Pallavankavithai-07

PKpic-7d394df2

Pallavankavithai-07

பல்லவன் கவிதை 07

அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த யாவருமே பேச திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெளியே அமைதியாக இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளமும் உலைக்களம் போல கொதித்து கொண்டிருந்தது.

“அடிகளே… நீங்கள் சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை! நான் என் வீடாக நினைக்கும் இந்த மாளிகையில் எனக்குத் தெரியாமல் ஏதேதோ நடந்திருக்கிறதே!” உபாத்தியாயரின் குரலில் மரண வலி இருந்தது.

தந்தையின் வேதனையைப் பார்த்த பரிவாதனியின் கண்கள் ஆறாக பெருகின.

“ஐயா!” ஏதோ சொல்ல உபாத்தியாயரை அழைத்த மகிழினியை தீப்பார்வைப் பார்த்தார் உபாத்தியாயர்.

“இதற்கெல்லாம் நீயும் உடந்தையா மகிழினி?” அவர் குரல் ஆத்திரத்தில் வெடித்தது.

“ஐயா!‌ நீங்கள் ஆத்திரப்படும் அளவிற்கு அப்படி என்ன இங்கே நடந்துவிட்டது?”

“இன்னும் என்ன நடக்க வேண்டும் மகிழினி? இளவரசரே மன்னரைப் பார்த்து இவ்வளவு பேசியிருக்கிறார் என்றால், இது யார் கொடுத்த தைரியம்?”

“ஐயா! நீங்கள் பரிவாதனியை குறை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை… இது இளவரசரின் ஆசை.”

“ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது மகிழினி!” சொல்லிவிட்டு முகத்தை வெறுப்புடன் திருப்பிக்கொண்டார் உபாத்தியாயர்.

“உபாத்தியாயரே! நடந்ததைப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, இனி நடக்க இருப்பதைப் பார்ப்போம்.”

“இன்னும் நடக்க என்ன மீதமிருக்கிறது அடிகளே? இந்த பேச்சு வெளியே தெரிந்தால்…” மேலே பேச முடியாமல் உபாத்தியாயரின் குரல் அடைத்துக்கொண்டது.

“உபாத்தியாயரே! நீர் கவலைப்படும் அளவிற்கு இங்கு எதுவுமே நடந்துவிடவில்லை, இளவரசன் அவன் ஆசையைச் சொல்லி இருக்கிறான், அதில் பரிவாதனிக்கு இஷ்டமில்லை என்று நாம் சொல்லிவிட்டால் விஷயம் முடிகிறது.” இலகுவாக அடிகளார் சொல்ல உபாத்தியாயர் முகத்திலும் ஒரு தெளிவு பிறந்தது.

“அம்மா பரிவாதனி!” அடிகளார் அன்போடு அழைக்க இப்போது பரிவாதனி எதுவுமே பேசவில்லை. ஆனால் அவள் கண்கள் மட்டும் மடைத்திறந்த வெள்ளம் போல கண்ணீரை உகுத்தது.

“இதில் உன் குற்றம் ஏதுமில்லை அம்மா… நீ வீணாக கவலைப்படாதே, உப சேனாதிபதி உனக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பான், மன்னர் திட்டமிட்டபடி உங்கள் திருமணம் நடக்கும்.”

“அடிகளே…” கண்ணீரோடு வந்தது பரிவாதனியின் குரல்.

“சொல் குழந்தாய்.”

“ஒரு பெண்ணிற்கு எத்தனைத் தரம் திருமணம் நடக்கும்?”

“என்ன?!” ஏக காலத்தில் அடிகளாரும் உபாத்தியாயரும் வாய்விட்டே அலறினார்கள்.

“பரிவாதனி!‌ நீ என்ன சொல்கிறாய்? பதினெட்டு ஆண்டுகள் உன்னைக் கண்ணுக்குக் கண்ணாக நான் வளர்த்ததிற்கு நீ எனக்குக் கொடுக்கும் சன்மானம் இதுதானா?” தான் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து எழுந்து நின்றுவிட்டார் உபாத்தியாயர்.

“அடிகளாரே! கேட்டீர்களா? நாமெல்லாம் இதுவரைக் குழந்தை குழந்தை என்று நினைத்த பரிவாதனி செய்திருக்கும் காரியத்தைப் பார்த்தீர்களா?” உபாத்தியாயர் தன்னைக் கட்டுப்படுத்த திறனற்று பிதற்றினார். அடிகளாரும் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பாராததால் திக்பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தார்.

“யாராவது அவர்கள் வாழ்க்கையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொண்டதைப் பார்த்திருக்கிறீர்களா அடிகளே?” கேட்டு முடித்த உபாத்தியாயர் வாய்விட்டு சத்தமாக அழவும் அடிகளாரின் கண்களும் கண்ணீரைச் சொரிந்தன.

மகிழினி உபாத்தியாயரையும் அடிகளாரையும் விசித்திரமாக பார்த்தாள்.

‘இப்படி இவர்கள் தலையில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு இங்கே என்ன நடந்துவிட்டது? தன் மகளை மன்னன் மகன் காதலிக்கிறான் என்றால் அதில் என்ன சிறுமை வந்துவிட போகிறது?! சாதாரண குடியில் பிறந்த பெண் நாட்டிற்கு ராணி ஆவதென்றால் சாதாரணமா?‌ இதற்கு சந்தோஷ படாமல் எதற்கு இப்படி ஒப்பாரி வைக்கிறார்கள்?!’

தன் மனதில் தோன்றிய எண்ணத்தை வெளியே சொன்னாள் மகிழினி. அவளை ஒரு தரம் ஆழ்ந்து பார்த்தார் அடிகளார்.

“ஒரு சில ரகசியங்கள் ஒரு சிலரின் மனதோடு மரித்து போகட்டும் என்று நினைத்திருந்தோம்…” ஏதோ ஒரு முடிவிற்கு வந்துவிட்டவர் போல பேசினார் அடிகளார்.

“ஆனால் இறைவனின் ஏற்பாடு வேறு மாதிரி இருக்கும் போது யார் என்ன செய்ய முடியும்?!” அவர் குரலில் வெறுமைத் தெரிந்தது.

“அடிகளாரே!” அடிகளை எச்சரித்தது உபாத்தியாயரின் குரல்.

“இல்லை உபாத்தியாயரே! வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது!” சொல்லிவிட்டு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார் அந்த துறவி.

பரிவாதனியும் மகிழினியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து கொண்டார்கள். பெரியவர்கள் இருவரின் முகங்களையும் பார்த்த போது ஏதோ விரும்பத்தகாத சேதி ஒன்று வரவிருப்பது போல தோன்றியது. இருந்தாலும் அமைதியாகவே இருந்தார்கள்.

தீவிர சிந்தனையில் இருந்த அடிகளார் தொண்டையைச் செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பித்த போது அவர் அந்த காஞ்சி மாநகரத்தின் மாளிகையில் இல்லை. எங்கோ கனவில் சஞ்சரிப்பவர் போல பேசினார்.

“பரிவாதனி… மகேந்திரனிற்கு ஐந்து வயதாக இருக்கும் போது சிம்மவிஷ்ணு மகாராஜாவும் விஜயமகா தேவியும் வாதாபிக்கு அதன் மன்னனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்தார்கள், அப்போது அவர்களோடு இந்த பாவியும் போயிருந்தேன்.” சொல்லிய அடிகளார் தன் காவி வஸ்திரத்தால் கண்களைத் துடைத்து கொண்டார்.

“வாதாபியின் அழகையெல்லாம் ஒரு வாரம் அங்குத் தங்கி இருந்து கண்ணாற கண்டு மகிழ்ந்தோம், மகாராஜாவிற்கும் வாதாபி சக்கரவர்த்தி மங்களேசரிற்கும் நல்லதொரு நட்பு உருவாகி இருந்தது, ராணிகளும் கூட தங்களுக்குள் பரஸ்பரம் நட்பு பாராட்டி கொண்டார்கள்.” பெருமூச்சொன்றை வெளியேற்றிய அடிகளார் மீண்டும் தொடர்ந்தார்.

“வாதாபி சக்கரவர்த்தியின் மனைவிக்கு அப்போதுதான் குழந்தைப் பிறந்திருந்தது, அதுவேறு பெண்களுக்குப் பெரும் சுவாரஸ்யத்தை அளித்து விட்டது… அன்று எல்லோரும் அஜந்தா குகைகளுக்குச் சென்று அங்கிருக்கும் அழியா வண்ண சித்திரங்களைப் பார்ப்பதென்று முடிவாகி இருந்தது.” இப்போது பேச்சை நிறுத்திய அடிகளார் ஏதோ கசப்பை விழுங்குவது போல எச்சிலைக் கூட்டி விழுங்கினார்.‌ அவரிற்குப் பேச நா எழவில்லை.

“அஜந்தா குகைகளின் அழியா வண்ணங்களின் அற்புதங்களைப் பார்த்துவிட்டு வரும் போது வழியில் பல வீரர்களால் வாதாபி சக்கரவர்த்தி தாக்கப்பட்டார்.”

“என்ன என்ன?! சக்கரவர்த்தி தாக்கப்பட்டாரா?” மகிழினி பெருங்குரலெடுத்து சத்தம் போட்டாள். பரிவாதனியின் கண்கள் தெறித்துவிடும் போல விரிந்தது.

“ஆம்! சக்கரவர்த்தியும் அவர் ராணியும் தாக்கப்பட்டார்கள்!”

“யார் தாக்கியது அடிகளே? எதற்குத் தாக்கினார்கள்?”

“அது ஒரு பெரிய கதை மகிழினி.”

“தயவு செய்து சொல்லுங்கள் அடிகளே!”

“சொல்கிறேன் கேள்! அப்போது வாதாபியின் சக்கரவர்த்தியாக இருந்த மங்களேசன் உண்மையிலேயே முடிக்குரிய இளவரசன் அல்ல, அவர் தந்தைக்கு அவர் இளைய மகன்.”

“இளைய மகனா? அப்படியானால் எப்படி அவர் சக்கரவர்த்தி ஆனார்?”

“மங்களேசரின் அண்ணன்தான் அரசாட்சியில் இருந்தார், அவரின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரின் மகன் புலிகேசி ஆட்சிக்கு வந்திருந்தான்.”

“யார்? புலிகேசியா?”

“ஆம்! அவனது ஆட்சியில் மக்கள் பெரிதும் துன்பப்பட்டார்கள், எதற்கும் அஞ்சாத அவன் கொடுங்கோல் ஆட்சியை மக்கள் வெறுத்தார்கள்.”

“அவன் ஆட்சி பிடிக்காவிட்டால் மக்கள் மன்னனை எதிர்ப்பதுதானே ஸ்வாமி?”

“அதற்கு மக்களிற்குத் தைரியம் இருக்கவில்லை மகிழினி.”

“அப்படியானால் என்னதான் நடந்தது?”

“மந்திரி பிரதானிகள் அனைவருமாக சேர்ந்து மன்னனிற்கு எதிராக ரகசிய சதி செய்து மங்களேசனை அரியணையில் ஏற்றினார்கள்.”

“அப்பாடா! வாதாபி பிழைத்தது!”

“ஆமாம்! புலிகேசியையும் அவன் சகோதரனையும் விரட்டி அடித்துவிட்டு மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக்கொண்டார் மங்களேசர்… அவர் ஆட்சி சீரும் சிறப்புமாக இருந்தது.”

“அந்த மன்னர் மிகவும் நல்லவரா ஸ்வாமி?” சட்டென்று இதுவரை மௌனமாக இருந்த பரிவாதனி கேட்கவும் அவளைப் பரிவோடு பார்த்தார் அடிகளார். அவர் கண்களில் அன்பு ததும்பிற்று.

“மிகவும் நல்லவர் அம்மா! பார்க்க அத்தனைக் கம்பீரமாக ஆஜானுபாகுவாக இருப்பார், அழகிலும் குணத்திலும் கூட எந்த அப்பழுக்கும் இல்லாத மகா வீர புருஷர் அம்மா அவர்!”

“பிறகு ஏன் இப்படி ஆனது அடிகளே?”

“நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட புலிகேசி அங்கிருந்த காடுகளில் ஒழிந்து வாழ்ந்து தன் சிற்றப்பனைப் பழிவாங்க நல்ல சகுனம் பார்த்துக்கொண்டிருந்தான்.”

“ஐயையோ!”

“ஆமாம்… நம் சிம்மவிஷ்ணு மகாராஜாவோடு மங்களேசர் அஜந்தா குகைகளுக்கு அதிக பாதுகாப்பின்றி போனது புலிகேசிக்கு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து போனது.”

“பிறகு…”

“புலிகேசி தன்னைக் கொல்ல வந்திருப்பது மங்களேசருக்குப் புரிந்துவிட்டது, தன்னோடு வந்திருந்த சொற்ப வீரர்களை வைத்துக்கொண்டு தன் அண்ணன் மகனைத் தாக்க ஆரம்பித்தார், ஆனால் தன் விருந்தினர்களாக வந்திருந்த அனைவரையும் தேரை விட்டு இறங்க அவர் அனுமதிக்கவில்லை.”

“ஆஹா! எப்பேர்ப்பட்ட மனிதர் அவர்!”

“ஆமாம் மகிழினி… தேர் அரண்மனைக்குத் திரும்பிவிட்டது, மங்களேசரின் மனைவியும் உருவிய வாளோடு களத்தில் இறங்கி விட்டார்.”

“என்ன? அப்படியென்றால் அவர்களது குழந்தை என்ன ஆனது?”

“தெய்வாதீனமாக குழந்தை அப்போது நம் மகாராணியின் மடியில் இருந்தது.”

“அப்படியானால் குழந்தைத் தப்பிவிட்டதா அடிகளே?”

“தப்பிவிட்டது மகிழினி… அரண்மனைக்குத் திரும்பிய சிம்மவிஷ்ணு மகாராஜா வாதாபி சேனாதிபதியை ஒரு சிறு படையோடு அழைத்து சென்று அஜந்தா மலையடிவாரத்தையே சல்லடைப் போட்டபோது, புலிகேசி தலைமறைவாகி இருந்தான்.”

“கேடு கெட்டவன்!” மகிழினியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சல்லடைப் போட்டதில் மகாராணியின் உடல் கிடைத்தது, மகாராஜா மரணத்தறுவாயில் இருந்தார்.”

“ஐயையோ!” பெண்கள் இருவரும் துடித்துப்போனார்கள்.

“அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவு முயன்றும் அவர்களால் மன்னரைக் காப்பாற்ற முடியவில்லை, அந்த மகா புருஷர் இறக்கும் தறுவாயில் நம் மகாராஜாவிடம் ஒரு வரம் வாங்கி கொண்டார்.” இப்போது அடிகளார் பேச்சை முழுதாக நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தார்.

என்ன வரப்போகின்றது என்று பெண்கள் இருவரிற்கும் புரிந்துவிட்டது. உபாத்தியாயரின் நாசியிலிருந்து சோகமான பெருமூச்சொன்று வந்தது. அந்த பெருமூச்சின் வெப்பம் தன்னைச் சுடுவது போல உணர்ந்தாள் பரிவாதனி.

“தங்களைக் கொன்ற புலிகேசி தன் குழந்தையை இனி விட்டு வைக்க மாட்டான் என்றும் தங்களோடேயே பல்லவ காஞ்சிக்குத் தன் மகளை அழைத்துக்கொண்டு போகுமாறும் வேண்டினார்.”

“ஓ…” கர்ம சிரத்தையுள்ள வீரர் போல தொடர்ந்தது அடிகளின் பேச்சு.

“தன் மகள் யாரென்பது இந்த உலகிற்குத் தெரியக்கூடாது என்றும் அவள் உயிரிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்றும் சத்தியம் வாங்கி கொண்டார்.”

“மகாராஜா சத்தியம் செய்தாரா?”

“மகாராஜா மட்டுமல்ல… விஜயமகா தேவி, நான், வாதாபி அரண்மனையில் அப்போது பணியாற்றிய நம் உபாத்தியாயர் எல்லோரும் சத்தியம் செய்தோம்.”

“பிறகு மன்னர்…”

“அதிக நேரம் அவர் உயிர் நீடிக்கவில்லை, நடந்த சம்பவத்திற்குப் பழி தீர்க்க சிம்மவிஷ்ணு மகாராஜா அனுமதி கேட்ட போதும் மங்களேசர் மறுத்துவிட்டார், தன்னால் பல்லவ சாம்ராஜ்யத்திற்கும் வாதாபிக்கும் இடையே போர் மூழ்வதை அவர் விரும்பவில்லை.”

“அத்தனைப் பேரையும் கொன்றவன் ஏன் உங்களைத் தாக்கவில்லை அடிகளே?”

“எங்களைத் தாக்கினால் பல்லவ சாம்ராஜ்யத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி ஏற்படும், புலிகேசியின் நோக்கம் அதுவல்ல… ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை வீணாக பகைத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.”

“ஓஹோ! அதன் பிறகு என்ன நடந்தது?”

“பல்லவ மகாராஜா உடனடியாக வாதாபியை விட்டு கிளம்பிவிட்டார்.”

“அப்போது வாதாபி மன்னரின் குழந்தை என்ன ஆனது?” நெஞ்சம் பதைபதைக்க கேட்டாள் மகிழினி.

“பல்லவர் வம்சத்தில் கொடுத்த வாக்கை யார் தவறியிருக்கிறார்கள் மகிழினி? தன்னோடு குழந்தையையும் கொண்டு வந்துவிட்டார் மகாராஜா… கொண்டு வந்தது மாத்திரமல்ல, அதைச் சீரும் சிறப்புமாக உபாத்தியாயரிடம் கொடுத்து வளர்த்தார்.”

“அப்படியானால்…‌ அப்படியானால்… பரிவாதனி… பரிவாதனி…” மகிழினியின் வாய் குழறியது. ஏதோ பேச்சை மறந்தவள் போல திக்கி திணறினாள்.

“வாதாபி சக்கரவர்த்தி தனது மகளுக்கு ஆசையாக சூட்டிய பெயர் பரிவாதனி! வாதாபி சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி இந்த பரிவாதனி!”

“அடிகளே!” உடம்பு பதற அடிகளாரை அழைத்த மகிழினி பரிவாதனியை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.

“என் தோழி பரிவாதனி இளவரசியா? என்னோடு கூட விளையாடிய என் தோழி மன்னன் மகளா?! அடிகளாரே! இது எல்லாம் உண்மைதானா? இத்தனைக் காலமாக என்னோடு சிரித்து குதூகலித்த என் தோழி ஒரு சாம்ராஜ்ஜியத்தின் இளவரசியா?!” உணர்ச்சி பெருக்கில் மகிழினியின் உடம்பு நடுங்கியது. ஆனால் பரிவாதனி அசையாமல் அப்படியே  கல்லுச்சிலைப் போல நின்றிருந்தாள்.

அடிகளார் உபாத்தியாயரைப் பார்த்தார். தான் தன் பெண்ணின் வளர்ப்பு தந்தை என்ற உண்மை உடைபட்டு போன வருத்தத்தில் தலைகுனிந்து நின்றிருந்தார் மனிதர்.

அவர் கோலத்தைப் பார்த்த பரிவாதனியின் உள்ளமும் உருகிப்போயிற்று. மெதுவாக அவரிடம் சென்ற பரிவாதனி அவர் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.

“தந்தையே…” அந்த ஒற்றை வார்த்தையில் உபாத்தியாயரின் முகம் ஜொலித்தது.

“அம்மா பரிவாதனி!”

“என்றைக்கு அந்த ‘கனக புஷ்பராக’ கல் பதித்த ஆபரணங்களை என்னிடம் கொடுத்தீர்களோ அள்றைக்கே அதன் பின்னால் இப்படி ஒரு சரித்திரம்ம் இருக்கும் என்று நான் ஊகித்தேன்.” பேசிய பெண்ணை அதிர்ச்சியாக பார்த்தார் உபாத்தியாயர்.

“எத்தனை உறவுகள் புதிதாக வந்தாலும் என்னைக் கண்ணின் மணி போல வளர்த்த உங்களுக்கு ஈடாகுமா தந்தையே!”

“பரிவாதனி!” இப்போது உபாத்தியாயர் வாய்விட்டு அழுதார்.

“அடிகளாரே! என் பெண் சொல்வதைக் கேட்டீர்களா? எத்தனை உறவுகள் வந்தாலும் அவளுக்கு நான்தான் முக்கியம்! இந்த உபாத்தியாயர்தான் அவள் முதல் உறவு!” சொல்லிவிட்டு மகளை கட்டி அணைத்துக்கொண்டார் உபாத்தியாயர். அடிகளார் முகத்திலும் ஒரு புன்சிரிப்புடன் கண்ணீர் வழிந்தது.

அந்த உணர்ச்சி போராட்டம் ஓய ஒரு ஜாமம் எடுத்தது. அடிகளாரைத் தவிர அங்கிருந்த மற்றைய மூவரும் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி தீர்த்தார்கள். அழுதார்கள், சிரித்தார்கள், ஏதேதோ பேசினார்கள். அடிகளார் துறவி என்றதாலோ என்னவோ சட்டென்று தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டார்.

“அடிகளாரே!” சட்டென்று அழைத்தாள் மகிழினி.

“ஏன் மகிழினி?”

“நடந்த இந்த சம்பவத்திற்கும் இளவரசர் பரிவாதனியை மணப்பதற்கும் என்ன சம்பந்தம்?” மீண்டும் விட்ட இடத்திற்கே திரும்ப வந்தாள் மகிழினி.

“சிம்மவிஷ்ணு மகாராஜா குழந்தையோடு காஞ்சிக்கு வந்த பிறகு புலிகேசி ஓய்ந்துவிடவில்லை.”

“அந்த கேடுகெட்டவன் என்ன செய்தான்?”

“குழந்தை உயிரோடு இருக்கிறது என்று அவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, அந்த குழந்தையை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று சதா ஒற்றர்களைக் காஞ்சிக்கு அனுப்பினான்.”

“அப்படியா?!

“ஆமாம்… ஆனால் நம் மகாராஜா மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொண்டார், பரிவாதனியை அவர் காஞ்சிக்கு அழைத்து வந்தது முக்கியமான ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, இந்த மாளிகையிலேயே குழந்தையை உபாத்தியாயர் வசம் கொடுத்து யாரிற்கும் சந்தேகம் வராமல் பார்த்து கொண்டார், பல வாதாபி ஒற்றர்கள் வந்த தடமே தெரியாமல் பல்லவ சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.”

“ஓஹோ!”

“ஆமாம்… ஒரு கட்டத்திற்குப் பிறகு குழந்தையைப் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்காததால் குழந்தை இறந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கு அவனே வந்திருப்பான் போலும், தன் தேடுதல் வேட்டையை முடித்துக்கொண்டான்.”

“…………….”

“இப்போது சொல் மகிழினி… பரிவாதனி இளவரசனைத் திருமணம் செய்து கொண்டால் அவள் உயிரிற்கு ஆபத்து ஏற்படுமல்லவா?”

“நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்…”

“மகிழினி!” தன் தோழியைப் பாதியிலேயே நிறுத்தினாள் பரிவாதனி. அவள் கண்களின் பார்வை இப்போது வெகு தீட்சண்யமாக இருந்தது. தோழியை அடக்கிவிட்டு அடிகளாரைத் திரும்பி பார்த்தாள்.

“புரிகிறது அடிகளே… நீங்கள் சொல்வதில் இருக்கும் நியாயங்கள் அனைத்தும் எனக்குப் புரிகின்றன.”

“குழந்தாய்! ஒரு ராஜ்ஜியத்திற்கே சொந்தக்காரி நீ, அப்படியிருக்கும் போது நீ இப்படியொரு சாதாரண வாழ்க்கை வாழ்கின்றாயே என்று நினைத்து நான் வருந்தாத நாளில்லை.”

“வேண்டாம் அடிகளே…‌ வீணாக கவலைப்படாதீர்கள்.”

“இந்த காவி வஸ்திரம் தரித்தவன் மட்டும் இதை நினைத்து வருந்தவில்லை அம்மா, உன் பூர்வீகம் தெரிந்த அத்தனைப் பேரின் மனதிலும் இந்த ஏக்கம் உண்டு.”

“புரிகிறது அடிகளே! எதை நினைத்தும் நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஆயிரம்தான் இருந்தாலும் இளையவர்களுக்கு ஆளும் அதிகாரம் இல்லை, மூத்தவர்கள்தான் அதற்கு உரித்துடையவர்கள், அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” இப்போது அடிகள் ஒரு பெருமூச்சு விட்டார்.

“முதலாவதாக பிறந்துவிட்டதால் மட்டுமே யாரிற்கும் அரசாளும் தகுதி வந்துவிடாது பரிவாதனி, சிம்மவிஷ்ணு மகாராஜாவைப் பார்… தன் மகனின் தனிப்பட்ட அபிலாஷைக்காக எந்தவொரு பல்லவ வீரனின் ஒரு துளி இரத்தமும் இந்த மண்ணில் சிந்தக்கூடாது என்று நினைக்கிறார்.” இப்போது பரிவாதனி துன்பத்தோடு புன்னகைத்தாள்.

“அடிகளே! மகாராஜாவின் அப்பழுக்கற்ற தன்னலமற்ற மனதைப் பார்த்து நான் பிரமிக்கிறேன்! ஆனால் இந்த அடிமையால் அவர் ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது!”  பரிவாதனியின் குரல் உறுதியாக வந்தது.

“அம்மா பரிவாதனி! நீ என்ன சொல்கிறாய்?”

“வாதாபி சக்கரவர்த்திக்கு அவர் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எனக்கு எந்தவொரு குறையும் இல்லாமல் தன் பெண்ணைப் போல என்னைப் பாதுகாத்த அவருக்கு நான் எப்படி நன்றி சொன்னாலும் போதாது, இருந்தாலும்…” அதன் பிறகு சிறிது நேரம் பேச்சை நிறுத்தி மௌனமாக இருந்த பெண் உறுதியோடு தன் முடிவுகளை எடுத்து சொன்னது.

அடிகளார், உபாத்தியாயர் மட்டுமல்ல… மகிழினி கூட பிரமைப் பிடித்து நின்றுவிட்டாள்!

***

அடுத்து வந்த இரண்டு நாட்களும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக கழிந்தன. பரிவாதனியை சார்ந்தவர்கள் அவள் எடுத்த முடிவிற்குக் கட்டுப்பட்டு நின்றார்கள். அடிகளார் மாத்திரம் இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்து போனார்.

மகேந்திர பல்லவன் அன்று காலையிலேயே எழுந்து ஸ்நானத்தை முடித்துக்கொண்டு பயிற்சி கூடத்திற்கு வந்துவிட்டான். மனம் அமைதிப்பட மறுக்கும் நேரங்களிலெல்லாம் இப்படி அவன் வாள் சுற்றுவது வழக்கம்தான்.

கை வாளைச் சுற்ற ஆரம்பித்த பிறகும் அவன் மனது அவனைச்சுற்றி நடக்கும் விஷயங்களிலேயே லயித்திருந்தது. பரிவாதனியின் பிறப்பில் இருந்த ரகசியம் அவனை வெகுவாக வாட்டியது. யாரிற்கோ செய்து கொடுத்த வாக்கிற்குக் கட்டுப்பட்டு அனைவரும் வாய்பொத்தி நிற்கிறார்கள்! உண்மையை அவனிடம் சொல்ல மறுக்கிறார்கள்.

“ஆ!” மகேந்திரன் லேசாக சத்தம் போட்டான்.

“இளவரசே!” அந்த குரலில் மகேந்திரன் திரும்பி பார்த்தான். பொதிகை மாறன் அவனை நோக்கி ஓடி வந்திருந்தான்.

“என்ன உப சேனாதிபதி அவர்களே! ஏது இத்தனைத் தூரம்?”

“மன்னரிடம் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வந்தேன்.”

“வந்த வேலை ஆகிவிட்டதா?”

“ஆமாம்… உங்கள் கையில் குருதி பீறிடுகிறது.”

“பரவாயில்லை… அதை விட அதிகமாக நெஞ்சில் பீறிடுகிறது.” சுலபமாக சொல்லிவிட்டு அங்கிருந்த ஆசனமொன்றில் அமர்ந்தான் மகேந்திரன்.

வாள் சுழற்றும் போது கவனப்பிசகால் அவன் வாளே அவன் கையைப் பதம் பார்த்திருந்தது. உப சேனாதிபதி கண்ணைக் காட்டவும் பயிற்சி கூடத்திற்குப் பொறுப்பானவர் நெருப்பில் வாட்டிய பச்சிலையோடு ஓடி வந்தார்.

மகேந்திரன் இந்த உலகத்தை மறந்து வானம் பார்த்து அமர்ந்திருந்தான். அவன் அனுமதி இல்லாமலேயே அவன் கைக்காயத்தைத் துடைத்த மாறன் அதில் பச்சிலையை வைத்து கட்டினான். காயம் அத்தனை ஆழமில்லை என்பதால் குருதி சட்டென்று மட்டுப்பட்டது.

“பல்லவ குமாரா!”

“ஏன் மாறா?”

“மனதில் குழப்பம் இருக்கும் போது எதற்காக வாள் சுழற்ற ஆரம்பித்தீர்கள்?” மன்னன் மகனோடு தனக்கிருந்த நட்புறவில் உரிமையாக கடிந்து கொண்டான் பொதிகை மாறன்.

“அப்படியாவது அந்த குழப்பம் தீராதா என்ற நப்பாசைதான்.”

“எல்லாவற்றிற்கும் ஒரு தீர்விருக்கும் என்பது நீங்கள் அறியாததா?”

“என் பிரச்சனைக்கு என்ன தீர்வு மாறா?” மகேந்திரனின் குரலில் அளவுகடந்த கவலைத் தெரிந்தது.

“பெற்றவர்களே என் மனது தெரிந்தும் அதற்கு எதிராக நடக்கும் போது என்னால் என்ன செய்ய முடியும்?”

“கவலைப்படாதீர்கள் இளவரசே! இதற்கும் ஒரு தீர்வை நிச்சயமாக அந்த இறைவன் காட்டுவான்.” உப சேனாதிபதி சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பயிற்சி கூடத்தின் வாயிலில் அடிகளாரின் தலைத் தெரிந்தது. இரு இளவல்களுமே ஆச்சரியப்பட்டு போனார்கள்.

“அடிகளாரே! சம்பந்தமே இல்லாமல் என்ன இந்த பக்கம் வந்திருக்கிறீர்கள்?” மகேந்திர பல்லவன் வியப்புடன் கேட்க தயங்கி தயங்கி உள்ளே வந்தார் அடிகளார்.

“மகேந்திரா!”

“சொல்லுங்கள் ஸ்வாமி… ஏன் உங்கள் முகம் இப்படி வாடியிருக்கிறது?”

“மிகவும் வேதனையோடு உன்னைக்காண வந்திருக்கிறேன் பல்லவ குமாரா!”

“வேதனையா? உங்களுக்கா ஸ்வாமி? என்னவென்று சொல்லுங்கள், என் சக்திக்கு உட்பட்டிருந்தால் நிச்சயம் நிவர்த்தி செய்து வைக்கிறேன்.” அடிகளார் எதுவும் பேசாமல் தன் இடைக்கச்சையில் சொருகி வைத்திருந்த பல பனையோலை நறுக்குகளை எடுத்து மகேந்திரனிடம் கொடுத்தார்.

“இது என்ன ஓலைகள் அடிகளே?”

“படித்துப்பார்.” அந்த வார்த்தைகளைச் சொல்லும் போதே அடிகளாரின் குரல் நடுங்கியது, கண்களில் நீர் திரண்டது.

மகேந்திர வர்மனும் ஓலையை வாங்கி பார்த்தான். முதலாவது ஓலை நறுக்கில் எதுவும் எழுதப்படாமல் வெறுமையாக இருந்தது. இரண்டாவது நறுக்கில் முத்துப்போன்ற எழுத்துக்களில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

‘பல்லவ குமாரனிற்கு… என் இதய சக்கரவர்த்திக்கு,

உங்கள் கலைவாணி எழுதிக்கொள்வது… நீங்கள் என்னைத் துளைத்து துளைத்து விபரம் கேட்ட கனக புஷ்பராக கல்லின் ரகசியம் இப்போது தெரியவந்தது, சந்தோஷமும் துக்கமும் என்னை வாட்டி வதைக்கின்றது, நம் ஆசைகள் நிராசையாக போய்விட்டது அன்பரே! விலகிப்போகிறேன்… பல்லவ நாட்டின் நலனிற்காக என் அன்பரின் மகோன்னதமான எதிர்கால வாழ்விற்காக உங்களை விட்டு தூரப்போகிறேன்… மன்னரின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்று பணிவோடு அவரிடம் சொல்லுங்கள்.

கலைவாணி.’

படித்த பல்லவ இளவல் அடிகளாரைக் கேள்வியாக பார்த்தான். ஆனால் அடிகளின் தலை நிமிரவில்லை. மகேந்திரனின் கண்களில் குழப்பம் இருந்தது.

“அடிகளாரே! உங்களுக்கு ஏது இந்த ஓலை? என்ன நடந்தது? இதில் ஏதும் சூழ்ச்சி இருக்கிறதா? அப்படி இருந்தால் அதில் உம் பங்கு என்ன, முதலமைச்சரின் பங்கு என்ன, மன்னவரின் பங்குதான் என்ன?” கேள்விகளை அடுக்கினான் மகேந்திரன்.

“மகேந்திரா!”

“இதில் நீர் ஆச்சரியப்பட ஏதுமில்லை அடிகளே! என்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று அறியாத முட்டாளுமல்ல நான்.”

“மகேந்திரா! சொல்வதைக் கேள்.”

“கேட்டதெல்லாம் போதும்… நடந்தது என்னவென்று மட்டும் விபரியுங்கள்.”

“பரிவாதனி…”

“பரிவாதனிக்கு என்ன?” திடமாக எழுந்தது மகேந்திரனின் கேள்வி.

“மன்னர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு பரிவாதனி சம்மதிக்கவில்லை.”

“நல்லது.”

“அதனால்…‌ அதனால்…”

“அதனாலென்ன?”

“அவள் யாரென்ற உண்மையை அவளிடம் தெரிவித்தேன்.”

“ம்…” உறுமலாக சொன்ன இளவரசன் தன் கையிலிருந்த ஓலையை உப சேனாதிபதிக்காக நீட்டினான். பொதிகை மாறனின் கண்கள் ஓலையில் சில நொடிகள் படிந்து மீண்டது.

அடிகளார் சற்று நேரம் அமைதி காத்தார்.

“அடிகளாரே! நீங்கள் நிறுத்தி நிதானமாக சொல்லும் கதையைக் கேட்க எனக்கு நேரமில்லை, சொல்வதற்கு ஏதாவது இருந்தால் சீக்கிரமாக சொல்லிவிட்டு நீங்கள் கிளம்பலாம்.” மகேந்திரனின் குரலில் அடிகளார் ஒரு நொடி திகைத்துவிட்டார்.

அவரறிந்த பல்லவ குமாரன் என்றைக்கும் அவரிடம் இப்படி பேசுபவனல்லவே! தன் காவி வஸ்திரத்தால் கண்களைத் துடைத்து கொண்டவர்,

“இளவரசே! இரண்டு நாட்களுக்கு முன்பாக பரிவாதனியை அவள் மாளிகையில் நான் சந்தித்தேன், நாளை மறுநாள் காலையில் இங்கு வாருங்கள் அடிகளே என்று வேண்டிக்கொண்டாள்.” என்றார் பணிவாக.

“அதனால் இன்று காலை அவளைப் பார்க்க போனீர்களா?”

“ஆம்… ஆனால் வீட்டில் யாரும் இருக்கவில்லை, இரண்டு ஓலைகள் மாத்திரம் இருந்தன.”

“இன்னொன்று யாரிற்கு?”

“எனக்கு.”

“சரி… நீங்கள் போகலாம்.” உத்தரவு போல மகேந்திரன் சொல்ல அடிகளார் கவலைத் தோய்ந்த முகத்தோடு நகர்ந்து விட்டார். மகேந்திரன் சிறிது நேரம் அசைவின்றி அப்படியே நின்று விட்டான்.

 

 

Leave a Reply

error: Content is protected !!