுக்கு மாப்பிள்ளையாக கிடைத்தான்?!”

“இல்லை அடிகளாரே! விஷ்ணுவர்த்தனன் இப்போது முன்போல இல்லையாம், அடியோடு மாறிவிட்டானாம்.”

“மன்னவா! இதை நீங்கள் என்னை நம்ப சொல்கிறீர்களா? அஜந்தா மலையடிவாரத்தில் நடந்த கோரத்தை நீங்கள் மறந்துவிட்டீர்களா?”

“இல்லை அடிகளே… நான் எதையும் மறக்கவில்லை, ஆனால் ஒன்றைச் சற்று சிந்தித்து பாரும்.”

“சொல்லுங்கள் மன்னவா.”

“பதினெட்டு வருடங்களுக்கு முன்பாக விஷ்ணுவர்த்தனன் சிறு பையன். தன் அண்ணன் புலிகேசியின் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்திருக்கலாம் இல்லையா?”

“என்னால் எதையும் நம்ப முடியவில்லை மன்னவா.”

“மாற்றங்கள் எதுவும் இல்லாமல் துர்வீதனன் தன் பெண்ணைக் கொடுப்பான் என்று நினைக்கிறீரா அடிகளாரே?”

“இருந்தாலும் இரத்தத்தில் ஊறியது மாறாது மன்னா.” அடிகளாரின் பேச்சில் மன்னவன் முகத்தில் குழப்பம் தெரிந்தது.

“உண்மைதான், நான் நீர் சொல்வதை மறுக்கவில்லை… இருந்தாலும் தகவல் கொண்டு வந்திருப்பது நம் தலைமை ஒற்றன்.”
“ஓஹோ!” அடிகளாரின் முகத்திலும் இப்போது பூரண சிந்தனைத் தோன்றியது. அவரே மீண்டும் தொடர்ந்தார்.

“அப்போது விஷ்ணுவர்த்தனன் பன்னிரெண்டு பராயத்து சிறுவன்தான். இருந்தாலும் கூடவே இருந்து வளர்த்தது புலிகேசி அல்லவா மன்னவா?”

“இப்படி யோசித்து பாரும் அடிகளாரே! கூடவே இருந்து புலிகேசி வளர்த்திருந்தாலும் பரம்பரைக் குணம் என்று ஒன்று உண்டல்லவா? அவர்களின் மூதாதையரிலும் போற்றத்தகு மனிதர்களும் இருக்கிறார்கள் அல்லவா? அது ஒரு வேளை விஷ்ணுவர்த்தனனை மாற்றி இருக்குமோ என்று நான் நினைக்கிறேன்!”

“இப்போது எது மாறி என்ன பிரயோஜனம் மன்னவா? அந்த குழந்தை இழந்ததெல்லாம் திரும்ப கிடைத்துவிடுமா?”

“நான் அப்படி நினைக்கவில்லை அடிகளே… மாளிகைச் சிறையிலே ஊர் உலகத்தை அறியாமல் வாழ்வதை விட குறைந்தது ஒரு சுதந்திரமான வாழ்க்கையாவது அந்த சிறு பெண்ணிற்குக் கிடைக்குமல்லவா?” இப்போது சுந்தரமூர்த்தி அடிகளாரின் முகத்தில் கசப்பான ஒரு புன்னகைத் தோன்றியது.
“ராஜ்ஜியத்தையே ஆளவேண்டியவள்…”

“அடிகளாரே!” ஏதோ பேச ஆரம்பித்த மனிதரை மன்னரின் குரல் அடக்கியது.
“பகலில் பக்கம் பார்த்து பேசு… இரவில் அதுவும் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.”

“மன்னியுங்கள் பல்லவேந்திரா, என்னால் இது போன்ற அநியாயங்களைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை.”

“அது ஒரு புறம் இருக்கட்டும் அடிகளாரே, நான் சொன்ன விஷயத்தை நீரே உபாத்தியாயரிடம் சொல்லிவிடும். கூடிய விரைவில் வேலைகள் நடக்கட்டும். எதுவும் தாமதிக்க வேண்டாம்.”

“ஆகட்டும் மன்னவா!” மன்னனுக்கு வணக்கம் வைத்துவிட்டு விடைபெற்று கொண்டார் அடிகளார். மகாராஜாவிற்கும் மனது மிகவும் பாரமாக இருந்தது. என்னதான் வெளி உலகத்திற்கு முன்பு புலன்களை அடக்கி ஆண்டாலும் அவரும் மனிதர்தானே!
தனிமை அவர் நெஞ்சில் பழைய நினைவுகளைத் தூக்கி நிறுத்தியது.

‘எத்தனை மகிழ்ச்சியாக ஆரம்பித்த பயணம்! கடைசியில் எத்தனைக் கோரமாக நிறைவு பெற்றது! அந்த கோரத்தில் பரிவாதனி பிழைத்துக்கொண்டது அவள் செய்த அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா என்று இதுவரை அவருக்குப் புரியவில்லை!
***

அன்றைய பொழுது புலர்ந்ததிலிருந்து பரிவாதனியின் மனது ஏனோ சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. நேற்றைய இரவு நந்தனவனத்தில் சந்தித்து இளவரசன் சொன்ன சேதி அவள் தூக்கத்தை முழுதாக அள்ளிக்கொண்டு போயிருந்தது. இரவு முழுவதும் தூங்காமல் பஞ்சணையில் புரண்டபடியே விழித்திருந்தாள்.

காலைக்கடன்களை முடித்துக்கொண்டாலும் ஏதோ தனக்குப் பிடிக்காத ஒன்று நடக்கப்போகிறது என்று அவள் உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அது பொய்யல்ல என்பதைப் போல சற்று நேரத்தில் அடிகளார் வந்து சேர்ந்தார்.

“அடடா! அடிகளாரா? வாருங்கள் வாருங்கள்… பரிவாதனி, இங்கு யார் வந்திருக்கிறார்கள் என்று வந்து பார்!” தந்தையின் குரலில் அவசரமாக அறையை விட்டு வெளியே வந்த பரிவாதனி திடுக்கிட்டு போய் நின்றாள்.

‘அடிகளார் வருவார் அல்லது முதலமைச்சர் வருவார்.’ பல்லவ இளவலின் குரல் அவள் காதில் ஒலித்தது.

அடிகளாரைப் பார்த்த பிறகும் அவரை வரவேற்காமல் சிலையென நின்ற மகளை விசித்திரமாக பார்த்தார் உபாத்தியாயர்.

“அம்மா பரிவாதனி! அடிகளாரை வரவேற்காமல் அப்படி என்ன யோசனை உனக்கு?” உபாத்தியாயர் சற்று சத்தமாக சொல்லவும் தன்னிலைக்கு மீண்டாள் பெண்.

“வாருங்கள் அடிகளே!” வாய் வரவேற்றாலும் அது அவள் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் என்று பெரியவர்கள் இருவருக்குமே புரிந்தது.

“குழந்தாய்! உடம்பு சௌகர்யமாக இருக்கிறதா?” அடிகளார் கேட்ட கேள்வியில் அன்பு கொட்டி கிடந்தது.

“நன்றாக இருக்கிறேன் அடிகளே.” பதில் சொல்லிவிட்டு உள்ளே நுழைய திரும்பிய பெண்ணைத் தடுத்தார் அடிகளார்.

“பரிவாதனி, இங்கே வந்து உட்காரம்மா… நான் உன்னோடும் பேசத்தான் வந்திருக்கிறேன்.” பெரியவரின் வார்த்தைகள் அவள் மனதில் கவலையை உண்டு பண்ணியது. இருந்தாலும் அங்கிருந்த மஞ்சங்கள் ஒன்றில் பெண்ணும் அமர்ந்து கொண்டாள்.

“உபாத்தியாயரே! இன்றைக்கு மன்னர் பிரான் என்னை மாளிகைக்கு அழைத்திருந்தார்.”

“அப்படியா? ஏதேனும் முக்கியமான விஷயமா‌ அடிகளே?”

“மிக முக்கியமான விஷயம்… நம் பரிவாதனியின் திருணத்தைப் பற்றி இன்று மகாராஜா பேசினார்.”

“அப்படியா?!” ஆச்சரிய மிகுதியில் உபாத்தியாயரின் கண்கள் லேசாக கலங்கியது.

“அது மட்டுமல்ல உபாத்தியாயரே… மன்னரே மாப்பிள்ளையும் பார்த்துவிட்டார்.”

“அடடா! மன்னரின் கருணையே கருணை!”

“ஆமாம் உபாத்தியாயரே! மாப்பிள்ளை யாரென்று கேட்டால் நீர் அசந்து போய் விடுவீர்.”

“ஏன் அடிகளாரே? நாங்கள் அசந்து போய் விட மன்னர் அப்படியென்ன இளவரசரையா எங்கள் பெண்ணுக்குக் கொடுக்க போகிறார்?” அப்போதுதான் உள்ளே நுழைந்த மகிழினி கேலியாக கேட்டாள்.

“யார் மகிழினியா? வா வா… என்ன கேட்டாய்? மன்னர் இளவரசரைக் கொடுப்பாரா என்றா? இவரும் இளவரசருக்குச் சற்றும் குறைந்தவரல்ல மகிழினி!”

“அது யார் அடிகளே இளவரசருக்குக் குறையாத மாமனிதர்?”

“நம் உப சேனாதிபதி!” அடிகளாரின் வார்த்தைகளைக் கேட்ட உபாத்தியாயர் பெருமிதத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தார். பரிவாதனி குனிந்த தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

“அடிகளாரே… எனக்கு ஒரு சந்தேகம்?”

“என்ன மகிழினி?”

“உபாத்தியாயர் மகள் ஒரு சாதாரண பெண், அவளுக்கு மன்னர் எதற்கு மாப்பிள்ளைப் பார்க்கிறார்?”

“பரிவாதனி சாதாரண பெண் என்று உனக்கு யார் சொன்னது?” கோபமாக கேட்ட பின்பே தான் உதிர்த்த வார்த்தைகளின் விபரீதத்தை உணர்ந்தார் அடிகளார். பரிவாதனியின் தலைச் சட்டென்று உயர்ந்தது. உபாத்தியாயரும் தான் இருந்த ஆசனத்தின் கைப்பிடியை அழுத்தி பிடித்தார்.

“பரிவாதனி சாதாரண பெண் இல்லாமல் வேறு யார் அடிகளே?”

“அவள் கலைவாணி அல்லவா மகிழினி!” பேச்சைச் சாதுர்யமாக திசைத் திருப்பினார் அடிகளார்.

“ஓஹோ!”

“மன்னர் பிரானிற்குக் கலைகளில் ஆர்வம் அதிகம் என்பது நீ அறியாததா? அதிலும் பரிவாதனியின் இசை ஞானத்தில் அவருக்கு அலாதி பிரியம் உண்டு.”

“ம்… இது தெரிந்திருந்தால் நானும் வீணைக் கற்று கொண்டிருப்பேன்.”

“அடிகளே! இதற்கு எனக்கு முழு சம்மதம். முதலமைச்சரின் முடிவு என்னவாம்?”

“அவர் ஏற்கனவே சம்மதம் சொல்லியாகிவிட்டது.”

“அப்படியா! மிகவும் சந்தோஷம்! பரிவாதனியின் மணாளன் பல்லவ சாம்ராஜ்யத்தின் உப சேனாதிபதி!”

“உபாத்தியாயரே… பரிவாதனியின் அழகிற்கும் திறமைக்கும் அவள் பல்லவ சாம்ராஜ்யத்தின் மகாராணியாக போகவே தகுதி பெற்றவள்.” கடுகடுத்த குரலில் வந்தது மகிழினியின் பேச்சு.

“வேண்டாம் வேண்டாம்! அது ஆபத்து.” மீண்டும் அடிகளார் வாயை விட்டார்.

“எது ஆபத்து அடிகளே?” மகிழினிக்கு அடிகளாரின் வாயைப் பிடுங்கினால் நிறைய உண்மைகள் வெளிவரும் என்று புரிந்தது.

“அம்மா மகிழினி, நீங்கள் இருவரும் உள்ளே சென்று எங்களுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வாருங்கள்.” உபாத்தியாயர் பெண்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு அடிகளாரை நோக்கி திரும்பினார்.

“உபாத்தியாயரே… பரிவாதனி ஏதும் சொல்லவில்லையே?”

“அவளுக்கு வெட்கத்தில் என்ன பேசுவது என்று புரிந்திருக்காது. மற்றபடி உப சேனாதிபதியை வேண்டாம் என்று சொல்ல காரணம் ஏதுமில்லையே?”

“ஆமாம் ஆமாம்.” வரப்போகும் விபரீதம் தெரியாமல் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டார் அடிகளார்.
***

காஞ்சி கோட்டையின் வெளிப்புறம் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. பல்லவ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி கலிப்பகையாரும் உப சேனாதிபதி பொதிகை மாறனும் பொறுக்கி எடுக்கப்பட்டிருந்த படைத்தலைவர்களுக்குப் பயிற்சி அளித்து கொண்டிருந்தார்கள்.

பூரண கவசம் அணிந்திருந்த படைத்தலைவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் கண்ணுங் கருத்துமாக ஈடுபட்டிருந்தார்கள்.

முதலில் காலாட்படையை நடத்துவதற்கான பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது. வீரர்களை எப்படி அணிவகுத்து நிற்க வைப்பது, போரின் போது அவர்களை எப்படி வழிநடத்துவது, ஆணைகளை எப்படி பிறப்பிப்பது என்று பொதிகை மாறன் ஒவ்வொன்றாக தெளிவுபடுத்தி கொண்டிருந்தான்.

அமரா தேவியும் அந்த பயிற்சியில் மும்முரமாக கலந்து கொண்டாள். பல்லவ மகாராஜா தன் பெண் பிள்ளையைத் தன் ஆண் பிள்ளைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் வளர்ப்பது நாடறிந்த விஷயம் என்பதால் அதைப்பற்றி யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

முதலமைச்சரும் மன்னர் பெருமானும் அரண்மனையின் மேல் உப்பரிகையில் இருந்த படி கீழே நடந்த பயிற்சிகளைப் பார்த்து கொண்டிருந்தார்கள்.
முதலமைச்சரே! கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை இன்னும் ஆழப்படுத்த சொல்லுங்கள்.”

“மன்னவா! என்ன திடீரென்று இப்படி சொல்கிறீர்கள்?”

“என் மனதிற்குள் சர்வ சதாகாலமும் இந்த காஞ்சி குமரியைப் பற்றிய கவலைதான் இருக்கிறது அமைச்சரே.”
“ஏன் மன்னவா?”

“தென் பாரதத்திலேயே இன்று காஞ்சியைப் போல கலைகளில் சிறந்த நகரம் வேறேதுமில்லை. இந்த கன்னியை அபகரித்து கொள்ள இன்றைக்குப் பல இளம் அரசர்கள் ஆசைக் கொண்டிருக்கிறார்கள்.”

“ஆசை வருவது இயல்புதானே மன்னவா?”

“ஆமாம்… அதனால்தான் கவலையும் அதிகமாகிறது அமைச்சரே.”

“இதில் கவலைப்பட என்ன இருக்கிறது மன்னவா?”

“போரை நினைத்து நான் கவலைப்படுகிறேன் அமைச்சரே.” இதை மன்னன் சொன்னபோது முதலமைச்சர் மன்னனை வியப்பாக பார்த்தார்.

“ஆம் அமைச்சரே… போரென்று ஒன்று வந்துவிட்டால் இந்த நகரிற்குள் நடக்க இருக்கும் நாசங்களை எண்ணி பாரும்!” மன்னவனின் நாசியிலிருந்து இப்போது ஒரு சோக பெருமூச்சு வந்தது. மீண்டும் அவனே தொடர்ந்தான்.

“கல்வி கூடங்களும் கலாசாலைகளும் சிற்ப கூடங்களும் கோயில் கோபுரங்களும் அழிந்து போகும்… இத்தனையும் அழிந்து போவதற்கா மகேந்திர வர்மன் இத்தனைப் பாடு படுகிறான்!”

“புரிகிறது மன்னவா.”

“பல்லவ சாம்ராஜ்யத்தில் இணையில்லா வீரத்தோடு பலர் பிறந்திருக்கலாம், ஆனால் என் மகனைப் போல ஈடில்லா கலை ஆர்வத்தோடு பிறந்தவர்கள் யாருமேயில்லை முதலமைச்சரே!”

“உண்மை.”

“அவன் பார்த்து பார்த்து அலங்கரிக்கும் இந்த காஞ்சி சுந்தரி மேல் மற்றவர்களின் சுண்டு விரல் கூட பட்டு விடக்கூடாது அமைச்சரே.” உணர்ச்சி பொங்க பேசிய மன்னனின் கடைசி விண்ணப்பத்திற்கு மட்டும் அமைச்சர் பதில் சொல்லவில்லை. அது முடியாத காரியம் என்றும் அவருக்குத் தெரியும்.

‘காய்த்த மரத்திற்குக் கல்லடி அதிகம்தானே!’ அது கூடாது என்றால் எப்படி? பெண் அழகாய் இருந்தால் வாலிபர்கள் விட்டு விடுவார்களா? பார்க்கத்தான் செய்வார்கள்! சொந்தமாக்கி கொள்ள முயற்சிப்பார்கள். இது இயற்கை அல்லவா!

போர் பயிற்சிகள் சிறிது நேரத்தில் நிறைவு பெற்றுவிட அனைவரும் கலைந்து போய்விட்டார்கள். அந்த இடமே இப்போது அமைதியாக இருந்தது.‌
உச்சி வெயில் நேரம் என்பதால் மதிய போஜனத்தை முடித்த மகாராஜா உப்பரிகைத் தாழ்வாரத்தில் அமர்ந்து காஞ்சி மாநகரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஜனசந்தடி லேசாக அடங்கி இருந்தது. இருந்தாலும் மக்களின் நடமாட்டம் ஆங்காங்கே இருக்க அதைப் பார்த்த வண்ணம் இருந்தார் சிம்ம விஷ்ணு மகாராஜா.
இப்போதெல்லாம் சீனர்களின் வருகைச் சிறிது சிறிதாக தமிழகத்தை நோக்கி ஆரம்பித்திருந்தது. ஒன்றிரண்டு சீனர்களும் நகரிற்குள் வலம் வருவதை மன்னரும் கவனித்தார்.

“ஏது… இன்று மன்னருக்கு ஓய்வெடுக்க சற்று நேரம் கிடைத்திருக்கிறது போல தெரிகிறது?!” குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார் மகாராஜா. அவரது பட்டமகிஷி விஜயமகா தேவி வந்து கொண்டிருந்தார். நடுத்தர வயதைத் தாண்டி இருந்தாலும் அந்த முகத்தில் அரச மகளிர்க்கே உரித்தான மிடுக்குத் தெரிந்தது.

“வா தேவி.” புன்னகையுடன் அழைத்தார் மகாராஜா. தான் சாய்ந்திருந்த மஞ்சத்திலேயே மனைவிக்கும் இடமிருப்பதை அவர் கைச் சுட்டிக்காட்ட அங்கேயே அமர்ந்தார் ராணி.

“நேரம் எங்கே கிடைக்கிறது தேவி! இன்று நானே சற்று நேரத்தை ஓய்விற்காக எடுத்து கொண்டேன்.”

“ஆமாம் மகாராஜா! நமக்கும் வயது போகிறது, உங்கள் உடல் நலத்திலும் நீங்கள் இனிமேல் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.”
“சில நாட்களாக என்னுள் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது தேவி.”

“என்னிடம் சொல்லக்கூடியதா ஸ்வாமி?”

“உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் நான் சொல்ல போகிறேன் தேவி! வேறு ஒன்றுமல்ல… இந்த ராஜ்ஜிய பாரத்தை மகேந்திரன் கையில் ஒப்படைத்துவிட்டு தேசாந்திரம் போகலாம் என்று நினைக்கிறேன்.”

“தேசாந்திரமா?”

“ஆமாம் தேவி! பாரதத்தைத் தாண்டி இன்று பல தேசங்களில் பல ராஜ்ஜியங்கள் உருவாகிவிட்டன, புதுப்புது நாகரிகங்கள் வளர்ந்து வருகின்றன.”

“அமரா சொல்ல நானும் கேள்விப்பட்டேன்.”

“புதிய மதங்கள் பல உருவாகியுள்ளன, முன்னைப் போல அல்லாது இப்போது நமது கடற்படையும் ஸ்திரப்பட்டிருப்பதால் கடல் தாண்டி கூட நாம் பிரயாணிக்கலாம்.”

“சீனர்கள் கூட இப்போது இங்கு வருகிறார்களாமே ஸ்வாமி?”

“அதோ பார்.” மன்னர் சுட்டிக்காட்டிய இடத்தில் கண்ணைத் திருப்பினார் தேவி.

“யாரது? பார்க்க வித்தியாசமாக இருக்கிறானே?”

“அவனும் ஒரு சீனர்தான், பார்த்தவுடனேயே இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம்.”
“ஆமாம்.” இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது மகேந்திர பல்லவன் உள்ளே நுழைந்தான். மகனைப் பார்த்ததும் மகாராணியின் முகம் மலர்ந்தது.
“வா மகேந்திரா!” அன்னையின் அழைப்பில் பரிவு இருந்தது. ஆனால் இளவரசனின் முகத்தில் அது எதிரொலிக்கவில்லை. அவன் முகம் கவலையில் ஆழ்ந்து கிடந்தது.

“மகேந்திரா! முகம் ஏன் களையிழந்து போயிருக்கிறது?” சட்டென்று மகாராணி கேட்க மன்னனும் மகனின் முகத்தைப் பார்த்தார்.

“அதற்குக் காரணம் உங்களுக்கே தெரியும் அன்னையே.” மகேந்திரனின் கண்கள் இப்போது நகரத்தை வெறித்தது.
“எனக்குத் தெரிந்தால் உன்னையே நான் கேட்பேனா?” மீண்டும் கேட்டார் விஜயமகா தேவி.

“என் மனது புரிந்த பிறகும் வேறு ஏற்பாடுகளில் இறங்குகிறீர்கள் என்றால் இதற்கு என்ன அர்த்தம் அன்னையே?” மகனின் பேச்சைக் கேட்ட பெற்றோர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் ஒரு நொடி பார்த்து கொண்டார்கள்.

“பேசுவதைத் தெளிவாக பேசு மகேந்திரா!” மகாராஜாவின் குரல் கடுமையாக வந்தது. அந்த கடுமையில் மகேந்திரன் ஒரு நொடி நிதானித்தான். ஆனாலும் பேச வந்த விஷயத்தை இன்றைக்குப் பேசி முடித்துவிடுவது என்ற உறுதி அவன் முகத்தில் இப்போது தெரிந்தது.

“நான் பரிவாதனியை பற்றி சொல்கிறேன்.” தெளிவாக வந்தது இளவலின் குரல்.

“பரிவாதனிக்கு என்ன?” மகாராஜாவும் உனக்கு நான் தந்தை என்று நிரூபித்தார்.

“பரிவாதனிக்கு நீங்கள் கல்யாண ஏற்பாடு செய்யவில்லை?”

“ஆமாம் செய்கிறேன், வயதிற்கு வந்த பெண் வீட்டில் இருந்தால் இப்படியெல்லாம் நடப்பதுதானே!”

“உங்கள் மகன் மனதில் அந்த பெண் இருக்கிறாள் என்று தெரிந்தும் நீங்கள் இந்த ஏற்பாடுகளில் இறங்கினால் அதற்கு அர்த்தம் என்ன தந்தையே?” மகேந்திரன் நேருக்கு நேராக தன் தந்தையைப் பார்த்து கேட்டான்.

மகாராஜா இதற்கு சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். அவர் மீண்டும் பேச ஆர்பித்த போது அவர் குரலில் அளவுகடந்த வருத்தம் தெரிந்தது.

“பல்லவ குமாரா! உன் ஆசை நிறைவேற எந்தவிதமான வாய்ப்புகளும் இல்லை. அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிடு!”

“அது சாத்தியமில்லை தந்தையே.”

“மகேந்திரா! உன் தந்தை ஒரு விஷயத்தைச் செய்தால் அதில் நியாயம் இருக்கும் என்று நீ அறிய மாட்டாயா?”

“நான் பரிவாதனியின் மீது ஆசைப்படுவதால் யாருக்கு என்ன கஷ்டம் வந்து விடப்போகிறது அன்னையே?”

“யாரிற்கும் எந்த கஷ்டமும் இல்லை, ஆனால் அதுவே அந்த சிறு பெண்ணின் உயிருக்கு ஆபத்தாகிவிடும், அது உனக்குப் பரவாயில்லையா மகேந்திரா?”

“தந்தையே… இது என்ன புதுக்குழப்பம்? நான் பரிவாதனியை மணந்து கொண்டால் எப்படி அவள் உயிருக்கு ஆபத்து வரும்?”

“இது புதுக்குழப்பம் அல்ல மகேந்திரா, பதினெட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குழப்பம்.”

“அது என்னவென்று நான் அறியலாமா?”

“முடியாது.”

“ஏன்?”

“யாரிடமும் சொல்வதில்லை என்று மரணப்படுக்கையில் இருந்த ஒரு மாவீரனுக்கு நான் சத்தியம் செய்திருக்கிறேன்.” இதை மகாராஜா சொன்ன போது விஜயமகா தேவியின் கண்கள் பொலபொலவென்று கண்ணீரை உகுத்தது.

“அப்படியென்றால்… பரிவாதனிக்கு திருமணம் செய்வதில் எந்த குழப்பமும் இல்லை?”

“இல்லை.”

“என்னை மணந்து கொள்வதில்தான் குழப்பம் இருக்கிறது.”

“ஆமாம்.”

“அது எப்படி?”

“ஒரு உப சேனாதிபதிக்குத் திருமணம் நடந்தால் பெண் யார், அவள் பூர்வீகம் என்ன என்றெல்லாம் உலகம் ஆராயாது… அதேவேளை பல்லவ குமாரனுக்குத் திருமணம் நடந்தால் உலகமே அதைத் திரும்பி பார்க்கும், அந்த இடத்தில் அவன் பட்டமகிஷியாக நிற்கும் பெண் யாரென்று விசாரிக்கும்.”

“அப்படியென்றால் பரிவாதனி இப்போது மறைந்து வாழ்கிறாளா?” கவலையோடு கேட்ட மகனிற்கு ஆமென்று தலையாட்டினார் தந்தை.

“என் மனைவியைக் காத்துக்கொள்ள எனக்குத் தெரியும் தந்தையே.”

“இதற்கு ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன் மகேந்திரா!”

“ஏன்?”

“உன் ஒருத்தன் ஆசைக்காக இந்த பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் மூழ்வதை நான் அனுமதிக்க மாட்டேன்.”

“பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் மூழ்வது புதிதல்லவே?”

“போரிற்கு நான் பயப்படவில்லை மகேந்திரா! நாட்டைக் காப்பாற்றவோ இல்லை ராஜ்ஜிய விஸ்தரிப்பிற்காகவோ போர் மூண்டால் அது நியாயம், அதை விடுத்து உன் ஒருவன் ஆசைக்காக இந்த பல்லவ சாம்ராஜ்யத்தில் இரத்த ஆறு ஓடுவதையோ இணையற்ற ஆயிரம் ஆயிரம் தமிழ் வீரர்களைப் பலிகொடுக்கவோ நான் தயாரில்லை.”

“அப்படியென்றால்…” மகேந்திரனின் நெஞ்சு வெடித்துவிடும் போல வலித்தது.

“எனக்கு என் நாடும் அதன் குடிகளும்தான் முக்கியம், அதன் பிறகுதான் என் மனைவி மக்கள்… பல்லவ சாம்ராஜ்யத்தில் ஒரு வீரனின் ஒற்றை ரத்த துளியும் இந்த நாட்டிற்காக அல்லாது என் வீட்டிற்காக சிந்தாது, சிந்தவும் நான் அனுமதிக்க மாட்டேன்! நீ போகலாம்!” மன்னரின் ஆணையில் மகேந்திரன் விர்ரென்று வெளியே போய்விட்டான். விஜயமகா தேவியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!