103977454_653445081909496_2472649225753995686_n-1c92c320

UUU–EPI 21

அத்தியாயம் 21

இப்பொழுது நாம் அனுபவித்து ருசிக்கும் சாக்லேட் வருங்காலத்தில் அழிய கூடிய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. 2050ல் சாக்லேட் அதிகமாக பயிரிடப்படும் கானா மற்றும் இந்தோனேசியாவின் தட்ப வெப்ப நிலை மாறுதல் அடையக்கூடும் எனவும் மழை பொழிவு குறையக் கூடும் எனவும் சொல்லப்படுகிறது. அதனால் கொக்கோ பயிரிடுதல் பாதிக்கப்படும் என அனுமானித்திருக்கிறார்கள்.

 

ரிஷியின் கண்ணீர் துளியை ஒற்றை விரலால் துடைத்த சிந்தியா, அவ்விரலை தனது வாயினுள் வைத்துக் கொண்டாள். திகைத்துப் போன ரிஷி,

“என்னடி செய்யற?” என கேட்டான். கண்ணீர் பட்டென நின்றிருந்தது அவனுக்கு.

“என் ப்ரோ சொல்வான், ஆம்பளைங்க சட்டுன்னு அழ மாட்டாங்களாம்! எல்லாத்தையும் உள்ளுக்குள்ளே வச்சிக்கிட்டு ரொம்ப தைரியசாலி மாதிரி ஆக்டிங் குடுப்பாங்களாம். அப்படிப்பட்டவங்க, தான் ஆம்பளைன்ற ஈகோவா துக்கிப் போட்டுட்டு கலங்கிப் போய் கண்ணீர் விட்டா, அவங்க சிந்தற ஒவ்வொரு கண்ணீர் துளியும் கங்கை நீர் மாதிரி புனிதமானதாம்! கங்கை நீர் நான் குடிச்சது இல்ல, அதான் உன் கண்ணீர ருசிச்சு மோட்சம் வாங்கிட்டு இருக்கேன்”  

சட்டென அவளை இறுகக் கட்டிக் கொண்டு முகம் முழுக்க முத்தமிட்டான் ரிஷி.

அவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்து மென்மையாக புன்னகைத்தாள் சிந்தியா.

அவள் கன்னத்தைத் தன் இரு கரங்களாலும் பற்றி கண்களை ஆழப் பார்த்து,

“என்னோட கோபத்த, துக்கத்த, வெறுமைய, எரிச்சல எல்லாம் ரிமேட் கண்ட்ரோல் வச்சு சேனலை மாத்தற மாதிரி பட்டு பட்டுன்னு மாத்தி விடற மேஜிக் இருக்குடி உன் கிட்ட! சூனியக்காரிடி நீ” என சொன்னான் ரிஷி.

மெலிதாக நகைத்தாள் சிந்தியா.

“ஆம்பளைங்க அழக்கூடதுன்னு நான் சொல்ல மாட்டேன் ரிஷி! ஆனா உன் கண்ணுல தண்ணி வந்தா எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு! எனக்கும் அழனும் மாதிரி தோணுது! இனிமே என் முன்னாடி அழுதா கை வைச்சுத் துடைக்க மாட்டேன், வாய் வச்சுத்தான் துடைப்பேன். இன்னும் ஒரு படி மேல போய் ட்ராகுல்லா ரத்தம் உறிஞ்சற மாதிரி உன் கண்ணுல வாய் வச்சு கண்ணீர எல்லாம் உறிஞ்சிடுவேன், பார்த்துக்கோ!” என செல்லமாக மிரட்டினாள்.

“ஓஹோ! ரத்தக் காட்டேரிக்கு அக்கா மக இந்த கண்ணீர் காட்டேரியா! நீ என் பக்கத்துல இருந்தா இந்த ரிஷிக்கு ஏன் இனிமே கண்ணீர் வரப்போகுது! இருப்பியா சிந்தியா?” கண்ணில் பயத்தைத் தேக்கிக் கேட்டான் ரிஷி.

அவள் அண்ணா யாரென சொன்னதில் இருந்து இவனுக்குள்ளே பிரளயமே வெடித்தது. ஆரம்பத்தில் இருந்தே ஏன் தன்னை தள்ளி வைத்தாள் என புரிந்தது.

நிலாவின் மெல்லிய வெளிச்சத்தில் அவன் கண்களில் தெரிந்த கலக்கத்தைக் கண்டு கொண்டவள்,

“கண்டிப்பா இருப்பேன் ரிஷி! இவ்ளோ அழகா, ஹேன்ட்சமா, மேன்லியா ஒரு அடிமை சிக்கினா விட்டுருவேனா! குரும்பாடு தானாகவே வந்து என்னை குருமா போடுன்னு சொன்னா, மசாலா கம்பெனி ஓனர் மசமசன்னு யோசிப்பனா! ஒரே வெட்டு, ஃபுல் கட்டு!” என சொல்லி கலகலவென சிரித்தாள்.

மனம் விட்டு சிரித்தவன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டான். அவன் இருந்த மனநிலைக்கு வார்த்தைகள் வெளி வராமல் சத்தியாகிரகம் செய்தன. அவள் உச்சந்தலையில் மெல்லிய முத்தமிட்டவன்

“சாரிம்மா! சோ சாரி!” என வாய்க்குள்ளேயே முணுமுணுத்தான்.

“டோண்ட் சே சாரி ரிஷி! சம்பவம் நடந்தப்ப இருந்த சிந்தியாவுக்கும், உங்க கூடலாம் பழகி பாசத்தை பங்குப் போட்டுக்கிட்ட இந்த சிந்தியாவுக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு. இந்த சிந்தியாவுக்கு இதெல்லாத்தையும் நடத்தி வைக்கறவன் மேலத்தான் கோபமே தவிர, வேற யார் மேலயும் இல்ல. மேலோகத்துல கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்துட்டு, ‘இவ்ளோ பாவம் செஞ்சிருக்கியா, இரு வைக்கிறேன் ஆப்பு! இவ்ளோ புண்ணியம் பண்ணிருக்கியா சபாஷ்டா மாப்பு’ன்னு நம்ம லைப்ல விளையாட்டிட்டு இருக்கானே அவன் மேலத்தான் என் கோபம் எல்லாம். பட் யூ சீ, நாம இப்படி எல்லாம் ப்ளேம் பண்ணுவோம்னு தான் அப்பவே கீதாசாரத்துல,

‘உன்னுடையதை எதை இழந்தாய்

எதற்காக அழுகிறாய்?

எதை கொண்டு வந்தாய்

அதை நீ இழப்பதற்கு?’னு சொல்லி வச்சிட்டாரு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.”

ஆச்சரியமாகப் பார்த்தான் ரிஷி.

“என்ன பார்க்கற? திருவள்ளுவர் உங்க தாத்தாவான்னு நந்தனாகிட்ட கேட்டவளா கிருஷ்ணர கோட் செய்யறான்னு முழிக்கிறியா? தமிழ், ஆங்கிலம், மலாய், மேண்டரின், ஜெப்பனீஸ் இலக்கியம் கூட எனக்குத் தெரியும்! அந்த வழிப்பறி அப்போ, படபடப்பா இருந்த நந்துவ சிரிக்க வைக்கத் தான் வள்ளுவர் தாத்தாவ வம்பிழுக்க வேண்டியதா போச்சு!” என சொல்லி புன்னகைத்தாள்.

“ஓ வாவ்!”

தோண்ட தோண்ட இவ்வளவு பொக்கிஷமா இவளுள்ளே என்பதை போல பார்த்தான் ரிஷி.

அவள் சிந்தனைகள் எல்லாம் வெறெங்கோ இருந்தன. கண்கள் நிலவை வெறித்திருக்க கால்கள் அது பாட்டுக்கு தண்ணீரை அளைந்து விளையாடியது.

“எனக்கு அவன்னா ரொம்ப இஸ்டம் ரிஷி!” என அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அவள் குரல்.

“உங்கள மாதிரி ஒட்டிப் பிறக்கல! ஆனாலும் எங்களுக்குள்ள ஒரு ஸ்ட்ரோங் பாண்டிங் இருந்துச்சு! எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சப்போ தில்லும்மாவ பிடிச்சு, ஏன் இப்படிலாம் நடக்குது இங்கன்னு உலுக்கி எடுத்தேன். அவங்க சொன்னது பாதியும், நான் புரிஞ்சிகிட்ட மீதியும் சொல்லறேன். எங்களப் பற்றி ஆரம்பத்துல இருந்து சொன்னாத்தான் நான் ஏன் உங்க கிட்ட வந்தேன்னு உன்னால புரிஞ்சுக்க முடியும் ரிஷி” என்றவள் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவன் கரங்கள் இவள் கரங்களைப் பொத்திப் பிடித்துக் கொண்டது.

அந்தக் காலத்தில் தோட்டப்புறத்தில் வேலை செய்வதற்காகத்தான் இந்தியர்களை இந்நாட்டுக்கு வரவழைத்தார்கள். ரயில் பாதை போடுவது, ரப்பர் மரம் சீவுவது போன்ற உடல் உழைப்புத் தேவைப்படும் வேலைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள்தான், மலேசியா சுதந்திரமடைய காலப்போக்கில் ஓரளவு முன்னேறி மலேசிய இந்தியர்கள் ஆனார்கள்.

ஆனால் அப்பொழுதே நகை, பட்டு வியாபாரம் செய்யவும் இந்தியாவில் இருந்து சிலர் தருவிக்கப்பட்டார்கள். அப்படி வந்தவர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்தான் சிவசு. சிவசுவின் முன்னோர்கள் நகை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்கள். அடுத்து அடுத்து வந்த ஜெனெரேஷனால் இன்னும் நல்ல முன்னேற்றம் தான் ஏற்பட்டது வியாபாரத்தில்.

ஆரம்பப்பாடசாலை வரை படித்த சிவசு, அதற்கு மேல் படிப்பு ஏறாமல் தந்தையோடு கடைக்கு வந்தமர்ந்தார். படித்தும் வியாபாரம் தானே பார்க்கப் போகிறான், அதற்கு இப்பொழுது இருந்தே பார்க்கட்டும் என அவர் தந்தையும் விட்டுவிட்டார். அது என்னவோ லட்சுமி வாசம் செய்த அவர்களின் குடும்பத்தில் சரஸ்வதி காலை வைக்கவே மாட்டேன் என அடம்பிடித்தாள்.

தந்தையின் இறப்புக்குப் பிறகு மொத்த வியாபாரமும் சிவசுவின் கைக்கு வந்தது. சிறு வயதில் இருந்தே ஜாதி பெருமை, பாரம்பரியத்தின் அருமை எல்லாம் போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தவரின் ரத்தமெல்லாம் பணக்காரத் திமிர் ஓடியது.

பகட்டாய் நடப்பது, கீழ் ஜாதி மக்களை அருவருப்பாய் பார்ப்பது, மனதில் பட்டதை பட்டென சொல்லி அடுத்தவர்களின் மனதை புண்படுத்துவது எல்லாம் அவரின் தந்தையைப் போலவே சொல்லிக் கொடுக்காமலே தானாகவே வந்தது அவருக்கு.

பெற்றவர்கள் இருக்கும் பொழுதே அவர்கள் ஜாதி பெண்ணான திலகவதியை திருமணம் செய்து வைத்தார்கள். அவரும் நகை, பணம் என சிறந்த சீருடன் தான் வாழ வந்தார். அவர்களின் வாழ்க்கை இரண்டு பிள்ளைகளோடு சந்தோஷமாகவே சென்றது.

இரண்டாவது மகனுக்கு ஐந்து வயது இருக்கும் போதுதான் பெரிய இடி ஒன்று சிவசுவின் தலையில் இறங்கியது. தங்கத்தை உரசிப் பார்த்து பியூர் கோல்டா, பித்தளை மோல்டா என கரேக்டாக கண்டுப்பிடிக்கும் சிவசுக்கு மனிதனை உரசிப் பார்த்து அவர்களின் தராதாரம் அறிய தெரியவில்லை. அவர் கண்களை ஜாதி எனும் மாயவலை குருடாக்கி வைத்திருந்தது. மேனேஜராக தனது படித்த ஜாதிக்காரரை நம்பி வேலைக்கு வைத்திருக்க, அவரோ கொஞ்சம் கொஞ்சமாக பணம் சுருட்டியது பத்தாமல், சிவசு வியாபாரத்துக்கு வாங்கி வைத்திருந்த பல கோடி பெருமானமுள்ள தங்கக்கட்டிகளுடன் எஸ்கேப் ஆகியிருந்தார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்க, கையில் இருந்த முக்கால் வாசி பணத்தை எல்லாம் மொத்தமாகப் போட்டு தங்கக்கட்டி வாங்கி இருந்தார் சிவசு. தீபாவளி மாதம்தான் வியாபாரம் சூடு பிடிக்கும் மாதம். போட்ட பணத்தை லம்ப்பாக அள்ளி விடுவார் அந்த ஒரு பண்டிகையிலேயே!

அடுத்து ரோலிங் செய்ய பணமும் இல்லை, தங்கமும் இல்லை. இடிந்துப் போனார் சிவசு. போலிசுக்கு போகவும் முடியாது. பாதிக்கு பாதி கருப்பு பணம். படித்தவன் என தன் ஜாதிக்காரனை நம்பி கூடவே வைத்துப் பார்த்ததுக்கு பட்டை நாமம் தான் மிச்சமாகியது சிவசுக்கு.

வேறு வழி இல்லாமல் சில்லறை கடன்களை எல்லாம் வீட்டையும், கடையையும் விற்று அடைத்தார். மீதி இருந்த பணத்துக்கு சின்னதாக ஒரு வீடு வாங்கி குடி போனார்கள். அடுத்து என்ன என ஓய்ந்து போய் இருந்தவரை, ‘வட்டம்டா நானு’ என கர்மா புரட்டிப் போட்டு அடித்தது.

மற்றவர்களுக்கு கொடுத்தது எல்லாம் அவருக்கு திரும்பி பல மடங்காய் வந்தது. விழாக்கள் என எங்கும் போக முடியவில்லை, பார்ப்பவர்கள் எல்லாம் கேலி பேசினார்கள். முன்னால் விட்டு பின்னால் பரிகசித்தார்கள்.

“பணக்காரன்னு என்னா ஆட்டம் ஆடனான்! இப்போ ரெண்டு ரூமு வீட்டுல இருக்கானாம்! குடும்பமே பொண்டாட்டி நகையை வித்து தான் சோறு திங்கறாங்களாம்”

“படிக்காத முட்டாப்பயலாம் வியாபாரம் செஞ்சு என்னத்த கிழிக்கப் போறான்!”

“வீட்டுக்குப் போனா ஒரு வாய் தண்ணி தரமாட்டான்டா! இத்தனைக்கும் நான் ஒரே ஜாதிதான்! ஆனா வேற பிரிவு! நொடிச்சுப் போனதும் என் கிட்ட வந்து லோன் எதாச்சும் பார்த்து குடுக்கறியான்னு பதவிசா கேக்கறான்! படிச்சு பேங்க்ல வேலை செஞ்சு என்ன புண்ணியம், அன்னாடம் காய்ச்சிதானேன்னு கிண்டல் அடிச்சான் அப்போ! பணம் பட்டுன்னு பறந்து போகும்! படிப்புத்தானே சாஸ்வதம்னு இப்போ என் கிட்ட வந்து கெஞ்சறப்போ புரிஞ்சிருக்கும் அவனுக்கு”

இப்படி வகை வகையாய் அவர் மனதை குத்திக் கிழித்தார்கள். பணம் இருந்தாலும் அதை காக்க படிப்பும் வேண்டும் என மனதில் ஆழமாய் பதிந்து போனது சிவசுவுக்கு. தன்னை முட்டாள் என தூற்றியவர்களின் நடுவே எங்கள் வீட்டிலும் சரஸ்வதி வந்து பாய் போட்டு படுப்பாள் என காட்டி விட துடித்தார். குழந்தைகளில் யாரையாவது நன்றாக படிக்க வைத்து டாக்டரோ, வக்கீலோ ஆக்கி விட வேண்டும் என மனதில் உறுதி பூண்டார். அந்தக் காலத்தில் டாக்டரையும் வக்கீலையும் மட்டும்தானே படித்தவன் என ஒத்துக் கொள்வார்கள். ஏன் இப்பொழுது கூட அப்படித்தானே நடக்கிறது! டாக்டருக்குப் படி என எத்தனை குழந்தைகளை தற்கொலை வரை துரத்துகிறார்கள் பெற்றவர்கள்! நாட்டில் எல்லோரும் டாக்டரானால், பீஸ் கொடுப்பவர்களுக்கு எங்கே போவது!!!

வியாபாரம் மட்டுமே தெரிந்த மனிதருக்கு, வீட்டில் இருப்பது கை உடைந்ததைப் போல இருந்தது. நகை வியாபாரம் என்பது பணம் இல்லாத இந்த நேரத்தில் வெறும் கானல் நீர் என புரிந்துப் போனவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். பிள்ளைகளை வேறு படி படி என போட்டு வாட்டினார். அப்பாவின் ஜீன் அப்படியே ரத்தத்தில் ஊறி போன அவர்களுக்கும் படிப்பு பாகற்காயாய் கசந்தது. பார்டரில் பாஸ் ஆகவே மூச்சு முட்டிப் போனார்கள்.

இந்த நேரத்தில் தான் தில்லும்மா சிவசுவுக்கு முன்னேற பாதை அமைத்துக் கொடுத்தார்.

“என்னங்க”

“சொல்லு தில்லு”

“இப்படியே மோட்டுவளைய பார்த்துட்டு இருந்தா எப்படிங்க? இருக்கற பணமும் கொஞ்சம் கொஞ்சமா கரையுது”

“பொறந்ததுல இருந்து தங்கக்கட்டி, நகை, கைக்கூலி, சேதாரம்னு வளந்தவன்டி நானு! இப்போ வெளியே போய் என்ன வேலை தேடறதுன்னு கூட புரியல. பூரா பயலும் முன்ன விட்டு பின்ன சிரிக்கறானுங்க. கயித்துல தொங்கிடலாமான்னு இருக்கு தில்லு”

“என்ன பேச்சு இது? நம்ம நம்பி ரெண்டு புள்ளைங்க இருக்காங்க! இப்படி மனச விட்டுடலாமா? நான் ஒன்னு சொன்னா கேப்பீங்களா?”

“சொல்லு! இத்தனை காலமும் நான் வச்சது தான் சட்டம்னு இருந்துட்டேன்! இனியாச்சும் நீ சொல்றத கேக்கறேன்”

“என் அம்மா வீட்டுல போட்ட நகைங்க எல்லாம் அப்படியேத்தானே இருக்கு! அத வித்து வேற வியாபாரம் தொடங்கலாமா? நகை வியாபாரம் செய்யற அளவுக்கு வராதுங்க! அதான் வேற எதாச்சும் செய்யலாம்னு சொல்றேன்”

“வேற என்னடி தெரியும் எனக்கு?”

“எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேத்தான் பொறக்கறமா? வளர வளர கத்துக்கறோம்ல! அதே போல கத்துக்கலாம்”

“சரி சொல்லு, என்ன ஐடியா வச்சிருக்க”

“எங்கக்கா சொந்தத்துல யாரோ அவங்களோட மசாலா மில்ல வித்துட்டு இந்தியாவுக்கு திரும்பி போக போறாங்களாம். சின்ன மில்லுதான். நாம வேணா வாங்கி நடத்திப் பார்க்கலாமா?”

“மசாலா மில்லா?” தயங்கினார் சிவசு.

“ஏன்? அதுக்கு என்ன குறைச்சல்? நகை பணக்கார வர்க்கத்துக்கு மட்டும்தான்! ஆனா மொளகா தூளு அப்படி இல்ல! பாமரனுல இருந்து பணக்காரன் வரைக்கும் பாவிப்பான். சாப்பாடு சார்ந்த தொழிலுங்க! அன்னலெட்சுமி, லெட்சுமிய கண்டிப்பாக் கூட்டிட்டு வருவா! என் வாக்குப் பலிக்கும் பாருங்களேன்”

தில்லும்மாவின் வாக்கு தெய்வ வாக்காய் மாறிப்போனது. வியாபார நுணுக்கங்களைக் கற்று தேர்ந்து, முட்டி மோதி தனக்கென தனி இடத்தைப் பிடிக்க போராடி வெற்றி கண்டார் சிவசு. பிள்ளைகள் வளர்ந்து தோள் கொடுக்க, மிளகாய் தூளை மட்டும் மேய்ன்னாக வைத்திருந்தவர்கள், பாயாசம் மிக்ஸ், அதிரச மிக்ஸ் வரை பாக்கேட் போட ஆரம்பித்தார்கள். சுத்தமாக, சுகாதாரமாக தயாரித்ததோடு ஐந்து பாக்கேட் வாங்கினால் எவர்சில்வர் டம்ளர் பரிசு, குலுக்கல் முறையில் இந்தியாவுக்கு ட்ரீப் என பல யுக்திகளை கொண்டு முன்னேறினார்கள். முன்னேறி வந்தாலும் தன் பிள்ளைகள் படிப்பில் சோபிக்கவில்லையே என உள்ளுக்குள் மிகுந்த வருத்தம் சிவசுவுக்கு.

மீண்டும் பெரிய வீடு வாங்கி குடி போனார்கள். சிவராமனுக்கு படிப்பு வராமல் போனாலும், படித்தப் பெண்ணாய் பார்த்து ஜாம்ஜாமென திருமணம் செய்து வைத்தார். கல்யாணம் ஆகி மூன்று வருடம் ஆகியும் குழந்தைப் பேறு இல்லை அவருக்கு.

அடுத்த மகன் சிவமூர்த்திக்கு(சித்தப்பா பெயர் சொல்லிட்டேன்) பெண் தேடிக் கொண்டிருந்த சமயம் தான் கையில் பிறந்த பிள்ளையுடனும் கண்ணில் நீருடனும் வீட்டுக்கு வந்தார் அவர்.

பொங்கி விட்டார் சிவசு!

“என்ன காரியம்டா பண்ணி வச்சிருக்க? உனக்கு நான் ஊர் ஊரா பொண்ணு தேடிட்டு இருந்தா, நீ குழந்தையோட வந்து நிக்கறியே! வெக்கமா இல்ல? போடா வீட்ட விட்டு வெளிய! என் ரெண்டாவது மவன் செத்துப் போயிட்டான்னு தலை முழுகிடறேன்” என ஆடித் தீர்த்தார்.

“அப்பா! என்னை மன்னிச்சிருங்கப்பா! வேற ஜாதி பொண்ணுப்பா அவ! நீங்க ஒத்துக்க மாட்டீங்கன்னு தெரியும்! ஆனாலும் அவ மேல உசுர வச்சிட்டேன்பா! அதான் அவள விட முடியாம திருட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எப்படியும் குழந்தை குட்டின்னு வந்துட்டா ஏத்துப்பீங்கன்னு நம்பி இருந்தேன்ப்பா! பாவி மக, புள்ளையப் பெத்துக் குடுத்துட்டு போய் சேர்ந்துட்டா!” என கதறினார்.

அடிக்கடி வீட்டுக்கு லேட்டாக வருவது, சனி ஞாயிறு வீடு தங்காமல் இருந்ததெல்லாம் இதற்காகத்தானா என நொந்துப் போனார் தில்லும்மா!

கையில் இருந்த குழந்தையும் பசிக்கு வீறிட்டு அழுதது. தில்லும்மாவுக்கும் வாணிக்கும் குழந்தையின் அழுகையில் கண்கள் கலங்கியது. ஆனால் சிவசுவின் கோபத்துக்கு பயந்து நெருங்காமல் நின்றார்கள். சிவராமன்தான் நடுவே புகுந்தார்.

“அப்பா! தம்பி பண்ணது தப்புத்தான். அதுக்குன்னு அவன அப்படியே விட்டுட முடியுமாப்பா! அந்தப் பொண்ணுதான் உசுரோட இல்லைன்னு சொல்றானே! மன்னிச்சு உள்ள கூப்பிடுங்கப்பா”

“வேற ஜாதிக்கு பொறந்த புள்ளைய எங்கயாச்சும் அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வர சொல்லு, இவன உள்ள விடறேன்”  

சட்டென முன்னே வந்து குழந்தையைக் கையில் வாங்கிக் கொண்டார் தில்லும்மா!

“இந்த குழந்தை என் மகனுக்கும் தான் பொறந்துச்சு! நம்ம ரத்தமும் இது உடம்புல ஓடுது! புள்ளய அனாதையா விட்டீங்க, நானும் அனாதையா வீட்ட விட்டு வெளிய போயிடுவேன்” என அழுதபடியே சொன்னார் அவர்.

மனைவியை முறைத்துப் பார்த்த சிவசு,

“என் கண்ணு முன்னாடி இவனா நடமாட விட்டுறாதீங்க! கொன்னுப் போட்டுருவேன்!” என கோபமாக கர்ஜித்து விட்டு உள்ளே போய்விட்டார்.

காதல் மனைவி இறந்த துக்கத்தில், ஓய்ந்துப் போய் கிடந்த தம்பியை சிவராமன் அரவணைத்துக் கொண்டார். அவரின் மகனை தில்லும்மாவும் வாணியும் அரவணைத்துக் கொண்டனர்.

மூர்த்தி வேலையில் தன்னை தொலைக்க, வியாபாரம் இன்னும் முன்னேறியது. தூரத்தில் இருந்து மகனைப் பார்ப்பதோடு சரி! எங்கே மகனைக் கொஞ்ச போய், சிவசு இருவரையும் விரட்டி விடுவாரோ என பயந்தார். வெளியே போய் விடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் குழந்தை தாய்ப்பாசமும் அரவணைப்பும் இல்லாமல் வளர்வானே என எண்ணிதான் தயங்கினார்.

தில்லும்மாவும் வாணியும் மாறி மாறி பையனைப் பார்த்துக் கொண்டாலும், எல்லாம் ரூமின் உள்ளே தான். சிவசு இல்லாத நேரத்தில் தான் வெளியே சுதந்திரமாக திரிவான் குட்டி. இரண்டு வயது ஆனதும், அவனுக்கு என தனி ரூம் கொடுத்து படுக்கப் பழக்கினார்கள்.  என்னதான் சின்னவனை அரவணைத்தாலும், அவனிடம் முழுமையாக பாசமாய் ஒன்ற முடியவில்லை பெண்களால். பாசமாய் ஊட்டினால்,

“ஊட்டி ஊட்டி வளக்கறியா? நடத்து நடத்து! நாளைக்கு ஜாதி புத்திய காட்டி உன்னை ஊர் முன்னாடி சிரிக்க வச்சிடுவான்” என தில்லும்மாவை சாடுவார்.

பிள்ளையுடன் வாணி சிரித்து விளையாடினால்,

“வேற ஜாதி புள்ளைங்க கிட்டலாம் சிரிப்பா சிரிக்கறாங்க! ஆனா நம்ம வீட்டுக்குன்னு ஒரு வாரிச குடுக்க வழியில்ல” என மருமகளை சாடையாக பேசி செல்வார். கண்ணெல்லாம் கலங்கிப் போகும் வாணிக்கு. சின்னவன் தான் கண்ணைத் துடைத்து விடுவான்.

குட்டிப் பையனுக்கு வயிறு வாடாமல் பார்த்துக் கொண்டார்கள், நல்ல துணிமணிகள் வாங்கி உடுத்தி விட்டார்கள், விளையாட்டுப் பொருட்கள் வாங்கிப் போட்டார்கள். எல்லாம் கிடைத்தும் கன்னத்து முத்தத்துக்கு ஏங்கினான். பயப்படும் போது அணைத்துக் கொள்ளும் கைகளுக்கு ஏங்கினான். தான் வண்ணம் தீட்டும் ஓவியங்களை பார்த்து ரசிக்க ஆளில்லை என ஏங்கினான். ஏங்கி ஏங்கி இளைத்துப் போனான் சிறுவன். வெளியே வந்தால் மண்டையில் குட்டும் தாத்தனைப் பார்த்து பயம்! பார்த்தும் பார்க்காதது போல போகும் தகப்பனின் மேல் குட்டிக் கோபம். இப்படியான சூழ்நிலையால் குழந்தைகளுக்கே உரிய துருதுருப்பு இல்லாமல் போனது அவனிடம்.

சின்னவனின் ஐந்தாவது வயதில் அவன் துன்பம் போக்க என பூமிக்கு வந்தாள் சிந்தியா! சிந்தியா என்றால் கடவுளின் பரிசாமே! கடவுள் இவனுக்கு அனுப்பி வைத்த விலைமதிக்க முடியாத பரிசுதான் அவள்.

இத்தனை வருடம் கழித்து குழந்தை பிறந்ததில் வாணியும் சிவராமனும் அகமகிழ்ந்து போனார்கள். பெண் குழந்தை என கேள்விப்படவும் ஹாஸ்பிட்டல் கூட வரவில்லை சிவசு. இத்தனை வருடம் கழித்து, மசாலா சாம்ராஜ்யத்துக்கு ஒரு ஆண் வாரிசு தராமல், பெண் பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறானே என கோபம்தான் வந்தது அவருக்கு.

குழந்தையையே ஆசையாய் பார்த்திருந்தவனை சின்னவனை கவனித்த தில்லும்மா, அவனை கீழே அமர்த்தி அவன் மடியில் குழந்தையைக் கிடத்தினார். அப்படியே சிலிர்த்துப் போனது அவனுக்கு.

“பாப்பா!” மெலிதாய் அழைத்தான்.

குட்டி கண்களை மெல்லப் பிரித்துப் பார்த்தாள் அவள். அங்கே விழுந்தவன்தான். இன்னும் அவள் விழி வீச்சில் இருந்து எழவில்லை அவன். யாருமில்லை தனக்கு என நினைத்தவனுக்கு, தங்கையாய், தாயாய், தோழியாய், நானிருக்கிறேன் அண்ணா என உணர்த்தினாள் அவன் மடியில் நெளிந்தப்படி இருந்த குழந்தை சிந்தியா.

அன்றிலிருந்து பள்ளி முடிந்து வருபவனுக்கு அவள் தான் விளையாட்டுத் தோழி! பள்ளியில் நடக்கும் எல்லா கதையையும் சொல்வான். தன் விரலை அவள் பிடித்துக் கொள்ள கொடுப்பான். ங்கா ங்கா என அவள் பேசும் பாஷையைத் தனக்குப் பிடித்த வகையில் மொழி பெயர்த்துக் கொள்வான். தொலைக்காட்சியில் பார்திருந்த பாடலை, நான்கு வரி மட்டும் கற்றுக் கொண்டு அதையே தேய்ந்து போன ரெக்கார்ட் போல பாடி அவளைத் தூங்க வைப்பான்.

“ஒன்றே எங்கள் தேவன்

ஒன்றே எங்கள் ஜீவன்

நான் நீ பேதமில்லை

ஓர் தாய் பெற்ற பிள்ளை” என நாலே வரிகளை நாற்பது தடவைப் பாடி கை கால் ஆட்டி விளையாடி கொண்டிருப்பவளைக் கூட தூங்க வைத்து விடுவான். தில்லும்மாவும் வாணியும் சிரிப்புடன் பார்த்திருப்பார்கள். இதெல்லாம் மில்லில் இருந்து சிவசு வரும்வரை தான். கார் சத்தம் கேட்டதும் அவன் ரூமுக்குள் ஓடி ஒளிந்துக் கொள்வான்.

இப்படியே நாட்கள் நகர சிந்தியாவுக்கு இரண்டு வயது பூர்த்தியாகி இருந்தது. அண்ணனின் ஏபிசிடி புத்தகத்தைக் கையில் வைத்திருந்தாள் சிந்தியா. தாத்தாவின் சத்தம் கேட்டதும், அவள் அருகே அமர்ந்து படித்துக் கொண்டிருந்தவன் ஓடியே போய்விட்டான். சிவசு ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்க, இவள் கீழே அமர்ந்து அந்தப் புத்தகத்தை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்தாள். சிவசு பேத்தியைக் கொஞ்சி குலாவாவிட்டாலும், அரட்ட மாட்டார். மெல்ல நகர்ந்து தாத்தனின் காலருகே போனவள், புத்தகத்தைக் கொண்டு அவர் காலைத் தட்டினாள்.

குனிந்து பார்த்த சிவசு அமைதியாக இருந்தார். இந்தக் குட்டி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம். விதி யாரை விட்டது! இவ்வளவு நேரம், பேமிலி ஜீன் படி படிப்பில் மிக பின் தங்கி இருக்கும் தன் அண்ணன் மனனம் செய்த ஏபிசிடியை கேட்டிருந்தவள், தாத்தனின் கண்ணைப் பார்த்து,

“ஏ,ப்பீ, ஜீ, டீய்” என 26 லெட்டர்களையும் கடைசி வரை திக்கித் திணறாமல் சொல்லி முடித்தாள்.

அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்துக் கொள்ள, கண்கள் பளபளக்க தன் பேத்தியை அலேக்காகத் தூக்கிக் கொண்டார் சிவசு!

“வந்துட்டாடா டாக்டர் சிந்தி! என் சாம்ராஜ்யத்துக்கு படிச்ச வாரிசு வந்துட்டாடா! சரஸ்வதி தேவி என் வீட்டுக்கு வந்துட்டாடா!” என அவர் கத்திய கத்தில், குட்டி சிந்தியா வீலேன குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள்.

அடுத்த நாளே, மில்லை வாங்கியப் பொழுது இருந்த பெயரிலேயே ஓடிய கம்பேனியை தியாஸ் மில்ஸ் என மாற்றினார் சிவசு.

‘கம்பேனி பெயரை மாற்றினார் சிவசு

இனி ஆரம்பிக்கப் போகுது அவர் ரவுசு’

 

(உருகுவான்….)

 

போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி..லாவ் யூ ஆல்..


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!