pallavankavithai-10

PKpic-3eec1dbe

pallavankavithai-10

பல்லவன் கவிதை 10

இளங்காலைச் சூரியன் உதிக்க இன்னும் சொற்ப நேரமே இருந்தது. பட்சிகளின் மதுர கானத்தைச் செவிமடுத்த படி தான் ஆரோகணித்து வந்திருந்த குதிரையை அந்த மண்டபத்திற்கு அருகில் நிறுத்தினாள் மைத்ரேயி.

இன்னும் சிறிது நேரத்திலெல்லாம் இந்த இடமே மக்களால் நிறைந்து வழியும். வியாபாரம் பண்ணுபவர்கள், ஊர் விவகாரங்களை அசை போடுபவர்கள், இளைப்பாறும் வழிப்போக்கர்கள் என ஜன சந்தடி நிறைந்து விடும்.

மைத்ரேயி குதிரையிலிருந்து இறங்கி அதன் தலைக் கயிற்றை அங்கிருந்த மரத்தில் கட்டினாள். கிழக்குப் புறமாக நோக்கி இருந்த அந்த மண்டபத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டாள். இது உபாத்தியாயர் அவளுக்குக் கற்றுக்கொடுத்தது. 

சேந்தனுக்கு மைத்ரேயி என்னவோ மிகவும் சவாலான ஒரு குழந்தையாகவே பட்டாள். பெயருக்குத்தான் அவள் பெண்பிள்ளையே தவிர செய்யும் வேலைகள் அனைத்தும் ஆண்பிள்ளையுடையதாகவே இருந்தது! பிறந்தது முதல் அவள் அப்படித்தான் இருக்கிறாள்.

அவள் பிறப்பே உபாத்தியாயருக்கு பெரும் திகைப்புத்தான். காஞ்சியை விட்டு வெகு தூரம் வந்துவிட்டாலும் எப்படியாவது பரிவாதனி மனதைக் காலப்போக்கில் சரி பண்ணி அவளுக்கொரு வாழ்க்கைத் துணையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதில் உபாத்தியாயர் மிகவும் உறுதியாக இருந்தார். அந்த உறுதியைக் கலைப்பதற்கென்றே வந்து தோன்றினாள் மைத்ரேயி.

உபாத்தியாயருக்கு மட்டுமல்லாது பரிவாதனி, மகிழினி இருவருக்குமே அது ஆச்சரியரியமான செய்திதான் என்று கண்ட போது மனிதர் அதற்கு மேல் என்ன பேச முடியும்?!

தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ள மகிழினிக்கு ஒரு நல்ல வரனைப் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தார். கந்தன் இன்று வரை உபாத்தியாயரின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. அந்த குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாக காத்து வருகிறான். 

கந்தன் வருகை மூலம் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்த உபாத்தியாயர் மனதில் மீண்டும் குழப்பத்தை உண்டு பண்ணியவள் மைத்ரேயி!

பரிவாதனி உடம்பிலும் அரச குல இரத்தம் ஓடுகின்றதுதான். ஆனாலும் அத்தனை அமைதியாக அடக்கமாக உபாத்தியாயரின் கைக்கடங்கிய பெண்ணாகத்தான் வளர்ந்தாள் பரிவாதனி. ஆனால் மைத்ரேயி அப்படி இருக்கவில்லை. சிறுவயது முதலே சிறு குச்சிகளை வைத்துக்கொண்டு கத்திச்சண்டைப் போடுவதிலும் குதிரை ஏறுவது போல பாவனைச் செய்வதிலுமே அவள் பொழுது கழிந்தது.

சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுகளை அவள் விளையாடி உபாத்தியாயர் பார்த்ததேயில்லை. வயது ஏற ஏற அவள் குணங்களும் வளர்ந்து கொண்டே வந்தன. மைத்ரேயியிற்கு வீணைக் கற்றுக்கொடுக்க உபாத்தியாயர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போல ஆகிப்போகின. 

“உன் தந்தை உனக்கு மைத்ரேயி என்று ஏன் பெயர் வைத்தார் தெரியுமா?” தந்தையின் ஆசையை அறிந்த பிற்பாடாவது பெண் வீணைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டாளா என்று பரிவாதனி கூட அந்த பெயரின் விளக்கத்தைச் சொன்னாள்.‌ ஆனால் பலன்தான் ஏதும் கிடைக்கவில்லை.

“போரிற்குப் போன தந்தை எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாது, என்ன ஆனார் என்றே தெரியாது, இதில் இந்த பெயரிற்கு ஏற்றாற்போல வீணைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இப்போது என்ன வந்தது? அதை அப்பா வரும்போது பார்த்துக்கொள்ளலாம்.” அசிரத்தையாக பதில் சொன்னது பெண்.

அதற்கு மேல் அங்கே அவளை யாரும் எதற்கும் வற்புறுத்தவில்லை. வளர்ந்த போது வாள் சுழற்ற கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னாள். உபாத்தியாயர் அதற்கு ஏற்பாடுகள் செய்தார். அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக குதிரை ஏறுவது, அம்பெய்வது, வேலெறிவது என அனைத்திலும் பயிற்சி பெற்றாள்.

பயிற்சி பெற்றதோடு மட்டும் நின்று விடாமல் அதில் அபார தேர்ச்சியும் பெற்ற பெண்ணைப் பார்த்தபோது உபாத்தியாயரே வியந்து போனார்!

எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும் பூவின் வாசத்தை ஒளித்து வைத்துவிட முடியுமா? இரு சாம்ராஜ்யங்களின் வீர இரத்தம் அவள் உடலில் ஓடும்போது அவளை யாரால் தடுக்க முடியும்?! உபாத்தியாயர் இப்படித்தான் எண்ணிக்கொண்டார்.

மிகவும் பிரயத்தனப்பட்டு அன்றைக்குப் புழக்கத்தில் இருந்த மொழிகளைப் பெண்ணுக்குக் கற்றுக்கொடுத்தார். பாடமாக அல்லாமல் கதைகள் போல அவளுக்கு அவசியம் என்று பட்டதை எல்லாம் அவள் செவிகளில் போட்டு வைத்தார்.

ஒரு குறும்புக்கார குழந்தையை எப்படி கையாள வேண்டுமோ அப்படி மைத்ரேயியை கையாண்டார் உபாத்தியாயர். தனக்குத் தந்தை இல்லையே என்ற உண்மை அவள் முகத்தில் மோதும் போதெல்லாம் அவள் மூர்க்கத்தனம் அதிகமாவதால் தியானம் செய்ய அவளுக்கு உபாத்தியாயர் கற்றுக்கொடுத்திருந்தார்.

அதிகாலை வேளையில் தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக ஆற்றங்கரை ஓரமாக இருந்த இந்த மண்டபத்திற்கு வந்து கண்களை மூடி உதிக்கும் சூரிய கிரணங்களை உடம்பு முழுவதும் உள்வாங்கி தியானிப்பது பெண்ணுக்குப் பழக்கம். இன்றும் அதுபோலத்தான் வந்திருந்தாள் மைத்ரேயி. புத்தம் புதிதாக உதிக்கும் சூரியனின் இளங்கதிர்கள் உடலைத் தொடும் போது அவளுக்குள் இனம்புரியாத ஒரு உற்சாகமும் சாந்தியும் உண்டாகும். மூடிய விழிகளுக்குள் ஊடுருவும் ஒளிக்கீற்றுகள் அவள் உடம்பில் புதுவித உத்வேகத்தை உண்டு பண்ணும். எதையெதையோ தேடி ஆர்ப்பரிக்கும் அவள் உள்ளக்கடல் அந்த பொழுதில் அமைதி பெறுவது போல உணருவாள் மைத்ரேயி.

சிப்பி போல கவிழ்ந்திருந்த இமைகளை மெதுவாக அவள் திறந்த போது எதிரே ஒன்றிரண்டு மனிதர்களின் நடமாட்டம் தெரிந்தது. அவள் தினமும் அங்கு வந்து அந்த தியானத்தில் ஈடுபடுவது அவர்கள் அறிந்த விடயம் என்பதால் அவரவர்களின் வேலையில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார்கள்.

மைத்ரேயி இரு கைகளையும் உயர்த்தி உற்சாகமாக தன் தோள்களுக்கும் முதுகிற்கும் உடற்பயிற்சி செய்த படி திரும்பினாள். அன்றைக்கும் அந்த உருவம் அவளையே பார்த்தபடி மரத்தில் சாய்ந்திருந்தது!

ஒரு வாரமாக இது தொடர்ந்து நடக்கின்றது. யாரென்று தெரியவில்லை. அவள் வயதை ஒத்த ஒரு வாலிபன்… பார்த்தால் முகத்தில் பெரிய இடத்துப்பிள்ளைப் போல தெரிந்தது. இவள் தியானம் செய்து முடிக்கும்போது இப்போது நிற்பது போல நின்று கொண்டு இவளையே பார்ப்பான். இவள் பார்க்கும் போது அவன் கண்கள் ஆற்றை நோட்டமிடும்.

மைத்ரேயி முதலில் அந்த வாலிபனைக் கண்டுகொள்ளவில்லை. யாரோ வழிப்போக்கன் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் அதுவே தினமும் நடக்கவும் இன்றைக்கு அவள் கோபம் உச்சத்தை அடைந்தது. திடீரென்று மண்டபத்தை விட்டு குதித்தவள் அந்த வாலிபனை நோக்கி நடந்தாள்.

“யார் நீ?” இவள் வருவது தெரிந்து ஆற்றைப் பார்ப்பது போல பாசாங்கு செய்து கொண்டிருந்த அந்த வாலிபனின் கண்களில் இப்போது ஒரு மின்னல் தெறித்தது.

தடாலடியாக தான் கேட்ட கேள்வியால் அவன் திடுக்கிடுவான் என்று அவள் எண்ணியிருக்க அவன் கண்கள் காட்டிய சுவாரஸ்யம் இப்போது பெண்ணைத் திடுக்கிட செய்தது!

“நான் யாராக இருந்தால் உனக்கென்ன?” திமிராக வந்தது அவன் கேள்வி. மைத்ரேயி கோபத்தின் உச்சத்திற்குப் போனாள்.

“நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போ! எனக்கு அதைப்பற்றி எந்த கவலையும் இல்லை, ஆனால் தினமும் எதற்கு என்னைத் தொடர்கிறாய்?”

“உன்னை நான் தொடர்வதாக உனக்கு யார் சொன்னது? அடிக்கடி வாட்போரில் உன்னுடன் தோற்பானே… அந்த சிறு பையனா?” இப்போது மைத்ரேயி அவனைச் சந்தேகமாக பார்த்தாள்.

“இவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?!” அவள் சிந்தனையின் போக்கு அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.

“வீரர்களுக்கு வீரர்களைப் பிடிக்கும் பெண்ணே!”

“ஓஹோ! தாங்கள் வீரரோ?” இளையவளின் குரலில் இகழ்ச்சி.

“சோதித்து பார்க்க ஆசைப்படுகிறாயா?” அவன் குரலில் குறும்பு.

“தியான மண்டபத்திற்கு வரும்போது வாள் கொண்டு வருவது பழக்கமல்ல.”

“பாதகமில்லை, உனக்கு வேண்டியது என்னிடமே இருக்கிறது.” சொன்னவன் தன் இடைக்கச்சையைத் தட்டிக்காட்டினான். பெண்ணின் கண்கள் இப்போது அந்த இளைஞனை வினோதமாக பார்த்தது.

“என்ன? சிறுவர்களிடம் போரிட்டுத்தான் பழக்கமா?” அவன் வார்த்தைகள் வேண்டுமென்றே தன்னைச் சீண்ட உதிர்க்கப்படுகின்றன என்று புரிந்த போதும் வந்த சவாலை ஏற்க பெண் தயங்கவில்லை.

“இங்கே… இப்போது வேண்டாம்.”

“வேறு எங்கே… எப்போது?” கேட்ட அவன் குரலில் மீண்டும் மீண்டும் ஒலித்த கேலி மைத்ரேயியின் கோபத்தை அதிகப்படுத்தியது.

“என் புரவியைத் தொடர்ந்து வாருங்கள்.” ஆணையிட்டவள் தன் புரவியின் தலைக் கயிற்றை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறினாள். அந்த வாலிபன் இவள் செய்கைகளையே இமைக்காமல் ஒரு சுவாரஸ்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் புரவி வேகமெடுக்கவும் தன் புரவியில் ஏறியவன் அவள் பின்னோடே சென்றான். ஆற்றங்கரையோரமாக சிறிது தூரம் புரவியைச் செலுத்தியவள் திடல் போல ஒரு பிரதேசம் வரவும் அங்கு புரவியை நிறுத்தி தானும் இறங்கினாள். ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அந்த இடம் அமைதியாக இருந்தது.

புரவியை ஒரு மரத்தில் கட்டிவிட்டு பின்னோடு வந்த அவனுக்காக அவள் கையை நீட்ட அவன் முகத்தில் இப்போது ஒரு புன்னகைத் தோன்றியது. தனது இடைக்கச்சையில் இருந்த வாளொன்றை அவள் புறமாக தனது புரவியில் இருந்த படியே தூக்கி போட்டான் அந்த வாலிபன். 

அனாயாசமாக அதைப் பிடித்தவள் அவன் தனது புரவியிலிருந்து இறங்கும் வரை அவன் கொடுத்த வாளைப் பரிசோதித்தாள். வாளின் பிடியில் ஏதோ முத்திரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. 

“அது எங்கள் குல முத்திரை.” புவியிலிருந்து இறங்கிய படியே அவளுக்கு பதில் சொன்னான் இளைஞன். அது என்ன குலம் என்று கேட்கலாமா என்று நினைத்த மைத்ரேயி வார்த்தைகளை அடக்கிக்கொண்டாள். அது நாகரிகமில்லை என்றே தோன்றியது. ஆனாலும் இடைக்கச்சையில் அவன் இரண்டு வாளோடு எதற்கு அலைய வேண்டும்?!

“புரவியின் தலைக் கயிற்றை மரத்தோடு கட்டவில்லையா?” இப்போது அவள் அவனை நோக்கி கேட்டாள்.

“அவசியமில்லை!”

“ஏன்?”

“அது என் புரவி மட்டுமல்ல, நண்பனும் கூட!”

“ஓஹோ!” மைத்ரேயியின் மனதில் இப்போது லேசான சந்தேகம் உண்டானது. அரச குலத்தவர் மட்டுந்தான் இப்படி உயர்ஜாதி புரவிகள் வைத்திருப்பதாக உபாத்தியாயர் சொல்லி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். வாளின் பிடியில் கூட ஏதேதோ முத்திரைகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. யார் இவன்?! 

அவன் சண்டைக்கு ஆயத்தமாகிவிட்டான் என்று தெரிந்ததும் வாளை அவன் புறமாக உயர்த்தினாள் மைத்ரேயி. அந்த வாலிபன் முகத்தில் ஓர் இளநகைப் பூத்தது. 

புடவையை அவள் எப்போதும் பஞ்சகச்சம் போல உடுத்துவதுதான் வழக்கம். அதனால் இப்போது வாளைச் சுழற்ற எந்த தடையும் இருக்கவில்லை. போரை அவனாக ஆரம்பிப்பான் போல் தெரியாததால் எடுத்த எடுப்பிலேயே வாளை அவன் கழுத்திற்காக நீட்டினாள் பெண்.

இப்போது அவன் முகத்தில் வியப்பு தெரிந்தது. மைத்ரேயியும் மனதிற்குள் சிரித்து கொண்டாள். வாட்கள் இரண்டும் உரச ஆரம்பித்த போது மைத்ரேயியே எல்லா விதமான தாக்குதல்களையும் மேற்கொண்டாள். அந்த வாலிபன் வெறும் தற்காப்பு போரில் மட்டுமே இறங்கி இருந்தான். இருந்தாலும் அவள் வீச்சுகளை மிகவும் லாவகமாக தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தான். 

ஒரு கட்டத்திற்கு மேல் மைத்ரேயிக்கு சலிப்பு தோன்றியது. எதிராளியும் போரிட்டால்தானே சண்டைச் சுவாரஸ்யமாக இருக்கும். அவன் மேற்கொள்ளும் வெறும் தற்காப்பு போரில் அப்படி என்ன சுவாரசியம் வந்துவிடப்போகிறது?!

இப்போது சட்டென்று போர் முறையை மாற்றினாள் பெண். இவ்வளவு நேரமும் மிதமான வேகத்தில் வாளைச் சுழற்றியவள் அந்த க்ஷணமே வேகத்தைக் கூட்டினாள். அவன் மார்பை நோக்கி அடிக்கடி அவள் வாள் குறிபார்த்து குறிபார்த்து தவறிப்போனது.

சண்டை ஆரம்பித்து இரண்டு நாழிகைகள் கடந்திருக்கும். பெண்ணிற்கு ஒருவித சலிப்பு வந்ததோடு கையும் லேசாக சோர்ந்து போக ஆரம்பித்தது. நிதானமாக போரிட்டு கொண்டிருந்தாலும் அந்த வீரனின் வாளை மாத்திரம் அவளால் தட்டிவிடவே முடியவில்லை. அவன் போரிடும் பாணி அவளுக்குப் புரியவில்லை. அதேவேளை அவன் சாதாரணமான வீரனில்லை என்றும் வாள் சுழற்றுவதில் அவனுக்கு நிரம்பவே பயிற்சி உண்டு என்றும் அவன் தனது வீச்சுகளைத் தடுத்த விதத்திலிருந்தே மைத்ரேயி புரிந்து கொண்டாள்.

சிறிது நேரத்திலெல்லாம் இளையவளின் கை லேசாக சோர்வுற ஆரம்பிக்கும் நேரம் இப்போது அவன் தனது போர் முறையை மாற்றினான். பெண்ணின் மார்பை இரு முறை அவன் வாள் உரசிப்போனது. அடுத்த முறை அவள் காலோடு நகர்ந்த வாளைத் தவிர்ப்பதற்காக மைத்ரேயி எம்பிப்பாய்ந்த போது அவள் கணுக்காலில் லேசான கீறல் விழுந்தது.

“ஷ்…” அவள் வாய் அவளை அறியாமலேயே முணுமுணுத்தது. வாலிபனின் கண்கள் இப்போது சிரித்தன. அந்த சிரிப்பை மைத்ரேயி ரசிக்கவில்லை. இதுவரைத் தோற்றே அறியாதவள் தன் கரம் தோற்பதை முதன் முதலாக அறிந்த போது வெகுண்டு எழுந்தாள். 

இத்தனை நேரமும் வாள் வீசிய அவள் கை லேசாக சோர்வுற ஆரம்பித்ததால் இப்போது இரண்டு கரங்களாலும் வாளை இறுக பிடித்தாள். அடுத்த சில நொடிகளிலேயே அவள் கையிலிருந்த வாள் தூரப்பறந்தது. மைத்ரேயி ஸ்தம்பித்து நின்று விட்டாள்!

இறுதியாக அவன் வீசிய வீச்சு வெகு அனாயாசமாக இருந்தது. அந்த வீச்சை இதுவரை மைத்ரேயி அறிந்ததில்லை, பார்த்ததும் இல்லை. கண்மூடித்திறப்பதற்குள் தனது கையிலிருந்த வாள் தன்னை விட்டுப்போனதில் திகைத்துப்போய் நின்றது பெண்!

“முதல் தோல்வியா?” அவன் குரலில் கேலி இருந்த போதிலும் பெண்ணிற்கு இப்போது கோபம் வரவில்லை.

“இறுதியாக வாள் வீசிய போது என்ன நடந்தது?” அவள் கேள்வி நிதானமாக வந்தது.

“என்ன நடந்தது?” அவன் இப்போது சிரித்தான்.

“புதுமையான வீச்சு அது! நான் இதுவரை அறியாத வீச்சு அது!”

“அப்படியா?! அறிந்து கொள்ள ஆசைப்படுகிறாயா?”

“கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.”

“ஓஹோ! குருதட்சணையாக என்ன கொடுப்பாய்?”

“உபாத்தியாயர் வீட்டுப்பெண்… அதற்குத் தகுந்தாற் போல ஏதாவது கொடுப்பேன்.” நெற்றி வியர்வைக் கன்னத்தில் வழிய ஒரு கூரிய பார்வையோடு பதில் சொன்னாள் மைத்ரேயி. அந்த வாலிபன் அவளின் அந்த ஒற்றைப் பார்வையிலேயே தவிடு பொடி ஆகியிருக்க வேண்டும்! தன்னை மீட்டுக்கொள்ள சில நொடிகள் செலவழித்தான்.

“சரி… உன் சக்திக்கு மீறி உன்னிடம் எதுவும் கேட்கவில்லை, நாளைக்குத் தியானம் முடிந்ததும் இதே இடத்திற்கு வா, நான் காத்திருப்பேன்.” அவன் பேச்சை ஆமோதிப்பது போல தூர நிலத்தில் கிடந்த வாளைப் போய் எடுத்தாள் மைத்ரேயி.

ஒற்றைக் காலை மடித்து ஊன்றி மற்றைய காலால் நிலத்தில் உட்கார்ந்தவள் அந்த வாளை மிகவும் ஆசையோடு தடவிக்கொடுத்தாள். அந்த வாலிபன் அவள் செய்கைகளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.

ஏதோ பொக்கிஷத்தைச் சுமப்பவள் போல அந்த வாளைத் தன் இரு கைகளிலும் ஏந்திய மைத்ரேயி அந்த வாலிபனை நோக்கி வந்து அவனிடம் வாளை நீட்டினாள்.

“அத்தனைப் பிடித்திருந்தால் நீயே வைத்துக்கொள்.”

“இல்லை… என்றைக்கு இதே வாளால் உங்களை நான் வெல்கிறேனோ அன்றைக்கு இதை எனக்குச் சொந்தமாக்கி கொள்கிறேன்.”

“ஹா… ஹா… நடக்குமா பெண்ணே?!”

“நிச்சயம் நடக்கும்!”

“அத்தனை நம்பிக்கையா?”

“இந்த மைத்ரேயியை இதுவரை வென்றவர் யாருமில்லை உபாத்தியாயரே!”

“நல்லது நல்லது… என் சிஷ்யை என்னையே வென்றால் எனக்கு அதில் பெருமைதானே!” சொன்ன அந்த புதியவனின் முகத்தை இப்போதுதான் கவனித்தாள் மைத்ரேயி.

பதினெட்டு பிராயங்கள்தான் இருக்கும்.‌ ஆனால் அந்த வயதில் அவளிடம் இல்லாத ஒரு முதிர்ச்சி, நிதானம் அந்த வாலிபனின் கண்களிலும் செய்கைகளிலும் தெரிந்தது. கடந்த ஒரு வாரமாக அவனை மண்டபத்திற்கு அருகில் பார்ப்பதால் அவன் முகம் அவளுக்குப் புதிதல்ல. ஆனால் இன்றைக்குக் தான் இத்தனை அருகாமையில் அவனைப் பார்க்கிறாள்.

அவன் இடது கண் புருவத்திற்கு மேல் தழும்பு ஒன்று காணப்பட்டது. அது அவன் முகத்திற்கு விகாரத்தைக் கொடுக்காமல் கம்பீரத்தையே கொடுப்பதை ஒருவித அதிசயத்துடன் பார்த்தாள் பெண். அவள் பார்வைப் போன இடத்தை அவனும் கவனித்திருக்க வேண்டும்.

“போரில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட காயம்… பிற்பாடு தழும்பு ஆகிப்போனது.”

“என்ன? போரா?!”

“ஆம்.”

“இந்த வயதில் போரா?”

“ஏன்? போரிற்குப் போவதற்குத் தனியாக வயது வரம்புகள் ஏதேனும் இருக்கின்றதா?”

“இல்லை… இல்லை…” பேசிய பின்பே வார்த்தைகளின் அனர்த்தத்தை உணர்ந்தாள் மைத்ரேயி.

“அதுசரி… பல்லவ சாம்ராஜ்யத்தின் குடிகளுக்கு இப்போது போரைப் பற்றி என்ன தெரிகிறது?” அந்த கேலிக்குரல் பெண்ணைச் சீண்டியது.

“ஏன்? நீங்கள் இந்த சாம்ராஜ்ஜியத்தின் குடியல்லவோ?”

“அந்த பாக்கியத்தை நல்லவேளையாக அடியேன் செய்யவில்லை.”

“ஓஹோ! அப்படியென்றால் போர் தொடுப்பதுதான் உங்கள் சாம்ராஜ்ஜியத்தின் வேலையோ? அது என்ன அவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியம் உபாத்தியாயரே?”

“எல்லாம் இந்த பல்லவ சாம்ராஜ்யத்தை விட சிறந்த ராஜ்ஜியம்தான், கவலைப்படாதே.”

“பெயரைச் சொல்ல மாட்டீர்களோ?”

“தேவை வரும்போது நானாகவே சொல்கிறேன்.”

“போரைக் கட்டிக்கொண்டு அழும் ராஜ்ஜியத்தின் உபாத்தியாயரே… நான் போய் வருகிறேன்.” அவள் சொன்ன பாணியில் அந்த வாலிபனின் இதழோரம் புன்னகை அரும்பியது. அவள் புரவியை அவிழ்த்துக்கொண்டு அதில் தாவி ஏறினாள் மைத்ரேயி. கட்டப்படாத அவன் குதிரை ஓர் அடி கூட நகராமல் விட்ட இடத்திலேயே நின்றிருந்தது.

“பெண்ணே! போரைக் கட்டிக்கொண்டு அழ யாரும் விரும்புவதில்லை, அதற்குப் பெயர் ராஜ்ஜிய விஸ்தரிப்பு! பலம் பொருந்திய மன்னர்கள், சத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் செய்வது!” 

குதிரையை வேகமாக செலுத்திக்கொண்டு வந்த மைத்ரேயி வீட்டின் வாசலிலேயே அதன் தலைக்கயிற்றை வீசிவிட்டு உள்ளே போனாள். வாலிபனின் வார்த்தைகள் அவளை ஊசி கொண்டு தைத்தன!

“தாத்தா!” அவள் குரலில் வீடே அதிர்ந்தது.

“என்ன குழந்தாய்?” கேட்டபடி வந்தார் உபாத்தியாயர். பரிவாதனியும் மகிழினியும் கூட அங்கேதான் இருந்தார்கள்.

“மகேந்திர சக்கரவர்த்தி ஏன் ராஜ்ஜிய விஸ்தரிப்பு செய்யவில்லை?” மைத்ரேயியின் அந்த ஒற்றைக் கேள்வியில் அங்கிருந்த மூவிரு கண்களும் தெறித்து விடும்போல விழித்தன. 

‘இவர்கள் இப்படி பேந்த பேந்த முழிக்கும் அளவிற்கு அப்படி என்னத்தை நான் கேட்டுவிட்டேன்?!’ என்று சிந்தித்த படி நின்றிருந்தாள் மைத்ரேயி.

***

குதிரை லாயத்தில் நின்றபடி சித்தரஞ்சனின் முகத்தைத் தடவிக்கொடுத்து கொண்டிருந்தார் மகேந்திர பல்லவர். அவரின் உயிரினும் மேலான அந்த புரவி இரண்டு நாட்களாக உடல் உபாதைக்கு உள்ளானதால் அதைப் பார்க்க வந்திருந்தார் சக்கரவர்த்தி.

“பல்லவேந்திரா!” குரல் வந்த திசையில் திரும்பினார் மகேந்திர வர்மர். ஒற்றர் தலைவன் விபீஷணன் நின்றிருந்தான்.

“விபீஷணா… ஏதாவது முக்கிய சேதி உண்டா? என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறாயே?”

“ஆமாம் பல்லவேந்திரா… முக்கியமான சேதிதான்.”

“எங்கே சொல் பார்க்கலாம்.”

“மன்னர் பெருமானே! பல்லவ சாம்ராஜ்யத்தின் தென் எல்லையில் சில புல்லுருவிகள் உருவாகி இருப்பதாக தகவல் வந்தது.”

“எப்போது?”

“இரண்டு வாரங்களுக்கு முன்பாக.”

“மேலே சொல்.”

“சேதியின் நம்பகத்தன்மையை ஆராய நானே காவிரி எல்லை வரைச் சென்றிருந்தேன்.”

“தகவல் உண்மைதானா?”

“ஆமாம் பல்லவேந்திரா, மக்கள் மத்தியில் தங்கள் ஆட்சியைப் பற்றிய ஒரு திருப்தியின்மையை உருவாக்க யாரோ முயல்வது போல் தெரிகிறது.”

“ம்…” மகேந்திர பல்லவர் சிறிது நேரம் தாடையைத் தடவிய படி யோசித்தார்.

“காவிரிக்கு அண்மையில் என்றால்… பாண்டியர்களின் வேலையாக இருக்க வாய்ப்புள்ளதா?”

“நானும் முதலில் அப்படித்தான் சந்தேகித்தேன், ஆனால் விசாரித்த வரையில் பாண்டிய மக்கள் தங்கள் மேல் மிகுந்த மரியாதையுடன்தான் இருக்கிறார்கள்.”

“அப்படியென்றால் வேறு யாராக இருக்கும் என்று நினைக்கிறாய் விபீஷணா?”

“அறுதியிட்டு கூற முடியவில்லை மன்னவா?”

“இருக்கட்டும்… எந்த வகையில் அதிருப்தியை உருவாக்க  முனைகிறார்கள்?”

“ராஜ்ஜிய விஸ்தரிப்பில் ஈடுபடாமல் லலித கலைகளை வளர்ப்பதிலும் காஞ்சி கோட்டையை சித்திரம், சிற்பம் போன்றவற்றால் மேம்படுத்துவதிலும்தான் தங்கள் கவனம் உள்ளதாம்.”

“மக்கள் இதை நம்புகிறார்களா?”

“நம்புகிறார்களா இல்லையா என்று புரியவில்லை, ஆனால் இரண்டொரு பேர் கூடிப்பேசுவதை நானே என் காதால் கேட்டேன்.”

“ஓஹோ! நல்லது, நீ போய் இளைப்பாறு, நான் வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்.”

“ஆகட்டும் பல்லவேந்திரா.” விபீஷணன் மன்னரை வணங்கிவிட்டு செல்ல மகேந்திரர் முகத்தில் பலமான யோசனைத் தோன்றியது.

“டேய்! யாரங்கே?” மன்னரின் குரலுக்கு வீரன் ஒருவன் ஓடி வந்தான்.

“சொல்லுங்கள் சக்கரவர்த்தி!”

“உப சேனாதிபதியையும் படைத்தலைவரையும் நான் உடனேயே என் அந்தரங்க அறையில் சந்திக்கவேண்டும் என்று போய் சொல்லு.”

“ஆகட்டும் சக்கரவர்த்தி!” வீரன் நகர்ந்து விட சித்தரஞ்சனை இன்னுமொரு முறைத் தடவிக்கொடுத்த பல்லவ மகாராஜா விடுவிடுவென்று தனது அந்தரங்க அறைக்குச் சென்றுவிட்டார். சற்று நேரத்திலெல்லாம் பொதிகை மாறன் அமரா தேவி பின் தொடர அந்த அறைக்குள் நுழைந்தார்.

“பல்லவேந்திரா!”

“வாருங்கள் உப சேனாதிபதி… இருவரும் அமருங்கள், தெற்கிலிருந்து ஒரு முக்கியமான செய்தி வந்திருக்கிறது.” சக்கரவர்த்தியின் முகத்திலிருந்த குழப்பத்தைப் பார்த்த போது அமராவும் பொதிகை மாறனும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

“வந்த செய்தி உங்களைக் கொஞ்சம் கவலைக்குள்ளாக்கி இருப்பது போல தெரிகிறது மன்னவா?”

“ஆமாம் உப சேனாதிபதி! விபீஷணன் இப்போதுதான் காவிரியிலிருந்து வந்தான், போகிற போக்கைப் பார்த்தால் தெற்கிலிருந்து ஒரு பெரிய புரட்சி உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“என்ன?!” ஏக காலத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து கூச்சல் போட்டனர்.

“அரசே! இது என்ன புதுக்குழப்பம்?‌ விஷயம் நம்பத்தக்கதா?”

“தகவல் கொண்டு வந்திருப்பது விபீஷணன், இதை விட வேறு என்ன வேண்டும் உப சேனாதிபதி?”

“ஓஹோ!”

“இப்போது என்ன செய்வதாக உத்தேசம் அண்ணா?” முதன்முதலாக வாய் திறந்தாள் அமரா தேவி.

“அவசரமாக தெற்கு நோக்கி காவிரி வரை நீ போக வேண்டும்.”

“ஆகட்டும் அண்ணா.”

“படைகள் எதையும் அழைத்துக்கொள்ள வேண்டாம்.”

“சரி.”

“காவிரி அன்னையைப் பார்வையிட நீ வந்திருப்பதாக மக்கள் அறியட்டும்.”

“நல்லது.”

“நிலைமையைக் கவனித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள், பிற்பாடு வீரர்கள் தேவைப்பட்டால் தெற்கிலிருக்கும் நமது படைப்பிரிவை உபயோகித்துக்கொள்.”

“ஆகட்டும் அண்ணா.” அமரா தேவி அத்தோடு அந்த இடத்தை விட்டு அகன்று விட ஆண்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!